மீலாதுந் நபீ
وَمَا
أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
(நபியே!) உம்மை நாம் அகிலத்தாருக்கு ஓர் அருளாகவே அனுப்பியுள்ளோம்.
திருக்குர்ஆன்:- 21:107
ரபீஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் இஸ்லாமியப்
பெரும் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது அளவற்ற நேசம்கொண்ட முஸ்லிம்கள் நபியவர்களுடைய
வாழ்வியல் முறைகள், குணநலங்கள் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் மற்றும் அவர்களின் சிறப்பம்சங்கள்
ஆகிவற்றை நினைவுப்படுத்தி, அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவார்கள். நபியவர்கள்மீது
கொண்ட நேசத்தால் புகழ்பாக்கள் (மௌலித்) பாடுவார்கள்.
மேலும், நபிநேசத்தால் கந்தூரி ஏற்பாடு செய்து ஏழை எளியோருக்கும், சகோதர சமயத்தவர்களுக்கும் உணவளித்தல் போன்ற
நற்செயல்கள் செய்வார்கள். மேலும், அன்றைய தினம் (பிறை-12) மகிழ்ச்சியின் வெளிப்பாடாக
நபியவர்களை புகழ்ந்து கவிதை படித்துக்கொண்டு முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக ஊர்வலம்
சென்று வருவார்கள். இதை பரவலாக காணலாம்.
ஜாபிர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறியதாவது. ( وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ عَامَ الْفِيلِ يَوْمَ الِاثْنَيْنِ الثَّانِي عَشَرَ مِنْ شَهْرِ ربيع الأول ) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யானை வருடத்தில் ரபீஉல் அவ்வல் மாதத்தின்
பன்னிரண்டாம் நாள் திங்கள்கிழமை பிறந்தார்கள்.
நூல்:- முஸன்னஃப் இப்னு அபீஷைபா, ஹாகிம், சீரத் இப்னு ஹிஷாம்
அல்லாஹ்வின் அருள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. (நபிகள்
நாயகம் - ஸல் அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணைவைப்பாளர்களுக்கெதிராக(ச்
சாபமிட்டுப்) பிரார்த்தியுங்கள்" என்று கூறப்பட்டது. அதற்கு அண்ணல் நபி (ஸல்)
அவர்கள், ( إنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا، وإنَّمَا بُعِثْتُ رَحْمَةً ) "நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை.
நான் அருளாகவே அனுப்பப்பெற்றுள்ளேன்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்- 5065
நபித்தோழர்களின் பாடினார்கள்
ஹைஸம் பின் அபீசினான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அபூஹுரைரா
(ரலி) அவர்கள் தமது பேச்சுக்கிடையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.
(அப்போது), “உங்கள் சகோதரர் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் தவறானவற்றைக்
கூறுபவர் அல்லர். (நபியவர்களைப் பாராட்டி பின்வருமாறு) அவர் பாடினார்” என்றார்கள்:
فِينَا رَسُولُ اللَّهِ يَتْلُو كِتَابَهُ إِذَا انْشَقَّ مَعْرُوفٌ مِنَ الْفَجْرِ سَاطِعُ
أَرَانَا الْهُدَى بَعْدَ الْعَمَى فَقُلُوبُنَا بِهِ مُوقِنَاتٌ أَنَّ مَا قَالَ وَاقِعُ
يَبِيتُ يُجَافِي جَنْبَهُ عَنْ فِرَاشِهِ إِذَا اسْتَثْقَلَتْ بِالْكَافِرِينَ الْمَضَاجِعُ
எங்களிடையே இறைத்தூதர் ஓதுகிறார் இறைவேதம் வைகறைப்பொழுது
புலரும் நேரத்தில்
கருத்துக் குருடர்களான எங்களுக்குக் காட்டினார்
நல்வழி. அவர் சொன்னது நடக்கும் நிச்சயம்! இது எங்கள் இதய நம்பிக்கை
இரவில் அன்னாரது விலா தொட்டதில்லை படுக்கையை. அப்போது
இணைவைப்பாளர் அழுந்திக் கிடப்பர் படுக்கையில்! நூல்:- புகாரீ-6151
ஸவாத் பின் காரிப் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்
எனது உள்ளத்தில் சோதித்துள்ளான் என்று கூறியவாறு, எனது ஒட்டகத்தில் (மக்காவை நோக்கி) பயணம் செய்தேன். பிறகு மக்கா
நகருக்கு வந்தேன். அங்கு கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களைச் சுற்றி நபித்தோழர்களும்
இருந்தனர். நான் அவர்களிடம் நெருங்கி, “நாயகமே நான் கவிப் பாடுவதைக் கேளுங்கள்” என்று கூறினேன். நபியவர்கள் ("ஆம்!) பாடுங்கள்" என்றார்கள்.
