நிர்ப்பந்தம்
(இஸ்லாமிய) மார்க்கத்தில் நிர்பந்தமேயில்லை. ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எவ்வாறென்று) தெளிவாகிவிட்டது. திருக்குர்ஆன்:-2:256
இஸ்லாம் நிர்பந்தத்தை விரும்புவதில்லை. ஆனால், இன்றைய இந்திய தேசத்தை ஆளும் அரசு இஸ்லாமிய சமுதாயத்தை நோக்கி, "மாட்டிறைச்சி உண்ணாதே! முத்தலாக் கூறாதே! ஹிஜாப் அணியாதே! பள்ளிவாசலில் வெளி மைக் வைத்து பாங்கு சொல்லாதே! உமது பள்ளிவாசல்களை எங்களிடம் கொடுத்துவிடு!" என்றெல்லாம் பல்வேறாக நிர்பந்திக்கிறது.
பிறரை நிர்பந்தித்துபவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக!
இஸ்லாமிய மார்க்கம் மனித சமுதாயம் முழு சுதந்திரத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வழி காட்டும் மார்க்கமாகும். நிர்பந்தித்தல் என்பது மனிதனின் சுதந்திரத்திற்கும், மகிழ்ச்சிக்கும் குந்தகம் ஏற்படுத்திவிடும். ஆகவே இஸ்லாம் எந்த சூழ்நிலையிலும் நிர்பந்திப்பதை விரும்புவதில்லை. நிர்பந்த நிலைக்கு ஆளான மனிதனுக்கு தடுக்கப்பட்டவைக்கூட அனுமதிக்கப் பட்டவையாக மாற்றி அமைத்து சட்டத்தைத் தளர்த்திக் கொள்கிறது இஸ்லாம்.
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اَللَّهَ تَعَالَى وَضَعَ عَنْ أُمَّتِي اَلْخَطَأَ , وَالنِّسْيَانَ , وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ ) என்னுடைய சமுதாயத்தில் மறதியாகவோ, தவறுதலாகவோ அல்லது நிர்பந்தத்தின் காரணமாகவோ செய்யும் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா, ஹாகிம், புலூகுல் மராம்-1114
மத மாற்றம்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (மதீனா நகரில் இஸ்லாம் நுழைவதற்கு முன்பு) மதீனத்து அன்சாரிப் பெண்களிடம் ஒரு பழக்கம் இருந்தது. ஒரு பெண்ணுக்கு பலமுறை குழந்தை பிறந்து இறந்துவிடின், அவள் தனக்கு அடுத்த குழந்தை பிறந்து உயிருடன் வாழ்ந்தால் அதனை யூத மதத்தில் சேர்த்து விடுவதாக நேர்ச்சை செய்து, அதை செயல்படுத்தியும் விடுவாள்.
மதீனாவில் இருந்து "பனூ நளீர்" என்ற யூதக் குலத்தினர் (அவர்களின் தேச விரோத செயலுக்காக) அப்புறப்படுத்தப்பட்ட போது அவர்களிடம் மதீனத்து அன்சாரி முஸ்லிம்களின் பல பிள்ளைகள் இருந்து வந்தனர். அப்போது மதீனத்து அன்சாரிகள் "எங்கள் மக்களை யூதர்களுடன் வெளியேற அனுமதிக்க மாட்டோம்" என்று கூறினர். (யூதர்களாக மதமாறிய தங்கள் மக்களை இஸ்லாத்தில் இணைந்து விடுமாறு வற்புறுத்தினர்.) அம்மக்கள் தங்களை வளர்த்த யூதர்களுடன் தான் செல்வோம் எனக்கூறி இஸ்லாமில் இணைய மறுத்து விட்டனர். அப்போது தான் தலைப்பில் காணும் திருவசனம் அருளப்பட்டது. நூல்:- அபூதாவூத்-2682, தஃப்சீர் தபரீ
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் அஸ்பக் என்ற கிருஸ்தவ அடிமை இருந்தார். அவர் நற்குணமுடையவர். ஜனாதிபதி அவர்கள் அந்த அடிமையிடம் இஸ்லாமிய மாண்புகளை அவ்வப்போது எடுத்துரைப்பார்கள். அவரும் அதை மறுக்காமல் ஒப்புக்கொள்வார். திடீரென ஒருநாள் ஜனாதிபதி அவர்கள் அவரிடம் (யா அஸ்பக்! லவ் அஸ்லம்த்த தகூனு கைரன்) "அஸ்பக்கே! நீ முஸ்லிமாகிவிட்டால் அது உனக்கு சிறந்ததாக இருக்குமே!" அவ்வாறு நீ முஸ்லிமாகிவிட்டால் (உனது நற்குணத்தால்) நான் உன்னை அரசு உயர் பதவிகளில் அமர்த்துவதற்கு அது எனக்கு வசதியாக இருக்குமே! என்றார்கள்.
அப்போது அவர், “எஜமானே! நான் உங்கள் விசுவாசி தான்! இஸ்லாமும் மாண்புக்குரிய மார்க்கம் தான்! அதில் சந்தேகமில்லை. ஆனாலும் நான் கிருஸ்தவனாக இருக்கவே அதிகம் விரும்புகிறேன்” என்று உறுதியாக கூறினார். அப்போது ஜனாதிபதி அவர்கள் தலைப்பில் காணும் திருவசனத்தை ஓதிக் கொண்டே, “நீ எனது பணியாளராகவும், ஒரு கிருஸ்தவனாகவும் தொடரலாம்” என்று கூறினார்கள். நூல்:- தபக்காத் இப்னு சஅத், கன்ஸுல் உம்மால்,
இஸ்லாமியப் பிரச்சாரச் சாரலில் நனைந்து இஸ்லாம் எனும் கோட்டைக்குள் நுழைந்து அதன் இனிமையை சுவைத்தபோது தனது பிள்ளைகளுக்கும் இந்த இனிய சுவையை சுவைக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்ற பேராசையில் அந்த யூதர்களின் கொள்கையில் வாழ்ந்து வருகின்ற தனது பிள்ளைகளையும் இஸ்லாமின் பக்கம் அழைப்பு விடுத்து, தங்களோடு அனைத்து கொள்ளும் விதமாக அன்சாரித் தோழர்கள் தமது பிள்ளைகளை நிர்பந்தித்தபோது அல்லாஹுதஅலா அவ்விதமாக செய்ய வேண்டாம் என்றான்.
மக்களை இஸ்லாமின் பக்கம் அழைக்கலாம். ஆனால் இஸ்லாமை ஏற்குமாறு யாரும் யாரையும் நிர்பந்திக்கக் கூடாது. சத்தியம் எது? அசத்தியம் எது? என்று திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளும் மிக தெளிவாக எடுத்துரைத்து விட்டது. ஆகையால் இஸ்லாம் என்ற சத்தியத்தை எவரும் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். உலக மக்கள் அனைவரும் மிக இலகுவாகவும், தெளிவாகவும் விளங்கும் வண்ணம் இஸ்லாம் இருக்க, அதனை ஏற்றுக்கொள்ளுமாறு எவரையும் நிர்பந்திக்க வேண்டிய அவசியமில்லை.
எந்த ஆத்மாவும் அல்லாஹ்வின் அருள் (நாட்டம்) இன்றி இறைநம்பிக்கை கொள்ள முடியாது. திருக்குர்ஆன்:- 10:100
நேர்வழி காட்டுதல் என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது. அப்படியிருக்க, நாம் ஒருவரை இஸ்லாமை ஏற்றுக்கொள்! என்று நிர்பந்திப்பதின் மூலம் அவர் நேர்வழி பெற்றுவிட முடியாது. பெண், பணம், பதவி ஆகிய மோகத்தைக் காட்டி இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதும் பயன் தராது.
நம்மிடம் சகோதர சமயத்தவர்கள் அடைக்கலம் தேடி வந்தாலும் அல்லது அவசர உதவி கேட்டு வந்தாலும் அந்நேரத்தில் நீங்கள் முஸ்லிம்களாக மாறினால் தான் உங்கள் தேவையை நிறைவேற்றுவேன் என்று சூழ்நிலை கருதி அவர்களை நிர்பந்திப்பதும் சரியல்ல. சுருங்கக் கூறின், மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கலாம். ஆனால் நிர்பந்திக்கக் கூடாது.
உலகலாவிய நெறிகளில் தனியிடம் பெற்றுத் திகழும் இஸ்லாமின் மீது "பலவந்தமாக பரப்பப்பட்ட மார்க்கம் இஸ்லாம்" என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. நல்வழி, தீயவழி பற்றி தன் திருமறையில் தெளிவாய் விளக்கிய அல்லாஹுதஆலா மனிதனுக்குச் சிந்தனைத் திறனையும் வழங்கியுள்ளான் அவற்றை ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்த பலர் இஸ்லாம் ஒன்றே இறைநெறி என உணர்ந்து தன்னை தூய மார்க்கத்தில் இணைத்து கொள்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகின்கிறது.
கட்டாயத் திருமணம்
கன்சா பின்த் ஹிதாம் அல்அன்சாரிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது. கன்னி கழிந்த (விதவைப்) பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார். எனக்கு இதில் விருப்பமில்லை. ஆகவே நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று என் விருப்பத்தைக் கூறினேன். அண்ணலார் அந்தத் திருமணத்தை ரத்து செய்தார்கள். நூல்:- புகாரீ-5138
பெண்ணை வற்புறுத்தி மணமுடித்துக் கொடுக்கும் வழமையை அன்றே தள்ளி மிதித்து, பெண்ணின் அனுமதியின்றி நடத்தப்படும் திருமணங்களை ரத்து செய்யவும் அனுமதி வழங்கி, பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தது இஸ்லாம்.
இதிலிருந்து மணப்பெண்ணின் விருப்பமின்றி நிர்பந்தித்து அவளுக்கு திருமணம் செய்து வைப்பது கூடாது என்று அறிய முடிகிறது.
உங்களின் சிறு வயதிலேயே இன்னாருக்கு இன்னார் என்று பேசி வைத்துவிட்டோம். அதனால் நீ மாமா பிள்ளையைத் தான் அல்லது மாமி பிள்ளையைத் தான் மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்று கூறி பெற்றோர் பிள்ளைகளை நிர்பந்திக்கக் கூடாது.
நாங்கள் உனக்கு எதை சொன்னாலும் உன் நன்மைக்குத்தான் சொல்வோம். நீ இன்னாரை மணமுடித்துக் கொண்டால் உன் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று பெற்றோர் பிள்ளையிடம் அன்பாக எடுத்து சொல்லலாம் அது தவறில்லை.
மனம் விரும்பாத நிலையில்
பத்ருப் போர் தொடங்கும் முன் தம் தோழர்களிடம் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் "இந்த போரில் கலந்து கொள்வதற்காக பனூ ஹாஷிம் குலத்தாரை குறைஷிகள் நிர்பந்தமாக அழைத்து வந்துள்ளனர். நம்முடன் போரிடுவதற்கு அவர்களுக்கு விருப்பமில்லை. எனவே எவராவது பனூ ஹாஷிம் குலத்தாரை கண்டால் அவர்களை கொல்ல வேண்டாம். மேலும் எவராவது அபுல் பக்தரி இப்னு ஹிஷாம், அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ஆகியோரை கண்டாலும் அவர்களையும் கொல்ல வேண்டாம். இவ்விருவரும் நிர்பந்தமாகவே போர்க்களத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்." என்றார்கள்.
பத்ருப் போர் என்பது முஸ்லிம்களுக்கும் மக்கா இணவைப்பாளர்களுக்கும் இடையே நடந்த முதல் போர் என்பதால் இப்போரில் எவர் எதிர்பட்டாலும் கொல்வது என்ற முடிவுடன் நபித்தோழர்கள் இருந்தபோது தான் அண்ணலாரின் இந்த அறிவிப்பு வருகிறது.
மனம் விரும்பி ஒரு தவறை செய்தால் தான் அவனை தண்டிக்க வேண்டும். ஆனால் அவன் நிர்பந்தத்தால் அத்தவறை செய்து விட்டால், அவன் தண்டிக்கப்பட வேண்டியவன் அல்லர் என்பது தான் அண்ணலாரின் கருத்து.
கற்பழிப்பு
ஹுதைல் குலத்தாரிடம் ஒரு மனிதன் விருந்தாளியாக வந்து தங்கினான். அவர்களும் அவனுக்கு விருந்து உபச்சாரம் செய்தனர். ஆனால் அவன் நன்றி கெட்டத்தனமாக அக்குலத்தினரில் உள்ள ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்தான். ஆனால் அப்பெண் தன்னை தற்காத்துக் கொள்ள நிர்பந்த நிலையில் அவன் மீது ஒரு பெரும் கல்லை தூக்கிப் போட்டு அவனை கொன்று விட்டாள்.
