Search This Blog

Wednesday, 30 October 2024

மாற்றுத்திறனாளிகள்

 

மாற்றுத்திறனாளிகள்

 

وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي يَفْقَهُوا قَوْلِي وَاجْعَلْ لِي وَزِيرًا مِنْ أَهْلِي

(என் இறைவா!) என் நாவில் உள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்ப்பாயாக. அப்போது தான் என் சொல்லைப் புரிந்துகொள்வர். மேலும், எனக்கொரு உதவியாளரை என் குடும்பத்திலிருந்தே நியமிப்பாயாக. திருக்குர்ஆன்:- 20:27, 28,29

 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளை உலக மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குரிய இடத்தையும், உரிமைகளையும் வழங்குவதில் யாரும் தடையாக இருக்ககூடாது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதே இந்த தினத்தின் பிரதான நோக்கம்.

 

அல்லாஹ்வின் படைப்புகளில் சில சமயங்களில் படிப்பினைக்காக அவன் மாற்றங்கள் செய்வதுண்டு. அதுவும் அந்த குறிப்பிட்ட படைப்பிற்கு ஏதேனும் நலவை உத்தேசித்ததாகத்தான் இருக்கும். அந்த மாற்றம் ஏன்? அது தேவையா? போன்ற காரணங்கள் மனித அறிவிற்கு உட்பட்டதாக இருக்குமென்று சொல்ல முடியாது. அப்படி மனிதர்களில் அல்லாஹ் செய்யும் மாற்றம் தான் உடல் ஊனம்.

 

'உடல் ஊனம்' என்று சொல்லக்கூடாது. உடல் ஊனம் என்பது அது ஊனமே அல்ல. அல்லாஹ் அந்த படைப்பில் ஒரு திறனைக் குறைத்து இன்னொரு திறனை அதிகப்படுத்துவான். கண் பார்வையற்றோர்களுக்கு ஞாபகசக்தி மற்றும் குரலாற்றல் அபரிமிதமாக இருப்பது போல. ஆட்டிசம் பாதித்தவர்களுக்கு இருக்கும் ஏதேனும் அபார ஆற்றல் போல (இன்ன ஆற்றல் என்று குறிப்பிட முடியாது). வாய் பேச முடியாதவர்களுக்கு இருக்கும் கற்பனைத்திறன் போல. இப்படி ஏதேனும் ஒரு திறன் அவர்களுக்கு குறைக்கப்பட்டு வேறொரு திறனை அல்லாஹ் அபாரமாக தந்திருப்பான்.

 

ஊனமுற்றவர்கள் குறித்து மருத்துவ அறிக்கையைப் பார்த்த தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி, "அவர்களை இனி யாரும் ஊனமுற்றவர்கள் என்று அழைக்க வேண்டாம். மாற்றுத் திறனாளிகள் என்று அழையுங்கள். மனம் முடமானவர்களே ஊனமுற்றவர்கள்" என்று அரசு ஆவணங்களில் மாற்று வார்த்தையை 2007-ல் வழக்கில் கொண்டு வந்து, அவர்களுக்கென தனி நலவாரியத்தையும், கூடவே இவர்களுக்கென தனி துறையையும் 2007-ல் ஏற்படுத்தினார். (மேலதிக விபரங்களுக்கு http://www.murasoli.in/details.php?news_id=788 - நன்றி: முரசொலி)

 

உலக மக்களில், சுமாா் 15 % போ் ஏதேனும் ஒரு வகையில் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். பிறவியிலேயே உடல் ஊனம் இருப்போா், இளம் வயதில் ஏற்பட்ட நோயால் ஊனமானோா், விபத்து, முதுமை போன்ற காரணங்களால் ஊனமுற்றோா், இவை தவிர மன நோய்க்கு ஆளானோர்கள் உண்டு.

 

அல்லாஹுத்தஆலா இறைத்தூதர் மூசா (அலை) அவர்களிடம் கொடியோன் ஃபிர்அவ்னிடம் சென்று ஓரிறைக்கொள்கை எடுத்துரைக்குமாறு கூறினான். அப்போது தான் மூசா (அலை) அவர்கள் சொல்ல விரும்பும் கருத்தை மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு தெளிவாக பேச முடியாத திக்குவாய் என்ற குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியாக இருந்தார்கள். எனவே,  தம்மிடமிருந்த திக்குவாய் குறைப்பாட்டை அகற்றுமாறு அல்லாஹ்விடம் கூறினார்கள். இதுகுறித்து தலைப்பில் காணும் திருவசனம் தெளிவுப்படுத்துகிறது.

 

மாற்றுத்திறனாளிகள், யாரும் விரும்பி ஊனமடைவதில்லை. பிறப்பாலோ, வியாதியாலோ, விபத்தாலோ ஊனம் ஏற்பட்டுவிடுகிறது. அதற்காக அவர்கள் சோர்ந்து அமர்ந்து விடக்கூடாது. முயற்சி உடையவர்களுக்கு ஊனமென்பது தடையாக அமைவதில்லை. முயற்சியுடைய பல மாற்றுத்திறனாளிகள் உலக அளவில் பல்வேறு வியத்தகு சாதனைகளை புரிந்துள்ளனர். ஊனம் என்பதை ஒரு தடையாக பார்க்காமல் அதை ஒரு படிக்கல்லாக பார்க்க வேண்டும். இழந்ததை மறந்து, தன்னிரக்கத்தை தூக்கி எறிய வேண்டும். ஒவ்வொருவருக்குள்ளும் தனித்திறமைகள் உள்ளன. மாற்றுத்திறமைகளும் உள்ளன. அவற்றை கண்டுபிடித்து பட்டை தீட்ட வேண்டும். தடைகளையும் தோல்விகளையும் கண்டு பயந்துவிடாமல், முயன்றால் வாழ்க்கை வசப்படும்.

 

மாற்றுத்திறனாளிகள் குறித்து இரண்டு முக்கியமான பிரச்னைகள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒன்று, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படக்கூடிய தாழ்வு மனப்பான்மை, மற்றொன்று, அவா்கள் மீது ஏனையோருக்கு ஏற்படக்கூடிய அலட்சியப்போக்கு. இவ்விரண்டும் உளவியல் ரீதியில் அணுகித் தீா்க்கப்பட வேண்டியவை. இது குறித்த விழிப்புணா்வும், புரிதலும், நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.

 

மாற்றுத்திறனாளிகளுக்கு, ‘நாம் தனித்திருக்கிறோம்’ என்ற உணா்வு ஏற்படாத வண்ணம் அவா்கள் பிறரால் அரவணைத்துச் செல்லப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அவா்கள் மனத்தளா்வுக்கு பிறா் காரணமாகிவிடக்கூடாது. இதனை நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்று செயல்பட வேண்டும்.

 

சோதனைக்குட்பட்டவரை காணும்போது

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ رَأَى مُبْتَلًى، فَقَالَ: الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا، لَمْ يُصِبْهُ ذَلِكَ البَلَاء


(நோய் அல்லது சோதனைகளால்) பாதிப்புக்குள்ளானவரைப் பார்த்தவர். ( الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا ) (பொருள்: உமக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து எனக்கு நிவாரணம் தந்த, அவனுடைய படைப்புகளில் அதிகமானோரைவிட என்னைச் சிறப்பாக்கி வைத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகுக!) என்று ஓதினால், அவர் வாழும் காலமெல்லாம் அந்தப் பாதிப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவார். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3343

 

உடல் ஊனத்தால் சிரமப்படுவோரை நாம் காணும்போது அவர்களைக் கேலி செய்வதோ, அவர்களின் மனம் வேதனைப்படுமாறு பேசுவதோ, அவர்களின் குறைகளைக் குத்திக் காட்டிப் பேசுவதோ கூடாது. மாறாக, அந்நேரத்தில் நாம் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, நம்மை ஆரோக்கியமாகப் படைத்துள்ள அவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்; அவனைப் புகழ வேண்டும். அதுவே நாம் அவனுக்குச் செய்யும் நன்றிக் கடனாகும். 

