நிலையான தர்மங்கள்
لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ
நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும்
(நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள். திருக்குர்ஆன்:- 3:92
முஸ்லிம் மன்னர்கள், செல்வந்தர்கள் தமது வாரிசுகளுக்கு ஒரு பங்கு சொத்தை
கொடுத்துவிட்டு சென்றதைப் போன்று, தமது மரணத்திற்கு பிறகும் தாம் நன்மைகள் பெற வேண்டும்
என்பதற்காக ஒரு பங்கை “அல்லாஹ்விற்காக வக்ஃப்” என்று எழுதிவைத்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ
إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ ) மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத்
தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன. (அதில் ஒன்று) நிலையான அறக்கொடை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா
(ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3358, அபூதாவூத்-2494, திர்மிதீ-1297,
நஸாயீ-3591, முஸ்னது அஹ்மத்-8489
வக்ஃப் என்றால் என்ன?
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. உமர் (ரலி) அவர்கள், ‘ஸம்ஃக்’ எனப்படும் தமது சொத்து ஒன்றை கண்மணி பெருமானார் (ஸல்)
அவர்களது காலத்தில் தர்மம் செய்தார்கள். அது ஒரு பேரீச்சந்தோட்டமாக இருந்தது. அவர்கள்
(நபியவர்களிடம்), ‘‘நாயகமே! நான் ஒரு செல்வத்தைப்
பெற்றுள்ளேன். அது என்னிடம் (இருப்பவற்றிலேயே) உயர்தரமானதாகும். அதைத் தர்மம் செய்துவிட
விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.
நபியவர்கள், ( تَصَدَّقْ بِأَصْلِهِ،
لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ
) ‘‘அதன் நிலத்தை, (எவருக்கும்) விற்கக்கூடாது; அன்பளிப்பாகவும் தரக்கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் ஆக முடியாது; அதன் வருவாய் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்ற
நிபந்தனைகளுடன் அதைத் தர்மம் செய்துவிடுவீராக!” என்று கூறினார்கள்.
ஆகவே, உமர் (ரலி) அவர்கள்
அதைத் தர்மம் (வக்ஃப்) செய்துவிட்டார்கள். அவர்களின் இந்தத் தர்மம் (வக்ஃப்) “அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், ஏழைகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும்,
உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது. நிர்வாகம் செய்பவர்
அதிலிருந்து பொதுவழக்கப்படி (நியாயமான முறையில்) உண்பதில் அல்லது விரயம் செய்யாமல்
தம் நண்பருக்கு உண்ணக்கொடுப்பதில் குற்றமில்லை” என்றும் (அது தொடர்பான
ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். நூல்:- புகாரீ-2764
இஸ்லாமிய பார்வையில் "வக்ஃப்" என்றால் "தடுக்கப்பட்டுவிட்டது"
என்று பொருள். அதாவது, இனிமேல் அந்த சொத்து இன்னார் உபயோகத்தில் இருந்து
தடுக்கப்பட்டு அல்லாஹ்விற்கு சேர்ந்துவிட்டது. இனிமேல், அதை யாரும் தனி உரிமை கொண்டாடவும்
கூடாது; அதை யாரும் விற்கவும், வாங்கவும் கூடாது. சுருங்கக்கூறின், அதற்குரிய உரிமை தனி மனிதனிடமிருந்து அல்லாஹ்விற்கு மாறிவிட்டது. எனவே, அதை யாரும் உரிமைக்கொண்டாட கூடாது. மறுமைநாள் வரை அதன் உரிமையாளர் அல்லாஹ் மட்டும்
தான், என்று ஒரு சொத்தை அல்லாஹ்விற்காக பொதுவுடைமையாக்கிவிடுதல்.
அதாவது, ஒருவர், "நான் என்னுடைய இந்த இடத்தை இந்த பள்ளிவாசலின் பராமரிப்புக்காக
வழங்குகிறேன்" என்று கூறி கொடுத்துவிட்டால், குறிப்பிட்ட அந்த இடம் அந்த பள்ளிவாசல் கட்டுபாட்டிற்கு
வந்துவிடும். அந்த இடத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை அந்த பள்ளிவாசலின் பராமரிப்புக்கு
மட்டும் பயன்படுத்தவேண்டும். வக்ஃப் செய்தவரோ அல்லது அவரின் வாரிசுகளோ அந்த இடத்தை
உரிமைக்கொண்டாட முடியாது. மறுமைநாள் வரை அந்த இடத்தின்
நிலைபாடு இவ்வாறு இருக்கும். இதற்கு பெயர் தான் “வக்ஃப் செய்தல்” என்பதாகும். அந்த
இடத்தை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு பள்ளிவாசலின் நிர்வாகத்தையேச் சேரும்.
ஒருமுறை வக்ஃப் செய்யப்பட்டுவிட்டால் அந்த சொத்து மறுமைநாள்
வரை வக்ஃப் சொத்தாகத்தான் இருக்கும். அதை வேறு எந்த வகையிலும் மாற்றியமைக்க
முடியாது.
