Search This Blog

Thursday, 14 November 2024

இயேசு ஓர் இறைத்தூதரே!

 

இயேசு ஓர் இறைத்தூதரே!

 

قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا

(இறைத்தூதர் ஈசா - அலை அவர்கள்), "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய ஓர் அடிமை. அவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் என்னை ஆக்குவான்" கூறினார். திருக்குர்ஆன்:- 19:30

 

உலகளவில் டிசம்பர் 25 ஆம் தினத்தை இயேசு கிறிஸ்து பிறந்த தினமாக எண்ணி, பெரும்பாலான கிறிஸ்தவர்களால் கிருஸ்துமஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.


தற்போதைய உலகத்தில் கிருஸ்துவம் மிகப்பெரிய மதமாக உள்ளது. அந்த மதத்தில் கடவுள் கொள்கை குறித்து பல நிலைபாடு உள்ளது. அதாவது, இயேசு என்பவர் மட்டும் தான் கடவுள். இல்லை; இயேசுவின் தாயார் மரியாளும் கடவுள் தான். இல்லை; பரிசுத்த ஆவியும் கடவுள். இல்லை இயேசு கடவுளின் மகன் ஆவார். இல்லை; மூன்று பேரும் கடவுள் தான். இவ்வாறு கடவுள் கொள்கை குறித்து பல குளறுபடிகள் நிலவுகிறது.

 

அல்லாஹ் (கடவுளர்) மூவருள் ஒருவன் என்று கூறியோர் நிச்சயமாக (ஏக இறைவனை) மறுத்துவிட்டனர். (உண்மையில்) ஒரே இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. திருக்குர்ஆன்:- 5:73

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( لاَ تُطْرُونِي كَمَا أَطْرَتِ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ) "கிருஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்திவிடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான்தான். (அப்படி ஏதாவது, என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3445

 

கற்பொழுக்கமிக்கவர்  

 

பருவ வயதில் இருந்த மர்யம் (அலை) அவர்கள் ஒருமுறை குளித்துவிட்டு ஒரு மறைவான இடத்திற்கு சென்று உடைகளை மாற்றி உடுத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று அங்கு ஒரு ஆண்மகன் தமக்கு முன்னால் வந்து நின்று கொண்டிருப்பதை கண்டதும், அஞ்சியவராக அந்த மனிதரை நோக்கி! "நீர் இறையச்சம் உடையவராக இருந்தால், இங்கிருந்து சென்றுவிடு. நான் உன்னிடமிருந்து அருளாளனான அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று கூறினார்கள்.

 

அந்த மனிதர், "மர்யமே! பயப்படாதீர். நான் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட வானவர் ஜிப்ரீல் ஆவேன். உமக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கப்போகிறது என்ற நற்செய்தியைக் கூற வந்தேன்" என்று கூறினார்கள்.

 

அப்போது மர்யம் (அலை) அவர்கள் திருமண பந்தத்தின் மூலம் எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? நான் நடத்தை கெட்டவளும் கிடையாதே!" என்று ஆச்சரியமாக கேட்டார். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "அது அப்படித்தான். உம்முடைய இறைவனுக்கு இது எளிதான காரியம் தான்" என்று கூறிவிட்டு, மர்யம் (அலை) அவர்களின் சட்டைக்குள் ஊதினார்கள். உடனே மர்யம் (அலை) அவர்கள் கர்ப்பம் தரித்தார்கள். அதன் பிறகு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் அழகான ஆண் குழந்தையான ஈசா (அலை) அவர்களை பெற்றெடுத்தார்கள்.

 

அதன் பிறகு மக்கள், மர்யம் (அலை) அவர்கள் குறித்து அவதூறாக பேசியபோது பால்குடி குழந்தையாக இருந்த ஈசா (அலை) அவர்கள் தமது மழலை வாய் திறந்து, "நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியான். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாகவும் ஆக்கியுள்ளான். நான் எங்கிருந்தாலும் என்னை அவன் அருள்வளமிக்கவனாக ஆக்கியுள்ளான். நான் உயிரோடு இருக்கும்வரை தொழுகையையும் ஸகாத்தையும் நிறைவேற்றுமாறு எனக்கு அறிவுறுத்தியுள்ளான். என் தாய்க்கு நன்மை செய்ய வேண்டுமென்றும் (அவன் எனக்கு அறிவுறுத்தியுள்ளான்.) அவன் என்னை அகம்பாவம் உள்ளவனாகவோ நற்பேறற்றவனாகவோ ஆக்கவில்லை" என்று பேசினார்கள். இதுகுறித்து திருக்குர்ஆனின் மர்யம் அத்தியாயம் (17 முதல் 32 வரை உள்ள வசனங்கள்) விவரிக்கிறது.