 

அரசு ரீதீயான உதவிகள்

 

சயீது பின் யர்ஃபூ (ரலி) அவர்களுக்கு பார்வை குறைபாடு இருந்ததால் அவர் ஜும்ஆ தொழுகைக்கு வருவதில்லை. இதையறிந்த ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அவரை அழைத்து விசாரித்தார்கள். அவர், "என்னை தொழுகைக்கு அழைத்து கொண்டு வர உதவியாளர் யாரும் இல்லை" என்றார். ஜனாதிபதி அவர்கள், அவர் தேவையான இடங்களுக்கு சென்று வர வழிகாட்டியாக ஒருவரை நியமித்தார்கள். அந்த பணியாளர் எப்போதும் அவர் கூடவே இருந்து வந்தார். நூல்:- உஸ்துல் ஙாபா

 

ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் இடக்கரத்தால் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அதைக்கண்ட  ஜனாதிபதி அவர்கள்,  ( يَا عَبْدَ اللَّهِ كُلْ بِيَمِينِكَ ) “அல்லாஹ்வின் அடிமையே! நீர் உமது வலக்கரத்தால்  சாப்பிடுவீராக” என்றார்கள்.

 

அதற்கு அவர், ( أُصِيبْتُ يَوْمَ مُؤْتَةَ فَعَجَزَتْ عَنْ الْحَرَكَةِ  ) “மூத்தா போரில் என் வலது கையில் காயப்பட்டுவிட்டது. அதனால் இயங்க இயலாத நிலைக்குப் போய்விட்டது” என்றார். இதைக் கேட்டவுடன் ஜனாதிபதி அவர்கள் அவர் நிலை கண்டு அங்கேயே உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

 

பிறகு, ( مَنْ يُوَضِّئُكَ ؟ ) “நீர் உளூ செய்வதற்கு யார் உதவி செய்கிறார்?” ( وَمَنْ يُغْسَلُ لَكَ ثِيَابُكَ ؟ ) “உமது துணிகளை யார் துவைத்து தருகிறார்?” ( وَمَنْ يُغْسَلُ لَكَ رَأْسُكَ ؟ ) “நீங்கள் குளிப்பதற்கு யார் உதவுகின்றார்?” ( وَمَنْ . . . وَمَنْ . . . ؟ ) இதற்கு யார்? அதற்கு யார்?” என்று (அன்றாட அலுவல்களை) விசாரித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு, அவருக்கு ஒரு பணியாளர், (முறையான) வாகனம், உணவு ஆகியவற்றை கொடுக்க உத்தரவிட்டார்கள். நூல்:- அல்ஃபாரூக் - அல்லாமா ஷிப்லி நுஅமானீ,  இன்த மா இல்தகைத்து உமர் இப்னு கத்தாப் (ரலி) ( عند ما التقيت عمر بن الخطاب ) டாக்டர் அத்ஹம் ஷர்காவீ

 

மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள், ஊக்கத்திட்டங்கள், வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அவை குறித்த தெளிவை மாற்றுத்திறனாளிகள் அறிய வேண்டும். அதன் மூலம் பயனடைய வேண்டும். சக மனிதராய் அதற்கு நாம் உதவ வேண்டும்.

 

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறையை உணராத அளவிற்கு அங்கீகரிக்கப்படுகிறாா்கள். அவா்களும் அதனை சவாலாக எடுத்துக்கொண்டு சிறப்பாக செயல்படுகின்றனா். உதாரணமாக, சுய தொழில் தொடங்க சகலவிதமான வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

 

நம் நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள், சேவைகள் தரத்தை உயா்த்த ஒரு சிறந்த வழி, வளா்ந்த நாடுகள் பலவற்றின் செயல்பாடுகளை ஆய்ந்தறிந்து அவற்றில் உள்ள மிகச்சிறந்த கூறுகளை நம் நாட்டுக்கேற்ப தகுந்த முறையில் வடிவமைத்துக் கொள்வதாகும்.

 

வரவேற்க வேண்டும்

 

அம்ர் பின் அல்ஜமூஹ் (ரலி) அவர்கள் கடும் கால் ஊனமுற்றவராக இருந்தார்கள். அவருக்கு நான்கு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் போர்க்களங்களில் கலந்து கொள்வார்கள். உஹுத் போர் நாள் வந்தபோது, புதல்வர்கள் தம் தந்தையிடம் "அல்லாஹ், (ஊனமுற்ற) உங்களுக்கு (போரில்) விதிவிலக்கு அளித்துள்ளான்" என்று கூறி, அவரைப் (போருக்குச் செல்லாமல்) தடுப்பதற்கு நாடினர்.

 

உடனே அம்ர் பின் ஜமூஹ் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து, ( إِنَّ بَنِيَّ يُرِيدُونَ أَنْ يَحْبِسُونِي عَنْ هَذَا الْوَجْهِ وَالْخُرُوجِ مَعَكَ فِيهِ، فَوَاللَّهِ إِنِّي لَأَرْجُوَ أَنَّ أَطَأَ بِعَرْجَتِي هَذِهِ فِي الْجَنَّةِ ) "என் புதல்வர்கள் உங்களுடன் போருக்குப் புறப்படுவதற்கு இந்த (ஊனம்) காரணத்தால் என்னைத் தடுப்பதற்கு விரும்புகின்றனர். அல்லாஹ் மீதாணையாக! இந்த ஊனமுற்ற காலுடனே சொர்க்கத்தை மிதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று கூறினார்.

 

பிறகு நபியவர்கள், ( أَمَّا أَنْتَ فَقَدَ عَذَرَكَ اللَّهُ، فَلَا جِهَادَ عَلَيْكَ ) "அல்லாஹ் உங்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ளான். எனவே, உங்கள் மீது அறப்போர் கடமையில்லை என்பதை தெரிந்து கொள்க!" என்று கூறினார்கள். (பிறகு) அவரின் புதல்வர்களிடம், ( مَا عَلَيْكُمْ أَنْ لَا تَمْنَعُوهُ لَعَلَّ اللَّهَ أَنْ يَرْزُقَهُ الشَّهَادَةَ ) "நீங்கள் அவரை போரில் கலந்து கொள்ளாமல் தடுப்பது உங்களுக்கு அவசியமில்லை. அல்லாஹ் அவருக்கு உயிர்த்தியாகத்தை வழங்கக்கூடும்" என்று கூறினார்கள். பிறகு அம்ர் பின் ஜமூஹ் (ரலி) அவர்கள் நபியவர்களுடன் புறப்பட்டு உஹுது போரில் (போரிட்டு) கொல்லப்பட்டார். நூல்:- சீரத் இப்னு ஹிஷாம், அல்பிதாயா வந்நிஹாயா

 

மனிதாபிமான நோக்குடன் மாற்றுத்திறனாளிகளை மதிக்க வேண்டும். அவர்களின் திறமைகளை கண்டுணர்ந்து, அவற்றை வெளிக்கொணர்ந்து அவர்கள் பல சாதனைகள் புரிய உதவ வேண்டும்.

 

உலகத்தில் சாதாரண மனிதர்கள் படைக்கும் சாதனையைவிட மாற்றுத் திறனாளிகள் படைக்கும் சாதனைகள் பல என்றே சொல்லலாம். சாதனைகள் படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதற்குச் சான்றாய் உலகில் பலர் திகழ்ந்தனர்; திகழ்கின்றனர்.


கேலி கிண்டல் கூடாது

 

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை ஒரு மரத்தில் ஏறி அதன் கிளை ஒன்றை ஒடித்து வர கட்டளையிட்டார்கள். (உடனே அன்னார் மரத்தில் ஏறியபோது) நபித்தோழர்களில் சிலர், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய கெண்டைக்கால் மெலிந்திருப்பதைப் பார்த்து சிரித்துவிட்டார்கள். அப்போது அண்ணலார், ( مَا تَضْحَكُونَ‏؟‏ لَرِجْلُ عَبْدِ اللهِ أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ أُحُدٍ‏ ) "நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? அப்துல்லாஹ்வின் கால் (நன்மை தீமைகளை நிறுக்கப்படும்) தராசில் உஹது மலையைவிட கனமிக்கது" என்று கூறினார்கள். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-237

 

யாருடைய தோற்றத்தையும் உருவத்தையும் கிண்டலடிக்கக்கூடாது. காரணம், மனிதர்களை மனிதர்கள் படைக்கவில்லை. படைப்புகளுக்குக் கண்ணியம் கொடுக்காவிட்டாலும் படைத்தவனுக்குக் கண்ணியம் கொடுக்க வேண்டும்.

 

ஒருவருடைய உடல் ஊனத்தை குறித்து கேலி கிண்டல் செய்து அவரை தாழ்வுமனப்பான்மைக்கு ஆளாக்கக்கூடாது. மாறாக, அவரிடமுள்ள ஏதேனும் ஒரு திறமையை வைத்து அவரை ஊக்கப்படுத்த வேண்டும். அவர் திறமையை அவருக்கும், வெளி உலகத்திற்கும் புரியவைக்க வேண்டும். இதையே இஸ்லாம் விரும்புகிறது. மாற்றுத்திறனாளிகள் சாதித்தவை ஏராளம் என்பதை உலகம் அறியும்.

 

செவிடன் காதில் ஊதிய சங்கு, நொண்டிச்சாக்கு, யானை தடவிய குருடன் போல், முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?, ஊமை ஊரைக் கெடுக்கும் போன்ற பழமொழிகளை சர்வ சாதாரணமாக மாற்றுத்திறனாளிகள் முன்னிலையில் அவர்கள் மனம் புண்படும்படியாக நேரிலும் மேடைகளிலும் உதாரணம் காட்டி பலரும் பேசுவது சரியல்ல.

 

திரைப்படங்களிலும், நாடகங்களிலும், செவித்திறன் குறைந்தவர்களை, திக்கித்திக்கி பேசுவோரை, கால் தாங்கி நடப்போரை ஒரு பாத்திரமாக வைத்து நகைச்சுவை காட்சிகளை அமைப்பது மிகப்பெரிய தவறாகும். அவையும் கண்டிக்கத்தவையே.

 

மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ உதவி ஆகியவை அத்தியாவசியத் தேவையாகும். அவர்களுக்கு தேவைப்படும் சான்றிதழ் எதுவாயினும் தாமதமின்றி இணையதளம் மூலம் பெறவும், அவர்களை நேரில் வரச்சொல்லி அலைக்கழிக்காமல் இல்லத்திற்கே சென்று உதவிடும் நிலையும் உருவாக வேண்டும். மாற்றுத்திறனாளிகள் விரும்புவது சம வாய்ப்புகளையும், சம உரிமைகளையும் தான்; பரிதாபத்தை அல்ல.

 

தகுதி இருந்தால்

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இரு தொழுகை அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். (ஒருவர்) பிலால் (ரலி) அவர்கள். (மற்றொருவர்) கண் பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ( إِنَّ بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ ) "பிலால் (பின்) இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். எனவே, இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ர் தொழுகைக்காக) அறிவிப்புச் செய்யும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்" என்று சொன்னார்கள். நூல் :- முஸ்லிம்-1993

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சஹ்ர் மற்றும் தஹஜ்ஜுத் உடைய நேரத்தை அறிவிப்பு செய்வதற்காக பின்னரவில் பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்வதற்கும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் பஜ்ரு தொழுகைக்காக பாங்கு சொல்வதற்கும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

 

பாங்கு சொல்லுதல் என்பது அன்றைக்கு உயர்ந்த பொறுப்பாக இருந்தது. இன்று போல் அன்று பாங்கு சொல்லும் பணி மட்டமான பணியாக பார்க்கப்படவில்லை.

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு செல்வதற்கு முன்பே முதலாவதாக முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களையும் அதன் பிறகு இரண்டாவதாக அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்களையும் இஸ்லாமிய பரப்புரைக்காக மதீனாவிற்கு அனுப்பி வைத்தார்கள். மதீனா வந்த இந்த இருவரும், மதீனாவாசிகளுக்கு அனுதினமும் குர்ஆன் மற்றும் மார்க்க விஷயங்களைக் கற்றுக்கொடுப்பவர்களாக இருந்துள்ளனர்.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் சுமார் 13 யுத்தங்களுக்கு மதீனாவைவிட்டு கிளம்பி வெளியே செல்லும் சமயங்களில் தன்னுடைய பிரதிநிதியாய், ஆட்சியாளராய் தன்னுடைய வேலைகளை செய்வதற்காக அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்களிடம் தான் அந்த பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சென்றார்கள்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், இவ்வாறு அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு செல்லும்போது இவர் தான் மக்களுக்கு இமாமாக நின்று தொழுவித்தவர் ஆவார். (அதாவது நபியவர்கள் மதீனாவில் இல்லாத போது கண் பார்வையற்றவராக இவர்தான் மக்களுக்கு இமாமாக நின்று தொழுவித்தவர்.)

 

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் கண் பார்வையற்றவராக இருந்தும்கூட பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் நற்போதனை செய்யும் ஆசிரியர் பொறுப்பு,  பாங்கு சொல்லும் பொறுப்பு, ஆட்சியாளரின் பிரதிநிதி பொறுப்பு ஆகிய முக்கிய பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்தார்கள். காரணம், நபியவர்கள் அவரிடம் அதற்குரிய தகுதி இருந்ததைக் கண்டு கொண்டு, அவரை கௌரவப்படுத்தினார்கள்.

 

ஒருவரிடம் தகுதியும், திறமையும் இருந்தால் அதற்குரிய பொறுப்புக்களை அவரிடம் ஒப்படைக்கலாம். அவர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சரியே. தகுதியும், திறமையும் இருந்து அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்ற ஒரே காரணத்திற்காக அவரிடம் பொறுப்பை கொடுக்க மறுப்பது மிகப்பெரிய தவறாகும்.

 

உதவிகள் புரிதல்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قادَ أَعْمَى أربعينَ ذِرَاعًا أوْ خمسينَ ذِرَاعًا  كتبَ اللهُ  تباركَ وتعالى لهُ عِتْقُ رَقَبَةٍ ) எவர் கண் பார்வையற்ற ஒருவரை நாற்பது அல்லது ஐம்பது முழம் கைபிடித்து அழைத்துச் செல்கிறாரோ அவருக்கு, மகத்துவமிக்க அல்லாஹுத்தஆலா ஒரு அடிமையை உரிமையிட்டதிற்குரிய நன்மையை பதிவுசெய்கிறான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, முஅஜமுல் அஸ்வத் இமாம் தப்ரானீ,  அல்மத்தாபுல் ஆலியா இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ

 

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உத்தாசைகள் புரிவதின் மூலம் அவர்களைக் கண்ணியப்படுத்தும் நல்லடியார்களாக அல்லாஹுத்தஆலா, நம்மை வாழச்செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

Tuesday, 29 October 2024

நிலையான தர்மங்கள்

 

நிலையான தர்மங்கள்

 

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ 

நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள். திருக்குர்ஆன்:- 3:92

 

முஸ்லிம் மன்னர்கள், செல்வந்தர்கள் தமது வாரிசுகளுக்கு ஒரு பங்கு சொத்தை கொடுத்துவிட்டு சென்றதைப் போன்று, தமது மரணத்திற்கு பிறகும் தாம் நன்மைகள் பெற வேண்டும் என்பதற்காக ஒரு பங்கை “அல்லாஹ்விற்காக வக்ஃப்” என்று எழுதிவைத்தார்கள்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ ) மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன. (அதில் ஒன்று)  நிலையான அறக்கொடை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3358, அபூதாவூத்-2494, திர்மிதீ-1297, நஸாயீ-3591, முஸ்னது அஹ்மத்-8489

 

வக்ஃப் என்றால் என்ன?

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. உமர் (ரலி) அவர்கள், ‘ஸம்ஃக்’ எனப்படும் தமது சொத்து ஒன்றை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களது காலத்தில் தர்மம் செய்தார்கள். அது ஒரு பேரீச்சந்தோட்டமாக இருந்தது. அவர்கள் (நபியவர்களிடம்), ‘‘நாயகமே! நான் ஒரு செல்வத்தைப் பெற்றுள்ளேன். அது என்னிடம் (இருப்பவற்றிலேயே) உயர்தரமானதாகும். அதைத் தர்மம் செய்துவிட விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.

 

நபியவர்கள், ( تَصَدَّقْ بِأَصْلِهِ، لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ ) ‘‘அதன் நிலத்தை, (எவருக்கும்) விற்கக்கூடாது; அன்பளிப்பாகவும் தரக்கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் ஆக முடியாது; அதன் வருவாய் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அதைத் தர்மம் செய்துவிடுவீராக!” என்று கூறினார்கள்.

 

ஆகவே, உமர் (ரலி) அவர்கள் அதைத் தர்மம் (வக்ஃப்) செய்துவிட்டார்கள். அவர்களின் இந்தத் தர்மம் (வக்ஃப்) அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், ஏழைகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது. நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து பொதுவழக்கப்படி (நியாயமான முறையில்) உண்பதில் அல்லது விரயம் செய்யாமல் தம் நண்பருக்கு உண்ணக்கொடுப்பதில் குற்றமில்லை என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். நூல்:- புகாரீ-2764

 

இஸ்லாமிய பார்வையில் "வக்ஃப்" என்றால் "தடுக்கப்பட்டுவிட்டது" என்று பொருள். அதாவது, இனிமேல் அந்த சொத்து இன்னார் உபயோகத்தில் இருந்து தடுக்கப்பட்டு அல்லாஹ்விற்கு சேர்ந்துவிட்டது. இனிமேல், அதை யாரும் தனி உரிமை கொண்டாடவும் கூடாது; அதை யாரும் விற்கவும், வாங்கவும் கூடாது. சுருங்கக்கூறின், அதற்குரிய உரிமை தனி மனிதனிடமிருந்து அல்லாஹ்விற்கு மாறிவிட்டது. எனவே, அதை யாரும் உரிமைக்கொண்டாட கூடாது. மறுமைநாள் வரை அதன் உரிமையாளர் அல்லாஹ் மட்டும் தான், என்று ஒரு சொத்தை அல்லாஹ்விற்காக பொதுவுடைமையாக்கிவிடுதல்.

 

அதாவது, ஒருவர், "நான் என்னுடைய இந்த இடத்தை இந்த பள்ளிவாசலின் பராமரிப்புக்காக வழங்குகிறேன்" என்று கூறி கொடுத்துவிட்டால், குறிப்பிட்ட அந்த இடம் அந்த பள்ளிவாசல் கட்டுபாட்டிற்கு வந்துவிடும். அந்த இடத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை அந்த பள்ளிவாசலின் பராமரிப்புக்கு மட்டும் பயன்படுத்தவேண்டும். வக்ஃப் செய்தவரோ அல்லது அவரின் வாரிசுகளோ அந்த இடத்தை உரிமைக்கொண்டாட முடியாது. மறுமைநாள் வரை அந்த இடத்தின் நிலைபாடு இவ்வாறு இருக்கும். இதற்கு பெயர் தான் “வக்ஃப் செய்தல்” என்பதாகும். அந்த இடத்தை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு பள்ளிவாசலின் நிர்வாகத்தையேச் சேரும்.

 

ஒருமுறை வக்ஃப் செய்யப்பட்டுவிட்டால் அந்த சொத்து மறுமைநாள் வரை வக்ஃப் சொத்தாகத்தான் இருக்கும். அதை வேறு எந்த வகையிலும் மாற்றியமைக்க முடியாது.

 

நாம் பொதுவாக அறிந்திருக்கிற ‘அறக்கட்டளை’ போன்றன்று வக்ஃப். பொதுவாக அறக்கட்டளைகளோடு, சில கடமைகள் இணைக்கப்பட்டிருக்கும். அந்தக் கடமைகளோடு சோ்த்து, அந்தச் சொத்தின் உரிமையைக் கை மாற்றலாம். அவன் உயிரோடிருக்கும் வரை எந்தக் கட்டளையையும், உயிலையும் மாற்றிக்கொண்டே இருக்கலாம். வக்ஃபில் அதெல்லாம் நடக்காது. கொடுத்தால் கொடுத்ததுதான்.

 

சில சட்டங்கள்

 

ஒருவர் ஒரு சொத்தை வக்ஃப் செய்யும்போது அதை எழுத்துப்பூர்வமாக எழுதிவைக்க வேண்டும். அல்லது ஓரிருவர் முன்னிலையில் சொல்ல வேண்டும். மனதில் நினைத்தால் மட்டும் கூடாது. மேலும், கூட்டாக இருக்கும் சொத்தில் "என்னுடைய பங்கை வக்ஃப் செய்துவிட்டேன்" என்றால், கூடாது. கூட்டிலிருந்து தமது பங்கை பிரித்தெடுத்த பிறகு தான், (அதாவது, சொத்தின் முழு உரிமை அவருக்கு வந்த பிறகு தான்) வக்ஃப் செய்யமுடியும்.

 

யாருக்கும் எந்தப் பயனும் அளிக்காத ஒன்றை, வக்ஃப் செய்தல் கூடாது. பயனளிப்பவற்றை மட்டும் தான் வக்ஃப் செய்ய வேண்டும். மார்க்கம் (ஹராமானவற்றை) தடுத்துள்ளவற்றை வக்ஃப் செய்யக்கூடாது. குறிப்பிட்ட ஓர் காலத் தவணை வைத்து (அதாவது, சுமார் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு இந்த இடத்தை அல்லாஹ்விற்காக கொடுக்கிறேன் என்று கூறி) வக்ஃப் செய்யக்கூடாது.

