மனக்காயத்திற்கு மருந்திடுவோம்!
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ
مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
சிறிதளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றின் சேதத்தாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமை காப்போருக்கு (நபியே!) நற்செய்தி கூறுவீராக! திருக்குர்ஆன்:-2:155
மனித வாழ்க்கையில் துக்கம், சோதனை என்பதெல்லாம் அனைவருக்குமான ஒன்று தான். துக்கம், சோதனை ஏற்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதை சிறந்த வழிபாடாக இஸ்லாம் கருதுகிறது.
துக்கம் ஏற்பட்டவர்களின் நிலைக்கேற்ப அனுதாபங்களைத் தெரிவிக்க வேண்டும். துக்கமடைந்தவர் மனதைத் திருப்திப்படுத்தும் வார்த்தைகளைக் கூற வேண்டும். அது மார்க்கம் அனுமதித்துள்ள வரையறைக்குள இருத்தல் வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ عَزَّى مُصَابًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ ) பாதிக்கப்பட்ட ஒருவருக்கு யாரேனும் ஆறுதல் சொன்னால் அ(ந்த பாதிக்கப்பட்ட)வருக்கு கிடைக்கும் நற்பலனை போன்றது இவருக்கும் கிடைக்கும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-993
மிஃராஜ் பயணம்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் ஏகத்துவ பிரச்சாரத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்த பெரிய தந்தை அபூதாலிப்
அவர்கள் அண்ணலார் இறைத்தூதராக ஆன பத்தாம் ஆண்டின் இறுதியின்போது மரணமடைந்தார். இந்நிகழ்வு அண்ணலாருக்கு பெரும் துயரத்தை அளித்தது.
அடுத்த சில நாட்களிலேயே அண்ணலாரின் மிகவும் நேசத்திற்குரிய அன்பு மனைவி கதீஜா (ரலி)
அவர்களும் மரணமடைந்தார்கள். இந்நிகழ்வு அண்ணலாருக்கு மேலும் பன்மடங்கு துயரத்தை அளித்தது.
அதன்பின்பு அண்ணலார், தாயிஃப் நகரில் ஏகத்துவப் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அந்த மக்களால்
கல்லாலும்,
சொல்லாலும் துன்பத்திற்கு
ஆளாகி அண்ணலார் மனம் மிகவும் நொந்துபோயிருந்தார்கள்.
மேலும் அபூதாலிப் அவர்களின்
மரணத்திற்கு பிறகு மக்கா நகர் இணைவைப்பாளர்கள் அண்ணலார் மீது வன்கொடுமைகளை உச்சக்கட்டமாக
கட்டவிழ்த்துவிட்டார்கள். அதனால்தான் அந்த ஆண்டு (ஆம்முல் ஹுஸ்ன்) "துயர ஆண்டு"
என பெயர் குறிப்பிடப்பட்டது. அண்ணலாருக்கு இப்படியே அடுக்கடுக்கான துயரங்கள் நிகழ்ந்தபோதுதான், அண்ணலாரை ஆறுதல்படுத்தும் விதமாக, அல்லாஹ் (மிஃராஜ் எனும்) விண்வெளிப் பயணத்தின் மூலம் தன்னை நேரடியாக
சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தான்.
தமக்கு மிகவும் பிரியமானவரை சந்தித்து பேசும்போது தமது கவலையெல்லாம் நீங்கி மனம் இலேசாகிவிட்டதை உணர்கிறோம் இல்லையா! அதுபோன்று தான் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேரடியாகச் சந்தித்து பேசி ஆறுதல் அடைந்தார்கள். எனவே, இந்த மிஃராஜ் பயணம் நபியவர்களுக்கு ஆறுதல் பயணமாக அமைந்தது. அதன் பிறகு நபியவர்கள், இஸ்லாமிய பிரச்சாரத்தை மிகவும் வேகப்படுத்தி இலக்கை எட்டிப்பிடித்தார்கள்.
குழந்தையின் இழப்பு
குர்ரா பின் இயாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சபைக்கு ஒருவர் தன் சிறுவயது மகனாருடன் வந்து போவார். (சபையில் அமரும்போது) தமக்கு முன்னால் அவனை அமரவைப்பார். (ஒருநாள்) அச்சிறுவன் இறந்து போனான். அம்மனிதர் தம் பையனின் நினைவால் அண்ணலாரின் சபைக்கு வருகை தர இயலாமல் ஆகிவிட்டார். (ஒருநாள்) அண்ணலார் அவரை காணாதது குறித்து ( مَا لِي لاَ أَرَى فُلاَنًا ) "இன்னாரை நான் பார்க்கமுடியவில்லையே (ஏன்)” என்று வினவினார்கள். மக்கள், "நாயகமே! தாங்கள் பார்த்த அந்தச் சிறுபையன் இறந்து போய்விட்டான். (அப்பையனின் கவலையால் அவரால் வருகை தர இயலவில்லை) என்று கூறினர்.
உடனே அண்ணலார் அவரைச் சந்தித்து அவரின் சின்னப்பையனின் (இறப்பைப்) பற்றி விசாரித்துவிட்டு அவருக்கு ஆறுதல் கூறினார்கள். பின்னர் அண்ணலார் ( يَا فُلاَنُ أَيُّمَا كَانَ أَحَبُّ إِلَيْكَ أَنْ تَمَتَّعَ بِهِ عُمْرَكَ أَوْ لاَ تَأْتِي غَدًا إِلَى باب مِنْ أَبْوَابِ الْجَنَّةِ إِلاَّ وَجَدْتَهُ قَدْ سَبَقَكَ إِلَيْهِ يَفْتَحُهُ لَكَ ) “இன்னாரே! உமது வாழ்நாளில் யாரைக் கொண்டு இன்புற்றிருந்தது உனக்கு மிக நேசமானதாக இருந்ததோ அவர், சொர்க்கவாசகளில் எந்த வாசலில் நாளை நீர் வந்தாலும் அவ்வாசலில் அவர், உமக்காக வாசலைத் திறப்பதற்கு முன்கூட்டியே வருபவராக அவரைக் காண வேண்டாமா?” என்று வினவினார்கள்.
அதற்கு அவர் "நாயகமே! ஆம் அவர் எனக்கு முன்னரே வந்து எனக்குச் சொர்க்கவாசலில் கதவைத் திறந்து விடவேண்டும். அது எனக்கு மிக விருப்பமானதாகும்" என்று கூறினார். அண்ணலார் ( فَذَاكَ لَكَ ) "அது உமக்கு உண்டு" என்று கூறினார்கள். நூல்:- நசாயீ-2061
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் வந்து, "நாயகமே! (உடல் நலமில்லாத) இந்த குழந்தைக்காகப் பிரார்த்தியுங்கள். (இதற்குமுன்) நான் மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டேன்" என்று கூறினார். "மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டாயா?" என்று அண்ணலார் வினவினார்கள். அதற்கு அப்பெண் 'ஆம்' என்றார். அண்ணலார் ( لَقَدِ احْتَظَرْتِ بِحِظَارٍ شَدِيدٍ مِنَ النَّارِ ) "நரக நெருப்பிலிருந்து (உன்னைக் காக்க) நீ பலமான வேலி அமைத்து கொண்டு விட்டாய்" என்று கூறினார்கள். முஸ்லிம்-5133, நசாயீ-1854
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ عَزَّى ثَكْلَى كُسِيَ بُرْدًا فِي الْجَنَّةِ ) பெற்ற குழந்தையை இழந்து தவிக்கும் தாய்க்கு ஆறுதல் கூறுபவர் சொர்க்கத்தில் அங்கு நல்லாடை அணிவிக்கப்படுவார். அறிவிப்பாளர்:- அபூபர்ஸா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-996
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) உங்களில் சந்ததியிழந்தவன் (அர்ரகூப்) என்று யாரைக் கருதுகிறீர்கள்? என்று வினவினார்கள். "குழந்தைப் பாக்கியமற்றவரையே (நாங்கள் 'அர்ரகூப்' எனக் கருதுகிறோம்) என்று பதிலளித்தோம் அப்போது அண்ணலார் "அவன் சந்ததியிழந்தவன் அல்லன். மாறாக, தம் குழந்தைகளில் எதுவும் (தமக்கு) முன்பே இறக்காதவனே சந்ததியிழந்தவன் ஆவான்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-5084
(தாய் பொறுமையுடன் வெகுமதி பெறும் நம்பிக்கைகொண்டிருந்தால்) குறைப்பிரசவத்தில் பிறந்த சதைக்கட்டியும் தன் தாயை சொர்க்கத்தை நோக்கி இழுத்துச் செல்லும் என்கிறது ஒரு நபிமொழி.
பெரிய பிள்ளைகளைவிட சிறு குழந்தைகள் தான் பெற்றோர்
சொல்லைத் தட்டாதவர்களாக, பெற்றோர் பேச்சுக்கு
எதிர் பேச்சு பேசாதவர்களாக இருப்பார்கள். எனவேதான்,, சிறு குழந்தைகள் மீது பெற்றோருக்கு
அதிக பாசம் ஏற்படுகிறது அவர்களின் இறப்பு தான் பெற்றோரை நிலை தடுமாற வைத்துவிடுகிறது.
குழந்தைகளின் மரணம் மனதில் மிகப்பெரிய சோகத்தை பதியச்செய்யக் கூடியதாகும். அதிர்ச்சியும் அதிகமாக இருக்கும். அதைத் தாங்கிக் கொள்வது சிரமமாகும்.
இலகுவாக அவர்களின் இறப்பையும், இழப்பையும் மறக்க முடியாது. அவர்களின் முகமும், கொஞ்சம் மொழியும், குறும்புத்தனங்களும் மனதைவிட்டு இலகுவில் மறைந்துவிடாது.
வீட்டில் அமைதி நிலவும் போதெல்லாம் அவர்களின் மழலை வார்த்தைகள் மனதில் தோன்றி வாட்டி
வதைக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் அவர்களின் கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவுக்குக் கொண்டு
வரும். எனவே அவர்களின் இழப்பு பெரிய சோகம் தான். இந்த இழப்பு உண்மையில் இழப்பல்ல. மறுமைக்கான
சேமிப்பு என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அந்நேரத்தில் பொறுமையை மேற்கொண்டு இறைவனிடம் நற்கூலியை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் முஸ்லிம்களுக்கு தான், இஸ்லாம் சொர்க்கத்தை கொண்டு நல்வாழ்த்துக் கூறி அவர்களை ஆறுதல் படுத்துகிறது.
நலம் விசாரித்தல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ مُسْلِمٍ يَعُودُ مُسْلِمًا غُدْوَةً إِلاَّ صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُمْسِيَ وَإِنْ عَادَهُ عَشِيَّةً إِلاَّ صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُصْبِحَ وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ ) முஸ்லிமான ஒருவர் மற்றொரு முஸ்லிமைக் காலையில் நலம் விசாரிக்கச் சென்றால் மாலைவரை எழுபதாயிரம் வானவர்கள், அவருக்காக பிரார்த்திக்கொண்டிருப்பார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் (மறுநாள்) காலை வரை எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காக பிரார்த்திக்கொண்டிருப்பார்கள். மேலும் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு தோட்டம் கிடைக்கும். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-891
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا دَخَلْتَ عَلَى مَرِيضٍ فَمُرْهُ أَنْ يَدْعُوَ لَكَ فَإِنَّ دُعَاءَهُ كَدُعَاءِ الْمَلاَئِكَةِ ) நீங்கள் நோயாளியிடம் சென்றால், அவரிடம் உங்களுக்காக பிரார்த்திக்கக் கோருங்கள். ஏனெனில், அவரது பிரார்த்தனை வானவர்களின் பிரார்த்தனைப் போல் (ஒப்புக்கொள்ளப்படுகிறது.) அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1441
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் நோயாளிகளிடம் சென்றால், அவர்கள் நீண்ட நாள் வாழ்வார்கள் என்று கூறி அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அவ்வாறு நீங்கள் பேசுவதால் அவர்களின் மரணத்தைத் தடுத்து விட முடியாது. எனினும் நோயாளிகளின் இதயத்துக்கு அதனால் மகிழ்ச்சி ஏற்படும்.
நோய் நலம் விசாரிக்கச் செல்லும் போது அந்த நோயாளியிடம் "வந்திருப்பது பயங்கரமான வியாதி என்றும், அந்த வியாதியால் இறந்து போனவர்கள் பற்றியும், இதனால் பக்க விளைவுகள் பல ஏற்படக்கூடும் என்றும், காலம் முழுவதும் பத்தியம் இருந்து பை பையாக மாத்திரை சாப்பிட வேண்டும் என்றும் மனதை நிலைகுழைய செய்யும் வார்த்தைகளை பேசுவது மாபெரும் தவறாகும்.
ஒரு நோய் குணமாவது பாதி மனதையும், மீதி மருந்து மாத்திரைகளையும் கொண்டு தான் என்கிறனர் மனநல மருத்துவர்கள்.
ஆகவே ஒரு நோயாளியைப் பார்க்கும் போது நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆறுதலாகப் பேசி அவருக்கு தெம்பை உண்டாக்க வேண்டும்.
அவர்கள் படுத்திருப்பதன் காரணமாக ஏதேனும் வேலைகள் தடைப்படுவதாக அவர் கவலைப்பட்டால் , "அதெல்லாம் ஒண்ணும் கவலைப்படாதீங்க. எல்லாம் நாங்கள் பார்த்துக்கறோம். நாங்க என்னத்துக்கு இருக்கோம்?" என்று மனப்பூர்வமாகக் கூறி அவர்களது கவலையைக் குறைக்க வேண்டும்.
அவர்களுக்கு உடல் நலமில்லை என்பதை செவியுற்றதும் நமக்கு ஏற்பட்ட மன பாதிப்பைச் சொல்லி, அதன் மூலம் நாம் அவர்கள் மீது கொண்டிருக்கும் அன்பையும் அக்கறையையும் புலப்படுத்தலாம்.
உங்களைப் போன்றவர்களின் அன்பிற்காகவாவது நீண்ட காலம் வாழ வேண்டும். விரைவில் எழுந்து நடமாட வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு ஏற்பட வேண்டும்.
நீங்கள் இப்போது சாதாரணமானரல்ல. பிரார்த்தனைகள் உடனே ஒப்புக்கொள்ளப்படும் வானவர்களைப் போன்றவர். அதனால் நீங்கள் எங்களுக்காகவும் பிரார்த்தியுங்கள் என்று அவர்களிடம் அன்புடன் கூற வேண்டும்.
இறந்தவரின் குடும்பத்தினருக்கு
இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுதல் மார்க்கக் கடமைகளில் உள்ளதாகும். மரணித்தவருக்காகப் பிரார்த்திப்பதும், மரணித்தவரின் குடும்பத்தினருக்கு பொறுமையைக் கொண்டு அறிவுறுத்துவதும் அவசியமேயாகும்.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. உஹதுப்
போர் நடைபெற்ற நாளன்று சித்தரவதை செய்யப்பட்டு உறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில் என்
தந்தையின் உடல் கொண்டுவரப்பட்டு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது
அப்போது அவ்விடத்தில் ஒரு பெண் அழுதுகொண்டு இருப்பதை கவனித்த அண்ணலார், ( مَنْ
هَذِهِ
) “யார் அந்த பெண்மணி” என்று கேட்டார்கள் பிறகு அண்ணலார் அப்பெண்ணிடம் ( فَلاَ تَبْكِي- أَوْ فَلِمَ تَبْكِي- مَا زَالَتِ الْمَلاَئِكَةُ تُظِلُّهُ
بِأَجْنِحَتِهَا حَتَّى رُفِعَ ) “நீ அழ வேண்டாம் என்றோ நீ ஏன் அழுகிறாய் என்று
கூறிவிட்டு பிரேதம் தூக்கப்படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து அந்த ஜனாஸாவிற்கு
நிழல் கொடுத்துக் கொண்டிருந்தனர்” என்று அப்பெண்ணுக்கு ஆறுதல் வார்த்தை கூறினார்கள். நூல்:- நஸாயீ -1819
மூத்தா போரில் என் தந்தை ஜஅஃபர் பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் இறந்த பிறகு, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து (எங்களைப் பார்த்து), ( أَمَّا مُحَمَّدٌ فَشَبِيهُ عَمِّنَا أَبِي طَالِبٍ، وَأَمَّا عَبْدُ اللَّهِ فَشَبِيهُ خَلْقِي وَخُلُقِي ) "முஹம்மத், என் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களுக்கு ஒத்திருக்கிறார். அப்துல்லாஹ்வோ என் தோற்றத்திற்கும் என் குணத்திற்கும் ஒத்திருக்கிறார்" என்று ஆறுதல் கூறிவிட்டு, எனது கையை பிடித்து உயர்த்தி, ( اَللَّهُمَّ اخْلُفْ جَعْفَرًا فِي أَهْلِهِ، بَارِكْ لِعَبْدِ اللَّهِ فِي صَفْقَةِ يَمِينِهِ ) "இறைவா! ஜஅஃபர் குடும்பத்தினருக்கு ஜஅஃபருக்கு மாற்றாக ஒரு (சிறந்த) பகரத்தை ஏற்படுத்துவாயாக! அப்துல்லாஹ்விற்கு அவருடைய வணிக ஒப்பந்தங்களில் நல்ல வளத்தை அருள்வாயாக! என்று (எங்கள் நலனில் அக்கறை கொண்டு) மூன்றுமுறை பிரார்த்தித்தார்கள்.
பிறகு எங்களின் தாயார் (அஸ்மா பின்த் உமைஸ் -ரலி
அவர்கள்) அண்ணலாரிடம் வந்து எங்களின் ஆதரவற்ற அனாதை நிலையை குறிப்பிட்டு ஆழ்ந்த கவலையை
வெளிப்படுத்தினார். அப்போது அண்ணலார், ( اَلْعَيْلَةَ
تَخَافِينَ عَلَيْهِمْ وَأَنَا وَلِيُّهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ) “இம்மையிலும் மறுமையிலும்
அவர்களின் பொறுப்பாளனாக நான் இருக்கும் நிலையில் இவர்களின் வறுமையைப் பற்றி நீ ஏன்
அஞ்சுகிறாய்? “ என்று (ஆறுதல்) கூறினார்கள்.
நூல்:- அபூதாவூத், நசாயீ, முஸ்னது அஹ்மத், ஹாகிம், அல்பிதாயா வந்நிஹாயா
(பிற்காலத்தில் இந்த அப்துல்லாஹ் - ரலி அவர்கள் பெரும் செல்வந்தராக இருந்து நற்காரியங்களுக்கு தனது செல்வங்களை வாரி வழங்கியோர் பட்டியலில் இவர் பெயரும் இடம் பிடித்திருந்ததாக அரபு இலக்கியங்கள் கூறுகின்றன.) நூல்:- அபூதாவூத், நசாயீ, முஸ்னது அஹ்மத், ஹாகிம்
சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள், உஹதுப் போரில் இறந்துபோன
என்னுடைய சகோதரர் ஆமிர் பின் முஆத் (ரலி) என்பவருக்காக எனது தாயாரிடம் ஆறுதல் கூறினார்கள்.
மேலும் "சஅதின் தாயாரே! நற்செய்தி பெற்றுக்கொள்வீராக! உஹது போரில் கொல்லப்பட்டவர்களின்
குடும்பத்தாருக்கும் நற்செய்தி சொல்வீராக! அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் தோழர்களாக
உலாவுகின்றனர். அவர்களின் குடும்பத்தாருக்காக அவர்கள் செய்யும் சிபாரிசு ஏற்றுக் கொள்ளப்படும்"
என்றார்கள்.
இதைக் கேட்ட சஅதின் தாயார் "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பொருந்திக்கொண்டோம், மகிழ்ச்சி அடைந்தோம்.
இதற்குப் பின்னர் யார்தான் அவர்களுக்காக அழுவார்கள்! என்று கூறி, "நாயகமே! எஞ்சியிருக்கும்
அவர்களின் உறவினர்களுக்காக நீங்கள் பிரார்த்தியுங்கள்" என்றார். நூல்:- அஸ்ஸீரத்துல் ஹலபிய்யா
மனம் இலேசாகும்
இஸ்லாமிய ஆரம்பக் காலத்தில் இஸ்லாமிய விரோதி அபூஜஹ்ல்
மற்றும் சிலரும் சேர்ந்து முஸ்லிம்களாகிவிட்ட யாசிர் (ரலி), அவரது மனைவி சுமையா
(ரலி), அவரது மகனார் அம்மார் (ரலி) ஆகியோரை சங்கிலியில்
பிணைத்து சிறையிலடைத்தனர். இவர்களின் வீட்டை தீயிட்டுக் கொளுத்தினர். மேலும் இவர்களை
சிறையிலிருந்து இழுத்துச் சென்று இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட இவர்களை வேகமாக
நடக்க சொல்லி கயவர்கள் கத்தியாலும், குத்து வாளாலும் பின்னாலிருந்து குத்தி இரத்தம் ஒழுக
செய்தனர்.
சிறுவர்கள், சுமையா (ரலி) அவர்களின் தலைமுடியையும்
யாசிர் (ரலி) மற்றும் அம்மார் (ரலி) அவர்களின் தாடியையும் பிடித்து இழுத்து வேதனை செய்தனர்.
இவர்களை சுடுமணலில் கிடத்தி இரும்பைப் பழுக்க காய்ச்சி நெஞ்சின் மீதும் உடல் மீதும்
ஊற்றும்படி அபூஜஹ்ல் தனது வேலையாட்களுக்கு ஆணை பிறப்பித்தான். மார்பின் மீதும் பெரும்
பாறாங்கற்களை வைத்து அழுத்தி சுடுமணலில் கிடத்தி சுட்டெரிக்கச் செய்தான். கொடுமை தாங்கமுடியாமல்
மயக்கமுற்றால் தண்ணீரை முகத்தில் தெளித்து கொடுமையை தொடரவேண்டும் என அவன் கட்டளையிட்டான்.
இவ்வாறு பல்வேறு தண்டனை முறைகளை அவர்கள் அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.
அதை கேள்வியுற்று, எந்த உதவியும் செய்ய
முடியாத நிலையில் இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மன வேதனையோடு அங்கு சென்று பார்த்துவிட்டு, ( اِصْبِرُوا آلَ يَاسِرٍ؛ مَوْعِدُكُمُ الْجَنَّةُ
) "யாசிர் குடும்பத்தாரே! பொறுத்துக் கொள்ளுங்கள்.
(நீங்கள் நிம்மதியாக வாழ்வீர்கள் என்று) உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் சொர்க்கம்
தான்" என்று ஆறுதல் மொழி கூறினார்கள். அப்போது சுமையா (ரலி) அவர்கள் "நீங்கள்
அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். உங்களின் வாக்குறுதி உண்மையானது" என்றார். மேலும்
அண்ணலார் ( اَللَّهُمَّ اغْفِرْ لِآلِ يَاسِرٍ
) "அல்லாஹ்வே! யாசிரின் குடும்பத்தினருக்கு பாவமன்னிப்பை
வழங்குவாயாக!" என்றும் பிரார்த்தனை செய்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், தப்ரானீ
இஸ்லாமிய விரோதி அபூலஹபின் மகள் துர்ரா (ரலி) அவர்கள்
இஸ்லாமை ஏற்றுக்கொண்டு ஹிஜ்ரத் செய்த பெண்களில் ஒருவராவார். ஒருமுறை துர்ரா (ரலி) அவர்கள்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் சபைக்கு அழுத நிலையில் ஓடோடி வந்து நாயகமே! சரீக் குடும்பத்தைச் சேர்ந்த அன்சாரிப்
பெண்கள் என்னை நோக்கி "உமது பெற்றோரின் இழிவான செயல்களால் அவர்களை சபித்து அல்லாஹ்
ஒரு அத்தியாயத்தையே இறக்கிவிட்டான். அதனால் உனது ஹிஜ்ரத் பயணம் உனக்கு எந்த நற்பலனையும்
தரப்போவதில்லை" என்று அமில வார்த்தைகள் கூறி தன்னை காயப்படுத்திவிட்டதாக முறையிட்டார்.
