அன்னை தரும் அமிர்தம்
وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ
முழுமையாகப் பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வர்களுக்காகத் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டாண்டுகள் முழுமையாகப் பாலூட்ட வேண்டும். திருக்குர்ஆன்:- 2:233
ஆகஸ்ட் 1- ஆம் தேதி உலக தாய்ப்பால் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப் படுகிறது.
குழந்தை உணவு உட்கொள்ளும் வரை தாய்ப்பால் அருந்துவது குழந்தையின் பிறப்புரிமை ஆகும். தாய்க்கும் - சேய்க்கும் நலம் தருவதாக தாய்ப்பால் விளங்குகிறது. மேலும், தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களான புரதம், கொழுப்பு, சர்க்கரை, வைட்டமின்கள், தாது உப்புகள், குறிப்பாக பாஸ்பரஸ் மற்றும் நோய் எதிர்ப்பு அம்சங்களும் அடங்கியுள்ளன.
தாயின் பாலுடன், தாயின் பாசமும் - உணர்வுகளும் சேர்ந்து வழங்கப் படுகின்றன. தாய்ப்பாலின் தரத்தை செயற்கை பால் மற்றும் உணவுகளால் இன்றுவரை எட்டமுடியவில்லை. உலகில் குழந்தைக்கு தாய்ப்பாலைவிட சிறந்த உணவு இல்லை. அது முற்றிலும் கிருமி நீக்கம் செய்யப்பட்டது. தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதில்லை. ஆஸ்துமா, நிமோனியா, இளம்பிள்ளை வாதம் போன்றவை ஏற்படுவது மிகக் குறைவு.
மேலும், குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது மூலம், தாயின் உடல்நலம் இளமையாக வனப்புடன் இருப்பதற்கு உதவும் என்றும் தாய்க்கு புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாகவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மிக அவசியம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த பிறகு, அது பருகும் ஒவ்வொரு மிடர் பாலுக்கும்கூட அவளுக்கு இறைவனிடம் நற்கூலி உண்டு. அறிவிப்பாளர்:- ஹஸன் பின் சுஃப்யான் (ரலி) நூல்:- தப்ரானீ
ஃபிர்அவ்ன் ஆண் குழந்தைகளை கொலை செய்து கொண்டிருந்த காலத்தில் நபி மூசா (அலை) அவர்கள்
பிறந்தார்கள். அவரது அன்னை சில நாட்கள் மட்டுமே தன்னுடைய குழந்தை மூசாவுக்கு பாலூட்டினார். பிறகு, தன்னிடமுள்ள ஆண் குழந்தையை, ஃபிர்அவ்ன் அறிந்தால்
கொலை செய்து விடுவானோ என்று அஞ்சி ஒரு மரப்பெட்டி செய்து, அதில் அந்த பால்குடி குழந்தையை வைத்து நைல் நதியில் போட்டு விட்டார். நதியில் மிதந்து
வந்த அந்த மரப்பெட்டியை ஃபிர்அவ்னின் மனைவி எடுத்து பார்த்தபோது அதில் அழகான குழந்தையைக்
கண்டு மகிழ்ச்சி அடைந்து, அதை தானே வளர்க்க எண்ணினார்.
அதற்கு தனது கணவனின் (அதாவது ஃபிர்அவ்னின்) அனுமதியும் கிடைத்தது. அந்த பச்சிளம்
குழந்தைக்குப் பாலூட்ட பல செவிலித்தாய்கள் வந்தும் பலனில்லை. அவர்களிடம் அந்த குழந்தை
பால் அருந்த மறுத்துவிட்டது. இறுதியாக அந்த குழந்தையின் தாயே செவிலித்தாயாக வந்த போது, அவரிடம் தான் அந்த குழந்தை பால் அருந்தியது. இதைப்பற்றி திருக்குர்ஆன் (அத்தியாயம்
அல்கஸஸ் 7 முதல் 13 ஆகிய வசனங்கள்) விவரிக்கிறது.
