புனிதப் பயணம்
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
எவர்கள் அங்கு பிரயாணம் செய்ய சக்தியுடையவர்களாக இருக்கிறார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார்களை விட்டும் தேவையற்றவனாக உள்ளான். திருக்குர்ஆன்:- 3:97
ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். உடல் பலமும், பண வளமும் உடைய இஸ்லாமியர்கள் மீது தம் வாழ்நாளில் ஒரு தடவையேனும் புனித ஹஜ் செய்வது கடமையாகும்.
இந்த புனிதப் பயணத்தின் மூலம் அல்லாஹ்வின் அன்பும், ஒரு புதிய அனுபவமும் கிடைக்கிறது. மேலும், பாவங்களைப் போக்கும் சாதனமாகவும் இப்புனிதப் பயணம் திகழ்கிறது.
ஹஜ் பயணம் மேற்கொள்ளாத எந்த இறைத்தூதரும் இம்மண்ணில் கிடையாது. அனைத்து இறைத்தூதர்களும் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார்கள் என்கிறது ஒரு நபிமொழி.
இப்ராஹீம் (அலை) அவர்களின்
அறைகூவல்
புனிதமிகு (கஅபா எனும்) இறை ஆலயத்தை அல்லாஹ்வின் உத்தரவுக்கிணங்க இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) பூர்த்தியாக கட்டி முடித்தார்கள். “ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக!” (திருக்குர்ஆன்: 22:27) என்று அவர்களுக்கு அல்லாஹ் ஆணையிட்டான். அவர்கள் ஹஜ்ஜுக்கான அழைப்பை விடுத்தார்கள். அவ்வறிவிப்பை வானம் பூமிக்கிடையில் உள்ள சகலமும் கேட்டன. எந்த ஒரு மனிதர் அச்சமயம் பிறந்திருந்தாலும் சரி, அல்லது அப்போது பிறக்காமல் ஆலமே அர்வாஹில் அணுவாக இருந்தாலும் சரி, அந்த சமயத்தில் ( فَمَن لَبّى تَلْبِيَةً واحِدَةً حَجَّ حَجَّةً واحِدَةً، ومَن لَبّى مَرَّتَيْنِ حَجَّ حَجَّتَيْنِ، ومَن زادَ فَبِحِسابِ ذَلِكَ ) "லப்பைக்" (நான் ஆஜராகிவிட்டேன்) என்று ஒரு முறை கூறியவர் ஒருமுறையும், இருமுறை கூறியவர் இருமுறையும், பலமுறை கூறியவர் பலமுறையும் ஹஜ் எனும் புனிதக் கடமையை நிறைவேற்றுவார் என அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அல்ஹஜ் வசனம்-27
இப்ராஹீம் (அலை) உலக மக்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? என்ற சந்தேகம் நம் மனதில் எழலாம். இன்று மின் அலைகள் மூலம் தொலைவில் உள்ள ஒருவர் பேசுவதை மற்றவர்கள் கேட்கமுடிகிறது. ஒரு நாட்டில் இருந்து பல நாட்டிற்கு பலவிதமான செய்திகள் ஒளிபரப்பப்படுகிறது. அப்படியிருக்க உடனுக்குடன் செய்திகளை பரப்பக்கூடிய ரேடியோ, டி.வி, தொலைபேசி, ஃபேக்ஸ், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களை கண்டுபிடித்த மனிதனையே படைத்த அந்த அல்லாஹ்வுக்கு இப்ராஹீம் (அலை) அவர்களின் சப்தத்தை உலகம் முழுவதும் பரப்புவது கடினமான செயலாகாது அல்லவா?