 

வக்ஃப் செய்பவர் இந்த சொத்திலிருந்து வரும் வருவாயை குறிப்பிட்ட இந்த காரியத்திற்கு தான் செலவழிக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டுவிட்டால், அதற்கு மாற்றம் செய்யக்கூடாது. அதாவது, இந்த வருவாயில் இருந்து இந்த பள்ளிவாசலுக்கு தண்ணீருக்காக, அல்லது விளக்கிற்காக அல்லது பாய் வாங்கிப்போட வேண்டும் என்று குறிப்பிட்டுவிட்டால், அதைத்தவிர மற்ற காரியங்களுக்கு அந்த சொத்தின் வருவாயைப் பயன்படுத்தக்கூடாது.

 

அளவோடு

 

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான், (பேராசான் பெருமானார்-ஸல் அவர்களிடம்) ‘‘நாயகமே! (நான் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் பின் வாங்கியதற்குப்) பாவமீட்பு பெறும் ஓர் அம்சமாக, என் செல்வத்தி(ன் உரிமையி)லிருந்து நான் விலகிக்கொண்டு அதை அல்லாஹ்வுக்காகவும் அல்லாஹ்வின் தூதருக்காகவும் தர்மமாக வழங்க விரும்புகிறேன்” என்று கூறினேன்.

 

அதற்கு நபியவர்கள், ( أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ ) ‘‘உமது செல்வத்தில் ஒரு பகுதியை உமக்காக வைத்துக்கொள்வீராக! அது உமக்கு நல்லது” என்று கூறினார்கள். நான், ‘‘கைபரில் கிடைத்த எனது பங்கை (எனக்காக) வைத்துக்கொள்கிறேன்” என்று கூறினேன். நூல்:- புகாரீ-2757

 

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின் போது) நலம் விசாரிக்க வந்தார்கள். நான், ‘‘நாயகமே! என் செல்வம் முழுவதையும் நான் (அறக் காரியங்களுக்காக) இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘வேண்டாம்” என்று கூறினார்கள். நான், ‘‘அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை அவ்வாறு செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கும், ‘‘வேண்டாம்” என்றே பதிலளித்தார்கள். நான், ‘‘மூன்றிலொரு பங்கை(யாவது அவ்வாறு செய்துவிடட்டுமா?)” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ( فَالثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ ) ‘‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம்தான். அல்லது பெரியது தான்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2742, 2744


ஒரு குடும்பத் தலைவன் தம்முடைய சொத்தில் இருந்து ஒரு பகுதியை தமது மண்ணறை வாழ்க்கைக்காக அறக்கொடை (வக்ஃப்) வழங்கலாம். ஆனால்அதிலிருந்து கொஞ்சமாவது தமது வாரிசுகளுக்கு விட்டுச்செல்லவேண்டும்.  அதற்காக கொஞ்சம் சேமித்து வைப்பது தவறல்ல. அவ்வாறு சேமித்து வைப்பதன் மூலமாக தான் இஸ்லாம் கூறும் வாரிசுரிமை சட்டத்தை நிலைநாட்ட முடியும்.

 

ஒருவர் தமது சொத்தில் இருந்து மூன்றில் ஒரு பாகத்தையே அவர் விருப்பப்படி இறைவனுக்கு வக்ஃப் செய்யலாமே தவிர, அனைத்தையும் கொடுப்பது முறையல்ல.  

 

பல வகைகள்

 

சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னுடைய தாய் இறந்துவிட்டார். (எனவே நான் அண்ணல் நபி - ஸல் அவர்களிடம் சென்றேன்) "நாயகமே! என் தாயார் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா?" என்று கேட்டேன். அதற்கு அண்ணலார், "ஆம் (தர்மம் செய்யலாம்)" என்று பதிலளித்தார்கள். ( فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ ) "எந்தத் தர்மம் மிகச் சிறந்தது?" என்று கேட்டேன். அதற்கு அண்ணலார், ( سَقْيُ الْمَاءِ ) "குடிநீர் வழங்குதல்" என்று கூறினார்கள். எனவேதான் மதீனாவில் காணப்படுகின்ற 'சஅத் நீர்த்தடாகம்' உண்டானது. நூல்:- நஸாயீ-3606

 

குடிநீர் வழங்குவதற்காக சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் மதீனாவில் ஒரு கிணறு தோண்டினார்கள். அப்போது மதீனாவில் தண்ணீர் இல்லாத பஞ்சக்காலமாக இருந்தது. அந்தக் கிணற்றைத் தோண்டி, இது சஅதியின் தாயாருக்காக (வக்ஃப் செய்யப்பட்டது) என்று கூறினார்கள்.

 

மரணமடைந்தவரின் சார்பாக வக்ஃப் செய்வதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெரிதும் விரும்பியுள்ளார்கள். ஏனெனில், அதற்கான நன்மை தொடர்ந்து அவருக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். அண்ணலாரின் காலத்திலேயே அது செயல்படுத்தப்பட்டது.

 

அங்கத்தூய்மை செய்ய தண்ணீர் வசதி செய்து கொடுத்தல், கிணறு, பம்ப் செட், தண்ணீர் தொட்டி, தண்ணீர் குழாய் அமைத்தல், மற்றும் மதரசா, பள்ளிவாசல், கல்வி நிலையம் மருத்துவமனை என நிலையான தர்மங்களை அமைத்து வக்ஃப் செய்யலாம். உலகம் முழுக்க இருக்கும் பல வக்ஃப் சொத்துகள் இவ்வாறுதான் உருவானது.

 

அபூஅப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் பின் ஹபீப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (ஜனாதிபதி) உஸ்மான் (ரலி) அவர்கள் (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்ட போது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து) பின்வருமாறு பேசினார்கள்: அல்லாஹ்வை முன்வைத்து உங்களைக் கேட்கிறேன். நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களைத் தவிர வேறுயாரிடமும் கேட்கவில்லை. ( مَنْ حَفَرَ رُومَةَ فَلَهُ الْجَنَّةُ ) ‘‘பிஃரு  ரூமா’ எனும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொதுமக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து)விடுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கி) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் கூறியதை நபித்தோழர்கள் உண்மையென ஏற்றுக்கொண்டனர். நூல்:- புகாரீ-2778

 

சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரில் வக்ஃப்களின் வகைகள் ஏராளமாக இருந்தன.

 

அந்நகரில், ‘ஹஜ்’ஜுக்கு சென்றிட விருப்பம் இருந்தும் வாய்ப்பு வசதி இல்லாதவர்களுக்கு உதவிட ஒரு வக்ஃப், பெண்பிள்ளைகளை தகுந்த இணையர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு சக்தியற்ற பெற்றோருக்கு உதவிட ஒரு வக்ஃப், கைதிகளின் விடுதலைக்கு உதவிட ஒரு வக்ஃப்,  வழிப்போக்கர்களுக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் கொடுத்து உதவுவதோடு அவர்கள் சொந்த ஊருக்குச் சென்றிட தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்திட ஒரு வக்ஃப், என   இருந்தன.

 

அறிஞர் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் தனது பயணக்குறிப்பில் இவ்வாறு கூறுகிறார். டமாஷ்கஸ் நகரில் அநாதைப் பிள்ளைகளுக்கான வக்ஃப் ஒன்றும் இருந்தது. அவற்றில் கிடைக்கும் வருமானத்தை அநாதைகளைப் பராமரிக்க, அவர்களுக்கு கல்வி கற்பிக்க, திருமணம் செய்து வைத்திட செலவிட்டனர். ”இந்த வக்ஃப்கள் அந்த ஊர்களின் பெருமைமிகுந்த வியப்பிற்குரியனவாக இருந்தன.  நூல்:- ரிஹ்லா இப்னு பதூதா, ரிஹ்லா இப்னு ஜுபைர்

 

டமாஷ்கஸ் நகரில், மாராஜ்-இ-அக்ஸர் (Maraj-E-Akhazar) என்ற பெயரில் ஓர் அறக்கட்டளை இருந்தது. இது குதிரைகளுக்காவே உருவாக்கப்பட்டது. இதிலுள்ள மேய்ச்சல் பகுதிகள், தங்கள் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட குதிரைகளின் உணவறைகளாக பயன்படுத்தப்பட்டன. இந்தக் குதிரைகள், இவற்றில் தங்கள் ஆயுள் உள்ளவரைக்கும் மேய்ந்தன.

 

அந்நகரில் உள்ள மற்றொரு அறக்கட்டளை பூனைகளுக்காகவே உருவாக்கப்பட்டது. பூனைகளுக்கு இங்கே உணவும் உறைவிடமும் அளிக்கப்பட்டன. அவற்றிற்காகக் கட்டப்பட்ட வீடுகளில் நூற்றுக்கணக்கான பூனைகள் வாழ்ந்தன. இங்கே பூனைகளுக்கு உணவும் உறைவிடமும் கிடைத்துக் கொண்டிருந்ததால் அவை அங்கிருந்து வெளியே செல்லவில்லை. அவை வெளியே சென்றதெல்லாம் விளையாடவும், குதூகலித்திருக்கவுமே! நூல்:- இஸ்லாமிய நாகரிகம் - முஸ்தஃபா அல்சிபாய்

 

சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரும் பிரபல சமூக  சேவையாளருமான அஷ்ஷேக் சுலைமான் பின் அப்துல் அஸீஸ் ராஜிஹி  உலக கோடீஸ்வரர் தரப்படுத்தலில் 120 வது இடத்தைப் பெற்றவர். கின்னஸில் இடம்பிடித்த உலகின் மிகப் பெரிய பேரீத்தம் மரத்தோட்டத்தின் சொந்தக்காரர் இவர்.

 

இவருக்குரிய பேரீத்தம் பழத்தோட்டம் ஒன்றில் இரண்டு இலட்சம் மரங்கள் உள்ளன. அவருக்கு விருப்பமான அத்தோட்டத்தை அல்லாஹ்வுக்காக வக்ஃப் செய்துள்ளார். அறுவடையில் கிடைக்கும் உயர் ரக பேரீத்தம் பழங்கள் புனித நகரங்களான மக்கா, மதீனா மற்றும் உலக நாடுகளுக்கு ரமளான் மாதத்தில் நோன்பு திறப்பதற்காக இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.

 

அநீதியிழைத்தல்

 

உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட (அமானிதப்) பொருள்களை அவற்றுக்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். திருக்குர்ஆன்:- 4:58

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا اؤْتُمِنَ خَانَ آيَةُ الْمُنَافِقِ ) நயவஞ்சகனின் அடையாளம் யாதெனில், அவனிடம் அடைக்கலப் பொருள் (அல்லது பொறுப்பு) ஏதும் நம்பி ஒப்படைக்கப்பட்டால், அதில் அவன் மோசடி செய்வான். நூல்:- புகாரீ-2749 

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் முஸ்லிம்களின் விஷயங்களை பொறுப்பேற்று, அதில் கவனக்குறைவாக இருக்கிறாரோ, அவர் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார். நூல்:- கன்ஸுல் உம்மால்

 

மகாராஷ்டிர மாநிலம், மும்பை, அல்டாமவுண்ட் சாலையில்  பணக்கார கப்பல் உரிமையாளரான “கரிம்பாய் இப்ராஹீம் க்வாஜா” என்பவரால் 1895 ஆம் ஆண்டில் "கரிம்பாய் இப்ராஹீம் க்வாஜா யதீம்கானா" நிறுவப்பட்டது. இந்த அநாதை இல்லம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பின்தங்கிய குழந்தைகளின் கல்வித் தேவைகளுக்கு சேவை செய்தது.

 

1.120 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தை தற்போது இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, “ஆண்டிலியா” என்ற பெயரில் 27 மாடிகள் கொண்ட மிகவும் பிரம்மாண்டமான பல்லடுக்கு மாளிகையாக கட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில வக்ஃப் போர்டின் அநாதை இல்லம் நடந்து கொண்டிருந்த இடத்தை மீட்க, மகாராஷ்டிரா அரசின் வக்ஃப் வாரியம் வழக்குபோட்டு சுப்ரீம் கோட்டில் தற்போது வரை போராடுகிறது.

 

பெங்களூர், வசந்த் நகரில் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் “ஐடிசி வின்சர்” (ITC Windsor) எனும் பெயரில், 500 கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டல் (FIVE STAR HOTEL) கட்டப்பட்டுள்ளன. அதன் நிர்வாகம், அதற்கு ரூ 12,000 மட்டுமே மாத வாடகையாக வக்ஃப் வாரியத்திற்குக் கொடுக்கிறது.

 

டில்லி சிறுபான்மைனர் கமிஷனின் உறுப்பினர் ஒருவர்டில்லியில் நிஸாமுதீன் சாலையில் மிகவும் மதிப்புமிக்க பகுதியில் வக்ஃப் வாரியத்திற்கு உரிமையான நிலத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தை நடத்துகிறார். அதற்கு ரூ1,000 மட்டுமே வாடகையாக வக்ஃப் வாரியத்திற்குக் கொடுக்கிறார்.

 

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இயங்கும் ISB, Microsoft, Wipro, Lanco போன்ற ஐடி நிறுவனங்கள் அனைத்தும் வக்ஃப் சொத்துக்களில் தான் நிறுவப்பட்டுள்ளன. பெங்களூருவிலுள்ள ITC Windsor என்ற 5 நட்சத்திர ஹோட்டல் வக்ஃப் சொத்தில் தான் கட்டப்பட்டுள்ளன.

 

தெலுங்கானா மாநிலத்தில், மாநில அரசே வக்ஃப் வாரிய சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது. உதாரணமாக, ஹைதராபாத் “ஹை டெக் நகரம்” வக்ஃப் சொத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

 

சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய வக்ஃப் சொத்துக்கள் விற்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. இத்தகைய வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய வக்ஃப் வாரியப் பொறுப்பில் உள்ளவர்களே இலஞ்சம் பெற்றுக்கொண்டு கைமாற்றியுள்ளனர் என்பதுதான் கொடுமை.

 

இவ்வாறு, வக்ஃப் வாரியத்தில் இருக்கிற சிலர் பெரும் பெரும் வக்ஃப் சொத்துக்களை இலஞ்சம் பெற்றுக்கொண்டு கைமாற்றியுள்ளனர்.

 

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர், மர்ஹூம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் கூறினார். முஸ்லிம் சமுதாயம் புதையல் மேல் அமர்ந்து, பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறது.

 

ஆம்! இந்தியாவில் முஸ்லிம்களுக்காக வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்கள் குவிந்து கிடைக்கிறது. சுதந்திரத்திற்குப் பின் அது எந்த முஸ்லிமுக்கும் பயன்படவே இல்லை.

 

வக்ஃப் சொத்து என்பது தர்கா மற்றும் பள்ளிவாசல்களை நிர்வகிக்க மட்டும் ஏற்படுத்தபட்டவை அல்ல. மாறாக, ஏழை முஸ்லிம்களுக்காகவும் உருவாக்கபட்டவை தான். இந்தியாவில் அதற்கு தகுதியான முஸ்லிம்கள் பல வகையில் உள்ளனர்.

 

இன்றைய இந்தியாவில் பல இலட்சம் முஸ்லிம்கள் ஏழைகளாக வீடற்றோராக உள்ளனர். ஊனமுற்று செயல்பட முடியாமல் பல முஸ்லிம்கள் உள்ளனர். கணவரை இழந்து சிரமப்படும் முஸ்லிம் பெண்கள் உள்ளனர். அனைத்து திறமைகள் இருந்தும் முதலீடு இல்லாமல் வட்டிக்கு போக முடியாமல் முடங்கி கிடப்போர் பலர். ( வக்ஃப் சொத்து முறையாக முஸ்லிம்களுக்கு பயன்படுத்தி இருந்தால் தற்போது வட்டியும் இருக்காது. )

 

இவர்களுக்கு செல்ல வேண்டிய வக்ஃப் சொத்துக்கள் தான் இவர்களுக்கு பயன்படாமல் பலகோடி கணக்கில் இலஞ்சம் பெற்றுக்கொண்டு மாற்றாருக்கும், பண முதலைகளுக்கும் பயன்பட்டு கொண்டுள்ளது. இந்தியாவிலேயே இலஞ்சத்தில் ஊறிகிடக்கும் ஒரு அமைப்பு உண்டென்றால் அது வக்ஃப் வாரியம் தான். எதிலும் இலஞ்சம்! இலஞ்சம்! இலஞ்சம்!

 

வக்ஃப் வாரியங்கள்

 

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்தியாவில் ஆட்சி செய்த மொகலாயர்கள் மற்றும் அன்று வாழ்ந்த இஸ்லாமிய செல்வந்தர்கள் வருங்கால சமுதாயத்தின் நலன் கருதி வக்ஃப் செய்த சொத்துக்களின் எண்ணிக்கை என்பது கணக்கில் அடங்காதவை.

 

இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் மக்களின் பயன்பாட்டுக்காக தங்கள் பகுதியில் இருக்கும் பள்ளிவாசல்கள், மதரசாக்கள், தர்காக்கள் ஆகியவற்றின் பெயரில் தானமாக வழங்கப்பட்டவையே வக்ஃப் சொத்துக்களாகும். அவை, அசையும் சொத்துக்களாகவும் அசையா சொத்துக்களாகவும் இருக்கின்றன.

 

இந்த சொத்துக்களை கண்காணிப்பதற்காகவும், அதில் தவறு நடந்துவிடக்கூடாது என்பதற்காகவும் நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டங்களை அரசு 1954 ஆம் ஆண்டு இயற்றியது.

 

அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்களிலும் வக்ஃப் வாரியங்கள் 1958 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன. இச்சட்டங்கள் பின்னர் 1995 ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில் அவை நிர்வகிக்கப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றன.

 

பரந்து விரிந்த இந்திய தேசத்தில் இராணுவம் மற்றும் இரயில்வே துறைக்கு அடுத்தபடியாக, அதிக சொத்துக்கள் வக்ஃப் சொத்துக்களாக உள்ளது. இந்திய இராணுவத்திற்கு சொந்தமான அசையா சொத்தின் பரப்பளவு 17.78 இலட்சம் ஏக்கர், இந்திய இரயில்வேக்கு சொந்தமான மொத்த அசையா சொத்தின் பரப்பளவு 11.5 இலட்சம் ஏக்கர், இந்திய வக்ஃப் சொத்துக்களின் பரப்பளவு என்பது 9.4 இலட்சம் ஏக்கர் ஆகும்.

 

வக்ஃப் சொத்துக்களின் தற்போது மொத்தம் 8,65,646 அசையா சொத்துக்கள் வக்ஃப் வாரியத்தின் கண்காணிப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் அதிகபட்சம் உத்திரப்பிரதேசத்தில் 1,99,701 அசையா சொத்துக்களும், இரண்டாவதாக தமிழ்நாட்டில் 60,223 அசையா சொத்துக்களும், மூன்றாவதாக பஞ்சாப்பில் 58,608 அசையா சொத்துக்களும் இருக்கின்றன.

 

இதைத் தவிர இன்னும் வக்ஃப் வாரியத்தின் கண்காணிப்பில் பதிவு செய்யப்படாமல் ஆக்கரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் வக்ஃப் சொத்துக்களின் எண்ணிக்கை ஏராளம்.

 

உலகில் 54 இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன. அதில் எந்த நாட்டிலும் இந்தியாவில் இருக்கும் அளவிற்கு வக்ஃப் சொத்துக்கள் இல்லை.

 

இந்தியாவில் இருக்கும் அளவிற்கு பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதராசக்களின் எண்ணிக்கை உலகில் எந்த இஸ்லாமிய நாட்டிலும் இல்லை. இங்குள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களுக்குத்தான் ஏராளமான வக்ஃப் சொத்துக்கள் உள்ளன.

 

ஊர் மஹல்லா பள்ளிவாசல்களை மட்டும் பராமரிப்பதிலும், வீம்புக்கு புதிய பள்ளிவாசல்கள் கட்டுவதிலும் இருந்த கவனம் பள்ளிவாசல்களுக்குரிய சொத்துக்களை பாதுகாப்பதிலும், மஹல்லா அல்லாத பொதுஇடங்களில் தனித்து விடப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து அவற்றை சட்டப்பூர்வமாக பாதுகாப்பதிலும் முஸ்லிம்களுக்கு கவனம் இல்லாமல் போனது.

 

எல்லாவற்றுக்கும் மேலாக “சிவன் சொத்து குல நாசம்” (இறைவனின் சொத்தைச் சாப்பிட்டவனின் வம்சம் விருத்தியடையாது.) என்ற எச்சரிக்கையில் பிற சமூகங்கள் காட்டிய அச்ச உணர்வைகூட முஸ்லிம்களில் சிலர் காட்டவில்லை.

 

அல்லாஹ்வின் சொத்துக்களை பாதுகாப்பதில் முஸ்லிம் சமூகத்தை முறையாக பயிற்றுவிக்காமல் போனதால் தான் பல இலட்சம் கோடிகள் பெறுமானமுள்ள சொத்துக்கள் இன்று ஆக்கிரமிக்கப்பட்டு அடையாளம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.

 

முஸ்லிம்களிடம் சுயநலமும் அலட்சியமும் மிகைத்திருக்கும்வரை வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தான் கிடக்கும்.

 

முஸ்லிம்களிடம் விழிப்பு ஏற்பட்டு பொதுநலம் மிகைக்கின்ற காலத்தில் இந்த சொத்துக்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக மீட்கப்பட்டு, முஸ்லிம்களிலும் முஸ்லிம் அல்லாதவர்களிலும் தேவையுடைய மக்களின் நலனிற்கு நிச்சயம் பயன்படுத்தப்படும்.

 

அந்த அழகிய காலத்தை நோக்கி சமுதாயத்தை நகர்த்துவது தான் ஒரு சமூக ஆர்வலனுடைய முதன்மை கடமை.

 

1999 இல் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக இருந்த மர்ஹூம் அப்துல் லத்தீப் சாஹிப் அவர்கள் தமிழக வக்ஃப் சொத்துக்களின் மதிப்பு இரண்டு இலட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று அன்றைய காலத்திலேயே (அதாவது, ரியல் எஸ்டேட் என்ற தொழில் வளர்ச்சியடையாத காலத்திலேயே) கூறினார்.

 

“தமிழகத்தின் நடுவம்” என்ற திருச்சியின் பழைய நிலப் பதிவேடுகளைத் தோண்டினால் திருச்சியின் பெரும்பகுதி வக்ஃப் சொத்துக்கள் தான்.

 

ஆன்மிக ஞானி நத்ஹர் (ரஹ்) அவர்கள் அடக்கமாகியுள்ள தர்காவுக்கு சொந்தமானதும், அவர்களின் சீடர் குந்தவை நாச்சியார் கொடுத்த நிலத் தானங்களும், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு மதுரை ராணி மங்கம்மா தானமாக கொடுத்த சொத்துக்களிலும் தான் திருச்சி மாநகரமே அமைந்துள்ளது.

 

அலட்சியப்போக்கு

 

இந்த நிலங்களை மீட்கவும் இதை பற்றி கவலைபடவும் இந்த வக்ஃப் நிலங்களை மீட்டு இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்கின்ற அடிப்படை சிந்தனைக்கூட இல்லாமல் இருக்கிறோம்.

 

இந்த வக்ஃப்  நிலங்களை பாதுகாக்க நமக்கு இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு வக்ஃப் சட்டம் 1995 என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 

இந்த சட்டம் வக்ஃப் வாரியங்களுக்கு வானுயர்ந்த அதிகாரத்தை வழங்குகிறது. ஒரு நிலம், வக்ஃப் நிலமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் வக்ஃப்  வாரியத்திற்கு உள்ளது என்று இந்த சட்டம் கூறுகிறது.

 

இரயில்வே நிர்வாகத்திற்கு இணையாக நிர்வாக கட்டமைப்புகளை கொண்டு செயல்பட வேண்டிய வக்ஃப்  வாரியங்கள் சாதாரண பஞ்சாயத்து அலுவலங்கள் போல செயல்படுகின்றன என்றால், அதன் முக்கியத்துவம் அறியாமல் வக்ஃப் வாரியங்களை முழுமையாக இஸ்லாமிய சமூகம் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கிறது என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.

 

Section 4 (2) of the Muslim Women (Protection of rights on Divorce) Act, 1986 ன் படி வக்ஃப் வாரியம் விதவைகளுக்கு மாதம் மாதம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும். அதன்படி தமிழ்நாடு வக்ஃப்  வாரியம் வருடம் 67800/- ரூபாய் செலவிடுகிறது.

 

தமிழகம் முழுவதும் நம் இஸ்லாமிய சமூகத்தில் வறுமையில் வாடும் விதவைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு அவர்களுக்கு கண்ணியமாக வாழ தேவையான பராமரிப்பு தொகையை பெற்று கொடுக்க நாம் முயற்சிக்க வேண்டும் . இதன் மூலம் பள்ளிவாசல்களில் பிச்சை கேட்டு நிற்கும் அநாதை பெண்களுக்கு, நல்வழி பிறக்கும்.

 

பணி ஓய்வு பெற்ற மார்க்க அறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்க ஓய்வூதிய திட்டம் 1981 உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2600 மார்க்க அறிஞர்களுக்கு  ஓய்வூதியம் வழங்க தீர்மானிக்கப்பட்டு இருந்தாலும் 1350 மார்க்க அறிஞர்கள் மட்டுமே இதுவரை மாத ஓய்வூதியத் தொகை பெற்று வருகிறார்கள்.

 

ஆக்கரமிப்பில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்டு, குடியிருப்பு வீடுகளாக மாற்றியமைத்து குறைந்த வாடகைக்கு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வழங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு வக்ஃப் சட்டத்தையும், வக்ஃப் வாரியங்களையும் பாதுகாக்க வேண்டும்.

 

உடனே செய்யவேண்டியவை

 

1) ஒவ்வொரு வக்ஃப் நிர்வாகமும் தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட வக்ஃபு சொத்துகளின் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் . ஆவணங்கள் முறையாக பராமரிக்காமல் இருக்கும் வக்ஃப் நிர்வாகங்கள் ஆவணங்களை தேடி கண்டுபிடித்து அதை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

2) ஒவ்வொரு வக்ஃப் நிர்வாகமும் தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்டு இருக்கும் வக்ஃப்பின் அசையா சொத்துகளுக்கு வேலி அல்லது கான்கிரீட் சுற்று சுவர் கட்டவேண்டும்.

 

3) ஒவ்வொரு வக்ஃப் நிர்வாகமும் தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட வக்ஃப் நிலங்களில் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருக்கும் வக்ஃப் சொத்துகளை பட்டியலிடவேண்டும். அந்த சொத்துக்கள் யாரால் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது ஆக்கிரமிப்பின் தன்மைப் பற்றி தெரிந்துக்கொண்டு அதை மீட்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

 

4) ஒவ்வொரு வக்ஃப் நிர்வாகமும் தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்டு இருக்கும் வக்ஃப் சொத்துகளில் உள்ள வாடகைத்தாரர்கள் முறையாக வாடகை தருகிறார்களா? வாடகையின் அளவு நியாயமானதாக இருக்கிறதா? என்பதை தெரிந்து அதை முறைப்படுத்த வேண்டும்.

 

5) ஒவ்வொரு வக்ஃப் நிர்வாகமும் தங்களுடைய நிர்வாகம் முறையாக செயல்படுகிறதா? கணக்கு வழக்குகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? நிர்வாகிகள் தேர்வு முறையாக நடைபெறுகிறதா? வெளிப்படை தன்மையோடு நிர்வாகம் செயல்படுகிறதா? என்று உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

 

6) ஒவ்வொரு வக்ஃப் நிர்வாகமும் தங்களுடைய வக்ஃப் நிர்வாகத்திற்கு உட்பட்ட அசையா சொத்துகளின் மதிப்பை உயர்த்தவும், வருமானத்தை பெருக்கவும், பயன்படுத்தப்படாமல் இருக்கும் வக்ஃப் சொத்துகளில் இருந்து வருமானம் வரும் கடைகள், மாற்றும் குடியிருப்பு வீடுகள், கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை உருவாக்கிட முன்வரவேண்டும்.

 

தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தாமல் கிடக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் வக்ஃப் நிலங்களில் தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று குடியிருப்பு காலனிகளை ஏற்படுத்தி, வீடில்லாத ஏழை இஸ்லாமிய மக்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி தருவதற்கும், கல்வி நிலையங்கள் கட்டுவதற்கும், மருத்துவமனைகள் கட்டுவதற்கும் முன்வரவேண்டும்.

 

7) ஒவ்வொரு வக்ஃப் நிர்வாகமும் தங்கள் மஹல்லாவில் உள்ள விதவைகள் முதியோர்கள் ஆதரவற்றவர்களுக்கு வக்ப்  வாரியம் மூலம் மாத உதவித்தொகை பெற்றுத்தருவதற்கு முயற்சி மேற்கொள்ளவேண்டும்.

 

இன்ஷா அல்லாஹ், நாமும் இறைவனுக்காக வக்ஃப் வழங்கும் வள்ளல்களாக வேண்டும். மேலும், நம் முன்னோர்கள் நமக்களித்த வக்ஃப் சொத்துக்களை பாதுகாத்து, அதற்குரியவர்களுக்கு செலவழிக்கப்பட முயற்சிக்க வேண்டும்.  வக்ஃப் சொத்துள்ள ஒவ்வொரு நிர்வாகமும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

வல்லோன் அல்லாஹுத்தஆலா, இந்திய வக்ஃப் சொத்துக்களை முழுமையாக பாதுகாத்து, அதை இயலாதோருக்கு முறையாக பயன்படுத்தும் ஆற்றல் மிக்கவர்களாக நம்மை ஆக்குவானாக! ஆமீன்!

 

(இதிலுள்ள பல தகவல்கள் இணையத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...