 

(யூதர்களான) அவர்கள் (ஈசாவை) ஏற்க மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப்பெரும் அவதூறைச் சுமத்தியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). திருக்குர்ஆன்:- 4:156

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ إِلاَّ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ، وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ ) பெண்களில் இம்ரானின் மகள் மர்யமையும் ஃபிர்அவ்னின் மனைவி ஆசியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. அறிவிப்பாளர்:- அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3769

 

சுத்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (யூதர்களாகிய) அவர்கள் மர்யம் (அலை) அவர்கள் மீதும் அவருடைய மைந்தர் ஈசா (அலை) அவர்கள் மீதும் பெரும் குற்றங்களைச் சுமத்தினர். மர்யம் (அலை) அவர்களை கற்பொழுக்கமில்லாதவர் என்றும் தவறான உறவின் மூலமே அவர் ஈசாவை பெற்றெடுத்தார் என்றும் அவமானப்படுத்தினர். எனவே, அவர்கள் மீது மறுமைநாள் வரை அல்லாஹ்வின் சாபங்கள் தொடர்ந்து நிலவுக. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

மர்யம் (அலை) அவர்கள் கடவுள் இல்லை

 

அபுல்காசிம் அப்துர்ரஹ்மான் அவர்கள் (கி.பி. 1114-1185) கூறுகிறார்கள். திருக்குர்ஆனில் மர்யம் (அலை) அவர்களின் பெயர் 28 இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி அறிஞர்கள் சிலர் இவ்வாறு விவரிக்கிறார்கள்:

 

மன்னர்களும், பெரிய மனிதர்களும் பொது அவையில் வைத்து தம் குடும்பத்துப் பெண்களின் பெயர்களைக் குறிப்பிட மாட்டார்கள். மனைவியைப் பற்றி குறிப்பிடும்போதுகூட "வீட்டில், வீட்டுக்காரி, குடும்பத்தார்" என்று சூசகமாகவே கூறுவார்கள். அதே நேரத்தில் தங்கள் அடிமைப் பெண்களின் பெயரை சாதாரணமாக குறிப்பிடுவார்கள்.

 

இந்நிலையில் மர்யம் (அலை) அவர்களின் பெயரை அதுவும் திரும்பத் திரும்ப அல்லாஹ் கூறுகின்றான் என்றால், அவர் அல்லாஹ்வின் அடிமை தான் என்பதை உணர்த்துகிறான் என்பதே பொருளாகும். மேலும், மர்யம் (அலை) அவர்களிடம் தெய்வீகத் தன்மை உள்ளது என்ற கிறிஸ்தவர்களின் கூற்று இங்கே நிராகரிக்கப்படுகிறது. நூல்:- அர்ரவ்ளுல் உன்ஃப்

 

ஈசா (அலை) அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களை யூதர்கள், “தவறானவள்” என்று கூறினார்கள். கிருஸ்தவர்கள், “தெய்வீகத் தன்மை உள்ளவர்” என்று கூறினார்கள். மாறாக, இஸ்லாம் அவரை “கற்பொழுக்கமிக்கவர்” என்று கூறி, அவரிடம் தெய்வீகத் தன்மை என்று எதுவும் இல்லை என்று கூறுகிறது.

 

வல்லமைக்குச் சான்று

 

நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈசாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணால் உற்பத்திச் செய்து (மனிதனாக) "ஆகு" என்று கூறினான். உடனே (அவ்வாறு) ஆகிவிட்டது. திருக்குர்ஆன்:- 3:59

 

அல்லாஹ் தான் நாடியதை உருவாக்கும் ஆற்றல் மிக்கவன். தான் நினைத்ததைச் சாதிக்கும் திறன் உள்ளவன். அவன் மனிதர்களை நான்கு முறைகளில் படைத்துள்ளான்:

1) ஆண் மற்றும் பெண்ணின் (தாய், தந்தை) துணையின்றி ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களை களிமண் சத்தில் இருந்து நேரடியாக படைத்தான்.

2) பெண்ணின் துணையின்றி ஆதமின் ஓர் அங்கத்திலிருந்து (முதல் பெண்) ஹவ்வா (அலை) அவர்களைப் படைத்தான்.

3) ஆண் (தந்தை) துணையின்றி மர்யம் (அலை) அவர்கள் மூலம் ஈசா (அலை) அவர்களைப் படைத்தான்.

4) மற்ற மனிதர்கள் அனைவரையும் ஆண் பெண் (தாய், தந்தை) மூலம் படைத்தான்.

 

தந்தையின்றி பிறப்பதே ஒருவரை கடவுளாகவோ கடவுளின் மகனாகவோ எடுத்துக்கொள்ளப் போதிய ஆதாரமாகுமெனில், கிறிஸ்துவ சகோதரர்கள் ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களின் விஷயத்தில் இக்கொள்கையினை முதன்முதலாக ஏற்படுத்திருக்க வேண்டும். ஏனெனில், ஈசா (அலை) அவர்களோ தந்தை மட்டுமில்லாமல் பிறந்தார்கள். ஆனால், ஆதம் (அலை) அவர்களோ தாயும் தந்தையுமில்லாமல் தோன்றினார்கள். ஈசா (அலை) அவர்கள் தந்தையின்றி பிறந்தது அல்லாஹுத்தஆலாவின் வல்லமைக்கு ஒரு சான்றுத்தானே தவிர, அது இறைவன் என்பதற்குரிய சான்று அல்ல.

 

இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள் (இயேசு - Jesus) மர்யமின் மைந்தர் ஆவார். ஆண் துணையின்றி அற்புதமான முறையில் ஈசாவை அன்னை மர்யம் (அலை) அவர்கள் பெற்றெடுத்தார்கள். ஃபலஸ்த்தீனில் உள்ள பைத்துல் மக்திசிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள "பைத்து லஹ்ம்" (பெத்லஹேம்) எனும் கிராமத்தில் கி.மு. நான்காம் ஆண்டில் அன்னார் பிறந்தார்கள்.

 

திருக்குர்ஆன் சுமார் 25 இறைத்தூதர்களின் பெயர்களை குறிப்பிடுகிறது. இதில் ஈசா (அலை) அவர்கள் பெயரை குறிப்பிடும்போது மட்டும் தான் அவரின் தாயார், மர்யம் (அலை) அவர்களின் பெயரையும் சேர்த்து குறிப்பிடுகிறது.

 

காரணம், ஈசா (அலை) அவர்கள் தந்தையின்றி பிறந்ததால் அவர் தேவனின் குமாரர் என்று கூறி அவரை இறைவனாக ஆக்கிவிட்டனர். இது தவறான கொள்கை என்பதை சுட்டிக்காட்டவே, திருக்குர்ஆன் அவர் குறித்து இவ்வாறு கையாண்டுள்ளது. அதாவது, ஈசா (அலை) அவர்கள் இந்த உலகத்திற்கு மற்ற இறைத்தூதர்களைப் போன்ற ஒரு இறைத்தூதர் தானே தவிர, இறைவன் அல்லர்.

 

மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே! தவிர (இறைவனோ இறைவனுடைய மகனோ) அல்லர். இவருக்கு முன்னரும் (இவரைப் போல்) பல தூதர்கள் (வந்து) சென்றுவிட்டனர். இவருடைய தாயும் (கடவுள் அல்லர். இவர்) மிக்க உண்மையான ஒரு சத்தியவாதியாகத்தான் இருந்தார். திருக்குர்ஆன்:- 5:75

 

"மர்யமின் மைந்தர் ஈசாவே! அல்லாஹ்வை விடுத்து என்னையும் என் தாயாரையும் கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று நீர் மக்களிடம் கூறினீரா?" என்று (மறுமையில்) அல்லாஹ் கேட்பதை (நபியே!) நீர் எண்ணிப்பார்ப்பீராக. அப்போது அவர் (கூறுவார்:) நீ தூயவன். எனக்குத் தகுதி இல்லாத ஒன்றைச் சொல்ல எனக்கு எந்த உரிமையும் கிடையாது. திருக்குர்ஆன்:- 5:116

 

கிருஸ்தவர்களால் உலகம் முழுவதும் (லவ் ஜீஸஸ்) "இயேசுவை நேசியுங்கள்" என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அந்த ஈசா (அலை) அவர்கள் எதை சொன்னாரோ அதை நம்பாமல் அதற்கு மாற்றமானதை நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

 

அவரை எவ்வாறு நம்ப வேண்டுமோ அந்த தகவல்களை தேவையான அளவு திருக்குர்ஆன் கூறுகிறது. திருக்குர்ஆன், இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களை 25 இடத்தில் குறிப்பிடுகிறது. ஆனால், இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை 4 இடத்தில் தான் குறிப்பிடுகிறது. இவை குறித்து சிந்திக்கவேண்டும்.

 

திருக்குர்ஆன், கிருஸ்தவர்களை நோக்கி! "கிருஸ்தவர்களே நீங்கள் உண்மையாகவே ஈசா (அலை) அவர்களை நேசிப்பதாக நம்புவதாக இருந்தால், உடனடியாக நீங்கள் இஸ்லாத்திற்கு வந்துவிடுங்கள்" என்று அழைக்கின்றது.