நான் பாட ஆரம்பித்தேன்.
فَأَشْهَدُ أَنَّ اللَّهَ لَا شَيْءَ غَيْرُهُ وَأَنَّكَ مَأْمُونٌ عَلَى كُلِّ غَالِبِ
وَأَنَّكَ أَدْنَى الْمُرْسَلِينَ وَسِيلَةً إِلَى اللَّهِ يَا ابْنَ الْأَكْرَمِينَ الْأَطَايِبِ
فَمُرْنَا بِمَا يَأْتِيكَ يَا خَيْرَ مَنْ مَشَى وَإِنْ كَانَ فِيمَا جَاءَ شَيْبُ الذَّوَائِب
سِوَاكَ بِمُغْنٍ عَنْ سَوَادِ بْنِ قَارِبِ وَكُنْ لِي شَفِيعًا يَوْمَ لَا ذُو شَفَاعَةٍ
“அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் (கடவுள்) இல்லையென்றும் நீங்கள்
மறைவான செய்திகள் யாவற்றுக்கும் நம்பிக்கையாளர் என்றும் நான் சாட்சியம் அளிக்கிறேன்.
கண்ணியமானோரில் தூயோரின் புதல்வரே! நீர்,
அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமான தூதர் என்றும்
(சாட்சியம் அளிக்கிறேன்.)
நடமாடுவோரில் சிறந்தோரே! உமக்கு வந்துள்ள கட்டளையை
எங்களுக்கும் ஆணை பிறப்பிப்பீராக! அவை முடிகளை நரைக்கச் செய்யக் கூடியவைகளாக இருந்தாலும்
சரியே!
உம்மைத் தவிர பரிந்துரையாளர் இல்லாத நாளில்,
எனக்கு பரிந்துரையாளராகவும் ஸவாத் பின் காரிபுக்கு
ஏற்படும் இன்னலைவிட்டும் தடுக்கக்கூடியதாகவும் ஆகிவிடுவீராக!" என்று பாடினேன்.
அப்போது நபியவர்களும் நபித்தோழர்களும் என் கூற்றைக்
கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அம்மகிழ்ச்சி அவர்களின் முகங்களில் தென்பட்டது.
பிறகு நபியவர்கள், ( أَفْلَحْتَ
يَا سَوَادُ سِرْ فِي قَوْمِكَ، وَقُلْ هَذَا الشِّعْرَ فِيهِمْ ) "ஸவாத்! நீர் வெற்றி பெற்றுவிட்டீர். உன் சமூகத்தினரிடம் பயணமாகி
அவர்களிடம் இந்தக் கவிதையைக் கூறுவீராக” என்றுக் கூறினார்கள். நூல்:- முக்தஸர் இப்னு
மன்ழூர் லி தாரீக் இப்னு அஸாகிர், ஹவாத்திஃபுல் ஜின்னான்
இமாம் அபூபக்ர் அல்கராயித்தீ, அல்பிதாயா வந்நிஹாயா
அல்உத்பீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நான் அருமை நாயகம்
(ஸல்) அவர்களின் மண்ணறைக்கு (கப்ரு) அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு கிராமப்புற
அரபி வந்தார். நபியவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு, "(நபியே!) அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தபோது, உன்னிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவர்களுக்காகத் தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால்,
மன்னிப்பை ஏற்பவனாகவும் மிகுந்த அன்புடையோனாகவும்
அல்லாஹ்வை அவர்கள் காண்பார்கள்" (4:64) என்ற வசனத்தை ஓதினார்.
மேலும், "இப்போது நான் என் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரி
உங்கள் சமூகம் வந்துள்ளேன். நீங்கள் என் இறைவனிடம் பரிந்துரைக்க வேண்டும்" என்று
கூறிவிட்டு, பின்வருமாறு கவிதையையும்
பாடினார்:
يَا خيرَ مَنْ دُفنَت بِالْقَاعِ أعظُمُه فَطَابَ منْ طِيبِهِنَّ القاعُ والأكَمُ
نَفْسي الفداءُ لقبرٍ أَنْتَ ساكنُه فِيهِ العفافُ وَفِيهِ الجودُ والكرمُ
மண்ணில் புதைக்கப்பட்டவர்களில் சிறந்தவரே! / உங்கள் எலும்புகளின்
நறுமணத்தால் மண்ணும், மலைக்குன்றும் மணம் கமழ்கின்றன.
நீங்கள் துயிலும் இந்த மண்ணறைக்கு என் உயிர் அர்ப்பணம். /
தன்னடக்கம் இங்குதான் அடங்கியிருக்கிறது. தயாள குணமும் பெருந்தன்மையும் இங்குதான் உறங்குகின்றன.
பின்பு அந்தக் கிராமப்புற அரபி சென்றுவிட்டார். பின்னர் நான்
கண் அயர்ந்து உறங்கினேன். கனவில் அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் கண்டபோது, அவர்கள் என்னிடம், ( يَا عُتْبِيُّ اِلْحَقِ
اْلأَعْرَابِيَّ فَبَشِّرْهُ أَنَّ اللهَ قَدْ غَفَرَ لَهُ ) "அல்உத்பீ! அந்த கிராமவாசியிடம் சென்று அவருடைய பாவங்களை
அல்லாஹ் மன்னித்துவிட்டான் என்று நற்செய்தி கூறும்" என்று சொன்னார்கள். நூல்:-
அஷ்ஷாமில் இமாம் ஷைக் அபூமன்ஸூர் அஸ்ஸப்பாக், தஃப்சீர் இப்னு கசீர், மஜ்மூஉ இமாம் நவவீ
இந்த கவிதை வரிகள் பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு இன்றுவரை
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மண்ணறை (ரவ்ளா ஷரீஃப் உடைய) ஜன்னல்களில் எழுதப்பட்டிருக்கிறது.
சரியான விளக்கம்
ஒருதடவை (உலக பிரசித்தி பெற்ற புகாரீ எனும் ஹதீஸ்
நூலுக்கு "ஃபத்ஹுல் பாரீ" என்ற அழகிய விளக்கவுரை நூல் எழுதிய) மேதையும்,
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் மனனமிட்டவருமான இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி
(ரஹ் - ஹிஜ்ரீ 773-852) அவர்களிடம் ஒரு மனிதர், “மீலாது கொண்டாடலாமா?" எனக் கேட்டார்.
அதற்கு அன்னார், ( أَصْلُ عَمَلِ الْمَوْلِدِ بِدْعَةٌ لَمْ تُنْقَلْ
عَنْ أَحَدٍ مِنَ السَّلَفِ الصَّالِحِ مِنَ الْقُرُونِ الثَّلَاثَةِ، وَلَكِنَّهَا
مَعَ ذَلِكَ قَدِ اشْتَمَلَتْ عَلَى مَحَاسِنَ وَضِدِّهَا، فَمَنْ تَحَرَّى فِي عَمَلِهَا
الْمَحَاسِنَ وَتَجَنَّبَ ضِدَّهَا كَانَ بِدْعَةً حَسَنَةً ) “மவ்லிது நிகழ்ச்சிகள் ஒரு புதுமையே! முந்தைய
மூன்று தலைமுறையினர் எவரிடமும் அப்படியொரு நடைமுறை இருக்கவில்லை. எனினும் அதில் உள்ளடக்கியிருக்கிற
நன்மைகளை எண்ணிப்பார்க்கையில் அதிலுள்ள நன்மைகளை பேண வேண்டும் என்பதற்காக ஒருவர் மவ்லிது
கொண்டாடுவார் எனில் இந்தப் புதுமை ஒரு நன்மையே! (அதனால் தாராளமாகக் கொண்டாடலாம்)”
என்று கூறினார்கள்.
மேலும், ( وَقَدْ ظَهَرَ لِي تَخْرِيجُهَا عَلَى أَصْلٍ ثَابِتٍ وَهُوَ مَا ثَبَتَ فِي الصَّحِيحَيْنِ
مِنْ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ
فَوَجَدَ الْيَهُودَ يَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ، فَسَأَلَهُمْ فَقَالُوا: هُوَ
يَوْمٌ أَغْرَقَ اللَّهُ فِيهِ فرعون وَنَجَّى مُوسَى فَنَحْنُ نَصُومُهُ شُكْرًا لِلَّهِ
تَعَالَى» ، فَيُسْتَفَادُ مِنْهُ فِعْلُ الشُّكْرِ لِلَّهِ عَلَى مَا مَنَّ بِهِ
فِي يَوْمٍ مُعَيَّنٍ مِنْ إِسْدَاءِ نِعْمَةٍ أَوْ دَفْعِ نِقْمَةٍ، وَيُعَادُ ذَلِكَ
فِي نَظِيرِ ذَلِكَ الْيَوْمِ مِنْ كُلِّ سَنَةٍ )
இதற்கான ஒரு உறுதியான அடிப்படை புகாரீ
முஸ்லிம் ஆகிய நூல்களில் இவ்வாறு ஒரு நபிமொழி இருப்பதாக நான் உணர்கிறேன். அண்ணல்
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது ஆஷூரா நாளில் நோன்பு நோற்ற யூதர்கள் அது மூசா
(அலை) அவர்கள் காப்பாற்றப்பட்ட நாள் என்றும், பிர்அவ்ன் அழிக்கப்பட்ட நாள் என்றும்
கூறினார்கள். இது, அல்லாஹ் வழங்கிய
ஒரு அருளுக்காக, அல்லது ஒரு கொடுமையிலிருந்து
நிவாரணம் அளித்தற்காக ஒரு குறிப்பிட்ட நாளை மகிழ்ச்சிக்குரியதாக கருதலாம். அதை ஒவ்வொரு
ஆண்டும் அதே நாளில் வெளிப்படுத்தலாம் என்பதையும் இதன் மூலம் நான் உணர்கிறேன்.
மேலும், அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக்
கண்டார்கள். ( مَا هَذَا
الْيَوْمُ الَّذِي تَصُومُونَهُ )
"நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், ( هَذَا يَوْمٌ عَظِيمٌ ) "இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் நபி மூசாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன்
காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய
சமுதாயத்தையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் விதமாக
(இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினர்.
அப்போது நபியவர்கள், ( فَنَحْنُ أَحَقُّ وَأَوْلَى بِمُوسَى مِنْكُمْ
) "உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும்
உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்" என்று கூறினார்கள். பின்னர், நபியவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று,
நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையிட்டார்கள்.
(புகாரீ-3397, முஸ்லிம்-2083,
இப்னு அபீஷைபா, பைஹகீ)
"நபி மூசா (அலை) அவர்களுக்கு வெற்றி கிடைத்த நாள்,
யூதர்களுக்கு மகத்தான நாள் என்றால், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பூமிக்கு அனுப்பப்பட்ட
நாள் நமக்கு மகத்தான நாளாகும். எனவே பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த நாளை கொண்டாடலாம்"
என்று பதிலளித்தார்கள்.
பலமுறை அஹ்லுஸ் ஸுன்னத் அல்ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்ட
அறிஞர் இப்னு தைமிய்யா அவர்கள் “மீலாதுவிழா கூடும். அதற்கு இறைவனிடம் நற்கூலியுள்ளது”
என்கின்றார். நூல்:- அல்இக்திளாஉஸ் ஸிராத்தில் முஸ்தக்கீம் ( اِقْتِضَاءُ الصِّرَاطِ الْمُسْتَقِيمِ )
ஏழை எளியோருக்கு உதவலாம்
உலக பிரசித்தி பெற்ற புகாரீ எனும் ஹதீஸ் நூலுக்கு “இர்ஷாதுஸ்ஸாரி”
என்ற அழகிய விளக்கவுரை நூல் எழுதிய மேதையும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹதீஸ்கள்
மனனமிட்டவருமான இமாம் ( شهاب الدين القسطلاني ) ஷிஹாபுத்தீன் அல்குஸ்தலானி
(ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 851-923) கூறினார்கள். ( وَلَا زَالَ أَهْلُ السَّلَامِ يَحْتَفِلُونَ بِشَهْرِ
مَوْلِدُهُ، وَيَعْمَلُونَ الْوَلَائِمَ، وَيَتَصَدَّقُونَ فِي لَيَالِيهِ بِأَنْوَاعِ
الصَّدَقَاتِ، وَيُظْهِرُونَ السُّرُورَ، وَيَزِيدُونَ فِي الْمَبَرَّاتِ. وَيَعْتَنُونَ
بِقِرَاءَةِ مَوْلِدِهِ الكَرِيمِ، وَيَظْهَرُ عَلَيْهِمْ مِنْ بَرَكَاتِهِ كُلُّ فَضْلً
عَمِيمً ) (முன் சென்ற) முஸ்லிம்கள்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த மாதத்தைக் கொண்டாடி, விருந்துகளை நடத்தி, அதன் இரவுகளில் பல்வேறு வகையான தர்மங்களைச் செய்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி,
(இதுபோன்ற பல) நல்லறங்களை அதிகமாக செய்து வந்தனர்.
(குறிப்பாக) அவர்கள் நபியவர்களுடைய உன்னதமான பிறப்பை (குறித்து, கவிதைகளை) படிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்கள். (எனவே அதன் காரணமாக)
ஒவ்வொன்றிலும் அந்த முஸ்லிம்களுக்கு நபியவர்களின் (பரக்கத் எனும்) ஆசீர்வாதங்கள் ஏராளமாக
கிடைத்தது. நூல்:- அல்மவாஹிபுல் லதுன்யது பில்மனஹில் முஹம்மதியா ( اَلْمَوَاهِبُ الْلَدُنْيَةُ بِالْمَنَحِ الْمُحَمَّدِيَّةِ )
அல்லாஹுத்தஆலா, ஓர் முஸ்லிமுக்கு குழந்தை பாக்கியத்தை வழங்கி அவரை தந்தையாக ஆக்கினான். அவர் அந்த
சந்தோசத்தில் ஆண்டுதோறும் தமது குழந்தை பிறந்த தினத்தில் ஏழை எளியோருக்கு அன்னதானம்
வழங்கி, இறைவனுக்கு நன்றியை வெளிப்படுத்துகிறார். இதைத்
தவறு என்று சொல்ல முடியாது. அதைப்போன்றுத்தான், இல்லை! அதைவிட பன்மடங்கு ஓர் முஸ்லிமுக்கு ஆருயிர் பெருமானார்
(ஸல்) அவர்கள் பிறந்த தினம் சந்தோசத்தை தராமல் இருக்கமுடியாது. எனவே, அன்றைய தினத்தில் சந்தோசம் மற்றும் இறைவனுக்கு செலுத்தும்
நன்றியின் வெளிப்பாடாக, பிறருக்கு அன்னதானம்
வழங்கி, அதன் நன்மைகள் நபியவர்களுக்கு கிடைக்க பிரார்த்திப்பது
(ஈஸால் ஸவாப் செய்தல்) தவறு என்று சொல்ல முடியாது.
அதனடிப்படையில் தான், பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த தினமான ரபீஉல் அவ்வால்
பிறை-12 அன்று, பல ஊர்களில் கந்தூரி
வைபோகம் நடைபெறுகிறது.
இந்தியாவின் நபிமொழித்துறை நிபுணர் ஷாஹ் வலியுல்லாஹ் அல்முஹத்திஸ்
அத்தஹ்லவி (ரஹ்) அவர்கள் கூறியதாவது. என் தந்தை பேரறிஞர் ஷாஹ் அப்துர் ரஹீம் (ரஹ்)
அவர்கள் என்னிடம் கூறினார்கள்: ( كُنْتُ أَصْنَعُ فِي أَيَّامِ الْمَوْلِد طَعَامًا صِلَة بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
(فِي كُلِّ سَنَةً) فَلَمْ يَفْتَحْ لِي سَنَةٌ مِنْ السِّنِينَ شَيْئًا أَصْنَعُ بِهِ
طَعَامًا. فَلَمْ أَجِدْ إِلَّا حُمَّصًا مَقْلِيًّا، فَقَسَمْتُهُ بَيْنَ النَّاسِ
فَرَأَيْتُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ يَدَيْهِ هَذِهِ الْحُمَّصَ
مُتَبَهَّجًا بَشَّاشًا ) நான்
(ஒவ்வொரு வருடமும்) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தன்று உணவு சமைப்பேன்.
(அதை மக்களுக்கு வழங்குவேன். இது என்னுடைய பழக்கமாக இருந்தது.) ஆனால், ஒரு வருடம் (நபியவர்கள் பிறந்த தினத்தன்று) எனக்கு உணவு தயாரிக்க (போதிய வசதியின்றி)
எதுவும் கிடைக்கவில்லை. அப்போது என்னிடம் வறுத்த கொண்டைக்கடலை மட்டுமே இருந்தது. அதனால்
நான் அவற்றையே மக்களிடையே விநியோகித்தேன். (அதன் பிறகு) நபியவர்களை கனவில் கண்டேன்.
அப்போது அவர்கள் முன் இந்த கொண்டைக்கடலைகள் இருந்தன. நபியவர்களோ மகிழ்ச்சி கொண்டவர்களாக இருக்கக் கண்டேன். (அதாவது, எனது இந்தச் செயலை நபியவர்கள் ஆமோதிக்கிறார்கள் என்று விளங்கிக்கொண்டேன்). நூல்:-
அத்துர்ருஸ் ஸமீனு ஃபீ முபஷ்ஷிராத்திந் நபிய்யில் அமீன் ( اَلدُرُّ الثَّمِينُ فِى مُبَشِّرَاتِ النَّبِيِّ
الْاَمِينِ ﷺ لِلشَّاة وَلِيَّ اللَّهِ الدَّهْلَوِيّ رَحِمَهُ اللَّهُ )
எனவே, நாமும் முடிந்தளவு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த
தினத்தை முன்னிட்டு ஏழை எளியோருக்கு உணவு பொட்டலங்களாக, மளிகைப் பொருள்களாக, காசு பணங்களாக வாரி வழங்கி நபியவர்கள் மீது நமக்குள்ள பற்றை
வெளிப்படுத்தலாம்.
இதன் நன்மைகளை நமது உயிரினும் மேலான கண்மணி பெருமானார் (ஸல்)
அவர்களுக்கும் நமது முன்னோர்களுக்கும் (ஈஸாப் ஸவாப் எனும்) அன்பளிப்புச் செய்யலாம்.
நோன்பு நோற்பது
அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம், திங்கள்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது.
அதற்கு ( فِيهِ وُلِدْتُ وَفِيهِ
أُنْزِلَ عَلَىَّ ) "அன்றுதான்
நான் பிறந்தேன்; அதில்தான் எனக்குக்
குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்- 2153
அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் திங்கள்கிழமை நோன்பு குறித்து
கேட்டதற்கு, "அந்நாளில் தான் நான்
பிறந்தேன். அன்று தான் எனக்கு முதன்முதலில் குர்ஆன் அருளப்பெற்றது" என்று கூறி
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்நாளில் தான் நோன்பு நோற்பதாக சுட்டிக்காட்டினார்கள்.
நபியவர்கள், நமக்கு தலைவராக கிடைத்தது
பெரும் பாக்கியம். அல்லாஹுத்தஆலா நம்மீது கொண்ட கருணை. எனவே, நபியவர்களின் பிறந்த தினத்தின்போது (சிறந்த இறைவழிபாடான)
நோன்பு நோற்று இறைவனுக்கு நன்றியையும், நபிநேசத்தையும் வெளிப்படுத்தலாம். அல்லது முடிந்தளவு (ஷுக்ரு நஃபில் எனும்) நன்றியைத்
தெரிவிக்கும் சில ரக்அத்துகள் தொழுகலாம்.
எதிரியாக இருந்தாலும்
உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை
செய்திருந்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்தபோது
அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில்
அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம், “(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?” என்று அவர் கேட்டார்.
அபூலஹப், ( لَمْ أَلْقَ بَعْدَكُمْ غَيْرَ أَنِّي سُقِيتُ فِي هَذِهِ بِعَتَاقَتِي
ثُوَيْبَةَ ) ‘‘உங்களைவிட்டுப்
பிரிந்தபின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே
எனக்கு நீர் புகட்டப்படுகிறது” என்று கூறினார். புகாரீ-5101
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அபூலஹப்
மரணித்த ஒரு வருடத்திற்கு பிறகு அவரை நான் கனவு கண்டபோது அவர் மிக மிக மோசமான ஓர் நிலையில்
காட்சியளித்தார். பின்னர் அவர் என்னிடம் கூறினார்: நான் உங்களை விட்டும் பிரிந்த பிறகு
ஒரு சுகபோகங்களையும் அடையவில்லை. ஆனாலும் எல்லா திங்கள்கிழமைகளிலும் எனக்கு தண்டனை
லேசாக்கப்படுகிறது.
இமாம் ஸுஹைலி (ரஹ்) அவர்கள் அதற்கான காரணத்தை கூறுகிறார்கள். கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் திங்கள்கிழமை
தான் பிறந்தார்கள். இந்தச் செய்தியை அபூலஹபுடைய அடிமைப் பெண்ணாக இருந்து வந்த ஸுவைபா
என்பவர்தான் அவரிடம் சென்று கூறினார். இதை கேட்டவுடனேயே மகிழ்ச்சியில் அபூலஹப் அப்பெண்மணியிடம்
“நான் உன்னை விடுதலை செய்துவிட்டேன்” என்று கூறினார். எனவே, அதன் காரணமாக தான் அவருக்கு
ஒவ்வொரு திங்கள்கிழமைகளிலும் தண்டனை இலேசாக்கப்படுகிறது. நூல்:- ஃபத்ஹுல் பாரி
இமாம் இப்னு நாஸிருத்தீன் அத்திமஷ்கி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நிரந்தரமான நரகவாசி என்று இறைவனால் விதிக்கப்பட்டு அவனது இரு கரங்களும் நாசமடையட்டும்
என குர்ஆனில் விமர்சிக்கப்பட்ட இறைமறுப்பாளன் அபூலஹப்.
அப்படிப்பட்ட இறைமறுப்பாளனுக்குகூட கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள்
பிறந்த நேரத்தில் சந்தோஷமடைந்த ஒரே காரணத்தால் எல்லா திங்கள்கிழமைகளிலும் (இறைவனின்
கருணை அறவே இறங்காத நகரத்திலும்) தண்டனை இலேசாக்கப்படுகிறது என்றால், முஸ்லிமாக வாழ்ந்து
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை கொண்டு ஆனந்தம் அடையக்கூடிய ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு
எவ்வளவு பெரிய பிரதிபலன் கிடைக்கக்கூடும். நூல்:- அல்ஹாவீ லில்
ஃபதாவா - 1/230
அழகிய நடைமுறை
ஆரம்ப காலத்தில் மீலாத் விழா என்ற பெயரில் நிகழ்ச்சிகள் இல்லை
என்பதால் இப்போது கூடாது எனில், பள்ளிவாசல்களில் மினாராக்கள்கூட வைக்கக்கூடாது. ஏனெனில்,
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலோ
நபித்தோழர்களின் காலத்திலோ மினாராக்கள் இருந்ததில்லை. பின்னர் அப்பாசிய கலீபாக்களின்
காலத்தில் இஸ்லாமிய கட்டிடக் கலையின் பெருமிதமான அடையாளமாகத்தான் மினாராக்கள் வந்தன.
அதை ஒட்டு மொத்த இஸ்லாமிய உலகும் ஏற்றுக்கொண்டதே! இன்று மக்காவிலும் மதீனாவிலும்கூட
ஓங்கி உயர்ந்த மினாராக்கள் இருக்கின்றனவே! இதைக் கூடாது என்று சொல்லமுடியுமா?
இதுபோன்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மற்றும் நபித்தோழர்களின்
காலத்தில் இல்லாத பல விஷயங்கள் நம்முடைய புழக்கத்தில் இருக்கிறது. அது பிழையும்
அல்ல.
நமது உயிரினும் மேலான கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள்மீது அதிகப்
பிரியமுள்ள நல்லடியார்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழ செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment