Search This Blog

Sunday, 4 October 2020

காவலன்

 


                                                                       காவலன்

فَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ

அல்லாஹ்வே உங்களின் பாதுகாவலன் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பாதுகாவலர்களில் அவனே சிறந்தவன். உதவியாளர்களில் அவனே சிறந்தவன். திருக்குர்ஆன்:- 8:40

ஒரு முஸ்லிமோ அல்லது மொத்த சமுதாயமோ கடினமான நிலையில் சிக்கியிருக்கும் போதும், பகைவர்களை குறித்து அச்சம் ஏற்பட்டிருக்கும் போதும், மேலும் திகில் ஓங்கி இருக்கும் போதும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை இஸ்லாம் அழகாக இயம்புகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أُدْعُوا اللهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِاْلإِجَابَةِ ) உங்களுடைய பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-  திர்மிதீ-3479

இப்ராஹீம் (அலை) அவர்களின் துஆ

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (கொடியோன் நம்ரூதால்) தீயில் தூக்கி எறியப்பட்ட போது, ( حَسْبُنَا اللَّه وَنِعْمَ الْوَكِيل )  “ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வக்கீல்"  (பொருள்: எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே (எங்களைக் காக்கும்) பொறுப்பை ஏற்பவர்களில் சிறந்தவன்) என்று கூறினார்கள்.                      (அதன் பிறகு அன்னார் பாதுகாக்கப்பட்டார்கள்.) நூல்:- புகாரீ-4563

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا وَقَعْتُمْ فِي الْأَمْر الْعَظِيم فَقُولُوا " حَسْبُنَا اللَّه وَنِعْمَ الْوَكِيل ) நீங்கள் ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டால், “ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வக்கீல்" (பொருள்: எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே (எங்களைக் காக்கும்) பொறுப்பை ஏற்பவர்களில் சிறந்தவன்) என்று சொல்லுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னு மர்தவைஹி, தஃப்சீர் இப்னு கஸீர் ஆலு இம்ரான் வசனம்-173

ஹிஜ்ரீ மூன்றாம் ஆண்டு (கி.பி.625) நடந்த உஹது போர் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி அளிக்காத வகையில் முடிந்தது. உஹது போரில் ஹம்ஸா (ரலி) அவர்கள் போன்ற முக்கியமான நபித்தோழர்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சரிவை கண்டு தைரியம் அடைந்த மக்கா இறைமறுப்பாளர்களின் தலைவராக விளங்கிய அபூ சுஃப்யான் திரும்பிவந்து முஸ்லிம்கள் மீது மீண்டும் தாக்குதல் தொடுக்க எண்ணியிருந்தார். இதற்கிடையில் வழியில் சந்தித்த சிலர் மூலம் "அபூசுஃப்யானும் அவருடைய ஆட்களும் முஸ்லிம்களைத் தாக்க வருகிறார்கள்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்க அபூசுஃப்யான் ஏற்பாடு செய்தார்.

அவர்கள் வந்து அண்ணலாரிடம் இதைத் தெரிவித்த போதுதான்,                                    ( حَسْبُنَا اللَّه وَنِعْمَ الْوَكِيل )  “ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வக்கீல்"  (பொருள்: எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே (எங்களைக் காக்கும்) பொறுப்பை ஏற்பவர்களில் சிறந்தவன்) என குறிப்பிட்டார்கள். நூல்:- ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ

அபூசுஃப்யான் விடுத்த மிரட்டல் முஸ்லிம்களுக்கு மேலும் நம்பிக்கையையும் உறுதியையும் அதிகமாக்கியது தவிர, அவர்களை மிரளவைக்க முடியவில்லை. இதையே கீழ்காணும் திருவசனம் விவரிக்கிறது.

