Search This Blog

Monday, 1 December 2025

கவனக்குறைவு

 

கவனக்குறைவு

 

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ

(இந்தத்) தொழுகையாளிகளுக்கு கேடு தான். அவர்கள் தமது தொழுகையை கவனக்குறைவாக நிறைவேற்றக்கூடியவர்கள். திருக்குர்ஆன்:-  107:4,5

 

கவனம் என்பது பள்ளியில் கற்றுக்கொள்ளவும், பணியிடத்தில் முன்னேறவும், வெற்றிகரமான உறவுகளை உருவாக்கவும் நமக்கு உதவுகிறது. கவனம் என்பது எவ்வளவு ஆர்வம் காட்டுகிறோம் என்பதைப் பொறுத்தது. ஒன்றின்மீது ஆழ்ந்த ஈடுபாடு வைத்திருந்தால் கவனம் வந்துவிடும். வராமல் எப்படி இருக்கும்?

 

கவனக்குறைவு என்பது தனிப்பட்ட வாழ்க்கை, வேலை, உறவுகள், உடல்நலம் மற்றும் சமூகம் முழுவதும் கணிக்கக்கூடிய, தொடர் விளைவுகளை ஏற்படுத்துகிறது. கவனக்குறைவு என்பது தனிப்பட்ட மற்றும் நிதி ரீதியான இழப்புகளை ஏற்படுத்தும்.

 

பைக், கார், பஸ், லாரி, இரயில், கப்பல், விமானம் போன்ற வாகனங்களின் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் ஏற்படும் சாலை விபத்துகள் மூலம் உயிரிழப்பு, உடைமைகள் இழப்பு, உடல் உறுப்புக்கள் இழப்பு, கடுமையான காயங்கள் ஆகியவை ஏற்படக்கூடும்.

 

கவனக்குறைவால் வீடு, கடை, அலுவலகத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை சரியாகப் பூட்டப்படாததால் ஏற்படும் கொலை மற்றும் கொள்ளையால்  உயிரிழப்பு,  பொருளாதார இழப்புகள் ஏற்படலாம்.

 

மருத்துவர்களின் கவனக்குறைவால் தவறான சிகிச்சை முறையால் நோயாளிகள் உடல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படலாம்.

 

கட்டிட இன்ஜினியர் மற்றும் கொத்தனார் போன்ற வேலையாட்களின் கவனக்குறைவால் எதிர்பார்த்த அமைப்பில் கட்டிடம் கட்டப்படாமல் போகலாம். விரைவிலேயே கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்படலாம்.

 

ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கவனக்குறைவால் மாணவர்கள் தேர்ச்சியற்றவர்களாகி, அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம். அவர்களின் பெற்றோர்களின் கனவுகள் சிதைந்து போகலாம்.

 

அரசாங்க அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் கவனக்குறைவால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பொதுமக்களின் நேரமும் பொருளாதாரமும் வீணடிக்கப்படுகிறது.

 

கவனக்குறைவு என்பது எவ்வளவு பெரிய தவறு என்று இழப்பு ஏற்படும்வரை தெரிவதில்லை.

 

அங்கத்தூய்மையில்

 

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் ஒரு பயணத்தில் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். சாலையிலிருந்த ஒரு நீர்நிலைக்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது சிலர் அஸர் (தொழுகை) நேரத்தில் அவசரப்பட்டனர். (அதற்காக) அவசர அவசரமாக (உளூ எனும்) அங்கத்தூய்மை  செய்தனர். நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்தபோது அவர்களுடைய குதிங்கால்களில் தண்ணீர் படாமல் சொட்டையாக அவை காட்சியளித்தனர்.

 

அப்போது நபியவர்கள், ( وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ أَسْبِغُوا الْوُضُوءَ ‏ ) "(சரியாக கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான் உளூவை முழுமையாகச் செய்யுங்கள்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-406

 

அபூரவ்ஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஃபஜ்ரு எனும்) அதிகாலைத் தொழுகை தொழவைத்தார்கள். அப்போது "ரூம்" அத்தியாயத்தை ஓதினார்கள். அதில் அவர்களுக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. அண்ணலார் (தொழுகை முடித்துவிட்டுத்) திரும்பியதும்,  ( إِنَّهُ يَلْبَسُ عَلَيْنَا الْقُرْآنُ، إِنْ أَقْوَامًا مِنْكُمْ يُصَلُّونَ مَعَنَا لَا يُحْسِنُونَ الْوُضُوءَ، فَمَنْ شَهِدَ الصَّلَاةَ مَعَنَا فَلْيُحْسِنِ الْوُضُوءَ )  "நமக்கு (தொழுகையில்) குர்ஆன் ஓதும்போது குழப்பம் ஏற்படுகிறது. உங்களில் சிலர் முறையாக உளூ செய்யாமல் நம்முடன் தொழுகிறார்கள். எனவே யாராவது நம்முடன் தொழுகையில் கலந்துகொண்டால் அவர் முறையாக உளூ செய்து கொள்ளட்டும்" என்று (மக்களைப் பார்த்துக்) கூறினார்கள். நூல்:- நசாயீ-938, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னுகஸீர் அத்தவ்பா வசனம்-108

 

தொழுகைக்காக உளூ செய்பவர் கவனக்குறைவால் உளூவின் உறுப்புகளை அரைகுறையாக கழுவும்போது அதனால் அவர் நரகத்தில் தண்டனையை அனுபவிக்க நேரிடும். மேலும் அவர் அரைகுறை உளூவுடன் ஜமாஅத்  தொழுகையில் கலந்து கொள்ளும்போது அவரால் இமாமுக்கும் தொழுகையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.

 

உளூவின் குறைந்தபட்ச அளவுகோல் ஒவ்வொரு உறுப்பையும் கழுவும்போது ஓரிரு சொட்டாவது தண்ணீர் கீழே விழவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் உறுப்புகளை கழுவியதாகக் கணிக்கப்படாது.

 

உடல் உறுப்புகளில் தார், மெழுகு, கிரீஸ், தடிப்பான மை, நகச்சாயம் போன்ற ஏதேனும் படிந்திருக்கும்போது நகத்தின்மீது தோலின்மீது திரை ஏற்பட்டு விடுகிறது. எனவே தண்ணீர் உடலில் சென்றடைவதற்கு தடை ஏற்பட்டு விடுவதால் இவைகள் இருக்கவே உளூவும், குளிப்பும் நிறைவேறாது. முதலில் அதை சுரண்டி சுத்தம் செய்த பிறகு உளூ செய்ய வேண்டும்.

 

தொழுகைக்கு மிகவும் முக்கியமானது மன அமைதி. முறையான உளூவின் மூலம் மன அமைதியும் கிடைக்கிறது. இறைவழிபாட்டிலும் மன ஓர்மை ஏற்படுகிறது. எனவே, உளூவில் கவனம் தேவை.

 

தொழுகையில்

 

அபூஅப்துல்லாஹ் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்குத் தொழ வைத்தப் பின்னர் அவர்களில் சிலருடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒருவர் பள்ளிவாசலுக்குள் வந்து தொழுதார். அவர் பறவைகள் தானியங்களைக் கொத்துவதைப் போன்று ருகூஉ, சஜ்தாவைச் செய்தார். அதைக்கண்ட நபியவர்கள், ( أَتَرَوْنَ هَذَا، مَنْ مَاتَ عَلَى هَذَا، مَاتَ عَلَى غَيْرِ مِلَّةِ مُحَمَّدٍ، يَنْقُرُ صَلاتَهُ كَمَا يَنْقُرُ الْغُرَابُ الدَّمَ )"இவரைப் பார்த்தீர்களா? இதே நிலையில் ஒருவர் மரணித்தால் அவர் முஹம்மதின் மார்க்கம் அல்லாததில் மரணிக்கிறார். இவர், காகம் இரத்தத்தைக் கொத்தித் தின்பது போல் தொழுகையை கொத்துகிறார்" என்று கூறினார்கள். நூல்:-  இப்னு குஸைமா-665, பைஹகீ, இப்னு அசாகிர், தாரிகுல் கபீர் இமாம் புகாரீ

 

ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹ்னீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. தொழுகையில் தமது ருகூஉவையும், சஜ்தாவையும் முழுமையாக நிறைவேற்றாத ஒரு மனிதரை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்கள் (அந்த மனிதரிடம்), ( وَلَو مُتَّ مُتَّ على غيرِ الفِطْرَةِ الَّتي فَطَرَ اللهُ مُحَمَّدًا صلى الله عليه وسلم عَلَيْهَا ) "நீர் தொழவே இல்லை. (இதே நிலையில்) நீர் இறந்துவிட்டால், முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் எந்த நெறியில் அமைத்தானோ அந்த நெறிக்கு மாற்றமான ஒன்றிலேயே இறக்கிறீர்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-791

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ صَلَّى سَجْدَتَيْنِ لَا يَسْهُو فِيهِمَا غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ) யார் (கவனக்குறைவால் ஏற்படும்), மறதியின்றி இரண்டு ரக்அத்கள் தொழுதாரோ அவரின் முன் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான். அறிவிப்பாளர்:- ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், மிஷ்காத்-577

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( صَلِّ صَلَاةَ مُوَدِّعٍ كَأنَّكَ تَرَاهُ ، فَإِنْ كُنتَ لَا تَرَاهُ فَإنَّهُ يَرَاكَ ) (நீர் தொழுகின்ற ஒவ்வொரு தொழுகையின்போதும், இதுவே என் வாழ்நாளின் கடைசித் தொழுகை என்று நினைத்து) விடைபெறும் தொழுகையைப்போன்று (கவனத்துடன்) தொழுதுக்கொள்வீராக. அல்லாஹ்வை நீர் பார்ப்பது போல் தொழுதுக்கொள்வீராக. ஏனென்றால், நீர் அவனைப் பார்க்காவிட்டாலும், நிச்சயமாக அவன் உம்மைப் பார்க்கிறான் அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- அல்அஸ்வத் இமாம் தப்ரானீ, அஸ்ஸுஹ்துல் கபீர் இமாம் பைஹகீ, அஸ்ஸில்ஸிலத்துஸ் ஸஹீஹா-1914 இமாம் அல்பானீ

 

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் இருக்கும்போது) ஒருதோழர் தொழுதுக்கொண்டிருந்தார். அவர் தொழுகையின் இடையில் தமது தாடியை கோதிக்கொண்டே இருந்தார். இதைப் பார்த்த நபியவர்கள், ( لَوْ خَشَعَ قَلْبُ هَذَا لَخَشَعَتْ جَوَارِحُهُ ) இவருடைய இந்த உள்ளம் ஓர்மைப்பட்டிருந்தால் இவரின் உறுப்புகளும் ஓர்மை அடைந்திருக்கும் என்று கூறினார்கள். நூல்:- தக்ரீஜுல் இஹ்யாஉ இமாம் இராக்கீ   ( تخريج الإحياء ), ஜாமிஉஸ் ஸஙீர் - இமாம் சுயூத்தீ, ளஈபுல் ஜாமிஉ இமாம் அல்பானீ

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ( يكرَه أَنْ يَقُومَ الرجلُ إِلَى الصَّلَاةِ وَهُوَ كَسْلَانُ، وَلَكِنْ يَقُومُ إِلَيْهَا طَلْقَ الْوَجْهِ، عَظِيمَ الرَّغْبَةِ، شَدِيدَ الْفَرَحِ، فَإِنَّهُ يُنَاجِي اللَّهَ تَعَالَى وَإِنَّ اللَّهَ أَمَامَهُ يَغْفِرُ لَهُ وَيُجِيبُهُ إِذَا دَعَاهُ ) ஒருவர் சோம்பல்பட்டுக்கொண்டே தொழுகைக்காக எழுந்து நிற்பது வெறுக்கத்தக்கதாகும். மாறாக, முகம் மலர்ச்சியுடனும் ஆர்வப் பெருக்குடனும் பேரானந்தத்துடனும் தொழுகைக்காக நிற்க வேண்டும். ஏனெனில், தொழுபவர் அல்லாஹ்வுடன் உரையாடுகிறார். அவருக்கு முன்னால் அல்லாஹ் இருக்கின்றான். அவரை மன்னிக்கின்றான்; அவர் அவனிடம் பிரார்த்தனை புரிந்தால் அதற்குப் பதிலளிக்கிறான்" என்று கூறினார்கள்.

 

பிறகு, "அவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல்பட்டுக்கொண்டே நிற்கிறார்கள்" என்ற வசனத்தை ஓதினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு மர்தவைஹீ, தஃப்சீர் இப்னு கஸீர்

 

சோம்பலுடனும், கவனக்குறைவுடனும் தொழுவது நயவஞ்சகர்கள் தன்மை என்பதாக திருக்குர்ஆன் தெளிவுப்படுத்துகிறது.      

 

தொழுகையில் தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவது கூடாது. தொழுகையில் ருகூஉ, சஜ்தாவை சரிவர நிறைவேற்றாத முறையில் பொடுபோக்காக கவனமின்றி தொழுபவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மார்க்கத்தில் மரணிக்கமாட்டார் என்றால், இறைநம்பிக்கை இல்லாதவராக மரணிப்பார் என்று பொருளாகிறது. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.

 

பிரார்த்தனையில்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ أَيُّهَا النَّاسُ فَاسْأَلُوهُ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالْإِجَابَةِ، فَإِنَّهُ لَا يَسْتَجِيبُ لِعَبْدٍ دَعَاهُ عَنْ ظَهْرِ قَلْبٍ غَافِلٍ ) மக்களே! நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்தால் அது ஏற்கப்படும் என்ற நம்பிக்கையுடன் (கவனத்தோடு) அவனிடம் கோருங்கள். ஏனெனில், அலட்சியமான உள்ளத்துடன் தன்னிடம் பிரார்த்தனை புரியும் அடியானின் பிரார்த்தனைக்கு அல்லாஹ் பதிலளிக்கமாட்டான். அறிவிப்பாளர்:-  அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் அல்பகரா வசனம்-186

 

ஒருநாள் இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் ஒரு வழியே சென்று கொண்டிருந்தபோது ஒருவன் உரத்த குரலில் இறைவனிடம் அழுது பிரார்த்தித்துக்கொண்டிருந்தான். அதைக்கண்ட  மூசா (அலை) அவர்கள், அவன்மீது இரக்கம் கொண்டவராக,  "பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் ஆற்றல் என்னிடம் இருப்பின், நான் நிச்சயமாக இவனின் பிரார்த்தனையை இக்கணமே ஏற்று, அதை நிறைவேற்றிக்கொடுத்திருப்பேன்" என்று கூறினார்கள்.

 

அப்போது இறைவன், "மூசா! நான் உம்மைவிட அவன்மீது அதிக இரக்கக்குணம் கொண்டவன். எனினும், அவனுக்கு சில ஆடுகள் உள்ளன. அவற்றின்மீது தன் உள்ளத்தை பதியவைத்துக்கொண்டு என்னிடம் வாயளவில் பிரார்த்திக்கிறான். உள்ளம் சேராத பிரார்த்தனைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை" என கூறினான். இதை மூசா (அலை) அவர்கள் அவனிடம் கூறவே, அவன் மனமொன்றி இறைவனிடம் பிரார்த்தித்தான். அடுத்தகணம் அவனுடைய பிரார்த்தனைகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

ஒருமுறை கொடுங்கோலன் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தபோது, அங்கே ஒரு மனிதர் கஅபாவின் திரைச்சீலையைப் பிடித்துக் பிரார்த்தித்துக்கொண்டிருந்தார். ஹஜ்ஜாஜ் தமது தவாஃபின் இடையிடையே அவரிடம், "நான் யார் என்பதை அறிவாயா?" என்று வினவினார். அதற்கு அவர், "நான் பார்வையற்றவன். எனவே, எனக்கு உங்களை யார்? என்று தெரியாது" என்றார். ஹஜ்ஜாஜ் "நான் தான் ஹஜ்ஜாஜ். இப்போது நீ என்ன பிரார்த்திக்கிறாய்?" என்று வினவினார். அதற்கு அவர், "எனக்கு பார்வை கிடைக்கப்பெற பிரார்த்திக்கிறேன்" என்றார்.

 

ஹஜ்ஜாஜ், "நீ இந்த பிரார்த்தனையை எவ்வளவு ஆண்டுகளாக பிரார்த்திக்கிறாய்?" என்று வினவினார். அவர் , "பல ஆண்டுகளாக இதையே  பிரார்த்திக்கிறேன்" என்றார். ஹஜ்ஜாஜ், "அப்படியா? சரி! உமக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு தருகிறேன். அதாவது, நான் இப்போது மூன்று சுற்றை முடித்துள்ளேன். நான் ஏழாம் சுற்றை முடிப்பதற்குள் உமக்கு கண்பார்வை கிடைக்கப்பெறவேண்டும்; இல்லையெனில் உம்மை கொல்ல உத்தரவிட்டுவிடுவேன்" என்று கூறினார்.

 

அதன் பிறகு அவர், "இறைவா! தயவுசெய்து நீ எனக்கு கண்பார்வை தருவதின் மூலம் உயிர்பிச்சைக் கொடு! தற்போது எனக்கு கண்பார்வை கிடைக்காவிட்டால் ஹஜ்ஜாஜ் என்னைக் கொன்றுவிடுவான். அவன் அப்பேற்பட்டவன் தான் என்பதை நீ அறிவாய்" என்று மிகவும் மனமுருகி பிரார்த்தித்தார். அப்போது அல்லாஹ் அவருக்கு கண்பார்வையை வழங்கினான். ஹஜ்ஜாஜ் ஏழு சுற்றையும் முடித்துவிட்டு அவரிடம் வந்து, "என்னா! உமக்கு கண்பார்வை கிடைத்துவிட்டதா?" என்று வினவினார். அவர், "ஆம் கிடைத்துவிட்டது" என்றார். அப்போது ஹஜ்ஜாஜ், "நீ இப்போது தான் முறையாக பிரார்த்தித்துள்ளாய்!" என்று கூறினார்.

 

அல்லாஹ்விடம் கேட்டால் கிடைக்கும் என்ற மனவுறுதிடனும், மனமுருகியும் பிரார்த்திக்க வேண்டும். இது தான் ஹஜ்ஜாஜ் சொல்வதின் கருத்து.

 

பொறுப்புகளில்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர்களில் ஒருவர் (யூஷஉ பின் நூன் - அலை அவர்கள்) அறப்போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், ( لاَ يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهْوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِهَا، وَلاَ أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا، وَلاَ أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلاَدَهَا‏ )  ‘‘ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவர் அவளுடன் தாம்பத்தியம் தொடங்க விரும்பி இன்னும் தொடங்காமல் இருந்தால், அவர் (அதாவது, புதுமாப்பிள்ளை) என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். வீடு கட்டி முடித்து, அதன் கூரையை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, பெண் ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் போடுவதை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம் (இவர்களெல்லாம் போருக்கு வந்தால் முழு கவனத்தோடு போர் செய்ய மாட்டார்கள் என்று எண்ணியதால் அவ்வாறு)" கூறினார்கள். நூல்:- புகாரீ-3124

 

அந்த இறைத்தூதர், இவர்களெல்லாம் முழு ஈடுபாட்டோடு போர் செய்யாமல் கவனக்குறைவாக இருந்துவிடுவார்கள் என்று கருதி, அவ்வாறு கூறியிருக்கலாம்.                                                 

 

நபிகள் பெருமானார் (ஸல்) ‌அவர்கள் (மிஃராஜ் எனும்) விண்வெளிப் பயணம் சென்ற வேளையில் ‌ஒரு மனிதன் மிகப்பெரிய சுமையை வைத்துக்கொண்டு நிற்பதைக் ‌கண்டார்கள். அவர் அதை தமது தோளில் ஏற்ற‌ முயல்கிறார். ஆனால், அவரால் அதை ஏற்ற இயலவில்லை. அவர் மென்மேலும்  அதைவிட அதிகமாக ஏற்ற முயற்சி செய்கிறார். இதைக்கண்ட நபியவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அவரைப்பற்றி விசாரித்தார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர், உங்கள் சமுதாயத்தைச் சார்ந்தவர் தான். இவர் பொறுப்புகளை மனமாற ஏற்றுக்கொண்டு, பிறகு கவனக்குறைவாக அதை சரியான முறையில் நிறைவேற்றாமல், மேலும் மேலும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டே இருந்தவர் ஆவார்” என பதிலளித்தார்கள். நூல்:- தலாயிலுந் நுபுவ்வா இமாம் பைஹகீ

 

மேற்கண்ட நபிமொழியின் விளக்கத்தில், “பள்ளிவாசல் மற்றும் மதரசா நிர்வாகத்தில் கவனக்குறைவு, தம்மிடம் பாதுகாப்புக்காக ஒப்படைக்கப்பட்ட பொருளில் கவனக்குறைவு, அநாதைக் குழந்தைகளின் (எத்தீம்கானா) சொத்துகளில் கவனக்குறைவு இன்னும் அவைகளை மோசடி செய்வது, வியாபாரத்திற்காக ஒப்படைக்கப்பட்ட பொருளில் கவனமின்மை, இன்னும் (இமாமத்‌ எனும்) மக்களுக்கு தொழுவித்தல் போன்ற பணிகளில் கவனக்குறைவு” இதுபோன்ற காரியங்கள் அனைத்தும் அதில் அடங்கும். நூல்:- ஷரஹுஸ்ஸுர்கானி - 8/88

 

உணவுகளில்  

 

“ஸஹீஹ் முஸ்லிம்” என்ற நபிமொழித் தொகுப்பின் ஆசிரியரான இமாம் முஸ்லிம் பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள், தனக்கு புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருந்த ஒரு நபிமொழியை ஆய்வு செய்வதற்காக ஓரிரவு முழுவதும் தனியாக இருந்தார்கள். தன்னை, குடும்பத்தினர் உட்பட யாரும் சந்திக்க வர வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்கள்.

 

அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒருகூடை பேரித்தம்பழம் அவர்களிடம் இருந்தது. இரவு முழுவதும் அந்த பேரித்தம் பழங்களைச் சாப்பிட்டுக்கொண்டே விடியும்வரை ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள். தன்னையறியாமலேயே கூடையிலிருந்த பேரித்தம் பழங்கள் முழுவதையும் சாப்பிட்டுவிட்டார்கள். இதனால் நலிவுற்று, ஆரோக்கியம் குன்றினார்கள். அதுவே அவர்களின் மரணத்திற்கு காரணமாகிவிட்டது. நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

அந்தலுஸ் (என்ற முஸ்லிம் ஸ்பெய்ன்) நாட்டின் நபிமொழித்துறை அறிஞர் பகிய்யு பின் முஹல்லத் (ரஹ்) ( بقي بن مخلد ) அவர்கள், ஹரீசா ( هريسة ) என்றோர் இனிப்புப் பண்டத்தை (அதன் சூட்டை கவனிக்காமல்) ஒரு வாயளவு எடுத்து தின்றார்கள். அது சூடாக இருந்தது. சூடு தாங்க இயலாமல் அலறினார்கள். பின்னர் ளுஹர் நேரம் வரை மயக்கத்திலேயே இருந்தார்கள். பிறகு விழித்து, ஷஹாதா கலிமாவை சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இரவில்) ஸஹர் வேளையில் மரணமடைந்தார்கள். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

ஆரம்பத்தில் டி.வி. குண்டாக இருந்தது. அதைப் பார்ப்பவர்கள் ஒல்லியாக இருந்தார்கள். இப்போது டி.வி. ஒல்லியாக இருக்கிறது. அதைப் பார்ப்பவர்கள் குண்டாக இருக்கிறார்கள். காரணம், டி.வி. பார்த்துக்கொண்டே நொறுக்கு தீனி சாப்பிடுகின்றவர்கள் ஏராளம்.

 

நம்மில் சிலர் டி.வி. பார்த்துக்கொண்டே அல்லது கைப்பேசியைத் தேய்த்துக்கொண்டே என்ன சாப்பிடுகிறோம்? எவ்வளவு சாப்பிடுகிறோம்? என்று தெரியாத அளவிற்கு கனவமின்றி சாப்பிடுகிறார்கள். பிறகு அவ்வாறு உண்ட உணவே அவர்களுக்கு பெரும் நோயை உண்டாக்கிவிடுகிறது.

 

வக்ப் எனும் பொதுச்சொத்தில் 

 

இந்தியாவில், பல பள்ளிவாசல்கள்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்ற இந்த காலக்கட்டத்தில், பழங்காலத்து பள்ளிவாசல்களை நாம் கவனக்குறைவாக அநாதையாக விட்டு வருகின்றோம்.

 

தமிழ்நாட்டில் பல இடங்களில் ஊருக்கு வெளியே அல்லது மரம், செடிகள் அதிகமாக முளைத்திருக்கும் பகுதிகளில் பாழடைந்த பழமையான பள்ளிவாசல்கள் இருக்கிறது. அந்த பள்ளிவாசல்களை நாம் துப்புரவுப்படுத்தி பாதுகாப்பது தற்போது அவசியமான ஒன்றாகும்.

 

நம்முடைய தமிழ்நாட்டில் அநாதையாக விடப்பட்டுள்ள பல பள்ளிவாசல்களை புதுப்பித்து, அந்தப் பள்ளிவாசலுக்கு உயிரூட்டுவது அவசியமான ஒன்றாகும். இதனால் இந்தப் பள்ளிவாசல் முஸ்லிம்களின் கையைவிட்டு சென்றுவிடாமல் பாதுகாப்பாக இருக்கும்.

 

எனவே, நாம் நாற்காரியங்கள் அனைத்தையும் கவனத்துடன் செயலாற்றி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

கவனக்குறைவு

  கவனக்குறைவு   فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (இந்தத்) தொழுகையாளிகளுக்கு கேடு தான். அவர்கள் தமது தொ...