வருந்துவோம்! திருந்துவோம்!
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ
الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அல்லாஹ்வின்பால் நீங்கள்
அனைவரும் பாவமீட்சி தேடிக் கொள்ளுங்கள். திருக்குர்ஆன்:- 24:31
பாவம் என்பது எண்ணங்களாலும், செயல்களாலும் மார்க்கத்தால்
தடை செய்யப்பட்ட விரும்பத்தகாத செயல்களை செய்வதாகும். பாவங்களின் விளைவுகளை நாம் அறிய
வேண்டும். அவை மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே
திரையென நிற்கின்றன என்று உணர வேண்டும். இத்திரையை நீக்க ஒரே வழி செய்த குற்றத்தை எண்ணி
மனம் வருந்தி மன்னிப்பு கோருவதாகும்.
இன்றைய நாகரீக உலகில் மனிதனுக்கு மனிதன் சிறு தவறுகள் இழைத்துவிட்டால்கூட உடனுக்குடன்
"ஸாரி" வருந்துகிறேன் என்று சொல்லி விடுகிறோம். வேறு சிலர் "மனம் பொறுத்துக்
கொள்ளுங்கள்" என்றெல்லாம்கூட சொல்லுவதுண்டு. இப்படி சொல்வதனால் அந்த தவறின் மூலம்
ஏற்படும் மனஸ்தாபங்களை அல்லது வேதனையை மறந்துவிடுவதை அன்றாடம் பார்க்கிறோம். நற்பண்புகளில்
ஒன்றாக தவறுக்கு வருந்தும் பழக்கத்தை கருதுவதால் தான் சிறு பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே
அதை கற்றுக்கொடுக்கிறோம்.
மனிதன் மனிதனிடமே பாவமன்னிப்பு கேட்பதை இவ்வளவு உயர்வாக கருதும்போது இறைக்கட்டளையை
நிறைவேற்றாதபோதும், இறைவனால் விலக்கப்பட்ட
செயல்களை செய்யும்போதும் இறைகோபத்திற்கு ஆளாக நேரிடமே என்று பயந்து மன்னிப்புகோருவது
எவ்வளவு முக்கியமானது என்பதை சிந்தித்துணர வேண்டும்.
ஸஃபர் மாதத்தை பீடையென கருதுவோர் கவனத்திற்கு: மார்க்க அடிப்படையற்ற மூடநம்பிக்கைகளை உண்மையென நம்பி, செயலாற்றுவது பாவமே ஆகும். அதற்குரிய மன்னிப்பு அதை விட்டொழிப்பதேயாகும்.
மனித இயல்பு
மனிதர்கள் எல்லோரும் குற்றம் செய்பவர்கள் தான். செய்த பாவம் பிற மனிதர்களின் உரிமை
தொடர்பானதாக இருந்தால் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்குவதன் மூலம் அந்த பாவத்திற்கு
பரிகாரம் ஆகிவிடும். செய்த பாவம் இறைவன் தொடர்பானதாக இருந்தால் சிந்தை நொந்து இறைவனிடம்
பாவமன்னிப்பு கோர வேண்டுமென்பதே இஸ்லாம் கூறும் வழிமுறையாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ
الْخَطَّائِينَ التَّوَّابُونَ ) மனிதர்கள்
ஒவ்வொருவரும் அதிகமாக தவறிழைப்பவர்கள் தான். ஆயினும், தவறிழைப்போரில் சிறந்தோர் யாரெனில், பாவமன்னிப்பு கோரி, பாவமீட்சி பெறக்கூடியவர்கள் தான். அறிவிப்பாளர்:-
அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2423
ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு நேர்ந்துவிட்ட குற்றத்தை உணர்ந்து மனம்வருந்தி
கண்ணீர்விட்டு இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்கள். மன்னிப்பு வழங்கப்பட்டு புதுமனிதராகத்
திகழ்ந்தார்கள்.
தவறு செய்யும்போது மனசாட்சி இறைவனின் குரலாக இருந்து அவனை ஓங்கி அடிக்கிறது. இந்த
நேரத்தில் அவன் பாவமன்னிப்பு கோரினால் அவன் திருந்திய மனிதனாக தவறிழைத்தோரில் சிறந்தவனாக
மாறி இறைவனுக்கு உவப்பானவனாகிறான்.
நபி ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட அன்றைய தினம் ஷைத்தான் குற்றம் புரிந்தான்.
ஆனால், இன்றுவரை அதற்காக அவன் மனம்வருந்தி மன்னிப்பு தேடவில்லை. எனவே, செய்த குற்றத்திற்கு மன்னிப்பு தேடாமல் இருப்பது ஷைத்தானின் குணம் என்பது தெளிவாகிறது.
ஒருவர் ஒரு பாவத்தை செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே அநீதியிழைத்துவிட்டு பின்னர்
(அதிலிருந்து விலகி உண்மையாகவே கைசேதப்பட்டு) அவர் அல்லாஹ்விடம் மன்னிப்புகோரினால்
அல்லாஹ்வை (அவருடைய குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும், மிகுந்த கருணையாளனாகவும் காண்பார். திருக்குர்ஆன்:- 4:110
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللَّهِ
فَإِنِّي أَتُوبُ فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ ) மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருங்கள்.
ஏனெனில், நான் ஒவ்வொரு நாளும் அவனிடம்
நூறு முறை பாவமன்னிப்பு கோருகிறேன். நூல்:- முஸ்லிம்-5235
நபியே! உங்களது முன் பின்னுள்ள தவறுகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விட்டான்.
திருக்குர்ஆன்:- 48:2
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சிலவேளைகளில் உலக விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.
குடும்பம் மற்றும் சமுதாய பிரச்சனைகளை கவனிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் நபியவர்கள்
கவனம்செலுத்தி வந்தார்கள். இவை நற்செயலாக இருப்பினும் நபியவர்களின் கவனம் வேறுபக்கம்
திரும்புவதால் நாள் ஒன்றுக்கு நூறு முறை பாவமன்னிப்பு கோரியுள்ளார்கள். அப்படியானால்,
பாவத்திலேயே சுழன்று கொண்டிருக்கும் நாமெல்லாம்
நாளொன்றுக்கு பல்லாயிரம் முறை பாவமன்னிப்பு கோரினாலும் போதாது அல்லவா?
பரிபூரணமான நற்கூலி பெற
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து தொழுகையை முடித்தவுடனே (அஸ்தங்ஃபிருல்லாஹ்)
"இறைவா! என்னை மன்னிப்பாயாக!" என்று மூன்று முறை கூறுவது பழக்கமாகும். நூல்:-
முஸ்லிம்-1037
இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் சேர்த்துக்கொண்டு
இறை உத்தரவுக்கிணங்க இறை ஆலயத்தை கட்டி முடித்தவுடன் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரினார்கள்
என்று இறைமறை (2:128) இயம்புகிறது.
இதன் அடிப்படையில் பொதுவாகவே நாம் எந்த நற்செயலை செய்து முடித்த பிறகும் பாவமன்னிப்பு
கோரவேண்டும் என விளங்குகிறது. ஏனெனில், நாம் செய்த நற்செயலில் அறியாவண்ணம் ஏதேனும் குறை ஏற்பட்டிருக்கலாம். அந்தக் குறையை
கண்டு கொள்ளாமல் பரிபூரணமான நற்கூலியை இறைவன் வழங்குவதற்கு அவனிடம் பாவ மன்னிப்பு கோருவது
முறை தானே!
நான் செய்த நற்செயலில் எந்த குற்றமும் இல்லை என்றும், அச்செயல் இறைவனிடம் ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது என்றும் எவரேனும்
உறுதியாக சொல்லமுடியுமா? எந்த நற்செயலையும்
செய்ததற்கு பின்னர் தற்பெருமை ஏற்படக்கூடாது. மேலும், நற்செயலில் ஈடுபட முடியாதவர்களை ஏளனமாக பார்க்கக்கூடாது. பாவமறியாத
பல இறைதூதர்களும் பாவமன்னிப்பு கூறியுள்ளார்கள் என்று திருக்குர்ஆன் இயம்புகிறது.
இறைவனிடம் பேசும் வாய்ப்பினைப் பெற்ற நபி மூசா (அலை) அவர்கள் தமக்காகவும்,
தம் சகோதரருக்காகவும் பாவமன்னிப்பு கோரியுள்ளார்கள்.