இதனை செவியுற்ற அண்ணலார் அவரது கரம் பற்றி ஆறுதல் கூறி அமர வைத்தார்கள். ளுஹர் தொழுகைக்கு பிறகு சொற்பொழிவுமேடை மீதேறி "மக்களே! எனது பெரிய தந்தை அபூலஹபின் மகள் துர்ரா விஷயத்தில் இப்படி இப்படியெல்லாம் பேசி என்னையும் என் குடும்பத்தினரையும் நோவினைப்படுத்தாதீர்கள்" என்று கூறினார்கள்.
பிறகு துர்ரா (ரலி) அவர்களை அழைத்து "எவர் உம்மை கோபப்படுத்துவாரோ அவர் மீது அல்லாஹ்வும் கோபப்படுவான். நீ என்னை சார்ந்தவள். நான் உன்னை சார்ந்தவர்" என்று ஆறுதல்மொழி கூறினார்கள். நூல்:- உசுதுல் ஙாபா, தபகாத் இப்னு சஅத்
பிற மக்களால் துன்ப துயரங்களுக்கு ஆளான அப்பாவி
மக்களை காணும் பொழுது, அவர்களின் மனது மகிழ்ச்சி கொள்ளும் விதமாக, அழகிய வார்த்தைகள் மூலம் ஆறுதல் மொழி கூறுவது நபிவழி என அறியமுடிகிறது.
ஏழைகள்
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். ( يَدْخُلُ الْفُقَرَاءُ الْجَنَّةَ قَبْلَ الأَغْنِيَاءِ بِخَمْسِ مِائَةِ عَامٍ نِصْفِ يَوْمٍ ) ஏழைகள், செல்வந்தர்களுக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்திற்குள் நுழைந்து விடுவார்கள். (உலகத்தின் நாட்களோடு மறுமையின் நாட்களை ஒப்பிடும்போது ஐநூறு ஆண்டுகள் என்பது) அரை நாளாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2276
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ
) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அதில் வசிப்போரில்
அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். அறிவிப்பாளர்:- இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள், நூல்:- புகாரீ-3241, திர்மிதீ-2525, முஸ்னது அஹ்மது
பொருளாதார வளம் படைத்தவர்கள் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றவர்கள் என்றோ, ஏழைகள் அவனது தண்டனைக்குரியவர்கள் என்றோ எண்ணக்கூடாது. இறைத்தூதர்கள் மற்றும் இறைநெருக்கத்தை பெற்ற நல்லடியார்கள் பலரும் ஏழையாக தான் வாழ்ந்தார்கள் என்று வரலாறு சான்று பகர்கின்றது.
செல்வந்தர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த செல்வங்களுக்கு
முறையாக கேள்வி கணக்கு கேட்கப்பட்டு சரியான பதிலைச் சொல்லும் வரை அவர்கள் சொர்க்கம்
செல்ல முடியாது. ஆனால் ஏழைகள் அப்படியல்ல. ஏழைகளுக்கு உலகத்தில் வாழும் பொழுது செல்வம்
சரியாக வழங்கப்படாததால் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளும் மிக மிக குறைவு. எனவே
விரைவாகவே சொர்க்கம் சென்று, பல நிரந்தரமான சுகங்களை
அனுபவிக்கும் வாய்ப்பும் ஏழைகளுக்கு தான் முதலில் கிட்டும் என விளங்குகிறது.
செல்வந்தர்கள் உலகத்தில் கொஞ்சம் சுகத்தை அனுபவித்திருப்பார்கள்.
ஆனால் ஏழைகள் உலகத்தில் துன்பத்துயரங்களை மட்டும் அனுபவித்து சுகம் காணாமல் வாழ்ந்ததால்
இவர்கள் தான் முதலில் சொர்க்க சுகம் காண்பது நியாயம். இல்லையா! எனவே தான் இந்த ஏற்பாடு.
அவ்வப்போது துன்பத்திலும், வறுமையிலும் வாடிக் கொண்டிருக்கும் சகோதரர்களின்
தலையை வருடி கண்ணீரை துடைக்க வேண்டும். அவர்களுக்கு உதவி ஒத்தாசை செய்து தேற்ற வேண்டும்.
அவர்களது உள்ளத்துடன் உறவாடி அதன் காயங்களுக்கு மருந்திட வேண்டும். சுருங்கக்கூறின்
பாசத்துடனும் பரிவுடனும் ஆறுதல் மொழி கூற வேண்டும்.
இறைமறுப்பாளர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே அலங்காரமாக(த் தோன்றும்படி) செய்யப்பட்டிருக்கின்றது. அதனால் அவர்கள்
(ஏழைகளாக இருக்கும்) இறைநம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். ஆனால் (இறைநம்பிக்கையாளர்களான)
இறையச்சம் உள்ளவர்களோ மறுமையில் அவர்களைவிட (எவ்வளவோ) மேலாக இருப்பார்கள். திருக்குர்ஆன்:- 2:212
ஆணவ குணமுள்ள செல்வந்தர்கள் மூலம் கேலி கிண்டலுக்கு
ஆளாகும் இறையச்சமுள்ள ஏழைகளுக்கு அல்லாஹுத்தஆலா இந்த வசனத்தின் மூலம் உயர்தரமான சொர்க்க
வாழ்க்கையை எடுத்துரைத்து ஆறுதல் படுத்துகிறான்.
நற்குணமுள்ள மனைவி
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் செய்த இஸ்லாமிய பிரச்சாரத்தின் விளைவாக இஸ்லாமிய விரோதி அபூலஹப் தன்னுடைய இரு மகன்களையும் அழைத்து "உங்களின் மனைவிகளாக இருக்கும் முஹம்மதுவின் மகள்களை மணவிலக்கு செய்துவிடுங்கள்" என்று கூறினான். அவ்வாறே அண்ணலாரின் மகள்களான உம்மு குல்ஸூம் (ரலி), ருகைய்யா (ரலி) ஆகிய இருவரும் மணவிலக்கு செய்யப்பட்டனர்.
அண்ணலார் இஸ்லாமிய பிரச்சாரம் செய்துவிட்டு இல்லம் திரும்பியதும் இரு பெண்களும் விசும்புவதைக் கண்டார்கள். அச்சமயத்தில் அன்னை கதீஜா (ரலி) அவர்கள் பிள்ளைகள் வாழ்க்கை வீணாகிவிட்டதே! இந்த இஸ்லாமிய பிரச்சாரம் தேவையா? என்று கேட்கவில்லை. எந்த ஒரு தாயும் தன் பிள்ளைகளின் வாழ்க்கை வீணாவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டாள். ஆனால் அன்னையவர்கள் இறைத்தூதரான தம் கணவருக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டார்கள். அது மட்டுமல்லாமல் தம் பெண் பிள்ளைகளின் நிலை இப்படி ஆகிவிட்டதே என வருத்தப்பட்ட அண்ணலாரிடம் அன்னையவர்கள் "நீங்கள் கவலைப்படாதீர்கள். அல்லாஹ் இவர்களைவிட சிறந்த கணவனை நம் பிள்ளைகளுக்கு வழங்குவான்" என்று கூறி அண்ணலாரை ஆறுதல் படுத்தினார்கள்.
அன்புள்ள கணவர்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு குழந்தைச்செல்வம் கிடையாது. நூல்:- அபூதாவூது
தமது குழந்தைகளின் பெயரோடு இணைத்து புனைப்பெயர் சூட்டிக் கொள்வது அரபு மக்களின் இயல்பு. இயற்பெயரால் அழைக்காமல் புனைப்பெயரால் அழைப்பதையே சிறப்பாகக் கருதினர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு முறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், "நாயகமே! தங்கள் மனைவியர் அனைவருக்கும் புனைப்பெயர் இருக்கின்றது. எனக்குத்தான் இல்லை!" என்று குறைப்பட்டு கொண்டனர். அதற்கு அண்ணலார் ( فَاكْتَنِي بِابْنِكِ عَبْدِ اللَّهِ . يَعْنِي ابْنَ أُخْتِهَا ) "(ஏனில்லை!) நீயும் உனது சகோதரியின் (அஸ்மாவின்) மகனாகிய அப்துல்லாஹ்வின் பெயரை புனைப்பெயராக (உம்மு அப்தில்லாஹ் என) சூட்டிக்கொள் (என ஆறுதல்) கூறினார்கள். நூல்:- அபூதாவூது-4319, அல்அதபுல் முஃப்ரத்-850
என்னுடைய மகன்
சிறு குழந்தையாக இருந்த ஸைத் பின் ஹாரிசா (ரலி) அவர்களை ஒரு கூட்டம் அவரை கடத்திச் சென்று அடிமையாக விற்றுவிட்டார்கள். இறுதியில் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அடிமையாக வந்து சேர்ந்தார். இதனை அறிந்த அவரின் தந்தை ஹாரிசா மக்கா வந்து அண்ணலாரை சந்தித்து உங்களின் அடிமையாக இருக்கும் ஸைத் எனது மகன் ஆவார். எனவே, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். எனது மகன் ஸைத்தை என்னோடு அனுப்பிவிடுங்கள் என்று கூறினார்.
இதை செவியுற்ற அண்ணலார் உங்கள் மகன் ஸைத் உங்களுடன் வருவதாக இருந்தால் அவரை தாராளமாக அழைத்து செல்லுங்கள். அதற்கு எந்த பகரமும் தேவையில்லை. என்று கூறினார்கள். உடனே அவர் தனது மகன் ஸைதை அழைத்து, வா அன்பு மகனே! நம்மோடு புறப்படு! என்றார். ஆனால் ஸைத் (ரலி) அவர்கள் தனது தந்தை ஹாரிசாவுடன் போக விரும்பவில்லை. இறுதிவரை அண்ணலாருடனே இருக்கப்போவதாக உறுதியாகக் கூறிவிட்டார்.
உடனே அவரது தந்தை ஹாரிசா, ஸைதே! உனக்கு என்ன கேடு பிடித்து விட்டது. பெற்ற தாயையும், தந்தையையும் விட்டு விட்டு அடிமைத் தனத்தைத் தேர்ந்தெடுக்கிறாயே! என்று ஆத்திரம் பொங்க தன் மனவருத்தத்தை வெளிப்படுத்தினார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த அண்ணலார் ஸைத் (ரலி) அவர்களின் கையைப்பிடித்துக் கொண்டு நேராக கஅபாவுக்கு வந்து, குறைஷியர் கூடி நின்ற இடத்தில் நின்று கொண்டு, ( يَا مَنْ حَضَرَ اشْهَدُوا أَنَّ زَيْدًا ابْنِي يَرِثُنِي وَأَرِثُهُ ) இங்கு கூடி இருப்போரே! இனிமேல் இவர் என்னுடைய மகன் ஆவார். எனக்கு இவர் வாரிசு, இவருக்கு நான் வாரிசு ஆவேன் என்று கூறினார்கள்.
கடத்திச் செல்லப்பட்ட தன் மகனை நீண்ட நாட்களுக்கு பிறகு கண்டுபிடித்தும், தற்போது தன்னுடன் அழைத்துச் செல்ல முடியவில்லையே என்ற எண்ணம் ஹாரிசாவுக்கு கவலையளித்தாலும், மகன் தன்னிடம் இருந்து வளர்வதைவிட அழகிய முறையில் வாழ்வதைக் கண்ணால் கண்டு, அதுவும் மக்காவாசிகளால் மிகவும் மதிக்கப்படக்கூடிய சிறந்த மனிதரான முஹம்மதின் மகனாக பிரகடனப்படுத்தப்பட்டதைக் காதால் கேட்டு மகிழ்வுற்றார். மகன் தம்முடன் இல்லை என்பது தான் குறையே தவிர,, அவன் உயரிய அந்தஸ்த்துடன் நல்ல முறையில் வாழ்கிறான் என்ற நிம்மிதியுடன் ஹாரிசா நாடு திரும்பினார். நூல்:- ரிஜாலு ஹவ்லுர் ரசூல், மிர்காதுல் மஃபாதீஹ்
ஆம்! மன வருத்தத்துடன் செல்ல இருந்தவரை மனநிம்மதியுடன் செல்லும் அளவுக்கு அண்ணலார் அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்கள்.
நற்செய்தி பெறுவார்கள்
(இறைநம்பிக்கையாளர்களே)
உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலேயே
நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப்போல) நம்பிக்கை
கொண்ட அவர்களையும், அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பிடித்து
(அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) "அல்லாஹ்வுடைய உதவி எப்போது
(வரும்? எப்போது வரும்?)" என்று கேட்டதற்கு
"அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்தில் இருக்கிறது" என்று (நாம்
ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப் பட்டார்கள். திருக்குர்ஆன்:-
2:214
எனினும் எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று
கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்தும் இருந்தவர்களோ அவர்களிடம்
நிச்சயமாக வானவர்கள் வந்து (அவர்களை நோக்கி) நீங்கள் (எதற்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள்.
உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு சந்தோஷமடையுங்கள் என்று கூறுவார்கள். திருக்குர்ஆன்:-
41:30
உண்மையான இறைநம்பிக்கையாளர்களுக்கு சோதனைகள் வரும்.
அச்சமும், துக்கமும் அவர்களது வாழ்க்கையையும் ஆக்கிரமிக்கும்.
எனினும் நபிமார்கள் மற்றும் வானவர்கள் அவர்களுக்கு ஆறுதல் சொல்வார்கள். உங்களுக்குக்
கிடைக்க இருக்கும் சொர்க்கத்தை கொண்டு நற்செய்தி பெறுங்கள் என அவர்கள் ஆறுதல் கூறி
அமைதிப்படுத்துவார்கள் என தலைப்பில் காணும் வசனமும் மேற்கண்ட வசனங்களும் கூறுகிறது.
மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (சிரமத்தில் உள்ள) மனம் உடைந்தவரின் உள்ளத்திற்கு
ஆறுதலை ஏற்படுத்துவது ஹஜ்ஜே அக்பர் ஆகும். ஒருவரின் புண்பட்ட மனதுக்கு ஆறுதல் ஏற்படுத்துவது
ஆயிரக்கணக்கான கஅபாவை விடச் சிறந்ததாகும்
வியாபாரத்தில், விவசாயத்தில், தொழில் முதலீட்டில் நஷ்டமடைந்தோர் மற்றும் இயற்கை பேரிடர் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு அவர்களது கவலைகளையும், சோகங்களையும் கலையும் விதமாக உடலாலும், பொருளாலும் உதவி ஒத்தாசைகள்
செய்து ஆறுதல் படுத்த வேண்டும்.
சிரமப்படுவோருக்கு ஆறுதல்மொழி கூறி, உதவி ஒத்தாசைகள்
செய்யும் நல்லடியார்களின் பட்டியலில் அல்லாஹுதஆலா நம்மையும் சேர்த்து அருள்பாலிப்பானாக!
ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ் 💐 மிகச்சிறந்த ஆய்வு. பல புதிய ஹதீஸ்களை அறிய முடிந்தது.
ReplyDelete