இவர்களிடம், 'நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்' என்று மக்கள் (சிலர்) கூறினர். ஆனால், இது இவர்களுக்கு இறைநம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. 'எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்' என்றும் அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்:- 3:173

இமாம் ஜஅஃபர் ஸாதிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.  தனக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என அச்சப்படும் நிலையில் ( حَسْبُنَا اللَّه وَنِعْمَ الْوَكِيل )  “ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வக்கீல்"  (திருக்குர்ஆன் : 3:173) என சொல்லாத ஒருவனைக் கண்டு நான் வியப்படைகிறேன், ஏனென்றால் அந்த வசனத்தின் தொடர்ச்சியாக அவ்வாறு சொன்னவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்.  ( فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ ) இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் பெருங்கொடைகளையும், அருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. திருக்குர்ஆன் : 3:174

கடந்த கால செயல்களினால் துக்கப்படும் ஒருவன் ( لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ ) “லா இலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மினல் ளாலிமீன்”  (திருக்குர்ஆன் : 21:87) எனும்  யூனுஸ் நபி (அலை) அவர்களின் பாவமன்னிப்பை கேட்காத ஒருவனைப் பற்றி வியப்படைகிறேன். ஏனெனில் இந்த வசனத்தை அடுத்து அல்லாஹ் சொல்கிறான். ( فَاسْتَجَبْنَا لَهٗۙ وَنَجَّيْنٰهُ مِنَ الْـغَمِّ‌ وَكَذٰلِكَ نُـنْجِى الْمُؤْمِنِيْنَ‏  ) அப்போது நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, துன்பத்திலிருந்து அவரை விடுவித்தோம். மேலும், இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களை நாம் காப்பாற்றிக் கொள்கின்றோம்.  திருக்குர்ஆன் : 21:88 நூல்:- ஆஜிலு நஃப்சக்க பில்குர்ஆன்

மௌலானா ஷாஹ் அப்ராருல் ஹக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.                         ( حَسْبُنَا اللَّه وَنِعْمَ الْوَكِيل ) “ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வக்கீல்"  என்ற இந்தத் திருக் கலிமாவை குழப்பங்கள் தீங்குகளை விட்டும் பாதுகாப்பு பெற 341 தடவையும், வாழ்வாதாரம் விஸ்தீரணம் அடைய கடன் நிறைவேற 308 தடவையும், ஏதாவது தேவை நிறைவேற 111 தடவையும், சோதனைகள் கவலைகள் நீங்க 104 தடவையும் ஓத வேண்டும். இதை எந்த நோக்கத்திற்காக ஓதினாலும் இதன் ஆரம்பத்திலும் கடைசியிலும் 11 தடவை சலவாத்து ஓதிக் கொள்ளவும். நூல்:- பிஹ்ரே மோத்தி

யூனுஸ் (அலை) அவர்களின் துஆ

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ دَعَا بِدُعَاءِ يُونُس اُسْتُجِيبَ لَهُ ) நபி யூனுஸ் (அலை)  அவர்கள் செய்த பிரார்த்தனையைக் கூறி யார் (இறைவனைப்) பிரார்த்திக்கின்றாரோ அவரது பிரார்த்தனை ஏற்கப்படும். நூல்:- தஃப்சீர் இப்னுகஸீர்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَإِنَّهُ لَمْ يَدْعُ بِهَا مُسْلِم رَبّه فِي شَيْء قَطُّ إِلَّا اِسْتَجَابَ لَهُ ) நபி யூனுஸ் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனையைக் கூறி ஒரு முஸ்லிம் ஏதேனும் ஒரு தேவைக்காக இறைவனை பிரார்த்தித்தால் அதை அவன் ஏற்காமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:- சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்:- திர்மிதீ, தஃப்சீர் இப்னுகஸீர்

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு ஒரு பெயர் உண்டு. அதை கூறிப் பிரார்த்தித்தால் ஏற்கப்படும்; கேட்டால் வழங்கப்படும். அது யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்கள் செய்த ( لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ ) “லா இலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மினல் ளாலிமீன்” (பொருள்: வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. நீ பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநீதியாளர்களில் ஒருவனாகிவிட்டேன்) என்ற பிரார்த்தனையாகும்" என்று கூறினார்கள்.

அப்போது நான், "நாயகமே! இது யூனுஸ் (அலை) அவர்களுக்கு மட்டும் உரியதா? அல்லது முஸ்லிம் சமுதாயத்தார் அனைவருக்கும் பொதுவானதா? என்று கேட்டேன். அதற்கு அண்ணலார், "அது யூனுஸ் (அலை) அவர்களுக்கு பிரத்தியேகமானது; இறைநம்பிக்கை கொண்ட சமுதாயத்தார் அனைவருக்கும் பொதுவானது; அவர் அதைச் சொல்லி பிரார்த்தித்தார். நீர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறுவதை கேட்கவில்லையா? என்றார்கள்.

 அப்போது அவரது அழைப்பை ஏற்று, கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறுதான் இறை நம்பிக்கையாளர்களை காப்போம். (21:88) நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்

ஒரு நோயாளி ( لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ )  “லா இலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மினல் ளாலிமீன்” என்ற இந்தத் திருக்கலிமாவை நாற்பது தடவை ஓதிய நிலையில் அவர் அந்த நோயிலேயே இறந்து விட்டால், அவருக்கு (ஷஹீத் எனும்) உயிர் தியாகிக்கு சமமான நன்மை  வழங்கப்படும். சுகமடைந்துவிட்டால் அவருடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும் என்பது நபிமொழி. நூல்:- உஸ்வயே ரசூலே அக்ரம் (ஸல்) பக்கம்-578, பிஹ்ரே மோத்தி

நெருப்பு குளிர்ந்தது

அபூ முஸ்லிம் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தார்கள். ஆனால் அண்ணலாரை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், அபூமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் சிறந்த முஸ்லிமாக இருந்தார்கள். நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு அஸ்வது என்பவன் தன்னை இறைத்தூதர் என்று பிரகடனப்படுத்தி, தனக்கென ஒரு கூட்டத்தை அமைத்துக்கொண்டு செயல்பட்டான். அவனை அபூ முஸ்லிம் (ரஹ்) அவர்கள் எதிர்த்தார்கள். அதனால் அவன் கோபமுற்று அபூ முஸ்லிம் (ரஹ்) அவர்களை நெருப்புக் குண்டத்தில் தள்ளினான். அந்நேரத்தில் ( يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ )நெருப்பே! நீ இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும் இதமாகவும் ஆகிவிடு. (திருக்குர்ஆன்:- 21:69) என்ற வசனத்தை ஓதிக் கொண்டே இருந்தார்கள். அதன் பலனால் அன்னார் நெருப்பிலிருந்து எந்தத் தீங்கும் இல்லாமல் வெளியேற்றப்பட்டார்கள்.

சர்வாதிகாரி ஹஜ்ஜாஜ் பின் யூசுப் ஒரு பெரிய மாளிகையைக் கட்டி, அதைப் பார்க்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்நேரத்தில் மாமேதை ஹசன் அல்பசரீ (ரஹ்) அவர்கள் அந்த மாளிகையை, "கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் மாளிகை" என்று கூறினார்கள். இதை அறிந்த ஹஜ்ஜாஜ் கடும் சினம் கொண்டு, "ஹசன் அல்பசரீ அவர்களுக்கு அரசு தர்பாரிலேயே மரண தண்டனை வழங்கப்படும்" என்று அறிவித்தார். அதற்காக அன்னாரை அரசு தர்பாருக்கு அழைத்து வரும்போது, அன்னார் ஏதோ ஓதிக்கொண்டே தர்பாருக்குள் நுழைவதை காவலாளி ஒருவர் பார்த்தார்.

அன்னார் வருவதை கண்டதும் கடும் கோபம் கொண்டிருந்த ஹஜ்ஜாஜின் முகம் மாறியது. குரல் தணிந்தது. அன்னாரை வரவேற்று, தன் அருகே அமர வைத்து, சில சட்டங்களுக்கு விளக்கம் கேட்டு விட்டு மரியாதையாக அனுப்பி வைத்தார்.

வாயிலில் நின்றிருந்த காவலாளி பிறகு அன்னாரை சந்தித்து, "நீங்கள் வருவதற்கு முன் இருந்த நிலைமை வேறு. நீங்கள் வந்த பின் நிலைமை இருந்த நிலைமை வேறு. நீங்கள் என்னவோ ஓதிக் கொண்டே வந்ததை நான் கவனித்தேன். என்ன ஓதினார்கள்?" என்று கேட்டார்.

அன்னார், ( يَا وَلِيَّ نِعمَتِي وَمَلَاذِي عِنْدَ كُربَتِي اجْعَلْ نِقمَتَهُ بَرْدًا وَسَلَامًا عَلَيَّ كَمَا جَعَلتَ النَّارَ بَردًا وَسَلَامًا عَلَي اِبرَاهِيمَ )  "என் இன்பங்களுக்கும் என் துன்பங்களுக்கும் பொறுப்பேற்று கொண்டிருக்கின்ற பொறுப்பாளியான என் இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீது நெருப்பை நீ குளிர்ச்சியாக்கியதைப் போன்று இந்த அரசரின் கோபத்தை என்மீது குளிர்ச்சியாக்குவாயாக!" என்ற தியானத்தை ஓதிக் கொண்டே சென்றேன். அதன் பரக்கத்தால் நீங்கள் கண்டவை நிகழ்ந்தது" என்றார்கள். நூல்:- சுவரும் மின் ஹயாத்தித் தாபிஈன்


நெருப்பே! நீ இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும் இதமாகவும் ஆகிவிடு. திருக்குர்ஆன்:- 21:69


வம்பர்களை எதிர்கொள்ளும் இக்கட்டான நிலையின்போது இந்த திருக்கலிமாவை அதிகம் ஓதி கொள்வது கைமேல் பலன் தரும்.

நோக்கங்கள் நிறைவேற

நபிமொழி அறிவிப்பாளர் மக்ஹூல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( فَمَنْ قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ وَلاَ مَنْجَا مِنَ اللَّهِ إِلاَّ إِلَيْهِ. كَشَفَ عَنْهُ سَبْعِينَ بَابًا مِنَ الضُّرِّ أَدْنَاهُنَّ الْفَقْرُ )   லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி வலா மஜ்மஅ மினல்லாஹி இல்லா இலைஹி (பொருள்: நன்மைகள் செய்யவும் தீமைகள் செய்யாதிருக்கவும் உரிய ஆற்றலும், வலிமையும் அல்லாஹ்வின் மூலமாகவே கிடைக்கின்றன. அல்லாஹ்வின் (கோபம் மற்றும் அவனுடைய தண்டனை)யிலிருந்து தப்பிக்க அவனைத் தவிர வேறு புகலிடம் இல்லை) என்று யாரும் கூறுகிறாரோ அவரை விட்டும் எழுபது வகையான துன்பங்கள் அகலும், அத்துன்பங்களில் மிகக் தாழ்ந்தது ஏழ்மையாகும். நூல்:- திர்மிதீ-3515

அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜயீ (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னுடைய மகன் சாலிம் காணாமல் போயிவிட்டார். உடனே, நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதைப்பற்றி கூறினேன். அப்போது அண்ணலார் என்னிடம், "நீர் ( لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ) 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி' (பொருள்: நன்மைகள் செய்யவும் தீமைகள் செய்யாதிருக்கவும் உரிய ஆற்றலும், வலிமையும் அல்லாஹ்வின் மூலமாகவே கிடைக்கின்றன) என்ற திருக்கலிமாவை தொடர்ந்து ஓதி வாரும்!" என்றார்கள். நானும் அவ்வாறே ஓதி வந்தேன்.

சில நாட்களுக்குப்பின் ஓர் நள்ளிரவு நேரத்தில் எவரோ ஒருவர் வீட்டுக்கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்து பார்த்தேன். காணாமல் போன என்னுடைய மகன் சாலிமும் மற்றும் நான்காயிரம் ஆடுகளும் நிற்கிறது. விடிந்ததும் இதைப்பற்றி அண்ணலாரிடம் கூறினேன்.

அப்போது அண்ணலார் எனது மகனை அழைத்து, என்ன நடந்தது? என்று விவரம் கேட்டார்கள்.

அப்போது என்னுடைய மகன் சாலிம், "நாயகமே! எதிரிகள் என்னை கொலை செய்வதற்கு கடத்திச் சென்றனர். ஆனால் அவர்கள் கடத்திச் சென்ற மாதம் போர் செய்ய தடுக்கப்பட்ட மாதமாகும். (அன்றைய அரபியர் முஹர்ரம், ரஜப், துல்கஃதா, துல்ஹஜ் ஆகிய நான்கு மாதங்களில் போர் செய்ய மாட்டார்கள்.) அதனால் என்னை கொலை செய்வதை தள்ளிவைத்துவிட்டு, என்னை கைதியாக்கி, ஆடுகள் மேய்க்க அனுப்பிவிட்டார்கள். மேலும் என்னை கண்காணிக்க ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஒருநாள் அவர் மது அருந்திவிட்டு மயங்கி விட்டார். நான் இதுவே சந்தர்ப்பம் என கருதி அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக விரைந்து வந்து மதீனா நகரின் எல்லையை அடைந்த பின்னர் திரும்பிப் பார்த்தேன். நான் அவர்களிடம் கைதியாக இருந்தபோது மேய்த்து வந்த அந்த நான்காயிரம் ஆடுகளும் என்னுடன் ஓடி வந்துவிட்டது" என்று கூறினார்.

பிறகு அண்ணலார் என்னிடம், "நீர் ஓதிவந்த திருகலிமாவின் பலனால் உன்னுடைய மகனும் திரும்பக் கிடைத்துவிட்டார். இந்த நான்காயிரம் ஆடுகளும் உனக்குரியவையே!" என்று கூறினார்கள். நூல்:- சீரத் இப்னு இஸ்ஹாக், தஃப்சீர் குர்துபீ அத்தலாக் வசனம்-3

அருமை  நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ) 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி' என்ற திக்ரை அதிகம் ஓதி வாருங்கள். ஏனனெனில் அது அர்ஷின் பொக்கிஷங்களிலிருந்து உள்ளதாகும். மேலும் யார் இதை அதிகமாக கூறுவாரோ அல்லாஹ் அவரின் பக்கம் பார்ப்பான். யாரின் பக்கம் அல்லாஹ் பார்ப்பானோ அவர் இவ்வுலக, மறுவுலக நன்மையை அடைந்து கொள்வார். அறிவிப்பாளர் : அபூபக்ர் (ரலி) அவர்கள்  நூல்:- அத்துஆ லித்தப்ரானீ-1631

அருமை  நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قال لا حول  ولاقوة بالله مأة مرة في كل يوم لم يُصبه فَقُرٌ أبدًا  ) “யார் 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி'  என்ற கலிமாவை ஒவ்வொரு நாளும் நூறு முறை ஓதி வருவாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது. அறிவிப்பாளர்:- அஸது பின் வதாஆ (ரலி) அவர்கள் நூல்:-இப்னு அபீதுன்யா


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن قَالَ: لا حول ولا قوة إلا بالله، كَانَت لَهُ دَوَاءً مِن تِسعَةٍ وَّتِسعِينَ دَاءً، أَيسَرُهَا الهَمُّ ) யார் 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி'  என்று ஓதி வருகிறாரோ (அவருக்கு) அது 99 நோய்களுக்கு மருந்தாக இருக்கும். அவைகளில் மிக இலேசான நோயாகிறது கவலையாக இருக்கும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- நஸாயீ, தப்ரானீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-511


ஹபீப் இப்னு மஸ்லமா (ரலி) அவர்கள் யுத்த களத்தில் எதிரிகளை சந்திப்பதாக இருந்தாலும், எதிரிகளின் கோட்டைகளை தகர்ப்பதாக இருந்தாலும் 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி'  என்ற கலிமாவை ஓதுவதை விரும்புவார்கள்.

ஒருமுறை அன்னாரின் தலைமையில் ரோம் நாட்டின் கிருஸ்துவர்களோடு முஸ்லிம்கள் யுத்தம் செய்தனர். அப்போது முஸ்லிம்கள் அனைவரும் 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி'  என்ற கலிமாவை ஓதிய நிலையில், தக்பீர்  முழக்கத்துடன் கிருஸ்துவர்களின் கோட்டையை முற்றுகையிட்டார்கள். அப்போது எதிரிகள் தோற்றோடினார்கள். அந்தக் கோட்டையும் தகர்ந்து போனது. நூல்:- வாபிலுஸ் ஸய்யிபு வராஃபிஉல் கலிமித் தய்யிபு பக்கம்-187

இமாம் ஜஅஃபர் சாதிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அதிகாரிகள் மற்றும் பிற மக்களிடம் இருந்து உங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், அதற்காக பொங்கியெழுந்து விடாதீர்கள். ( لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ) 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி' (பொருள்: நன்மைகள் செய்யவும் தீமைகள் செய்யாதிருக்கவும் உரிய ஆற்றலும், வலிமையும் அல்லாஹ்வின் மூலமாகவே கிடைக்கின்றன) என்ற திருக்கலிமாவை அதிகமாகச் ஓதிக் கொள்ளுங்கள். இது மகிழ்ச்சிக்குத் திறவுகோல் போன்றது.

பேரறிஞர் முஜத்தித் அல்ஃபஸானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மை மறுமையின் சகல பிரச்சனைகளையும் துன்பங்களை விட்டும் பாதுகாப்புப் பெறவும் நோக்கங்கள் நிறைவேறுவதற்கும் இந்த கலிமாவை அதிகமாக ஓதுவது அனுபவப்பூர்வமான செயலாகும்.

அதிகத்தின் அளவை குறிப்பிடுகையில் தினமும் ஐநூறு தடவை இதை ஓத வேண்டும். இதன் ஆரம்பத்திலும் கடைசியிலும் நூறு தடவை ஸலவாத்து ஓதி தனது நோக்கம் நிறைவேற பிரார்த்திக்க வேண்டும். நூல்:- தஃப்சீர் மள்ஹரீ

அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலகிவிடவோ, நன்மைகள் புரிய ஆற்றல் பெற்றிடவோ மனிதனால் முடியாது. இதைப் போன்றே, அல்லாஹ்வின் உதவியின்றி ஆபத்துக்களில் இருந்து தப்பிக்கவோ நன்மைகளை அடையும் ஆற்றல் பெற்றிடவோ மனிதனால் முடியாது. நன்மை புரிய வேண்டுமென்றாலும், தீமையைக் கைவிட வேண்டுமென்றாலும் அல்லாஹ்வின் உதவியும் அருளும் தேவை. இது, மனிதன் தன் தோல்வியையும் ஆற்றாமையையும் ஒப்புக்கொண்டு அல்லாஹ்வுக்குமுன் சரணாகதி அடைவதைக் குறிக்கும் வாக்கியமாகும்; தன் பொறுப்புக்கள் அனைத்தையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து அவனுக்கு மனிதன் அடிபணிவது குறிக்கும் "திருக்கலிமா" ஆகும். நூல்:- ஃபத்ஹுல் பாரீ

இஸ்லாமியர்களாகி நமக்கு எதிரான CAA, NRC, NPR, பொதுசிவில் சட்டம்  போன்ற தற்போது ஆளும் அரசின் சூழ்ச்சிகளில் இருந்தும், கொரோனா போன்ற தொற்று நோய்களில் இருந்தும் பாதுகாப்பு பெறுவதற்கு மேற்காணும் திருக்கலிமாக்களை நாம் அதிகமதிகமாக ஓதி பிரார்த்தித்து கருணைமிகு அல்லாஹுதஆலாவின் பாதுகாப்பைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, நீலாங்கரை, சென்னை. செல்-9840535951

 

No comments:

Post a Comment

முதல் மரியாதை

  முதல் மரியாதை   وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்ல உபதேசம் செய்தோம்....