Search This Blog

Sunday, 8 November 2020

வழிப்பாட்டுத்தலம்

 

வழிப்பாட்டுத்தலம்

 

وَمَنْ يُعَظِّمْ حُرُمَاتِ اللَّهِ فَهُوَ خَيْرٌ لَهُ عِنْدَ رَبِّهِ


அல்லாஹ் கண்ணியப்படுத்திய சிறப்பானவைகளை எவர் மகிமைப் படுத்துகின்றாரோ அவருக்கு அது அவருடைய இறைவனிடத்தில் மிக்க நன்மையாகவே முடியும். திருக்குர்ஆன்:- 22:30

 

சங்பரிவார் கூட்டம் தங்கள் மத வெறியை பரப்புவதற்கு "இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களின் பல கோயில்களை இடித்து மசூதி கட்டினார்கள். அதனால் மசூதியை இடித்து கோவில் கட்டுவோம்" என்று விஷமத்தை தொடர்ந்து விதைத்து அதையே நம்பிக்கையாக்கி வருகிறார்கள். எந்த முஸ்லிம் மன்னரும் பிற சமூக மக்களின் வழிபாட்டுத் தலங்களை இடித்து மசூதி கட்டியதாக ஆதாரப்பூர்வமான வரலாறுகள் இல்லை என்பது நடுநிலை சிந்தனையாளர்கள், உண்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அறிவார்கள்.

 

"பள்ளிவாசல்கள் பாதுகாக்கப்படும்" என்று இந்திய அரசியல் சாசனத்தின் 25ஆம் பிரிவு முஸ்லிம்களுக்கு பூரண மத வணக்க உரிமை வழங்கி இருந்தும், இந்திய நாடாளுமன்றம் உத்தரவாதம் அளித்திருந்தும், முஸ்லிம் மன்னர்கள் கோவிலை இடித்து மசூதி கட்டினார்கள் என்று நாடெங்கிலும் மதவெறி ஊட்டி திரட்டப்பட்ட 1,50,000 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட ஒரு வன்முறைக் கூட்டம் முஸ்லிம்களின் கண்ணுக்கெதிரிலேயே 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதியை இடித்துத் துண்டுதுண்டாக சிதைத்து தரைமட்டமாக்கியது. 

 

இதனால் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்து முஸ்லிம் கலவரங்கள் வெடித்தன. அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்தனர். அதில் அனேகர் முஸ்லிம்கள். இந்திய அரசு இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண தடுமாறியது.

 

1983 ஆம் இந்து அடிப்படைவாதிகளில் ஒரு பிரிவினரான V.H.P. இராமர் கோவில் கட்டவேண்டும் என்று முன்னெடுத்த போது ஏற்பட்ட கலவரங்களில் இழந்தவர்கள் 500 க்கும் மேற்பட்டவர்கள். குறிப்பாக பாபர் மசூதி உள்ள இடத்தில் மட்டும் இறந்தவர்கள் 224 பேர். பிறகு டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில் இறந்தவர்கள் 233 பேர். அதில் மகாராஷ்டிராவில் கொல்லப்பட்டோர் 68 பேர். பாபர் மசூதி பிரச்சனையில் இதுபோன்று பல உயிர் பலியானது.

 

2019 நவம்பர் 9 அன்று பாபர் மசூதி வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியானது. இதனை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்தார்.

 

மசூதி இருக்கும் இடத்தில் எந்தவொரு கோவிலும் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. மசூதி டிசம்பர் 1992ல் இடிக்கப்பட்டது சட்டவிரோத செயல். ஆனாலும், பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்டலாம். முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் மசூதி கட்டுவதற்கு தனியாக வழங்கப்படும்என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

2020 ஆகஸ்ட் 5  அன்று பாபர் மசூதி இருந்த இடத்தில் அதை இடித்த நபர்களை வைத்துக்கொண்டே ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது

 

உச்ச நீதிமன்றம்

 

1919 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள தேறி என்ற சிற்றூரில் கட்டப்பட்ட ஒரு இந்துக் கோயில் 1997 ஆம் ஆண்டின் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் இடிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அந்தக் கோயிலை அரசு செலவிலேயே கட்டித்தர ஆணை பிறப்பிக்கிறது. அதில் காலதாமதம் ஆவதை அந்த நீதிமன்றம் கடுமையாகக் கண்டிக்கிறது. நன்றி:-  தி இந்து நாளிதழ் 26:08:2015

 

இஸ்லாமிய நாடு என்று தன்னை அறிவித்துக் கொண்ட பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களின் வழிப்பாட்டுத்தலம் இடிக்கப்பட்டதை கண்டித்து, மீண்டும் அதைப் போன்று கட்டிக்கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது அந்நாட்டு உச்ச நீதிமன்றம்.  

 

மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவில் 1992 ஆம் ஆண்டு சட்டத்துக்குப் புறம்பான முறையில் இந்து அடிப்படைவாதிகளால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி தொடர்பான வழக்கு சுமார் 27 ஆண்டுகள் நடைபெற்று 2019 ஆம் ஆண்டு "பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில் அதற்கு முன் இந்துக் கோயில் ஏதும் இருந்ததாக  தெரியவில்லை. (அதாவது கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்படவில்லை. மசூதி கட்டுவதற்கு முன் காலி மனையாக தான் இருந்துள்ளது.) ஆனாலும், பாபர் மசூதி உள்ள இந்த இடத்தில் இராமர் பிறந்துள்ளார் என இந்து மக்கள் எண்ணம் கொள்கிறார்கள். எனவே, பாபர் மசூதி இடக்கப்பட்ட இடத்தில் இராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம்" இந்து மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு  தீர்ப்பளிக்கப்படுகிறது என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியது.

 

ஐரோப்பிய உலகின் மத குருமார்கள் உலகம் தட்டையானது என்று சொல்லி வந்தனர். மக்களும் அதை நம்பி வந்தனர். உலகம் உருண்டையானது என்றும் அதுதான் கதிரவனைச் சுற்றி வருகிறது என்றும் விஞ்ஞானி கலிலியோ சொன்னார். அவரது கூற்று மதகுருமார்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டு கலிலியோ சிறையில் அடைக்கப்பட்டார்.

 

அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டதில் சட்டப்படி எந்தத் தவறும் நடக்கவில்லை. மசூதிக்கு அடியில் இராமர் கோவில் ஏதுமில்லை. நீதிமன்றம் இதை உறுதி செய்துள்ளது. எனவே, அங்கே மீண்டும் மசூதி கட்ட பெறுவதுதான் அறம். இராமர் பிறந்த இடம் இதுதான் என்று மதகுருமார்களைப் பரப்புரை செய்ய வைத்து, அதை மக்களையும் நம்ப வைத்து, உண்மை இல்லாத நம்பிக்கையின் அடிப்படையில் மசூதி இருந்த இடத்தை இராமர் கோவில் கட்டிக்கொள்ள கொடுப்பது நீதிக்குப் புறம்பான செயல். எந்தச் சட்டத்திலும் சொல்லப்படாத ஒரு செயல். இது திருத்தப்பட வேண்டிய தீர்ப்பு. வெறும் மத நம்பிக்கையினால் தண்டிக்கப்பட்டவர்கள் கடைசி மனிதனாக கலிலியோவே! இருக்கட்டும்.

 

அல்லாஹ்வின் நினைவு

 

மனிதர்களுக்கு பள்ளிவாசலை பார்த்ததும் அல்லாஹ்வின் நினைவு வருவதால், அது அல்லாஹ்வின் அடையாளச் சின்னம். அது முஸ்லிம்களின் ஒற்றுமைக்கான கேந்திரம். எனவே, பள்ளிவாசல் எழுப்பும் போது அதன் நிலம் மற்றும் கட்டுமானப் பொருட்கள் ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, மோசடி, தவறான வருவாய் போன்ற குற்றங்களில் இருந்து நீங்கி பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.

 

உலகிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களும் அல்லாஹ் கண்ணியப்படுத்தியவைகளில் ஒன்றாகும். அதனால் தான் அதை எழுப்பவதிலும், பராமரிப்பதிலும் தடுக்கப்பட்டவை கலந்து விடக்கூடாது.

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள்,   ( بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ، وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ أَمَرَ رَسُولُ اللهِ ) தத்தமது பகுதிகளில் (மஹல்லாவில்) பள்ளிவாசல்கள் அமைக்கும்படியும்அப்பள்ளிவாசல்களைத் தூய்மையாகவும் நறுமணமுள்ளதாகவும் வைத்துக்கொள்ளும்படியும் கட்டளையிட்டார்கள். நூல்:- அபூதாவூத்-384, திர்மிதீ-542, இப்னுமாஜா-751

 

இலவசமாக வேண்டாம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனாவுக்கு வந்த உடன் எடுத்துக்கொண்ட முதல் முயற்சி பள்ளிவாசல் ஒன்றை அமைத்ததாகும். (இந்தப் பள்ளிவாசலை தான் "அல்மஸ்ஜிந் நபவீ" என்று சிறப்பாக சொல்லப்படுகிறது.) தங்களது ஒட்டகம் முதன்முதலாக மண்டியிட்ட இடத்தையே அண்ணலார் பள்ளிவாசல் கட்டுவதற்காக தேர்வு செய்தார்கள். அந்த நிலம் சஹ்ல், சுஹைல் என்ற இரண்டு அனாதை சிறுவர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. அந்த சகோதரர்கள் தங்களது நிலத்தை பள்ளிவாசல் கட்ட இலவசமாகவே அளிக்க முன் வந்தனர். இருப்பினும் அண்ணலார், அவர்களிடமிருந்து அதை விலைக்கு வாங்கியே அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி முடித்தார்கள்.

 

அண்ணலார் அந்த இடத்தை இலவசமாக வாங்க மறுத்த காரணம் என்னவெனில், பிற்காலத்தில் யாராவது இந்த இடம் எங்கள் மூதாதையர்களின் இடம் என உரிமை கொள்ள வந்து விடக்கூடாது என்பதாகும். பள்ளிவாசல் என்பது அல்லாஹ்வின் இல்லமாகும். தனிப்பட்ட எந்த மனிதருக்கும் உரியதல்ல.

 

தனிப்பட்ட ஒரு மனிதரே பள்ளிவாசலைக் கட்டிமுடித்து அல்லாஹ்வுக்கு என்று வக்ஃப் செய்து விட்ட பிறகு, அதை அவர் மீண்டும் உரிமை கொள்ள முடியாது. இதுவே இஸ்லாமிய சட்டமாகும்.

 

பரிசுத்த பூமி வேண்டும்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ دَاوُدَ النَّبِيُّ صَلّى اللَّهُ عَلَيْهِ وَسَلّمَ أَرَادَ أَنْ يَزِيدَ فِي بَيْتِ الْمَقْدِسِ، وَقَدْ كَانَ بَيْتٌ قَرِيبٌ مِنْ الْمَسْجِدِ لِيَتِيمٍ، فَطَلَبَ إِلَيْهِ فَأَبَى، فَأَرَادَ أَنْ يَأْخُذَهُ مِنْهُ، فَأَوْحَى اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ إِنْ أَنْزَهَ الْبُيُوتَ عَنْ الظُّلْمِ لِبَيْتِي )

நபி தாவூத் (அலை) அவர்கள் (அல்லாஹ்வின் ஆணைக்கிணங்க) பைத்துல் முகத்தஸ்ஸை கட்ட  எண்ணினார்கள். அவர்கள் அதற்கான முதற்கட்டமாக இடத்தை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டார்கள். தேர்வு செய்த இடம் ஒரு அநாதைக்குச் சொந்தமானதாக இருந்தது. எனவே அந்த அநாதையை அழைத்து, பள்ளிவாசல் கட்ட ஏற்ற இடமாக உங்கள் இடம் இருப்பதால் அந்த இடத்தை தனக்கு விலைக்கு தந்து விடுமாறு கேட்டார்கள்.

                                                                            

 ஆனால், அவரோ தரமுடியாது என்று மறுத்து விட்டார். அதற்கு தாவூத் (அலை) அவர்கள் நீ தராவிட்டால் என்ன? (அரசர் என்ற அதிகாரப் பலத்தால்) நான் எடுத்துக் கொள்கிறேன்என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார்கள். உடனே அல்லாஹ், தாவூத் (அலை) அவர்களிடம் வஹீ மூலம் என்னை வணங்குவதற்காகக் கட்டப்படுகிற பள்ளிவாசல் என்பது ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, மோசடி ஆகிய குற்றங்களிலிருந்து நீங்கி பரிசுத்த பூமியாய் இருக்க வேண்டும்என்று அறிவித்தான்.   அறிவிப்பாளர்:- உபை பின் கஅப் (ரலி) அவர்கள் நூல்:-  ஹாகிம் 

 

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில்  ஜாமிஉல் உமவிஎனும் பெயரில் ஒரு பெரும் பள்ளிவாசல் இருந்தது. அந்த பள்ளிவாசலின் சுற்றுச் சுவர் ஒரு கிருத்துவ தேவாயலயத்திற்குரியது என்று ஜனாதிபதி உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களிடம் முறையிடப்பட்டது. அன்னார் அதற்கு நஷ்டஈடு வழங்க நினைக்கவில்லை. விட்டுத் தர கோரவில்லை. அந்த சுற்றுச் சுவரை இடித்துவிட உத்தரவிட்டார்ர்கள்.

 

மனித உரிமைகள்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் எழுப்பப்பட்ட (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் அந்தக் காலத்திற்கு போதுமானதாக இருந்தது. மதீனாவின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. தொழுகையாளிகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. எனவே, ஜனாதிபதி உமர் (ரலி) ஹிஜ்ரி 17 ஆம் ஆண்டு (கி.பி. 739 ஆம் ஆண்டு) மஸ்ஜிதுந் நபவீயை விரிவாக்கும் எண்ணம் கொண்டார்கள்.

 

அதன் சுற்றுப்புறங்களில் இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியர் வீடுகளை தவிர்த்து, மற்ற வீடுகள் அனைத்தையும் விலைக்கு வாங்கப்பட்டன. அதன் சுற்றுப்புறத்தில் அப்பாஸ் (ரலி) அவர்கள் வீடும் இருந்தன. ஆயினும், அப்பாஸ் (ரலி) அவர்கள் தம்முடைய வீட்டை விலைக்கு விற்க மறுத்து விட்டார்கள். அதற்குப் பகரமாக பெரும் தொகையை தர ஜனாதிபதி அவர்கள் தயாரான போதும், அப்பாஸ் (ரலி) அவர்கள் உடன்படவில்லை. ஜனாதிபதி அவர்கள் அதை அதிகார ரீதியாக கைப்பற்றினார்கள்.

 

அரசானது மக்களின் சொத்துக்களை விருப்பமின்றி கைப்பற்றக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் அரசின் மீது அப்பாஸ் (ரலி) அவர்கள் உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள் நீதிபதியாக இருந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

 

"பலவந்தமாக இடத்தை வாங்குவதற்கு அரசுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது" என்று வழக்கின் தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்தது. தீர்ப்பை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் நிலத்தை திரும்ப ஒப்படைத்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள், “சாமானிய மனிதனுக்கும் இஸ்லாம் வழங்கி இருக்கின்ற மனித உரிமைகளை உலகம் அறியவேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறு செய்தேன்என்று கூறிய பின்னர், தனது வீட்டை மன விருப்பத்துடன் பள்ளிவாசலுக்கு அன்பளிப்பு செய்து விட்டார்கள்.  நூல்:- அல்ஃபாரூக், வஃபாஇல் வஃபா

 

எகிப்து தேசத்தின் ஆளுநர் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், ஒரு பள்ளிவாசலை விரிவாக்கியபோது அதனருகில் இருந்த ஒரு கிருஸ்தவப் பெண்ணின் வீட்டை இடித்து பள்ளிவாசலோடு இணைத்துவிட்டு, அந்த வீட்டுக்குரியவளுக்கு அதற்குரிய இழப்பீட்டை வழங்கினார்கள். இதைப்பற்றி அப்பெண் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் வந்து புகார் செய்தாள். உடனே ஜனாதிபதி அவர்கள், பள்ளிவாசலின் அந்தப் பகுதியை இடித்து விட்டு, முன்பு இருந்தது போன்று அப்பெண்ணின் வீட்டைக் கட்டிக்கொடுக்குமாறு எகிப்தின் ஆளுநர் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டார்கள்.  நூல்:- குலஃபாவுர் ரஸூல் காலித் முஹம்மத் காலித்

                                                                                                                                                                               

இடிக்கவோ, இடம் மாற்றவோ கூடாது

 

மனிதர்களில் சிலரைச் சிலரால் அல்லாஹ் அடக்கி வைக்காவிட்டால், (துறவிகளின்) மடாலயங்களும் கிறிஸ்தவ ஆலயங்களும் யூதக்  கோயில்களும் அல்லாஹ்வின் பெயர் அதிகமாகப் போற்றப்படுகின்ற பள்ளிவாசல்களும் தகர்க்கப்பட்டிருக்கும். திருக்குர்ஆன்:- 22:40

 

கலீஃபா வலீத் பின் அப்துல் மலிக் என்பவர் பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த கிருஸ்தவ ஆலயத்தை இடித்து விட்டு, அதனை பள்ளிவாசலுடன் இணைத்து கிருஸ்தவ குடிமக்களுக்கு அநீதமிழைத்துவிட்டார். இது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது. எனவே, அவருக்கு அடுத்து ஆட்சி பொறுப்புக்கு வந்த நீதிக்கு பெயர்  பெற்ற ஜனாதிபதி உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் இதே பள்ளிவாசலின் குறிப்பிட்ட அந்த பகுதியை இடித்து விட்டு மீண்டும் முன்பிருந்தது போன்றே கிருஸ்தவ ஆலயத்தை கட்டிக்கொடுத்து நீதியை நிலைநாட்டினார்கள். நூல்:- ஃபுத்தூஹுல் புல்தான் 

 

இந்தியாவில் அரசி ரஜிய்யா சுல்தானா என்கிற ஒரு பெண்மணி ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில், "யமுனை நதிக்கரையில் இருக்கக்கூடிய கோவில்களில் இருந்து எழும் இரைச்சல்களாலும் சப்தங்களாலும் முஸ்லிம்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.  முஸ்லிம்களின் (வழிபாட்டிற்கு) இடைஞ்சலாக இருக்கிறது" என்ற ஒரு புகாரை அரசி ரஜிய்யா சுல்தானா அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அரசி அவர்கள் இது தொடர்பாக என்ன செய்யலாம் என்று ஆலோசித்தார்கள்.

 

அப்போது காஜி சஃதுத்தீன் (ரஹ்) அவர்கள் அரசியாரிடம் வந்து, பின்வருமாறு உபதேசித்து வழிகாட்டினார்கள்.

 

நீங்கள் இந்தக் கோவிலை எதுவுமே செய்ய முடியாது. இஸ்லாமிய சட்டப்படி அந்த கோவில்களில் இருந்து சப்தம் வருகிறது என்பதற்காக அந்த கோவில்களை இடிக்கவோ அல்லது இடம் மாற்றவோ நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது. உங்களுக்கு முன்னர் எத்தனையோ பேர் ஆட்சி செய்தார்கள். அப்போதெல்லாம் இந்த கோவில்கள் இருக்கத்தானே செய்தது.

 

அதுமட்டுமல்ல நபித்தோழர்கள் வென்ற பல நாடுகளில் ஈரானும் ஒன்று. அப்போது ஈரானில் அம்மக்கள் பல இடங்களில் நெருப்புக் குண்டத்தை வைத்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். நபித்தோழர்கள் அவர்களின் வணக்கஸ்தலங்களில் கை வைக்கவில்லை. யாரும் அந்த நெருப்பு குண்டங்களை தகர்தெறியவில்லை. இதுதான் நம்முடைய மார்க்கம். அதை ஏற்றுக்கொண்டு அந்த கோவில்களை எதுவும் செய்யாமல் அப்படியே விட்டு வைத்தார்கள். இதுதான் இஸ்லாமிய பாரம்பரியம். இஸ்லாமிய ஆட்சியாளர்களின் கலாச்சாரம்.

 

அழகிய உடன்படிக்கை

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஜெருசலம் நகரத்தை தனது இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்துடன் இணைத்தபோது செய்துகொண்ட உடன்படிக்கை: தேவாலயங்கள் திருச்சபைகள் பொறுத்த அளவில் அவை உடைக்கப்பட மாட்டாது; அந்த கட்டிடங்களில் எந்தக் கூடுதல் குறைவும் செய்யப்படமாட்டாது; எந்தத் தீங்கும் இழைக்கப்பட மாட்டாது. அதன் சுற்றுச் சுவர்களிலோ சுற்றுப்புறங்களிலோ வளாகத்திற்குள்ளோ எந்த ஒரு மாறுபாடும் செய்யப்பட மாட்டாது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. நூல்:- அல்ஃபாரூக்

 

காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அவர்கள் எகிப்து தேசத்தை வெற்றி கொண்டபோது பிற சமயத்தவர்களின் உயிர், உடமை, மத அடையாளங்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவைகள் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது மட்டுமின்றி, அவர்களின் வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் மணியோசையால் அவர்கள் விரும்பிய நேரத்தில் ஓசை எழுப்பலாம் என்றும், அவர்களின் திருவிழாக்களின்போது சிலுவைகளை எடுத்துக் கொண்டு வரலாம் என்றும் வாக்குறுதி அளித்தார்கள். நூல்:- கிதாபுல் ஃகராஜ் பக்கம்-175

 

இஸ்லாமிய வரலாற்றில் பைத்துல் முகத்தஸ் இருக்கும் ஜெருசலேம் நகரம் இரண்டு முறை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. 23 முறை முற்றுகையிடப்பட்டது. 52 தடவை தாக்குதலுக்கு உள்ளானது. 44 முறை மாறி மாறி கைப்பற்றப்பட்டது. தற்போதும் கூட உலக சூழ்ச்சி வேலைகளுக்கு மத்தியில் முஸ்லிம்கள் பைத்துல் முகத்தஸ் பள்ளியை மீட்டெடுக்க போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாபர் மசூதி வழக்கில் இப்போது நீதி கிடைக்கவில்லை என்றாலும், இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் நிச்சயம் நீதி வெல்லும்.

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்:  9840535951

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...