நாம் பொதுவாக அறிந்திருக்கிற ‘அறக்கட்டளை’ போன்றன்று வக்ஃப். பொதுவாக அறக்கட்டளைகளோடு, சில கடமைகள் இணைக்கப்பட்டிருக்கும். அந்தக் கடமைகளோடு சோ்த்து, அந்தச் சொத்தின் உரிமையைக் கை மாற்றலாம். அவன் உயிரோடிருக்கும்
வரை எந்தக் கட்டளையையும், உயிலையும் மாற்றிக்கொண்டே இருக்கலாம். வக்ஃபில்
அதெல்லாம் நடக்காது. கொடுத்தால் கொடுத்ததுதான்.
சில சட்டங்கள்
ஒருவர் ஒரு சொத்தை வக்ஃப் செய்யும்போது அதை எழுத்துப்பூர்வமாக எழுதிவைக்க வேண்டும்.
அல்லது ஓரிருவர் முன்னிலையில் சொல்ல வேண்டும். மனதில் நினைத்தால் மட்டும் கூடாது. மேலும், கூட்டாக இருக்கும் சொத்தில் "என்னுடைய பங்கை வக்ஃப் செய்துவிட்டேன்"
என்றால், கூடாது. கூட்டிலிருந்து தமது பங்கை பிரித்தெடுத்த பிறகு தான், (அதாவது, சொத்தின் முழு உரிமை
அவருக்கு வந்த பிறகு தான்) வக்ஃப் செய்யமுடியும்.
யாருக்கும் எந்தப் பயனும் அளிக்காத ஒன்றை, வக்ஃப் செய்தல் கூடாது. பயனளிப்பவற்றை
மட்டும் தான் வக்ஃப் செய்ய வேண்டும். மார்க்கம் (ஹராமானவற்றை) தடுத்துள்ளவற்றை வக்ஃப்
செய்யக்கூடாது. குறிப்பிட்ட ஓர் காலத் தவணை வைத்து (அதாவது, சுமார் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு இந்த இடத்தை அல்லாஹ்விற்காக
கொடுக்கிறேன் என்று கூறி) வக்ஃப் செய்யக்கூடாது.
வக்ஃப் செய்பவர் இந்த சொத்திலிருந்து வரும் வருவாயை குறிப்பிட்ட இந்த காரியத்திற்கு
தான் செலவழிக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டுவிட்டால், அதற்கு மாற்றம் செய்யக்கூடாது. அதாவது, இந்த வருவாயில் இருந்து இந்த பள்ளிவாசலுக்கு தண்ணீருக்காக, அல்லது விளக்கிற்காக அல்லது பாய் வாங்கிப்போட
வேண்டும் என்று குறிப்பிட்டுவிட்டால், அதைத்தவிர மற்ற காரியங்களுக்கு
அந்த சொத்தின் வருவாயைப் பயன்படுத்தக்கூடாது.
அளவோடு
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான், (பேராசான் பெருமானார்-ஸல் அவர்களிடம்) ‘‘நாயகமே! (நான் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் பின் வாங்கியதற்குப்)
பாவமீட்பு பெறும் ஓர் அம்சமாக, என் செல்வத்தி(ன் உரிமையி)லிருந்து
நான் விலகிக்கொண்டு அதை அல்லாஹ்வுக்காகவும் அல்லாஹ்வின் தூதருக்காகவும் தர்மமாக வழங்க
விரும்புகிறேன்” என்று கூறினேன்.
அதற்கு நபியவர்கள், ( أَمْسِكْ
عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ ) ‘‘உமது செல்வத்தில் ஒரு பகுதியை உமக்காக வைத்துக்கொள்வீராக! அது
உமக்கு நல்லது” என்று கூறினார்கள். நான், ‘‘கைபரில் கிடைத்த எனது பங்கை (எனக்காக) வைத்துக்கொள்கிறேன்” என்று
கூறினேன். நூல்:- புகாரீ-2757
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின் போது) நலம் விசாரிக்க வந்தார்கள். நான்,
‘‘நாயகமே! என் செல்வம் முழுவதையும் நான் (அறக் காரியங்களுக்காக)
இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘வேண்டாம்” என்று கூறினார்கள்.
நான், ‘‘அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை அவ்வாறு
செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கும்,
‘‘வேண்டாம்” என்றே பதிலளித்தார்கள். நான்,
‘‘மூன்றிலொரு பங்கை(யாவது அவ்வாறு செய்துவிடட்டுமா?)”
என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ( فَالثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ ) ‘‘மூன்றிலொரு பங்கா?
மூன்றிலொரு பங்கும் அதிகம்தான். அல்லது பெரியது
தான்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2742, 2744
ஒரு குடும்பத் தலைவன் தம்முடைய சொத்தில் இருந்து ஒரு பகுதியை தமது மண்ணறை வாழ்க்கைக்காக
அறக்கொடை (வக்ஃப்) வழங்கலாம். ஆனால், அதிலிருந்து கொஞ்சமாவது தமது வாரிசுகளுக்கு விட்டுச்செல்லவேண்டும். அதற்காக கொஞ்சம் சேமித்து வைப்பது தவறல்ல. அவ்வாறு
சேமித்து வைப்பதன் மூலமாக தான் இஸ்லாம் கூறும் வாரிசுரிமை சட்டத்தை நிலைநாட்ட முடியும்.
ஒருவர் தமது சொத்தில் இருந்து மூன்றில் ஒரு பாகத்தையே அவர் விருப்பப்படி இறைவனுக்கு வக்ஃப் செய்யலாமே தவிர, அனைத்தையும் கொடுப்பது முறையல்ல.
பல வகைகள்
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னுடைய தாய் இறந்துவிட்டார். (எனவே நான் அண்ணல் நபி - ஸல் அவர்களிடம் சென்றேன்)
"நாயகமே! என் தாயார் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா?"
என்று கேட்டேன். அதற்கு அண்ணலார்,
"ஆம் (தர்மம் செய்யலாம்)" என்று பதிலளித்தார்கள்.
( فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ ) "எந்தத் தர்மம் மிகச் சிறந்தது?" என்று கேட்டேன். அதற்கு அண்ணலார், ( سَقْيُ الْمَاءِ ) "குடிநீர் வழங்குதல்" என்று கூறினார்கள். எனவேதான்
மதீனாவில் காணப்படுகின்ற 'சஅத் நீர்த்தடாகம்'
உண்டானது. நூல்:- நஸாயீ-3606
குடிநீர் வழங்குவதற்காக சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் மதீனாவில் ஒரு கிணறு தோண்டினார்கள்.
அப்போது மதீனாவில் தண்ணீர் இல்லாத பஞ்சக்காலமாக இருந்தது. அந்தக் கிணற்றைத் தோண்டி, இது சஅதியின் தாயாருக்காக (வக்ஃப் செய்யப்பட்டது) என்று கூறினார்கள்.
மரணமடைந்தவரின் சார்பாக வக்ஃப் செய்வதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெரிதும் விரும்பியுள்ளார்கள்.
ஏனெனில், அதற்கான நன்மை தொடர்ந்து அவருக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்.
அண்ணலாரின் காலத்திலேயே அது செயல்படுத்தப்பட்டது.
அங்கத்தூய்மை செய்ய தண்ணீர் வசதி செய்து கொடுத்தல், கிணறு, பம்ப் செட்,
தண்ணீர் தொட்டி, தண்ணீர் குழாய் அமைத்தல், மற்றும் மதரசா, பள்ளிவாசல், கல்வி நிலையம் மருத்துவமனை
என நிலையான தர்மங்களை அமைத்து வக்ஃப் செய்யலாம். உலகம் முழுக்க இருக்கும் பல வக்ஃப்
சொத்துகள் இவ்வாறுதான் உருவானது.
அபூஅப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் பின் ஹபீப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (ஜனாதிபதி) உஸ்மான் (ரலி) அவர்கள் (கலகக்காரர்களால்)
முற்றுகையிடப்பட்ட போது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து) பின்வருமாறு
பேசினார்கள்: அல்லாஹ்வை முன்வைத்து உங்களைக் கேட்கிறேன். நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின்
தோழர்களைத் தவிர வேறுயாரிடமும் கேட்கவில்லை. ( مَنْ حَفَرَ رُومَةَ فَلَهُ الْجَنَّةُ ) ‘‘பிஃரு ரூமா’ எனும் கிணற்றை (விலைக்கு
வாங்கி) தூர்வாரி (பொதுமக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து)விடுகிறாரோ அவருக்குச் சொர்க்கம்
கிடைக்கும்” என்று கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கி) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத்
தெரியாதா? அவர்கள் கூறியதை நபித்தோழர்கள்
உண்மையென ஏற்றுக்கொண்டனர். நூல்:- புகாரீ-2778
சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரில் வக்ஃப்களின் வகைகள் ஏராளமாக
இருந்தன.
அந்நகரில், ‘ஹஜ்’ஜுக்கு சென்றிட விருப்பம் இருந்தும் வாய்ப்பு வசதி இல்லாதவர்களுக்கு
உதவிட ஒரு வக்ஃப், பெண்பிள்ளைகளை தகுந்த
இணையர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு சக்தியற்ற பெற்றோருக்கு உதவிட ஒரு வக்ஃப்,
கைதிகளின் விடுதலைக்கு உதவிட ஒரு வக்ஃப், வழிப்போக்கர்களுக்கு
உண்ண உணவும் உடுத்த உடையும் கொடுத்து உதவுவதோடு அவர்கள் சொந்த ஊருக்குச் சென்றிட தேவையான
ஏற்பாடுகளை செய்து கொடுத்திட ஒரு வக்ஃப், என இருந்தன.
அறிஞர் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் தனது பயணக்குறிப்பில் இவ்வாறு கூறுகிறார். டமாஷ்கஸ்
நகரில் அநாதைப் பிள்ளைகளுக்கான வக்ஃப் ஒன்றும் இருந்தது. அவற்றில் கிடைக்கும் வருமானத்தை
அநாதைகளைப் பராமரிக்க, அவர்களுக்கு கல்வி கற்பிக்க,
திருமணம் செய்து வைத்திட செலவிட்டனர். ”இந்த வக்ஃப்கள்
அந்த ஊர்களின் பெருமைமிகுந்த வியப்பிற்குரியனவாக இருந்தன. நூல்:- ரிஹ்லா இப்னு பதூதா, ரிஹ்லா இப்னு ஜுபைர்
டமாஷ்கஸ் நகரில், மாராஜ்-இ-அக்ஸர் (Maraj-E-Akhazar) என்ற பெயரில் ஓர் அறக்கட்டளை இருந்தது. இது குதிரைகளுக்காவே
உருவாக்கப்பட்டது. இதிலுள்ள மேய்ச்சல் பகுதிகள், தங்கள் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட
குதிரைகளின் உணவறைகளாக பயன்படுத்தப்பட்டன. இந்தக் குதிரைகள், இவற்றில் தங்கள் ஆயுள்
உள்ளவரைக்கும் மேய்ந்தன.
அந்நகரில் உள்ள மற்றொரு அறக்கட்டளை பூனைகளுக்காகவே உருவாக்கப்பட்டது. பூனைகளுக்கு
இங்கே உணவும் உறைவிடமும் அளிக்கப்பட்டன. அவற்றிற்காகக் கட்டப்பட்ட வீடுகளில் நூற்றுக்கணக்கான
பூனைகள் வாழ்ந்தன. இங்கே பூனைகளுக்கு உணவும் உறைவிடமும் கிடைத்துக் கொண்டிருந்ததால்
அவை அங்கிருந்து வெளியே செல்லவில்லை. அவை வெளியே சென்றதெல்லாம் விளையாடவும், குதூகலித்திருக்கவுமே! நூல்:- இஸ்லாமிய நாகரிகம் - முஸ்தஃபா அல்சிபாய்
சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரும் பிரபல சமூக சேவையாளருமான அஷ்ஷேக் சுலைமான் பின் அப்துல்
அஸீஸ் ராஜிஹி உலக கோடீஸ்வரர்
தரப்படுத்தலில் 120 வது இடத்தைப் பெற்றவர். கின்னஸில் இடம்பிடித்த
உலகின் மிகப் பெரிய பேரீத்தம் மரத்தோட்டத்தின்
சொந்தக்காரர் இவர்.
இவருக்குரிய பேரீத்தம் பழத்தோட்டம் ஒன்றில் இரண்டு இலட்சம் மரங்கள் உள்ளன.
அவருக்கு விருப்பமான அத்தோட்டத்தை அல்லாஹ்வுக்காக வக்ஃப் செய்துள்ளார். அறுவடையில்
கிடைக்கும் உயர் ரக பேரீத்தம் பழங்கள் புனித நகரங்களான மக்கா, மதீனா மற்றும் உலக நாடுகளுக்கு ரமளான்
மாதத்தில் நோன்பு திறப்பதற்காக இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.
அநீதியிழைத்தல்
உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட (அமானிதப்) பொருள்களை அவற்றுக்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
திருக்குர்ஆன்:- 4:58
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا اؤْتُمِنَ خَانَ آيَةُ الْمُنَافِقِ ) நயவஞ்சகனின் அடையாளம் யாதெனில், அவனிடம் அடைக்கலப் பொருள் (அல்லது பொறுப்பு) ஏதும் நம்பி ஒப்படைக்கப்பட்டால், அதில்
அவன் மோசடி செய்வான். நூல்:- புகாரீ-2749
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் முஸ்லிம்களின் விஷயங்களை பொறுப்பேற்று,
அதில் கவனக்குறைவாக இருக்கிறாரோ, அவர் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்.
நூல்:- கன்ஸுல் உம்மால்
மகாராஷ்டிர மாநிலம், மும்பை, அல்டாமவுண்ட் சாலையில் பணக்கார கப்பல் உரிமையாளரான
“கரிம்பாய் இப்ராஹீம் க்வாஜா” என்பவரால் 1895 ஆம் ஆண்டில் "கரிம்பாய் இப்ராஹீம்
க்வாஜா யதீம்கானா" நிறுவப்பட்டது. இந்த அநாதை இல்லம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக
பின்தங்கிய குழந்தைகளின் கல்வித் தேவைகளுக்கு சேவை செய்தது.
1.120 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தை தற்போது இந்திய பணக்காரர்களில்
ஒருவரான முகேஷ் அம்பானி என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, “ஆண்டிலியா” என்ற பெயரில் 27
மாடிகள் கொண்ட மிகவும் பிரம்மாண்டமான பல்லடுக்கு மாளிகையாக கட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிர
மாநில வக்ஃப் போர்டின் அநாதை இல்லம் நடந்து கொண்டிருந்த இடத்தை மீட்க, மகாராஷ்டிரா
அரசின் வக்ஃப் வாரியம் வழக்குபோட்டு சுப்ரீம் கோட்டில் தற்போது வரை போராடுகிறது.
பெங்களூர், வசந்த் நகரில் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் “ஐடிசி வின்சர்” (ITC Windsor) எனும் பெயரில், 500 கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டல்
(FIVE STAR HOTEL) கட்டப்பட்டுள்ளன. அதன் நிர்வாகம், அதற்கு ரூ 12,000 மட்டுமே மாத வாடகையாக வக்ஃப் வாரியத்திற்குக்
கொடுக்கிறது.
டில்லி சிறுபான்மைனர் கமிஷனின் உறுப்பினர் ஒருவர், டில்லியில் நிஸாமுதீன் சாலையில் மிகவும்
மதிப்புமிக்க பகுதியில் வக்ஃப் வாரியத்திற்கு உரிமையான நிலத்தில் ஒரு தனியார்
பள்ளிக்கூடத்தை நடத்துகிறார். அதற்கு ரூ1,000 மட்டுமே வாடகையாக வக்ஃப் வாரியத்திற்குக்
கொடுக்கிறார்.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இயங்கும் ISB, Microsoft,
Wipro, Lanco போன்ற ஐடி நிறுவனங்கள் அனைத்தும் வக்ஃப் சொத்துக்களில்
தான் நிறுவப்பட்டுள்ளன. பெங்களூருவிலுள்ள ITC Windsor என்ற 5 நட்சத்திர ஹோட்டல் வக்ஃப் சொத்தில் தான் கட்டப்பட்டுள்ளன.
தெலுங்கானா மாநிலத்தில், மாநில
அரசே வக்ஃப் வாரிய சொத்துக்களைக்
கைப்பற்றியுள்ளது. உதாரணமாக,
ஹைதராபாத்
“ஹை டெக் நகரம்” வக்ஃப் சொத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட
வேண்டிய வக்ஃப் சொத்துக்கள் விற்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும்
உள்ளன. இத்தகைய வக்ஃப் சொத்துக்களை
பாதுகாக்க வேண்டிய வக்ஃப் வாரியப் பொறுப்பில் உள்ளவர்களே இலஞ்சம் பெற்றுக்கொண்டு
கைமாற்றியுள்ளனர் என்பதுதான் கொடுமை.
இவ்வாறு, வக்ஃப் வாரியத்தில் இருக்கிற சிலர்
பெரும் பெரும் வக்ஃப் சொத்துக்களை இலஞ்சம்
பெற்றுக்கொண்டு கைமாற்றியுள்ளனர்.
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர், மர்ஹூம் கவிக்கோ அப்துல்
ரஹ்மான் அவர்கள் கூறினார். முஸ்லிம் சமுதாயம் புதையல் மேல் அமர்ந்து, பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறது.
ஆம்! இந்தியாவில் முஸ்லிம்களுக்காக வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்கள் குவிந்து கிடைக்கிறது.
சுதந்திரத்திற்குப் பின் அது எந்த முஸ்லிமுக்கும் பயன்படவே
இல்லை.
வக்ஃப் சொத்து என்பது தர்கா மற்றும் பள்ளிவாசல்களை நிர்வகிக்க மட்டும் ஏற்படுத்தபட்டவை
அல்ல. மாறாக, ஏழை முஸ்லிம்களுக்காகவும் உருவாக்கபட்டவை தான். இந்தியாவில் அதற்கு தகுதியான
முஸ்லிம்கள் பல வகையில் உள்ளனர்.
இன்றைய இந்தியாவில் பல இலட்சம் முஸ்லிம்கள் ஏழைகளாக வீடற்றோராக உள்ளனர். ஊனமுற்று
செயல்பட முடியாமல் பல முஸ்லிம்கள் உள்ளனர். கணவரை இழந்து சிரமப்படும் முஸ்லிம் பெண்கள்
உள்ளனர். அனைத்து திறமைகள் இருந்தும் முதலீடு இல்லாமல் வட்டிக்கு போக முடியாமல் முடங்கி
கிடப்போர் பலர். ( வக்ஃப் சொத்து முறையாக முஸ்லிம்களுக்கு பயன்படுத்தி இருந்தால் தற்போது
வட்டியும் இருக்காது. )
இவர்களுக்கு செல்ல வேண்டிய வக்ஃப் சொத்துக்கள் தான் இவர்களுக்கு பயன்படாமல் பலகோடி கணக்கில் இலஞ்சம் பெற்றுக்கொண்டு மாற்றாருக்கும், பண முதலைகளுக்கும் பயன்பட்டு
கொண்டுள்ளது. இந்தியாவிலேயே இலஞ்சத்தில் ஊறிகிடக்கும் ஒரு அமைப்பு உண்டென்றால் அது
வக்ஃப் வாரியம் தான். எதிலும் இலஞ்சம்! இலஞ்சம்! இலஞ்சம்!
வக்ஃப் வாரியங்கள்
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்தியாவில் ஆட்சி செய்த மொகலாயர்கள் மற்றும்
அன்று வாழ்ந்த இஸ்லாமிய செல்வந்தர்கள் வருங்கால சமுதாயத்தின் நலன் கருதி வக்ஃப் செய்த சொத்துக்களின் எண்ணிக்கை என்பது கணக்கில் அடங்காதவை.
இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்
மற்றும் செல்வந்தர்கள் மக்களின் பயன்பாட்டுக்காக தங்கள் பகுதியில் இருக்கும் பள்ளிவாசல்கள்,
மதரசாக்கள், தர்காக்கள் ஆகியவற்றின் பெயரில் தானமாக வழங்கப்பட்டவையே வக்ஃப்
சொத்துக்களாகும். அவை, அசையும் சொத்துக்களாகவும்
அசையா சொத்துக்களாகவும் இருக்கின்றன.
இந்த சொத்துக்களை கண்காணிப்பதற்காகவும், அதில் தவறு நடந்துவிடக்கூடாது என்பதற்காகவும் நாடாளுமன்றத்தில்
வக்ஃப் சட்டங்களை அரசு 1954 ஆம் ஆண்டு இயற்றியது.
அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்களிலும் வக்ஃப் வாரியங்கள் 1958 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன.
இச்சட்டங்கள் பின்னர் 1995 ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில்
அவை நிர்வகிக்கப்பட்டும், கண்காணிக்கப்பட்டும்
வருகின்றன.
பரந்து விரிந்த இந்திய தேசத்தில் இராணுவம் மற்றும் இரயில்வே துறைக்கு
அடுத்தபடியாக, அதிக சொத்துக்கள் வக்ஃப் சொத்துக்களாக உள்ளது. இந்திய இராணுவத்திற்கு
சொந்தமான அசையா சொத்தின் பரப்பளவு 17.78 இலட்சம் ஏக்கர், இந்திய
இரயில்வேக்கு சொந்தமான மொத்த அசையா சொத்தின் பரப்பளவு 11.5 இலட்சம் ஏக்கர், இந்திய
வக்ஃப் சொத்துக்களின் பரப்பளவு என்பது 9.4 இலட்சம் ஏக்கர் ஆகும்.
வக்ஃப் சொத்துக்களின் தற்போது மொத்தம் 8,65,646 அசையா சொத்துக்கள் வக்ஃப் வாரியத்தின்
கண்காணிப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் அதிகபட்சம்
உத்திரப்பிரதேசத்தில் 1,99,701 அசையா சொத்துக்களும், இரண்டாவதாக தமிழ்நாட்டில் 60,223
அசையா சொத்துக்களும், மூன்றாவதாக பஞ்சாப்பில் 58,608 அசையா சொத்துக்களும்
இருக்கின்றன.
இதைத் தவிர இன்னும் வக்ஃப் வாரியத்தின் கண்காணிப்பில் பதிவு செய்யப்படாமல் ஆக்கரமிப்பிற்கு
உள்ளாக்கப்பட்டிருக்கும் வக்ஃப் சொத்துக்களின் எண்ணிக்கை ஏராளம்.
உலகில் 54 இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன. அதில் எந்த நாட்டிலும் இந்தியாவில் இருக்கும்
அளவிற்கு வக்ஃப் சொத்துக்கள் இல்லை.
இந்தியாவில் இருக்கும் அளவிற்கு பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதராசக்களின் எண்ணிக்கை உலகில் எந்த இஸ்லாமிய
நாட்டிலும் இல்லை. இங்குள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களுக்குத்தான் ஏராளமான
வக்ஃப் சொத்துக்கள் உள்ளன.
ஊர் மஹல்லா பள்ளிவாசல்களை மட்டும் பராமரிப்பதிலும், வீம்புக்கு புதிய பள்ளிவாசல்கள்
கட்டுவதிலும் இருந்த கவனம் பள்ளிவாசல்களுக்குரிய சொத்துக்களை பாதுகாப்பதிலும், மஹல்லா
அல்லாத பொதுஇடங்களில் தனித்து விடப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து அவற்றை சட்டப்பூர்வமாக
பாதுகாப்பதிலும் முஸ்லிம்களுக்கு கவனம் இல்லாமல் போனது.
எல்லாவற்றுக்கும் மேலாக “சிவன் சொத்து குல நாசம்” (இறைவனின் சொத்தைச் சாப்பிட்டவனின்
வம்சம் விருத்தியடையாது.) என்ற எச்சரிக்கையில் பிற சமூகங்கள் காட்டிய அச்ச உணர்வைகூட
முஸ்லிம்களில் சிலர் காட்டவில்லை.
அல்லாஹ்வின் சொத்துக்களை பாதுகாப்பதில் முஸ்லிம் சமூகத்தை முறையாக பயிற்றுவிக்காமல்
போனதால் தான் பல இலட்சம் கோடிகள் பெறுமானமுள்ள சொத்துக்கள் இன்று ஆக்கிரமிக்கப்பட்டு
அடையாளம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களிடம் சுயநலமும் அலட்சியமும் மிகைத்திருக்கும்வரை வக்ஃப் சொத்துக்கள்
ஆக்கிரமிக்கப்பட்டு தான் கிடக்கும்.
முஸ்லிம்களிடம் விழிப்பு ஏற்பட்டு பொதுநலம் மிகைக்கின்ற காலத்தில் இந்த சொத்துக்கள்
அனைத்தும் சட்டப்பூர்வமாக மீட்கப்பட்டு, முஸ்லிம்களிலும் முஸ்லிம் அல்லாதவர்களிலும்
தேவையுடைய மக்களின் நலனிற்கு நிச்சயம் பயன்படுத்தப்படும்.
அந்த அழகிய காலத்தை நோக்கி சமுதாயத்தை நகர்த்துவது தான் ஒரு சமூக ஆர்வலனுடைய முதன்மை
கடமை.
1999 இல் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக
இருந்த மர்ஹூம் அப்துல் லத்தீப் சாஹிப் அவர்கள்
தமிழக வக்ஃப் சொத்துக்களின் மதிப்பு இரண்டு இலட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று
அன்றைய காலத்திலேயே (அதாவது, ரியல் எஸ்டேட் என்ற தொழில் வளர்ச்சியடையாத காலத்திலேயே)
கூறினார்.
“தமிழகத்தின் நடுவம்” என்ற திருச்சியின் பழைய நிலப் பதிவேடுகளைத் தோண்டினால் திருச்சியின்
பெரும்பகுதி வக்ஃப் சொத்துக்கள் தான்.
ஆன்மிக ஞானி நத்ஹர் (ரஹ்) அவர்கள் அடக்கமாகியுள்ள தர்காவுக்கு சொந்தமானதும்,
அவர்களின் சீடர் குந்தவை நாச்சியார் கொடுத்த நிலத்
தானங்களும், சில நூற்றாண்டுகளுக்குப்
பிறகு மதுரை ராணி மங்கம்மா தானமாக கொடுத்த சொத்துக்களிலும் தான் திருச்சி மாநகரமே அமைந்துள்ளது.
அலட்சியப்போக்கு
இந்த நிலங்களை மீட்கவும் இதை பற்றி கவலைபடவும் இந்த வக்ஃப் நிலங்களை மீட்டு இஸ்லாமிய
சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்கின்ற அடிப்படை சிந்தனைக்கூட இல்லாமல்
இருக்கிறோம்.
இந்த வக்ஃப் நிலங்களை பாதுகாக்க நமக்கு இருக்கும் மிகப்பெரிய
பாதுகாப்பு வக்ஃப் சட்டம் 1995 என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த சட்டம் வக்ஃப் வாரியங்களுக்கு வானுயர்ந்த அதிகாரத்தை வழங்குகிறது. ஒரு நிலம்,
வக்ஃப் நிலமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் வக்ஃப் வாரியத்திற்கு உள்ளது என்று இந்த சட்டம் கூறுகிறது.
இரயில்வே நிர்வாகத்திற்கு இணையாக நிர்வாக கட்டமைப்புகளை கொண்டு செயல்பட வேண்டிய
வக்ஃப் வாரியங்கள் சாதாரண பஞ்சாயத்து அலுவலங்கள்
போல செயல்படுகின்றன என்றால், அதன் முக்கியத்துவம் அறியாமல் வக்ஃப் வாரியங்களை முழுமையாக
இஸ்லாமிய சமூகம் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கிறது என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.
Section 4 (2) of the Muslim Women (Protection of rights on
Divorce) Act, 1986 ன் படி வக்ஃப்
வாரியம் விதவைகளுக்கு மாதம் மாதம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும். அதன்படி தமிழ்நாடு
வக்ஃப் வாரியம் வருடம் 67800/- ரூபாய் செலவிடுகிறது.
தமிழகம் முழுவதும் நம் இஸ்லாமிய சமூகத்தில் வறுமையில் வாடும் விதவைகளின் எண்ணிக்கையை
கணக்கிட்டு அவர்களுக்கு கண்ணியமாக வாழ தேவையான பராமரிப்பு தொகையை பெற்று கொடுக்க நாம்
முயற்சிக்க வேண்டும் . இதன் மூலம் பள்ளிவாசல்களில் பிச்சை கேட்டு நிற்கும் அநாதை பெண்களுக்கு,
நல்வழி பிறக்கும்.
பணி ஓய்வு பெற்ற மார்க்க அறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்க
ஓய்வூதிய திட்டம் 1981 உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2600 மார்க்க அறிஞர்களுக்கு
ஓய்வூதியம் வழங்க தீர்மானிக்கப்பட்டு இருந்தாலும்
1350 மார்க்க அறிஞர்கள் மட்டுமே இதுவரை மாத ஓய்வூதியத் தொகை பெற்று வருகிறார்கள்.
ஆக்கரமிப்பில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்டு, குடியிருப்பு வீடுகளாக
மாற்றியமைத்து குறைந்த வாடகைக்கு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வழங்க முயற்சி மேற்கொள்ள
வேண்டும். இதற்கு வக்ஃப் சட்டத்தையும், வக்ஃப் வாரியங்களையும் பாதுகாக்க வேண்டும்.
உடனே செய்யவேண்டியவை
1) ஒவ்வொரு வக்ஃப் நிர்வாகமும் தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட வக்ஃபு சொத்துகளின்
ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் . ஆவணங்கள் முறையாக பராமரிக்காமல் இருக்கும் வக்ஃப்
நிர்வாகங்கள் ஆவணங்களை தேடி கண்டுபிடித்து அதை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
2) ஒவ்வொரு வக்ஃப் நிர்வாகமும் தங்கள்
நிர்வாகத்திற்கு உட்பட்டு இருக்கும் வக்ஃப்பின் அசையா சொத்துகளுக்கு வேலி அல்லது கான்கிரீட்
சுற்று சுவர் கட்டவேண்டும்.
3) ஒவ்வொரு வக்ஃப் நிர்வாகமும் தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட வக்ஃப் நிலங்களில்
ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருக்கும் வக்ஃப் சொத்துகளை பட்டியலிடவேண்டும். அந்த சொத்துக்கள்
யாரால் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது ஆக்கிரமிப்பின் தன்மைப் பற்றி
தெரிந்துக்கொண்டு அதை மீட்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
4) ஒவ்வொரு வக்ஃப் நிர்வாகமும் தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்டு இருக்கும் வக்ஃப்
சொத்துகளில் உள்ள வாடகைத்தாரர்கள் முறையாக வாடகை தருகிறார்களா? வாடகையின் அளவு நியாயமானதாக இருக்கிறதா?
என்பதை தெரிந்து அதை முறைப்படுத்த வேண்டும்.
5) ஒவ்வொரு வக்ஃப் நிர்வாகமும் தங்களுடைய நிர்வாகம் முறையாக செயல்படுகிறதா?
கணக்கு வழக்குகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?
நிர்வாகிகள் தேர்வு முறையாக நடைபெறுகிறதா?
வெளிப்படை தன்மையோடு நிர்வாகம் செயல்படுகிறதா?
என்று உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
6) ஒவ்வொரு வக்ஃப் நிர்வாகமும் தங்களுடைய வக்ஃப் நிர்வாகத்திற்கு உட்பட்ட அசையா
சொத்துகளின் மதிப்பை உயர்த்தவும், வருமானத்தை பெருக்கவும், பயன்படுத்தப்படாமல் இருக்கும்
வக்ஃப் சொத்துகளில் இருந்து வருமானம் வரும் கடைகள், மாற்றும் குடியிருப்பு வீடுகள்,
கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை உருவாக்கிட முன்வரவேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தாமல் கிடக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் வக்ஃப் நிலங்களில்
தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று குடியிருப்பு காலனிகளை ஏற்படுத்தி, வீடில்லாத ஏழை இஸ்லாமிய
மக்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி தருவதற்கும், கல்வி நிலையங்கள் கட்டுவதற்கும்,
மருத்துவமனைகள் கட்டுவதற்கும் முன்வரவேண்டும்.
7) ஒவ்வொரு வக்ஃப் நிர்வாகமும் தங்கள் மஹல்லாவில் உள்ள விதவைகள் முதியோர்கள் ஆதரவற்றவர்களுக்கு
வக்ஃப் வாரியம்
மூலம் மாத உதவித்தொகை பெற்றுத்தருவதற்கு முயற்சி மேற்கொள்ளவேண்டும்.
இன்ஷா அல்லாஹ், நாமும் இறைவனுக்காக வக்ஃப் வழங்கும் வள்ளல்களாக வேண்டும். மேலும், நம் முன்னோர்கள் நமக்களித்த வக்ஃப் சொத்துக்களை பாதுகாத்து, அதற்குரியவர்களுக்கு
செலவழிக்கப்பட முயற்சிக்க வேண்டும். வக்ஃப்
சொத்துள்ள ஒவ்வொரு நிர்வாகமும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வல்லோன் அல்லாஹுத்தஆலா, இந்திய வக்ஃப் சொத்துக்களை முழுமையாக பாதுகாத்து, அதை இயலாதோருக்கு முறையாக பயன்படுத்தும்
ஆற்றல் மிக்கவர்களாக நம்மை ஆக்குவானாக! ஆமீன்!
(இதிலுள்ள பல தகவல்கள் இணையத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.)
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்:
நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
மிகவும் நுணுக்கமான பல்வேறு தகவல்களை தகவமைத்துக் கொண்டுள்ள பொக்கிஷம் இந்த கட்டுரை! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஈருலகத்தின் அனைத்து ஃகைர் பரக்காத்துகளையும் நிரப்பமாக வழங்கியருள்வானாக!
ReplyDeleteமாஷா அல்லாஹ் 💐 பாரகல்லாஹ் வாழ்த்துக்கள் ஹஜ்ரத்..
ReplyDelete