திருக்குர்ஆன்:- 7:151
தம் மகனை வெள்ளப்பெருக்கிலிருந்து காப்பாற்றுவதற்காக முறையிட்டதை இறைவன் கண்டிக்க,
நபி நூஹ் (அலை) இறைவனிடம் பாவமன்னிப்பு கோரியுள்ளார்கள்.
திருக்குர்ஆன்:- 11:47
மாபெரும் இருளான மீன் வயிற்றுக்குள்ளிருந்து நபி யூனுஸ் (அலை) அவர்கள் இறைவனிடம்
பாவமன்னிப்பு கோரியுள்ளார்கள். திருக்குர்ஆன்:- 21:87
கனிவான குரல்வளம் பெற்றிருந்த நபி தாவூத் (அலை) அவர்கள் இறைவனிடம் பாவமன்னிப்பு
கோரியுள்ளார்கள். திருக்குர்ஆன்:- 38:24
அட்டத்திசையும் போற்ற அரசோச்சிய நபி சுலைமான் (அலை) அவர்கள் இறைவனிடம் பாவமன்னிப்பு
கோரியுள்ளார்கள். திருக்குர்ஆன்:- 38:35
இறைத்தூதர்கள் பாவம் புரிந்தார்கள் என்று சொன்னால் நம்முடைய இறைநம்பிக்கைக்கு பங்கம்
வந்துவிடும். அதனால் இறைத்தூதர்களுக்கு நேர்ந்துவிட்ட பாவம் என்றே சொல்ல வேண்டுமென
அறிஞர்களில் சிலர் கூறுகிறார்கள்.
சிறப்புப்பெற்ற இறைத்தூதர்களெல்லாம் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரியுள்ளார்கள் என்று
எண்ணும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்.
"உனது மன்னிப்பு மட்டும் இல்லையெனில் சொர்க்கம் காலியாகவும் வெறிச்சோடியும்
கிடைக்கும்" என்பது ஒரு உருதுக் கவிதை. பாவக்கரை படாத மனிதர்கள் எவரும் இல்லை
என்றாகி விட்டபோது இறைவனின் மன்னிப்பின்றி எவர் தான் சொர்க்கம் செல்ல முடியும்.
பிற்படுத்த வேண்டாம்
ஓரிறைக் கொள்கையை மறந்து வாழ்ந்த நைநுவா நகர மக்களுக்கு நேர்வழியை காண்பிக்க,
அல்லாஹ் நபி யூனுஸ் (அலை) அவர்களை இறைதூதராக அனுப்பி
வைத்தான். நபியவர்களின் இறை அழைப்பிற்கு அம்மக்கள் செவிசாய்க்கவில்லை. இறுதியாக,
யூனுஸ் (அலை) அவர்கள் "நாளை காலை இறைவனின் தண்டனை
இறங்கும்" என்று எச்சரித்துவிட்டு அவ்வூரைவிட்டு சென்று விட்டார்கள். பொழுதுப்
புலர்ந்தது. அவ்வூருக்கு மேலே கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன. கரும்புகை சூழ்ந்தது. இவற்றை
கண்ணுற்ற ஊரார் தண்டனை தங்களை சூழ்ந்து கொண்டதை உணர்ந்து கொண்டனர்.
வேதனையை விட்டும் தப்பிக்க யூனுஸ் (அலை) அவர்களை தேடினர். அவர்களை கண்டுபிடிக்க
இயலவில்லை. அல்லாஹ் அம்மக்களுக்கு பாவமன்னிப்பின் சிந்தனையை அருளினான். தத்தமது வீட்டார்கள்,
பிள்ளைகள் என அனைவரும் அங்கிருந்த பெரிய மைதானத்தில்
ஒன்றுகூடி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, கதறி அழுது பாவ மன்னிப்பு கோரினர். அல்லாஹ் அவர்கள் மீது இரங்கினான். அவர்களின்
இறைஞ்சுதலை ஏற்றுக்கொண்டான். இந்த வரலாற்றை திருக்குர்ஆன் (10:98) கூறுகிறது.
நைநுவா நகர மக்கள் பாவமன்னிப்பு கோருவதை சற்றுநேரம் பிற்படுத்தியிருந்தாலும் அவர்கள்
அழிந்தே போயிருப்பார்கள். அவர்கள் உரிய நேரத்தில் பாவமன்னிப்பு கோரியதால் காப்பாற்றப்பட்டார்கள்.
பாவமன்னிப்பு கோருவதற்கு நாள், நட்சத்திரம் பார்க்க
தேவையில்லை. இன்றே! இப்பொழுதே! பாவமன்னிப்பு கேட்டு ஈடேற்றம் பெறுவது அவசியம்.
சக்ராத் எனும் இறுதி போராட்ட நிலையை அடைவதற்கு முன்புவரை பாவமன்னிப்பு ஏற்கப்படும்.
அந்த நிலைக்கு பிறகு அல்லது மரணம் முத்தமிட்ட பிறகு பாவமன்னிப்பு கோரினால் அது பயனளிக்காது
என்பதை திருமறை வசனம் (4:10) எச்சரிக்கிறது.
மன அமைதி
உடல் நோய்களைப் போன்றே மன நோய்களும் மனிதனை மிகவும் பாதிக்கின்றன. நரம்புத் தளர்ச்சி,
குற்றவுணர்வு, தற்கொலை எண்ணம், சைக்கோ மனிதனாக மாறுவது ஆகியவை இந்த நோயின் விளைவுகள் ஆகும். இந்த நோயை குணப்படுத்த
மனப்பகுப்பு சிகிச்சை முறையே பயனுள்ள தீர்வாகும் என டாக்டர் ஃபிர்வேட் கூறுகிறார்.
மனநோய் சிகிச்சை முறையைப் பற்றி சுருக்கமாக விளக்குவதென்றால் இப்படிச் சொல்லலாம். மனநோய்
குணமாக முதலில் முழு ஓய்வு தேவை.
மாத்திரைகள் மூலமோ அல்லது தூங்க வைப்பதின் மூலமோ நோயாளியை முழு ஓய்வெடுக்கச் செய்யலாம்.
முழு ஓய்வுக்குப் பிறகு மனநோய் மருத்துவரிடம் மனதிலுள்ள அனைத்தையும் நோயாளி கொட்டி
விடுவான். அவன் செய்த தவறுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் தானாகவே முன்வந்து ஒப்புக்கொள்வான்.
இதன் மூலம் அவனது மனக்குறைகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுவிடும். கொஞ்சம் கொஞ்சமாக தன்
குற்றங்களை அவன் உணரத் தொடங்கி மனதிலுள்ள பாரம் குறையும்போது மன அமைதி அடைகிறான். அவனைப்
பழிப்பதை அவன் அறிவு நிறுத்திக் கொள்கிறது. இதனால் நோயாளியின் நிலை திருந்துகிறது.
சுகம் காண ஆரம்பிக்கிறான்.
ஒரு மனிதன் தான் செய்த தவறுகள் மற்றொரு மனிதனிடம் சொல்லி ஒப்புக் கொள்வதால் அல்லது
கவலைகளை நண்பருடன் பகிர்ந்து கொள்வதால் மனதிலுள்ள பாரம் இறங்கி அவனால் சந்தோஷமாக வாழ
முடியுமெனில், இறைவனிடம் தன் பாவங்களைச்
சொல்லி பாவமன்னிப்புக் கோருவதால், அந்த மகிழ்ச்சி ஏன்
மனிதனுக்கு ஏற்பட முடியாது? மனநோய் சிகிச்சை முறையை
விட "இஸ்திக்ஃபார்" எனும் பாவமன்னிப்பு கோரும் முறை ஆழ்ந்த அர்த்தமுள்ளது.
நோயாளி மருத்துவரிடம் தன் குற்றங்களை ஒப்புக் கொள்வதைவிட இறைவனுக்கு முன்னால் பிழைகளை
ஒப்புக் கொள்வது மிகுந்த பயனைத் தரும்.
மனப்பகுப்பு சிகிச்சை முறையில் நோயாளியின் வாயைக் கிளற வலுக்கட்டாயம் பிரயோகிக்கப்படுகிறது.
ஆனால், இஸ்திக்ஃபார் எனும் பாவமன்னிப்பில்
எவ்வித பலாத்காரமின்றி எளிய முறையில் நோயாளி ஒப்புதல் அளித்து விடுகிறான். மருத்துவரிடம்
மனப்பளுவை இறக்கி வைத்த பின் மனிதன் உணரக்கூடிய மன சாந்தியைவிட, இறைவனிடம் பாவமன்னிப்பு கோரிய பின் ஏற்படும் ஆனந்தம்
பரம திருப்தியை தரவல்லது.
பெரிய விபரீதம்
கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் சிறிய பாவங்களை குறைத்து மதிப்பிடுவது ஓர் மலையடிவாரத்தில் சிறு சிறு விறகுககளை சேகரித்து, அதில் தீ மூட்டி ரொட்டி சுடுவதை போன்றாகும். சிறிய பாவங்களை வழமையாக்கிக்கொண்டால் அது அவனை அழிவின் பக்கம் அழைத்து சென்றுவிடும். அறிவிப்பாளர்:- ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள் நூல்:- அத்தவ்பா
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( إِنَّكُمْ لَتَعْمَلُونَ أَعْمَالاً هِيَ أَدَقُّ فِي أَعْيُنِكُمْ مِنَ الشَّعَرِ، إِنْ كُنَّا نَعُدُّهَا عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم الْمُوبِقَاتِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ يَعْنِي بِذَلِكَ الْمُهْلِكَاتِ ) நீங்கள் சில பாவச் செயல்களை புரிகின்றீர்கள். அவை உங்கள் பார்வையில் முடியைவிட மிக மெலிதாக தோன்றுகின்றன. ஆனால் அவற்றை நாங்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பேரழிவை ஏற்படுத்துபவை என்றே கருதினோம். நூல்:- புகாரீ-6492
பெரிய பாவங்கள் நிகழ்ந்தால் தான் பாவமன்னிப்பு கோர வேண்டும் என்று எண்ணி விடக்கூடாது.
மனித வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கவனக்குறைவால் சிறிய, பெரிய பாவங்கள் நிகழ்வதால் அவன் எப்போதும் பாவ மன்னிப்பின் பக்கம்
தேவையுடையவனாகவே இருக்கிறான்.
எளியோரை எள்ளி நகையாடுவது, நல்லோரை நையாண்டி
செய்வது, தீயவரை பாராட்டுவது,
பேருந்துகளில் பயணிக்கும்போது எச்சில் துப்பி,
பின்னால் இருப்பவருக்கு இலவசமாக பன்னீர் தெளிப்பது,
மழைக்காலத்தில் வாகனங்களில் பயணிக்கும்போது பிறர்
மீது சேற்றை வாரி இறைப்பது, பிறர் மனம் நோகும்படி
பேசுவது, மக்கள் நடமாடும் சாலைகளில்
ஒருவரை கைத்தட்டி அழைத்து பலருக்கு தொல்லை கொடுப்பது, பிறருக்கு மிஸ்டு கால் மற்றும் SMS தொடர்ந்து கொடுத்து தொல்லை கொடுப்பது, இவ்வாறு பாவப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இதுபோன்ற செயல்களை நாம் சாதாரணமான குற்றங்களாக கருதலாம். இல்லை! இவைகளை குற்றங்களாகவே
கருதுவதில்லை. ஆனால், இதனை தொடர்ந்து செய்யும்
காரணத்தால் இது பெரிய குற்றமாக பாவிக்கவேண்டும். எனவேதான், தொடர்ந்து செய்யப்படும் சிறு குற்றங்கள் சிறுபாவங்கள் அல்ல.
மாறாக, அவை பெரும் பாவங்களே! என்று
அறிஞர்களில் சிலர் கூறியுள்ளனர்.
ஒரே ஒருமுறை செய்யப்பட்ட பெரும் பாவம் தொடர்ந்து செய்யப்படும் சிறு பாவத்தைவிட தாழ்ந்தது. இந்த சிறிய பாவத்தினால் விளையும் விபரீதம், அந்த பெரிய பாவத்தினால் விளையும் விபரீதத்தைவிட எத்தனையோ மடங்கு கொடியதாகும். பெரும் பாவங்கள் ஒவ்வொன்றையும் சிறு பாவங்கள் தான் அழைத்து வருகின்றன என்று கூறினால் மிகையாகாது.
இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் இதற்கு உதாரணம் கூறி, இதோ விளக்குகிறார்கள். ஒரு செங்கல்லை எடுத்துக்கொள். அதன் மீது
முழு தண்ணீரையும் ஒரே சமயத்தில் கொட்டி விடாமல் துளித்துளியாக வடிய செய்ய வேண்டும்.
இந்த வேலையை தொடர்ந்து செய். சில நாள்களுக்கு பின் அக்கல்லை எடுத்துப்பார். அப்போது
நீயே ஆச்சரியப்படுவாய்! நீர் துளி தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த இடத்தில் சிறியதோர்
பள்ளத்தை காண்பாய். ஆனால், அந்த கல்லின் மீது
ஒரே சமயத்தில் நீ எவ்வளவு தண்ணீரை கொட்டினாலும் அதனால் அந்த கல்லில் எவ்வித மாற்றமும்
ஏற்படாது.
இதுபோன்று பெரும் பாவத்தினால் உண்டாகும் விளைவை தொடர்ந்து செய்யப்படும் சிறு பாவங்கள்
விளைவித்து விடுகிறது. தொடர்ந்து செய்யப்படும் சிறுபாவம் மனிதனின் உள்ளத்தையே துளைத்துவிடுகிறது.
அதனால் தான் நமது வாழ்நாளில் அதிகமதிகமாக பாவமன்னிப்புக் கோர வேண்டும்.
பிறருக்காக பிரார்த்திக்கலாம்
நபி யூசுப் (அலை) அவர்கள் சிறுவராக இருந்தபோது அவரின் சகோதரர்கள் அவரை கொல்லவேண்டும்
என்றெண்ணி ஆழ்கிணற்றில் தள்ளி விட்டனர். தம் தந்தை யஃகூப் (அலை) அவர்களிடம் வந்து சிறுவர்
யூசுஃபை ஓநாய் கொன்றுவிட்டது என்று பொய் கூறி, தம் தந்தையை நம்ப வைக்க முயற்சித்தனர்.
இம்மாபெரும் பாவம் புரிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பு தான் குற்ற உணர்வு அவர்களுக்கு
தோன்றியது. அவர்கள் வெட்கமும், மனவேதனையும் அடைந்து
உண்மையை கூறி, "தந்தையே! எங்களுடைய
பாவத்தை மன்னித்து விடும்படி இறைவனிடம் பிரார்த்தியுங்கள்" என்றனர். அப்போது அவர்களின்
தந்தையான யஃகூப் (அலை) அவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் நீங்கள் செய்த அந்த பெரும்
பாவத்திற்காக இப்போது மன்னிப்பு கோருவதா முடியாது எனக் கூறி அவர்களை நிராசையில் மூழ்கச்
செய்யாமல், நபியவர்கள் பிரார்த்தித்ததாக
திருக்குர்ஆன் கூறுகிறது.
(யஃகூப் - அலை அவர்கள்), "நான் என் இறைவனிடம்
பின்னர் உங்களுக்காக பாவ மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும்,
கிருபையுடையவனாகவும் இருக்கிறான்" என்று கூறினார்.
திருக்குர்ஆன்:- 12:98
நாம் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுமா என்று சந்தேகித்து இறைவன் மீது நிராசை அடைவது
தவறாகும். குற்றம் புரிந்தவனே தனது குற்றத்தை மனப்பூர்வமாக உணர்ந்து வருந்தி அடிமனதிலிருந்து
அச்சத்துடன் இறைவனை நோக்கி எழுகின்ற இறைஞ்சுதலே உண்மையான பாவம் மன்னிப்பாகும்.
பிறரின் பாவத்திற்காக மற்றொருவர் பாவமன்னிப்பு கோர முடியாது. அதை பாவமிழைத்தவரே
அல்லாஹ்விடம் முறையிட்டு பாவமன்னிப்புக் கோர வேண்டும். எனினும், அவருக்காக பிரார்த்திக்கலாம். இந்த இரு விஷயங்களையும்
தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் எவரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் அச்சமும், இறைத்தூதரின் நினைவும் அதிகமாக வருமோ அந்த மனிதரிடம் நல்ல முறையில்
பழகிய பிறகு நாம் செய்த பாவத்தை முழுமையாக கூறாமல் பொத்தம் பொதுவாக, "நான் ஒரு பாவம் செய்து விட்டேன். என் பாவத்தை பொறுத்தருள
இறைவனிடம் எனக்காக பிரார்த்தியுங்கள்" என்று சொல்லலாம். ஆனால், செய்த பாவத்தை முழுமையாக எவரிடமும் வெளிப்படுத்தக்கூடாது என்கிறது ஒரு நபிமொழி. (முஸ்லிம்-5714)
திரும்பிப்பார்
நம்முடைய இளமை பிராயத்தில் செய்த சிறிய, பெரிய பாவங்கள் அனைத்தையும் எண்ணிப் பார்த்து, அதற்காகவும் தற்போது கடந்து சென்ற ஆண்டுகளில் செய்த
பாவங்களையும் எண்ணிப் பார்த்து அதற்காகவும் மனம் வருந்தி கண்ணீர் விட்டு பாவமன்னிப்பு
கோர வேண்டும். அப்போது செய்த பாவத்திற்கு அப்போதே மன்னிப்பு தேடிவிட்டேன் என்றெண்ணி
தற்போது சும்மா இருந்துவிடக்கூடாது.
அப்போது செய்த பாவமன்னிப்பு இறைவனிடம் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதா? என்று நமக்கு தெரியாது. அதனால்தான் நாம் வாழ்நாளில்
செய்த அனைத்து பாவங்களையும் எண்ணி, மரணமடையும்வரை ஒவ்வொரு
நாளும் மனம் வருந்தி பாவமன்னிப்பு கோரவேண்டும். கடந்த காலங்களில் தவறிவிட்ட தொழுகை,
நோன்பு போன்ற கட்டாயக் கடமைகளை அவ்வபோது 'களா'வாக நிறைவேற்றி பரிகாரம் தேடி கொள்ள வேண்டும்.
விபச்சாரம் செய்த பின்னர் பாவமன்னிப்பு தேடி அதற்குரிய தண்டனை வழங்கப்பட்டு மரணமடைந்த
ஒரு பெண்ணுக்கு அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இறுதித் தொழுகை நடத்தி, ( لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ
سَبْعِينَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ لَوَسِعَتْهُمْ ) “அவள் அழகிய முறையில்
மன்னிப்புத் தேடிவிட்டாள். மதீனாவாசிகளில் எழுபது பேரிடையே அது பங்கிடப்பட்டாலும் அவர்கள்
அனைவருக்கும் போதுமானதாக அமையும். (அப்பெண் மிகச் சிறந்தவள்) என்று வாழ்த்தியுள்ளார்கள்.
நூல்:- முஸ்லிம்-3501
பாவம் செய்த பின்னர் பாவமன்னிப்புத் தேடி, தன்னை திருத்திக்கொண்டவனை ஒருபோதும் இழிவாக கருதக்கூடாது என்பதுதான்
மேற்கண்ட நபிமொழியின் கருத்தாகும்.
நமக்குள் ஏதேனும் சண்டை, சச்சரவு ஏற்படும்போது
வாழ்க்கையில் திருந்தி வாழ்பவரை பார்த்து, "ஒரு காலத்தின் இப்படித்தானே இருந்தாய்" என்று கூறி,
அவரின் கடந்த காலத்தை நினைவுபடுத்தி அவரை மட்டமாக
பேசி, அவர் மனதை புண்படுத்துவது
தவறாகும்.
பாவம் செய்தவரை பார்த்து நாம் ஒதுங்கி விடாமல் அவரிடம் சென்று பாவமன்னிப்பு குறித்து
வந்துள்ள திருமறை வசனங்களையும், நபிமொழிகளையும் பக்குவமாக
எடுத்துச் சொல்லி அவருக்கு அப்பாவத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவரின்
நிலைமை சீர் பெற நாம் பிரார்த்திக்க வேண்டும்.
எவர்கள் தங்கள் அறியாமையினால் செய்து (அதனை பாவமென அறிந்து) பின்னர் வருத்தப்பட்டு
அதிசீக்கிரத்தில் அதிலிருந்து நீங்கி விடுகிறார்களோ அத்தகையவர்களை மன்னிப்பது தான்
அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகிறான். அல்லாஹ் நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன்:- 4:17
மனிதன் தான் செய்துவிட்ட பாவத்தை எண்ணி வருந்தி, அந்த பாவத்தை கைவிட்டு, இனிமேல் அதைச் செய்ய மாட்டேன் என உறுதிகொண்டு இறைவனிடம் மன்னிப்பு கோருவதையே இஸ்லாம் விரும்புகிறது. ஆகவே, நாம் வாழ்வில் செய்த சிறிய பெரிய பாவங்களுக்கு உடனடியாக பாவமன்னிப்புக் கோரி, இறையருளை பெறுவோமாக! ஆமீன்!
(இந்த கட்டுரை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment