கர்பலாவை நோக்கி!
لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ
அறிவுடையவர்களுக்கு இவர்களுடைய வரலாறுகளில் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. திருக்குர்ஆன்:- 12:111
கர்பலா களத்தில் நடைபெற்ற யுத்தம் என்பது இஸ்லாமிய வரலாற்றில் மறக்கமுடியாத ஓர்
நிகழ்வாகும்.
கர்பலா யுத்தம் நடைபெறுவதற்குக் காரணம் என்ன? அதில் என்னென்ன அட்டூழியங்கள் அரங்கேறியது? அதில் ஹுசைன் (ரலி) அவர்கள் மற்றும் அன்னாரின் குடும்பத்தினர்,
தோழர்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது?
என்பதைப்பற்றியெல்லாம் காய்தல் உவத்தலின்றி இந்தச்
சிறு கட்டுரை விவரிக்கிறது. வாருங்கள் வாசித்துவிடுவோம்.
ஹுசைன் (ரலி) அவர்களின் சிறப்பு
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( الْحَسَنُ
وَالْحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ ) ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகிய
இருவரும் சொர்க்கவாசிகளிலுள்ள இளைஞர்களின் தலைவர்கள் ஆவர். அறிவிப்பாளர்:- அபூசயீத்
அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3691, முஸ்னது அஹமத்
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள்,
( اللَّهُمَّ إِنِّي
أُحِبُّهُمَا فَأَحِبَّهُمَا وَأَحِبَّ مَنْ يُحِبُّهُمَا
) "இறைவா! (தமது பேரர்களான ஹசன் – ரலி, ஹுசைன்– ரலி ஆகிய) இவ்விருவரையும் நான் நேசிக்கிறேன். இவ்விருவரையும்
நீ நேசிப்பாயாக. இவ்விருவரையும் நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக" என்று பிரார்த்தித்தார்கள்.
நூல்:- திர்மிதீ-3692
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( حُسَيْنٌ مِنِّي وَأَنَا مِنْ حُسَيْنٍ أَحَبَّ اللَّهُ مَنْ أَحَبَّ
حُسَيْنًا حُسَيْنٌ سِبْطٌ مِنَ الأَسْبَاطِ ) ஹுசைன் (ரலி) அவர்கள் என்னைச் சேர்ந்தவர் நான் ஹுசைனை சேர்ந்தவர். யார் ஹுசைனை
விரும்பினாரோ அவரை அல்லாஹ் விரும்புகிறான். ஹுசைன் (என்பது) வம்சங்களில் ஒரு வம்சமாகும்.
அறிவிப்பாளர்:- யஅலா பின் முர்ரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3698
ஹுசைன் (ரலி) அவர்களின் மூலமாக ஒரு வம்சம் உருவாகும். ஏராளமானோர் அதைச் சார்ந்திருப்பார்கள்.
அது பெரிய அளவில் இருக்கும் என்ற தகவல் இதன் மூலம் உணர்த்தப்படுகிறது. நூல்:- துஹ்ஃபத்துல்
அஹ்வதீ
கணிப்பு
முஆவியா (ரலி) அவர்கள் ஒரு சிறு குறிப்பைக்கொண்டு செய்தியை விளங்கிக்கொள்ளும் கூர்மதி
படைத்தவராக திகழ்ந்தார்கள். எனவே, தனக்குப் பின்னால்
அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் பதவிக்காக போட்டியிடலாம் என்று கருதினார்கள்.
அத்துடன் ஹுசைன் (ரலி) அவர்களையும் இராக் (கூஃபா) நகர மக்கள் தம் மகனுக்கு எதிராக களத்தில்
இறக்கலாம் என்றும் கருதினார்கள். எனவே, முஆவியா (ரலி) அவர்கள் தமது மரணவேளையில் இந்த இருவரின் விஷயமாக தம் மகனுக்கு உபதேசித்துவிட்டு
மரணித்தார்கள்.
ஹுசைன் (ரலி) அவர்களின் சம்மந்தமாக தமது மகன் யஸீதிடம் இவ்வாறு கூறியிருந்தார்கள்:
மகனே! எனக்குப் பின்னால் இராக் நகர மக்கள் ஹுசைனை உமக்கு எதிராக பதவிக்காக நிறுத்தலாம்.
இதனால் ஹுசைன் (ரலி) அவர்கள் உமக்கு எதிரணியில் நின்று பதவிக்காக போட்டியிடலாம். அதில்
அவரை நீர் வென்றுவிட்டால், மன்னிப்புத்தன்மையுடனும்
பெருந்தன்மையுடனும் அவருடன் நீர் நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில், அவர் உம்மைக் காட்டிலும் பதவிக்கு அதிக உரிமை படைத்தவர்.
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்பைப் பெற்றவர். இது உனக்கு நினைவிருக்கட்டும்.
நூல்:- தாரீக் தபரீ
ஹிஜ்ரீ அறுபதாம் ஆண்டு ரஜப் மாதம் முஆவியா (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள்.
வற்புறுத்தினர்
யஸீத்தின் கட்டளைக்கிணங்க மதீனா நகர் ஆளுநர் வலீத் பின் உத்பா என்பவர் மக்களிடம்
பைஅத் வாங்கினார். ஆனால், அப்துல்லாஹ் பின்
ஜுபைர் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகிய
இருவரும் பைஅத் செய்ய மறுத்துவிட்டனர்.
வலீத் பின் உத்பா அழைத்ததால் ஹுசைன் (ரலி) அவர்கள் தம்முடைய அடிமைகள் சிலருடன்
அவரின் மாளிகைக்குள் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தனர். அப்போது ஆளுநர் வலீதுக்கு அருகில்
மர்வான் இருந்தார்.
ஆளுநர் வலீத், முஆவியா (ரலி) அவர்களின்
மரணத்தகவலை தெரிவித்தார். ஹுசைன் (ரலி) அவர்கள் இன்னாலில்லாஹி... என்று கூறிவிட்டு,
பிறகு முஆவியா (ரலி) அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்.
ஆளுநர் வலீத், ஹுசைன் (ரலி) அவர்களை
பைஅத் செய்யும்படி வற்புறுத்தினார். ஹுசைன் (ரலி) அவர்கள், "என்னை போன்றவர்கள் தனிமையில் (யஸீதுக்காக) வாக்களிப்பது
முறையல்ல. பொதுமக்களைக் கூட்டுங்கள். மக்கள் அனைவரும் யஸீதுக்கு வாக்களித்துவிட்டால்,
அது ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஆகிவிடும்"
என்று கூறினார்கள்.
அப்போது மர்வான் குறிக்கிட்டு, "இவரிடம் இப்போதே இந்த இடத்திலேயே வாக்குறுதி பெற்றால் நல்லது. இல்லாவிட்டால் இவரால்
நமது ஆட்சியாளருக்கு எதிராக புரட்சி வெடிக்கும்; கலகம் உண்டாகும். ஆகவே, இத்தருணத்திலேயே இவரிடம் பைஅத் பெறுங்கள். அல்லது இவரைக் கொன்றுவிடுங்கள்"
என்று கூறினார். இளகிய மனம் படைத்த வலீத் செய்வதறியாது திகைத்தார்.
ஹுசைன் (ரலி) அவர்கள், ( أَنْتَ تَقْتُلُنِي؟ كَذَبْتَ وَاللَّهِ وَأَثِمْتَ
) "என்னை நீ கொலை செய்யப்போகிறாயா?
நீ பொய் சொல்கிறாய். (அது நடக்காது.) அல்லாஹ்வின்
மீதாணையாக! மேலும், நீ பாவம் செய்கிறாய்"
என்று மர்வானைப் பார்த்து கோபமாகக் கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டு அகன்றார்கள்.
ஹுசைன் (ரலி) அவர்களை கொன்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்த மர்வான்,
ஹுசைன் (ரலி) அவர்கள் அமைதியாக வெளியேறியது கண்டு
மனம் கொதித்தார்.
அப்போது மர்வான், "அவ்வளவுதான் இப்போது
ஹுசைனை பார்த்ததோடு சரி! இனி எப்போதும் நீங்கள் அவரைப் பார்க்கப் போவதில்லை. நீங்கள்
எனது வார்த்தையை ஏற்கவில்லை. இனி, நீங்கள் அவரை எந்த
வகையிலும் அடக்கமுடியாது" என்று கூறினார்.
இதைக்கேட்ட ஆளுநர் வலீத், ( يَا مَرْوَانُ مَا أُحِبُّ أَنَّ لِي الدُّنْيَا وَمَا فِيهَا
وَأَنِّي قَتَلْتُ الْحُسَيْنَ، سُبْحَانَ اللَّهِ! أَقْتُلُ حُسَيْنًا أَنْ
قَالَ: لَا أُبَايِعُ؟ ! وَاللَّهِ إِنِّي لَأَظُنُّ أَنَّ مَنْ يَقْتُلُ
الْحُسَيْنَ يَكُونُ خَفِيفَ الْمِيزَانِ يَوْمَ الْقِيَامَةِ ) “மர்வான்! (உமது வார்த்தைக்காக நான் வருந்துகிறேன்.) ஹுசைனைக்
கொல்வதின் மூலம் இந்த உலகமும் அதில் உள்ள அனைத்தும் என் வசம் ஆவதை நான் விரும்பவில்லை.
அல்லாஹ் தூயவன்! 'நான் உறுதிபிரமாணம்
செய்து தரமாட்டேன்' என்று ஹுசைன் சொன்னதற்காக
நான் அவரைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் மீதாணையாக!