பாவங்கள்
மன்னிக்கப்படும்
அம்ர் பின்
அல்ஆஸ் ((ரலி)) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான். அப்போது
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, “உங்கள் வலக்கரத்தை நீட்டுங்கள். நான்
உங்களிடம் உறுதி பிரமாணம் பைஅத் அளிக்கிறேன்” என்று கூறினேன். நபியவர்கள் தம் வலக்கரத்தை
நீட்டினார்கள். உடனே நான் என் கையை இழுத்துக் கொண்டேன். நபியவர்கள், ( مَا لَكَ يَا عَمْرُو ) “அம்ரே உனக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். நான், “சில நிபந்தனைகள் விதிக்க
விரும்புகிறேன்” என்று கூறினேன்.
நபியவர்கள், ( تَشْتَرِطُ بِمَاذَا ) “என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?” என வினவினார்கள். “என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட
வேண்டும்” என்று கூறினேன். அப்போது நபியவர்கள், ( أَمَا عَلِمْتَ أَنَّ الإِسْلاَمَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ
الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلَهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ ) “முந்தைய
பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; (ஹிஜ்ரத் எனும்) மார்க்கத்திற்காக நாடு துறத்தல் முந்தைய
பாவங்களை அழித்து விடும்; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?”
என்றார்கள். நூல்:- முஸ்லிம்-192
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( وَالْحَجُّ الْمَبْرُورُ
لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ ) (பாவச் செயல் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு
சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. அறிவிப்பாளர்:-
அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1773, முஸ்லிம்-2624, திர்மிதீ-738, நசாயீ-2575, இப்னுமாஜா-2879
பேராசான் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ
حَجَّ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ) (அருவருப்பான) ஆபாசப் பேச்சுக்கள், பாவ செயல்கள்
ஆகியவற்றில் ஈடுபடாமல் ஒருவர் ஹஜ் செய்தால் அவருடைய முன் பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-739
இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இறைதிருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, ஹஜ்ஜின் வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டிய முறைப்படியும் முழுமையாகவும், அகத்திலும் புறத்திலும் பேண வேண்டிய ஒழுக்க முறைகளைப் பேணியும், இஹ்ராம் அணிந்த நிலையில் செய்யக்கூடாத செயல்களை செய்யாமலும் வேறு பாவச் செயல்கள் எதுவும் புரியாமலும் நிறைவேற்றப்படும் ஹஜ் தான் (ஹஜ்ஜே மப்ரூர்) ஒப்புக்கொள்ளப்படக் கூடியதாக இருக்கும்.
மேலும், அறிஞர்கள் சிலர் பின்வருமாறு கூறுகின்றனர். ஒருவர்
தமது ஹஜ் வழிபாட்டை முடித்துவிட்டு திரும்பி வந்தபின் அவரது இப்போதைய நிலை ஹஜ் செய்வதற்கு
முன்னிருந்த அவரது நிலையைவிட நல்லதாக ஆகிவிட்டால் எடுத்துக்காட்டாக, முன்பு நல்லவராக இருந்தவர் ஹஜ் செய்த பின்பு இன்னும்
நல்லவராக மாறிவிட்டால் அல்லது முன்பு தவறுகள் புரிந்து கொண்டிருந்தவர் ஹஜ் செய்த பின்பு
திருந்தி நல்லவராக மாறிவிட்டால் அது அவரது ஹஜ் ஒப்புக்கொள்ளப்பட்ட "மப்ரூரான ஹஜ்"
என்பதற்கான அடையாளமாகும். நூல்:- ஃபத்ஹுல் பாரீ
மார்க்க நெறிகளை பேணிக்கொள்ளும்
ஒரு முஸ்லிம் அந்த பரிசுத்த ஆலயத்துக்கு செல்லும் முன் ஹஜ்ஜின் சிறிய, பெரிய அனைத்து சட்டங்களையும் முழுமையாக அறிந்து
இந்த மகத்தான கட்டளையின் தத்துவமென்ன என்று விளங்கி அதன் கிரியைகளைப் பரிபூரணமாக நிறைவேற்றினால்
அம்மனிதரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இறைநம்பிக்கையோடு வாழ்ந்து இறைநம்பிக்கையோடு
மரணிப்பார். அதில் சந்தேகமில்லை, ஏனெனில் சொர்க்கம்
செல்வதற்கு இறைநம்பிக்கை தான் அடிப்படையாக இருக்கிறது.
