Search This Blog

Saturday, 22 May 2021

உயிர்த் தியாகிகள்

 

உயிர்த்தியாகிகள்


وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ


(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்)  உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர். திருக்குர்ஆன்:- 3:169


பாலஸ்தீனத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அறப்போரில் களம் காணும் வீரர்களின் நிலைப்பாடு இது மட்டுமே. போர்க்களம் கண்டு தாயகத்தை மீட்டெடுத்து உலகத்தில் வெற்றி காண்பது. அல்லது உயிர்த்தியாகம் செய்து மறுமையில் வெற்றி காண்பது. அதனால் தான் தன்னைவிட பலமிக்க, இரக்கமற்ற அரக்கர்களிடம் துளியளவும் அச்சமின்றி மோதுகிறார்கள். அந்தப் போராளிகள் தமது இறப்பை கண்டு அஞ்சுவதில்லை என்பதற்கு அவர்கள் குறித்து இன்று நாம் காணும் காட்சிகளே சாட்சி. 


வலைத்தளத்தில் வாசித்தவை: இந்தியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞர் ஒருவர் பாலஸ்தீன் சென்றபோது அங்குள்ள 10 வயது சிறுவனை அழைத்து, “நீ என்னுடன் இந்தியாவுக்கு வருகிறாயா?” என்று கேட்டார்.

 

அதற்கு அச்சிறுவன், “இந்தியாவில் என்ன கிடைக்கும்?” என்று கேட்டான். மார்க்க அறிஞர், “அங்கு நல்ல சுவையான உணவு, துணி, நிம்மதியான தூக்கம் என எல்லாம் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

 

அதற்கு அச்சிறுவன், "எனக்கு அங்கு (ஷஹீத் எனும்) உயிர்த்தியாகி அந்தஸ்து கிடைக்குமா? என்று கேட்டான். மேலும் அவன், "அல்லாஹ் இந்தப் பூமியில் அந்த அந்தஸ்த்தை எங்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளான். அது வேறெங்கும் கிடைக்க வாய்ப்பில்லை" என்று தெரிவித்தான். மார்க்க அறிஞர் அச்சிறுவனின் பதிலைக் கேட்டு கண்கலங்கினார்.

 

அச்சிறுவனின் இறைநம்பிக்கையைப் பாருங்கள். பலஸ்தீனர்கள் அல்லாஹ்வுக்காக தன் உயிரை விடுவதற்கு எப்பொழுதும் தயராக உள்ளனர். 


"ஷஹீத்" எனும் சொல் "ஷஹாதத்" எனும் மூலச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. "ஷஹீத்" என்றால் சாட்சியாளர் என்று பொருளாகும். இஸ்லாமிய கலாச்சார மொழி மரபின்படி சத்தியத்திற்கு சாட்சியாக இருப்பவர் என்று பொருள். சத்தியம் என்றால் இஸ்லாமாகும்.


உலகத்தில்


மேலும் அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர். ஆனால்அதை நீங்கள் உணரமாட்டீர்கள்.       திருக்குர்ஆன்:- 2:154


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا يَجِدُ الشَّهِيدُ مِنْ مَسِّ الْقَتْلِ إِلاَّ كَمَا يَجِدُ أَحَدُكُمْ مِنْ مَسِّ الْقَرْصَةِ ) அல்லாஹ்வின் பாதையில் வீர மரணமடைந்தவர் கொல்லப்படும்போது உங்களில் யாராவது உங்களை கிள்ளும்போது அடைகின்ற (அல்லது கொசுக்கடியின்) வலியை போன்றே தவிர (வேறு வகையில்) அவர் உணர மாட்டார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்     நூல்:- திர்மிதீ-1591, நஸாயீ-3110


அதாவது உயிர்த்தியாகி வீர மரணத்தின்போது உணரும் வலி சாதாரணமாகவே அவருக்குத் தோன்றும்.


காலித் பின் உர்ஃபதாஹ் (ரலி) சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்களிடம் ( مَنْ قَتَلَهُ بَطْنُهُ لَمْ يُعَذَّبْ فِي قَبْرِهِ"ஒருவர் வயிற்று உபாதையால் இறந்துவிட்டால் அவர் மண்ணறையில் (கப்ரில்) வேதனை செய்யப்பட மாட்டார்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் செவியுற்றதில்லையா? என்று கேட்டார்கள்.   நூல்:- திர்மிதீ-984


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كُلُّ مَيِّتٍ يُخْتَمُ عَلَى عَمَلِهِ إِلاَّ الَّذِي مَاتَ مُرَابِطًا فِي سَبِيلِ اللَّهِ فَإِنَّهُ يُنْمَى لَهُ عَمَلُهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَيَأْمَنُ مِنْ فِتْنَةِ الْقَبْرِ "இறப்பை தழுவும் ஒவ்வொருவரின் (நற்)செயல் மீதும் முத்திரையிடப்படுகிறது. அல்லாஹ்வின் பாதையில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் இருக்கும்போது இறந்தவரைத் தவிர, நிச்சயமாக அவருக்கு அவரது நற்செயல் மறுமைநாள் வரை வளர்க்கப்படும். மேலும், அவர் மண்ணறையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புப் பெறுவார்" என்று கூறினார்கள்.     அறிவிப்பாளர்:- ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1546, இப்னுஹிப்பான், ஹாகிம்


ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. உஹது போரின் போது என் தந்தை (அப்துல்லாஹ் - ரலி அவர்களின்) உடல் சிதைக்கப்பட்ட நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டு அவர்கள் முன்னே வைக்கப்பட்டார். (அந்நேரத்தில் நான் அழுது கொண்டிருந்தேன்.) அதற்கு அண்ணலார், ( لِمَ تَبْكِي أَوْ لاَ تَبْكِي، مَا زَالَتِ الْمَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا ) "ஏன் அழுகிறாய்?" அல்லது "நீ அழாதே! வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து (உனது தந்தை) அப்துல்லாஹ்வுக்கு நிழல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2816


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ سِتُّ خِصَالٍ يُغْفَرُ لَهُ فِي أَوَّلِ دَفْعَةٍ وَيَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ وَيُجَارُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَيَأْمَنُ مِنَ الْفَزَعِ الأَكْبَرِ وَيُوضَعُ عَلَى رَأْسِهِ تَاجُ الْوَقَارِ الْيَاقُوتَةُ مِنْهَا خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا وَيُزَوَّجُ اثْنَتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِنَ الْحُورِ الْعِينِ وَيُشَفَّعُ فِي سَبْعِينَ مِنْ أَقَارِبِهِ )

உயிர்த் தியாகிக்கு அல்லாஹ்விடம் ஆறு சிறப்புக்கள் உண்டு:                                 

1) அவரது உடலிலிருந்து முதல் சொட்டு இரத்தம் விழுந்தவுடன் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. சொர்க்கத்திலுள்ள அவரது இருப்பிடம் அவருக்குக் காட்டப்படுகிறது.                                                                 

2) மண்ணறையின் (கப்ரு) வேதனையிலிருந்து அவர் காப்பாற்றப்படுகிறார்.                                                                                                                        

3) (மறுமை நாளில் ஏற்படும்) மாபெரும் திடுக்கத்திலிருந்து அவர் பாதுகாப்புப் பெற்றவராக இருப்பார்.                                                      

4) அவருடைய தலையில் கௌரவ கிரீடம் சூட்டப்படுகிறது. அதில் பதிக்கப்பட்டுள்ள ஓர் இரத்தினக் கல் இவ்வுலகத்தையும் அதில் உள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.                                                                     

5)ஹூருல்ஈன் எனும் (சொர்க்கப்) பேரழகியரில் எழுபத்து இரண்டு பேர் அவருக்குத் துணைவியராக மணமுடித்து கொடுக்கப்படுவர்.                                                                                                                                                                      

6) அவர் தம் உறவினரில் எழுபது பேருக்குச் செய்யும் பரிந்துரை (ஷஃபாஅத்) ஏற்கப்படுகிறது.             அறிவிப்பாளர்:- மிக்தாம் பின் மஅதீ கரிப் (ரலி) அவர்கள்    நூல்:- திர்மிதீ-1586


மறுமையின்போது


அல்லாஹ் தன் அருளால் (வீர மரணம் எய்திய) அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தம் அடைந்தவர்களாக  இருக்கின்றார்கள்.         திருக்குர்ஆன்:- 3:170


நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( زَمِّلُوهُمْ بِدِمَائِهِمْ فَإِنَّهُ لَيْسَ كَلْمٌ يُكْلَمُ فِي اللَّهِ إِلاَّ أَتَى يَوْمَ الْقِيَامَةِ جُرْحُهُ يَدْمَى لَوْنُهُ لَوْنُ دَمٍ وَرِيحُهُ رِيحُ الْمِسْكِ (உஹது  போரில் கொல்லப்பட்ட) அவர்களை அவர்களின் இரத்தங்களோடு போர்த்துங்கள். ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) காயப்படுத்தப்பட்ட ஒருவர் தமது (விழுப் புண்ணிலிருந்து) இரத்தம் கொப்பளிக்கின்ற நிலையிலேயே மறுமை நாளில் வருவார். அவரது (காயத்திலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்தத்தின் நிறத்தில் இருக்கும். அதன் மணமோ கஸ்தூரி மணமாயிருக்கும்.  அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் ஸஅலபா ரலி அவர்கள் நூல்:- நஸாயீ-3097


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي فَصَعِدَا بِي الشَّجَرَةَ، فَأَدْخَلاَنِي دَارًا هِيَ أَحْسَنُ وَأَفْضَلُ، لَمْ أَرَ قَطُّ أَحْسَنَ مِنْهَا قَالاَ أَمَّا هَذِهِ الدَّارُ فَدَارُ الشُّهَدَاءِ ) ‏இன்றிரவு இரண்டு பேரைக் (கனவில்) கண்டேன்; அவர்கள் இருவரும் என்னிடம் வந்து, என்னுடன் ஒரு மரத்தின் மீது ஏறி அழகான சிறந்த ஒரு வீட்டில் புகச் செய்தார்கள். அதைவிட அழகான வீட்டை நான் பார்த்ததேயில்லை. (அவர்களில் ஒருவர்,) "இந்த வீடு இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் வீடு ஆகும்" என்று சொன்னார்.       அறிவிப்பாளர்:- சமுரா (ரலி) அவர்கள்   நூல் புகாரீ-2791


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்து அல்பராஉ (ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  "நாயகமே! ஹாரிசாவைப் பற்றி எனக்குத் தாங்கள் அறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார். அவர் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையாக இருந்து விடுவேன்; அவர் வேறு எந்த நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்" என்று கூறினார்கள்.


அண்ணலார் ( يَا أُمَّ حَارِثَةَ إِنَّهَا جِنَانٌ فِي الْجَنَّةِ، وَإِنَّ ابْنَكِ أَصَابَ الْفِرْدَوْسَ الأَعْلَى ) "ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல சோலைகள் உள்ளன. உம்முடைய மகன் (அவற்றில்) மிக உயர்ந்த 'ஃபிர்தவ்ஸ்' எனும் சொர்க்கச் சோலையை (தன் உயிர்த்தியாகத்திற்கு பிரதிபலனாக) பெற்றுக் கொண்டார்' என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-2809, திர்மிதீ-3088


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் (தலைப்பில் காணும்) இந்த திருவசனம் (3:169) தொடர்பாக அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டோம். அதற்கு அண்ணலார் பின்வருமாறு கூறினார்கள்.


உயிர்த்தியாகிகளின் உயிர்கள் பச்சை நிற பறவைகளின் வயிறுகளில் செலுத்தப்பட்டிருக்கும். அவற்றுக்கென இறையரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுக்குள் இருக்கும். அவை விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும். அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் தோன்றி, "உங்களுக்கு ஏதேனும் ஆசை உண்டா?" என்று கேட்பான். அதற்கு அவர்கள், "நாங்கள் தான் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்து கொண்டிருக்கிறோமே! இதற்கு மேல் நாங்கள் ஆசைப்படுவதற்கு வேறு என்ன உள்ளது?" என்று பதிலளிப்பார்கள்.


இவ்வாறு மூன்று முறை (மீண்டும் மீண்டும்) அவர்களிடம் அல்லாஹ் கேட்டுக்கொண்டே இருப்பான். ஏதாவது கேட்காமல் விடப்பட மாட்டோம் என்பதை புரிந்துகொள்ளும் அவர்கள், ( يَا رَبِّ نُرِيدُ أَنْ تَرُدَّ أَرْوَاحَنَا فِي أَجْسَادِنَا حَتَّى نُقْتَلَ فِي سَبِيلِكَ مَرَّةً أُخْرَى )"எங்கள் இறைவா! எங்கள் உயிர்களை மறுபடியும் எங்கள் உடல்களில் நீ செலுத்த வேண்டும்; மற்றொரு முறை உனது வழியில் போராடி நாங்கள் கொல்லப்பட வேண்டும் என விரும்புகின்றோம்" என்று கூறுவார்கள். (எனினும் இதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.) இதைத் தவிர அவர்களுக்கு (வேறு) எந்த தேவையும் இல்லை என இறைவன் கண்டுகொள்ளும் போது அவர்கள் விடப்படுவார்கள். நூல்:- முஸ்லிம்-3834, திர்மிதீ-2927, இப்னுமாஜா-2801, தாரமீ


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  

( مَا أَحَدٌ يَدْخُلُ الْجَنَّةَ يُحِبُّ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا وَلَهُ مَا عَلَى الأَرْضِ مِنْ شَىْءٍ، إِلاَّ الشَّهِيدُ، يَتَمَنَّى أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا فَيُقْتَلَ عَشْرَ مَرَّاتٍ، لِمَا يَرَى مِنَ الْكَرَامَةِ )

சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகிலுள்ள பொருட்களையெல்லாம் அவருக்கு கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார். உயிர்த் தியாகியைத் தவிர. அவர் தமக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணியத்தை கண்டு விட்ட காரணத்தால் உலகத்திற்குத் திரும்பி வந்து (இறைவழியில்) பத்துமுறை கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார்.     அறிவிப்பாளர்:- அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2817, திர்மிதீ-1585, நஸாயீ -3108


அதாவது, அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்ட உயிர்த்தியாகிகள் தம் இறைவனிடம் உயிரோடு உள்ளனர். தமக்குக் கிடைத்த அருட்கொடைகளையும் நற்பெயரையும் எண்ணி அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.   நூல்:- தஃப்சீர் இப்னுகஸீர்


பல வகைகள்


அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் "உங்களில் உயிர்த்தியாகி (ஷஹீத்) குறித்து உங்கள் கருத்து என்ன?" என்று வினவினார்கள். அதற்கு மக்கள் "நாயகமே! அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டவர் உயிர்த்தியாகி ஆவார்" என்று பதிலளித்தனர்.


( إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ ) "அப்படியானால் என் சமுதாயத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் (எண்ணிக்கையில்) குறைந்து விடுவார்கள்" என்று அண்ணலார் கூறினார்கள். மக்கள், "அவ்வாறாயின் உயிர்த்தியாகிகள் யார், நாயகமே?" என்று வினவினார்கள். அண்ணலார், ( مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي الطَّاعُونِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي الْبَطْنِ فَهُوَ شَهِيدٌ ) அல்லாஹ்வின் பாதையில் (அறப் போரில்) கொல்லப்பட்டவர் உயிர்த்தியாகி ஆவார். அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர் உயிர்த் தியாகி ஆவார். கொள்ளை நோயால் இறந்தவரும் உயிர்த்தியாகி ஆவார். வயிற்றோட்டத்தால் இறந்தவரும் உயிர்த்தியாகி ஆவார்" என்று விடையளித்தார்கள்.


இந்த நபிமொழியின் மற்றொரு தொடரில் வெள்ளத்தில் மூழ்கி இறந்தவரும் உயிர்த்தியாகி ஆவார் என்று கூறப்பட்டுள்ளது.         நூல்:- முஸ்லிம்-3878


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الشُّهَدَاءُ خَمْسَةٌ الْمَطْعُونُ وَالْمَبْطُونُ وَالْغَرِقُ وَصَاحِبُ الْهَدْمِ وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ ) உயிர்த்தியாகிகள் ஐவர்: 1) கொள்ளை நோயில் இறந்தவர். 2) வயிற்றுப் போக்கால் இறந்தவர். 3) வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர். 4) இடிபாடுகளில் சிக்கி இறந்தவர். 5) அல்லாஹ்வின் பாதையில் அறப்போரில் உயிர்த்தியாகம் செய்தவர். அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-654, முஸ்லிம்-3877, திர்மிதீ-983, நஸாயீ-3112


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பக்கவாத நோயால் இறந்தவர் உயிர்த்தியாகி ஆவார். நூல்:- முவத்தா


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ قُتِلَ دُونَ دِينِهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ قُتِلَ دُونَ دَمِهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ قُتِلَ دُونَ أَهْلِهِ فَهُوَ شَهِيدٌ )

தமது செல்வத்தைக் காப்பதற்காகப் போராடி ஒருவர் கொல்லப்பட்டு விட்டால் அவர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவார். தமது மார்க்கத்தைக் காப்பாற்று காப்பதற்காகப் போராடி ஒருவர் கொல்லப்பட்டு விட்டால் அவரும் உயிர்த்தியாகி ஆவார். தமது உயிரைக் காப்பதற்காகப் போராடி ஒருவர் கொல்லப்பட்டு விட்டால் அவரும் உயிர்த்தியாகி ஆவார். தன் வீட்டாரைக் காப்பதற்காகப் போராடி ஒருவர் கொல்லப்பட்டால் அவரும் உயிர்த்தியாகி ஆவார்.       அறிவிப்பாளர்:- சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள்        நூல்:- திர்மிதீ-1341


சுவைத் பின் முகர்ரின் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ( مَنْ قُتِلَ دُونَ مَظْلَمَتِهِ فَهُوَ شَهِيدٌ ) "யார் தனக்கு நேர்ந்த அநியாயத்திற்காக(ப் போராடி, அதில்) கொல்லப்பட்டாரோ அவர் உயிர்த்தியாகி ஆவார்" என்று கூறினார்கள்.             நூல்:- நஸாயீ-4028


இறைவழியில் அறப்போர் புரிந்து கொள்ளப்படுவது மட்டுமின்றி, வேறு பல விபத்துக்களால் உயிர் நீப்பதும் உயிர்த்தியாகத்தில் அடங்கும் என்கிறது இதுபோன்ற நபிமொழிகள்.


இறைவழியில் நடந்த போரில் கொல்லப்பட்டவர்கள் இம்மை மறுமை இரண்டிலும் தியாகிகள் ஆவர். இவர்கள் நீராட்ட படாமலும் இறுதித் தொழுகை நடத்தப்படாமலும் அடக்கம் செய்யப்படுவர். இவர்கள் மறுமையில் உயிர்த்தியாகிகளுக்கான மகத்தான பரிசையும் பெறுவர். (அறப்போரில் வீர மரணமடைந்தவர்களைத் தவிர மற்றபடி மேற்காணும்) நபிமொழிகளில் சொல்லப்பட்ட இவர்களுக்கு மறுமையில் மட்டும் தியாகிகளுக்கான நன்மைகள் கிடைக்கும். இம்மையில் அவர்களது உடல் குளிப்பாட்டப்படும்; இறுதித் தொழுகையும் நடத்தப்படும்.             நூல்:- அல்மின்ஹாஜ்


ஆட்கொல்லி நோய்


ஹஃப்சா பின் சீரீன் ரஹ் அவர்கள் கூறியதாவது. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் என்னிடம் உங்கள் சகோதரர் யஹ்யா பின் அபீஅம்ரா எதனால் இறந்தார்?" என்று கேட்டார்கள். நான், "கொள்ளை நோயால் இறந்தார்" என்று பதிலளித்தேன்.  அதற்கு அவர்கள் ( الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ ) "கொள்ளை நோய் மரணம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வீரமரணமாகும்" என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக சொன்னார்கள்.      நூல்:- புகாரீ-2830, முஸ்லிம்-3879


ஜப்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள், (நோயுற்றிருந்த) என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது (அருகிலிருந்த குடும்பப்) பெண்கள் சத்தமிட்டு அழுது கொண்டு, நீங்கள் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தோம் (ஆனால் நீங்கள் சாதாரணமாக இறந்துவிடுவீர்கள் போல் தெரிகிறதே)" என்று கூறியதை செவியேற்றார்கள்.


அப்போது அண்ணலார், "அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் தாம் உயிர்த்தியாகி என்று நீங்கள் கருதிக்கொண்டிருக்கிறீர்கள். அப்படியென்றால் நிச்சயமாக உங்களுள் உயிர்த்தியாகிகள் குறைந்து போய் விடுவார்கள்" (என்று கூறிவிட்டு பின்வருமாறு கூறினார்கள்). 


( اَلْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ شَهَادَةٌ وَالْبَطْنُ شَهَادَةٌ وَالْحَرَقُ شَهَادَةٌ وَالْغَرَقُ شَهَادَةٌ وَالْمَغْمُومُ- يَعْنِي الْهَدِمَ- شَهَادَةٌ وَالْمَجْنُوبُ شَهَادَةٌ وَالْمَرْأَةُ تَمُوتُ بِجُمْعٍ شَهِيدَةٌ ) அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுவதும் உயிர்த்தியாகம் ஆகும்; வயிற்றுப்போக்கால் இறப்பதும் உயிர்த்தியாகம் ஆகும்; (தீயில்) உடல் எரிந்து இறப்பதும் உயிர்த்தியாகம் ஆகும்; நீரில் மூழ்கி இறப்பதும் உயிர்த்தியாகம் ஆகும்; சுவர் இடிந்து இறப்பதும் உயிர் தியாகம் ஆகும்; பைத்திய நிலையிலேயே இறப்பதும் உயிர்த்தியாகம் ஆகும்; வயிற்றில் குழந்தையுடன் சேர்ந்து இறக்கும் பெண்மணி (தாய்) உயிர்த்தியாகி ஆவார்" என்று கூறினார்கள்.       நூல்:- நஸாயீ-3143


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கொள்ளை நோயால் இறந்தவர்களைப் பற்றி (அவர்கள் மதிப்பு உயர்த்தப்பட்டிருப்பதால் மறுமை நாளில்) தங்கள் இறைவனிடம், (அறப்போர்) உயிர்த்தியாகிகளும் தங்கள் படுக்கையில் (இயற்கையாக)  மரணமடைந்தவர்களும் (இவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள்... இவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள்... என) தர்க்கம் செய்துகொள்வார்கள். அப்பொழுது உயிர்த்தியாகிகள் "(கொள்ளை நோயால் மரணமடைந்த ) எங்களுடைய (இந்தச்) சகோதரர்கள், நாங்கள் கொல்லப்பட்டதைப் போன்று கொல்லப்பட்டார்கள். (எனவே அவர்கள் எங்களைப் போன்று தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறார்கள்)" என்று (பெருமையாகக்) கூறுவார்கள்.


தமது படுக்கையில் (இயற்கையாக) மரணமடைந்தவர்கள் "(கொள்ளை நோயால் மரணமடைந்த) எங்களுடைய (இந்தச்) சகோதரர்கள், நாங்கள் இறந்ததைப் போன்று படுக்கைகளில் (இயற்கையாக) மரணமடைந்தார்கள். (அதனால் அவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் தான்)" என்று (பெருமையாகக்) கூறுவார்கள்.


அப்போது நம்முடைய இறைவன் "(நீங்கள் இரு சாராரும்) அவர்களுடைய காயங்களை பார்வையிடுங்கள். அவர்களுடைய காயங்கள் (இறைப்பாதையில்) கொல்லப்பட்டோரின் காயங்களுக்கு ஒப்பாக இருந்தால், நிச்சயமாக அவர்கள் (உயிர்த்தியாகிகளான) அவர்களைச் சார்ந்தவர்கள். அவர்களுடனே உயர் பதவியில்  இருப்பார்கள்" என்று கூறுவான். அப்போது (அந்த இரு சாராரும்) கொள்ளை நோயால் இறந்தவர்களுடைய காயம், உயிர்த்தியாகிகளின் காயத்திற்கு ஒப்பாக ஆகிவிட்டதை காண்பார்கள்.  அறிவிப்பாளர்:- இர்பாள் பின் சாரியா (ரலி) அவர்கள் நூல்:-நசாயீ-3113, முஸ்னது அஹ்மது


கொள்ளை நோய் (தாஊன்) என்பது காலரா, அம்மை போன்ற வேகமாகப் பரவும் நோயை குறிக்கும். காற்று, நீர் ஆகியவை மாசுபடுவதால் இந்நோய் உண்டாகிறது.      நூல்:- ஃபத்ஹுல்பாரீ, உம்தத்துல் காரீ


செல்வத்தைப் பாதுகாக்கும்போது


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நாயகமே! ஒருவன் எனது செல்வத்தை பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்?" என்று கேட்டார். அண்ணலார் ( فَلاَ تُعْطِهِ مَالَكَ ) "அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை" என்று கூறினார்கள்.


அந்த மனிதர், "அவன் என்னுடன் சண்டையிட்டால்...? என்று கேட்டார். அண்ணலார், ( قَاتِلْهُ ) "நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்" என்று கூறினார்கள். "(அந்த சண்டையில்) அவன் என்னை கொன்று விட்டால்...?" என்று அந்த மனிதர் கேட்டார். அண்ணலார், ( فَأَنْتَ شَهِيدٌ ) "அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்" என்றார்கள். "நான் அவனைக் கொன்று விட்டால்" என்று அவர் கேட்டார். அண்ணலார், "அவன் நரகத்திற்கு செல்வான்" என்று பதிலளித்தார்கள்.       நூல்:- முஸ்லிம்-225


அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் "ஒருவர் தமது செல்வத்தைக் காப்பதற்காகப் போராடலாம்; அது இரண்டு வெள்ளிக் காசுகளாயிருந்தாலும் சரியே" என்று கூறியுள்ளார்கள்.   நூல் திர்மிதீ-1339


முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தில் அன்னாருடைய சகோதரர் அன்பசா பின் அபீசுஃப்யான் மக்கா, தாயிஃப் ஆகிய நகரங்களில் ஆட்சியராக இருந்தார். அன்பசா, தாயிஃபில் உள்ள ஒரு நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக நீரூற்று ஒன்றைத் தேடி வாய்க்கால் வெட்டினார். அந்த வாய்க்காலை அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்களது குடும்பத்தாருக்குச்  சொந்தமான தோட்டத்தின் வழியாகக்  கொண்டு செல்வதென்பது அவரது திட்டம்.


இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அதைக் கடுமையாக ஆட்சேபித்தார்கள். எங்களது தோட்டத்தில் வாய்க்கால் வெட்டி எங்கள் பிழைப்பைக் கெடுக்காதீர்கள் என்றார்கள் அவர்கள். இதற்காக ஆயுதம் ஏந்தவும் அன்னார் தயாரானார்கள். அப்போதுதான் அவருடைய உறவினர் காலித் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் (ரலி)  அவர்களுக்கு அறிவுரைக் கூற சென்றார்கள்.


அவருக்கு அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)  அவர்கள், ( مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ ) "தமது செல்வத்தைக் காப்பதற்காகப் போராடியபோது ஒருவர் கொல்லப்பட்டு விட்டால் அவர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவார்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டார்கள்.  நூல்:- முஸ்லிம்-226, ஃபத்ஹுல் முல்ஹிம்


ஒரு முஸ்லிமின் உயிர், கௌரவம், செல்வம், சமய நம்பிக்கை ஆகியவற்றுக்கு இஸ்லாம் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. அடுத்தவரின் செல்வத்தைப் பறிக்கவோ களவாடவோ அனுமதியில்லை. ஒருவருடைய செல்வம் அபகரிக்கப்படும்போது அதைத் தடுத்து நிறுத்துவது கடமையாகும். அளவில் குறைவாக இருந்தாலும் தமது செல்வத்தைக் காப்பதற்காக ஒருவர் சண்டையிடலாம் என்று இந்த நபிமொழியிலிருந்து தெளிவாகிறது.


கடனைத் தவிர


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ إِلاَّ الدَّيْنَ )(அறப் போரில் கொல்லப்பட்ட) உயிர்த்தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன; கடனைத் தவிர.     அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3832, நஸாயீ-3104


இந்த நபிமொழி மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு உயிர் தியாகம் செய்தல் முதலான மிக உயர்ந்த நற்செயல்கள் கூட மனித உரிமைகள் தொடர்பான பாவங்களுக்குப் பரிகாரமாக ஒருபோதும் அமையாது. கடன் என்பது மனித உரிமைகள் தொடர்பானது. அல்லாஹ்வின் தொடர்புடைய பாவங்களுக்கு மட்டுமே அறப்போர், அதில் உயிர்நீத்தல் பகரமாக அமையும் என்று விளங்க வேண்டும்.


எண்ணம்போல்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ سَأَلَ اللَّهَ الْقَتْلَ فِي سَبِيلِهِ صَادِقًا مِنْ قَلْبِهِ أَعْطَاهُ اللَّهُ أَجْرَ الشَّهِيدِ ) யார் உண்மையான மனதுடன் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுவதை வேண்டுவாரோ (அவர் வீர மரணத்தை அடையாவிட்டாலும்) அவருக்கு வீர மரணத்தின் பலனை அல்லாஹ் வழங்குவான்.  அறிவிப்பாளர்:- முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1578


ஷத்தாத் பின் அல்ஹாத் (ரலி) அவர்கள் கூறியதாவது. கிராமவாசிகளில் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து "தங்களை நான் (இறைத்தூதர் என்று) நம்புகிறேன். தங்களை நான் பின்பற்றுகிறேன்" என்று கூறினார். பிறகு நடைபெற்ற போரிலும் கலந்து கொண்டார்.


அந்த போரில் கிடைத்த போர்ச் செல்வங்களை (ஙனீமத்) பங்கிடப்பட்டது. நபித்தோழர்கள் அதில் அவருக்குக்குரிய பங்கை  எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தனர். அவர் அதை எடுத்துக்கொண்டு அண்ணலாரிடம் வந்து "இது என்ன?" என்று கேட்டார். அண்ணலார் "(போரில் கிடைத்ததில்) உமது பங்காக நான் வழங்குவது" என்று கூறினார்கள்.


அதற்கு அவர், "இதற்காக உங்களை (நபியாக ஏற்று) நான் பின்பற்றவில்லை. மாறாக, நான் இங்கே (தமது தொண்டைப்பகுதியின் பக்கம் சைகை செய்து இங்கு) அம்பால் (போரில்) தாக்கப்பட்டு இறந்து, சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காகவே உங்களை (நபியாக) ஏற்றுப் பின்பற்றுகிறேன்" என்று கூறினார்.


அண்ணலார், ( إِنْ تَصْدُقِ اللَّهَ يَصْدُقْكَ ) "நீர் அல்லாஹ்வைப் பற்றி (நம்பி சொல்லுகின்றவற்றில்) உண்மையாளராக இருந்தால், அல்லாஹ் உன்னை (உயிர்த்தியாகியாக மரணமடையச் செய்து) உண்மைப்படுத்துவான்" என்று கூறினார்கள். அதன்பிறகு நடைபெற்ற ஒரு போரில் அந்த கிராமவாசியும் கலந்து கொண்டு இறந்து போனார். அவர் சைகை செய்த இடத்தில் அம்பு பட்டு அவர் இறந்த நிலையில் அண்ணலாரிடம் தூக்கி வரப்பட்டார்.


அவரைக் கண்ட அண்ணலார், ( صَدَقَ اللَّهَ فَصَدَقَهُ ) "அவர் அல்லாஹ்வை நம்பினார். அல்லாஹ்வும் அவரை உண்மைப்படுத்தினான்" என்று கூறினார்கள். பின்னர் அண்ணலார் அம்மனிதருக்கு தமது போர்வையை சவ ஆடையாக அணிவித்தார்கள்.        நூல்:- நசாயீ-1927


உமர் (ரலி) அவர்கள் ( اَللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ، وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) "இறைவா! உன் தூதருடைய ஊரில் (அதாவது மதீனா மாநகரில்) உயிர்த்தியாகம் செய்யும் வாய்ப்பை எனக்கு அளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.   நூல்:- புகாரீ-1890


அன்னை ஹஃபசா (ரலி) அவர்கள் கூறியதாவது. என் தந்தை உமர் (ரலி) அவர்கள் "யா அல்லாஹ்!  உன்னுடைய பாதையிலேயே நான் கொல்லப்பட வேண்டும்; உன்னுடைய இறைத்தூதரின் புனித நகரிலேயே (மதீனாவில்) மரணமாகும் பாக்கியம் எனக்குக் கிடைக்கப் பெற வேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள்.  அப்போது நான், ( وَاَنَّی یَکُونُ هَذَا؟ ) "அது எவ்வாறு (இரண்டும் ஒரே இடத்தில்) சாத்தியமாகும்?" என்று கேட்டேன். அதற்கவர்கள், ( یَأتِی بِهِ اللّٰهُ اِذَا شَاءَ ) "அல்லாஹ் நாடினால் அதையும் செய்து காட்டுவான்" என்று கூறினார்கள்.        நூல்:- பத்ஹுல் பாரீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-1, பக்கம்-645


26 துல்ஹஜ் ஹிஜ்ரி 23 (கி.பி. 644) அன்று மஸ்ஜிதுந் நபவியில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் பஜ்ரு தொழ வைப்பதற்கு தக்பீர் கட்டியவுடன் பைரோஸ் என்ற பாரசீக அடிமை  உமர் (ரலி) அவர்கள் மீது பாய்ந்து குறுவாளால் ஆறு இடங்களில் குத்தினான். அதன் மூலமாக வீர மரணமடைந்தார்கள்.         நூல்:-அல்ஃபாரூக்   


உமர் (ரலி) அவர்கள் பிரார்த்தித்ததுப் போன்று  மதீனாவில் இருந்து கொண்டே அன்னார் உயிர்த்தியாகியாக ஆனார்கள்.


ஆகவே, நம் அனைவருக்கும் அல்லாஹுதஆலா அவன் பொருந்திக்கொண்ட அழகிய மரணத்தைத் தருவானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

1 comment:

கவனக்குறைவு

  கவனக்குறைவு   فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (இந்தத்) தொழுகையாளிகளுக்கு கேடு தான். அவர்கள் தமது தொ...