 

அற்புதங்கள்

 

(இறைத்தூதர் ஈசா - அலை அவர்கள் கூறியதாவது.) நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட ஒரு தூதர் ஆவேன். அதற்காக) உங்களுக்கு ஒரு சான்றைக் கொண்டு வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவை போன்ற வடிவம் உண்டாக்கி, அதில் ஊதுவேன். அல்லாஹ்வின் ஆணையால் உடனே அது (உண்மையான) பறவையாக ஆகிவிடும். பிறவிக் குருடனையும் தொழுநோயாளியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் ஆணையின் ஆணையின் பேரில் மரணித்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். திருக்குர்ஆன்:- 3:49

 

இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு மனிதரை கண்டார்கள். அவர் தொழுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர், ( الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلِيَ بِهِ كَثِيرًا مِنْ خَلْقِهِ ) "இறைவா! (நீ பாராட்டுக்குரியவன்.) பெரும்பாலோருக்கு இருக்கும் வியாதியைவிட்டு என்னை காப்பாற்றிய உனக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும்" என்று சொல்லிக் கொண்டிருந்தார். இதைச் செவியுற்ற ஈசா (அலை) அவர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்து, ( يَا هَذَا أَيُّ شَيْءٍ مِنْ الْبَلَاءِ أَرَاهُ مَصْرُوفًا عَنْكَ ) "மக்களுக்கு இருக்கும் வியாதி உனக்கு இல்லை என்கிறாயே! அது என்ன வியாதி?" என்று வினவினார்கள்.

 

அவர், ( أَنَا خَيْرٌ مِمَّنْ لَمْ يَجْعَلْ اللَّهُ فِي قَلْبِهِ مَا جَعَلَ فِي قَلْبِي مِنْ مَعْرِفَتِهِ ) "(அறியாமை நோய் தான்.) நான் என்னுடைய இறைவனைப்பற்றி ஓரளவு தெரிந்திருக்கிறேன். ஆனால், உலகில் பெரும்பாலோர் அவனைப்பற்றி தெரிந்து கொள்வதில்லையே! (எனக்கு இருக்கும் வியாதியைவிட அந்த வியாதி பன்மடங்கு கொடியது)" என்றார். ஈசா (அலை) அவர்கள் மகிழ்ந்தவராக, ( صَدَّقْتَ هَاتِ يَدْكَ ) “உண்மையைச் சொன்னாய்! (அல்லாஹ்விடம் பிரார்த்தித்துவிட்டு,) உமது கைகளை நீட்டு!” என்று கூறி, அவருடைய  கைகளைப் பற்றினார்கள். மறுகணமே அற்புதம் நிகழ்ந்தது. அவருடைய வியாதி இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. அவர் உடல்நலம் பெற்றார். அதன் பிறகு அவர் ஈசா (அலை) அவர்களுடனே இருந்து இறைவணக்கம் புரிந்துவந்தார். நூல்:- இஹ்யா

 

ஒருமுறை இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் ஒரு மண்ணறையின் அருகில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்.  அப்பெண்ணிடம் அன்னார், ( مَا لَكِ أَيَّتُهَا الْمَرْأَةُ؟ ) "பெண்ணே! உனக்கென்ன நேர்ந்தது?" என்று வினவினார்கள். அதற்கவள், ( مَاتَتِ ابْنَةٌ لِي لَمْ يَكُنْ لِي وَلَدٌ غَيْرُهَا، وَإِنِّي عَاهَدْتُ رَبِّي أَنْ لَا أَبْرَحُ مِنْ مَوْضِعِي هَذَا حَتَّى أَذُوقَ مَا ذَاقَتْ مِنَ الْمَوْتِ، أَوْ يُحْيِيَهَا اللَّهُ لِي فَأَنْظُرُ إِلَيْهَا ) "என்னுடைய மகள் இறந்துவிட்டாள்; அவளைத் தவிர எனக்கு வேறு எந்த குழந்தையும் இல்லை; எனவே, அவள் சுவைத்த மரணத்தை நான் சுவைக்காமல், அல்லது அல்லாஹ் அவளை மீண்டும் உயிர்பித்து அவளைப் பார்க்காமல், நான் இவ்விடத்தைவிட்டு திரும்பிச் செல்லமாட்டேன் என்று நான் அல்லாஹ்விடம் உறுதிமொழி கொடுத்துள்ளேன்" என்று பதிலளித்தாள்.

 

அவளிடம் ஈசா (அலை) அவர்கள், ( أَرَأَيْتِ إِنْ نَظَرْتِ إِلَيْهَا أَرَاجِعَةٌ أَنْتِ؟ ) "நீ அவளைப் பார்த்துவிட்டால், திரும்பிச் சென்றுவிடுவாயா?" என்று வினவினார்கள். அவள், "ஆம்" என்றாள். அதன்பின் அன்னார் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். பின்னர் அன்னார் அந்த மண்ணறை அருகில் அமர்ந்து, ( يَا فُلَانَةُ قُومِي بِإِذْنِ الرَّحْمَنِ فَاخْرُجِي ) "இன்னவளே! அருளாளன் அல்லாஹ்வின் அனுமதியால் எழுந்து வெளியே வா!" என்று அழைத்தார்கள். அப்போது அவள் தன் தலையில் படிந்திருந்த மண்ணைத் துடைத்தவளாக வெளியே வந்தாள்.

 

 பின்னர் அவள் தன் தாயைப் பார்த்தாள். ( يَا أُمَّتَاهُ، مَا حَمَلَكِ عَلَى أَنْ أَذُوقَ كَرْبَ الْمَوْتِ مَرَّتَيْنِ؟ يَا أُمَّتَاهُ، اصْبِرِي وَاحْتَسِبِي، فَلَا حَاجَةَ لِي فِي الدُّنْيَا ) "அன்னையே! நான் மரணத்தின் வேதனையை இரண்டு தடவை சுவைக்க வேண்டுமென உன்னைத் தூண்டியது எது? அன்னையே! பொறுமை கொள்வீர்; நன்மையை எதிர்பார்ப்பீர்; இவ்வுலகில் எனக்கு எந்தத் தேவையும் இல்லை." என்று கூறினாள். பிறகு, அல்லாஹ்வின் தூதரே! ( سَلْ رَبِّي أَنْ يَرُدَّنِي إِلَى الْآخِرَةِ، وَأَنْ يُهَوِّنَ عَلَيَّ كَرْبَ الْمَوْتِ ) "நான் மறுமையை நோக்கி திரும்பவும் (அதாவது, நான் மீண்டும் மரணிக்கவும்), மரணத்தின் வேதனையை இலேசாக ஆக்கவும் இறைவனிடம் எனக்காகப் பிரார்த்தனை செய்வீராக" என்று கேட்டுக் கொண்டாள். அதன்படி அன்னார்  தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அவள் மீண்டும் மரணித்தாள். அவள்மீது அந்நிலம் சமமாக ஆகிவிட்டது . நூல்:- தாரீக் திமிஷ்கு இமாம் இப்னு அசாகிர், அல்பிதாயா வந்நிஹாயா

 

'இன்ஜீல்' எனும் இறைவேதம் அன்னாருக்கு அருளப்பெற்றது. இதை இன்று பைபிள் (New Testamant) என்கிறார்கள். அன்னாருக்கு 'மஸீஹ்' என்றொரு பெயரும் உண்டு. ஹீப்ரு மொழியில் 'மஷீஹா' என்பதே அரபியில் 'மஸீஹ்' என்று மறுவிற்று என்பர் சிலர். (ஈசா என்பது யஷூஉ - இயேசு என்பதிலிருந்தும், மூசா என்பது மோஷோ அல்லது மீஷா என்பதிலிருந்தும் மருவியதைப் போன்று) 'மஸீஹ்' என்பது அரபு மொழிச் சொல்லாகும் என்றே பலரும் கருதுகிறார்கள். இதற்கு 'தடவக்கூடியவர்' என்று பொருள். இது 'மஸஹ' (தடவினான்) என்பதிலிருந்து பிறந்தது. இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள் நோயாளியின் உடலில் தடவினால் நோய் குணமடைந்தது என்பதால் இப்பெயர் வரலாயிற்று. 'மஸீஹ்' என்பதற்கு 'வாய்மையாளர்' என்ற பொருளும் உண்டு. வேறு பல பொருள்களும் கூறப்படுகின்றன. நூல்:- அல்மின்ஹாஜ்

 

ஈசா பின் மர்யம் (அலை) அவர்களை தெளிவான சான்றுகளுடன் நேர்வழியுடன் அல்லாஹ் அனுப்பிவைத்தான். அவர்களுக்கு இறைத்தூதர் எனும் தகுதியையும் தெளிவான அற்புதங்களையும் அல்லாஹ் வழங்கினான். அதன் மூலம் அவர் பிறவியிலேயே கண்பார்வை இல்லாதவருக்கும் தொழுநோயாளிக்கும் குணமளித்து வந்தார். அல்லாஹ்வின் ஆணையின் பேரில் இறந்தோரை உயிர் பெறச் செய்தார். களிமண்ணால் பறவை போன்ற உருவம் செய்து, அதில் ஊதுவார். அல்லாஹ்வின் ஆணையின் பேரில் உடனே சிறகடித்துப் பறக்கின்ற (உண்மையான) பறவையாக அது ஆகிவிடும்.

 

இதுமட்டுமின்றி இன்னும் ஏராளமான அற்புதங்களை அவர்களின் கரத்தால் நிகழ்த்திக்காட்டி, அவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தினான்.

 

இதற்காக ஈசா (அலை) அவர்கள் மீது யூதர்கள் பொறாமை கொண்டதுடன் அவரைப் பொய்யரென்று கூறி அவருக்கு மாறுபுரிந்தனர். தங்களால் முடிந்த அளவு அவருக்கு தொல்லை தருவதில் முனைப்புக் காட்டினர். இதனால் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களுக்கு யூதர்களுடன் ஒரே ஊரில் வசிப்பது இயலாமல் போயிற்று. இதன் பிறகு அவரும் அவருடைய தாயாரும் பெரும்பாலும் (ஊர் ஊராகத்) திரிந்துகொண்டே இருந்தனர்.

