பிரச்சனைகளுக்குத் தீர்வு
وَقَالَ الْمَلِكُ إِنِّي أَرَى سَبْعَ بَقَرَاتٍ سِمَانٍ
يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعَ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ
يَا أَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي رُؤْيَايَ إِنْ كُنْتُمْ لِلرُّؤْيَا
تَعْبُرُونَ
(ஒரு நாளன்று) எகிப்தின்
அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) "என் பிரதானிகளே!
கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு
பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான
ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான ஏழு) வேறு கதிர்களையும் என் கனவில் கண்டேன்.
என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக் கூடியவர்களாக இருந்தால் என்னுடைய
இக்கனவின் பலனை அறிவியுங்கள்" என்று கூறினார். திருக்குர்ஆன்:- 12:43
நம்முடைய வாழ்க்கையில்
பிரச்சினைகள் ஏற்படும்போது, நேர்ந்துவிட்ட பிரச்சினைகள் அது ஏற்படுத்திய நஷ்டங்களைப்
பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே, அதற்கு தீர்வு இல்லாமல்
இருக்காது. மன நிம்மதியை தரும் அந்தத் தீர்வைத் தேடிப் புறப்பட வேண்டும்.
தேவையற்ற மன உளைச்சலை
தவிர்த்து, இதை எவ்வாறு தீர்க்கலாம் என்று சற்று நேரம் யோசித்தாலே
போதும், அதற்குரிய தீர்வு கிடைத்துவிடக்கூடும். அல்லது நமக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை
கேட்கலாம். அவர்கள் கூறும் ஆலோசனைகள் மூலம் அதற்குரிய தீர்வு கிடைத்துவிடக்கூடும்.
கனவுக்குரிய பலன்
ஒருநாள் எகிப்து மன்னர்
கொளுத்துப் பருத்த ஏழு பசுக்களை இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான
ஏழு கதிர்களையும் கனவில் காண்கின்றார். மன்னர் இதுபற்றிய விளக்கத்தை அங்கிருந்த அறிஞர்களிடம்
வினவினார். ஆனால் அவருக்கு போதிய விளக்கம் கிடைக்கவில்லை. இறுதியாக சிறையில் கனவுகளுக்கு
விளக்கமளிக்கக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்ற செய்தியை மன்னர் அறிகிறார். தனது கனவு
பற்றி விளக்கம் கேட்டு அறிந்து வர சிறைச்சாலைக்கு ஆளனுப்பினார் மன்னர்.
சிறைச்சாலையில் கனவுக்கு
விளக்கமளிக்கக்கூடியவராக இருந்த இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்கள் மன்னரின் கனவுக்கு இவ்வாறு
விளக்கமளித்தார்கள். அதாவது, தொடர்ந்து வழக்கம்போல் நல்லவிதமாக ஏழு ஆண்டுகள் விளைச்சல்
இருக்கும். அதில் கிடைக்கும் தானியங்களை அதன் கதிர்களுடன் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதற்கடுத்த ஏழு ஆண்டுகள் எவ்வித விளைச்சலுமின்றி கடுமையான பஞ்சம் வந்து விடும். அப்போது
சேகரித்து வைத்திருந்த தானியங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். என வரும்முன் காப்போம்
திட்டத்தைக் கூறினார்கள்.
யூசுஃப் (அலை)
அவர்களின் ஞானத்தை அறிந்த மன்னர் அவரை அழைத்து உமது தொலைநோக்கு சிந்தனையை நான் கண்டுகொண்டதால்
நீர் எனது மதிப்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவராக ஆகிவிட்டீர். அதனால் எனக்கு நெருங்கியவராக
உம்மை ஆக்கிக்கொள்கிறேன் என்றார்.