ஃகாமிதிய்யா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,
"நாயகமே! நான் விபச்சாரம் செய்து
அதன்மூலம் கர்ப்பமுற்றுள்ளேன். எனவே, அதற்குரிய தண்டனையை நிறைவேற்றி என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கூறினாள்.
அண்ணலார் அப்பெண்ணை திருப்பியனுப்பி விட்டார்கள்.
அவள் மீண்டும் வந்து அதேபோன்று முறையிட்டாள். அண்ணலார், ( إِمَّا لاَ فَاذْهَبِي حَتَّى تَلِدِي ) "நீ சென்று குழந்தை பெற்றெடு (பிறகு திரும்பி வா!)" என்று கூறினார்கள். அவள் குழந்தை பெற்றெடுத்த பின் அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து மீண்டும் அதேபோன்று முறையிட்டாள். அண்ணலார், ( اِذْهَبِي فَأَرْضِعِيهِ حَتَّى تَفْطِمِيهِ ) "நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்த பின் திரும்பி வா!" என்றார்கள். அப்பெண் பால்குடி மறக்கடிக்கப்பட்ட பிறகு அந்த குழந்தையின் கையில் ஒரு ரொட்டி துண்டை கொடுத்து அந்த குழந்தையை தூக்கி கொண்டு வந்து, நாயகமே! குழந்தைக்கு பால்குடி மறக்கடித்துவிட்டேன். இப்போது இக்குழந்தை உணவு உட்கொள்கிறது என்று கூறினாள்.
அப்போது அண்ணலார், அவளுக்கு கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அறிவிப்பாளர்:- புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3500
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு பெண் தன் குழந்தைக்கு பாலூட்டும்
நாட்களில், அவளுக்கு அறப்போரில் கலந்து கொண்ட நன்மைகள் கொடுக்கப்படும். அவள், பால்குடி காலத்தில் இறந்து போனால், அவள் (ஷஹீத் எனும்)
உயிர் தியாகிகளின் பட்டியலில் சேர்க்கப்படுவாள்.
கருணையாளனின் கட்டளை
(தாய் தந்தை) இருவரும்
ஆலோசித்து,
மனம் விரும்பி (ஈராண்டுகள்
முடிவதற்கு முன்பே) பாலூட்டுவதை நிறுத்த விரும்பினால், இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. திருக்குர்ஆன்:-
2:233
(ஏதேனும் காரணத்தால்
குழந்தைக்கு) இரண்டு ஆண்டுகளுக்குள் பால்குடியை நிறுத்த விரும்பினால் தாய் தந்தை இருவரும்
கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடாது என அறிய முடிகிறது. குழந்தையின்
நலனை பேணுவதற்காகவும் ஈராண்டுகள் பாலூட்ட வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளையை கடைபிடிக்க
வேண்டும் என்ற அடிப்படையிலும் இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது.
இது அல்லாஹ் தன் அடியார்கள் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாகும் குழந்தையை நல்ல
முறையில் வளர்ப்பதற்காகவே பெற்றோருக்கு அல்லாஹ் இவ்வாறு கட்டுப்பாடு விதித்துள்ளான்.
பெற்றோரின் நன்மைக்காகவும் குழந்தையின் நன்மைக்காகவும் பெற்றோருக்கு அவன் வழிகாட்டியுள்ளான்.
நூல்:- தஃப்ஸீர் இப்னு கஸீர்
ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் தம் மனைவியை விவாகரத்து செய்த பின்னர், அவள் மூலம் பிறந்த அவனுடைய குழந்தைக்கு அவள் பாலூட்டினால் அவளுக்குரிய உணவையும் உடையையும் நல்ல முறையில் அவன் கொடுத்துவிடவேண்டும். நூல் தஃப்சீர் இப்னு கஸீர் அல்பகரா வசனம்-233
விவாகரத்தின் போது பால்குடி குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையின் பால்குடி காலம் வரை தாய் தான் பராமரிப்பாள். அதன் பிறகு, அவள் விரும்பினால் தந்தையிடம் ஒப்படைக்கலாம். நூல் தஃப்சீர் இப்னு கஸீர் அல்பக்ரா வசனம்-233
மண விலக்கின் மூலமோ இறப்பின் மூலம் தாயின் பராமரிப்பு குழந்தைகளுக்குக் கிடைக்காவிட்டால், பால் புகட்டும் பொறுப்பு தந்தையை சாரும். அவன் செவிலித்தாயை நியமித்து பால் புகட்ட செய்யவேண்டும். செவிலித்தாயின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதும் அவனின் பொறுப்பாகும். பால் புகட்டும் காலம் இரண்டு ஆண்டுகள் அதன் பின் குழந்தை உணவு உட்கொள்ளும் தகுதியை அடைந்து விடும்.
பேணவேண்டிய முறை
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் ஏழு வயதில் முழு குர்ஆனையும் மனனம் செய்துவிட்டார்கள்.
பத்து வயதில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் எழுதிய முஅத்தா என்ற நபிமொழி நூல் முழுவதையும்
மனனம் செய்து விட்டார்கள். பதிமூன்று வயதில் மக்காவின் மிகப்பெரும் சட்ட மேதையாக திகழ்ந்தார்கள்.
அவர்களின் அசாதாரணமான மனன திறமைக்கு காரணத்தை அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அன்னார், "நான் குழந்தையாக இருந்தபோது, என் தாய் எனக்கு ஒருநாள்கூட (அங்கத் தூய்மை எனும்) உளூ இல்லாமல் பாலூட்டியதில்லை.
இதுவே காரணமாகும்" என்று பதிலளித்தார்கள்.
இறைநேசச் செல்வர் ஹாஜா முயீனுத்தீன் (ரஹ்) அவர்களின் வாழ்வில் ஒரே ஒரு பயணத்தில் மட்டும் தொள்ளாயிரம் பேர் அன்னாரின் கரத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அன்னார், அந்த மகிழ்ச்சியான செய்தியை தனது தாயாரிடம் தெரிவித்தார்கள். அந்த தாயார், "மகனே! நீ இந்த அளவுக்கு உயர்வதற்குக் காரணம் நீ குழந்தையாக இருக்கின்ற போது ஒரு நாள் கூட உனக்கு (உளூ எனும்) அங்கத் தூய்மையின்றி நான் பாலூட்டியதே இல்லை" என்று கூறினார்கள். நூல்:- கவாதீனே இஸ்லாம் பக்கம்-36
பாலூட்டும் தாய் வியர்வை நாற்றம் இல்லாதவாறு மார்பகத்தை கழுவி கொண்டு கிப்லா பக்கம் திரும்பி அமர்ந்தவாறு பிஸ்மில்லாஹ் சொல்லி குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். பாலூட்டும் போது திருக்குர்ஆனின் ஏதேனும் அத்தியாயங்களை ஓதியவாறு அல்லது திக்ரு தஸ்பீஹ் ஓதியவாறு இறைவனின் நினைப்போடு பாலூட்டும் போது, அந்த குழந்தையின் சிந்தனையில் இறை நினைவு நிலைத்து விடும்.
உணர்ச்சிவசப்பட்டு கோபமான நிலையில் அல்லது பதட்டமடைந்த நிலையில் பரபரப்புடன் பாலூட்டுவதைத் தவிர்க்க வேண்டும்
ஆண்கள் எதிரில், நின்ற நிலையில், பொதுமக்கள் கூடியிருக்கும் இடங்களில், பெண்களாகவே இருந்தாலும் அவர்கள் கூடி அரட்டை அடித்துக்கொண்டு இருப்பின் அவ்விடங்களில் பாலூட்டுவதை தவிர்க்க வேண்டும். பாலூட்ட தனிமையே சிறந்தது.
தாய் குழந்தைக்கு பாலூட்டி கொண்டிருக்கும்போது இடை இடையே மெதுவாக "அல்லாஹும்ம
லக்கல் ஹம்து வலக்கஷ் ஷுக்ர்" (இறைவா! புகழ் மற்றும் நன்றி அனைத்தும் உனக்கே உரியது)
என்று கூறிவந்து முடிந்தவுடன் மெல்லிய சப்தத்துடன் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூற வேண்டும்.
தாய் படுத்துக்கொண்டே குழந்தைக்கு பாலூட்டுவது நல்லதல்ல. குழந்தையை மடியில் அமர
வைத்து அணைத்துக்கொண்டே பாலூட்ட வேண்டும். எடுத்த எடுப்பில் குழந்தைக்கு நன்றாக சுவைக்கத்
தெரியாது. தாய் பொறுமையுடன் வழிகாட்ட வேண்டும். ஆரம்பத்தில் ஒரே சமயத்தில் மூச்சை விட்டுக்
கொண்டும் பாலையும் விழுங்க நேரிடுவதால் திண்டாடும். இந்த நேரத்தில் அன்புடன் அரவணைத்து
தாய் நிலைமைக்கு தக்க நடக்க வேண்டும். குழந்தைக்கு புரையேறினால் பாலைக் கக்கிவிடும்.
குழந்தையை நிமிர்த்தி லேசாக உச்சந் தலையில் தட்டினால் புரையேறுதல் நீங்கிவிடும். மூச்சுத்
திணறி குழந்தை அழுதால் அதன் மார்பை சிறிது நேரம் தடவிக் கொடுத்தால் நிம்மதியடையும்.
அத்துடன் சில குழந்தைகள் தூங்கி விடும்.
குறிப்பாக, பாலுடன் கூடிய காற்றையும் சின்னஞ்சிறு குழந்தை உட்கொண்டு விடும். ஆகவே
பாதிப் பால் குடித்தவுடனும் இறுதியிலும் ஒரு முறை குழந்தையை எடுத்து தோளின் மீது சாத்திக்
கொண்டு முதுகை மெல்ல தட்டி விட வேண்டும். இவ்வாறு சிறிது நேரம் செய்வது மிகவும் இன்றியமையாதது.
இதனால் உண்டவுடன் உள்ளே சென்ற காற்று எளிதில் வாய் மூலமாக வெளிவந்துவிடும். இல்லையேல்
இக்காற்று வயிற்றுக்குள் சென்று தொந்தரவு அளிக்கலாம். குழந்தையின் விக்கலுக்குப் பெரும்பாலும்
காற்று உள்ளே செல்வதே காரணமாகும். ஆகாரம் உண்டவுடனே படுக்க வைத்தால் குழந்தை அதைக்
கக்கிவிடும். ஆகவே மெல்லிய துணியால் அதை துடைப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
பாலூட்டும் தாய் தான் கருவுற்ற காலத்தில் உட்கொண்டது போல் நல்ல சத்துள்ள உணவை குறிப்பாக பால், கீரை, பச்சை காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை உண்ண வேண்டும். அமைதியான மனநிலையையும் பயில வேண்டும்.
செவிலித் தாய்
(பாலூட்டுவது குறித்து) நல்ல முறையில் உங்களுக்கிடையே ஆலோசனை செய்யுங்கள். இதில்
உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால், அக்குழந்தைக்கு மற்றவளைக்
கொண்டு பாலூட்டட்டும். திருக்குர்ஆன்:- 65:6
ஸியாத் அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அறிவு குன்றிய பெண்களின் பாலை (பிள்ளைகளுக்கு ) ஊட்டுவதை தடுத்தார்கள். நூல்:- அபூதாவூத், புலூகுல் மராம்-1168
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اَلرَّضَاعُ يُغَيِّرُ الطَّبَاعَ ) பால் புகட்டுபவள் மூலம்
(குழந்தையின்) பிறவிக் குணத்தையும் கூட மாற்றிவிட முடியும்.
பிள்ளை பெற்றத் தாயிடம் குழந்தைக்குத் தேவையான பால் இல்லையென்றால் அல்லது தாய்
இறந்துவிட்டால் செவிலித்தாயை தேடுவது அரபு மரபு. இது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டவையே.
அவ்வாறு செவிலித்தாயை தேடும்போது அவரது குணநலன்கள் குடும்பம் கோத்திரம் மூதாதையர்கள்
வாழும் சூழல் உணவு முறைகள் என அனைத்தையும் பார்த்தப்பிறகு தான் பிள்ளைகளுக்கு பாலூட்ட
தேர்வு செய்வார்கள். சந்ததிகள் தங்களது கண்ணியத்தின் அடையாளங்கள் என்ற உயர்வான பெருமிதம்
அவர்களிடம் இருந்தது.
தங்கள் வயிற்றில் பிறக்காதப் பிள்ளைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதை பெண்மையின் பெருமைக்குரிய அடையாளமாக அன்றய அரபு பெண்கள் கருதினர். இதன் மூலம் புதிய குடும்பங்களுடன் இரத்த உறவுகள் உண்டாகி அது சமூக அந்தஸ்தையும் பாதுகாப்பையும் வழங்குவதாக கருதினர்.
அன்றைய அரபு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், அறிவாற்றலிலும், குடும்ப ஒருங்கிணைப்பிலும்,
சமூக வலிமையிலும், பெண்களின் ஆரோக்கியத்திலும் தாய்ப்பால் வழங்குதல் ஆதாரமான மய்ய நிகழ்வாக
கருதப்பட்டது.
அந்த வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குழந்தையாக இருந்த போது, அன்னை ஆமினா, செவிலித்தாய் ஹலீமா (ரலி) அவர்களிடம் குழந்தையைக்
கொடுத்துப் பாலூட்டி வளர்க்கச் சொன்னார்கள்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ إِبْرَاهِيمَ ابْنِي وَإِنَّهُ مَاتَ فِي الثَّدْيِ وَإِنَّ لَهُ لَظِئْرَيْنِ تُكَمِّلاَنِ رَضَاعَهُ فِي الْجَنَّةِ ) என் மகன் (இப்ராஹீம்) பால்குடி பருவத்திலேயே இறந்து விட்டார். அவருக்கு அவரது பால்குடித் தவணையை முழுமையாக்கும் செவிலித் தாய்மார்கள் இருவர் சொர்க்கத்தில் இருக்கிறார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4635, முஸ்னது அஹ்மது
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புதல்வர் இப்ராஹீம் (ரலி) அவர்கள் பிறந்து 16 அல்லது
17 மாதங்களில் இறந்து விட்டார். பாலூட்டும் பருவமான இரண்டாண்டுகளில் மீதியுள்ள காலத்துக்குச்
சொர்க்கத்தில் அவருக்கு இரு செவிலித்தாய்கள் பால் ஊட்டுவார்கள். நூல்:- அல்மின்ஹாஜ்
குழந்தைக்கு பால் புகட்டி அதைச் செழுமையாக்கி வைக்கும் செவிலித்தாய் ஏறக்குறைய தாயின் தகுதியை அடைகிறாள். செவிலித்தாய் மூலம் ஏற்படும் பந்தம் அவளோடு முற்றுப் பெறுவதில்லை. பெற்ற தாயின் மூலம் ஏற்படும் அழுத்தமான பந்தத்தை போல செவிலித்தாய் மூலமும் ஏற்படும்
செவிலித் தாயும் பெற்ற தாயைப் போன்று ஒரு தாய் தான். பெற்ற தாய் வயிற்றில் சுமக்கிறாள்.
செவிலித் தாய் மடியில் சுமக்கிறாள். ஆகவே, ஒரு குழந்தை ஒரு செவிலித் தாயிடம் பால் அருந்தினால் சொந்தத் தாயின் சில தகுதிகளை
அவள் பெறுவாள்.
அமுதூட்டும் செவிலித்தாய் அந்தக் குழந்தைக்கு தாயாகவும், அவளுடைய கணவர் இக்குழந்தைக்கு தந்தையாகவும், அவளுடைய பிள்ளைகள் இக்குழந்தைக்கும் சகோதர சகோதரிகளாகவும், மேலும் அக்குழந்தை பால் அருந்தும்போது செவிலித்தாயிடம் பால் அருந்தும் மற்றவர்களின் குழந்தைகள் இக்குழந்தைக்கு சகோதர சகோதரிகளாகவும் கருதப்படுவர். எனவே, அவர்கள் இடையே திருமண உறவு கூடாது; பர்தா முறை அவசியப்படாது. இதனால்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( يَحْرُمُ مِنَ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنَ الْوِلاَدَةِ ) "பிறப்பால் ஏற்படும் உறவு முறைகள், பால் குடியாலும் ஏற்படும்" என கூறினார்கள். (அபூதாவூத்-1759) மொத்தத்தில் செவிலித்தாய் மூலம் ஏற்படும் பந்தம் தூய்மையும் கண்ணியமும் மிக்கது.
முதலாளித்துவ கல்வி முறையும் இயந்திரத்தனமான சடவாத வாழ்க்கை முறையும் சந்ததி உருவாக்கத்தில்
நாம் பின்பற்றி வந்த உயர்ந்த பண்புகளை சீரழித்து விட்டது. இன்று பிள்ளைகளுக்கு தாய்ப்பாலும்
முறையாக வழங்குவது கிடையாது.செவிலித்தாய் வழக்கம் மறந்தேவிட்டது. பாக்கெட்டில் கிடைக்கும்
பாலுக்கு பசுமாட்டுப்பால் என்று பெயர் மட்டும் உள்ளது. பசுமாடு என்ற பெயரில் ஒரு இயந்திரத்தில்
(ஜெர்சி) பாலை கறந்து அதில் பல கலப்படங்களை செய்து சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.அதையே
நாமும் குடித்து பிள்ளைகளுக்கும் வழங்கி நாமும் இயந்திரங்களாக மாறி பிள்ளைகளையும் மாற்றி
அதில் பெருமிதம் அடைந்து முதலாளித்துவத்தின் அடிமைகளாக உலாவந்து கொண்டிருக்கின்றோம்.
நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தவர்களை கொரோனா போன்ற தொற்றுநோய்கள் அவ்வளவாக தாக்குவதில்லை என்று மருத்துவர்கள் கூறும்போது
தான் அனைவரின் வாயிலிருந்தும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை தாய்ப்பால் முறையாக கொடுக்கப்படவில்லை
பாலில் கலப்படங்கள் மலிந்துவிட்டன என்று பேசுகிறோம்.
அரசு உதவித் தொகை
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஆட்சிகாலத்தில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை; பால் குடியை மறக்கும் நாளிலிருந்து கொடுக்கப்படத் தொடங்கியது. பிறகு அந்நிலை மாற்றப்பட்டது.
குழந்தை பிறந்த நாளிலிருந்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நூல்:- அல்ஃபாரூக்
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் மக்களின் நிலை அறிய ஒவ்வொரு இரவிலும் நகரை உலா வருவார்கள். அப்படி ஒரு முறை நகரை உலா வரும்போது ஓரிடத்தில் அழும் ஓசை கேட்டது. அங்கே சென்று பார்த்தால் பச்சிளம் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. அதை மடியில் வைத்துக் கொண்டு அதனுடைய தாய் சமாதானம் செய்து கொண்டிருந்தாள். ஜனாதிபதி அவர்கள், "குழந்தையைச் சமாதானப்படுத்து! அழ வைக்காதே!" என்று தாயிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டார்கள்.
ஜனாதிபதி அவர்கள், சற்று நேரம் கழித்து மறுபடியும் அதே வழியில் வரும்போது மீண்டும் அழுகின்ற சத்தம் கேட்டது. அந்தக் குழந்தையும் அழுகையை நிறுத்தவில்லை. ஜனாதிபதி அவர்கள், "கொஞ்சம் கூட இரக்கமே இல்லாத தாயாக இருக்கிறாயே!"என்று சற்று கண்டிப்போடு கூறினார்கள் அதற்கு அந்த தாய், "உண்மை நிலை உங்களுக்கு தெரியவில்லை. என்ன நடக்கிறது என்று தெரியாமல் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். பால் குடியை நிறுத்திவிட்ட குழந்தைகளுக்குத்தான் அரசின் உதவித்தொகை என்று ஜனாதிபதி அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஆகையால் நான் என்னுடைய குழந்தைக்கு பால்குடி மறக்கடித்துக்கொண்டிருக்கிறேன். குழந்தை அதைத் தாங்காமல் பாலுக்காக அழுகிறது" என்றாள்.
அப்போது ஜனாதிபதி அவர்களின் மனம் நெகிழ்ந்துவிட்டது. உமரே! நீ எத்தனை பச்சிளம் குழந்தைகளின் இரத்தத்தை உறிஞ்சியிருக்கிறாயோ? என்று தனக்குத்தானே கூறிக் கொண்டார்கள்.
ஜனாதிபதி அவர்கள் அன்றைய தினமே, "குழந்தை பிறக்கின்ற தேதியிலிருந்து அதற்கான உதவித் தொகை வழங்கப்படும்" என்று அரசாங்க அறிவிப்பை வெளியிட்டார்கள். நூல்:- அல்ஃபாரூக்
தண்டனை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு நாள் நான் உறங்கிக் கொண்டிருந்தபோது
என்னிடம் இருவர் (வானவர்கள்) வந்து என்னை கரடு
முரடான ஒரு மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பாம்புகள் சில பெண்களின் மார்பகங்களை
கொட்டிக் கொண்டிருந்தன. நான் ( مَا
بَالُ هَؤُلَاءِ؟ ) “இவர்களின் நிலை என்ன?” என்று கேட்டேன். அவர்கள், ( هَؤُلَاءِ اللَّاتِي يَمْنَعْنَ أَوْلَادَهُنَّ أَلْبَانَهُنَّ ) "இவர்கள்தான் தம் குழந்தைகளுக்கு (மார்பகங்களில்)
பால் கொடுக்க மறுத்தவர்கள்" என்று கூறினர். அறிவிப்பாளர்:- அபூ உமாமா அல்பாஹிலீ
(ரலி) அவர்கள் நூல்:- இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான், ஹாகிம், அல்பிதாயா வந்நிஹாயா
சில பெண்கள் தங்களுடைய அழகு பாதிக்கப்படும் என்பதற்காக தங்களுடைய குழந்தைகளுக்கு
தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்து விடுகின்றனர். தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு சர்க்கரை
நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தைச்
சேர்ந்த மருந்தியல் மற்றும் நோய்கள் பேராசிரியர் ரியர் எலீனர் பிம்லா ஸ்வர்ஸ் தலைமையிலான
குழுவினர் செய்த மருத்துவ ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவக் குணங்கள்
பெண்ணின் மார்பில் சுரக்கும் தாய் பாலை முதலில் ஆய்வு செய்தவர் 1865ம் ஆண்டு லிசா மார்ட்டின்.
கடைசியாக ஆய்வு செய்யப்பட்டது ஆஸ்திரேலியாவில் பிரிஸ்டல் யூனிவர்சிட்டியில் டாக்டர் லிசா மார்ட்டின் குழு.
திருக்குரானில் எதற்காக ஒரு குழந்தை தாயின் மார்பில் சுரக்கும் பாலை 2 ஆண்டுகள் குடிக்க வேண்டும் என்று சொல்கிறது என்பதை ஆய்வு செய்து ஒரு தாயின் மார்பில் இருந்து வரும் பாலில் இம்புனோ குளோபுனின் என்ற ஒரு திரவியம் கலந்து வருவதை ஆராய்ந்து அதிர்ந்து போகின்றனர்.
இந்த இம்புனோ குளோபுனின் திரவியத்தை ஆய்வு செய்து இதை ஒரு குழைந்தை குடித்தால் அதன் மூளை வளர்ச்சி தெளிவாகவும், நரம்பு மண்டலங்கள் வலுவாகவும், நோய்களை எதிர்கொள்ளும் ஆற்றல் இந்த திரவியத்துக்கு உள்ளது என்கின்றனர் ஆய்வு செய்தவர்கள். மேலும் குழந்தைகளுக்கு நவீன உலகில் தயாரிக்க பட்ட குழந்தை பால் பவுடர்களை ஆய்வு செய்கின்றனர்.
எல்லா வகையான விட்டமின்கள் இருந்த போதிலும் ஒரு தாயின் மார்பில் இருந்து வரும்
அந்த திரவியத்தின் வீரியம் இந்த பவுடர் பாலில் இல்லை.
திருக்குர்ஆன் கூறுவது போல் தாய் பாலூட்டும் இரண்டு வருடங்களில் தான் குழந்தையின் மூளை செல்கள் அதிக வேகமாக வளர்ச்சி அடைகின்றன என்பதை இன்று விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கின்றனர். மனிதனின் வாழ்நாளில் இதைப்போல் எப்போதுமே மூளையின் செல்களும் நியூரான்களும் வளர்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்ப்பாலில் உள்ள ஆர்கிடோனிக் அமிலம் (Arachidonic Acid) AA. மற்றும் (Docosahexaenic Acid) DHA. டூகோசாஹெக்சானிக் அமிலம் (செயற்கை பாலில் இல்லாதவை) மிகவும் முக்கியமாக குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுவதாக கண்டறிப்பட்டுள்ளது.
குழந்தைக்குத் தாய் அன்பை மட்டுமல்ல, தாய்ப்பாலின் மூலம் குழந்தையின் குணம் பண்பையும் மாற்றி அமைக்கிறாள். மனவளர்ச்சி பருவத்தில் குழந்தை பிறந்த முதல் ஆண்டு மிகவும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது. இந்த வயதில் குழந்தைக்கு இன்பம் வழங்கும் உறுப்புகளாக விளங்குவது வாயும் - உதடுகளும் தான் என்கிறார் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் பிராய்ட் (Dr.Sigmund Freud)
இந்த வயதில் தாய்ப்பால் அருந்துவதிலும் தாயின் அணைப்பிலும் குழந்தை மிகுந்த இன்ப உணர்வை அடைகிறது. இதன் காரணமாக குழந்தைக்கு தன்னம்பிக்கை பிறக்கிறது. தாயைப் பிரிந்த குழந்தைகள், தாயின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் தன்னம்பிக்கை இல்லாதவர்களாகவும் தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகவும் குடி மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள் என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மனிதனை கோடிக்கணக்கான வைரஸ் பாக்டீரியா கிருமிகளிடமிருந்து காப்பது மனித உடலுக்கு இறைவன் வழங்கியுள்ள பாதுகாப்பு வளையமாக நோய் எதிர்ப்பு சக்திதான். இந்த நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் மூலமாக மட்டுமே குழந்தைக்கு கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும் போது மனிதன் ஆயுள் முழுவதும் நோயின்றி வாழலாம்.
பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது. குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது.
ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது.
பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.
தாய்ப்பால் குறைவாக உள்ளப் பெண்கள் கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நிறைய சுரக்கும் என்கிறது இயற்கை மருத்துவம்.
திட உணவு உண்ணும் சக்தியை குழந்தை அடையும் வரைதான் அதன் பால்குடிக் காலமாகும். பொதுவாக இரண்டு ஆண்டுகளில் குழந்தைக்கு திட உணவு உண்ணும் சக்தி கிடைத்து விடுகிறது. எனவே தான் திருக்குர்ஆன் "பாலூட்டுவதை பூர்த்தி செய்ய விரும்பும் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரு ஆண்டுகள் முழுமையடையும் வரை இவ்வாறு பாலூட்டுவார்கள்" என்று (2:223) எடுத்துரைக்கிறது.
அல்லாமா இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தமது திருக்குர்ஆன் விரிவுரையில் கூறுகிறார்கள்.
இரண்டு வயதிற்குப் பின்னர் பாலூட்டுவதால் குழந்தைக்கு உடல் ரீதியான அல்லது மனரீதியான
பாதிப்பு ஏற்படலாம்.
நாம் வாழ்வில் மார்க்க சட்டங்கள் அறிந்து செயல்பட அல்லாஹ் அருள்பாலிப்பானாக!
ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.
No comments:
Post a Comment