 

கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை

 

"அல்லாஹ்வின் தூதரும் மர்யமின் மைந்தருமான ஈசா மசீஹை நாங்கள்தான் கொன்றோம்" என்று அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). அவர்கள் (உண்மையில்) அவரைக் கொல்லவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. மாறாக, அவர்களுக்கு (ஈசாவின்) சாயல் தான் காட்டப்பட்டது. அவர் தொடர்பாக (இதற்கு) மாற்றமான கருத்துக் கொண்டவர்கள் (வீண்) சந்தேகத்தில் தான் உள்ளனர். (வெறும்) ஊகத்தைப் பின்பற்றுகிறார்களே தவிர, இந்த விஷயத்தில் அவர்களுக்கு உறுதியான எந்த அறிவும் இல்லை. அவர்கள் அவரை (ஈசாதான் என்று) உறுதி செய்து கொண்டு கொல்லவில்லை. மாறாக, அவரை அல்லாஹ் தன் வசம் உயர்த்திக்கொண்டான். அல்லாஹ் வல்லமை படைத்தவனாகவும் ஞானம் நிறைந்தவனாகவும் இருக்கின்றான். திருக்குர்ஆன்:- 4:157,158

 

ஈசா (அலை) அவர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்த யூதர்கள் இறுதியாக, டமாஸ்கஸ் நகரத்தின் அக்கால மன்னன் ஒருவனிடம் சென்றனர். அவன் நட்சத்திரங்களை வழிபடும் இணைவைப்பாளனாக இருந்தான். அவனுடைய சமுதாயத்தார் கிரேக்கர்கள் என அறியப்பட்டனர்.

 

அந்த மன்னனிடம் வந்த யூதர்கள், "பைத்துல் மக்திசில் ஒருவர் இருக்கிறார். அவர் மக்களைக் குழப்பிக்கொண்டும் வழிகெடுத்துக்கொண்டும் இருக்கிறார்; அரசருக்கு எதிராகக் குடிமக்களை தூண்டிவிடுகிறார்" என்றெல்லாம் (உண்மைக்கு மாறாகப்) புகார் கூறினர்.

 

அதனால் சினம் கொண்ட மன்னன் பைத்துல் மக்திசில் இருந்த தமது பிரதிநிதி ஒருவனுக்குக் கடிதம் எழுதி, (குற்றம் சாட்டப்பட்ட) அந்த மனிதர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறும், அவரைப் பிடித்து சிலுவையில் அறையுமாறும், அவரது தலையில் முள் கிரீடம் சூட்டுமாறும் அவரால் மக்களுக்கு ஏற்படும் தொல்லையைத் தடுத்து நிறுத்துமாறும் குறிப்பிட்டு இருந்தான்.

 

அந்த கடிதம் வந்து சேர்ந்ததும் பைத்துல் மக்திசின் ஆட்சியாளன், மன்னனின் கட்டளையை செயல்படுத்தினான். அவனும் (அவனுடன்) யூதர்களில் ஒரு குழுவினரும் ஈசா (அலை) அவர்கள் இருந்த இல்லத்தை நோக்கி சென்றனர். அங்க ஈசா (அலை) அவர்கள் தம் தோழர்களுடன் இருந்தார்கள். அது ஒரு வெள்ளிக்கிழமை பின்னேரம்; சனிக்கிழமை இரவு.

 

அங்கு ஈசா (அலை) அவர்களை யூதர்கள் முற்றுகையிட்டனர். இதையறிந்த  ஈசா (அலை) அவர்கள் தாம் தப்பிக்க இயலாது என்பதை அறிந்து கொண்டார்கள்.

 

அப்போது தோழர்களிடம், ( أَيُّكُمْ يُلْقَى عَلَيْهِ شَبَهِي، وَهُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ؟ ) "உங்களில் யார் நம்மீது என் சாயல் போடப்படுவதை ஏற்கப்போகிறார்? அவர் சொர்க்கத்தில் என் நண்பராக இருப்பார்" என்று ஈசா (அலை) அவர்கள் கேட்டார்கள்.

 

உடனே, அவர்களில் ஓர் இளைஞர் அதற்கு முன்வந்தார். ஆனால், ஈசா (அலை) அவர்கள் அந்த இளைஞரை அதற்குப் பொருத்தமில்லாத சிறுவர் என்று கருதினார்கள். எனவே, திரும்பத் திரும்ப மூன்று முறை அவ்வாறு கேட்டார்கள். ஒவ்வொரு முறையும் அந்த இளைஞரைத் தவிர வேறு யாரும் முன் வரவில்லை. எனவே, ( أَنْتَ هُوَ ) “நீர் தான் அதற்கு பொருத்தமான ஆள்" என்று ஈசா (அலை) அவர்கள் கூறினார்கள்.

 

ஈசா (அலை) அவர்களது சாயலை அந்த இளைஞர் மீது அல்லாஹ் போட்டான். ஈசா (அலை) அவர்களைப் போன்று அவர் தோற்றமளித்தார். அப்போது அந்த வீட்டின் கூரையில் ஒரு சாளரம் திறந்தது. ஈசா (அலை) அவர்களை ஒருவகை சிற்றுறக்கம் ஆட்கொள்ள, அந்த நிலையிலேயே வானத்திற்கு அவர்கள் உயர்த்தப்பட்டார்கள்.

 

ஈசா (அலை) அவர்கள் (வானத்திற்கு) உயர்த்தப்பட்டதும் (வீட்டிற்குள் இருந்த) தோழர்கள் வெளியே வந்தனர். வெளியே நின்று இருந்தவர்கள் அந்த இளைஞரைப் பார்த்ததும் அவர்தாம் ஈசா என்றெண்ணி இரவோடு இரவாக அவரைப் பிடித்துச் சென்று சிலுவையில் அறைந்தனர். அவரது தலையில் முள் கிரீடம் சூட்டினர்.

 

ஈசா சிலுவையில் அறையப்படுவதற்குத் தாங்களே முக்கிய காரணம் என்று கூறி யூதர்கள் பெருமைப்பட்டனர். அறியாமையின் காரணத்தால் கிறிஸ்தவர்களில் பலரும் அதை நம்பினர். ஈசா (அலை) அவர்களுடன் அந்த வீட்டில் இருந்த தோழர்கள் மட்டும் அதை நம்பவில்லை. ஏனெனில், ஈசா (அலை) அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்பட்டதை அவர்கள் நேரில் கண்டனர். அவர்களைத் தவிர மற்ற கிறிஸ்தவர்கள் யூதர்களைப் போன்றே சிலுவையில் அறையப்பட்டது ஈசாதாம் என்று நம்பினர். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

மீண்டும் வருவார்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( هَبَطَ عِيسَى ابْنُ مَرْيَمَ عَلَيْهِ السَّلاَمُ بِشَرْقِيِّ دِمَشْقَ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ بَيْنَ مَهْرُودَتَيْنِ وَاضِعًا يَدَيْهِ عَلَى أَجْنِحَةِ مَلَكَيْنِ ) மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களை அல்லாஹ் (மீண்டும் பூமிக்கு) அனுப்பிவைப்பான். அவர் (சிரியாவின் தலைநகர்) திமஷ்க் (டமாஸ்கஸ்) நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளைக் கோபுரத்திற்கு அருகில் இரு வானவர்களின் இறக்கைகள்மீது தம் கைகளை வைத்தவாறு (வானிலிருந்து) இறங்குவார். நூல்:- முஸ்லிம்-5629, திர்மிதீ-2166


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ فَيَقْتُلُ الْخِنْزِيرَ، وَيَمْحُو الصَّلِيبَ، وَتُجْمَعُ لَهُ الصَّلَاةُ، وَيُعْطِي الْمَالَ حَتَّى لَا يُقْبَلَ، وَيَضَعُ الْخَرَاجَ، وَيَنْزِلُ الرَّوْحَاءَ فَيَحُجُّ مِنْهَا أَوْ يَعْتَمِرُ أَوْ يَجْمَعُهُمَا )  மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (வானத்திலிருந்து) இறங்கி வருவார். பன்றியை அழிப்பார்; சிலுவையை ஒழிப்பார்; கூட்டுத் தொழுகையில் (ஜமாஅத்தில்) கலந்துகொள்வார்; செல்வம் (வாரி வாரி) வழங்கப்படும். ஆனால், அதை யாரும் வாங்க மாட்டார்கள். அவர் (ஜிஸ்யா எனும்) காப்பு வரியை வாங்க மறுப்பார். 'ரவ்ஹா' எனும் இடத்தில் தங்குவார். பின்னர் அங்கிருந்து (இஹ்ராம் கட்டிக்கொண்டு மக்கா சென்று) ஹஜ்ஜோ, உம்ராவோ அல்லது இரண்டையும் சேர்த்தோ செய்வார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அந்நிசா வசனம்-159

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَنْزِلُ عِيسَى بن مَرْيَمَ إِلَى الْأَرْضِ فَيَتَزَوَّجُ وَيُولَدُ لَهُ وَيَمْكُثُ خَمْسًا وَأَرْبَعِينَ سَنَةً ثُمَّ يَمُوتُ فَيُدْفَنُ مَعِي فِي قَبْرِي فأقوم أَنا وَعِيسَى بن مَرْيَمَ فِي قَبْرٍ وَاحِدٍ بَيْنَ أَبَى بَكْرٍ وَعُمَرَ ) ஈசா பின் மர்யம் (அலை) அவர்கள் பூமிக்கு வந்து இறங்கி 45 ஆண்டுகள் வாழ்வார்கள். அதில் திருமணம் முடித்து குழந்தைகளையும் பெற்றெடுப்பார்கள். அவர்கள் மரணித்த பின்னர் என்னுடன், நான் எங்கு அடக்கம் செய்யப்படுவேனோ அங்கு அடக்கம் செய்யப்படுவார்கள். மறுமைநாளில் நானும் ஈசா (அலை) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் நடுவில் இருந்து எழுப்பப்படுவோம். நூல்:-கிதாபுல் வஃபாஉ இமாம் இப்னு ஜவ்ஸீ, கன்ஸுல் உம்மால், மிஷ்காத்

 

திருமணம் என்பது மனிதனின் இயல்பான தேவைகளில் ஒன்றாகும். இந்த பூமிக்கு வந்த அனைத்து இறைத்தூதர்களும் திருமணம் முடித்தவர்கள். (யஹ்யா - அலை அவர்கள் போன்ற ஒரு சிலரைத்தவிர)

 

ஈசா (அலை) அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் திருமணம் செய்யவில்லையென்றாலும், மீண்டும் ஈஸா (அலை) அவர்கள் பூமிக்கு வந்திறங்கிய பிறகு மற்ற இறைத்தூதர்களைப் போன்று திருமணம் செய்து, மனைவி மக்கள் என சுமார் 45 ஆண்டுகள் வாழ்வார்கள். அவர்கள் அவ்வாறு வாழ்ந்து மரணமடைந்த பிறகு எங்கு அடக்கம் செய்யப்படுவார்கள் என்பது வரை இஸ்லாம் தெளிவுபடுத்திவிட்டது.

 

கனவில் கண்டால்

 

கனவுலக மேதை இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களை யார் கனவில் கண்டாரோ அவருக்கு ஞானம் கிடைக்கும். அவர் பயப்பட்ட விஷயத்திலிருந்து வெற்றி கிடைக்கும். அவருக்கு சில காரியங்களில் முன்னெச்சரிக்கை அறிகுறி தோன்றும்.

 

அன்னாரை, நோயாளி கனவில் கண்டால், குணம் பெறுவார். ஏனென்றால் அன்னார், கொடிய நோய்களை அல்லாஹ்வின் அருள்கொண்டு, குணம் பெறச்செய்யும் சக்தி பெற்றிருந்தார்கள்.

 

அன்னாரை, சிறந்த வணக்கமுடையவரோ அல்லது சிறந்த அறிஞரோ கனவில் கண்டால், அவர்களின் சிறப்பு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும்.

 

அன்னாரை, வைத்தியர்  கனவில் கண்டால், அவரது புகழ் பெருகும்.

 

அன்னாரை, ஒரு அனாதை கனவில் கண்டால், அவருக்கு அரவணைப்பு கிடைக்கும். அல்லாஹுத்தஆலா அன்னாரை தந்தையின்றி பிறக்கச் செய்து, உயரிய அந்தஸ்தை வழங்கினான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

 

அன்னாரை கனவில் கண்டால் (பரக்கத் எனும்) அருள்வளம், பயணங்கள், கண்ணியம், மறைமுக கல்வி ஆகியவை கிடைக்கக்கூடும். அன்னாரை கனவில் காண்பவர் சுபச்செய்தி பெறுபவர் ஆவார். நூல்:- தலீலுல் ஹைரானி ஃபீ தஃப்சீரில் அஹ்லாம் ( دليل الحيران في تفسير الأحلام ) முஹம்மத் அலீ குத்ப்

 

(இயேசு எனும்) ஈசா (அலை) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக்கொள்ளாத எவரும் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது. மேலும், ஈசா நபியின் பெயரைக் கேட்டவுடன் “அவர் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!” என்றுரைக்க வேண்டும் என்கிறது இஸ்லாம்.

 

உலக வரலாற்றில் ஈசா (அலை) அவர்கள் குறித்த மர்மங்களை தெளிவுபடுத்திய ஒரே வேதம் திருக்குர்ஆன் மட்டும் தான்.

 

இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள் உட்பட உலகத்தில் வந்த அனைத்து இறைத்தூதர்களையும் ஏற்றுக்கொண்ட இறையச்சமுள்ள முஸ்லிம்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்-9840535951

 

1 comment:

  1. ماشاءالله بارك الله عنوان جيد

    ReplyDelete

கவனக்குறைவு

  கவனக்குறைவு   فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (இந்தத்) தொழுகையாளிகளுக்கு கேடு தான். அவர்கள் தமது தொ...