அறப்போரின் கூலி
ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறியதாவது. நான் (அண்ணல் நபி - ஸல் அவர்களிடம்) “நாயகமே! அல்லாஹ்வின் பாதையில் அறப்போர்
புரிவதையே (பெண்களாகிய) நாங்களும் சிறந்த செயலாக கருதுகிறோம். எனவே, நாங்களும் அறப்போரில்
கலந்து கொள்ளலாமா?” என்று வினவினேன்.
அதற்கு கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( لاَ،
لَكِنَّ أَفْضَلَ الْجِهَادِ حَجٌّ مَبْرُورٌ ) “(அவ்வாறு) இல்லை. எனினும்,
(பெண்களுக்கு) சிறந்த அறப்போர், (பாவச் செயல் எதுவும்
கலக்காத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ் தான்” என்றார்கள். நூல்:- புகாரீ-1520
கடமைகளில் வழிபாடுகளில்
மிக வீரியமானது (ஜிஹாத் எனும்) இறைவழியில் போர் புரிவது தான். தன் குடும்பம்,
உறவு, பிள்ளைகள், சொத்து சுகங்கள் அனைத்தையும் துறந்து இறைவனுக்காக
தன்னையே அர்பணிக்கின்ற பெரும் பணியை அறப்போரின் மூலம் மனிதன் நிகழ்த்துகிறான். அறப்போர்
வழங்குகின்ற தியாக உணர்வை தித்திப்பான நன்மைகளை புனித ஹஜ்ஜும் வழங்குவதாகவே மார்க்கம்
கூறுகின்றது. அதனால் தான் அறப்போர் செய்ய வாய்ப்பில்லாத பெண்களை அதற்கு ஈடுகட்டும்
வகையில் ஹஜ் செய்யச் சொல்லி இஸ்லாம் வலியுறுத்துகிறது.
மதீனாவில் வாழ்ந்த
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த நபிமொழியை செவியுற்றதிலிருந்து (நபியவர்களின் மரணத்திற்கு
பின்பு) தாம் மரணமடையும் வரை ஒரு ஆண்டுகூடத் தவறாமல் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்
என ஆதாரப்பூர்வமான வரலாறு கூறுகிறது.
இன்று நாம் பல இலட்சங்கள்
செலவு செய்து ஹஜ்ஜுக்கு செல்கிறோம். ஆனால், நம்முடைய முன்னோர்கள் ஹஜ் செய்வதற்கு பல
லட்சங்கள் செலவு செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَنْ حَجَّ لِلَّهِ
فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ ) யார் (அருவருப்பான)
ஆபாசப் பேச்சுக்கள், பாவ செயல்கள் ஆகியவற்றில் ஈடுபடாமல் அல்லாஹ்வி(ன் அன்பை பெறுவத)ற்காகவே
ஹஜ் செய்கிறாரோ அவர், தம்மைத் தம்முடைய தாய் ஈன்ற நாளில் இருந்ததைப் போன்று
(பாவமில்லாதவராகத்) திரும்புவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1521,
இப்னுமாஜா-2880
ஹஜ்ஜுடைய நாட்களில்
உலக சுகங்களை முழுமையாக மறந்து இறையச்சத்தோடு மட்டுமே வாழ வேண்டும். அப்போது ஏற்படும்
சிரமங்களை சகித்துக் கொள்ளவேண்டும். ஹஜ்ஜின் சிரமங்களை சகித்து கொள்வது அறப்போரின்
சிரமங்களை மேற்கொண்டதற்கு சம்மாகும் என்று இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
சண்டை சச்சரவு, தீய வார்த்தை இவைகளை
விட்டும் தவிர்த்து கொள்ளவேண்டும்.
சிபாரிசு செய்யும்
தகுதி
அபூமூசா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اَلْحَاجُّ يَشْفَعُ فِي أَرْبَعِ مِائَةِ أَهْلِ بَيْتٍ، أَوْ قَالَ
مِنْ أَهْلِ بَيْتِهِ ) ஒரு ஹாஜியின் சிபாரிசு
நானூறு குடும்பத்தினர்களுக்கு ஒப்புக்கொள்ளப்படும். அல்லது அவருடைய குடும்பத்தில் நானூறு
பேருக்கு ஒப்புக்கொள்ளப்படும். (அறிவிப்பாளருக்கு எந்த சொல்லை அண்ணலார் கூறினார்கள்
என்பது சந்தேகமே தவிர நானூறு என்ற எண்ணிக்கையில் சந்தேகமில்லை.) நூல்:- அத்தர்ஙீபு
வத்தர்ஹீபு, மஜ்மஉஸ் ஸவாயித் இமாம் ஹைஸமீ, அள்ளுஅஃபாஉல் கபீர்
இமாம் அல்அகீலீ
மறுமைநாளில் இறைத்தூதர்கள்,
இறைவழியில் உயிர் நீத்த தியாகிகள்,
மார்க்க அறிஞர்கள் ஆகியோருக்குத்
தான் பிற மக்களுக்கு சிபாரிசு செய்யும் தகுதி வழங்கப்படும் என்கிறது நபிமொழி. ஆனால், ஹஜ் கடமையை சிறப்பாக நிறைவேற்றிய ஒரு சாதாரண மனிதருக்கும் இந்த தகுதி வழங்கப்படும்
என்றல்லவா இந்த நபிமொழி கூறுகிறது. இதன் மூலம் இறைவனிடம் ஒரு ஹாஜிக்கு இருக்கும் மதிப்பை உணரலாம்.
விரைவாகச் செய்யட்டும்
மனிதர்களே! நீங்கள்
அனைவரும் எந்த நேரத்திலும் அல்லாஹ்வினுடைய உதவி தேவைப்பட்டவர்களாக இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ
உங்களுடைய தேவையற்றவனும், புகழுக்குரியவனுமாக
இருக்கிறான். திருக்குர்ஆன்:- 35:15
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَرَادَ الْحَجَّ
فَلْيَتَعَجَّلْ فَإِنَّهُ قَدْ يَمْرَضُ الْمَرِيضُ وَتَضِلُّ الضَّالَّةُ وَتَعْرِضُ
الْحَاجَةُ ) ஹஜ் செய்ய நாடியுள்ளவர்
அதை விரைவாகச் செய்யட்டும். ஏனெனில், (ஒருவேளை) அவர் நோய்வாய்ப்பட்டு
விடலாம். அல்லது அவருடைய வாகனம் காணாமல் போய்விடலாம். அல்லது அவசியமான தேவைகள் குறுக்கிட்டு
விடலாம். (அதன் காரணமாக ஹஜ் செய்ய முடியாமல் போகக்கூடும்.) அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ்
பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2874, முஸ்னது அஹ்மத்-1736, தாரிமீ
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ مَا يُوجِبُ الْحَجَّ ) "நாயகமே! ஹஜ் கடமையாக என்ன அவசியம்?" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( الزَّادُ وَالرَّاحِلَةُ ) "உணவு வசதியும், ஊர்தி வசதியும் (அவசியம்)" என்றார்கள். நூல்:- திர்மிதீ-741 இப்னுமாஜா-2887, தாரகுத்னீ
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் "அங்கு சென்று வரச் சக்தி பெற்றவர்கள்" (3:97) எனும் இறைவசனத்திற்கு விளக்கமளிக்கையில், "உணவு வசதியும், ஊர்தி வசதியும் உள்ளோர்" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-2888
புனித ஹஜ் யாத்திரை
மேற்கொள்ள விரும்புகின்ற ஒருவர்,
இயன்றவரை விரைவாக ஹஜ் செய்துவிட
வேண்டும். வாய்ப்புக் கூடிவரும்போதே செய்துவிட வேண்டும். காலம் தாழ்த்த, தாழ்த்த தடைகள் ஏதேனும் வந்து நிறுத்தி விடக்கூடும். பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு
விடலாம். அல்லது நோய்நொடி ஏற்பட்டுவிடலாம். அல்லது வேறு முக்கியமான அவசியமான வேலைகள்
குறிக்கிட்டுப் பயணம்போக முடியாமல் தடுத்து விடலாம். அல்லது மரணம் வந்து விடலாம். கொரானா
காலத்தில் ஹஜ் மற்றும் உம்ராவிற்காக பணமெல்லாம்
செலுத்திவிட்டு காத்துக்கிடந்த எத்தனையோ பேர் அதற்கான காலம் கனிவதற்கு முன்னர் இறந்துபோனார்கள்
என்பது கவனிக்கத்தக்கது.
பல சிறப்புகளை உள்ளடக்கிய
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதில் காலம் கடத்துவது முறையாகாது. இப்போ என்ன அவசரம் ஹஜ்
செய்வதற்கெல்லாம் வயது வேண்டும். தலைமுடிகளெல்லாம் நரைத்து வயோதிகமா வந்துவிட்டது?
பிறகு பார்க்கலாம் என்று வயதை
காரணம் காட்டி வசதி வாய்ப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் இருந்தும் காலதாமதப்படுத்துபவர்கள்
உடனடியாக ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் ஆவல் கொள்ள வேண்டும்.
ஹஜ் போன்ற நற்ச்செயல்களில்
நாம் ஈடுபட்டாலும் அல்லது ஈடுபடாமல் இறைவனை மறந்துவிட்டாலும் சரி, அல்லாஹ்வின் அந்தஸ்து கூடுவதுமில்லை, குறைவதுமில்லை. நாம் தான் அல்லாஹ்வின்பால் தேவையாகுவோமே
தவிர அல்லாஹ் நம்மிடம் தேவையாகுபவன் அல்லர். இதைதான் தலைப்பில் கண்ட திருவசனமும் மேற்காணும்
வசனமும் தெளிவுபடுத்துகிறது.
அலட்சியத்தின் விளைவு
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ وَلَمْ يَحُجَّ فَلاَ عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا ) இறையில்லம் சென்று வர உணவு வசதியும், வாகன வசதியும் பெற்றிருந்தும் ஹஜ் செய்யாதவர் யூதராகவோ, கிருஸ்தவராக மரணிப்பதை பொருட்படுத்த வேண்டியதில்லை. அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதி-740
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( لَقَدْ هَمَمْتُ أَنَّ أَبْعَثَ رِجَالًا إِلَى هَذِهِ الْأَمْصَارِ فَيَنْظُرُوا كُلَّ مَنْ كَانَ لَهُ جَدةٌ فَلَمْ يَحُجَّ، فَيَضْرِبُوا عَلَيْهِمُ الجِزْية، مَا هُمْ بِمُسْلِمِينَ. مَا هُمْ بِمُسْلِمِينَ ) இஸ்லாம் கைப்பற்றியுள்ள இந்நகரங்களில் சில ஆட்களை அனுப்பி ஹஜ் செய்ய சக்தியிருந்தும் ஹஜ் செய்யாமல் இருப்பவர்கள் யார்? யார்? என்று ஆய்வுசெய்து அவர்கள் மீது ஜிஸ்யா முஸ்லிமல்லாத குடி மக்களிடம் வசூலிக்கப்படும் வரி விதித்திட நான் நாடியுள்ளேன். இவர்கள் முஸ்லிம்கள் அல்லர். இவர்கள் முஸ்லிம்கள் அல்லர் என இருமுறை கூறினார்கள். அறிவிப்பாளர்:- ஹஸன் (ரலி) அவர்கள் நூல்:- தப்சீர் இப்னு கஸீர் ஆலு இம்ரான் வசனம்-97
போதுமான சக்தி இருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டவரிடம் இறைநம்பிக்கை இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று மேற்கூறிய நபிமொழியும், நபித்தோழர் சொல்லும் உணர்த்துகிறது. ஹஜ்ஜின் சிறப்புக்களை முறையாக விளங்கி அதை நிறைவேற்ற தீவிரம் கொள்ள வேண்டும்.
இறைவனிடம் மன்னிப்பு
பெற
நம்மிடம் போதிய வசதி வாய்ப்பு வந்து புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்டால் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் சில மக்களிடம் சென்று பாவமன்னிப்புத் தேட வேண்டும். என்ன பிற மக்களிடம் சென்று பாவமன்னிப்புத் தேடுவதா? ஆம்! நம்மை அறியாமல் சில பல தவறுகள் நாம் செய்திருப்போம். எனவே, ஒவ்வொருவரையும் சந்தித்து தாம் செய்த குற்றங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துச் சொல்லி என்னை இறைவனுக்காக மன்னித்து விடுங்கள். நான் இந்த வருடம் ஹஜ்ஜுக்கு செல்கிறேன். அங்கு சென்று உங்களுடைய வாழ்வின் வெற்றிக்கு பிரார்த்திக்கிறேன் என்று பணிவாக சொல்ல வேண்டும். ஏனென்றால், நம்மால் பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்காத வரை இறைவனும் நம்மை மன்னிப்பதில்லை என்பதை மறந்துவிட வேண்டாம்.
பிறகு நாம் ஹஜ்ஜுக்கு சென்று வாழ்நாளில் இதுவரை அல்லாஹ்வுக்கு சம்பந்தப்பட்ட கடமை (தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்றவை)களில் சரிவர நிறைவேற்றாமலும், மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியங்களை செய்ததன் மூலமும் பாவியாக இருப்போம். பாவங்கள் முழுமையாக நீங்க ஹஜ் கடமையை சரிவர நிறைவேற்றி அழுது தொழுது பாவ மன்னிப்புத் தேட வேண்டும்.
பகட்டும்,
தற்புகழ்ச்சியும்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பழைய சேணம் பூட்டப்பட்ட ஒட்டகத்தின் மீது (அமர்ந்து சவாரி செய்து) ஹஜ் செய்தார்கள். அதன் மீது ஒரு துணி போடப்பட்டிருந்தது. அது நான்கு வெள்ளிக்காசுகள் மதிப்புக் கூட பெறாது. அப்போது நபியவர்கள், ( اللَّهُمَّ اجْعَلْهُ حَجًّا، لا رِيَاءَ فِيهِ، وَلا سُمْعَةَ ) "இறைவா! இந்த ஹஜ்ஜை பகட்டோ, புகழ் விரும்புதலோ இல்லாத தூய்மையான ஹஜ்ஜாக ஆக்குவாயாக" என்று பிரார்த்தித்தார்கள். நூல்:- ஷமாயில் திர்மிதீ-334, இப்னுமாஜா 281, இப்னு அபீ ஷைபா
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் பகட்டையோ, பிறர் புகழ் பாடுவதையோ முற்றிலும் விரும்பாதவர்களாக இருந்தும் பணிவின் காரணமாகவும், மக்களுக்கு போதிப்பதற்காகவும் இவ்விதம் பிரார்த்தித்தார்கள்.
பிறருக்குக் காண்பிப்பதற்காக செயலாற்றியவரை அல்லாஹ் மறுமையில் அடையாளம் காண்பிப்பான். அதற்கான நற்கூலி கிட்டாது என்கிறது ஒரு நபிமொழி.
ஹஜ் செய்யும்போது
மனித மனங்களில் பகட்டும், தற்புகழ்ச்சியும்
ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதை விட்டும் தம்மை பாதுகாப்பதற்கு அல்லாஹ்விடம் தான் பிரார்த்திக்க வேண்டும் என்ற
கருத்தையும் இந்த நபிமொழியை தெளிவுப்படுத்துகிறது.
ஹஜ்ஜுக்கு செல்லும்
போது உலக ஆதாயம், புகழ், பிற மக்கள் நம்மை ஹாஜியார் என்று அழைக்க வேண்டும்
என்ற நோக்கத்தோடு முகஸ்துதிக்காக ஹஜ் பயணம் மேற்கொள்வதில் எவ்வித பயனும் இல்லை. இதனால்
அவர்கள் மேற்கொண்ட சிரமம், செலவழித்த பணமும்,
கால நேரமும் வீணாகி பாவம்
மட்டுமே வந்து சேரும். இறைப்பொருத்தத்தை மட்டும் நாடி ஹஜ் செய்திருந்தால் பாவங்கள் முழுவதும்
அழிக்கப்பட்டு நன்மைகள் பரிபூரணமாக வழங்கப்பட்டு அன்று பிறந்த குழந்தையைப் போல் திரும்பி
வரலாம்.
நம்மில் பலர் முறையாக
ஐவேளை தொழுகையை நிறைவேற்றுகிறோம். ஆனால் நம்முடைய பெயருக்கு முன்னோ அல்லது பின்னோ (முஸல்லி)
தொழுகையாளி என்று எழுதுவதில்லை. அதுபோல நம்மில் பலர் நோன்பு காலங்களில் முறையாக நோன்பு
நோற்கிறோம். ஆனால் நம்முடைய பெயருக்கு முன்னோ பின்னோ (ஸாயிம்) நோன்பாளி என்று எழுதுவதில்லை.
மாறாக, ஹஜ் கடமையை நிறைவேற்றிய பின்பு மட்டும் நம்மில் பலர் தங்களுடைய பெயருக்கு முன்னோ
பின்னோ ஹாஜி, ஹஜ்ஜை நிறைவேற்றியவர் என்று எழுதுகிறோமே இது நபிவழியா? அல்லது அதற்கு முரண்பட்டதா? என்று சிந்தித்தோமா?
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் தமது வாழ்நாளில் ஒருமுறை ஹஜ்ஜை நிறைவேற்றியுள்ளார்கள். நபித்தோழர்களில் பலர்
பலமுறை ஹஜ்ஜை நிறைவேற்றியுள்ளனர். எந்த நூலிலும் ஹாஜி நபி முஹம்மத் ((ஸல்)) அவர்கள்
என்று எழுதப்படவுமில்லை. எந்த பேச்சாளரும் அண்ணலாரை ஹாஜியார் என்று பேசியதுமில்லை.
ஆனால், நாம் நமது
பெயருக்கு முன் ஹாஜி என்று எழுதிக் கொள்கிறோம். ஹாஜியார் என்று பெருமையாக பேசிக் கொள்கிறோம்.
அதிலும் ஒருமுறை ஹஜ் செய்தால் ஹாஜி என்றும் பலமுறை ஹஜ் செய்தால் அல்ஹாஜ் என்று குறிப்பிட
வேண்டும் என சிலர் எண்ணுகின்றனர். இதுவெல்லாம் தவறான சிந்தனையாகும். இது நபிவழி அல்ல
என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
போதிய வசதி வாய்ப்பு இருந்தும் இன்னும் ஹஜ் செய்யாமல் இருப்பவர்கள் உடனடியாக ஹஜ் கடமையை பரிபூரணமாக நிறைவேற்ற வேண்டும்.
போதிய வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் ஹஜ் கடமை நிறைவேற்ற நிய்யத்து எனும் எண்ணமாவது வைக்க வேண்டும்.
ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றும் பாக்கியத்தை அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் வழங்குவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment