Search This Blog

Tuesday, 29 October 2024

இப்லீஸின் லீலைகள்

 

இப்லீஸின்  லீலைகள்

 

وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ إِلَّا أَنْ تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ

(ஆதிமனிதர் ஆதம்-அலை மற்றும் அவரது துணைவியாரை நோக்கி) "நீங்கள் இருவரும் வானவர்களாகிவிடக் கூடாது என்பதற்காகவோ, அல்லது நீங்கள் இங்கு நிரந்தரமாக தங்கிவிடக் கூடாது என்பதற்காகவோதான் உங்களுடைய இறைவன் உங்களை இம்மரத்தைவிட்டுத் தடுத்தான்" என்று அவன் (இப்லீஸ்) கூறினான். "நிச்சயமாக நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுவோரில் ஒருவன் ஆவேன்" என்றும் அவ்விருவரிடமும் அவன் சத்தியம் செய்தான். திருக்குர்ஆன்:- 7:20, 21

 

இப்லீஸ், ஷைத்தான்களின் தந்தைக்குப் பெயர். இவன் நெருப்பினால் படைக்கப்பட்டவன் ஜின்னு (Ginn) இனத்தைச் சேர்ந்தவனான இவனுக்குச் சந்ததிகளும், சேனைகளும் உண்டு. மறைவாக இருந்துகொண்டே மனிதர்களை வழி தவறச்செய்வதே இவர்களின் முக்கிய பணியாகும்.

 

இப்லீஸ் மனிதனுக்கு சில சமயங்களில் அற்பமான சில உதவிகள் செய்வான். அது நம்மீதுள்ள பிரியத்தால் அல்ல. அது அவனது சூழ்ச்சிகளில் ஒன்றாகும். எந்த காலத்திலும் இப்லீஸ் மனிதனுக்கு நல்லதை நாடுபவன் அல்லன். மாறாக, மனிதனுக்கு அவன் பகிரங்க விரோதி என்று திருக்குர்ஆன்  கூறுகிறது.

                                                                                                                                                                                இப்லீஸின் லீலைகள் குறித்து இஸ்லாமிய வரலாற்றுப் பக்கங்களில் சிலவற்றை காணலாம் வாருங்கள்.

 

தீண்டல்கள்                                  

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ لِلشَّيْطَانِ لَمَّةً بِابْنِ آدَمَ وَلِلْمَلَكِ لَمَّةً فَأَمَّا لَمَّةُ الشَّيْطَانِ فَإِيعَادٌ بِالشَّرِّ وَتَكْذِيبٌ بِالْحَقِّ وَأَمَّا لَمَّةُ الْمَلَكِ فَإِيعَادٌ بِالْخَيْرِ وَتَصْدِيقٌ بِالْحَقِّ ) மனிதனுக்கு ஷைத்தானின் தீண்டல் ஒன்றும் வானவரின் தீண்டல் ஒன்றும் உண்டு. ஷைத்தானின் தீண்டல் என்பது, தீங்கு நேரும் என அச்சுறுத்துவதும், உண்மையை மறுக்கச்செய்வதும் ஆகும். வானவரின் தீண்டல் என்பது, நன்மை ஏற்படும் என்று நம்பிக்கையூட்டுவதும், உண்மையை ஏற்கச் செய்வதும் ஆகும்.

 

( فَمَنْ وَجَدَ ذَلِكَ فَلْيَعْلَمْ أَنَّهُ مِنَ اللَّهِ فَلْيَحْمَدِ اللَّهَ وَمَنْ وَجَدَ الأُخْرَى فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ) ஆகவே, வானவரின் தீண்டலை உணரும்போது, அது அல்லாஹ்விடமிருந்து ஏற்பட்டதென அறிந்து அவனைப் புகழவேண்டும். ஷைத்தானின் தீண்டலையை உணருகின்றபோது ஒருவர் ஷைத்தானிடமிருந்து காக்குமாறு (அல்லாஹ்விடம்) கோர வேண்டும். இவ்வாறு கூறிவிட்டு மேற்காணும் (2:268) வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள். நூல்:- திர்மிதீ-2904, இப்னு ஹிப்பான், தஃப்சீர் இப்னு அபீஹாத்திம்

 

தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல் போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபட எண்ணும்போது, இப்போது என்ன அவசரம் கொஞ்சம் பொறு. சற்று ஓய்வு எடுத்துக்கொள்! நீ நிறைய வணக்க வழிபாடுகள் செய்துள்ளாய். நீ ஒன்றும் வணக்க வழிபாடுகள் செய்யாமல் இருப்பவன் அல்லர்" என்று இது போன்ற எண்ணங்கள் நமது உள்ளத்தில் தோன்றினால் ஷைத்தானின் ஊசலாட்டம் என்றெண்ணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

ஷைத்தான உங்களுக்கு வறுமையைப் பற்றி அச்சத்தை ஏற்படுத்தி, தீமைகள் புரியுமாறு உங்களை ஏவுகிறான். திருக்குர்ஆன்:- 2:268

 

ஒருவர் நல்லறங்களுக்கு செலவு செய்ய நாடும்போது, ஷைத்தான், "இவ்வாறெல்லாம் நீ செலவு செய்து கொண்டேயிருந்தால் பிற்காலத்தில் உனக்கு வறுமை ஏற்படலாம். உமது மனைவி மக்களுக்கு ஒன்றுமில்லாமல் ஆகி, அவர்கள் கஷ்டப்படக்கூடும். நல்லறங்களுக்காக நீ இதுவரை நிறைய செலவு செய்துவிட்டாய். நீ ஒன்றும் கஞ்சன் இல்லையே! மாறாக, தர்மசீலன் தான். நல்லறங்களுக்காக தொடர்ந்து செலவு செய்து கொண்டேயிருப்பதா? கொஞ்சம் இடைவெளி விடலாம்; இல்லையா? இந்த முறை வேண்டாம்; பிறகு கொடுக்கலாம்" என்று இது போன்ற எண்ணங்களைப் போடுவான்.

 

ஷைத்தான் நமக்கு நன்மை செய்வதாக எண்ணச்செய்வான். ஷைத்தான் நமக்கு எப்போதும் நன்மை செய்ய போவதில்லை. என்றெண்ணி நாம் உஷாராகிவிட வேண்டும்.

 

நமது உள்ளத்தில் இதுபோன்ற உதிக்க ஆரம்பித்துவிட்டாலே ஷைத்தான் நமக்கு உபகாரம் செய்வது போல் பாவனை செய்து நம்மை கெடுக்க முயற்சிக்கிறான். அல்லது நமக்கு கிடைக்க இருக்கும் அந்தஸ்து மற்றும் நன்மைகளின் அளவை குறைக்க முயற்சிக்கின்றான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

வெள்ளப் பிரளயத்தின்போது

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். வெள்ளப் பிரளயத்தின்போது இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் தம் கப்பலில் அனைவரையும் ஏற்றி ஆகிவிட்டதா? என்பதை பார்வையிட ஒவ்வொரு தளமாகச் சென்றார்கள்.

 

அப்பொழுது ஒரு தளத்தில் ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார்; அவரை இதற்கு முன் நூஹ் (அலை) அவர்கள் பார்த்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள், "நீங்கள் எப்படி நுழைந்தீர்கள்? நீங்கள் யார்?" என்று கேட்டார்கள்.

 

அதற்கு அவர், ( دَخَلْتُ لِأُصِيبَ قُلُوبَ أَصْحَابِكَ فَتَكُونَ قُلُوبِهِمْ مَعِيَ وَأَبْدَانِهِمْ مَعَكَ ) "உம்முடைய தோழர்களின் இதயங்களை ஈர்ப்பதற்காக நான் வந்திருக்கின்றேன்; அவர்களின் இதயம் என்னுடன் இருக்கும்; அவர்களின் உடல் உன்னுடன் இருக்கும்" என கூறினார்.

 

நூஹ் (அலை) அவர்கள், ( أَخْرُجْ مِنْهَا يَا عَدُوَّ اللَّهِ فَإِنَّكَ رَجِيمٌ ) "அல்லாஹ்வின் விரோதியே! (இப்லீஸே!) உடனே இங்கிருந்து வெளியேறிவிடு! ஏனென்றால், நீ (இறையருளை விட்டும்) விரட்டப்பட்டவன்" என்று கூறினார்கள்.

 

இப்லீஸ், ( خَمْسٌ أُهْلِكُ بِهِنَّ النَّاسَ وَسَأُحَدِّثُك مِنْهُنَّ بِثَلَاثٍ وَلَا أُحَدِّثُكَ بِاثْنَتَيْنِ ) “(நீர் என்னை இங்கிருந்து வெறியேற்றாமல் இருக்க உமக்கு சிலவற்றைக் சொல்லித்தருக்கிறேன். அதாவது,) ஐந்து விஷயங்கள் இருக்கின்றன; அதனால் தான் மனிதர்கள் அழிந்துகொண்டிருக்கிறார்கள்; அவற்றில் மூன்று விஷயங்களை உமக்கு நான் சொல்லித்தருகிறேன்; இரண்டு விஷயங்களை உமக்கு நான் கண்டிப்பாக சொல்லித் தரவே மாட்டேன்" என்று கூறினான்.

 

உடனே அல்லாஹ், நூஹ் (அலை) அவர்களுக்கு ( لَا حَاجَةَ بِكَ إِلَى الثَّلَاثِ مَرَّهُ يُحَدِّثُكَ بِالِاثْنَتَيْنِ  ) "(நபியே! அவனிடம் இவ்வாறு கேளுங்கள். அதாவது,) “மூன்று விஷயங்கள் குறித்து எனக்கு அவசியமில்லை; (நீ சொல்ல மாட்டேன் என்று சொன்ன) அந்த இரண்டு விஷயங்களை மட்டும் சொல்” (என்று) வஹீ அறிவித்தான். நூஹ் (அலை) அவர்கள் அவனிடம் கேட்டார்கள்.

 

இப்லீஸ், ( الْحَسَدُ وَبِالْحَسَد لُعِنَتْ وَجُعِلْتُ شَيْطَانًا رَجِيمًا ) (வேண்டா வெறுப்பாக,) அவை:  "(ஒன்று) பொறாமைபொறாமையின் காரணமாக நான் சபிக்கப்பட்டு விரட்டப்பட்ட ஷைத்தானாக மாற்றப்பட்டேன். (ஆதம் - அலை அவர்களுக்கு அல்லாஹ்விடத்திலும் வானவர்களிடத்திலும் பெரிய மரியாதை கிடைக்கிறதே அது தமக்கு கிடைக்கவில்லையே என்று பொறாமை கொண்டதின் காரணமாக நான் இறைவனால் சபிக்கப்பட்டவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் ஆகிவிட்டேன். எனவே, எப்போதும் பிறர்மீது பொறாமைக் கொள்ளாதீர்கள்.)

 

( وَالْحِرْصُ أَبَاحَ لِادَمُ الْجَنَّةِ كُلِّهَا فَأَصَبْتُ حَاجَتِي مِنْهُ بِالْحِرْصِ ) (மற்றொன்று:) பேராசை. ஆதமுக்கு சொர்க்கம் முழுவதையும் அனுமதிக்கப்பட்டிருந்தது. (அதனால், அவர் சொர்க்கத்தில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று  பேராசைப்பட்டார்.)  அந்த பேராசையின் மூலம் அவரிடமிருந்து எனக்குத் தேவையானதைப் பெற்றேன். (அதாவது, நான் அவரை வழிகெடுத்து விட்டேன். எனவே, எப்போதும் பேராசை கொள்ளாதீர்கள்.)” என்று கூறினான். நூல்:- இப்னு அபீதுன்யா, தாரீக் திமிஷ்க் இமாம் இப்னு அசாகிர், தல்பீஸ் இப்லீஸ் பாடம்-3 இமாம் இப்னு ஜவ்ஸீ

 

பொறாமை குணத்தால், இப்லீஸ் வழிகெட்டுப்போனான். பேராசை குணத்தால், இறைத்தூதர் ஆதம் (அலை) அவர்கள் ஒருமுறை மட்டுமே இறைவனின் சொல்லுக்கு மாறு செய்தார்கள். பொறாமையும் பேராசையும் ஆக மோசமான குணங்களாகும்.

 

பலதரப்பட்ட கொக்கிகள்

 

ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஒருமுறை இறைத்தூதர் யஹ்யா (அலை) அவர்கள் அவர்களை இப்லீஸ் சந்தித்தான். அப்போது அவனிடம் பலதரப்பட்ட கொக்கிகள் இருந்தன. அவை குறித்து யஹ்யா (அலை) அவர்கள், ( يَا إِبْلِيسُ مَا هَذِهِ الْمَعَالِيقُ الَّتِي أَرَى عَلَيْكَ ) "இப்லீஸ் உன்னிடம் நான் பார்க்கின்ற இந்த கொக்கிகள் எதற்காக?" என்று கேட்டார்கள். இப்லீஸ், ( هَذِهِ الشَّهَوَاتُ الَّتِي أَصِيدُ بِهَا ابْنُ ادَمَ ) "இவைதான் மனஇச்சைகள்; இவற்றால் ஆதமின் மக்களை நான் வேட்டையாடுவேன்" என்றான். அன்னார், ( فَهَلْ لِي فِيهَا مِنْ شَيْءٍ ) "இவற்றில் என்னுடையது ஏதும் உண்டா?" என்று வினவினார்கள். அதற்கு அவன், ( رُبَّمَا شَبِعْتَ فَثَقَّلْنَاك عَنِ الصَّلَاةِ وَثَّقَلْنَاك عَنِ الذِّكْرِ ) “(ஆம்!) சிலவேளை நீங்கள் வயிறு நிரம்ப உண்ணும்போது தொழுகை குறித்து உங்களை சோர்வடையச் செய்வோம். அல்லாஹ்வை நினைவு கூறுவதை குறித்தும் உங்களை சோர்வடையச் செய்வோம். (அதாவது, சற்று உங்கள் கவனத்தை திருப்பி விடுவோம்)" என்று கூறினான்.

 

அன்னார், ( فَهَلْ غَيْرُ ذَلِكَ ) "இதனின்றி வேறு கொக்கிகள் ஏதும் உனக்கு உண்டா?" வினவினார்கள். அவன், "இல்லை" என்றான்.

 

அப்போதுதான் அன்னார், ( واللَّهِ عَلَيَّ أَنْ لَا أَمْلَأَ بَطْنِي مِنْ طَعَامٍ أَبَدًا ) "அல்லாஹ்வின் மீதாணையாக! (இனிமேல்) ஒருபோதும் நான் வயிறு நிரம்ப உண்ணமாட்டேன்" என்று சபதம் எடுத்துக்கொண்டார்கள். அப்போது இப்லீஸ், ( وَاللَّهِ عَلَىَّ أَنْ لَا أَنْصَحَ مُسْلِمًا أَبَدًا ) "அல்லாஹ்வின் மீதாணையாக! இனி ஒருபோதும் முஸ்லிம் எவருக்கும் அறிவுரை கூறமாட்டேன்" என்றான். நூல்:- தல்பீஸ் இப்லீஸ் பாடம்-3 இமாம் இப்னு ஜவ்ஸீ, அஹ்காமுல் ஜான்னு - இமாம் இப்னு தகியூத்தீன், சுபுலுஸ் ஸலாம்  

 

ஒவ்வொரு மனிதனும் தனது மனதில் எழும் ஆசைகள் அபிலாசைகளை கட்டுப்படுத்தி, மனதை சீர்படுத்தி இறைவனின் வழியில் அழைத்துச் செல்வது மிகக் கடுமையான போராட்டம் தான்.

 

"உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு" என்பது தமிழ் பழமொழி.

 

வயிறு நிறைய உண்ணும்போது இயல்பான இறைவணக்கத்திற்கும் அது இடையூறாக அமையும். எனவேதான், வயிறு நிறைய உண்பதை வேண்டாம் என்கிறது இஸ்லாம்.

 

ஆயத்துல் குர்சி

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (ஸல்) அவர்கள் ரமளான் தர்மப் பொருட்களை (ஸதகத்துல் ஃபித்ர்) பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் அளித்தார்கள். அப்போது ஒருவன் (இரவில்) வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். அவனை நான் பிடித்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவன், ‘‘நான் ஓர் ஏழை; எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது!” என்று கூறினான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபியவர்கள், ( يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ  ) ‘‘அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள்.

 

நான், ( يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالاً فَرَحِمْتُهُ، فَخَلَّيْتُ سَبِيلَهُ ) ‘‘அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, அவன்மீது இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்” என்றேன். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ( أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ ) ‘‘நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; மீண்டும் அவன் வருவான்” என்றார்கள்.

 

‘மீண்டும் வருவான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காகக் காத்திருந்தேன். அவன் இரண்டாவது முறையும் வந்தான். நான் அவனைப் பிடித்தேன். அவன் அவ்வாறே கூறினான். நான் அவனை விட்டு விட்டேன். பிறகு, மூன்றாவது முறையும் வந்தான். அவன் அவ்வாறே கூறினான்.

 

அவன், ‘‘என்னை விட்டுவிடும்! உமக்கு அல்லாஹ் பயனளிக்கும் சில வார்த்தைகளைக் கற்றுத்தருகிறேன்” என்றான். அதற்கு நான், ‘‘அந்த வார்த்தைகள் என்ன?” என்று கேட்டேன். அவன், ‘‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ‘அல்லாஹு லா இலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்’ என்று தொடங்கும் ‘ஆயத்துல் குர்சி’யை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதுவீராக! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; உம்மை ஷைத்தான் நெருங்கமாட்டான்” என்றான். எனவே, நான் அவனை விட்டுவிட்டேன்.

 

விடிந்ததும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ‘‘நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கும் சில வார்த்தைகளைக் கற்றுத்தந்தான். அதாவது, ( إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ مِنْ أَوَّلِهَا حَتَّى تَخْتِمَ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ وَلاَ يَقْرَبَكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ ) “நீர் படுக்கைக்குச் செல்லும்போது ‘ஆயத்துல் குர்சி’யை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதுவீராக! அவ்வாறு ஓதினால், விடியும்வரை அல்லாஹ்விவிடருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; ஷைத்தான் உம்மை நெருங்கமாட்டான்” என்று என்னிடம் அவன் கூறினான். அதனால் அவனை விட்டுவிட்டேன் என்றேன்.

 

அப்போது நபியவர்கள், ( أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ، تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُنْذُ ثَلاَثِ لَيَالٍ  ) ‘‘அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும், உம்மிடம் அவன் உண்மையே சொல்லியிருக்கிறான். மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசிவருகிறீர் என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். ‘‘தெரியாது” என்றேன். ( ذَاكَ شَيْطَانٌ  ) ‘‘அவன்தான் ஷைத்தான்” என்று நபியவர்கள் கூறினார்கள். நூல்:- புகாரீ-2311

 

பன்மடங்கு நன்மைகள் கிடைத்திடக் கூடாது 

 

ஒருநாள் ஹள்ரத் முஆவியா (ரலி) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு பிந்தி வந்ததால் ஜமாஅத் தொழுகையில் இமாமுடன் சேர்ந்து தொழுகமுடியாத நிலை ஏற்பட்டு, தனியாக தொழுதார்கள். இந்த செயலால் அன்னாருக்கு மனதில் கவலை ஏற்பட்டு, இன்றிலிருந்து ஒரு வருடகாலம் இரவில் நான் தூங்கமாட்டேன் என தனக்குத் தானே தண்டனை அறிவித்துக்கொண்டார்கள்.

 

அடுத்தநாள் ஒருவன் முஆவியா (ரலி) அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் வந்து, ( إنَّ وَقْتَهَا أَوْشَكَ عَلَى الْإِنْتِهَاءِ ، فَأَسْرَعَ إِلَى الْمَسْجِدِ ، وَعَجَّلَ الطَّاعَةَ قَبْلَ الْفَوْتِ ) “(ஃபஜ்ரு) நேரம் முடிவடையப்போகிறது. எனவே, பள்ளிவாசலுக்கு விரைந்து சென்று, நேரம் தவறுவதற்குள் உங்கள் தொழுகையைத் துரிதப்படுத்துங்கள்" என்று கூறினான். தூக்கத்திலிருந்து எழுந்த முஆவியா (ரலி) அவர்கள், ( مَنْ أَنْتَ ؟ وَمَا اسْمُكَ ؟ ) “(என்னை எழுப்பிய) நீ யார்மற்றும் உமது பெயர் என்ன?" என்று கேட்டார்கள். தூணில் மறைந்திருந்த அவன், ( اسْمِي مَشْهُورٌ ، إِبْلِيسُ الشَّقِيُّ ) "என் பெயர் தான் பிரபலமானதே! (அதாவது) கேடுகெட்ட இப்லீஸ் (நான்தான்)” என்றான்.

 

முஆவியா (ரலி) அவர்கள் அவனிடம், ( وَمَتَى كُنْتَ لِعِبَادِ اللَّهِ مِنَ النَّاصِحِينَ ؟ ) "நீ எப்போதிலிருந்து இறைவனின் அடியார்களுக்கு நல்லுபதேசம் வழங்குபவராக ஆனாய்?" என்று கேட்டார்கள்.

 

இப்லீஸ், “நீ நேற்று ஃபஜ்ரை பிந்தி தொழுததற்காக தேம்பி தேம்பி அழுததாலும் ஒருவருடம் இரவில் உறங்கமாட்டேன் என்று உறுதி எடுத்ததற்காகவும் அல்லாஹ் பன்மடங்கு நன்மைகளை உமக்கு எழுதிட்டானே! அது போல இன்றைக்கும் உமக்கு கிடைத்து விடக்கூடாது என்ற தீய எண்ணத்தில் உம்மை எழுப்பிவிட்டேன்” என்றான். நூல்:- மஸ்னவீ இமாம் ஜலாலுத்தீன் ரூமீ   

 

இதிலிருந்து ஷைத்தான் எந்த நல்லது செய்தாலும், அது நல்லதல்ல என்று விளங்கவேண்டும். எனவே தான் அல்லாஹ் உங்களுக்கு ஷைத்தான் பகிரங்கமான விரோதி என குர்ஆனில் அறிவித்துள்ளான். உலக வாழ்க்கையில் ஷைத்தானிய குணமுள்ள மனிதர்களிடம் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

 

ஞாபகம் வந்தது

 

ஓரிரவு இமாம் அபூஹனீஃபா (ரஹ்)விடம் ஒருவர் வந்து, ( يَا إِمَامُ ، مُنْذُ مُدَّةٍ طَوِيلَةٍ دَفَنْتُ مَالًا فِي مَكَانٍ مَا ، وَلَكِنِّي نَسِيتُ هَذَا الْمَكَانَ ، فَهَلْ تُسَاعِدُنِي فِي حَلِّ هَذِهِ الْمُشْكِلَةِ ؟ ) “இமாம் அவர்களே ரொம்ப நாள்களுக்கு முன்னர் எனது செல்வத்தை ஏதோ ஓரிடத்தில் புதைத்து வைத்தேன். அது எந்த இடம் என்று இப்போது மறந்துவிட்டேன். அதைக் கண்டுபிடிக்க, எனக்கு உதவ முடியுமா?” என்று கேட்டார்.

 

அதற்கு “இந்த சிக்கலுக்கு தீர்வை நான் சொல்வதா? இது சட்ட வல்லுநர் ஒருவரின் வேலையல்லவே?” என்று பதிலளித்த இமாம் அவர்கள், கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, ( اذْهَبْ ، فَصَلِّي حَتَّى يَطْلُعَ الصُّبْحُ ، فَإِنَّك سَتَذْكُرُ مَكَانَ الْمَالِ إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى ) “நீ சென்று  சுப்ஹ் வரை (இந்த இரவு முழுவதும்) தொழுவீராக. அல்லாஹ் நாடினால் நீர் செல்வத்தை புதைத்த இடம் ஞாபகம் வரக்கூடும்” என்று கூறினார்கள்.

 

அவர் சென்று தொழத்தொடங்கினார். சற்று நேரத்திலேயே திடீரென தொழுகையில் இருக்கும்போதே அவருக்கு அவ்விடம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. உடனே அவர் ஓடோடிச்சென்று தனது செல்வத்தை எடுத்துக்கொண்டார்.

 

காலையில் அவர் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களைச் சந்தித்து தனது செல்வம் கிடைத்துவிட்டதைச் சொல்லி, நன்றி கூறினார். பிறகு, ( كَيْفَ عَرَفْتَ أَنِّي سَأَتَذَكَّرُ مَكَانَ الْمَالِ ؟ ) நான் செல்வத்தைப் புதைத்த இடம் எனக்கு ஞாபகத்துக்கு வரும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.

 

இமாம் அவர்கள், ( لِأَنِّي عَلِمْتُ أَنَّ الشَّيْطَانَ لَنْ يَتْرُكَك تُصَلِّي ، وَسَيَشْغَلُكَ بِتَذَكُّرِ الْمَالِ عَنْ صَلَاتِكَ ) “எனக்குத் தெரிந்ததெல்லாம் இதுதான்; ஷைத்தான் உன்னை இரவு முழுவதும் தொழுவதற்கு விடமாட்டான். எப்படியாவது செல்வம் இருக்கும் இடத்தை உனக்கு ஞாபகமூட்டி உன்னை தொழவிடாமல் தடுப்பான்.” என்று பதிலளித்தார்கள். நூல்:- மவ்சூஅத்துல் அக்லாகி வஸ்ஸுஹ்தி வர்ரகாஇகி-2/113 ( موسوعة الأخلاق والزهد والرقائق ) யாசிர் அப்துர் ரஹ்மான், கதாயிஃபுல் லதாயிஃப் ( قطائف اللطائف

 

நாம் தொழுகையில் ஈடுபடும்போது தான் இப்லீஸ் மறந்தவற்றையெல்லாம் நினைவுப்படுத்துவான். அதன் மூலம் நமக்கு தொழுகையில் இருக்கவேண்டிய உள்ளச்சம் மற்றும் மன ஓர்மையை கெடுத்துவிடுவான். ஆம்! மறந்தது நினைவுக்கு வருவதால் கிடைக்கும் இலாபத்தைவிட உள்ளச்சத்துடனும், மன ஓர்மையுடன் தொழுவதன் மூலம் கிடைக்கும் இலாபம் பன்மடங்கு அதிகம். எனவே, இதுவும் ஷைத்தானின் சதி வேலையாகும்.

 

ஒரு பள்ளிவாசலில் இமாம் இஷா தொழவைத்து முடித்தார். பின்னால் நின்று தொழுதவர்களில் ஒருவர் மட்டும் எழுந்து நின்று, இமாம் அவர்களே! நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழ வைப்பதற்கு பதிலாக மூன்று ரக்அத்கள் தான் தொழ வைத்தீர்கள்" என்று கூறினார். இமாம் அவர்கள், எனக்கு பின்னால் இருந்து தொழுதவர்களில் யாரும் இதைப் பற்றி சொல்லாதபோது நீங்கள் மட்டும் எப்படி உறுதியாக மூன்று ரக்அத்கள் தான் நான் தொழ வைத்தேன் என்று சொல்லுகிறீர்கள்?" என்று வினவினார்.

 

அதற்கு அந்த மனிதர், "இமாம் அவர்களே! எனக்கு நான்கு கடைகள் உள்ளது. நான் அந்த நான்கு கடைகளையும் அடைத்துவிட்டு இஷா தொழுகைக்கு இமாம் ஜமாத்தாக தொழ வருவது வழக்கம். அவ்வாறு வந்து நான் தொழும்போது ஒவ்வொரு ரக்அத்திலும் ஒவ்வொரு கடையின் வரவு செலவு கணக்குகள் ஞாபகத்திற்கு வரும். அதை சரிபார்த்துவிடுவேன். எனவே, இன்றைக்கு மூன்று கடைகளின் வரவு செலவுகளைத்தான் சரிபார்த்துள்ளேன். இன்னும் ஒரு கடையின் வரவு செலவு கணக்கு மீதம் இருக்கிறது" என்று பதிலளித்தார்.  

 

உயிர்த்தியாகிவிடக் கூடாது

 

இமாம் ஸஅலபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதர் இப்லீசை தினமும் ஆயிரம் தடவை திட்டித்தீர்ப்பார். ஒருநாள் அவர் ஒரு சுவற்றின் நிழலில் உறங்கிக் கொண்டிருந்தார். திடீரென்று அங்கு ஒருவன் வந்து, உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பிவிட்டான். பிறகு சுவர் இடிந்து விழப்போகிறது. அதனால் உம்மை எழுப்பிவிட்டேன் என்று கூறியவுடனே அந்த சுவர் இடிந்து விழுந்தது. எழுந்தவர் தன்னை எழுப்பிவிட்டவரை நோக்கி! ( مَنْ أَنْتَ ) "நீ யார்?" என்று கேட்டார். உடனே அவன், "நான் தான் இப்லீஸ்" என்றான்.

 

உடனே அவர் (ஆச்சரியமடைந்தவராக), ( كَيْفَ تَفْعَلُ هَذَا مَعِي وَأَنَا أَلْعَنُكَ فِي كُلِّ يَوْمٍ أَلْفَ مَرَّةٍ ) “நானோ உன்னை தினமும் ஆயிரம் தடவை தீட்டித்தீர்க்கிறேன். அப்படியிருக்க, நீ ஏன் இதைச் செய்தாய்?" என்று கேட்டார். அவன், ( حَتَّى لَا تَكُونَ شَهِيدًا ) "(யார் சுவர் இடிந்து விழுந்து இறந்துவிடுகின்றாரோ அவருக்கு உயிர்த்தியாகி எனும் அந்தஸ்து கிடைத்துவிடும்) நீர் (அவ்வாறு) உயிர்த்தியாகிவிடக் கூடாது என்பதற்காக தான் நான் அவ்வாறு செய்தேன்" என்றான். நூல்:- அல்அராஇஸ், நுஸ்ஹாஹ் 1/193

 

மனிதன் உயர்ந்த அந்தஸ்தை பெற்றுவிடக்கூடாது என்பதில் இப்லீஸ் மிகவும் கவனத்துடன் இருக்கிறான் என்பது தெளிவாகிறது. இப்லீஸ் செய்கின்ற உதவியிலும்கூட அது அவனுக்கு சாதகமாகவும் நமக்கு பாதகமாகவும் இருக்கும் என்பதும் தெளிவாகிறது.

 

நமக்கு கிடைக்கயிருக்கும் பெரிய இலாபத்தை கெடுப்பதற்கே இப்லீஸ் நமக்கு சிறிய உதவியைச் செய்வான் என்பதில் கவனம் தேவை. அவன் நமக்கு செய்த சிறிய உதவியால் சந்தோஷமடைந்துவிடக் கூடாது.

 

ஒரு வியாபாரி, ஜமாத் தொழுகையில் கலந்துக்கொள்வதற்காக கடை அடைக்கும் நேரம் வரும்போது தான், நுகர்வோர் அது வேண்டும், இது வேண்டும் என்று நிறைய வருவார்கள். இதுவும் இப்லீஸின் லீலைகளில் ஒன்றுதான்.

 

அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும் வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்தைவிட ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வதன் மூலம் கிடைக்கும் இலாபம் பன்மடங்கு அதிகம்.

 

சுருங்கக்கூறின்இப்லீஸ் மனிதனுக்கு சிறிய இலாபத்தை கொடுப்பதுபோல் பாவனை செய்து, மனிதனுக்கு கிடைக்கயிருக்கும் பெரிய இலாபத்தை தடுத்துவிடுவான்.

 

நமக்கு இப்லீஸ் அரிதாக செய்கின்ற சிறு உதவிகள் அனைத்தும் நம்மை சிக்கவைக்கும் அவனது சூழ்ச்சி என்று விளங்கவேண்டும்.

 

மனத்தூய்மை

 

ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (முன் சென்ற காலத்தில்) மக்கள் ஓர் மரத்தை வணங்கிக் கொண்டிருந்தனர். இதைக் கண்டு வெகுண்டெழுந்த ஒரு வணக்கசாலி அல்லாஹ்விற்காகக் கோபம் கொண்டு அதை வெட்டிச்சாய்ப்பதற்காக வந்தார். அப்போது இப்லீஸ் மனித வடிவில் தோன்றி, அவரிடம் வந்து, ( مَا تُرِيدُ ) "நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டான். அதற்கு அவர், ( أُرِيدُ أَنْ أَقْطَعَ هَذِهِ الشَّجَرَةِ الَّتِي تُعْبَدُ مِنْ دُونِ اللَّهِ ) அல்லாஹ்வைத் தவிர்த்து வணங்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த மரத்தை வெட்ட நினைக்கிறேன்" என்று கூறினார்.

 

அப்போது இப்லீஸ், ( إذَا أَنْتَ لَمْ تَعْبُدُهَا فَمَا يَضُرُّكَ مَنْ عَبَدَهَا ) "நீ அதை வணங்காதபோது அதை வணங்குபவர்களால் உனக்கு என்ன தீங்கு ஏற்படுகிறது?" என்று கேட்டான். அதற்கு அவர், "நிச்சயமாக நான் அதை வெட்டுவேன்" என்று கூறினார். அப்போது இப்லீஸ், ( هَلْ لَكَ فِيمَا هُوَ خَيْرٌ لَك لَا تَقْطَعُهَا وَلَك دِينَارَانِ كُلَّ يَوْمٍ إذَا أَصْبَحَتْ عِنْد وِسَادَتِكَ ) "உனக்கு நன்மை பயக்கும் ஒரு காரியத்தைச் செய்ய உனக்கு விருப்பம் உள்ளதா? (அதாவது,) இந்த மரத்தை நீ வெட்டாவிட்டால் விடிந்ததும் உன் தலையணைக்கு அடியில் இரண்டு தங்கக் காசுகள் தினமும் உனக்கு கிடைக்கும்" என்று கூறினான். 

 

அதற்கு அவர், ( فَمَنْ أَيْنَ لِي ذَلِكَ )  "இவ்வாறு எனக்கு உத்தரவாதம் கொடுப்பவர் யார்?" என்று கேட்டார். இப்லீஸ், ( أَنَا لَكَ ) "நான் உமக்கு உத்தரவாதம் தருகிறேன்" என்று கூறினான். எனவே அவர் திரும்பி சென்றார்.

 

(இந்தப் பேச்சு வார்த்தைக்கு பிறகு, முதல் நாள்) விடிந்ததும் தன் தலையணைக்குக் கீழ் இரண்டு தங்கக்காசுகள் இருப்பதைக் கண்டார். (மகிழ்ச்சி அடைந்தார்.)  இதற்குப்பின் (இரண்டாம் நாள்) அவர் காலைப் பொழுதை அடைந்தபோது அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. உடனே கோபத்துடன் மீண்டும் அந்த மரத்தை வெட்டுவதற்காக சென்றார்.

 

அப்போது ஷைத்தான் மனித வடிவில் அவரிடம் தோன்றி, "நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டான். அதற்கு அவர், "உயர்ந்தோன் அல்லாஹ்வைத் தவிர்த்து வணங்கப்படும் இந்த மரத்தை வெட்ட நினைக்கிறேன்" என்று கூறினார். அப்போது ஷைத்தான், ( كَذَبْتَ مَالِكٌ إلَى ذَلِكَ مِنْ سَبِيلٍ ) "நீ பொய் சொல்கிறாய்! இப்போது அதற்கு உன்னால்  இயலாது" என்று கூறினான்.

 

அவர் அதை வெட்ட முற்பட்டபோது, ஷைத்தான் அவரைத் தரையில் கீழே தள்ளி, அவர் கழுத்தை நெறித்தான். அவரைக் கொல்லும் நிலைக்குச் சென்றபோது, ( أَتَدْرِي مَنْ أَنَا أَنَا الشَّيْطَانُ جِئْتَ أَوَّلَ مَرَّةٍ غَضَبًا فَلَمْ يَكُنْ لِي عَلَيْكَ سَبِيلَ فَخَدَعْتُكَ بِالدِّينَارَيْنِ فَتَرَكْتَهَا فَلَمَّا جِئْتَ غَضَبًا لِلدِّينَارَيْن سَلَّطْتُ عَلَيْكَ ) “நான் யார் என்று உனக்குத் தெரியுமா? நான் தான் ஷைத்தான் ஆவேன். நீ முதல் தடவை அல்லாஹ்விற்காக கோபம் கொண்டு வந்தாய். அப்போது உன்னை வீழ்த்த எனக்கு வழி ஏதுமில்லை. இரண்டு தங்கக்காசுகளை கொண்டு நான் உன்னை ஏமாற்றியபோது, நீ இந்த மரத்தை (வெட்டாமல்) விட்டு விட்டாய். இதன் பின் இரண்டு தங்கக்காசுகள்  கிடைக்காததற்காகக் கோபம் கொண்டு நீ வந்தபோது, உன்னை வெல்லும் ஆற்றல் எனக்கு கொடுக்கப்பட்டுவிட்டது" என்று கூறினான். நூல்:- தல்பீஸ் இப்லீஸ் பாடம்-3 இமாம் இப்னு ஜவ்ஸீ

 

நாம், நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பாவக்காரியத்தை அல்லாஹ்விற்காக தடுக்க நினைக்கும்போது அதைத் தடுப்பதற்குரிய  ஆற்றலை அல்லாஹ் நமக்கு வழங்குவான். அதில், நம்முடைய மனத்தூய்மை அகன்றுவிட்டால், அது குறித்து நம்முடைய எதிரிகள் நம்மை வீழ்த்திவிடுவார்கள். நாம் போதிய பலமற்ற, செல்லாக் காசாகி விடுவோம்.

 

நாம், அல்லாஹ்வுக்காக என்று மனத்தூய்மையுடன் ஒரு நற்செயலை செய்யும்போது அதில் ஷைத்தான் குறுக்கிட்டாலும்கூட நாம் அதில் வெற்றி பெறுவோம். ஆனால், மனத்தூய்மையின்றி எந்த நற்செயலை செய்தாலும் நம்மை ஷைத்தான் மிக இலகுவாக வென்றுவிடுவான் என்பது தெளிவாகிறது. பொருளாதாரத்திற்காக இஸ்லாமிய இயக்கங்களை நடத்துவோரே இதற்கான உதாரணமாகும்.

 

சில நேரங்களில் ஷைத்தான் நமக்கு உதவி செய்வதின் மூலம் நமது மனத்தூய்மையை கெடுத்துவிடுவான் என்பதை விளங்க வேண்டும்

 

நாம் ஓரிரு நல்லறங்களை மனத்தூய்மையுடன் சப்தமில்லாமல் செய்து கொண்டிருப்போம். இதை அறிந்து சிலர் நம்மிடம் தொடர்பு கொண்டு, இதையே நாங்கள் பெரிய அளவில் மக்களுக்கு பயனுள்ள விதத்தில் செய்து கொண்டிருக்கிறோம். எனவே, நீங்களும் எங்களோடு இணைந்துக்கொண்டால், இதை பெரிய அளவில் கொண்டு சென்று, மிகவும் பயனுள்ளதாக ஆக்கிவிடலாம் என்று பேசி அவர்களோடு நம்மை இணைத்துவிடுவார்கள். அவர்களோடு நாம் இணைந்து பிரபலமடையும்போது, இதுவரை  நம்மிடம் இருந்த மனத்தூய்மை குறைந்து போகலாம். எனவே, இது குறித்து விழிப்புணர்வு தேவை.

 

நமது நல்லறங்களில் மனத்தூய்மையை துடைத்தெறிய, ஷைத்தான் நமக்காக எந்த வகையிலும் உதவி செய்ய தயாராகவே உள்ளான். அது உதவியல்ல, சதி வேலை என்று விளங்க வேண்டும்.

 

பறப்பதை நம்பி, இருப்பதை கைவிட்டது போல் ஆகிவிடும்.

 

நாம் ஓரளவு சம்பாதித்துக் கொண்டிருப்போம். இருந்தாலும், சிலர் நம்மிடம் தொடர்பு கொண்டு பெரிய அளவில் சம்பாதிப்பதற்கு வழி இருக்கிறது வாருங்கள் என்று அழைப்பார்கள். அவ்வாறே ஓரிரு மாதங்கள் அல்லது ஓரிரு வருடங்கள் கொஞ்சம் கூடுதலான தொகையை சம்பாதிக்க நேரிடலாம். ஆனால் அதன் பிறகு நாம் இதுவரை சம்பாதித்த அனைத்தையும் இழக்க நேரிடலாம். எனவே, இதில் கவனம் தேவை.

 

சுருங்கக்கூறின்: சிலரால் கிடைக்கும் உதவி, நமக்கு பெரும் இழைப்பையும்  நஷ்டத்தையும் உண்டாக்கி விடக்கூடும்.

 

ஆகவே, அல்லாஹுத்தஆலா நம்மை இப்லீஸின் லீலைகளிலிருந்து பாதுகாத்து, இறைநம்பிக்கையாளர்களாக இறக்கச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 


1 comment:

  1. அல்ஹம்துலில்லாஹ்

    அருமையான ஆக்கம்

    அல்லாஹ் உங்களுக்கும்
    எங்களுக்கும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க காரியங்கள் அனைத்தில் இருந்தும்
    பாதுகாத்து அருள்புரிவானாக

    ReplyDelete

கவனக்குறைவு

  கவனக்குறைவு   فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (இந்தத்) தொழுகையாளிகளுக்கு கேடு தான். அவர்கள் தமது தொ...