ஹுசைனைக் கொல்பவருக்கு மறுமைநாளில் (தராசுடைய நன்மையின்) தட்டு இலேசானதாக இருக்கும்
என்று நான் நினைக்கிறேன்" என்று மிக உருக்கமான விதத்தில் மர்வானுக்கு பதிலளித்தார்.
நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா
திருப்தி நிலை
ஹுசைன் (ரலி) அவர்கள் தங்களின் குடும்பத்தாருடன் மதீனாவை விட்டு இரவிலேயே புறப்பட்டுச்
சென்றுவிட வேண்டும் என்று எண்ணினார்கள். உடனே அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்ய முற்பட்டார்கள்.
ஆனால் எங்கு, எந்தப் பாதை வழியாக
செல்வது என்பது புரியவில்லை.
இத்தகைய தர்மசங்கடமான நேரத்தில் முஹம்மத் பின் ஹனீஃபா (ரஹ்) அவர்கள் அங்கு வந்து,
ஹுசைன் (ரலி) அவர்களின் நிலையை அறிந்து இவ்வாறு
கூறினார்கள்:
தாங்கள் யஸீதுக்காக (பைஅத் எனும்) விசுவாச பிரமாணம் செய்ய வேண்டாம். இப்படியே ஓர்
குறிப்பிட்ட ஊரை நோக்கமாகக் கொண்டும் செல்ல வேண்டாம். 'நான் பதவி (கிலாஃபத்) ஏற்க தயார்' என்று பிரகடனம் செய்துவிடுங்கள். இதனை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களாயின்,
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். பொதுமக்கள் வேறு
யாரையேனும் தங்கள் ஆட்சியாளராக (கலீஃபாவாக) தேர்ந்தெடுத்துக்கொண்டால் இதனால் தங்கள்
தகுதிக்கு எந்த ஒரு குறைவும் வந்துவிடப்போவதில்லை. இந்த இக்கட்டான தருணத்தில் தாங்கள்
ஏதாவது ஒரு ஊரின் பக்கமோ அல்லது ஒரு கூட்டத்தாரின் பக்கமோ நீங்கள் ஆதரவு வைத்து செல்வீர்களாயின்,
ஒரு சிலர் உங்களை ஆதரிக்கலாம்; ஒரு சிலர் தங்களை எதிர்க்கலாம். இதன் மூலம் ஒருவருக்கொருவர்
கருத்து வேறுபாடு கொண்டு அடிதடி ரகளையில் ஈடுபட்டுவிடலாம். பின்னர் தாங்கள் அவர்களுக்கு
இடையே சிக்கிக்கொள்ள நேரிடும். தற்சமயம் முஸ்லிம் சமூகத்தின் மதிப்புமிக்க முத்தாக
சிறந்து விளங்கும் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு, கேவலமான முறையில் தவிக்க நேரிடலாம்.
பிறகு, ஹுசைன் (ரலி) அவர்கள்,
"குழப்பம் மிகுந்த இந்த சமயத்தில்
நான் என் குடும்பத்தாருடன் எங்கு செல்லலாம்?" என்று ஆலோசனை கேட்டார்கள். அதற்கு அவர், "தாங்கள் எங்கும் நிற்காமல் நேராக மக்காவுக்கே புறப்படுங்கள்.
அங்கு உங்கள் விஷயம் முடிந்து, மனதுக்கு திருப்தி
ஏற்பட்டால், நல்லது தான். மக்காவிலும்
திருப்தியான ஒரு வழி புலப்படவில்லையானால், தாங்கள் காடு மலை நோக்கி சென்றுவிடுங்கள். எங்கு சென்றாலும் தாங்கள் ஒரே இடத்தில்
தங்கி இருக்கவேண்டாம். இந்த பதவி (கிலாஃபத்) விஷயம் ஒருவாறு முழுமைபெற்றுவிட்டால்,
பின்னர் தாங்கள் எங்கு வேண்டுமானாலும் ஒரு குறிப்பிட்ட
ஊரில் நிரந்தரமாக தங்கிக் கொள்ளலாம். அதன் பின் மக்கள் தங்கள் நிலைகுறித்து எளிதில்
ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள்" என்று கூறினார். இந்த ஆலோசனை ஹுசைன் (ரலி) அவர்களுக்கு
சரியெனபட்டது. நல்ல ஆலோசனை கூறியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்கள். நூல்:- தாரீக்
தபரீ
இந்நிலையில் மதீனாவின் ஆளுநர் வலீத் பின் உத்பாவை ஹுசைன் (ரலி) போன்ற சிலரிடம்
பைஅத்கூட வாங்க திறமையில்லாததைக் காரணம் காட்டி, யஸீத் பதவியை விட்டு நீக்கினார். அப்போது மக்காவின் ஆளுநராக
இருந்த அம்ரு பின் சயீது பின் அல்ஆஸ் என்பவரின் கட்டுப்பாட்டில் மதீனாவின் ஆட்சி பொறுப்பும்
வந்து சேர்ந்தது.
கடிதங்கள் வந்தன
அன்றைய காலத்தில் மதீனா நகர் மிகவும் குழப்ப நிலையில் இருந்தது. மக்கா நகரில் மட்டுமே
அமைதி காணப்பட்டது. இராக் (கூஃபா) நாட்டிலிருந்து அதிகளவு கடிதங்கள் வந்தன. பல பிரதிநிதிகள்,
பிரமுகர்கள் ஹுசைன் (ரலி) அவர்களைச் சந்தித்தவாறு
இருந்தனர். "தாங்கள் கூஃபா நகரம் வந்துவிடுங்கள். நாங்கள் எல்லா வகையிலும் பாதுகாப்பு
தருகிறோம்" என்று கூறி வற்புறுத்தி வந்தனர்.
எனினும் முஹம்மத் பின் ஹனீஃபா (ரஹ்) அவர்கள் மக்கா மநகரை விட்டு வேறு எங்கும் வெளியில்
செல்லவே கூடாது என்று அன்பாக வேண்டுகோள் விடுத்திருந்தார். எனவே, மதீனா நகரை விட்டு புறப்பட்டு, முதலில் மக்கா நகரத்திற்கு சென்று விடுவது என்ற
ஒரே நோக்கத்தில் ஹுசைன் (ரலி) அவர்கள் மக்காவுக்கு புறப்பட தீர்மானித்தார்கள்.
ஆகவே, ஹிஜ்ரீ அறுபதாம் ஆண்டு
ஷஅபான் மாதம் குடும்பத்தினருடன் இரவோடு இரவாக புறப்பட்டுவிட்டார்கள். வழியில் அப்துல்லாஹ்
பின் முத்தீஃ என்பவரை சந்தித்தார்கள். ஹுசைன் (ரலி) அவர்கள் தங்கள் ஊரைவிட்டு குடும்பத்தாருடன்
வேறு ஊருக்கு புறப்பட்டு விட்டார்கள் என்று அறிந்து பதறினார்.
அப்போது அவர், "நாங்கள் அனைவரும்
தங்களுக்காக உயிரையே கொடுக்கத் தயாராக இருக்கிறோம். தாங்கள் எங்கு செல்வதாக இருக்கிறீர்கள்"
என்று கேட்டார்.
ஹுசைன் (ரலி) அவர்கள், "தற்சமயம் நான் மக்கா
செல்ல நாடிள்ளேன்" என்று கூறினார்கள்.
அவர், "தங்களின் எண்ணத்தை
நான் பாராட்டுகிறேன். தாங்கள் இராக் (கூஃபா)
நாட்டிற்கு மட்டும் போக எண்ணம் கொள்ளாதீர்கள். அது மகா மட்டமான பொல்லாத நாடு.
தங்களின் தந்தையார் அலீ (ரலி) அவர்கள் அங்கே தான் கொல்லப்பட்டார்கள். தங்களுடைய மூத்த
சகோதரர் ஹசன் (ரலி) அவர்களும் எந்தவித ஆதரவு, உதவி கிடைக்காமல் அந்த நாட்டில் தான் பரிதவித்தார்கள். ஈட்டிமுனையாலும்
படுங்காயம் அடைந்தார்கள். உயிர் மட்டுமே தப்பியது. எனவே, எக்காரணத்தைக் கொண்டும் கூஃபா நகர் மட்டும் செல்ல முற்படாதீர்கள்.
மக்கா நகரில் இறைஇல்லமான கஅபாவின் அருகிலேயே தங்கி இருப்பது தங்களுக்கு மேலானது. நன்மையானது.
தாங்கள் அரபியர்களின் தலைவர். ஹிஜாஸ் நகரத்தினர் தங்களையே தலைவராய் தேர்ந்தெடுத்துக்
கொள்வார்கள். அங்கும் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமாயின், நாங்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டோம்"
என்று ஆறுதல் வார்த்தைகளும், ஆலோசனையும் கூறினார்.
ஹுசைன் (ரலி) அவர்கள் மக்காவிற்கு வந்துவிட்டார்கள் என்ற செய்தி அறிந்த கூஃபா நகர
மக்கள் ரமலான் பிறை 10 அன்று ஒரு குழுவை
தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்தனர். அக்குழுவில் கைஸ் பின் மஸ்ஹர் அத்தாயீ, அப்துர் ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் அல்கவா அல்அர்பஹீ,
இமாரா பின் அப்துல்லாஹ் பின் ஸலூலி ஆகியோர் உடன்
இருந்தனர்.
இவர்கள் ஹுசைன் (ரலி) அவர்களை நேரில் சென்று சந்தித்தனர். ஹுசைன் (ரலி) அவர்களை
தம் நாட்டிற்கு வந்துவிட அழைப்பு விடுத்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த இது சம்பந்தமான
சுமார் 150 கடிதங்களையும் அவர்களிடம்
கொடுத்துவிட்டு சென்றனர்.
அன்பான வேண்டுகோளுக்கிணங்க
ஹுசைன் (ரலி) அவர்கள், "நான் உங்களின் அன்பான
வேண்டுகோளுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், நான் இத்தருணத்தில் உடனே புறப்பட இயலாது. எனக்குப்
பதிலாக முதலில் என் சகோதரர் முஸ்லிம் பின் அகீல் (அலீ - ரலி அவர்களின் சகோதரர் மகன்)
என்பவரை அனுப்புகிறேன். அவர் உங்களுடன் வருவார். உண்மையான தகவல்களை அறிந்த பின் அதனை
எனக்கு அறிவிப்பார். அதன் பின்னர் நான் கூஃபாவிற்கு புறப்படும் விஷயமாக ஒரு முடிவுக்கு
வருகிறேன்" என்று கூறியதுடன், முஸ்லிம் பின் அகில்
(ரஹ்) அவர்களை கூஃபா நகருக்கு அனுப்பி வைத்தார்கள்.
முஸ்லிம் பின் அகீல் (ரஹ்) அவர்கள் கூஃபாவில் முஸ்லிம் பின் அவ்ஸஜதுல் அஸதீ என்பவரின்
இல்லத்தில் தங்கினார். மரியாதை நிமித்தமாக இவரைக் காண கூபாவாசிகள் பலரும் வந்து சந்தித்தனர்.
அவர்கள் அனைவரும் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு ஆதரவாக உறுதிமொழி கூறினர். முதலில் பனிரெண்டாயிரம்
மக்கள் உறுதிமொழி எடுத்தனர் நேரம் செல்லச் செல்ல அது பதினெட்டாயிரம் வரை உயர்ந்தது.
ஹுசைன் (ரலி) அவர்களை ஆட்சிக்கட்டில் அமர்த்திட வேண்டி தங்களின் உடல், பொருள், உயிர் யாவும் இழக்கத் தயார் என்று உறுதியளித்தனர்.
உடனே முஸ்லிம் பின் அகீல் (ரஹ்) அவர்கள் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு,
"உங்களை ஏற்றுக்கொள்ள மக்கள்
ஒன்று திரண்டு விட்டனர். உங்களிடம் பைஅத் (உறுதிமொழி) செய்திடும் களம் பலமாக அமைந்துவிட்டது.
உங்களிடம் அதிகாரங்கள் கைக்கு வருகின்ற தளம் போடப்பட்டு விட்டது. எனவே, நீங்கள் உடனே இங்கு வர வேண்டியது தான். ஆகவே,
உடனே (மக்காவைவிட்டுப்) புறப்படுங்கள்" என்று
கடிதம் எழுதினார்.
கிளர்ச்சி உண்டாயிற்று
முஸ்லிமின் அகீல் (ரஹ்) அவர்களின் வருகையால் கூஃபா நகரம் முழுவதும் அவரைக் கண்டு,
அவரிடம் உறுதிமொழி அளிக்க மக்கள் நாளுக்கு நாள்
கூட்டம் கூட்டமாக திரண்டனர். இதன் காரணமாக கூஃபாவில் யஸீதுக்கு எதிராக பெரியதோர் கிளர்ச்சி
உண்டாயிற்று.
இந்தச் செய்தியை யஸீத் செவியுற்றார். அப்போது கூஃபாவின் ஆளுநராக இருந்த நபித்தோழர்
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களைப் பதவிநீக்கம் செய்துவிட்டு உபைதுல்லாஹ் பின் ஸியாத்
என்பவர் கூபாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். யஸீத் தமது புதிய ஆளுநருக்கு,
"முஸ்லிம் பின் அகீலை கொலை
செய்ய வேண்டும். அல்லது நாடு கடத்த வேண்டும்" என்று கடிதத்தின் மூலம் கட்டளையிட்டார்.
ஆளுநர் உபைதுல்லாஹ் பின் ஸியாத், முஸ்லிம் பின் அகீல் (ரஹ்) அவர்களை தேடுதல் பணியில் ஈடுபட்டார். அதன் ஹானீ பின்
ஹமீத் என்பவர் தமது வீட்டில் முஸ்லிம் பின் அகீல் அவர்களுக்கு அடைக்கலம் தந்திருந்தார்.
ஹானீ பின் ஹமீத் அவர்கள் ஆளுநர் இப்னு ஸியாதால் கடுமையாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பிறகு கொல்லப்பட்டார். பிறகு இப்னு ஸியாத், "கலகம் செய்பவர், அதற்கு துணை போவோர், அவரை அறிமுகம் செய்பவர்,
அபயம் அளிப்பவர், ஆதரவு தருபவர் என யாராக இருந்தாலும் நான் விடமாட்டேன்;
கடும் தண்டனை வழங்குவேன்" என்று அதிரடி அறிவிப்பு
செய்தார்.
தகவல் சொல்லிவிடுங்கள்
பின்னர் முஸ்லிம் பின் அகீல் )ரஹ்) அவர்களுக்கு ஆதரவளித்த பலரும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
அதன் பிறகு முஸ்லிம் பின் அகீல் (ரஹ்) அவர்கள் கைது செய்யப்பட்டார்.
அப்போது தன் மீது அனுதாபம் கொண்ட முஹம்மது பின் அஷ்அத் என்பவரை நோக்கி முஸ்லிம்
பின் அகீல் )ரஹ்) அவர்கள், "என்னை காப்பாற்றுவது
என்பது தங்களால் இயலாது. என்னைப்பற்றிக்கூட நான் கவலைப்படவில்லை. ஆனால், தங்களால் முடியும் என்றால், எனக்காக எனக்குப்பின் ஒரு உதவி செய்ய வேண்டுகிறேன்.
எனக்கு நடந்த நிகழ்வுகளை ஹுசைன் (ரலி) அவர்களுக்குத் தெரியப்படுத்திட வேண்டுகிறேன்.
மேலும், கூஃபாவாசிகளை நம்பி தம் குடும்பத்தார்களையெல்லாம்
அழைத்துக்கொண்டு இங்கு வரவேண்டாம். வந்த வழியே திரும்பி மக்காவுக்கு சென்றுவிட வேண்டும்
என்பதை மட்டும் தாங்கள் எனக்காகச் சொல்லி அனுப்பிவிடுவீர்களானால், இதுவே மிகப்பெரிய உதவியாகும்" என்று கூறினார்.
இதைக் கேட்ட முஹம்மது பின் ஆஸ்அத், "இறைவன் மீதாணையாக! நான் இத்தகவலை எப்படியாயினும் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு சொல்லி
அனுப்பிவிடுகிறேன். இனி, இந்த விஷயத்தைப்பற்றி
தாங்கள் கவலைப்பட வேண்டாம்" என்றார். பிறகு முஸ்லிம் பின் அகீல் (ரஹ்) அவர்கள்
கொல்லப்பட்டார்.
உண்மை நிலை அறியவில்லை
ஹுசைன் (ரலி) அவர்கள் இங்கு நடந்த எந்த நிகழ்வையும் அறியாமல், முஸ்லிம் பின் அகீல் அவர்களின் கடிதம் கண்டதும்
தமது குடும்பத்தினருடன் கூஃபாவுக்கு புறப்பட தயாராகிவிட்டார்கள்.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), அப்துல்லாஹ் பின்
ஜுபைர் (ரலி), அம்ர் பின் அப்துர்ரஹ்மான்
(ரலி), அபூபக்ர் பின் ஹாரிஸ் (ரலி),
அபூசயீத் (ரலி) போன்றோர் ஹுசைன் (ரலி) அவர்களை கூஃபாவாசிகளை
நம்பி போகவேண்டாம் தடுத்தும்கூட, ஹுசைன் (ரலி) அவர்கள்
இறைவனின் நாட்டப்படியே நடக்கட்டும் என்று எண்ணியவராக ஹிஜ்ரி 60 ஆம் ஆண்டு துல்ஹஜ் பிறை 11 ஆம் அன்று தமது குடும்பத்தினருடன் கூஃபாவை நோக்கி
புறப்பட்டார்கள். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா
பயணத்தின் இடையில் ஹுசைன் (ரலி) அவர்களை இராக்கிலிருந்து வந்துகொண்டிருந்த அப்துல்லாஹ்
பின் முத்தீஃ (ரஹ்) அவர்கள் சந்தித்து, "நீங்கள் கூஃபாவை நோக்கி செல்ல வேண்டாம். நிச்சயமாக நீங்கள் கொல்லப்படுவீர்களோ
என்று நான் பயப்படுகிறேன். அங்குள்ள சூழ்நிலை தங்களுக்கு சாதகமாக இல்லை" என்று
கூறினார். ஹுசைன் (ரலி) அவர்கள், "இறைவனின் விருப்பப்படியே எதுவும் நடக்கட்டும். இதைக்காட்டிலும் அதிகமாக என்ன நடந்து
விடப்போகிறது?" என்று கூறியவராக முன்னோக்கி
சென்றார்கள்.
ஹுசைன் (ரலி) அவர்களை "கூஃபா வர வேண்டாம்; திரும்பிச் செல்லுங்கள்! என்று கூறி, படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் அகில் (ரஹ்) அவர்கள் எழுதிய கடிதம்
ஹுசைன் (ரலி) அவர்களுக்கு தாமதமாக கிடைத்தது.
தகவல் வந்தது
பயணக்குழுவினர் "தஃலபிய்யா" என்ற இடத்தில் கூடாரமிட்டு தங்கி இருந்தனர்.
அப்போது பனூ அசத் கூட்டத்தைச் சார்ந்த ஒருவர் அங்கு வந்தபோது அவரிடம் கூஃபா நிலவரம்
பற்றி விசாரிக்கப்பட்டது. அதற்கு அவர், "முஸ்லிம் பின் அகீல் (ரஹ்), ஹானி பின் ஹமீத்
(ரஹ்) ஆகிய இருவரும் கொல்லப்பட்டு அவர்களது சடலங்கள் கடைத்தெருவில் தரதரவென்று இழுத்துச்
செல்லப்பட்டதைக் கண்டேன்" என்று கூறினார்.
இதைக் கேட்ட ஹுசைன் (ரலி) அவர்கள் இன்னாலில்லாஹி... என்று கூறிக்கொண்டே இருந்தார்கள்.
பயணக் குழுவில் புதிதாக இணைந்த இரண்டு நண்பர்கள், ஹுசைன் (ரலி) அவர்களிடம், "மேற்கொண்டும் தாங்கள் கூஃபா நோக்கி செல்வது உசிதமல்ல. இங்கிருந்து
இப்படியே திரும்பிவிடுங்கள். கூஃபாவில் தங்களுக்கு உதவியாக யாரும் இருக்க மாட்டார்கள்.
அவர்களெல்லாம் உங்களுக்கு பரமவிரோதியாகவும் மாறிவிடுவார்கள்" என்று கூறினர்.
பின்வாங்கவில்லை
எனினும் இதை முஸ்லிம் பின் அகீல் (ரஹ்) அவர்களின் சகோதரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
எங்கள் சகோதரரான முஸ்லிமின் கொலைக்கு பகரமாய் பழிவாங்க வேண்டும்; அல்லது நாம் எல்லாம் வீர மரணமடைய வேண்டும். அதுவரை
நாம் ஊர் திரும்பிச்செல்லக் கூடாது" என்று பிடிவாதமாக கூறினர்.
ஹுசைன் (ரலி) அவர்கள், "எல்லாரும் இறந்த பின்
என்ன இனி வேண்டியிருக்கிறது" என்று கூறினார்கள்.
ஹுசைன் (ரலி) அவர்களுக்கு உண்மையான ஆதரவாளர்களாக இருந்த ஹானி பின் ஹமீத் (ரஹ்),
கைஸ் பின் மஸ்ஹர் (ரஹ்), அப்துல்லாஹ் பின் பக்தர் (ரஹ்) ஆகியோர் ஆளுநர் இப்னு ஸியாதால்
படுகொலை செய்யப்பட்டனர்.
இவற்றையெல்லாம் அறிந்த ஹுசைன் (ரலி) அவர்கள், தமது கூட்டத்தினரை நோக்கி! "நம்மைச் சார்ந்தவர்கள் நம்மை
கைவிட்டுவிட்டனர். இப்போது உங்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், என்னுடன் வந்தவர்களில் திரும்ப நினைப்பவர்கள் தாராளமாக
திரும்பிச்சென்றுவிடலாம். அவர்கள்மீது நான் ஒரு குற்றமும் சுமத்தமாட்டேன். அவர்களைப்
பற்றி தவறாக நினைக்கவும் மாட்டேன். அவர்கள் செல்ல எந்த தடையும் இல்லை" என்று கூறினார்கள்.
பயணத்தின் இடையில் ஹுசைன் (ரலி) அவர்களுடன் இணைந்து கொண்டவர்கள் ஹுசைன் (ரலி) அவர்களைவிட்டு
அகன்று சென்றனர். மக்காவில் இருந்து அவர்களை பின்தொடர்ந்தவர்கள் மட்டுமே ஹுசைன் (ரலி)
அவர்களோடு எஞ்சியிருந்தனர். நூல்:- தாரீக் தபரீ
கூஃபாவாசிகளின் மனநிலை
ஹுசைன் (ரலி) அவர்கள் கர்பலாவை நோக்கி தமது குழுவினருடன் வந்து கொண்டிருந்தார்கள்.
வழியில் "அதிபுல் ஹிஜானாத்" என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு
அன்னாரின் ஆதரவாளர்கள் நான்கு பேர் அங்கு வந்து ஹுசைன் (ரலி) அவர்களைச் சந்தித்தனர்.
அப்போது ஹுசைன் (ரலி) அவர்கள் வந்தவர்களிடம், "கூஃபாவாசிகளின் மனநிலை எப்படி இருக்கிறது?" என்று விசாரித்தார்கள். அவர்களில் மஜ்மஉ பின் அதீ
என்பவர், "கூஃபாவின் தலைவர்களுக்கு
இலஞ்சம் ஏராளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் பணப்பை எல்லாம் நிறைந்து கிடக்கின்றன.
எனவே, இந்த தலைவர்கள் எல்லாம் தங்கள்
விஷயத்தில் நெருப்பைப் போன்று மிகக் கொடூரமாக இருக்கின்றனர். ஆனால், ஏழை எளியோர் தங்கள் மீது அதிக அளவில் அன்பு பூண்டிருக்கின்றனர்.
என்றாலும், இவர்களால் தங்களுக்கு என்ன உதவியைச் செய்யமுடியும்?"
என்று கூறினார். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா
இறுதியாக, ஹுசைன் (ரலி) அவர்களின்
குழுவினர் ஹிஜ்ரி 61-ம் ஆண்டு முஹர்ரம்
இரண்டாம் தேதி வியாழக்கிழமை "கர்பலா" பொட்டல்வெளியில் கூடாரம் அடித்து தங்கினர்.
ஹுசைன் (ரலி) அவர்கள் தமது படையுடன் "கர்பலா" என்ற இடத்தில் தங்கிய தமது
ஆதரவாளர்களிடம், ( مَا اسْمُ
هَذِهِ الْأَرْضِ ) "இது என்ன இடம்?" என்று கேட்டார்கள்.
இந்த இடத்தின் பெயர் "கர்பலா" என்று கூறினர். ஹுசைன் (ரலி) அவர்கள் இதன்
பெயர் ( كَرْبٌ وَبَلَاءٌ ) “துன்பமும், சோதனையும் நிறைந்த
பூமி" என்று கூறினார்கள். நூல்:- அல்பிதாயா
வந்நிஹாயா
ஆளுநர் இப்னு ஸியாதின் உத்தரவுப்படி உமர் பின் சஅத் பின் அபீவக்காஸ் என்பவர் தலைமையில்
4000 போர் வீரர்களைக் கொண்ட படையினர்
கர்பலாவில் வந்து இறங்கினர்.
ஹுசைன் (ரலி) அவர்களின் கூட்டத்தினர், அருகில் இருக்கும் புராத் நதியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட எடுத்து பருகிவிடாமல்
தடுப்பதற்காக ஆளுநர் இப்னு ஸியாதின் கட்டளைப்படி உமர் பின் சஅத் 500 போர் வீரர்களை புராத் நதிக்கரைக்கு காவலுக்கு அனுப்பிவைத்தார்.
முஹர்ரம் பிறை 7 அன்று தண்ணீர் எடுக்கக்கூட
தடை விதிக்கப்பட்டது.
மூன்று கோரிக்கைகள்
ஹுசைன் (ரலி) அவர்கள் எதிர் அணியிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.
அதாவது, ( يَا عُمَرُ
; اخْتَرْ مِنِّي إِحْدَى ثَلَاثِ خِصَالٍ ; إِمَّا أَنْ تَتْرُكَنِي أَرْجِعُ
كَمَا جِئْتُ ; فَإِنْ أَبَيْتَ هَذِهِ فَسَيِّرْنِي إِلَى يَزِيدَ فَأَضَعَ يَدِي
فِي يَدِهِ فَيَحْكُمَ فِيَّ مَا رَأَى، فَإِنْ أَبَيْتَ هَذِهِ فَسَيِّرْنِي إِلَى
التُّرْكِ فَأُقَاتِلَهُمْ حَتَّى أَمُوتَ ) “உமர்! என்னுடைய மூன்று
கோரிக்கைகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்: 1) என்னை விட்டு விடுங்கள்; நான் வந்தபடியே திரும்பிச் சென்றுவிடுகிறேன். 2) நீங்கள் இதை மறுத்தால், என்னை யஸீதிடம் அனுப்புங்கள், நான் அவரிடம் என் நிலை குறித்து எடுத்துரைப்பேன். அவர் என்னுடைய
விஷயத்தில் தீர்ப்பு சொல்லட்டும். 3) நீங்கள் இதை மறுத்தால், என்னை அவர்களிடம்
அனுப்புங்கள், நான் இறக்கும் வரை
அவர்களுடன் போராடுவேன்" என்று கூறினார்கள். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா
மற்றொரு அறிவிப்பில்: நீங்கள் இதை மறுத்தால், நாட்டின் (கூஃபாவின்) எல்லை புறத்திற்கு என்னைச் செல்லவிடுங்கள்.
ஆனால், அவற்றில் ஒன்றுகூட
ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக, ஆளுநர் இப்னு ஸியாத்திடம்
வருமாறு திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது.
ஹுசைன் (ரலி) அவர்கள் தன்னைத்தானே இப்னு ஸியாத்திடம் ஒப்படைக்க விரும்பவில்லை.
ஏனென்றால், இதற்கு முன்பு முஸ்லிம்
பின் அகீல் (ரஹ்) அவர்களுடன் இப்னு ஸியாத் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை ஹுசைன்
(ரலி) அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள்.
போரைத் தவிர்க்க
உமர் பின் சஅத் என்பவர் ஹுசைன் (ரலி) அவர்களை எதிர்த்துப் போர் புரிய தயாராகிவிட்டாலும்,
அவர் மனம் அவரை நிந்தனை செய்து கொண்டிருந்தது. எனவே,
போரைத் தவிர்ப்பது எப்படி? என்ற சிந்தனையில் லயித்தார். போரைத் தவிர்க்க நாளைக்
கடத்திக் கொண்டே வந்தார்.
இதையறிந்த ஆளுநர் இப்னு ஸியாத் பின்வருமாறு கடிதம் எழுதினான்: நீர் காலதாமதம் செய்ய
வேண்டும் என்பதற்காக நான் உம்மை களத்திற்கு அனுப்பவில்லை. மேலும், அவருடைய நலன்களைப் பாதுகாக்கவும் நான் உம்மை அனுப்பவில்லை.
இக்கடிதம் கண்டதும் என்னுடைய கட்டளை ஏற்றுக்கொண்டால், அவர்கள் அனைவரையும் சிறைபிடித்து என்னிடம் அனுப்பி வைத்துவிட
வேண்டும்.
அவர்கள் என் கட்டளையை மீறினால், உடனே அவர்களுடன் போர் தொடங்கிட வேண்டும். ஏனெனில், அவர்கள் போர் தொடுப்பதற்காகவே இங்கு வந்திருக்கிறார்கள் என்பதை
நீர் உணர்ந்துகொள்ள வேண்டும். இதைச் செய்து முடிக்க உமக்கு இயலவில்லையாயின்,
உம்மிடம் உள்ள போர் வீரர்களை இந்த உத்தரவு ஓலையைக்
கொண்டு வரும் ஷமிர் பின் தில் ஜவ்ஷன் ( شَمِرُ بْنُ ذِي الْجَوْشَنِ ) என்பவனிடம் ஒப்படைத்துவிட்டு நீர் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். நான்
இட்ட கட்டளையை அவர் நிறைவேற்றுவான். பிறகு உமக்கு எவ்வித எந்தவித சிரமமும் சலனமும்
உண்டாகாது. நூல்:- தாரீக் தபரீ
ஆளுநர் இப்னு ஸியாத், "உமர் பின் சஅத் என்
முடிவுக்கு கட்டுப்பட்டு ஹுசைனை எதிர்த்து போராட முன் வந்தால், நீயும் அவருடன் சேர்ந்து போரிடு. இல்லையானால் உமர்
பின் சஅதைக் கொன்றுவிட்டு, நீ அந்த பொறுப்பில்
இருந்து செயல்படு! என்று ஷமிர் பின் தில் ஜவ்ஷனுக்கு கட்டளையிட்டு போர்க்களத்திற்கு
அனுப்பி வைத்தான்.
அவகாசம் தாருங்கள்
எதிர் படையினர் போருக்கு தயாரானபோது ஹுசைன் (ரலி) அவர்கள், "இன்றிரவு மட்டும் அவகாசம் தாருங்கள். ஏனெனில்,
நான் இன்றிரவு நன்றாக மனதிருப்தியுடன் தொழுதுகொள்கிறேன்.
இறைவனிடம் வேண்டியது கேட்டுக்கொள்கிறேன். எனக்கு பாவமன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்.
என் நிலையையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு தொழுகையில் எவ்வளவு ஆர்வம் உண்டு என்பதையும்,
இறைவனின் வேதத்தை ஓதுவதில் எவ்வளவு பிரியமுண்டு
என்பதையும் இறைவன் மிக அறிந்தவனாக இருக்கிறான்" என்று கூறினார்கள். அதற்கு அனுமதிக்கப்பட்டது.
தியாகத்திற்கு தயாராக உள்ளோம்
அதன் பிறகு ஹுசைன் (ரலி) அவர்கள் தமது கூட்டத்தாரை நோக்கி! "இங்கு சூழ்ந்து
நிற்கும் பகைவர்களால் இன்றைக்கோ அல்லது நாளைக்கோ என்று நான் காத்திருக்கிறேன். ஆகவே,
நான் உங்களுக்கு மனப்பூர்வமாக மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.
நீங்கள் இப்போது வேண்டுமானாலும் தாராளமாகத் திரும்பிச்சென்று விடலாம். நான் உங்களை
குற்றம்பிடிக்க மாட்டேன். நிந்திக்கவும் மாட்டேன். இரவு இதோ வந்துவிட்டது. உங்களில்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஒட்டகத்தை பிடித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் எனது குடும்பத்தார்களில்
ஒருவரை துணைக்கு அழைத்துச் செல்லுங்கள். இறைவன் உங்களுக்கு நல்ல பலன் அளிக்க போதுமானவன்.
மேலும், நீங்களெல்லாம் உங்களுடைய கிராமங்களுக்குச்
சென்றுவிடலாம். வந்து சூழ்ந்து நிற்கும் இந்த பேராபத்தை விட்டும் இறைவன் உங்களை காப்பாற்ற
போதுமானவன். நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால், இங்கு கூடியிருக்கும் எதிரிகளெல்லாம் என்னைத்தான் தேடுவார்கள்.
நான் தான் அவர்களுக்குத் தேவை. எனக்குப் பின் உங்களில் எவரையும் அவர்கள் தேட மாட்டார்கள்
என்பது நீங்கள் அறிந்த விஷயம் தான்" என்று கூறினார்கள்.
ஹுசைன் (ரலி) அவர்களின் உரையைக் கேட்ட அன்னாரின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என அனைவரும், "நாங்கள் எல்லோரும் எங்களுடைய உடல், பொருள், உயிர் மற்றும் எங்கள்
குடும்பத்தார்களையும் உங்களுக்காக தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். உங்களுடன் நாங்களும்
சேர்ந்து போராடுவோம். தங்களுக்கு ஏற்படும் முடிவே எங்களுக்கும் ஏற்படட்டும். தங்களுக்கு
பின் நாங்கள் மட்டும் உயிர் வாழ விரும்பவில்லை" என்று உறுதியாக கூறிவிட்டனர்.
முஹர்ரம் பத்தாம் நாள் அதிகாலை (ஸுப்ஹு) தொழுகையை ஹுசைன் ரலி அவர்கள் தமது படையினருக்கு
தொழ வைத்தார்கள். ஹுசைன் ரலி அவர்களின் அணியில் குதிரைப்படையில் 30 போர் வீரர்களும், குதிரைப்படையில் 40 போர் வீரர்களும் இருந்தனர். எதிர் அணியிலோ 4000 போர் வீரர்கள் இருந்தனர்.
யுத்தக்களம்
இரு தரப்பினருக்கும் இடையே போர் துவங்கியது. ஹுசைன் (ரலி) அவர்களின் போர் வீரர்கள்
அனைவரும் கொல்லப்பட்டனர். ஹுசைன் (ரலி) அவர்களுடன் இப்போது யாருமில்லை. சுவைத் பின்
அம்ர் அபில் மத்தாலிஹ் என்ற பெரியவர் மட்டும் எஞ்சி நின்றார். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா
ஹுசைன் (ரலி) அவர்களின் கண்ணெதிரே அவர்களின் போர் வீரர்களெல்லாம் கொத்துக்கொத்தாக
கொன்று குவிக்கப்பட்டு, காட்சி தருகின்றனர்.
ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பக் குழந்தைகள்கூட விட்டு வைக்கப்படவில்லை. வெட்டி வீசப்பட்டனர்.
போர்க்களத்தில் எஞ்சியிருப்பவர்கள் ஹுசைன் (ரலி) அவர்களின் நோயாளியான மகன் ஜைனுல்
ஆபிதீன் என்ற சின்ன அலீ ஆகிய இருவர்களையும் தவிர அங்கு வேறு ஆண்கள் யாருமில்லை.
முஹர்ரம் பிறை 9 ஆம் நாள் முதல் தண்ணீர் தடுக்கப்பட்டது. (யூப்ரடீஸ்
எனும்) புராத்மீது கடுமையாக பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஹுசைன் (ரலி) அவர்களுக்கு
தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கவும் இப்போது யாருமில்லை. தங்களின் கூடாரங்களில் இருந்த
தண்ணீர் எல்லாம் தீர்ந்துவிட்டது. ஹுசைன் (ரலி) அவர்களின் நாவு தாகத்தால் தவித்தது.
தொண்டை வறண்டு விட்டது. சொந்தம் பந்தம் எல்லாம் மரணமடைந்து, தனி மரமாக தன்னந்தனியாக நிற்பதும் தமது மகன் அலீ (ஸைனுல் ஆபிதீன்)
வியாதியால் கிடப்பதும் மேலும் அவர்களை வதைத்தது. சூரியனின் உக்கிரமான கதிர்கள் கர்பலா
மணலைச் சுட்டெரித்தது.
உயிர்த்தியாகியானார்கள்
இத்தருணத்தில் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு தாங்க முடியாத தாகம் ஏற்பட்டதால்,
தங்கள் குதிரையை புராத் நதியின் பக்கம் தட்டிவிட்டார்கள்.
புராத் நதியின் அருகில் நெருங்கவிடாமல் அவர்களை எதிரிப்படையினர் தடுத்தனர். எதிரிகளின்
கட்டுப்பாட்டையும் மீறி புராத் நதியின் அருகில் சென்று தங்கள் கரங்களால் தண்ணீரை அள்ளி
தமது வாயின் அருகே கொண்டு சென்றது தான் தாமதம் 'விர்' என்று எங்கிருந்தோ
பாய்ந்து வந்த ஓர் அம்பு அன்னாரின் தாடையில் வந்து பலமாக தைத்தது. அந்த அம்பை உருவி
எடுத்தபோது, இரத்தம் பிறிட்டு
வெளியேறியது. அம்பு வந்த திசையை ஹுசைன் (ரலி) அவர்கள் பார்த்தார்கள். "ஹுசைன்
பின் தமீம்" என்பவன் தான் அந்த அம்பை எய்தான். அன்னார், அவனுக்கு எதிராக பிரார்த்தித்தார்கள்.
போர்க்களத்தில் நின்றிருந்த ஹுசைன் (ரலி) அவர்களை நெருங்க படைவீரர்கள் எவருக்கும்
தைரியம் வரவில்லை. இம்மாபாதகச் செயலை யார் முன் வந்து செய்வது? மலையைப் போன்ற மாபாவத்தைச் சுமந்துகொள்ள யாருக்கும்
விருப்பமில்லை. போர் வீரர்களின் இந்த நிலையைக் கண்ட ஷமிர் பின் தில்ஜவ்ஷன் என்பவன்
கொலைவெறியை படை வீரர்களிடம் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தான்.
அவன் கூறிய வார்த்தையை கேட்டுக்கொண்டிருந்த "ஜுர்ஆ பின் ஷரீக் அத்தைமீ"
என்பவன் ஹுசைன் (ரலி) அவர்களின் வலது தோள்பட்டையில் தனது வாளால் ஒரே வீச்சில் வெட்டினான்.
அடுத்து "ஸினான் பின் அனஸ்" என்பவன் ஹுசைன் (ரலி) அவர்களை ஈட்டியால் குத்தினான்.
அடுத்தபடியாக அன்னாரின் புனித தலையை வெட்டி உடலைவிட்டு அப்புறப்படுத்திவிட்டான். இன்னாலில்லாஹி
வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஹிஜ்ரீ 61 ஆம் ஆண்டு முஹர்ரம்
மாதம் பத்தாம் தேதி (கி.பி. 681 செப்டம்பர் மாதம்)
ஹுசைன் (ரலி) அவர்கள் இந்த உலகைவிட்டுப் பிரிந்தார்கள். நூல்:- தாரீக் தபரீ
சல்மா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது
அவர் அழுதுக்கொண்டிருந்தார். நான், "ஏன் அழுகிறீர்?" என்று கேட்டேன். அதற்கு
அவர் கூறினார். "பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டேன். அவர்களின்
தலையிலும் தாடியிலும் (புழுதி) மண் படிந்திருந்தது. ( مَا لَكَ يَا رَسُولَ اللَّهِ ) "நாயகமே! உங்களுக்கு என்ன நிகழ்ந்தது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ( شَهِدْتُ قَتْلَ الْحُسَيْنِ آنِفًا ) "சற்று முன்பாக ஹுசைனின் கொலையைக் கண்டேன்"
என்று பதிலளித்தார்கள். நூல்:- திர்மிதீ-3694
ஹுசைன் (ரலி) அவர்கள் கர்பலா களத்தில் வீரமரணமடைந்த பிறகு, கூஃபா படையினர் பெண்கள் தங்கியிருந்த கூடாரங்களில்
புகுந்து அங்குள்ள சிறிய ஈட்டி முதல் அனைத்து பொருள்களையும் சூறையாடிச் சென்றனர்.
ஹுசைன் (ரலி) அவர்களுடன் 72 ஆண்கள் உயிர்த்தியாகிகளானார்கள்.
இவர்களுள் இருபது பேர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சந்ததியைச் சார்ந்தவர்கள்.
ஹுசைன் (ரலி) அவர்களின் சகோதரி ஸைனப் பின்த் ஃபாத்திமா (ரலி) அவர்கள் வேதனைத் தாங்காமல்,
( يَا مُحَمَّدَاهُ، يَا مُحَمَّدَاهُ،
صَلَّى عَلَيْكَ مَلَائِكَةُ السَّمَاءِ، هَذَا حُسَيْنٌ بِالْعَرَاءِ، مُزَمَّلٌ
بِالدِّمَاءِ، مُقَطَّعُ الْأَعْضَاءِ، يَا مُحَمَّدَاهُ، وَبَنَاتُكَ سَبَايَا،
وَذُرِّيَّتُكَ مُقَتَّلَةٌ تَسْفِي عَلَيْهَا الصَّبَا ) "என் அருமை பாட்டனாரே!
வானவர்கள் உங்கள்மீது ஸலவாத் ஓதட்டும்! (இங்கு வந்து பாருங்கள்.) இதோ! ஹுசைன்,
அரைகுறை ஆடையுடன் திறந்த மைதானத்தில் இரத்த வெள்ளத்தில்
கேட்பாரற்று உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டு கிடக்கிறார். என் அருமை பாட்டனாரே! உங்கள்
பெண்மக்கள் எல்லாம் கைதிகளாய் நிற்கின்றனர். உங்கள் சந்ததியினர் எல்லாம் கொல்லப்பட்டு
கீழே இறந்து கிடக்கின்றனர். அவர்கள்மீது புழுதிப்படலம் மூடிக்கொண்டிருக்கிறது"
என்று புலம்பியவாறு கண் கலங்கி அழுதார்கள். அதைக் கேட்ட மற்ற பெண்களும் கண்கள் கலங்கி
அழுதனர். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா
நல்லடக்கம் செய்தனர்
ஹுசைன் (ரலி) அவர்கள் உயர்த்தியாகம் செய்த பின், அவர்களின் வம்சத்தில் ஸைனுல் ஆபிதீன் (ரஹ்), ஹசன் பின் ஹசன் (ரஹ்), உமர் பின் ஹுசைன் (ரஹ்) ஆகியோர் மற்றும் பால் அருந்தும் சில
பச்சிளங்குழந்தைகளும் தான் எஞ்சியிருந்தனர்.
கர்பலா களத்தில் உயர்த்தியாகம் செய்த பரிசுத்த தேகங்கள் இரண்டு நாள்களாக ஆங்காங்கே
கேட்பாரற்று கிடந்தன. மூன்றாம் நாள் "காலிரிய்யா" என்ற கிராம மக்கள் உயிர்த்தியாகியாய்
கிடந்த உடல்களையெல்லாம் சேகரித்து நல்லடக்கம் செய்தனர். ஹுசைன் (ரலி) அவர்களின் உடல்
மட்டும் தலையின்றி கர்பலாக்களத்தில் சிதைந்து கிடந்தது. அந்த புனித உடல் தலையில்லாமல்
நல்லடக்கம் செய்யப்பட்டது.
கேலிச் செய்தான்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் இப்னு ஸியாதிடம் இருந்தேன். அந்நிலையில்
(கர்பலாவில் கொல்லப்பட்ட) ஹுசைன் (ரலி) அவர்களின் தலை கொண்டுவரப்பட்டது. அப்போது இப்னு
ஸியாத் அதன் மூக்கில் குச்சியால் குத்தி காட்டிவிட்டு, ( مَا رَأَيْتُ مِثْلَ هَذَا حُسْنًا لَمْ يُذْكَرْ ) "இவர் போன்ற அழகரை நான் பார்த்ததில்லை" (ஏன் இவரை அழகர்
என்கிறார்கள்? இவர் அழகாக இல்லையே”
என்ற தொனியில் ஏளனமாக) கூறினான்.
அப்போது நான், ( أَمَا
إِنَّهُ كَانَ مِنْ أَشْبَهِهِمْ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
) "அறிக! இவர் கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்களுக்கு (உருவமைப்பில்) மிகவும் ஒப்பானவராக இருந்தார்" என்று கூறினேன்.
நூல்:- திர்மிதீ-3701, புகாரீ-3748,
முஸ்னது அஹ்மத்
கண்டிக்கப்பட்டான்
ஹுசைன் (ரலி) அவர்களின் தலை ஆளுநர் இப்னு ஸியாத்தின் பார்வைக்காக கூஃபாவுக்கு அனுப்பி
வைக்கப்பட்டது. ஆளுநர் இப்னு ஸியாத் மக்களின் மத்தியில் அமர்ந்திருந்தான். அவன் முன்
ஒரு தட்டில் ஹுசைன் (ரலி) அவர்களின் தலை வைக்கப்பட்டிருந்தது. ஒரு குச்சியில் ஹுசைன்
(ரலி) அவர்களின் தலையில் உதட்டுப் பகுதியில் குத்தினான். அதை அருகிலிருந்து கவனித்த
நபித்தோழர் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் அழுதுகொண்டே, ( اعْلُ بِهَذَا الْقَضِيبِ عَنْ هَاتَيْنِ الثَّنِيَّتَيْنِ،
فَوَاللَّهِ الَّذِي لَا إِلَهَ غَيْرُهُ، لَقَدْ رَأَيْتُ شَفَتَيْ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى هَاتَيْنِ الشَّفَتَيْنِ
يُقَبِّلُهُمَا ) "இந்த இரண்டு முன் பற்களுக்கு மேலே அந்த குச்சியை
உயர்த்துவீராக. ஏனென்றால், அவனைத் தவிர வேறு
இறைவன் இல்லையே, அந்த அல்லாஹ்வின்
மீதாணையாக! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த இரண்டு உதடுகளிலும் முத்தமிடுவதை நான்
கண்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
அப்போது இப்னு ஸியாத், ( فَوَاللَّهِ لَوْلَا أَنَّكَ شَيْخٌ قَدْ خَرِفْتَ، وَذَهَبَ
عَقْلُكَ لَضَرَبْتُ عُنُقَكَ ) "அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் தள்ளாத வயதானவராக இல்லாதிருந்தால், உமது கழுத்தைத் துண்டித்திருப்பேன்" என்று
கூறினான்.
ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "அரபு சமூகம் இன்று முதல் உன்னால் அடிமைகள் என்ற பேடி விலங்கை
மாட்டிக்கொண்டு விட்டது. நீர், ஹுசைன் பின் ஃபாத்திமா
(ரலி) அவர்களைக் கொன்றுவிட்டீர். அதிகமான நல்லவர்களையும் கொன்றுவிட்டீர். கௌரவமானவர்களையெல்லாம்
அடிமையாக்கிவிட்டீர். இக்கேவலமான விஷயத்தை செய்ய இப்னு மர்ஜானா (இப்னு ஸியாத்) நீர்
இறங்கிவிட்டீர். இத்தகைய கேவலமானவர்களை விட்டும் விலகி இருப்பதே மிகவும் நன்மையாகும்"
என்று கூறிக்கொண்டே அங்கிருந்து வெளியேறினார்கள். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா
குடும்பத்தினர் கூஃபாவை நோக்கி!
ஹுசைன் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவர்கள் வீட்டுப் பெண்களும் குழந்தைகளும் கூஃபா நகரத்திற்கு
கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் புறப்படும்போது வழி நெடுக உயிர்த்தியாகம் செய்தவர்களின்
உடல்கள் ஆங்காங்கே சிதறி சீரழிந்து கிடப்பதும், அவை அடக்கம் செய்யாமல் இருப்பதையும் கண்டு கதறி அழுதனர்.
கூஃபா நகர் வந்த சேர்ந்த ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பத்தினர் கூஃபா ஆளுநர் இப்னு
ஸியாதின் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். அந்தப் புனித குடும்பத்தினரை பார்த்த
இப்னு ஸியாத், அலீ பின் ஹுசைன்
(ஸைனுல் ஆபிதீன் - ரஹ்) அவர்களை கொன்றுவிட உத்தரவிட்டான்.
அப்போது மனம் கலங்காத அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள், "நீர் என்னைக் கொல்ல எண்ணினால், பெரிய மனம் வைத்து என்னைச் சார்ந்து நிற்கும் இப்பெண்களையெல்லாம்
பெருந்தன்மை உள்ள ஒருவரிடம் நீர் ஒப்படைத்துவிட வேண்டும். அவர் இவர்களையெல்லாம் நல்ல
முறையில் ஊருக்குக் கொண்டு போய் சேர்த்துவிடுவார். இத்தகைய பேருதவியைத் தான் உன்னிடம்
வேண்டி நிற்கிறேன்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
இதைக் கேட்ட இப்னு ஸியாத் சற்று மனம் தளர்ந்தான். விதிவிலக்காக அன்னாரின்மீது இரக்கப்பட்டு,
"சரி! போகட்டும். இச்சிறுவனைக்
கொல்லவேண்டாம். இவன் இப்பெண்களின் பாதுகாப்புக்காகவே இருக்கட்டும்" என்று கூறிவிட்டான்.
நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா
யஸீதின் நிலைபாடு
ஆளுநர் இப்னு ஸியாத், ஹுசைன் (ரலி) அவர்களின்
குடும்பத்தினரை ஷாம் தேசத்திற்கு அதன் அதிபர் யஸீத் அவர்களின் பார்வைக்கு அனுப்பிவைத்தான்.
ஹுசைன் (ரலி) அவர்கள் விஷயத்தில் இப்னு ஸியாத் இவ்வளவு கொடுமையாளராக நடந்து கொண்டதற்கு
காரணம் இவர் பஸரா கூஃபா ஆளுநர் மட்டுமல்ல. ஷாம் அதிபர் யஸீத் உடைய சிறிய தந்தையின்
மகனாக (மறைந்த முஆவியா - ரலி அவர்களின் சகோதரர் மகன்) இருந்தார். தம்முடைய சகோதரர்
ஷாம் தேச அதிபர் யஸீத் உடைய ஆட்சிக்கு போட்டியாக ஹுசைன் ரலி அவர்கள் தலையெடுக்கிறார்.
எனவே, அதை தடுத்திட வேண்டும் என்ற
எண்ணத்தில் தான் இவ்வாறு கொடூரமான கொடுமைகளை நடத்தியிருக்கலாம். அவரின் சகோதர பாசம்
தான் ஹுசைன் (ரலி) அவர்களின் விஷயத்தில் கடுமையாக நடந்திட ஒரு காரணமாகவும் இருக்கலாம்.
ஹுசைன் (ரலி) அவர்கள் குடும்பத்தார்மீது கட்டவிழ்த்துவிட்ட நடவடிக்கைகள் யாவும் ஆளுநர்
இப்னு ஸியாதின் சொந்த முடிவுகள் தான். அவர் செய்த அநியாயத்திற்கு எள்ளளவும் ஷாம் நாட்டின்
அதிபர் யஸீதுக்கு சம்பந்தம் இல்லை என்பதே சரித்திரம் கூறும் உண்மை.
கர்பலாவில் நடந்த கொலை வெறியாட்டம் ஹுசைன் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டு,
தலையை துண்டிக்கப்பட்ட எதுவும் யஸீதுடைய கவனத்திற்கு
கொண்டு செல்லப்படவில்லை என்பது தான் முற்றிலும் உண்மை.
மஹ்பர் பின் ஸஅலபா என்பவர் ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு
வந்து ஷாம் அதிபர் யஸீதின் மாளிகையின் வாயிலை அடைந்தார்.
அதிபர் யஸீத், கர்பலாவில் நடந்த
அநியாயங்களைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு அவர் கண்கள் கண்ணீர் சிந்தும் அளவுக்கு அழுதார்.
( قَدْ كُنْتُ أَرْضَى مِنْ
طَاعَتِكُمْ بِدُونِ قَتْلِ الْحُسَيْنِ، لَعَنَ اللَّهُ ابْنَ مَرْجَانَةَ، أَمَا
وَاللَّهِ لَوْ أَنِّي صَاحِبُهُ لَعَفَوْتُ عَنْهُ، وَرَحِمَ اللَّهُ الْحُسَيْنَ ) “நீங்கள் ஹுசைனை கொல்லாமல் இருந்திருந்தால் நான் அதிகம் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.
இப்னு மர்ஜானா (இப்னு ஸியாத்)மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும். (ஹுசைன் கொல்லப்படாமல்
எனக்கு கட்டுப்படுவதையே, நான் விரும்பினேன்.)
நான் ஹுசைனுடன் இருந்திருந்தால் இறைவன் மீதாணையாக! நான் (அவரை கொன்றிருக்கவே மாட்டேன்.)
அவரை மன்னித்திருப்பேன். இறைவன் ஹுசைனுக்கு அருள்புரிவானாக" என்று கூறினார்.
ஹுசைன் (ரலி) அவர்களின் தலையை ஒரு தட்டில் எடுத்து வைத்து, யஸீதின் பார்வைக்கு வைக்கப்பப்பட்டது. ஹுசைன் (ரலி)
அவர்களின் தலையை பார்த்து யஸீத், ( أَمَا وَاللَّهِ لَوْ أَنِّي صَاحِبُكَ مَا قَتَلْتُكَ
) "இறைவன் மீதாணையாக! நான் உங்களுடன்
இருந்திருந்தால் உங்களை கொன்றிருக்க மாட்டேன்" என்று கூறினார். நூல்:- அல்பிதாயா
வந்நிஹாயா
பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( وَقَدْ لَعَنَ ابْنَ زِيَادٍ عَلَى فِعْلِهِ ذَلِكَ وَشَتَمَهُ
فِيمَا يَظْهَرُ وَيَبْدُو، وَلَكِنْ لَمْ يَعْزِلْهُ عَلَى ذَلِكَ وَلَا
عَاقَبَهُ وَلَا أَرْسَلَ يَعِيبُ عَلَيْهِ ذَلِكَ. وَاللَّهُ أَعْلَمُ. ) யஸீத், இப்னு ஸியாத் அவ்வாறு
செய்ததற்காக வெளிப்படையாகவும் தனிப்பட்ட முறையிலும் சபித்தார். ஆனால், யஸீத் அவனை
பணிநீக்கம் செய்யவுமில்லை, தண்டிக்கவுமில்லை.
அதற்காக அவனை விமர்சித்து ஒரு கடிதம்கூட அனுப்பவில்லை.
(இது குறித்து முழுமையாக) அல்லாஹ்வே அறிந்தவன். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா
ஆலோசனை நடத்தினார்
ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பத்தாரைப் பற்றி யஸீத் தன்னுடைய ஆதரவாளர்களிடம் ஆலோசனை
நடத்தினார். அப்போது அவரின் ஆதரவாளர்கள் எல்லோரும், "ஹுசைனின் சந்ததியினர் எவரையும் உலகில் இருக்கக்கூடாது. ஹுசைன்
(ரலி) அவர்களின் மகன் (ஸைனுல் ஆபிதீன்) அலீயையும் விட்டு வைக்காதீர்" என்று மோசமான
ஆலோசனையைக் கூறினர்.
இதைக் கேட்டு யஸீத் மௌனமாக இருந்தார். அப்போது அந்த அவையில் இருந்த வயதான நபித்தோழர்
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் குறுக்கிட்டு, "பரிதாபத்திற்குரிய
பெண் பிள்ளைகளை இந்த நிலையில் கண்டால் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் என்ன செய்வார்களோ
அதை நீங்கள் செய்யுங்கள்" என்று ஆலோசனை கூறினார்கள்.
யஸீத் தம்மிடம் வந்த ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பத்தினர்களை தம்முன் அழைத்து
வரும்படி கூறினார். வந்த அவர்களுக்கு அழகிய ஆடைகளும், உயர்தர உணவுகளும் வாரி வழங்கினார். அதன் பிறகு (ஸைனுல் ஆபிதீன்)
அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்களிடம், ( قَبَّحَ اللَّهُ ابْنَ مَرْجَانَةَ، أَمَا وَاللَّهِ لَوْ أَنِّي
صَاحِبُهُ، مَا سَأَلَنِي خَصْلَةً إِلَّا أَعْطَيْتُهُ إِيَّاهَا، وَلَدَفَعْتُ
الْحَتْفَ عَنْهُ بِكُلِّ مَا اسْتَطَعْتُ، وَلَوْ بِهَلَاكِ بَعْضِ وَلَدِي،
وَلَكِنَّ اللَّهَ قَضَى مَا رَأَيْتَ ) "இறைவன் இப்னு மர்ஜானாவை
(இப்னு ஸியாத்) சபிப்பானாக! நான் அந்தப் போர்க்களத்தில் இருந்திருப்பேனேயானால் ஹுசைன்
(ரலி) அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருப்பேன். அவரின் உயிருக்கு முழு பாதுகாப்பு அளித்திருப்பேன். அதற்காக
என் பிள்ளைகளில் சிலர் பலியானாலும் அதை நான் பொருட்படுத்திருக்க மாட்டேன். ஆனால்,
என்ன செய்வது? அல்லாஹ் நாடியது நடந்துவிட்டது"
என்று கூறினார்.
அதன் பிறகு யஸீத், ஹுசைன் (ரலி) அவர்களின்
குடும்பத்தினருக்கு அழகிய ஆடைகள், உயர்தர உணவுகள்,
பரிசுப் பொருள்கள் என வாரி வழங்கினார். பிறகு,
( كَاتِبْنِي بِكُلِّ حَاجَةٍ
تَكُونُ لَكَ ) "இனி எந்த நிலையிலும்
உங்களுக்கு எந்த தேவை என்றாலும், உடனே எனக்கு கடிதம்
எழுதுங்கள். நான் உடனே அதனை நிறைவேற்றித் தருகிறேன்" என்று ஆறுதல் வார்த்தைகளை
கூறினார். நூல்:- தாரீக் தபரீ, அல்பிதாயா வந்நிஹாயா
ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பத்தினர், ஷாம் தேசத்தில் சில நாள்கள் வரை தங்கியிருந்தனர். அதன் பிறகு
தமது தாய்நாடு மதீனா செல்ல விரும்பினர். அவர்கள் அனைவரையும் மிக மரியாதையுடன் வழியனுப்பி
வைக்க யஸீத் விரும்பினார்.
யஸீத், ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்கு பயணத்திற்கு
தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். நல்லதொரு காவலாளியையும் அவர்களுடன்
அனுப்பிவைத்தார். அந்தக் காவலாளி, ஹுசைன் (ரலி) அவர்களின்
குடும்பத்தார்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொண்டு, அவர்களை நல்ல விதமாக
மதீனா கொண்டுபோய் சேர்த்தார். நூல்:- தாரீக் தபரீ
(ஹுசைன் - ரலி அவர்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் யஸீத் இவ்வாறு நடித்தாரா?
அல்லது அவரின் யதார்த்தம் இவ்வாறு தான் இருந்ததா?
என்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன் ஆவான்.)
காலச்சக்கரம் சுழன்றது
உமாரா பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. உபைத்துல்லாஹ் பின் ஸியாத் மற்றும்
அவனது தோழர்களின் தலைகள் கொண்டுவரப்பட்டு ரஹபா எனும் இடத்திலுள்ள பள்ளிவாசலில் அடுக்கி
வைக்கப்பட்டன. அந்நிலையில் நான் அங்கு சென்றேன். அப்போது அங்கிருந்தோர், ( قَدْ جَاءَتْ قَدْ جَاءَتْ ) "வந்துவிட்டது; வந்துவிட்டது" என்று கூறினர். அப்போது திடீரென பாம்பு ஒன்று
அந்தத் தலைகளுக்கிடையே இருந்து வந்தது. சிறிது நேரம் தங்கியது. பிறகு புறப்பட்டு சென்று
மறைந்தது. பிறகு அங்கிருந்த மக்கள், "வந்துவிட்டது; வந்துவிட்டது"
என்று கூறினர். இவ்விதம் இரண்டு அல்லது மூன்று முறை நிகழ்ந்தது. நூல்:- திர்மிதீ-3703
நபிமொழித்துறை அறிஞரும் வரலாற்றாசிரியருமான அபூ முஹம்மத் பத்ருத்தீன் அல்அய்னீ
(ரஹ்) அவர்கள் பின் வருமாறு பதிவு செய்துள்ளார்கள். அநியாயம் செய்த பாவி உபைதுல்லாஹ்
பின் ஸியாதுக்கு அல்லாஹ் தகுந்த தண்டனை வழங்கினான். முக்தார் பின் அபீ உபைதா அஸ்ஸகஃபீ
(ரஹ்) அவர்கள் இப்னு ஸியாதைக் கொல்வதற்காக இப்ராஹீம் பின் அஷ்தர் என்பவரை அனுப்பி வைத்தார். ஹிஜ்ரி 66 ஆம் ஆண்டு துல்ஹஜ் 22 ஆம் நாள் சனிக்கிழமை ஜாஸர் எனும் இடத்திற்கும் மவ்ஸல் எனும்
இடத்திற்கும் இடையில் 5 பர்ஸக் இடைவெளி தொலைவில்
அமைந்துள்ள பகுதியில் இப்ராஹீம் பின் அஷ்தர்
என்பவர் இப்னு ஸியாத் மற்றும் அவனது கூட்டாளிகளை கொலை செய்து, அவர்களின் தலைகள் கொண்டுவரப்பட்டு முக்தார் (ரஹ்)
அவர்களுக்கு முன்பாக வீசப்பட்டன.
அப்போது அந்த தலைகளுக்கிடையிலிருந்து மெல்லிய பாம்பு ஒன்று வந்து இப்னு ஸியாதின்
வாயில் நுழைந்தது. பிறகு மூக்கு துவாரம் வழியாக வெளியேறியது. பிறகு மற்றொரு மூக்கு
துவாரம் வழியாக நுழைந்து வாய் வழியாக வெளியேறியது. மேலும், தலைகளுக்கிடையே நுழைந்து அவனது தலைப்பகுதியிலிருந்து வெளியேறுவதுமாக
இருந்தது. பிறகு முக்தார் (ரஹ்) அவர்கள் இப்னு ஸியாதின் தலையையும் அவனுடன் கொல்லப்பட்டோரின்
தலைகளையும் மக்காவிலிருந்த முஹம்மது பின் ஹனஃபிய்யா (ரஹ்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்.
அவற்றை அவர் மக்காவில் நட்டு வைத்தார். பிறகு இப்னு ஸியாத் மற்றும் கொல்லப்பட்டோரின்
சடலங்களை இப்ராஹீம் பின் அஷ்தர் எரித்துவிட்டார். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ
பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஹுசைன் (ரலி) அவர்களின் கொலைக்கு
காரணமானவர்கள் பயங்கரமான கொடிய நோய்களால் பிடிக்கப்பட்டு, மரணித்தார்கள். அதில் பல பேர் பைத்தியமாகி சின்னாபின்னப்படுத்தப்பட்டு
மரணித்தார்கள். நூல்:- தலீலுல் ஹைரானி ஃபீ தஃப்சீரில் அஹ்லாம் ( دليل الحيران في تفسير الأحلام ) முஹம்மத் அலீ குத்ப்
ஹிஜ்ரி 66 ஆம் ஆண்டு முக்தார்
என்பவர் கூஃபாவின் ஆளுநராக பதவியேற்றார். இப்ராஹீம் பின் அஷ்தர் என்பவர் தலைமையில்
இப்னு ஸியாதை எதிர்த்து படையெடுத்தார்.
தளபதி இப்ராஹீம் பின் அஷ்தர் (ரஹ்) அவர்கள், "இறைவனின் தூதர் (ஸல்) அவர்களின் பேரரை கொன்றவன் இந்த இப்னு ஸியாத்.
பனூ இஸ்ரவேலர்களின் எதிரி பிர்அவ்ன் கூட செய்யாத காரியத்தை இவன் செய்திருக்கிறான்”
என்று கூறியவாறு அவனைக் கொன்றார். அதன் பிறகு அவனின் தலையை தனியாக துண்டிக்கப்பட்டது.
நூல்:- இர்ஷாதுஸ் ஸாரீ
ஆளுநர் முக்தாரின் படையினர் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு எதிரியாக கர்பலா களத்தில்
நின்ற உமர் பின் சஅத், ஷமிர் பின் தில்ஜவ்ஷன் மற்றும் ஹுசைன் (ரலி) அவர்களின் தலையை இப்னு ஸியாதிடம் கொண்டு சென்ற கவ்லா பின்
யஸீத் அர்பஹீ ஆகியோரையும் கொன்றனர்.
கர்பலாவில் உயிர்த்தியாகங்கள் செய்த ஹுசைன் (ரலி) அவர்கள் மற்றும் அன்னாரின் குடும்பத்தினர்,
தோழர்கள் ஆகியோரின் தியாகங்களை அல்லாஹுத்தஆலா (கபூல்)
ஏற்றுக்கொள்வானாக! ஆமீன்!
தாரீக் தபரீ, அல்பிதாயா வந்நிஹாயா
போன்ற ஆதாரப்பூர்வமான நூல்களில் உள்ள சம்பவங்களின் அடிப்படையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
(இதில் எமது சொந்தக் கருத்துகள் எதுவும் இல்லை. வாசித்தவைகளை மட்டுமே எழுதப்பட்டுள்ளது.
மேற்கண்ட வரலாறை வாசிக்கும் போதும், எழுதும் போதும் எமது கண்கள் கண்ணீர் சிந்தியது.)
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
அல்லாஹ் அருள் செய்யட்டும்
ReplyDelete