மூத்தோர் முதியோர்
وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا
அளவற்ற அருளாளனின் அடியார்கள், பூமியில் (அடக்கமாகவும்) பணிவாகவும் நடப்பார்கள். திருக்குர்ஆன்:- 25:63
அக்டோபர்-1, முதியோர் தினம்.
வயதில் மூத்தவருக்கு மரியாதை செய்வது நற்பண்புகளில் ஒன்றாகும். மூத்தவர்களை நாம் மதிக்கும்போது நம்மிடம் பணிவும் கனிவும் உண்டாகி, ஆணவம் தற்பெருமை போன்ற தீய குணங்கள் ஏற்படாமல் பாதுகாப்புப் பெறலாம். தீய குணமுடையவர்கள் தான் மூத்தவர்களை மதிப்பதில்லை.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا لِسِنِّهِ إِلاَّ قَيَّضَ اللَّهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّهِ ) ஓர் இளைஞர் ஒரு முதியவரை அவரது வயதுக்காகக் கண்ணியப்படுத்தினால், அந்த இளைஞரின் முதுமையில் அவரைக் கண்ணியப்படுத்துகின்ற ஒருவரை அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1945
ஒருவர் மூத்தவர்களைக் கண்ணியப்படுத்தும் பண்பாளராக இருந்தால், அவருக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டு, பிறரால் கண்ணியப்படுத்தப்படுவார் என்கிறது இந்த நபிமொழி.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( يَا أَنَسُ ارْحَمِ الصَّغِيرَ، ووقِّر الْكَبِيرَ تَكُنْ مِنْ رُفَقَائِي
يَوْمَ الْقِيَامَةِ ) "அனஸே! சிறுவர் மீது
இரக்கம் காட்டுவீராக. பெரியோருக்கு மரியாதை செய்வீராக. மறுமை நாளில் என் நெருங்கிய
நண்பர்களில் ஒருவராக நீர் ஆவீர்" என்று அறிவுறுத்தினார்கள். நூல்:- தப்ரானீ,
முஸ்னது அல்பஸ்ஸார்,
முஸ்னது அபீயஃலா, தஃப்சீர் இப்னுகஸீர் அந்நூர் வசனம்-61
அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( يُسَلِّمُ الصَّغِيْرُ عَلَي الْكَبِيْرِ ) "சிறியவர் பெரியவருக்கு ஸலாம் கூறட்டும்" எனக் கூறினார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6231
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ مِنْ اُمَّتِيْ مَنْ لَمْ يُجِلَّ كَبِيْرَنَا ) நம்மில் பெரியவர்களை கண்ணியப்படுத்தாதவர் என் சமுதாயத்தைச் சார்ந்தவரல்லர். அறிவிப்பாளர்:- உபாதத் பின் ஸாமித் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மது, தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்
முற்படுத்த வேண்டும்
மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நானும் என் நண்பர் ஒருவரும் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றோம். (நாங்கள் அண்ணலாரிடம் சில நாட்கள் தங்கியிருந்து விட்டு) அண்ணலாரிடமிருந்து திரும்பிச் செல்ல விரும்பியபோது எங்களிடம் அண்ணலார், ( إِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَأَذِّنَا ثُمَّ أَقِيمَا وَلْيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا ) "தொழுகை (நேரம்) வந்து விட்டால் தொழுகை அறிவிப்புச் செய்யுங்கள். பிறகு இகாமத் சொல்லுங்கள். உங்கள் (வயதில்) மூத்தவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்" என்றார்கள். நூல்:- புகாரீ-628, முஸ்லிம்-1195
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் ஒரு குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருப்பதைப் போன்று (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரு மனிதர்கள் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் மற்றவரைவிட (வயதில்) பெரியவராக இருந்தார். நான் அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் அந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது ( كَبِّرْ. فَدَفَعْتُهُ إِلَى الأَكْبَرِ مِنْهُمَا ) "வயதில் மூத்தவரிடம் முதலில் கொடுப்பீராக" என்று எனக்குச் சொல்லப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரியவரிடம் அதைக் கொடுத்து விட்டேன். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-246, முஸ்லிம்-4568
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. முதியவர் ஒருவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களை நாடி வந்தார். அப்போது மக்கள் அவருக்கு வழிவிடுவதில் சுணக்கம் காட்டினர். உடனே அண்ணலார், "நம்முடைய சிறார்களிடம் அன்பு காட்டாதவரும் நம்முடைய பெரியவர்களைக் கண்ணியப்படுத்தாதவரும் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-1842
கைஸ் பின் ஆசிம் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( وَسَوِّدُوا أَكْبَرُكُمْ، فَإِنَّ الْقَوْمَ إِذَا سَوَّدُوا أَكْبَرَهُمْ
خَلَفُوا أَبَاهُمْ ) உங்களில் வயதில் பெரியவரைத் தலைவராக்குங்கள்.
ஏனென்றால், ஒரு கூட்டத்தார் தம்மில் வயது மூத்தவரை தலைவராக்கினால் (நற்செயலில்) தங்களின்
தந்தையின் இடத்தில் நின்று விட்டார்கள் (என்று பொருள்). நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-361
நபி மூசா (அலை) அவர்கள் மத்யன் நகரில் நீண்ட நாட்கள் தங்கி விட்டதால் எகிப்தில்
இருக்கும் தனது உறவினர்களை காண ஆவல் கொண்டார்கள். எனவே, தனது மாமனார் நபி ஷுஐப் (அலை) அவர்களிடம் சென்று, தமக்கு எகிப்து செல்ல அனுமதி தருமாறு கேட்டார்கள். ஷுஐப் (அலை) அவர்கள், "கண் பார்வை இழந்த எனக்கு நீங்கள் துணையாக இருப்பீர்கள்
என நினைத்து நிம்மதியுடன் இருந்தேன். இப்போது நீங்களும் என்னை விட்டு பிரிந்து செல்ல
விரும்புகிறீர்களா? அல்லாஹ்விடம் எனக்கு திரும்பப் பார்வை வரும்படி
நீங்கள் பிரார்த்தியுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
மூசா (அலை) அவர்கள், "தாங்கள் வயதில் என்னை விட மிக மூத்தவர்கள்; நீங்கள் பிரார்த்தியுங்கள். நான் ஆமீன் சொல்கிறேன்" என்றார்கள். ஷுஐப் (அலை)
அவர்கள் பிரார்த்தித்தார்கள். மூஸா (அலை) அவர்கள் "ஆமீன்" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் அருளால் ஷுஐப் (அலை) அவர்களுக்கு
கண்பார்வை மீண்டும் வந்துவிட்டது. ஷுஐப் (அலை) அவர்கள், அளவற்ற மகிழ்ச்சி அடைந்து மூசா (அலை) அவர்களை அப்படியே
கட்டியணைத்து உச்சி முகர்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு தம்முடைய அருமை
மருமகனார் எகிப்து செல்ல அனுமதியும் வழங்கினார்கள். நூல்:- தப்ஸீர் மவாஹிபே அலிய்யா
முந்தக்கூடாது
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும்
முஹய்யிசா பின் மஸ்ஊது (ரலி) அவர்களும் (பேரிச்சம்பழம் கொள்முதல் செய்வதற்காகச் சென்ற
தம் தோழர்களைத் தேடி கைபருக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் இருவரும் பேரிச்சந்தோப்புக்குள்
பிரிந்துவிட்டனர். பின்னர் அப்துல்லாஹ் பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டுகிடந்தார்.
ஆகவே (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்ல் (ரலி) அவர்களும் ஹுவய்யிஸா பின் மஸ்ஊது (ரலி), முஹய்யிசா பின் மஸ்வூத் (ரலி) ஆகியோரும் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கொல்லப்பட்ட தங்கள் நண்பரை குறித்து பேசினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் (பேச்சைத்) தொடங்கினார். அவர் அந்த மூவரில் வயதில் சிறியவராக இருந்தார். எனவே அண்ணலார், ( كَبِّرِ الْكُبْرَ ) "(வயதில்) மூத்தவரை முதலில் பேச விடு" என்றார்கள். நூல்:- புகாரீ-6142
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள், "ஒரு மரம் இருக்கிறது. அது ஒரு முஸ்லிமைப் போன்றது. அந்த மரம் எல்லா நேரங்களிலும் கனி தருகிறது. அதன் இலை உதிர்வதில்லை. (அது எந்த மரம்?) என்று கேட்டார்கள். ( فَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، فَكَرِهْتُ أَنْ أَتَكَلَّمَ وَثَمَّ أَبُو بَكْرٍ وَعُمَرُ ) என் மனத்தில் அது பேரீச்ச மரம்தான் என்று தோன்றியது. ஆயினும், (அதைப் பற்றிப்) பேச நான் விரும்பவில்லை. அங்கு (மூத்தவர்களான) அபூபக்கர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் ஏதும் பேசாமல் இருந்தனர். அவர்களெல்லாம் பேசாமலிருக்கவே, அண்ணலார், ( هِيَ النَّخْلَةُ ) "அது பேரீச்ச மரம்தான்" என்றார்கள்.
நான் என் தந்தை (உமர்-ரலி) அவர்களுடன் வெளியில் வந்தபோது, "தந்தையே! அது பேரீச்ச மரம் தான் என்று என் மனதில் தோன்றியது" என்றேன். அவர்கள், "ஏன் அதை அண்ணலாரிடம் நீ சொல்லவில்லை? நீ அதைச் சொல்லியிருந்தால் இன்ன இன்னதை விட எனக்கு மிகவும் விருப்பமானதாய் இருந்திருக்குமே" என்று சொன்னார்கள். ( مَا مَنَعَنِي إِلاَّ أَنِّي لَمْ أَرَكَ وَلاَ أَبَا بَكْرٍ تَكَلَّمْتُمَا، فَكَرِهْتُ ) தாங்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும் பேசாமல் இருந்ததைக் கண்டதாலேயே நான் (அது குறித்து பேச) விரும்பவில்லை" என்றேன். நூல்:- புகாரீ- 6144
வயதில் இளையவர்களும் முதியவர்களும் இடம்பெற்றுள்ள ஒரு குழுவின் சார்பாக முதலில் முதியவர்களே பேசத் தொடங்க வேண்டும். அவர்களே கேள்வி கேட்க வேண்டும். ஆனால், வயதில் இளையவர் கல்வியறிவில் மற்றவர்களை விடச் சிறந்தவராக இருந்தால் அவருக்கு முன்னுரிமை அளிப்பது தவறாகாது.
சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களது
காலத்தில் சிறுவனாக இருந்தேன். நான் அண்ணலாரிடமிருந்து (பல தகவல்களை) மனனமிட்டு வந்தேன்.
இங்கு என்னை விட வயதில் பெரியவர்கள் இருப்பதே என்னை அவற்றைச் சொல்ல விடாமல் தடுக்கிறது.
நூல்:-முஸ்லிம்-1759
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. உமர் (ரலி) அவர்கள் கத்தியால்
குத்தப்பட்டு உயிருக்கு போராடியபோது அவரை வீட்டுக்கு சுமந்து சென்று அவர்களில் நானும்
ஒருவனாக இருந்தேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம், "என் சகோதரர் மகனே!
என்னைத் தாக்கியவன் யார் என்பதை அறிந்து வா! என்று கூறினார்கள். நானும் சென்று, அதைத் தெரிந்துகொண்டு, அதை அவர்களிடம் கூற வந்தேன். அப்போது (மனிதர்களால்)
வீடு நிரம்பிக் காணப்பட்டது. அவர்களின் பிடரிகளை தாண்டி செல்ல நான் விரும்பவில்லை.
ஏனெனில் நான் வயதில் சிறியவனாக இருந்தேன். எனவே அங்கேயே நான் அமர்ந்துகொண்டேன். நூல்:-
அல்அதபுல் முஃப்ரத்-1143
அருள்வளம் நிறைந்தவர்கள்
அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை எங்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
அபூ பக்கர் (ரலி) அவர்கள்,
உமர் (ரலி) அவர்கள் அபூஉபைதா
பின் ஜர்ராஹ் (ரலி) அவர்கள் மற்றும் சில தோழர்களும் இருந்தனர். அப்போது ஒரு கோப்பையில்
பானம் கொண்டு வரப்பட்டது. அண்ணலார் அதை அபூ உபைதா (ரலி) அவர்களுக்கு பருகக் கொடுத்தார்கள்.
உடனே அபூ உபைதா (ரலி) அவர்கள், "நாயகமே! முதலில் பருக தாங்களே தகுதியானவர்கள்" என்று கூறினார்.
அதற்கு அண்ணலார், "நீர் வாங்கிக் கொள்வீராக" என்று கூறினார்கள். உடனே அபூ உபைதா (ரலி) அவர்களும் அந்தக் கோப்பையை வாங்கிக் கொண்டார். ஆனால் அதை பருகுவதற்கு முன்னர் "நாயகமே! தாங்களே பருகுங்கள்" என்று மீண்டும் கூறினார். அண்ணலார் ( فَمَن لَم يَرحَم صَغِيرَنَا وَيُجِلَّ كَبِيرَنَا فَلَيسَ مِنَّا اِشرَب فَاِنَّ البَرَكَةَ مَعَ اَكَابِرِنَا ) "நீரே பருகுவீராக! நிச்சயமாக (பரக்கத் எனும்) அருள்வளம் நம்மில் பெரியவர்களுடன் இருக்கிறது. எவர் நம்மில் சிறியவர் மீது இரக்கம் காட்டவில்லையோ, நம்மில் பெரியவர்களைக் கண்ணியப்படுத்தவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள். நூல்:- தப்ரானீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-597
குரலை தாழ்த்த வேண்டும்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு அமர இடம் கொடுக்கப்பட்டது.
அப்பாஸ் (ரலி) அவர்கள் அமர்ந்து அண்ணலாரிடம் பேச்சை ஆரம்பித்ததும், அண்ணலார் முற்றிலுமாக தனது குரலை தாழ்த்திக் கொண்டார்கள்.
இதை கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், "அண்ணலாருக்கு திடீரென்று ஏதோ சிரமம் வேதனை ஏற்பட்டு
விட்டது போல, அதனால்தான் அண்ணலாரால்
சரியாகப் பேசமுடியவில்லை, என் மனம் மிகவும்
கவலைப்படுகிறது" என்று உமர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
அண்ணலாரிடம் பேசிக் கொண்டே இருந்த அப்பாஸ் (ரலி) அவர்கள், தனது தேவையை பேசி விட்டு திரும்பிச் சென்றுவிட்டார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், "நாயகமே! இப்போது உங்களுக்கு ஏதும் சிரமம் உண்டானதா? என்று வினவினார்கள். அண்ணலார் "இல்லை" என்றதும், அபூபக்ர் ரலி அவர்கள், "தாங்கள் மிகவும் குரலை தாழ்த்தி கொண்டீர்களே? என்ன காரணம்" என்று மீண்டும் வினவினார்கள். அண்ணலார், ( اِنَّ جِبرِيلَ اَمَرَنِی اِذَا حَضَرَ العَبَّاسُ اَن اَخفِضَ صَوتِی كَمَا اَمَرَكُم اَن تَخفِضُو اَصوَاتَكُم عِندِی ) "எவ்வாறு உங்களையெல்லாம் என் முன்னிலையில் குரலை தாழ்த்திக் கொள்ளுமாறு அல்லாஹ் ஏவினானோ? அதுபோல் அப்பாஸ் (ரலி ) அவர்கள் முன்னிலையில் (எனது) குரலை தாழ்த்திக் கொள்ளுமாறு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னை ஏவினார்கள்" என்று பதிலளித்தார்கள். நூல்:- கன்ஸுல் உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-582
அப்பாஸ் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்)
அவர்களைவிட இரண்டரை வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முடி நரைத்தவர்கள்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நரை முடிகளைப் பிடுங்காதீர்கள். ஏனென்றால், மறுமை நாளில் இது பிரகாசத்திற்கு காரணமாகும். எவர் இஸ்லாமில் இருக்கின்ற நிலையில் வயோதிகமடைகிறாரோ, (ஒரு முஸ்லிமுடைய ஒரு முடி நரைத்து விட்டால்,) அதன் காரணமாக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது. ஒரு பதவி உயர்த்தப்படுகிறது. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னு ஹிப்பான்
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது. மக்கா வெற்றி கொள்ளப்பட்ட தினத்தன்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் நிம்மதியாக பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அபூபக்கர் (ரலி)
அவர்கள் தமது தந்தை அபூ குஹாஃபா அவர்களை அழைத்துக்கொண்டு அண்ணலாரிடம் வந்தார்கள். அப்போது
அபூகுஹாஃபா அவர்களின் தலைமுடியும் தாடியும் ஸஙாமா செடியைப் போன்று வெண்மையாக இருந்தன.
அவர் வருவதைப் பார்த்த அண்ணலார், ( يَا اَبَابَكرٍ اَلَّا تَرَكتَ شَيخَ حَتَّی اَكُون اَنَا الَّذِي اَمشِي اِلَیهِ ) "அபூபக்கரே! இந்த வயது முதிர்ந்த பெரியவரை அவர் இருக்கும் இடத்திலேயே விட்டு வந்திருக்கக் கூடாதா? நானே அவரிடம் போய் இருப்பேனே!" என்று கூறினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள், "நாயகமே! தாங்கள் இவரிடம் வருவதைவிட இவர் தங்களிடம் வருவதுதான் முறையாகும்" என்று கூறினார்கள். பிறகு அண்ணலார், அவரை தனக்கு முன்னால் உட்காரவைத்து அவருடைய நெஞ்சில் கை வைத்து ( يَا اَبَاقُحَافَةَ اَسلِم تَسلَم ) “அபூகுஹாஃபே! இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்” என்று கூறினார்கள். உடனே அபூகுஹாஃபா (ரலி) அவர்கள் ஷஹாதத் கலிமாவை மொழிந்து முஸ்லிமானார். நூல்:- தபகாத் இப்னு சஅத், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-1, பக்கம்-101
ஒருநாள் அலீ (ரலி) அவர்கள் அதிகாலையில் ஃபஜ்ரு தொழுகைக்காக வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு வந்து கொண்டிருந்தார்கள். வழியில் அவர்களுக்கு முன்னே தள்ளாத வயது முதிர்ந்த ஓர் யூதக் கிழவர் மெதுவாக நடந்து கொண்டிருந்தார். பெரியவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டும் என்ற நபி மொழிக்கு இணங்க, அலீ (ரலி) அவர்கள் அவரை முந்திக்கொண்டு கடந்து செல்ல மனமில்லாமல் அவருக்கு பின்னே சென்று கொண்டிருந்தார்கள். இதனால் அலீ (ரலி) அவர்களுக்கு ஃபஜ்ரு தொழுகை ஜமாஅத்துடன் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே, அலீ (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் ஓர் ஓரத்தில் ஃபஜ்ரு தொழுகையைத் தனியாக தொழுதார்கள். பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தோழர்கள் மத்தியில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் சபைக்கு வந்து அமர்ந்தார்கள். அப்போது அண்ணலார், அலீ (ரலி) அவர்களிடம் ஃபஜ்ரு தொழுகைக்கு பிந்தி வந்த காரணத்தை வினவினார்கள். அலீ (ரலி) அவர்கள் நிகழ்ந்ததை எடுத்துரைத்தார்கள்.
அண்ணலார், "நீர் இன்று மிகவும் நல்ல காரியம் செய்துள்ளீர். அதனால் உனக்கு ஃபஜ்ரு தொழுகை ஜமாஅத்துடன் தொழ முடியாமல் போனது பாதகமில்லை" என்று கூறினார்கள்.
அல்லாஹ் நம்மை மூத்தோர் முதியோரை கண்ணியப்படுத்தும் நற்பண்பாளர்களாக திகழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலி இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.
No comments:
Post a Comment