இந்த வழக்கு ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் வந்தது. வழக்கை விசாரித்த ஜனாதிபதி அவர்கள் கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தினருக்கு நஷ்டயீடு கூட கொடுக்க தேவையில்லை. காரணம் ஒரு தன் கற்பை பாதுகாத்துக் கொள்ள நிர்பந்த நிலையில் ஒரு கொலையே செய்தாலும் தவறில்லை என்று தீர்ப்பளித்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்
உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்பப் பொருளை அடையவதற்காக விபச்சாரம் செய்யும்படி அவர்களை நிர்பந்திக்காதீர்கள். (அப்பெண்கள் தமது விருப்பத்திற்கு மாறாக) நிர்பந்தத்திற்குள்ளாகி (விபச்சாரம் செய்து) விட்டால், நிச்சயமாக அல்லாஹ் நிர்பந்தத்திற்குள்ளான அவர்களை மிக்க மன்னிப்பவனும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான். (எனினும் நிர்பந்தித்தவன் பெரும் பாவியாக ஆகிறான்.) திருக்குர்ஆன்:-24:33
சஃபிய்யா பின்த் அபீ உபைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஜனாதிபதி உமர் (ரலி) ஆட்சி காலத்தில் ஒருவன் ஒரு பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டான். ஆகவே ஜனாதிபதி அவர்கள் அவனுக்கு சாட்டையடி கொடுத்து அவனை நாடு கடத்தவும் செய்தார்கள். ஆனால் பலவந்தப்படுத்தி கற்பழிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை. நூல்:-புகாரீ-6949
ஒருவன் தன் வீட்டினரையோ, பணியாளர்களையோ கொலை, கொள்ளை, விபச்சாரம் போன்ற பாவச் செயல்களில் ஈடுபட வேண்டும் இல்லையெனில் உங்களை கொலை செய்து விடுவேன், அல்லது உடல் உறுப்புகளை சேதப்படுத்தி விடுவேன் என்று கூறி நிர்பந்தித்தால், மேலும் அவன் சொல்வதை செய்து விடும் கல்நெஞ்சக்காரன் தான் என்று உறுதியாக அறிந்திருந்தால், இது போன்ற நிலையில் நிர்பந்தத்திற்கு ஆளானவர்கள் அந்த பெரும் பாவங்களை செய்தாலும் அச்செயல்களை இஸ்லாம் மன்னித்து விடுகிறது.
இறைநம்பிக்கைக்கு எதிராக
ஒருநாள் அம்மார் (ரலி) அவர்கள் தேம்பி தேம்பி அழுதவராக அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நாயகமே! இணைவைப்போர் என்னை பிடித்து நெருப்புக்குள் தள்ளி "எங்களின் கடவுள்களை நீ புகழ வேண்டும்" என்று நிர்பந்தித்தனர். அக்கடுமையான வேதனையை தாங்க முடியாமல் நானும் அவ்வாறே கூறி விட்டேன். என் நிலை என்னவாகும்? என்று வினவினார்.
அண்ணலார், ( كَيْفَ تَجِدُ قَلْبَكَ؟ ) "அப்போது உனது உள்ளத்தின் நிலை எவ்வாறு இருந்தது" என்று வினவினார்கள். அம்மார் (ரலி) அவர்கள் அப்போது எனது உள்ளம் இறைநம்பிக்கையால் (ஈமானால்) நிம்மதி பெற்றிருந்தது என்று கூறினார். அதற்கு அண்ணலார், ( إِنَّ عَادُوا فَعُدْ ) “(அம்மாரே! கவலை வேண்டாம்.) அவர்கள் மீண்டும் உம்மை வேதனைப் படுத்தி இவ்வாறு சொல்ல சொல்லி நிர்பந்தித்தால் அவர்கள் விரும்புவதை கூறி விடுவீராக!” என்று கூறினார்கள்.
(ஆகவே) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர் அவன் அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றி கவனிக்கப்படும்)அவனுடைய உள்ளம் நம்பிக்கை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்திருக்க, எவருடைய நிர்பந்தித்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன் மீது யாதொரு குற்றமுமில்லை.) 16:106
இவர் தொடர்பாகவே மேற்காணும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது. நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர், பைஹகீ, உசுதுல் ஙாபா
உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் (4:29) என்ற திருக்குர்ஆன் வசனத்தைச் சுட்டிக்காட்டி இறைமறுப்பாளர்கள் தரும் தாங்க முடியாத துன்பங்களை ஏற்பதைவிட நாவால் மட்டும் இறைமறுப்பை வெளியிடுவது தவறாகாது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். நூல்:- ஃபத்ஹுல் பாரீ
இஸ்லாமிய விரோதிகள் நம்மை அடையாளம் கண்டு பிடித்துவிட்டால் அவர்களால் நமக்கு கடுமையான துன்பம் ஏற்படும் என்றோ அல்லது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றோ அஞ்சினால் அந்த நிர்பந்த நிலையில் நாமும் அவர்களைப்போல தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம். அல்லது வேறுவிதமாக வேடமிட்டுக் கொள்ளலாம் தவறில்லை. அல்லது அவர்கள் நம்மை சிறைப்பிடித்து அவர்களைப்போல நம்மையும் வழிபட சொல்லி கடுமையாக துன்புறத்துகின்றனர் என்றால் வெளிரங்கத்தில் அவர்கள் செய்வது போல் செய்யலாம். ஆனால் நமது உள்ளம் இறைநம்பிக்கையால் நிறைந்திருக்க வேண்டும். பிறகு அங்கிருந்து விடுபட்ட பின்னர் அல்லாஹ்விடம் முறையாக பாவமன்னிப்பு தேட வேண்டும்.
பஞ்ச காலத்தில்
அப்பாத் பின் ஷுரஹ்பில் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை எங்கள் பகுதியில் (கடுமையான) பஞ்சம் ஏற்பட்டது. அப்போது நான் மதீனா நகருக்கு வந்து ஒரு தோட்டத்திற்குள் சென்று அதிலுள்ள தானியக் கதிர்களை எடுத்து உதிர்த்துச் சாப்பிட்டேன். எனது ஆடையிலும் சேகரித்துக் கொண்டேன். அப்போது தோட்டத்திற்குரியவர் வந்து என்னை அடித்து எனது ஆடையையும் பறித்துக்கொண்டார். நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதனைக் கூறினேன்.
நபியவர்கள் அந்த தோட்டத்திற்குரியவரிடம், ( مَا أَطْعَمْتَهُ إِذْ كَانَ جَائِعًا أَوْ سَاغِبًا وَلاَ عَلَّمْتَهُ إِذْ كَانَ جَاهِلاً ) “இவர் பசியோடு இருந்தபோது இவருக்கு நீர் உணவளிக்கவில்லை. இவர் அறியாதவராக இருந்த போது இவருக்கு (திருடக்கூடாது) என்று கற்றுக் கொடுக்கவுமில்லை என்று கூறி அவரை கண்டித்தார்கள்.
( أَمَرَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَرَدَّ إِلَيْهِ ثَوْبَهُ وَأَمَرَ لَهُ بِوَسْقٍ مِنْ طَعَامٍ أَوْ نِصْفِ وَسْقٍ ) நபியவர்கள் அவரிடம் (எனது ஆடையை என்னிடம் கொடுத்துவிடுமாறு) நபியவர்கள் அவருக்குக் கட்டளையிட்டார்கள். ஆகவே, அவர் எனது ஆடையை என்னிடம் திருப்பிக்கொடுத்துவிட்டார். மேலும், ஒரு வஸ்க் (122.4 கி.கிராம்) அல்லது அரை வஸ்க் உணவுப் பொருளை எனக்கு வழங்குமாறும் அவருக்குக் கட்டளையிட்டார்கள். நூல்:- அபூதாவூத்2252, நசாயீ, இப்னுமாஜா-2289, முஸ்னது அஹ்மத்
பிறரது தோட்டத்தில் நுழைந்து அதிலுள்ளவற்றை உண்பதும், சேகரிப்பதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருந்தும் அவர் அவ்வாறு செய்ததற்காக கண்டிக்கவுமில்லை, தண்டிக்கவுமில்லை. தண்டித்த அந்தத் தோட்டத்திற்குரியவரைத்தான் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். அவருக்கோ போதுமான உணவுகளை கொடுத்து அனுப்ப கட்டளையிட்டுள்ளார்கள். இதிலிருந்து நிர்பந்த நிலையில் இருப்பவர்களுக்கு சில சட்டங்கள் தளர்த்தப்படும் என்பது தெளிவாகிறது.
இஸ்லாமிய சட்டப்படி திருட்டுக் குற்றத்திற்கு கையின் மணிக்கட்டு பகுதி வரை துண்டிக்கப்பட்ட வேண்டும். ஆனால் பஞ்ச காலத்தில் ஒரு மனிதன் பசிக் கொடுமை தாங்க இயலாமலும், குடும்பத்தின் வறுமை நிலையை சகித்துக் கொள்ள முடியாமலும் நிர்பந்த நிலையில் திருடி விட்டால் அவனது கரம் துண்டிக்கப்பட மாட்டாது. அவனை இஸ்லாம் மன்னித்து விடுகிறது.
கொலைக்கு கொலையே சரியானது என்று சொல்கின்ற இஸ்லாம், சில நிர்பந்த நிலைகளில் அந்த சட்டத்தையும் தளர்த்திக் கொள்கிறது. உதாரணமாக ஒருவன் தன்னுடைய பொருள்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், ஒருபெண் தன் கற்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் நிர்பந்த நிலையில் கொலை செய்து விட்டால் அதற்காக அவன் குற்றம் பிடிக்கப்பட மாட்டான். மேலும் ஒருவன் உண்ண வழியின்றி பசிக் கொடுமை தாங்க இயலாத நிர்பந்த நிலையில், (ஹராமான) தடுக்கப்பட்டவைகளை சாப்பிட்டு விட்டாலும் குற்றமில்லை. அவன் மன்னிக்கப்படுவான். இதுவே இஸ்லாமியத் தீர்ப்பாகும். காரணம் இஸ்லாம் நிர்பந்தத்தை அறவே விரும்புவதில்லை.
விலக்கப்பட்டவற்றை புசிப்பது
ஆகவே, உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி பசிக் கொடுமையினால் நிர்பந்திக்கப்பட்டு (விலக்கப்பட்டவற்றை புசித்து) விட்டால் (அது குற்றமாகாது.) திருக்குர்ஆன்:-5:3
அபூவாகித் அல்லைசீ (ரலி) அவர்கள் கூறியதாவது. சில நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நாயகமே! நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களுக்கு (கடுமையாகப்) பஞ்சம் ஏற்படுகிறது. எந்த நிலையில் எங்களுக்கு தாமாகவே செத்தவை அனுமதிக்கப்படும்? என்று வினவினார். அதற்கு அண்ணலார் "(உயிர் வாழ்வதற்கு தேவையான) காலையில் அருந்தும் பாலையும் மாலையில் அருந்தும் பாலையும் நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால் அதை உண்ணலாம்" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், தாரமீ
ஒரு நாளைக்கு இரு வேளை உணவாக எந்த தாவரமும் கிடைக்காதவர்கள், பால் போன்ற திரவ உணவுகூட கிடைக்காதவர்கள் உயிர் வாழ்வதற்காக விலக்கப்பட்டவைகளை உண்ணலாம் என்கிறது இந்த நபிமொழி.
ஒருவனுக்கு அவன் வசிக்கும் பகுதியில் எந்த உணவு பொருட்களும் கிடைக்கவில்லை அல்லது அந்த உணவுப் பொருட்களை வாங்கும் அளவுக்கு அவனுக்கு பொருளாதார சக்தி இல்லையெனில் அவனும் நிர்பந்தத்திற்கு ஆளானவனே.
ஒருவனுக்கு குறைந்த அளவே உணவு கிடைக்கிறது. ஆனால் அது அவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கு பசியைப் போக்க போதுமானதாக இல்லையெனில் அவனும் நிர்பந்தத்திற்கு ஆளானவனே. அவனும் விலக்கப்பட்ட உணவை உண்ணலாம்.
(இறைநம்பிக்கையாளர்களே!) தாமாக செத்தது, இரத்தம், பன்றி மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறி அறுக்கப்பட்டவைகள் ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்துள்ளான். ஆனால் (அவற்றை உண்ணுமாறு) ஒருவர் நிர்பந்திக்கப்பட்டால் அவர் வலியச் செல்லாமலும், வரம்பு மீறாமலும் (அவற்றை உண்பதால்) அவர் மீது எந்த பாவமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனும், மிகுந்த கருணையாளனும் ஆவான். திருக்குர்ஆன்:-2:173
நிர்பந்தத்திற்கு ஆளானோர் விலக்கப்பட்ட உணவுகளை உண்ணலாம் எனக் கூறிய இறைவன் அதற்கு இரண்டு நிபந்தனைகளையும் கூறுகிறான். அவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வலியச் செல்லாமலும், வரம்பு மீறாமலும் என்பதே அந்த இரு நிபந்தனைகள்.
தடுக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட ஆவல் கொண்டு இது போன்ற நிலையைத் தேடிச் செல்லக் கூடாது. பஞ்சம் ஏற்பட்ட இந்தப் பகுதிக்குச் சென்றால் தடுக்கப்பட்ட உணவுகளை ருசி பார்க்கலாம் என்று எண்ணுவது வலியச் செல்வதாகும்.
நிர்பந்த நிலையை அடைந்தோர் அதிலேயே நீடிக்கும் வகையில் நடக்கக்கூடாது. அந்த நிர்பந்த நிலையிலிருந்து விடுவிப்பதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும். அதற்காக முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சோம்பலாக இருந்து கொண்டு விலக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு கொண்டே இருந்தால் அது வரம்பு மீறலாகும்.
எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளில் வறுமையின் காரணத்தால் கூழுக்கும், பாலுக்கும் வழியின்றி எலும்பும் தோலுமாக மக்கள் காட்சியளிப்பதை ஊடகங்களின் வழியாக நாம் அறிகிறோம்.
நிர்பந்த நிலையிலுள்ள இந்த மக்களுக்கு எந்த உணவும் தடுக்கப்பட்டதன்று. இதை அம்மக்கள் விளங்கி கிடைப்பதையெல்லாம் உண்டால் அங்கு போதிய உணவின்றி இறக்கும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். அங்குள்ளவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாக இருந்தும் இந்த சட்ட சலுகையை அவர்கள் புரிந்து கொள்ளாததாலே அங்கு மக்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
நோயாளிகள்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் நோயுற்று (மயக்கமடைந்து) இருந்தபோது அவர்களது வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். உடனே அவர்கள் மருந்து ஊற்ற வேண்டாம் என்று எங்களுக்கு சைகை செய்யலானார்கள். நோயாளி மருந்தை வெறுப்பது போன்று (அண்ணலாரும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாமெனத் தடை செய்யவில்லை) என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்.
அவர்கள் மயக்கத்திலிருந்து (முழுமையாகத்) தெளிந்தபோது ( أَلَمْ أَنْهَكُمْ أَنْ تَلُدُّونِي ) "என் வாயினுள் மருந்து ஊற்ற வேண்டாமென்று நான் உங்களை தடுக்கவில்லையா?" என்று வினவினார்கள். நாங்கள் (ஆம்! தடுத்தீர்கள்) ஆனால் நோயாளி மருந்தை வெறுப்பதுப் போன்று தான் (நீங்களும் இதை வெறுத்து, ஊற்ற வேண்டாம் என்கிறீர்கள் என நாங்கள் நினைத்தோம்.) என்று கூறினர்.
அண்ணலார், ( لاَ يَبْقَى أَحَدٌ فِي الْبَيْتِ إِلاَّ لُدَّ ـ وَأَنَا أَنْظُرُ ـ إِلاَّ الْعَبَّاسَ، فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ ) "நான் பார்த்து கொண்டிருக்க ஒருவர் கூட விடுபடாமல் இந்த வீட்டிலுள்ள அனைவரது வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும் என்று கூறி விட்டு ஆனால் அப்பாஸ் (ரலி) அவர்களைத் தவிர! ஏனெனில் (மருந்தூற்றும்போது) உங்களுடன் அவர் கலந்து கொள்ளவில்லை" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-4458, திர்மிதீ-1970
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تُكْرِهُوا مَرْضَاكُمْ عَلَى الطَّعَامِ فَإِنَّ اللَّهَ تبارك و تعالى يُطْعِمُهُمْ وَيَسْقِيهِمْ ) நீங்கள் உங்களிடையேயுள்ள நோயாளிகளை உணவு உண்ணுமாறு வற்புறுத்தாதீர்கள். ஏனெனில் இறைவன் அவர்களுக்கு உண்ணவும், பருகவும் கொடுக்கின்றான். அறிவிப்பாளர்:- உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1963
நோயாளியின் உடல் இயக்கம் நோயை எதிர்த்துப் போராடுவதிலும், பசியின்மையாலும், ஜீரண உறுப்புகளின் செயலற்ற தன்மையாலும் தான் அவர் உணவின் மீது வெறுப்புற்று உண்ணவும், பருகவும் மறுக்கிறார். இந்நிலையில் அவரை உண்ணுமாறு வற்புறுத்தும்போது மேலும் அது அவருக்கு சிரமமாகி விடும்.
ஒரு முஸ்லிம் நோயாளி இறைநம்பிக்கை மீதுள்ள நற்சிந்தனையும், நாம் அவரிடம் நல்லவிதமாக பேசும் பேச்சும், சுற்றுப்புற சூழலும் அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த மகிழ்ச்சியே அவருக்கு உணவாகிறது. மகிழ்ச்சி இரத்தத்தை இளக வைப்பதால் அவரது நாளங்களில் இரத்தம் சுலபமாக ஓடுகிறது. அதனால் உடலில் சுறுசுறுப்புமும், சக்தியும் உண்டாகிறது. இதைத்தான் அல்லாஹ் நோயாளிக்கு உண்ணவும், பருகவும் கொடுக்கிறான் என்கிறது இந்த நபிமொழி. அதிக இறைநம்பிக்கை கொண்ட ஒரு நோயாளிக்கு இவ்வாறே அல்லாஹ்விடமிருந்து ஆன்மீகச் சத்துணவு கிடைத்துக் கொண்டே இருக்கும்.
அங்கத்தூய்மை
உளூ எனும் அங்கத்தூய்மை செய்வதற்கும், பெருந்துடக்கான நிலையில் குளிப்பதற்கும் போதிய தூரம் தேடிப் பார்த்தும் தண்ணீர் கிடைக்கவில்லை என்றாலோ, தண்ணீர் இருந்தும் அதைப் பயன்படுத்த இயலாதவாறு உடலில் நோய்கள் இருந்தாலோ, கடுமையான குளிரின் காரணத்தால் தண்ணீர் பயன்படுத்தினால் உடலில் பாதிப்பு ஏற்படும் என்றிருந்தாலோ அந்த நிர்பந்த நிலையில் தயம்மும் செய்து தொழலாம். இன்னபிற வணக்கங்களும் செய்யலாம். குளிப்பு கடமையையும் நீக்கிக் கொள்ளலாம் என்று இஸ்லாம் போதிக்கிறது. இரு கைகளை சுத்தமான மண்ணில் அடித்து முகத்திலும், இரு கைகளிலும் தடவிக் கொள்வது இதுவே தயம்மும் ஆகும்.
மணவிலக்கு - மறுமணம்
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று கூறி பெண்ணை நிரந்தர குடும்பக் கைதியாக்க இஸ்லாம் ஒருபோதும் விரும்பவில்லை. திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அதனால் வாழ்க்கையில் திருமணம் என்பது ஒருமுறை மட்டும் தான் என்றெல்லாம் இஸ்லாம் வேதாந்தம் பேசுவதில்லை.
இந்து மத வேதமும், கிருஸ்தவத்தில் ஒரு பிரிவினரும் மணவிலக்கை கூடாது என கடுமையாக எதிர்க்கின்றனர். சில சமயத்தவர்கள் பெண்ணின் மறுமணத்தையும் கூட எதிர்க்கின்றனர்.
இஸ்லாமிய பார்வையில் திருமணம் என்பது "ஒரு வலுவான ஒப்பந்தம்" ஆகும். ஆனால் அந்த வலுவான ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்ட இல்லற வாழ்க்கையில் தம்பதியருக்கிடையே நல்லுறவு முழுமையாக பாதிக்கப்பட்டு சுமுகமாக வாழ இயலாத நிலை ஏற்பட்டுவிட்டால் அவர்கள் இருவரும் முறையாக மணவிலக்கு மூலம் பிரிந்து செல்லலாம். இது விஷயத்தில் இவர்களை யார் நிர்பந்தித்தாலும் அதற்கு இவர்கள் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. அதனால் தான் இஸ்லாம் மணவிலக்கின் வகைகளை தலாக், குலா, ஃபஸ்க் என பல வகைகளாக பிரித்து இலகுப்படுத்தி உள்ளது.
சுறுங்கக்கூறின், இஸ்லாம் நிர்பந்தத்தை எந்த சூழ்நிலையிலும் விரும்புவதில்லை. காரணம் நிர்பந்தம் என்பது மனித சுதந்திரத்திற்கு எதிரானது. ஆகவே இஸ்லாமிய மாண்புகளை முறையாக விளங்கி அதன் பிரகாரம் வாழ, நமக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, நீலாங்கரை, சென்னை. செல்-9840535951
No comments:
Post a Comment