Search This Blog

Wednesday, 17 January 2024

அருள்வளம் நிறைந்த பெண் குழந்தைகள்

 

அருள்வளம் நிறைந்த பெண் குழந்தைகள்

 

وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது, எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது. திருக்குர்ஆன்:- 81:8,9

 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 அன்று (International Day of the Girl Child)  சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.


பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் கல்வி, ஊட்டச்சத்து, குழந்தை திருமணம், சட்ட உரிமைகள் மற்றும் மருத்துவம், பாதுகாப்பு, கௌரவம் போன்ற பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை அன்றைய தினம் ஊக்குவித்தல்.

 

குழந்தை பாக்கியமின்றி எத்தனையோ பேர் சிரமப்படுகிறார்கள். பல இலட்சங்கள் செலவு செய்தும் பலனின்றி பரிதவிக்கிறார்கள். குழந்தை என்பது மனிதனுக்கு இறைவன் வழங்கும் மிகப்பெரும் கொடை. குழந்தைகள்மீது பாசம் காட்டி, சீரோடும் சிறப்போடும் வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து வைத்து, அவர்களின் நல்வாழ்வுக்கு வழி வகுக்கும்போது, பெற்றோருக்கு இறைவன் சிறந்த நற்பலனை வழங்குவான்.

 

அதிலும் பெண் குழந்தையாக இருந்துவிட்டால், அவளைப் பராமரித்து வளர்த்து ஆளாக்குவதில் உள்ள சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு, பாசம் குறையாமல் திருமணம் வரை பொறுப்போடு நடந்துகொள்ளும் பெற்றோருக்கு மேலான பரிசை இறைவன் வழங்குவான்.

 

ஆண் மகனிடமிருந்து எதிர்காலத்தில் கிடைக்கும் உதவிகளை மனதில் கொண்டுகூடப் பெற்றோர் அவர்கள்மீது அதிக நெருக்கத்தைக் காட்டலாம். ஆனால், பெண்களான மகள்களிடமிருந்து இத்தகைய அரவணைப்புகளைப் பெற்றோர் எதிர்பார்ப்பது அரிது. அப்படியிருந்தும், பிரதிபலன் எதிர்பார்க்காமல் அவர்கள்மீது உண்மையான அன்பும், அக்கறையும் காட்டுவது நிச்சயமாக தியாகமின்றி வேறில்லை.

 

நபியவர்களின் பிறப்பை நேசிக்க வேண்டும்

 

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களும், இறைத்தூதர் மூசா (அலை) அவர்களும் பிறக்கும் விஷயம் முன்னரே அரசர்களுக்கு கனவின் மூலம் காட்டப்பட்டது. அதனால் அந்த அரசர்கள் தம் பதவிக்கு ஆபத்தை உண்டாக்கும் குழந்தைகளை கொல்லவேண்டும் என்பதற்காக அந்த காலகட்டத்தில் பிறந்த பல இலட்சம் ஆண் குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்றனர். ஆனால், அல்லாஹ் அந்த இறைத்தூதர்களை அதே காலத்தில் பிறக்கச் செய்து, பாதுகாப்பாக வளர்த்தான். இவர்கள் இருவருக்காக இறந்த குழந்தைகள் பல இலட்சம்.


இதே நிலையில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறக்கும்போதும் இருந்தது. ஆனால், அவர் எந்த இடத்தில் பிறப்பார் என்று எவருக்கும் தெரியாது என்பதால் நபியவர்களை அழிப்பதாக எண்ணி மற்றவர்களை அழிக்கும் நிலை உருவாகவில்லை.


நபியவர்கள் பிறந்த மக்கா நகரில், பெண் பிள்ளைகள் பிறந்துவிட்டால் அவர்களை உயிருடன் புதைத்துவிடும் பழக்கம் இருந்து வந்தது. நபியவர்கள் பிறப்பை முன்னிட்டு அந்த ஆண்டில் எவரும் தம் பெண் பிள்ளைகளை உயிருடன் புதைக்கக்கூடாது என்பதற்காக நபியவர்கள் பிறந்த ஆண்டிலிருந்து ஓராண்டு வரை மக்காவில் எவருக்கும் பெண் பிள்ளைகள் பிறக்கவே இல்லை. எனவே, நபியவர்களின் பிறப்பை அனைவரும் நேசிக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் அவ்வாண்டில் ஆண் மக்களை மட்டும் பிறக்கச் செய்தான். இதன் மூலம் நபியவர்களுக்கு அல்லாஹ் ஒரு சிறப்பை வெளிப்படுத்தினான். இது நபியவர்களுக்காக அல்லாஹ் செய்த ஏற்பாடாகும். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

நரபலி

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ وُلِدَتْ لَهُ ابْنَةٌ، فَلَمْ يَئِدْهَا، وَلَمْ يُهِنْهَا، وَلَمْ يُؤْثِرْ وَلَدَهُ عَلَيْهَا ـ يَعْنِي الذَّكَرَ ـ أَدْخَلَهُ اللهُ بِهَا الْجَنَّةَ ) ஒருவருக்குப் பெண் குழந்தை பிறந்து, அதை அவர் உயிருடன் புதைக்காமல், இழிவாகக் கருதாமல், அதைவிட தன் (ஆண்) குழந்தைக்கு முன்னுரிமை அளிக்காமல் நடந்துகொண்டால், அந்தக் குழந்தையின் காரணமாக அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச்செய்வான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4480, முஸ்னது அஹமத்-1856 


சப்ரா பின் மஅபத் (ரலி) அல்ஹாரிஸ் அவர்கள் கூறியதாவது. (முஸ்லிமான) ஒரு மனிதர் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! நான் அறியாமைக் காலத்தில் சிலைவணக்கம் செய்து வந்தேன். அந்தச் சிலைகளுக்காக எங்கள் குழந்தைகளை நரபலி கொடுத்தோம். 


இந்நிலையில் எனக்கொரு மகள் இருந்தாள். என் வேண்டுதலை (எங்கள் குலதெய்வம்) ஏற்றுக் கொண்டதால், அதற்காக என் மகளை பலியிட (எவருக்கும் தெரியாமல்) அவளை மெதுவாக அழைத்தேன். (பல நாள்கள் அவளாக வரவில்லை நானும் அழைத்துக் கொண்டே இருந்தேன்.) அப்படியொரு நாள் (என் மகளை) அழைத்ததும் என்னை பின் தொடர்ந்து வந்தாள். 


எங்கள் ஊருக்குள் (கோயில் அருகே) உள்ள கிணற்றருகே வந்ததும் நானே அவளை தூக்கி என் கைகளால் கிணற்றில் எறிந்தேன். அவள் இறுதியாக தந்தையே! தந்தையே! என்று சொல்லி அழுதாள். 


இதனை செவியற்ற நபியவர்களின் இரு கண்களும் கண்ணீர் வடித்தது. இதை பார்த்த ஒரு மனிதர், "நபியவர்களை கவலையில் ஆழ்த்தி விட்டீரே!" என்று கூறினார். அப்போது நபியவர்கள், "அந்த நிகழ்வை மீண்டும் கூறுங்கள்" என்றார்கள். அவர் மீண்டும் கூறினார். நபியவர்கள் தமது தாடி நனையும் அளவு அழுதுவிட்டு, "அறியாமைக் கால தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டான். இப்போது உமது செயல்களை நற்செயல்களாக ஆக்கிக்கொள்வீராக!" என்று கூறினார்கள். நூல்:- தாரிமீ


காதலிக்க பெண் வேண்டும்; கட்டியணைக்க பெண் வேண்டும்.

கல்யாணத்துக்கு பெண் வேண்டும்; கஞ்சி காய்ச்ச பெண் வேண்டும். 

சுகம் கொடுக்க பெண் வேண்டும்; குழந்தை பெற்றுக் கொடுக்க பெண் வேண்டும்.

ஆனால், பிறக்கும் குழந்தை மட்டும் ஆணாகப் பிறக்க வேண்டும். இது என்ன நியாயம்?


இன்றைய நவீன உலகிலும் நரபலி போன்ற கொடூரங்கள் ஒழிந்துவிட்டதாக கருதமுடியாது. நாட்டின் ஆங்காங்கே பல இடங்களிலும் இரகசியமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


ஏமாற்றுப் பேர்வழிகளான ஜோதிடர்கள், மாந்திரீகவாதிகள் பேச்சைக் கேட்டு, தம்முடைய நோய் நொடிகள் நீங்க, இறந்தவரை உயிர்த்தெழ வைக்க, புதையல் கண்டுபிடிக்கப்பட, கட்டப்பட இருக்கும் பெரும் பாலங்கள் மற்றும் பெரிய கட்டடங்கள் நிலைத்திருக்க, மந்திர சக்தி பெருக, இன்னபிற தேவைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக, தாம் பெற்ற பெண் குழந்தையை நரபலி கொடுக்கும் அறிவற்ற பெற்றோர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.


வேலை வெட்டி எதுவும் இல்லாமல் இன்று பலபேர் மாந்திரீகர்கள் எனும் போர்வையில் மக்களை ஏமாற்றிக்கொண்டு திரிகிறார்கள். அவர்களிடம் முதலில் சிக்குவது படிப்பறிவில்லாத கிராமத்து மக்கள் தான். இது போன்ற மாந்திரீகர்களை அடையாளம் கண்டு கடுமையாக தண்டிக்க வேண்டும். 


பரிகாரம் 


உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. கைஸ் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ، إِنِّي وَأَدْتُ بَنَاتٍ لِي فِي الْجَاهِلِيَّةِ ) "நாயகமே! நான் அறியாமைக் காலத்தில் என்னுடைய மகள்களை உயிருடன் புதைத்து கொலை செய்திருக்கிறேன். (என்னுடைய நிலை என்ன?)” என்று கேட்டார். 


அதற்கு நபியவர்கள், ( أَعْتِقْ عَنْ كُلِّ وَاحِدَةٍ مِنْهُنَّ رَقَبَةً ) "அவர்களில் ஒவ்வொரு மகளுக்குப் பகரமாக ஓர் அடிமை(யை விலைக்கு) வாங்கி உரிமை அளித்திடு!" என்று கூறினார்கள். மேலும் அவர், "நாயகமே! நான் அதிகமான ஒட்டகங்களை வைத்திருக்கிறேன்" என்று கூறினார். அதற்கு நபியவர்கள், ( فَانْحَرْ عَنْ كُلِّ وَاحِدَةٍ مِنْهُنَّ بَدَنَةً )  அந்த மகள்கள் ஒவ்வொருவருக்கும் பகரமாக ஓர் ஒட்டகத்தை நீ அறுத்து தர்மம் கொடுத்து விடு!" என்று கூறினார்கள். நூல்:- முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், பஸ்ஸார், தஃப்சீர் குர்துபீ, தஃப்சீர் இப்னு கஸீர் அத்தக்வீர் வசனம்-8, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் 


பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْمَرْأَةَ الَّتِي تَقْتُلُ وَلَدَهَا تَأْتِي يَوْمَ الْقِيَامَةِ مُتَعَلِّقًا وَلَدُهَا بِثَدْيَيْهَا، فَيَقُولُ يَا رَبُّ، هَذِهِ أُمِّي، وَهَذِهِ قَتَلَتْنِي ) தன் குழந்தையைக் கொன்ற பெண், மறுமைநாளில் தன் குழந்தை தன் மார்பில் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில் வருவாள். அப்போது அந்த குழந்தை, "இறைவா! இவள் என் தாய். இவள் தான் என்னைக் கொன்றாள்" என்று கூறும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் குர்துபீ அத்தக்வீர் வசனம்-


நாம், ஒரு பெரும் பாவத்தை செய்த பிறகு அதை நினைத்து, ஏக மனதாக வருந்தும்போது, இறைவனை சங்கடப்படுத்திய நாம், இறைவனை சந்தோசப்படுத்தும் விதமாக, நமது சக்திக்கு ஏற்ப ஒரு நல்லறத்தை செய்து விட வேண்டும் என்பதை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது.


மனிதன் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்பு பிராணிகள் பெட்டைக்குட்டி ஈன்றெடுப்பதையே விரும்புகிறான். ஆனால் ஒரு பெண், பெண்குழந்தை பெற்றெடுப்பதை விரும்புவதில்லை. தான் வளர்க்கும் பிராணிகள் பெட்டைக்குட்டிகள் ஈன்று பல்கிப் பெருகினால் இவனுக்கு இலாபம். ஆனால், இவனுக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டால் அது, தமக்குரிய நஷ்டம் என்று கருதுகிறான். 


எனவே தான், மனிதன் அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தி, ஸ்கேன் மூலம் கண்டறிந்து வயிற்றில் இருக்கும் பெண் சிசுவை அழித்துவிடுகிறான். இஸ்லாம், இதை மாபாதக செயல் என்பதாகக் கூறி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. 


வாழ வைத்தவர்

 

(அன்றைய அரபுலகின் பிரபலமான கவிஞர் ஃபர்ஸ்தக் என்பவரின் பேரர்) ஸஅஸஆ பின் நாஜியா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தேன். எனக்கு நபியவர்கள் இஸ்லாத்தைப் பற்றி எடுத்துரைத்தார்கள். நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். மேலும் நபியவர்கள் குர்ஆனில் இருந்து சில வசனங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அப்போது நான், ( يَا رَسُولَ اللَّهِ! إِنِّي عَمِلْتُ أَعْمَالًا فِي الْجَاهِلِيَّةِ فَهَلْ لِي فِيهَا مِنْ أَجْرٍ؟  ) "நாயகமே! நான் அறியாமைக் காலத்தில் சில நல்லறங்களை செய்துள்ளேன். எனவேஅதன் மூலம் எனக்கு நற்கூலி கிடைக்குமா?" என்று வினவினேன். நபியவர்கள், ( وَمَا عَمِلتَ؟  ) "(அப்படியென்ன) நல்லறங்கள் செய்துள்ளீர்?" என்று கேட்டார்கள். 


ஒருமுறை என்னுடைய இரண்டு ஒட்டகங்கள் காணாமல் போய் விட்டது. நான் அதை தேடிச் சென்றபோது அங்கே இரண்டு வீடுகள் தெரிந்தது. அதன் அருகில் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். நான் அங்கு சென்று அவர்களில் முதியவர் ஒருவரிடம், என்னுடைய இரண்டு ஒட்டகங்கள் காணாமல் போய்விட்டது. அதைப் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர், "நான் அவற்றை பார்க்கவில்லை" என்றார்.


அப்போது அந்த வீட்டிற்குள் இருந்து குழந்தை பிறந்துவிட்டது என்று ஒரு பெண் சப்தமிட்டாள். உடனே அந்த முதியவர், என்ன குழந்தை பிறந்துள்ளது? ஆண் குழந்தையாக இருந்தால் நம்மோடு சேர்த்துக் கொள்வோம். பெண் குழந்தையாக இருந்தால் அதை (உயிருடன் மண்ணில்) புதைத்துவிடு" என்று கூறினார். அவள்,  "பெண் குழந்தை பிறந்துள்ளது" என்றாள். 


அப்போது நான், "இந்த குழந்தையை உயிருடன் ஏன் புதைக்கிறீர்கள். (அவ்வாறு செய்ய வேண்டாம்.) நான், "இதை விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறேன்" என்றேன். அதற்கு அவர், "என்ன விலை கொடுப்பாய்?" என்றார்.  நான், இரண்டு கர்ப்பமுற்ற ஒட்டகங்களுக்குப் பகரமாக வாங்கிக்கொள்கிறேன்" என்று கூறி, அவ்வாறே வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அன்றிரவு இதைப் பற்றியே சிந்தித்து, மனநிறைவு கொண்டவனாக, இதையே பழக்கமாக்கிக்கொண்டேன். 


எனவே நான், ( وَقَدْ أَحْيَيْتُ ثَلَاثَمِائَةٍ وَسِتِّينَ مِنْ الْمَوْءُودَةِ، أَشْتَرِي كُلَّ وَاحِدَةٍ مِنْهُنَّ بِنَاقَتَيْنِ ) "இதுவரை) உயிருடன் மண்ணில் புதைக்கப்பட இருந்த முன்னூற்று அறுபது பெண் குழந்தைகளை காப்பாற்றியுள்ளேன். இதிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பகரமாக இரண்டு பெண் ஒட்டகங்களைக் கொடுத்து வாங்கியுள்ளேன்" என்று கூறினேன். நபியவர்கள், ( لَكَ أَجْرُهُ إِذْ مَنَّ اللَّهُ عَلَيْكَ بِالْإِسْلَامِ ) “உங்களுக்கு அதற்குரிய நற்கூலி உண்டு. (அதனால் தான்) இந்நேரத்தில் அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாத்தை  வழங்கியிருப்பதன் மூலம் உபகாரம் புரிந்துள்ளான்"  நூல்:- தப்ரானீ, பஸ்ஸார், மஜ்மஉஸ் ஸவாயித், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அத்தக்வீர் வசனம்-8

 

உயிருடன் புதைக்கப்பட இருந்த முன்னூற்று அறுபது பெண் குழந்தைகளை, காப்பாற்றி வாழ வைத்ததால் இவருக்கு, ( مُحِيُّ الْمَوْءُودَةِ ) "புதைக்கப்பட இருந்த குழந்தைகளை வாழ வைத்தவர்" என்ற புனைபெயரில் அழைக்கப்பட்டார்.

 

நரகை விட்டும் தடுக்கின்ற திரை

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنِ ابْتُلِيَ مِنَ الْبَنَاتِ بِشَىْءٍ فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ ) யார் இப்பெண் குழந்தைகளில் ஒன்றின் மூலம் சோதிக்கப்பட்டபோதும் அவர்களுக்கு நன்மை புரிவாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5995, முஸ்லிம் -5125

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( مَنْ عَالَ جَارِيَتَيْنِ حَتَّى تَبْلُغَا جَاءَ يَوْمَ الْقِيَامَةِ أَنَا وَهُوَ ‏"‏ ‏.‏ وَضَمَّ أَصَابِعَهُ ) யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று, கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமைநாளில் இப்படி வருவோம்" என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5127

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَ لَهُ ثَلاَثُ بَنَاتٍ فَصَبَرَ عَلَيْهِنَّ وَأَطْعَمَهُنَّ وَسَقَاهُنَّ وَكَسَاهُنَّ مِنْ جِدَتِهِ كُنَّ لَهُ حِجَابًا مِنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ ) யாருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்து அவர் அவர்களை (வளர்ப்பதில் ஏற்படும் கஷ்டங்களை)ப் பொறுமையுடன் சகித்துக்கொண்டு அவர்களுக்கு உணவு பானங்களை வழங்கி, அவர்களுக்கு ஆடைகளை அணிவிக்க கொடுத்தாரோ, அவருக்கு அந்தப் பெண் பிள்ளைகள் மறுமைநாளில் நரகை விட்டும் தடுக்கின்ற திரைகளாக இருப்பார்கள். அறிவிப்பாளர்:- உக்பா பின் ஆமீர் (ரலி) அவர்கள் நூல்:-  இப்னுமாஜா-3659, முஸ்னது அஹ்மத், அல்அதபுல் முஃப்ரத்-76  அஸ்ஸஹீஹா-294

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ رَجُلٍ تُدْرِكُ لَهُ ابْنَتَانِ فَيُحْسِنُ إِلَيْهِمَا مَا صَحِبَهُمَا إِلاَّ أَدْخَلَتَاهُ الْجَنَّةَ ) எவருக்கேனும் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்து, அவர் அவ்விருவருடன் ஒன்றாக இருக்கும் போதெல்லாம் அவர்களுடன் நன்னடத்தை மேற்கொண்டு நன்மை செய்வாரானால் அப்பெண்பிள்ளைகள் இருவரும் அவரை சொர்க்கத்துக்குள் நுழைய வைக்காமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-3660, அல்அதபுல் முஃப்ரத்-77, முஸ்னது அஹ்மத், இப்னு அபீஷைபா, இப்னு ஹிப்பான்

 

ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்பிள்ளைகள் இருந்து, அவர்கள் பருவம் அடைந்த பிறகும் அவர்கள்மீது பாசம் காட்டி நேசத்தோடு நடந்து கொண்டால், அந்தப் பெற்றோருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குவான்.

 

ஆண்மக்களை விட பெண் மக்களை கவனித்து வளர்ப்பதற்கான நற்கூலி மகத்தானது என்பதை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது. ஏனெனில், பெண் மக்களை வளர்ப்பதில் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக்கொண்டு தூய எண்ணத்துடன் அவர்களுக்காக செலவு செய்வதில் தந்தையின் பங்கு உன்னதமானது. எனவே தான், தந்தையின் சிறப்பான பணி அவரை நரகத்திலிருந்து காப்பதற்கான காரணியாக அமைகிறது.

 

பிரசவத்தில்  

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إنَّ مِن بَرَكَةِ المَرْأةِ تَبْكِيرَها بِالإناثِ ) அருள்வளம் மிக்க மனைவியின் பண்புகளில் ஒன்று, அவளுக்கு முதலில் பெண் குழந்தை பிறப்பதாகும்.  அறிவிப்பாளர்:- வாஸிலா பின் அஸ்கஉ (ரஹ்) அவர்கள் நூல்:- இப்னு மர்தவைஹி, இப்னு அசாகிர், தஃப்சீர் பஹ்ருல் முஹீத், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அஷ்ஷூரா வசனம்-49

 

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மகனார் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. எப்போதெல்லாம் எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்கிறதோ அப்போதெல்லாம் எனது தந்தையார், "இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஏனெனில், அதிகமான இறைத்தூதர்கள் பெண் குழந்தைகளின் தந்தையர்களாக இருந்துள்ளனர். நமது பிரியத்துக்குரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் நான்கு பெண் குழந்தைகள் இருந்தனர்" என்று கூறுவார்கள். நூல்:- கைஃப நஸ்தக் பிலுல் மவ்லூத்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் மூத்த மகளார் ஸைனப் (ரலி) அவர்களின் மகள் உமாமா (ரலி) அவர்கள் தான் நபியவர்களின் முதல் பேரக் குழந்தை. பெண் குழந்தை தான்.

 

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு பெண் குழந்தைகளை வழங்குகிறான். மேலும் தான் நாடியவர்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்குகிறான். திருக்குர்ஆன்:- 42:49

 

இந்த வசனத்தில் அல்லாஹுத்தஆலா பெண்குழந்தைகளை முதலில் கூறிவிட்டு, பிறகு தான் ஆண் குழந்தைகளை கூறியுள்ளான். எனவே, பெண் குழந்தைகள் அருள்வளம் மிக்கவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

இமாம் முஹம்மத் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( الْبَنُونَ نِعَمٌ وَالْبَنَاتُ حَسَنَاتٌ وَاللَّهُ عَزَّ وَجَلَّ يُحَاسِبُ عَلَى النِّعَمِ وَيُجَازِي عَلَى الْحَسَنَاتِ ) ஆண் குழந்தைகள் அருட்கொடைகள். பெண் குழந்தைகள் நற்காரியங்கள். அல்லாஹ் அருட்கொடைகளுக்காக விசாரணை செய்வான். நற்காரியங்களுக்காக நற்கூலி வழங்குவான். நூல்:- பஹ்ஜத்துல் மஜாலில் பக்கம்-162, இமாம் இப்னு அப்துல் பர்ரு, அல்ஆதாபுல் ஷரிய்யா இமாம் இப்னு முஃப்லிஹ் 1/154

 

மறுமைநாளில்

 

அபுர்ரவ்வாஉ (ரலி) அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் இருந்த ஒருவருக்கு பல பெண்பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் மரணித்துவிட வேண்டுமென அவர் ஆசைப்பட்டார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அவர்மீது கோபப்பட்டவர்களாக, ( أَنْتَ تَرْزُقُهُنَّ‏؟‏‏ ) "நீயா? அந்த பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்குகிறாய்?" என்று கேட்டார்கள். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-83

 

அபூபக்ர் வர்ராக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நோயுற்ற பெண் பிள்ளையொன்று எனக்கிருந்தது. அவளுக்குப் பத்து வயது. நோயினால் அவள் வேதனைப்படுவதைக் கண்டு, அவள் இறந்து விடவேண்டுமென்று ஆசைப்பட்டேன். அவ்வாறே அவளும் இறந்துவிட்டாள்.

 

பின்னர் அவளைக் கனவில் கண்டேன். மறுமைநாள் வந்துவிட்டது போலிருந்தது. ஒவ்வொரு பிள்ளைகள் அவர்களின் பெற்றோரை அழைத்துக்கொண்டு சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள்.

 

நான் என் மகளிடம், ( خُذِي بِيَدِي ادْخُلِينِي الْجَنَّةَ ) "(மகளே!) என் கையைப் பிடித்து சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்!" என்கிறேன். அவள், ( لَا انْتَ كُنْتَ تَتَمَنِّي مَوْتِي ) "மாட்டேன். ஏனெனில், நான் இறந்து விடவேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டீர்கள்!" என்று பதில் சொன்னாள்.   நூல்:- தாரீக் பக்தாத் 6/212

 

பிரார்த்தனையில்

 

அறிஞர் அஹ்மத் ஹள்ரமி (ரஹ்) அவர்களுக்கு ஆறு பெண்பிள்ளைகள் இருந்தனர்கள். அன்னாரின் மனைவி மீண்டும் கர்ப்பமுற்றார். அதன் பிறகு அன்னார், "இறைவா! எனக்கு ஒரு ஆண் பிள்ளையை தருவாயாக" என்று அடிக்கடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அன்னார் ஒரு நாள் கனவு காண்கிறார்கள். அந்தக் கனவில், அன்னாரை நரகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறது. (நரகங்கள் ஏழு) ஒவ்வொரு நரகத்தின் வாசலிலும் அன்னாருடைய ஒவ்வொரு பெண் பிள்ளைகள் நின்று கொண்டு, "எங்கள் தந்தையை நரகத்திற்கு அழைத்துச் செல்ல விடமாட்டோம்" என்று தடுக்கிறார்கள்.

 

இறுதியாக, அன்னாரை ஏழாவது நரகத்திற்கு அழைத்துச் சென்றபோது அங்கே தடுப்பதற்கு ஆள் இல்லை. அன்னார் பயந்தவராக திடீரென விழித்துவிட்டார்கள். அதன் பிறகு, அன்னார், "இறைவா! நான் உன்னிடம் தவறாக பிரார்த்தனை செய்துவிட்டேன். எனக்கு ஏழாவதும் பெண் பிள்ளையை தந்துவிடுவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.

 

கரு உண்டான உடனே ஆண் குழந்தைக்காக மட்டுமே ஆசை கொள்வதும், அதற்காக இறைவனை பிரார்த்திப்பதும், பெண் குழந்தை பிறந்துவிட்டால் அதைத் தீங்காக கருதுவதும், முகம் தொங்கிப் போவதும், மனம் கவலையால் நிறைந்து விடுவதும் ஆக, இது போன்ற பண்பு முஸ்லிம்களுக்குரியதல்ல.

 

பெண் குழந்தைகள், பெற்றொருக்கு இம்மையிலும் மறுமையிலும் கண்குளிர்ச்சிக்கு காரணங்களாக அமைகின்றனர் என்று இஸ்லாம் இயம்புகிறது.

 

சீண்டியவனுக்குரிய தண்டனை  

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு சிறுமி இரு கற்களுக்கிடையே தலை நசுக்கப்பட்ட நிலையில் கிடந்தாள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். நபியவர்கள் அவளிடம், "உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்ன மனிதனா? இன்ன மனிதனா? என்று கேட்டுக்கொண்டே வந்தார்கள். பிறகு, யூதன் ஒருவனின் பெயரை அவர்கள் கூறியதும், அச்சிறுமி ('ஆம்! அவன் தான்' என்று) தலையால் சைகை செய்தாள். அந்த யூதன் பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதில் அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( فَقَتَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ حَجَرَيْنِ ‏ ) அவனது தலையில் கல்லைப் போட்டு நசுக்கி கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவன் கொல்லப்பட்டான். நூல்:- முஸ்லிம்-3453

 

காஷ்மீரில் இந்திய ராணுவத்தால், 7 முதல் 77 வயதுள்ள பத்தாயிரம் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஐ.நா. சபை மனித உரிமை கமிஷன் அதிகாரி தாக்கல் செய்தபோது தன்னையறியாமல் உடைந்து, அழுதக் காட்சி இணையத்தில் பரவியது.

 

செய்தியை சொல்பவருக்கே இவ்வளவு வலி என்றால், அந்த சித்திரவதையை அனுபவித்த அந்தப் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் மனதாலும் உடலாலும் எவ்வளவு வலித்திருக்கும்?

 

நல்ல தொடுதல் - கெட்ட தொடுதல்

 

பெண் குழந்தைகளுக்கு (Good touch - Bad touch) நல்ல தொடுதல் - கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 

ஒவ்வொரு நாளும், சிறு குழந்தைகள் பெரியவர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவது போன்ற நிகழ்வுகளை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரச்சனை என்னவென்றால், என்ன நடக்கிறது என்று அந்தக் குழந்தைகளுக்குத் தெரியாது.

 

குழந்தைகள் நல மருத்துவர் செல்வம் ரத்தினசாமி கூறுகிறார். தன் உடலைப் பற்றி குழந்தை உணர ஆரம்பித்தவுடன் சொல்லித் தருவது நல்லது. இரண்டு வயதிலிருந்து சொல்லித் தரலாம். ஏனென்றால், பாலியல் சீண்டல்கள் மிகச்சிறிய குழந்தைகளுக்கு கூட அதிகமாக இருக்கிறது. விளக்கமாகச் சொல்லித் தர வேண்டியதில்லை. யாராவது பிறப்புறுப்பு பகுதியை தொட்டாலோ அல்லது மார்பை தொட்டாலோ சத்தம் போட்டு அழு! என்று சொல்லித் தந்தால் போதுமானது.

 

எந்தத் தொடுதல் குழந்தையை சங்கடப்படுத்தாமல் சந்தோஷப்படுத்துகிறதோ அதுவே நல்ல தொடுதல். அப்பா அம்மா சலாம் சொல்லி அணைப்பது, ஆசிரியர் மாணவியின் முதுகில் தட்டிக் கொடுப்பது, நண்பர்களுடன் செய்யும் ஹைபை, கைகுலுக்கல், தொட்டுப் பேசுதல் போன்றவை நல்ல தொடுதல்.

 

தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு யாராக இருந்தாலும் தேவையற்ற அந்தரங்க உடல் பகுதியை தொடுவதும், அதனை மனமும் உடலும் விரும்பாததுமே தவறான தொடுதல் ஆகும்.

 

அப்படி தொடுபவர்களைப் பார்த்தாலே குழந்தை பதற்றமடையும். விலகி இருக்க நினைக்கும். இதைச் சொல்லவும் செய்யும்.

 

தவறான தொடுதல், குழந்தைக்குப் பயத்தை உண்டாக்கும். மனநிலையை மாற்றும். கவனமின்மையை உண்டாக்கும்.

 

யாராவது தவறாக தொட்டால் உடனே உரக்க "இது தவறு" என சொல்ல பழக்க வேண்டும்.

 

குழந்தையின் பள்ளி, தனிப் பயிற்சி வகுப்பு, மற்ற பள்ளிகளுக்குச் சென்று பங்கேற்கும் போட்டிகள், போய் வந்த மற்ற இடங்கள், அங்கே "என்ன நடந்தது?" என்பதை பெற்றோர் தோழமையோடு கேட்டறிய வேண்டும்.

 

குழந்தையின் தோழிகளை அறிந்திருப்பது நல்லது. குழந்தையின் தனிப்பயிற்சி, பொழுதுபோக்கு இடங்களில் சென்று அறிமுகமாகிக் கொள்ள கொள்வது உதவும். குழந்தையிடம் தோழியாக அமர்ந்து பேசினால் அவர்களுடைய மன ஓட்டத்தை அறிந்துகொள்ளலாம்.

 

பொதுவாக மக்கள், பெண் குழந்தையை ஒரு சுமையாகவே கருதுகிறார்கள். பெண் குழந்தையை வளர்த்த ஆளாக்குவதில் உள்ள சிரமம், அவர்களைப் பற்றி அச்சம், பெற்றோருக்கு அவர்களால் உதவிகள் கிடைக்காமல் போவது ஆகிய காரணங்களால் அவ்வாறு பாரமாக கருதுகின்றனர்.

 

ஆனால், ஒரு முஸ்லிம், பெண் குழந்தையை வெறுப்பதோ, சுமையாகக் கருதுவதோ கூடாது. பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் உள்ள சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு, பெண் குழந்தை மீது பரிவு காட்டுவது மகத்தான நன்மையைத் தேடித் தரும் செயலாகும்.

 

ஆகவே, நாம் பெண் குழந்தைகளை கண்ணியத்துடன் வளர்த்து ஆளாக்கி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

7 comments:

  1. Mashallah barakallah
    Arumayana katturai
    Kangal naninthu vittathu
    Allah ungaluku barakath seinvanaga

    ReplyDelete
  2. இந்தக் கட்டுரையில் அண்ணல் நபி என்று வர வேண்டிய இடத்தில் அண்ணன் நபி என்று வந்திருக்கிறது அதை திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஜஸாக்கல்லாஹு கைரன் ஹள்ரத். திருத்திவிட்டேன்.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. قد أحسنت ما شاء الله بارك الله إن صعصعة بن ناجية جد الفرزق الشاعر لا أنه حفيد الفرزدق جزاك الله
    (அன்றைய அரபுலகின் பிரபலமான கவிஞர் ஃபர்ஸ்தக் என்பவரின் பேரர்) ஸஅஸஆ பின் நாஜியா (ரலி) அவர்கள் கூறியதாவது.

    ReplyDelete

கவனக்குறைவு

  கவனக்குறைவு   فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (இந்தத்) தொழுகையாளிகளுக்கு கேடு தான். அவர்கள் தமது தொ...