அதற்கு யூசுஃப்
(அலை) அவர்கள் நாட்டின் வேளாண்மைத்துறை அமைச்சராக என்னை நியமித்துவிடுங்கள். நிச்சயமாக
நான் அவற்றை பாதுகாத்து பஞ்ச காலத்தில் எவ்வாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும்
நன்கறிவேன் என்று கூறினார்கள். இந்த வரலாற்றைப் பற்றி தலைப்பில் காணும் திருவசனம் மற்றும் அதைத் தொடர்ந்து மேலும் சில திருவசனங்கள் (12: 43-55) விவரிக்கிறது.
இது கூடாது
அபூ சயீத் அல்குத்ரீ
(ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை கைபர் பகுதிக்கு
அதிகாரியாக நியமித்தார்கள். அவர் (சென்று விட்டு கைபரிலிருந்து) உயர்ரகப் பேரிச்சம்
பழங்களை நபியவர்களிடம் கொண்டு வந்தார். அப்போது நபியவர்கள், ( أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا ) “கைபரில் உள்ள பேரிச்சம் பழங்கள் அனைத்துமே இப்படித்தான் (உயர் ரகமானவையாக)
இருக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு
அவர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக இல்லை; நாயகமே! மட்டமான பேரிச்சம் பழத்தில் இரண்டு 'ஸாஉ'களுக்குப் பதிலாக,
இந்த தரமான பேரிச்சம்பழத்தில் ஒரு 'ஸாஉ'வையும், மட்டமான பேரிச்சம் பழத்தில் மூன்று 'ஸாஉ'களுக்குப் பதிலாக,
இந்தப் பேரிச்சம் பழத்தில் இரண்டு 'ஸாஉ'களையும் நாங்கள் வாங்குவோம்" என்று கூறினார்.
அப்போது நபியவர்கள், ( لاَ تَفْعَلْ، بِعِ
الْجَمْعَ بِالدَّرَاهِمِ، ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيبًا ) "இவ்வாறு செய்யாதீர்! மட்டமான பேரிச்சம்பழத்தை வெள்ளிக்காசுகளுக்கு
விற்றுவிட்டு, அந்தக் காசுகளுக்குப் பதிலாக தரமான பேரிச்சம்பழத்தை வாங்குவீராக!"
என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2201
பேரிச்சம்பழம் உள்ளிட்ட
உணவுப் பொருட்களை பண்டமாற்றம் செய்யும்போது ஒரே இனப்பொருளில் ஒருவகையை கொடுத்து மற்றொரு
வகையை வாங்கினால் இரண்டின் அளவிலும் வித்தியாசம் இருக்கக் கூடாது. சமமாகவே இருக்க வேண்டும்.
தரம் வேறுபட்டாலும் இனம் ஒன்று என்பதற்கே இதற்கு காரணம். வேண்டுமானால் மட்டமான பொருள்களை
விலை மதிப்பிட்டு அந்த விலைக்கேற்ப உயர் ரகத்தை வாங்கலாம்.
ஒரு விஷயத்தில் இவ்வாறு
செய்வது கூடாது என்றால், பிறகு எவ்வாறு செய்வது கூடும் என்பதையும் விளக்கிச் சொல்ல வேண்டும்.
உதாரணமாக: ஒரு மனிதன்
தமது படுக்கையில் குப்புற படுப்பதுக்கூடாது என்கிறது இஸ்லாம். எனவே, அவன் ஒருகளித்துப்
படுப்பதை இஸ்லாம் அனுமதித்திருக்கிறது.
யாசிக்காதே
அனஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது. அன்சாரிகளுள் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யாசகம் கேட்டு வந்தார்.
(அவருக்கு யாசகம் கொடுப்பதற்குப் பதிலாக) ( أَمَا فِي بَيْتِكَ
شَىْءٌ ) "உம்முடைய
வீட்டில் ஏதேனும் (பொருள்) இருக்கிறதா?" என்று அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர், "ஆம் ஒரு போர்வை இருக்கிறது. அதில் ஒரு பகுதியை நாங்கள்
அணிந்துகொண்டு, ஒரு பகுதியை விரித்துக்
கொள்கிறோம். மேலும், நாங்கள் தண்ணீர் பருகின்ற
ஒரு குவளையும் உள்ளது" என்று கூறினார்.
நபியவர்கள், ( ائْتِنِي بِهِمَا ) "அவ்விரண்டையும் எடுத்து
வாருங்கள்" என்று கூறினார்கள். எனவே, அவர் இரண்டையும் நபியவர்களிடம் எடுத்து வந்தார்.
நபியவர்கள் அவற்றை தமது கையில் வாங்கி ( مَنْ
يَشْتَرِي هَذَيْنِ ) "இவ்விரண்டையும்
யார் விலைக்கு வாங்கிக் கொள்கிறார்?" என்று கேட்டார்கள். ஒருவர், "நான் இவ்விரண்டையும் ஒரு வெள்ளிக்காசுக்கு வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறினார்.
அப்போது நபியவர்கள், ( مَنْ يَزِيدُ عَلَى
دِرْهَمٍ ) "ஒரு வெள்ளிக்காசைவிட அதிகத் தொகைக்கு யார் வாங்கிக்
கொள்கிறார்?" என்று இரண்டு அல்லது
மூன்று தடவை கேட்டார்கள். அப்போது ஒருவர், "நான் அவ்விரண்டையும் இரண்டு வெள்ளிக்காசுகளுக்கு
(ப் பகரமாக) வாங்கிக் கொடுக்கிறேன்" என்று கூறினார். எனவே, நபியவர்கள் அவ்விரண்டையும் அவரிடம் கொடுத்துவிட்டு
அவரிடமிருந்து அந்த இரண்டு வெள்ளிக்காசுகளையும் வாங்கிக்கொண்டார்கள்.
நபியவர்கள், அந்த இரண்டு வெள்ளிக்காசுகளையும் அந்த அன்சாரி தோழரிடம்
கொடுத்து, ( اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا
فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ وَاشْتَرِ بِالآخَرِ قَدُومًا فَأْتِنِي بِهِ ) "இவ்விரண்டில் ஒன்றின்
மூலம் உணவுப் பொருளையும் வாங்கி, அதை உன் குடும்பத்தாருக்கு
கொடுப்பீராக! மற்றொன்றின் மூலம் ஒரு கோடாரியை வாங்கிக் கொண்டு என்னிடம் வாருங்கள்"
என்று கூறினார்கள்.
அவ்வாறே அவர் செய்தார்.
(அவர் வாங்கிக் கொண்டு வந்த கோடாரியை) நபியவர்கள் எடுத்து அதில் தமது கையால் ஒரு (கைப்பிடிக்)
கம்பை இணைத்தார்கள். (பின்னர் அதை அவரிடம் கொடுத்து) ( اذْهَبْ فَاحْتَطِبْ وَبِعْ وَلاَ أَرَيَنَّكَ خَمْسَةَ عَشَرَ
يَوْمًا ) "நீர் சென்று
விறகு வெட்டிவீராக! நான் உம்மை பதினைந்து நாள்களுக்குப் பார்க்கக் கூடாது" என்று
கூறினார்கள். அவ்வாறே அவர் (சென்று) விறகு வெட்டி விற்கத் தொடங்கினார். (பின்னர் பதினைந்து
நாள்கள் கழித்து) பத்து வெள்ளிக்காசுகளை சம்பாதித்துக் கொண்டு வந்தார்.
நபியவர்கள், "அவற்றுள் சிலவற்றின் மூலம் உணவையும் மேலும் சிலவற்றின்
மூலம் ஆடைகளையும் வாங்கிக்கொள்வீராக!" என்று கூறிவிட்டுப், பின்னர், ( هَذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ الْمَسْأَلَةُ نُكْتَةً فِي
وَجْهِكَ يَوْمَ الْقِيَامَةِ ) "நீர் யாசகம் கேட்டு வருவதைவிட இதுவே சிறந்தது. யாசகம் கேட்பது
மறுமைநாளில் உமது முகத்தில் உள்ள (கரும்)புள்ளியாகும்" என்று கூறினார்கள். நூல்:-
அபூதாவூத்-1398, நசாயீ-, இப்னுமாஜா-, முஸ்னது அஹ்மத்
நபியவர்கள், தகுதியற்றோர் யாசிப்பது கூடாது என்றார்கள்; இருந்தாலும், யாசிப்பவருக்கு
வழங்கவேண்டும் என்றார்கள். அதற்காக யாசிப்பதை ஊக்கப்படுத்தவில்லை. மாறாக, மக்களை உழைப்பின் பக்கமே செலுத்தினார்கள். ஒருவன் தன் கவனத்தை
உழைப்பின் பக்கம் செலுத்துவது இறையருளை பெறுவதற்குரிய வழியாகும். அல்லாஹ்வை வணங்கிய
நிலையில், அவன் மீது நம்பிக்கை வைத்த நிலையில், ஒருவன் உழைப்பானாயின் அவனின் வருமானத்தில் அருள்வளம் உண்டாகும்.
அம்மனிதனின் ஏழ்மையும் நீங்கும்.
ஒரு மனிதர் மார்க்கத்தில்
அனுமதிக்கப்படாத ஒரு விஷயத்தை செய்யும்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதை தடை செய்ததோடு
மட்டுமல்லாமல், அதற்குரிய மாற்று வழியையும் உடனே காண்பித்து இருக்கிறார்கள்.
சிலர் பிழைக்க வழி
தெரியாமல் அல்லது போதிய வேலை கிடைக்காமல் யாசகம் கேட்கக்கூடும். எனவே, நாம் அவர்களின் நிலையை
சரியாக அறிந்து அவர்கள் உழைப்பதற்கு தயாராக இருப்பார்களேயானால் அவர்களை உழைப்பின் பக்கம்
திருப்பிவிட வேண்டும். அவர் உழைத்து சம்பாதிப்பதற்கு நாம் அவருக்கு ஒத்துழைப்பு நல்க
வேண்டும்.
மக்களுக்கு அடையாளப்படுத்த
வேண்டும்
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது. ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து,
( يَا رَسُولَ اللهِ، إِنَّ لِي جَارًا يُؤْذِينِي ) "நாயகமே! எனக்கு ஒரு
அண்டை வீட்டுக்காரர் உள்ளார். அவர் (எப்போதும்) எனக்கு தொல்லை கொடுக்கிறார்" என்று
முறையிட்டார். நபியவர்கள், ( انْطَلِقْ فَأَخْرِجْ مَتَاعَكَ إِلَى الطَّرِيقِ ) "நீர் போய் உன் (வீட்டுப்) பொருள்களை வெளியே பாதையில் எடுத்து
வை!" என்று கூறினார்கள். அவரும் சென்று தமது பொருள்களை வெளியே எடுத்து வைத்தார்.
மக்கள் எல்லாம் அவரிடம் கூடி, ( مَا شَأْنُكَ؟ ) "உமக்கு என்ன ஆனது?" என்று வினவினர். அவர்,
மக்களிடம் நடந்ததை விவரித்தார்.
(விஷயம் அறிந்த) மக்கள்,
( اللَّهُمَّ الْعَنْهُ ) "இறைவா! அவரைச் சபிப்பாயாக! இறைவா! அவரைக் கேவலப்படுத்துவாயாக!
என்று கூற ஆரம்பித்துவிட்டனர். இவ்வாறு மக்கள் கூறிய செய்தி அந்த அண்டை வீட்டாருக்கு
கிடைத்ததும், அவர் நோவினைப்படுத்திய அண்டை வீட்டாரிடம் வந்து, ( فَوَاللَّهِ لاَ أُؤْذِيكَ ) "நீர் உன் வீட்டுக்குள்
திரும்பிச் செல்வீர். அல்லாஹ்வின் மீதாணையாக! (இனிமேல்) உமக்கு நான் தொல்லை கொடுக்கமாட்டேன்"
என்று கூறினார். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-124
நபியவர்கள் அந்த அண்டை
வீட்டுக்காரரை அழைத்து அவருக்கு அறிவுரை கூறினாலும்கூட அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல்
இருந்துவிடுவாரோ என்று நபியவர்கள் எண்ணியிருக்கலாம். அதனால் தான், "நீயே உனது வீட்டின் பொருள்களை வெளியே எடுத்து வை! அதைப் பார்த்த
மக்கள், அவரை ஏசட்டும்!" என்ற கருத்தில் நபியவர்கள்
இவ்வாறு கூறியிருக்கலாம்.
வீட்டில் மிகுந்த
சேட்டை செய்யும் சிறுவர்களிடம் "வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்குத்தான் அடங்கும்"
என்று புத்தி சொல்லுவார்கள்.
ஏமாற்றுக்காரர்களையும்,
பிறருக்கு தொல்லை கொடுப்பவர்களையும் மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டும். அதன்மூலம்
மக்கள் இவர்களின் சதி வலையில் விழுந்துவிடாமல் தப்பித்துக் கொள்வார்கள். மக்கள் நம்மை
தவறாக எண்ணிவிடுவார்களோ என்ற எண்ணத்திலாவது அவர்கள் திருந்தக்கூடும். தொல்லையும் தீரும். அல்லது மக்களுக்கு நம்முடைய
உண்மை முகம் தெரிந்துவிட்டதே என்றெண்ணி அவர்கள் தமது தீய காரியத்தை கைவிடக்கூடும்.
சிலர், அவர்கள் செய்யும்
தவறை அவர்களிடம் நேரடியாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களின்
தவறை மக்கள் முன்னால் தான் சொல்ல வேண்டும். அவன் திருந்தாவிட்டாலும்கூட அவன் செய்யும்
தவறை கொஞ்ச காலம் நிறுத்தி வைக்கக்கூடும்.
சில சமயங்களில் பிரச்சனைகள்
தீர்வதற்கு இது போன்ற வழிமுறைகளை கையாள வேண்டும்.
தமது உடமைகளைக்
காப்பாற்ற
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ
(ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, "(நாயகமே!) ஒருவன் என்னிடம்
வந்து என் செல்வத்தை (அநியாயமாக எடுத்துக்கொள்ள) நாடுகிறான். (நான் என்ன செய்ய வேண்டும்?)" என்று கேட்டார். அதற்கு
நபியவர்கள், ( ذَكِّرْهُ
بِاللَّهِ ) "அவனுக்கு அல்லாஹ்வை நினைவூட்டு" என்று கூறினார்கள். அவன் அல்லாஹ்வை நினைவு
கூறவில்லையானால் (அவன் பயந்து கொள்ளவில்லையானால் என்ன செய்வது?)" என்று கேட்டார். நபியவர்கள், ( فَاسْتَعِنْ عَلَيْهِ مَنْ حَوْلَكَ مِنَ الْمُسْلِمِينَ ) "அப்படியானால் உன்னை சுற்றியுள்ள முஸ்லிம்களிடம் உதவி தேடு!"
என்று கூறினார்கள். அவர், "என்னைச் சுற்றிலும் முஸ்லிம்கள் யாரும் இல்லையானால் (என்ன செய்வது?)" என்று கேட்டார். நபியவர்கள், ( فَاسْتَعِنْ عَلَيْهِ
بِالسُّلْطَانِ ) "(அவனுக்கெதிராக) ஆட்சியாளரிடம் உதவி தேடு" என்று கூறினார்கள்.
அவர், "அந்த ஆட்சியாளர் என்னை விட்டும் தொலைவாக இருந்தால் (என்ன செய்வது?) என்று கேட்டார். நபியவர்கள், ( قَاتِلْ دُونَ مَالِكَ
حَتَّى تَكُونَ مِنْ شُهَدَاءِ الآخِرَةِ أَوْ تَمْنَعَ مَالَكَ ) "உன் செல்வத்திற்காகப்
போராடு! அதன் மூலம் நீ (இறந்துவிட்டால்) மறுமைக்காக உயிர்நீத்தவர்களுள் (உயிர்த்தியாகி)
ஆவாய். அல்லது உன் செல்வத்தைத் தக்கவைத்துக் கொள்வாய்" என்று கூறினார்கள். நூல்:- நஸாயீ-4013, முஸ்னது அஹ்மத்
களவாடுதல் என்ற பிரச்சினைக்கு,
அதை பாதுகாப்பதற்கு போராடுதல் தான் சரியான தீர்வாக இருக்குமே தவிர, வெறுமனே புலம்பிக்கொண்டு இருப்பது தீர்வாகாது.
அடுத்தவரின் செல்வத்தைப்
பறிக்கவோ களவாடவோ இஸ்லாத்தில் அனுமதி இல்லை. ஒருவருடைய செல்வம் அபகரிக்கப்படும்போது
அதைத் தடுத்து நிறுத்துவது கடமையாகும். அளவில் குறைவாக இருந்தாலும் தனது செல்வத்தை
காப்பதற்காக ஒருவர் சண்டையிடலாம் என்கிறது இஸ்லாம். அவ்வாறே தமது உயிர், தமது குடும்பம், தமது இறைநம்பிக்கை
ஆகியவற்றை காப்பாற்றுவதற்காகவும் ஒருவர் சண்டையிடலாம் என்பதை இஸ்லாத்தின் நிலைப்பாடு.
கண்ணியமான
அழைப்பு
(இறைநம்பிக்கையாளர்களே!)
அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் அழைத்தால் அதனை நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை
அழைப்பதைப் போல் அழைக்க வேண்டாம். (முஹம்மத் என பெயர் கூறி அழைக்க வேண்டாம்) திருக்குர்ஆன்:-
25:63
அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களை மக்கள், முஹம்மதே! அபுல் காசிமே! என பெயர் சொல்லி அழைத்துக் கொண்டிருந்தனர்.
அல்லாஹுத்தஆலா தன் தூதரை கௌரவிக்கும் விதமாக அவ்வாறு மக்களை அழைப்பதற்கு தடை விதித்து, அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ்வின் தூதரே! என அழைக்குமாறு கட்டளையிட்டான்.
நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
ஒரு மனிதனை குறிப்பிட்டு
அழைப்பதற்காக தான் அவருக்கு பெயர் சூட்டப்பட்டுகிறது. ஆனால், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெயர் அப்படியல்ல. நபியவர்களின் பெயரைச்
சொல்லி யாரும் அழைக்கக்கூடாது என்பது இறைகட்டளையாகும். இது இந்த சமுதாயத்தினர் மூலம்
நபியவர்களுக்கு இறைவன் அளிக்கும் கண்ணியமாகும்.
இறைவன், நமது தூதரை பெயர் சொல்லி அழைக்காதீர்கள் என்று மட்டும் சொல்லாமல், "யாரசூலல்லாஹ்! யா நபியல்லாஹ்! என்று அழையுங்கள்" என்று
மாற்று ஏற்பாட்டையும் சொல்லித்தருக்கிறான்.
ஒருவரை இவ்வாறு அழைப்பது
தவறு என்றால், எவ்வாறு அழைப்பது கண்ணியம் என்பதையும் கற்றுத்தர வேண்டும். குறிப்பாக, குழந்தைகளிடம் யாரை
எவ்வாறு அழைக்க வேண்டும்; எவ்வாறு பழக வேண்டும் என்றும், யாரை எவ்வாறு அழைக்கக்கூடாது; எவ்வாறு பழகக்கூடாது
என்பதையும் கற்றுத்தர வேண்டும்.
மீடியா
1988 ஆம் ஆண்டு சல்மான்
ருஷ்டி தனது நான்காவது நாவலாக சாத்தானின் கவிதைகள் (The Satanic Verses) எனும் நாவலை வெளியிட்டான். அப்போது வாழ்ந்த இந்தியாவின்
மாமேதை அபுல் ஹசன் அந்நத்வி (ரஹ்) அவர்கள் இந்நூலை வெளியிட்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குதாமே
நேரடியாகச் சென்று, அந்த நாவலின் கருத்துக்கள் பொய்யானது என்பதை ஆதாரங்களை சமர்ப்பித்து
நிரூபித்தார்கள். கேம்பிரிட்ஜ் நிர்வாகம் அந்த நூலை தாம் வெளியிட்டதற்கு மன்னிப்பு
கேட்டது. தனது நூலகத்தில் இருந்து அதை அகற்ற ஒப்புக்கொண்டது. அகற்றவும் செய்தது.
இஸ்லாத்திற்கு எதிராக
வெளியிடப்படும் திரைப்படங்கள், நூல்கள் ஆகியவை கண்டு நாம் உணர்ச்சி வசப்படுகிறோம். உடனே ஆர்ப்பாட்டங்களும்
கண்டன உரைகளும் நிகழ்த்துகிறோம். ஆனால், அதன் மூலம் முழுமையான பலனை எதிர்பார்க்க முடியாது.
மாறாக, அது சம்பந்தப்பட்டவர்களை
நேரடியாக சந்தித்து நம் பக்கம் இருக்கும் நியாயங்களை முறையாக தெளிவுபடுத்த வேண்டும்.
ஒரு பிரச்சனைக்கு முறையாக தீர்வை தேட வேண்டும்.
ஒரு செயல் தவறானதாகத்
தெரியும்போது வெறுமனே அது தவறு என்று சொல்லிக் கொண்டே இருப்பதைவிட அந்தத் தவறை மாற்றுவதற்கான
வழி என்ன? அல்லது அதை திருத்துவதற்கான
வழி என்ன? என்று கொஞ்சம் நிதானத்தோடு
யோசித்து, முறையாக தீர்வை தேட
வேண்டும்.
சமாதானமாகும் அளவுக்கு
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். இஸ்ரவேலர்களில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருடைய நிலம்
ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தமது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்)
ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், ‘‘என்னிடமிருந்து உன்
தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத்தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை”
என்று கூறினார்.
நிலத்தின் (முந்தைய)
உரிமையாளர், ‘‘நிலத்தை, அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்குத்தான்
உரியது)” என்று கூறினார்.
(இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர்.
அவர்கள் இருவரும் தீர்ப்புக்கேட்டு சென்ற அந்த மனிதர், ( أَلَكُمَا وَلَدٌ ) ‘‘உங்கள் இருவருக்கும் பிள்ளை இருக்கிறதா?” என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ( لِي غُلاَمٌ ) ‘‘எனக்குப் பையன் ஒருவன்
இருக்கிறான்” என்று சொன்னார். மற்றொருவர், ( لِي جَارِيَةٌ ) ‘‘எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்” என்று சொன்னார். தீர்ப்புச்
சொல்பவர், ( أَنْكِحُوا
الْغُلاَمَ الْجَارِيَةَ، وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ، وَتَصَدَّقَا ) ‘‘அந்தப் பையனுக்கு
அந்தச் பெண்ணை மணமுடித்துவையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தானதர்மமும் செய்யுங்கள்”
என்று தீர்ப்பளித்தார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3472, முஸ்லிம்-3544
இருவருக்கும் மத்தியில்
பிரச்சனை எழுந்து அதற்கான தீர்வைத் தேடி நம்மிடம் வரும்போது, இயன்றவரை அந்த இரண்டு பேருக்கும் மத்தியில் சமாதானமாகும் அளவுக்கு
அழகிய தீர்வைச் சொல்லவேண்டும். மாறாக, எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போல், அவர்களை மேலும் மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தீயவர்களின்
குணமாகும்.
பெரியவர்கள்
முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி சிலருக்கு எந்த வேலையும் செய்யாமலேயே சும்மா
இருக்கும்போதே, கை கால் வலி ஏற்படும். அதற்கு "வைட்டமின் டி" குறைபாடே காரணம் என்பதாக
மருத்துவர்கள் கூறுகின்றனர்.
"வைட்டமின் டி" குறைபாட்டை சரி செய்ய பெரியளவில் செலவழித்து
மாத்திரை, மருந்துகள் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. தினமும் சூரிய வெளிச்சத்தில்
(அதாவது வெயிலில்) சற்று நேரம் இருந்தாலே போதும். "வைட்டமின் டி" குறைபாடு
தானாகவே சரியாகிவிடும்.
இந்த மருத்துவ தகவலை
மக்கள் நலனில் அக்கறை உள்ள மருத்துவர்கள் மட்டுமே கூறுவர்.
வெயிலில் தினமும்
சற்று நேரம் இருப்பதால் கருத்துவிட மாட்டோம். அது குறித்து கவலைப்பட தேவையில்லை.
மிக சுலபம்
பெண்: டாக்டர்...
என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் விரல் சூப்பறான்.
டாக்டர்: ஒன்னும்
problem இல்லை...சரி
பண்ணிடலாம்.
பெண்: ரொம்ப
கேவலமா இருக்கு. எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை.
டாக்டர்: ஒன்னும்
செலவு இல்லை...ரெண்டு வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட டவுசர மாட்டி வுட்டுடுங்க.
அவ்ளோதான்
பெண்:
(குழப்பமாக) எதுக்கு டாக்டர்...?
டாக்டர்: அந்த
டவுசர் அவனுக்கு லூசா இருக்கும். அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே அவன்
வேலையா இருக்கும். விரல் சூப்ப டைம் இருக்காது.
ஒருவனுக்கு ஒரு பயங்கரமான
பிரச்சினைங்க. இணையத்தளத்தில் தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போனேன் என்று
சொன்னான்.
டாக்டர், எனக்கு தினமும்
இரவில் படுக்கும்போது, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப்
பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே.
டாக்டர் சொன்னாரு.
தம்பி, சரி பண்ணிடலாம். வாரம்
ஒருமுறை வீதம் அஞ்சு செஷன்ஸு என்கிட்டே வாங்க.
சரி பண்ணிடலாம்!
ரொம்பத் தேங்ஸ் டாக்டர்.
எவ்வளவு பீஸு? வெறும் ஓரு செஷன்க்கு 2000 ரூ தான். தம்பி,
ஓ அப்டீங்களா? சரிங்க டாக்டர் வர்றேன்.
ஆனா பாருங்க.. அப்புறம்
அவன் வரவே இல்லே.
ஒரு ரெண்டு மாசம்
கழிச்சு ஒரு ப்ளாட்பாரம் கடையில காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு.
அடடே என்னா தம்பி, அப்புறம் வரவே இல்லே?
அதுவா டாக்டர், அந்தப்
பிராப்ளம் சரியாயிடுச்சு.
ஓ! எப்புடீ?
நம்ம தெரிந்த ஒருத்தரு
ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம்.
டாக்டருக்கு தலை லேசா
சுத்துற மாதிரி இருந்துச்சு.
என்னா தம்பி சொல்றீங்க? விவரமா சொல்லுங்க!
அது ஒண்ணுமில்லீங்க.
நமக்கு தெரிஞ்சவர் கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு.
ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்க ன்னாரு. அப்புடியே கட்டிலை 2000
ரூபாய்க்கு வித்துட்டு, 200 ரூபாய்க்கு பாய் வாங்கிட்டேன். இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே.
பல பிரச்சினைகளுக்கு, சாதாரணமாக யோசிப்பதன்
மூலமே தீர்வு கிடைத்துவிடும். ஆம்! பல நேரங்களில் பிரச்சனைகளுக்குரிய தீர்வுகள் மிக
சுலபமாக இருக்கும். பெரிய செலவோ, அல்லது பல மணி நேரங்களின் உழைப்போ தேவைப்படாது.
ஆகவே, நாம் இஸ்லாம் கூறும் அறிவுரைகளை ஏற்று புத்திசாலித்தனமாக செயல்பட, அல்லாஹுத்தஆலா நமக்கு அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment