Search This Blog

Thursday, 12 June 2025

தந்தைக்கு மரியாதை

 

தந்தைக்கு மரியாதை

 

قَالَتَا لَا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ

அதற்கு அவ்விரு பெண்களும் ‘‘இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரை நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ வயது முதிர்ந்த கிழவர். (அவர் இங்கு வர முடியாததால் நாங்களே இவற்றை ஓட்டி வந்திருக்கிறோம்)'' என்றார்கள். திருக்குர்ஆன்:- 28:23

 

ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை அன்று உலக தந்தையர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

உலகில் உள்ள பெற்றோர்களில் பலரும் தியாகிகளே ஆவர். ஆனால், அவர்களிடம் பிள்ளைகளில் சிலர் துரோகிகளாகவே நடந்துகொள்கின்றனர்.

 

இன்று பெரிதும் ஒதுக்கப்படும் உறவாகப் பெற்றோர்கள் ஆகிவிட்டனர். உங்கள் பெற்றோர் உங்களுக்காகச் செய்த தியாகங்களை நீங்கள் எண்ணிப் பார்த்தால் அதற்கு நன்றிக்கடன் செலுத்திட முடியாது என்பதை உணர்வீர்கள்.

 

நம்மைப் பெற்று வளர்த்த நமது தாயும் தந்தையும் செய்த தியாகங்கள் நமக்குப் புரியாது. நமக்காக அவர்கள் தங்கள் சுகங்களை இழந்துள்ளனர். இளமைக் கால இன்பங்களை அர்ப்பணித்துள்ளனர்.

 

தாயின் அன்புகூட பிள்ளைகளுக்குப் புரியும். ஆனால், தந்தையின் உண்மையான பாசத்தைப் பிள்ளைகள் புரிந்துகொள்வது கிடையாது. பெரும்பாலான பிள்ளைகள் தந்தையை பெரும் வில்லனாகவே பார்க்கின்றனர்.

 

தனது ஆசைகளையும் விருப்பங்களையும் உள்ளத்தில் புதைத்துப் பூட்டுப் போட்டுவிட்டு நம்முடைய உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் கால நேரம் பாராது இரவு பகலாய் மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து போன அவரின் தேகத்தைப் பார்க்கவேண்டும். தன் இளமையை நமக்காகத் தியாகம் செய்துவிட்டு முதுமையின் வலியை அவர் சுமக்கும்போது நம்மால் அவர் புறக்கணிக்கப்பட்டால் அது எவ்வளவு பெரிய கொடுமையாக இருக்கும் என எண்ணிப் பார்க்கவேண்டும்.

 

இறைத்தூதர் ஷுஐப் (அலை) அவர்கள் செல்வந்தராக இருந்தபோதும் தமது சொத்துக்களான ஆடுகளை தம்மால் பராமரிக்க இயலவில்லை. அந்த இக்கட்டான நிலையில் அவரின் இரு பெண்பிள்ளைகள் அவரின் வேலைகளை எடுத்துச் செய்து அவருக்கு ஒத்தாசையாக இருந்தனர். இதையே தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.

 

அதாவது, வயதான தந்தைக்கு ஒத்தாசை செய்வது பிள்ளைகளின் கடமை என தெளிவாகிறது. அதில், ஆண்பிள்ளை பெண்பிள்ளை என்று பாகுபாடு அவசியமில்லை.

 

தந்தையின் பெயருடனே அழைக்கப்படுவீர்கள்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ  ) நிச்சயமாக நீங்கள் மறுமைநாளில் உங்களின் பெயராலும் உங்களின் தந்தையின் பெயராலும் அழைக்கப்படுவீர்கள். அறிவிப்பாளர்:- அபூதர்தா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4297

 

நாளையத் தீர்ப்புநாளில் இறைவனின் உத்தரவுக்கிணங்க வானவர்கள் ஒவ்வொரு மனிதனின் பெயருடன் அவர்களின் தந்தையின் பெயரையும் சேர்த்தே அழைப்பார்கள்.

 

ஒரு மனிதன் ஒரு நாட்டின் அதிபதியாக இருந்து அவரின் தந்தை சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரியே, அல்லது ஒரு மனிதன் பெரும் பெரும் படிப்பெல்லாம் படித்து பட்டங்கள் பல வாங்கியவனாக இருந்து, அவரின் தந்தை எதுவும் படிக்காத கிராமத்தானாக இருந்தாலும் சரியே, மறுமைநாளில் அவரின் பெயரையும் அவரின் தந்தையின் பெயரையும் சேர்த்தே அழைக்கப்படுவார்.

 

சொர்க்கம் செல்ல...

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( رِضَا الرَّبِّ فِي رِضَا الْوَالِدِ وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ ) தந்தையின் அன்பில் இறைவனின் அன்பு உள்ளது. தந்தையின் வெறுப்பில் இறைவனின் வெறுப்பு உள்ளது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:-  திர்மிதீ-1821

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ فَإِنْ شِئْتَ فَأَضِعْ ذَلِكَ الْبَابَ أَوِ احْفَظْهُ ) தந்தை, (தம் பிள்ளைகளுக்குச்) சொர்க்கத்தின் முதன்மையான வாயில் ஆவார். எனவே, விரும்பினால் அந்த வாயிலை நீ பாழாக்கலாம்; அல்லது அதைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அறிவிப்பாளர்:- அபூ அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் நூல்:- திர்மிதீ-1822

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ بَرَّ وَالِدَيْهِ طُوبَى لَهُ، زَادَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي عُمْرِهِ ) யார் தமது பெற்றோருக்கு நன்மை புரிகிறாரோ அல்லாஹ் அவருடைய ஆயுளை அதிகப்படுத்துவானாக! அவருக்கு சுபச்செய்தி உண்டாகட்டுமாக! அறிவிப்பாளர்:- சஹ்ல் பின் முஆத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-22

 

சொர்க்கம் செல்வதற்கும், சொர்க்கத்தின் உயர்பதவியை பெறுவதற்கும், ஆயுள் அதிகமாகவும் சிறந்த வழி யாதெனில், தந்தைக்குப் பணிந்து அவருக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்வதாகும்.

 

கட்டுப்படுதல்

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் ஒரு பெண்ணை மணமுடித்திருந்தேன். அவளை நான் நேசித்து வந்தேன். (ஆனால்) என் தந்தை (உமர் - ரலி அவர்கள்) அவளை வெறுத்து வந்தார்கள். அவளை மணவிலக்குச் செய்து விடுமாறு என் தந்தை என்னைப் பணித்தார்கள். ஆனால், நான் மறுத்துவிட்டேன்.

 

இதைப்பற்றி நான் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது நபியவர்கள் என்னிடம், ( يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ طَلِّقِ امْرَأَتَكَ ) "அப்துல்லாஹ் பின் உமரே! உன் மனைவியை நீ மணவிலக்குச் செய்துவிடு" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4472, திர்மிதீ-1110, இப்னுமாஜா-2079

 

தந்தை சிறந்த மார்க்கப்பற்றுள்ளவராக இருக்கும் நிலையில் அவர் தமது பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவார். அதில் வேறு எந்த விதமான சுய மன ஆசையோசத்தியப்புறம்போ இருக்காத.  தந்தை உமர் (ரலி) அவர்கள் தமது மகன் அப்துல்லாஹ்வின் மனைவியிடம் மார்க்க புறம்பான மார்க்கத்திற்கு இடையூறு தரும் செயல் எதையேனும் கண்டு அவளை வெறுத்திருக்கக்கூடும். அவளது பண்பு மகனின் இல்லற வாழ்க்கைக்கும் குடும்பத்திற்கும் உதவாது என அனுபவ அறிவால் அப்படியொரு முடிவுக்கு வந்திருக்கலாம்.

 

மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் மனைவிமீது கொண்டிருந்த மோகத்தால் மணவிலக்கு அளிக்க மறுத்துவிட்டார். உமர் (ரலி) அவர்களின் பேச்சில் நியாயம் இருக்கக் கண்டதால் அவர்களின் நல்லெண்ணத்துக்கு மதிப்பளித்து தந்தைக்குக் கட்டுப்படும் விதத்தில் அப்துல்லாஹ்விடம் மணவிலக்களிக்க ஆணையிட்டார்கள். நபியவர்களை ஆணையை ஏற்று அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தமது மனைவியை மணவிலக்குச் செய்தார்கள். நூல்:- துரருஸ் ஸனிய்யா

 

ஓர் தந்தை தமது மகனிடம் இந்தப் பெண் உமது மணவாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது என்று கூறினால், அனுபவ அறிவுப்பெற்ற தந்தையின் பேச்சைக் கேட்டு, மகன் தமது மனைவியை தனக்கு பிடித்தவளாக அவள் இருந்தாலும் மணவிலக்கு செய்துவிட வேண்டும். அதுவே எதிர்காலத்தில் அவனுக்கு நல்லதாக இருக்கக்கூடும். இதைவிடுத்து மாமனாருக்கோ மாமியாருக்கோ தனிப்பட்ட முறையில் மருமகளை பிடிக்கவில்லை என்பதற்காக அல்லது அவள்மீது கொண்ட காழ்ப்பிற்காக அல்லது வேறு தவறான நோக்கத்திற்காக மணவிலக்கு செய்யச் சொன்னால் மகன் அதற்கு கட்டுப்பட தேவையில்லை. இதுவே மார்க்க அறிஞர்களின் தீர்ப்பாகும்.


அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அலீ (ரலி) அவர்களுக்கு எதிராக நடைபெற்ற ஸிஃப்பீன் போரில் கலந்து கொள்வதில் துளிகூட இஷ்டமில்லை. ஆனால், தந்தையார் வற்புறுத்தியதால் (தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதால்) வேறு வழியின்றி கலந்து கொண்டார்கள்.

 

ஹுசைன் (ரலி) அவர்கள் இதைப்பற்றி பின்னொரு நாளில் அவரிடம் விசாரித்தார்கள். அதற்கு அவர், "தொழுது வருவீராக. நோன்பு நோற்பீராக. உன் தந்தையாரின் சொல்லைக் கேட்டு நடப்பீராக" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அதனால் ஸிஃப்பீன் போரில் கலந்து கொள்ளுமாறு தந்தையார் என்னை வற்புறுத்தியபோது என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. நான் கலந்துகொண்டேனே தவிர, வாளை உருவவில்லை; ஈட்டியை ஏந்தவில்லை. எதுவும் செய்யவில்லை என்றார். நூல்:- உஸுதுல் ஙாபா

 

நாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். தவறு செய்பவர்களை தண்டிப்பதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் ஒருவன், அவனின் தந்தை தவறு செய்துவிட்டால் அவருக்கு தண்டனையை தன் கையால் அவன் நிறைவேற்றக் கூடாது. மற்றவர்கள் தான் நிறைவேற்ற வேண்டும் இந்தச் சட்டத்தில் மார்க்க அறிஞர் ஒருமித்த கருத்துக் கொண்டிருக்கிறார்கள். நூல்:- இஹ்யா

 

நம்முடைய எதிர்கால நலனுக்காகவே கஷ்டங்களைச் சுமந்துகொள்கின்றார். எதிர் காலத்தில் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, "நான் என்ன பாடுபட்டாலும் பரவாயில்லை; என்னைப் போன்று என்னுடையப் பிள்ளை கஷ்டப்பட்டு விடக்கூடாது" என்ற எண்ணத்தில் தமது நிகழ் காலத்தைத் தியாகம் செய்கின்றார்.

 

நாம் இப்போது உணராவிட்டாலும் நாமும் ஒருநாள் தந்தையான பிறகு நம்முடைய அன்பை நம்முடைய குழந்தைகள் புரிந்துக்கொள்ளாமல் நம்மைப் பகைத்துக் கொள்ளும்போது நிச்சயமாக நாம் உண்மையை உணருவோம்.

 

முன்பு குரலை உயர்த்தக் கூடாது. அவ்வாறு செய்தால் இறைவன் நம்மை தாழ்த்திவிடுவான்.

 

தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ள வேண்டும். அதனால் நமக்கு பிற்காலத்தில் மரியாதை கிடைக்கும்.

 

தந்தைக்கு மரியாதை செய்ய வேண்டும். அதனால் நமது பிள்ளைகள் நமக்கு மரியாதை செய்யக்கூடும்.

 

தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும். அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக்கொள்ளலாம்.

 

தந்தை என்பவர், மற்ற அனைவரையும்விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர். மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்கக்கூடியவர் ஆவார். 

 

அவர் நம்முடன் இருக்கும்வரை அவருடைய அருமை நமக்கு தெரியவதில்லை. நம்மில் பலருக்கும் தந்தையின் இறப்பிற்குப் பிறகே அவரின் அருமை புரிகிறது.

 

எனவே, நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்துவிடக் கூடாது. நாம் தந்தையிடம் என்றென்றும் பணிவுடனும் பண்புடனும் நடந்து கொள்ள வேண்டும். தந்தையின் மரணத்திற்கு பிறகும் அவருக்கு "ஈஸால் ஸவாப்" எனும் முறையில் உபகாரம் செய்ய வேண்டும்.

 

யோசனை சொல்லலாம்

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு திராட்சைத் தோட்டத்தினுள் ஆடுகள் புகுந்து அங்கு முளைத்திருந்த திராட்சைக்கொலைகளை நாசப்படுத்திவிட்டது. அது தொடர்பாக தொடர்பான வழக்கு நபி தாவூத் (அலை) அவர்களிடம் வந்தபோது அன்னார் அந்த ஆடுகள் பாதிக்கப்பட்ட தோட்ட உரிமையாளருக்குரியவை என்று தீர்ப்பளித்தார்கள்.

 

அப்போது (அன்னாரின் மகனார்) சுலைமான் (அலை) அவர்கள் ( غَيرُ هَذَا يَا نَبِيَّ اللَّهِ ) "அல்லாஹ்வின் தூதரே! இந்த வழக்கில் வேறு விதமாக தீர்ப்பளிக்கலாம்" என்றார். ( وَمَا ذَاكَ؟ ) அது என்ன?” என்று தாவூத் (அலை) அவர்கள் கேட்கசுலைமான் (அலை) அவர்கள், ( تَدْفَعُ الْكَرْمَ إِلَى صَاحِبِ الْغَنَمِ، فَيَقُومُ عَلَيْهِ حَتَّى يَعُودَ كَمَا كَانَ ) "திராட்சைத் தோட்டத்தை ஆடுகளின் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அத்தோட்டம் பழைய நிலைக்குத் திரும்பும் வரை அதை (முறையாக செப்பனிட்டு) அவர் பராமரிப்பார்.

 

وَتَدْفَعُ الْغَنَمَ إِلَى صَاحِبِ الْكَرْمِ فيُصيب مِنْهَا حَتَّى إِذَا كَانَ الْكَرْمُ كَمَا كَانَ ) அவ்வாறே ஆடுகளை தோட்ட உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தோட்டம் பழைய நிலைக்குத் திரும்பும் வரை அந்த ஆடுகளிலிருந்து அவர் பயனடைந்து கொள்ளலாம்" என்று கூறினார்.

 

(அவ்வாறே தீர்ப்பளிக்கப்பட்டது. தோட்டமும் பழைய நிலையை அடைந்தது. பின்னர்) தோட்டம் அதன் உரிமையாளரிடமும் ஆடுகள் அதன் உரிமையாளரிடமும் அளிக்கப்பட்டன.  நூல்:- தஃப்சீர் தபரீதஃப்சீர் இப்னு கஸீர்

 

இத்தீர்ப்பின் மூலம் தோட்டக்காரரின் இழப்புக்கு ஈடு  கிடைத்துவிடும். தோட்டமும் பழைய நிலையிலேயே அவரது கைக்கு வந்துவிடும். ஆடுகளின் உரிமையாளர் ஆடுகள் ஏற்படுத்திய சேதத்தைச் சீர்படுத்திசேதத்திற்கான இழப்பீட்டையும் வழங்கிவிடுகிறார். அத்துடன் ஆடுகளும் அவரது கைக்குத் திரும்பி வந்துவிடும்.

 

இந்நிகழ்ச்சியைப் பற்றியே திருக்குர்ஆன் வசனங்கள் (21:78,79) விவரிக்கிறது.

 

தந்தையின் செயல்பாட்டில் மகன் சற்று பிசகுதலைக் கண்டால் மென்மையாக எடுத்துரைக்கலாம். தந்தையின் நலனில் அக்கறை கொண்டவனாக மாற்று யோசனை சொல்லலாம்.

 

ஓர் மகன் தமது தந்தையைப் பார்த்து "உங்கள் காலம் வேறு; எங்கள் காலம் வேறு. எனவே, உங்களுக்கு ஒன்றும் தெரியாது. தவறாக எதையும் செய்து சொதப்பிவிடாதீர்கள். அமைதியாக இருந்துவிடுங்கள்" என்று அவர் மனம் நோக பேசுவது பெரும் பாவமாகும். தந்தை எதையாவது தவறாகவே செய்துவிட்டாலும் அவர் மனம் நோகும்படி அதைச் சுட்டிக்காட்டக் கூடாது.

 

மென்மையாக

 

என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது (என்று இப்றாஹீம் கூறினார்.) திருக்குர்ஆன்:- 19:43

 

நீங்கள் அறிவீனர். உங்களிடம் கல்வி ஞானம் இல்லை என்று கூறவில்லை. மாறாக இந்த வாக்கியத்தின் மூலம் மிக மென்மையாக எடைபோட்டுக் காட்டுகிறார். நூல்:- இப்னுல் கய்யிம், பதாயிஉல் ஃபவாயிது: 3/133

 

என் அருமைத் தந்தையே! நிச்சயமாக அர்ரஹ்மானிடமிருந்துள்ள வேதனை வந்து உங்களைத் தொட்டு, நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவதைப் பற்றி நான் அஞ்சுகிறேன். திருக்குர்ஆன்:- 19:45

 

தந்தையுடன் உரையாடும்போது, கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கம் இந்த வாக்கியத்தில் உள்ளது.

 

இப்றாஹீம் (அலை) அவர்கள் தமது தந்தை குறித்து வேதனை அவருக்கு வந்துசேருமென்று கூறவில்லை. மாறாக, "நான் அஞ்சுகிறேன்" என்பதன் மூலம் வேதனையை பூதாகரப்படுத்திக் காட்டுவதல்ல; உளமுருகி பரிவு பாராட்டுவதே நோக்கமென்பதை வெளிப்படுத்துகிறார்கள்.

 

தனது நேசத்திற்குரியவர் நரகத்திற்குச் செல்வதை அஞ்சுவதே உண்மையான நேசம். நமது மறுமை வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தராதவர், இம்மைக்கும் முக்கியத்துவம் தரமாட்டார்.

 

தந்தை கொள்கையில் முரண்பட்டு நின்றாலும், அவர் தங்களின் கொள்கையில் நம்மை ஈர்க்க முயன்றாலும் அதைத்தான் நாம் புறக்கணிக்க வேண்டுமே தவிர, அவரை புறக்கணிக்கக் கூடாது. அவரிடம் கடுமையாகவும் நடந்து கொள்ளவும் கூடாது.

 

இப்றாஹீம் (அலை) தன் தந்தையாரிடம் வெளிப்படுத்திய அதே பரிவை தன் மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களிடம் பெற்றுக்கொண்டார்கள்.

 

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த)போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!”

 

(மகன்) கூறினார்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள். திருக்குர்ஆன்:- 37:102

 

உங்கள் பெற்றோரிடம் நல்ல விதமாக நடந்துகொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகள் உங்களிடம் நல்ல விதமாக நடந்துகொள்வார்கள்.

  

பணிவிடை செய்தல்

 

இமாம் ஜஅஃபர் சாதிக் (ரஹ்) அவர்களின் தோழர்களில் ஒருவரான இப்ராஹீம் என்பவர் இமாமவர்களிடம், “என் தந்தை மிகவும் வயதானவர், இயலாதவர், எனவே, அவர் தனது வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற விரும்பும்போது, ​​நாங்கள் அவரை எங்கள் தோள்களில் சுமந்துச் செல்கிறோம்" என்று கூறினார்.

 

இமாம் அவர்கள், "அத்தகைய காரியத்தை நீங்களே செய்து உங்கள் கைகளால் அவருக்கு உணவு தயாரித்துக் கொடுக்க முடிந்தால், கொடுங்கள்; ஏனென்றால், அத்தகைய நல்லறம் மறுமைநாளில் நரகத்தை விட்டும் தடுக்கும் கேடயமாக அமையும்" என்று கூறினார்கள். நூல்:- பிஹார் அல்அன்வார் 16/101 ( بحار الانوار )

 

தந்தை படுத்த படுக்கையாகி விட்டாலும் முகம் சுளிக்காமல் அவருக்கு பணிவிடை புரிவது, நரகத்தை விட்டும் காக்கும் கேடயமாக ஆகிவிடுகிறது.

 

பெற்றோருக்கு உபகாரம் செய். அவர்கள் தளர்ந்த பின்னர் நீ தளராமல் செய்.

 

கடனுக்குப் பொறுப்பாளி

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ حَجَّ عَنْ وَالِدَيهِ أَوْ قَضى عَنْهُمَا مَغْرَماً بَعَثَهُ اللٌّهُ يَوْمَ الْقِـيَامَةِ مَعَ الأَبْرَارِ ) யார் தனது பெற்றோருக்காக ஹஜ் செய்கிறாரோ அல்லது அவர்களுக்குரியக் கடனை அடைக்கிறாரோ, அவரை அல்லாஹ் மறுமைநாளில் நல்லவர்களுடன் எழுப்புவான். நூல்:- சுனன் தாரகுத்னீ, தப்ரானீ, அல்காமில் இமாம் இப்னு அதிய்யி, கன்ஸுல் உம்மால்

 

இமாம் அவ்ஸயீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இப்படி ஓர் (நபிமொழி) செய்தி எனக்குக் கிடைத்துள்ளது. ( أنَّ مَن عَقَّ والِدَيْهِ في حَياتِهِما، ثُمَّ قَضى دَيْنًا إنْ كانَ عَلَيْهِما واسْتَغْفَرَ لَهُما، ولَمْ يَسْتَسِبَّ لَهُما، كُتِبَ بارًّا، ) எவர் ஒருவர் வாழ்நாளில் தனது பெற்றோருக்கு கீழ்ப்படியாமல் இருந்துவிட்டு, பின்னர் அவர்களின் கடனை நிறைவேற்றி, அவர்களை (எந்த சூழ்நிலையிலும்) ஏசாமல், அவர்களுக்காக பாவமன்னிப்பு கோருகின்றவர் (பெற்றோருக்கு) உபகாரம் செய்தவராகவே பதிவு செய்யப்படுவார்.

 

( ومَن بَرَّ والِدَيْهِ في حَياتِهِما، ثُمَّ لَمْ يَقْضِ دَيْنًا إذا كانَ عَلَيْهِما ولَمْ يَسْتَغْفِرْ لَهُما، واسْتَسَبَّ لَهُما، كُتِبَ عاقًّا ) எவர் ஒருவர் வாழ்நாளில் பெற்றோருக்கு உபகாரம் புரிந்து வந்தாலும், அவர்களின் கடனை நிறைவேற்றாமல், அவர்களுக்காக பாவமன்னிப்பு கோராமல், அவர்களை ஏசிக்கொண்டே இருந்தவர், பெற்றோருக்கு கீழ்படியாதவர் என்றே பதிவு செய்யப்படுவார். நூல்:- பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் பனீ இஸ்ராயீல் வசனம்-23

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (உஹுத் போரில் ஷஹீதாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (மரணிக்கும்போது) பல குழந்தை குட்டிகளையும் கடனையும் விட்டுச்சென்றார்கள். ஆகவே, (அந்தக் கடனுக்கு நான் பொறுப்பாளியான காரணத்தால்) என் தந்தையின் கடனிலிருந்து சிறிதளவு தள்ளுபடி செய்து (குறைத்து)விடும்படி கடன்காரர்களிடம் நான் கேட்டுக்கொண்டேன். அவர்கள் (சிறிதளவும் தள்ளுபடி செய்ய) மறுத்துவிட்டார்கள். ஆகவே, நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று கடன்காரர்களிடம் எனக்காகப் பரிந்துரை செய்யும்படி கேட்டேன். (நபியவர்கள் அவ்வாறே பரிந்துரை செய்தும்) அவர்கள் (சிறிதளவும் தள்ளுபடி செய்ய) மறுத்துவிட்டனர்.

 

எனவே, நபியவர்கள், ( صَنِّفْ تَمْرَكَ كُلَّ شَىْءٍ مِنْهُ عَلَى حِدَتِهِ  ثُمَّ أَحْضِرْهُمْ حَتَّى آتِيَكَ ) ‘‘உங்கள் பேரீச்சங்கனிகளின் ஒவ்வொரு வகையையும் தனித்தனியாகப் பிரித்து வையுங்கள். பின்னர் கடன்காரர்களை வரவழையுங்கள். பிறகு நான் உங்களிடம் வருகிறேன்” என்று சொன்னார்கள். நான் அவர்கள் கூறியபடியே செய்தேன்.

 

பிறகு நபியவர்கள் வந்து பேரீச்சங் குவியல்களின் அருகே அமர்ந்து கொண்டு (கடன்காரர்) ஒவ்வொருவருக்கும் அளந்து கொடுக்கலானார்கள். இறுதியில், நிறைவாக (அனைவருக்கும்) கொடுத்து முடித்தார்கள். பேரீச்சம் பழக்குவியல் யாருடைய கரமும் படாததைப் போல முன்பிருந்ததைப் போன்றே (சற்றும் குறையாமல்) அப்படியே இருந்தது. நூல்:- புகாரீ-2405

 

பேரறிஞர் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். யார் தமது பெற்றோருக்காக "பத்லீ ஹஜ்" செய்ய நாடினால் முதலில் தமது தாய்க்கும் அதன் பிறகு தந்தைக்கும் ஹஜ் செய்ய வேண்டும். ஆனால், தமக்காக ஹஜ் செய்ய வேண்டும் என்று தந்தை முன்பே (வஸிய்யத் எனும்) இறுதிவிருப்பம் கூறியிருந்தால் அவருக்கு முதலில் செய்ய வேண்டும்.

 

ஓர் பிள்ளை தமது தந்தையின் சொத்து தனக்குரியது என்று எண்ணுவது போல், தந்தை வாங்கிய கடனை தீர்ப்பதற்கு தாம் பொறுப்பு ஏற்க வேண்டும். இதுவே, சிறந்த பிள்ளைக்குரிய அடையாளம்.

 

ஆரோக்கியத்தில் கவனம்  

 

கன்ஆன் நகரத்தில் வாழ்ந்த இறைத்தூதர் யஅகூப் (அலை) அவர்கள் தமது அருமை மகனார் யூசுஃப் அவர்களின் பிரிவை எண்ணி அதிகமாக அழுத காரணத்தால் அன்னார் பார்வை இழந்திருந்தார்கள்.

 

மிஸ்ர் தேசத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்கள் தமது தந்தையின் நிலை அறிந்து, உணவுப்பொருள்கள் கேட்டு வந்த தமது குடும்பத்தாரிடம், "நீங்கள் என்னுடைய இந்த மேலங்கியை கொண்டு சென்று என்னுடைய தந்தையின் முகத்தில் போடுங்கள். (அதன் பரக்கத்தால் உடனே) அவர் பார்வை உள்ளவராக மாறிவிடுவார். மேலும், உங்கள் குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று கூறினார். இது குறித்து திருக்குர்ஆன் (12:93) விவரிக்கிறது.

 

மனைவி மக்களுக்காக உழைத்து முதுமை காலத்தில் ஆரோக்கியம் இழந்துவிட்ட தந்தையை கவனிக்க வேண்டிய பொறுப்பு பிள்ளைகளுக்கு உண்டு. தந்தையின் ஆரோக்கியத்தில் பிள்ளைகளுக்கு பொறுப்பு இருக்கிறது. தமது தந்தை அவரின் முதிய காலத்தில் பல்வேறான நோய்களுக்கு ஆட்பட கூடும். அப்போது அவரை கவனிக்கப்படாத அநாதையாக ஆக்கிவிடக் கூடாது.

 

தந்தையின் அன்புக்குரியவர்களுடன்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَبَرُّ الْبِرِّ أَنْ يَصِلَ الرَّجُلُ وُدَّ أَبِيهِ ) நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4990

 

அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மக்காவுக்குப் பயணம் மேற்கொண்டால், அவர்களுடன் கழுதையொன்று இருக்கும். ஒட்டக வாகனத்தில் பயணம் செய்து களைத்து விட்டால், அக்கழுதைமீது ஓய்வெடுத்துக்கொள்வார்கள். மேலும், தலைப்பாகையொன்றும் அவர்களிடம் இருந்தது. அதை அவர்கள் தமது தலையில் கட்டிக்கொள்வார்கள். இந்நிலையில் ஒரு நாள் அவர்கள் அந்தக் கழுதையில் (பயணம் செய்துகொண்டு) இருந்தபோது, கிராமவாசி ஒருவர் அவர்களைக் கடந்துசென்றார்.

 

உடனே அவரிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் இன்ன மனிதரின் புதல்வரான இன்ன மனிதரல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்" என்றார். உடனே அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், தமது கழுதையை அக்கிராமவாசியிடம் கொடுத்து, ( ارْكَبْ هَذَا ) "இதில் ஏறிக்கொள்ளுங்கள்" என்றார்கள்; தலைப்பாகையைக் கொடுத்து, ( اشْدُدْ بِهَا رَأْسَكَ ) "இதைத் தலையில் கட்டிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

 

அப்போது அவர்களிடம் அவர்களுடைய தோழர்களில் சிலர், ( غَفَرَ اللَّهُ لَكَ أَعْطَيْتَ هَذَا الأَعْرَابِيَّ حِمَارًا كُنْتَ تَرَوَّحُ عَلَيْهِ وَعِمَامَةً كُنْتَ تَشُدُّ بِهَا رَأْسَكَ ) "அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! தாங்கள் ஓய்வெடுப்பதற்காக (மாற்று வாகனமாகப்) பயன்படுத்திவந்த கழுதையை இந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டீர்களே? (பயணத்தின்போது) தாங்கள் தலையில் கட்டிக்கொண்டிருந்த தலைப்பாகையையும் கொடுத்துவிட்டீர்களே?" என்று கேட்டார்கள்.

 

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ( إِنَّ مِنْ أَبَرِّ الْبِرِّ صِلَةَ الرَّجُلِ أَهْلَ وُدِّ أَبِيهِ بَعْدَ أَنْ يُوَلِّيَ ) "நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு மனிதர் தம் தந்தை மறைந்தபின் அவருடைய அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். இந்தக் கிராமவாசியின் தந்தை (என் தந்தை) உமர் (ரலி) அவர்களின் நண்பராக இருந்தார்" என்று சொன்னார்கள். நூல்:-  முஸ்லிம்-4991, அபூதாவூத்-4477, திர்மிதீ-1825, முஸ்னது அஹ்மத்-5355

 

இந்த நபிமொழி, பெற்றோரை மட்டுமின்றி அவர்களுடைய நண்பர்களையும் மதிக்க வேண்டும் என்றும் அவர்களுடன் நல்லறவு பாராட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. குறிப்பாக, பெற்றோரின் மறைவுக்குப் பிறகும் இதை கடைபிடிக்க வேண்டும் இது பெற்றோருக்கு செய்யும் மரியாதையும் நல்லறமும் ஆகும்.

 

இது பெற்றோருக்கு மட்டுமின்றி பாட்டனார், கணவர் அல்லது மனைவி ஆகியோரின் நண்பர்களுக்கும் பொருந்தும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் தோழிகளுக்கும் உறவுகளுக்கும் அன்னாரின் மறைவுக்குப் பிறகும் கொடுத்து வந்த மதிப்பும் மரியாதையும் இதற்குச் சான்றாகும். நூல்:- அல்மின்ஹாஜ், துஹ்ஃபத்துல் அஹ்வதீ

 

தந்தையை மட்டுமின்றி அவர்களின் நண்பர்களையும் மதித்து, அவர்களுடன் நல்லுறவு பாராட்ட வேண்டும். இது தந்தைக்குச் செய்யும் மரியாதையாகவே அமையும். குறிப்பாக, பெற்றோரின் மறைவுக்குப் பிறகும் இதை கடைபிடிக்க வேண்டும். தந்தை பேணிய உறவுகளை தனயனும் பேண வேண்டும் என இந்த நபிமொழி வலியுறுத்துகிறது.

 

அன்பும், அரவணைப்பும்

 

அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! என்னிடத்தில் செல்வமும் இருக்கிறது. எனக்கு ஒரு மகனும் இருக்கின்றான். (இந்நிலையில்) என்னுடைய தந்தை எனது செல்வத்தின் மீது தேவையாகிறார். (எனக்கும் கொடுத்தாக வேண்டும் என்று வற்புறுத்துகிறார். நான் என்ன செய்வது?)" என்று வினவினார். அதற்கு நபியவர்கள், ( أَنْتَ وَمَالُكَ لِوَالِدِكَ ) "நீயும் உமது செல்வமும் உன்னுடையத் தந்தைக்குச் சொந்தமானதே. (அதாவது, உன் தந்தைக்கு நீ கொடுக்கத்தான் வேண்டும். அது உம்மீது கடமையாகும்)" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-3063, இப்னுமாஜா-2283, முஸ்னது அஹ்மத்


பொதுவாக தந்தைகளின் இறுதிக்காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.

 

இதனால்தான் தந்தைமார்கள் தாம் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

 

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமார்களை நடத்தி வருகின்றனர்.

 

வயதான தந்தை தமக்காக தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத்தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே வயதான காலத்தில் வாய்திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

 

வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்தபட்சம் இஸ்லாமிய நூல்கள், தினசரிகள், வாரப் பத்திரிகைகள் வாங்கிக்கொடுக்க வேண்டும். சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுக்க வேண்டும். மூலையில் அமர்த்தாமல் அவர் விரும்பினால் அவரிடம் சிறிய வேலைகளைக் கொடுகக்கலாம். பேரன் பேத்திகளை அவரிடமிருந்து பிரிக்கக் கூடாது. அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்.

 

ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி செய்ய வேண்டும்.

 

வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது. தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்துகொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற்போல வளைந்து கொடுப்பாள்.

 

குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்துவிட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக்கூடிய மற்றும் என்ன வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்ய வேண்டும். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்.

 

எனவே, நாம் தந்தையின் கண்ணியம் அறிந்து, அவருக்கு உரிய உபகாரங்கள் புரிந்து வாழும் நல்லடியார்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

No comments:

Post a Comment

கற்பனைப் பேச்சு

  கற்பனைப் பேச்சு   وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئ...