நட்புக்காக
إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا
الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ
நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனது தூதரும், எவர் இறைநம்பிக்கை கொண்டு தொழுகையை கடைப்பிடித்து ஸக்காத் (எனும் கட்டாயக் கொடையை) கொடுத்து (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) அடிபணிந்து வருகின்றார்களோ அவர்கள்தான். திருக்குர்ஆன்:- 5:55
ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை
நண்பர்கள் தினம்
உற்ற நட்புகள் ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட்டு வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும் வல்லமை மிக்கவை. நட்பு என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியமாகும். பிறரிடம் நட்பு கொள்ளாத மனிதர்கள் எவரும் இருக்க முடியாது.
பெற்றோர், மனைவி, பிள்ளைகள், உறவினர்களிடம் கூட சொல்ல முடியாத விஷயங்களை தன் உண்மை நண்பனிடம் பகிர்ந்துகொள்ளலாம். அதன் மூலம் ஆறுதல் அடைந்துகொள்ளலாம். மனிதர்கள் தங்களுக்கு மத்தியில் ஏற்படுத்திக் கொள்ளும் தோழமைக்கு இஸ்லாம் அதிக முக்கியத்துவம் தருகிறது.
நட்பு என்பது சிரித்து மகிழவும், வெறுமனே சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்துகொள்ள மட்டுமல்ல.
குழப்பத்தில் நம்மை தெளிய வைக்கவும், நாம் பயப்படும்போது நமக்கு தைரியம் சொல்லவும், நாம் ஏமாறாமல் இருக்க எச்சரிக்கை செய்யவும், நாம் இல்லாதபோது நம்மை நினைக்கவும், நமக்காக பிரார்த்திக்கவும், நாம் மறந்ததை நமக்கு நினைவுபடுத்தவும், அசாதாரணமான உதவிகளை நமக்குச் செய்யவும், நாம் தவறு செய்தால் அதை பிற மக்களின் கண்களை விட்டும் மறைத்து நமக்கு புத்திமதி சொல்லவும், நமது இரகசியங்களை பாதுகாக்கவும், நாம் வாழ்க்கையில் உயரும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளவும், நாம் அழும்போது நம்மை சிரிக்க வைக்கவும் தயாராக இருப்பவர்களே உண்மையான நண்பர்கள் ஆவார்கள். இது போன்ற நட்பின் வட்டாரம் நண்பர்களின் பட்டாளம் தான் உயிரோட்டம் உள்ளதாகும்.
"நட்பு ஒரு காற்று மாதிரி. அது இருப்பது நமக்கு தெரியாது. ஆனால், அது இல்லாமல் நம்மால் இருக்கமுடியாது" என்றான் ஒரு கவிஞன்.
தன்னைவிட செல்வாக்கில், பதவியில், பணத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றவர் என்றால் அவரைத் தேடிச்சென்று நட்பு பாராட்டுவது இன்று அதிகரித்து வருகிறது. நட்புக்கு செல்வாக்கு, பதவி, பணம் போன்ற மேல் பூச்சுகளும் கவர்ச்சிகளும் தேவையே இல்லை.
அழகிய உதாரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالْجَلِيسِ السَّوْءِ كَمَثَلِ صَاحِبِ الْمِسْكِ، وَكِيرِ الْحَدَّادِ، لاَ يَعْدَمُكَ مِنْ صَاحِبِ الْمِسْكِ إِمَّا تَشْتَرِيهِ، أَوْ تَجِدُ رِيحَهُ، وَكِيرُ الْحَدَّادِ يُحْرِقُ بَدَنَكَ أَوْ ثَوْبَكَ أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيثَةً ) நல்ல நண்பருக்கு உதாரணம், கஸ்தூரி விற்பவரை போன்றவராவார்.. உமக்கு அதை அவர் தரலாம். அல்லது அதை அவரிடம் நீ வாங்கலாம். அல்லது அவரிடமிருந்து நறுமணத்தையேனும் பெறலாம். கெட்ட நண்பருக்கு உதாரணம், இரும்பு பட்டறையில் ஊதுபவன் போன்றவராவார். உமது ஆடையை அவர் எரித்து விடலாம். அல்லது (அவரிடமிருந்து) துர்வாடையையாவது அடைந்தே தீருவாய். அறிவிப்பாளர்:- அபூ மூசா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2101, முஸ்லிம்-5124
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நண்பர்களை தேர்ந்தெடுக்கும்
முறையை அழகிய உதாரணம் கூறி எளிதாக புரிய வைக்கிறார்கள். நல்ல நண்பர்களுக்கு
முன்மாதிரி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மற்றும் நபித்தோழர்களும் ஆவார்கள்.
நபித்தோழர்களின் தரம்
ஹதீஸ்துறை நிபுணர் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, "இஸ்லாமிய வரலாற்றில் நபித்தோழர்களில் முஆவியா (ரலி) அவர்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டவர். ஆனால், உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் எந்த மனிதராலும் விமர்சிக்கப்படாத அப்பழுக்கற்ற மாமனிதர். இந்த இருவரில் எவர் சிறந்தவர்?" என்று வினவினார்.
அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள் முஆவியா (ரலி) அவர்கள் போருக்கு செல்லும்போது அவரின் குதிரையின் காலடியில் இருந்து கிளம்பும் தூசிக்குக்கூட உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் சமமாக மாட்டார். காரணம், முஆவியா (ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் தோழமை பெற்றவர். உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் அந்த உயரிய நபித்தோழமை எனும் பாக்கியம் பெறவில்லை. எனவே, எவ்வளவுதான் சிறப்பானவர்களாக இருந்தாலும் நபித்தோழர்களின் அந்தஸ்தைப் பெற முடியாது" என்று பதிலளித்தார்கள்.
சட்ட மேதை இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் ஐம்பதாவது வயதில், "உங்களுக்கு வயதென்ன?" என்று ஒருவர் கேட்டார். இமாமவர்கள், "இரண்டு" என்று பதிலளித்தார்கள். காரணம், "நான் அபூ ஜஅஃபர் (ரலி) அவர்களின் தோழமையில் இரண்டு ஆண்டுகள் கழித்தேன். அந்த பொற்காலத்தைத் தான் எனது வாழ்நாளாக கருதுகிறேன்" என்றார்கள்.
இஸ்லாமியப் பார்வையில் நாய் ஓர் அசுத்த பிராணியாகும். மனிதன் மற்றும் ஜின் இனம் மட்டுமே சொர்க்கம் செல்வார்கள். இறைநம்பிக்கையை காப்பாற்றிக்கொள்ள மலை குகைக்குள் தஞ்சமடைந்த இளைஞர்களோடு ஒரு நாயும் சேர்ந்து கொண்டு சென்றதால் அந்த நாயும் சொர்க்கம் செல்லும் என்கிறது ஒரு நபிமொழி.
நல்லோர்களின் தோழமை மறுமையில் சொர்க்கத்திற்கும், இறைஉவப்பையும் அடைவதற்குமான வழியாகும்.
"நல்ல நண்பனை இழக்கும்போது
நாம் சிறிது செத்துப் போகிறோம்" என்பது ஒரு பழமொழி. அதுபோல்தான் அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் மரணித்தபோது நபித்தோழர்கள் சிறிது செத்துப் போனார்கள்.
பிரார்த்தனை செய்வோம்
என் இரட்சகனே! நீ எனக்கு அறிவை வழங்குவாயாக! மேலும், நல்லோர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! திருக்குர்ஆன்:- 26:83
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் அடிக்கடி கீழ்காணும் முறையில் பிரார்த்திப்பார்கள்: ( اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ
عَمَلٍ يُقْرِّبُ إِلَى حُبِّكَ ) "இறைவா! உனது நேசத்தையும், உன்னை நேசிப்போரின் நேசத்தையும், உனது நேசத்தின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கும் நற்செயல்களின்
பக்கமும் எனக்கு நேசத்தை ஏற்படுத்துவதையும் கேட்கிறேன்!"
ஹுரைஸ் பின் கபீஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் மதீனா நகருக்கு வந்தபோது, ( اللَّهُمَّ يَسِّرْ لِي جَلِيسًا صَالِحًا فَجَلَسْتُ إِلَى أَبِي هُرَيْرَةَ رضي الله عنه ) "இறைவா! எனக்கு நல்ல நண்பர் ஒருவரை எளிதாக கிடைக்கச் செய்வாயாக!" என்று பிரார்த்தித்தேன். அதன் விளைவாக நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்களின் நட்பு கிடைத்தது நூல்:- நசாயீ-461, இப்னுமாஜா
நல்ல நண்பர்கள் கிடைப்பது
கொஞ்சம் சிரமம்தான். அதனால் தான் என்னவோ இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை
"பிரண்ட்ஷிப் டே" கொண்டாடிவிட்டு அவரவர் வேலையை கவனிக்க தொடங்கிவிட்டனர்.
தராதரம் வேண்டும்
இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். மேலும் (சொல்லிலும், செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள். திருக்குர்ஆன்:- 9:119
"உண்மையாளர்டன் இருங்கள்" என்ற இந்த திருவசனம் கூறுவதின் கருத்து, நல்லவர்கள் உலகம் உள்ளளவும் இருப்பார்கள். முன் சென்ற காலத்தில்தான் நல்லவர்கள் இருந்தனர், இப்போதெல்லாம் நல்லவர்கள் இல்லை. காலம் கெட்டுவிட்டது என்று புலம்பத் தேவையில்லை. நல்லவர்கள் எக்காலமும் இருப்பார்கள். ஆனால், அவர்களைத் தேடிச் சென்று நட்புக்கொள்வது நமது பொறுப்பு.
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تُصَاحِبْ إِلاَّ مُؤْمِنًا وَلاَ يَأْكُلْ طَعَامَكَ إِلاَّ تَقِيٌّ ) இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறு எவரையும் நீ தோழமைகொள்ள வேண்டாம். உனது உணவை இறையச்சம் உள்ளவரை தவிர வேறு எவரும் உண்ண வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூ சயீத் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4832, திர்மிதீ
தொழில் ரீதியாக, சமூக ரீதியாக, சந்தர்ப்ப ரீதியாக நாம் நூற்றுக்கணக்கான நண்பர்களை பெற்றிருக்கலாம். அது தவறல்ல. இந்த நபிமொழியின் கருத்து தீங்கிழைக்காத இறைநிராகரிப்பாளர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்திருக்கக்கூடாது என்பதல்ல.
மாறாக, ஆத்மார்த்தமானவர்கள் இதயத்திற்கு மிக நெருக்கமானவர்கள் என்று நமக்கு சிலர்தான் இருக்கமுடியும். அதிலும் எந்த மனிதர்களின் நடத்தையில் இறையச்சமும், நல்லொழுக்கமும் முழுக்க முழுக்க நிறைந்திருக்குமோ அவர்களிடம் மட்டும்தான் நட்பு ரீதியாக ஆழ்ந்த உறவுகள் இரகசிய தொடர்புகள் வைத்துக்கொள்ள வேண்டும். இவர்களுடன் மட்டுமே மகிழ்ச்சியை மனப்பூர்வமாக பகிர்ந்து கொள்ளவும் அல்லது நம் துன்பங்களைச் சொல்லி ஆறுதல் பெறவும் வேண்டும்.
ஒருவருடன் சேர்ந்து
உண்பதாலும் பருகுவதாலும் உளரீதியான ஒரு தொடர்பு ஏற்படுகிறது. இத்தகைய தொடர்பு ஓர் இறைநம்பிக்கையாளருடன்
ஏற்படுவதின் மூலம் இம்மை மறுமை வாழ்வுக்கான முன்னேற்றங்கள் ஏற்படும்.
ஒழுக்கமும் சீர்திருத்தமும்
பெறுவதற்காக நல்ல மனிதர்களுடன் நட்பு கொள்வது மாபெரும் பலனைத் தரும். நல்ல மனிதர்களின்
சொல்லும் செயலும் சிறந்த நூலை விடவும் சிறந்த சொற்பொழிவை விடவும் வீரியமிக்கவை.
வெகுவாய் தொற்றக்கூடியது
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ ) ஒருவன் அவனது நண்பனின் மார்க்கத்தில் உள்ளான். எனவே, நண்பனாக எவனைத் தேர்ந்தெடுப்பது என்பதை உங்களில் ஒருவர் சிந்திக்கட்டும். நூல்:- அபூதாவூத்-4833, திர்மிதீ-2378
"உன் நண்பனைப் பற்றி சொல். நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்" ( Tell me about your friend. I'm talking about you ) என்றான் ஒரு மேலைநாட்டு அறிஞன்.
நாம் யாரிடம் நட்பு கொள்கிறோமோ அவனுடைய உணர்வுகள், தேட்டங்கள், சிந்தனை நம்மிடம் வந்துவிடுகின்றன. அவன் நல்லவனாக இருந்தால் நற்பண்புகளும் தீயவனாக இருந்தால் தீய பண்புகளும் நம்மை தொற்றிக் கொள்கின்றன. எனவே நாம் நட்பு கொள்ளும்போது யோசித்து நட்பு கொள்ள வேண்டும் என்கிற மேற்காணும் நபிமொழி.
"தொற்றுநோய்" என்ற சொல் உண்டு. ஆனால், யதார்த்தம் என்னவெனில் நோய்களைவிட பண்புகள் வெகுவாய் தொற்றக்கூடிய ஆற்றல் மிக்கவை. அதுவும் நல்ல பண்புகளைவிட தீய பண்புகள் விரைவாக தொற்றும்.
பளிங்கு கற்கள் போல் தூய்மையுடன் இருக்கின்ற பலர், சேருகின்ற சேர்க்கையால் புகைபடிந்து போவதை பார்க்கலாம்.
மனிதன் பிறக்கும் போதே புகை, மது, மாது, சூதாட்டம் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகுவதில்லை. மாறாக, தீய பழக்கங்களுடன் நட்பு கொள்ளும்போதுதான் இத்தீய பழக்கங்களுக்கு மனிதன் அடிமையாகிவிடுகிறான். காலப்போக்கில் அதனால் வாழ்க்கையில் உடல் நலத்தையும், நிம்மதியையும் தொலைத்துவிடுகிறான். "நண்பர்களால் தான் நான் கெட்டுப் போனேன்" என்று பலரும் புலம்புவதை கேள்விப்பட்டிருப்போம்.
நல்ல நண்பர்கள் வாய்த்தவர்களோ வாழ்க்கையில் முன்னேறும் ஆசையை முறுக்கிவிட்டுக்கொண்டு நற்செயலில் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு செல்கின்றனர்.
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். திருக்குர்ஆன்:- 5:2
"நல்லவர்களுடன் நட்புக் கொள்வதே நற்செயலாகும்" என்கிறது ஒரு நபிமொழி.
எவரிடமும் நட்புக் கொள்வதில் மூலம் நமது கல்வியிலும் இறையச்சத்திலும் மறுமை நாளின் சிந்தனைகளும் அதற்காக நற்செயல் செய்வதிலும் முன்னேற்றம் இருக்குமோ அவரிடம் மட்டுமே நட்புக் கொள்வது சிறந்தது. மடையன், தீய பண்புள்ளவன், உலக பற்றுள்ளவன், மார்க்க கடமைகளை முறையாக நிறைவேற்றாதவன் நூதனத்தை செய்பவன் (பித்அத்வாதி) ஆகியோரிடம் நட்பு கொண்டால் நற்செயலில் ஆர்வம் குறைந்து, தீய செயல்கள் அதிகமாகி, மறுமைநாளில் புலம்பும் அவலநிலை ஏற்படும் என்கிறது திருமறை.
என்னுடைய தூக்கமே! (பாவம் செய்யும்படி தூண்டிய) இன்னவனை நான் என்னுடைய நண்பனாக ஆக்கிக்கொள்ளாமல் இருந்திருக்க வேண்டாமா? நல்லுபதேசம் என்னிடம் வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் என்னை திருப்பிவிட்டானே! அந்த ஷைத்தான் மனிதனுக்கு பெரும் சதிகாரனாக இருந்தானே! (என்றும் புலம்புவான்). திருக்குர்ஆன்:- 25:28, 29
இளைஞர்கள் தமக்கென
"கேர்ள் பிரண்ட்" வைத்துக்கொள்வதும் இளம் பெண்கள் "பாய் ஃபிரண்ட்"
வைத்துக் கொள்வதும் கலாச்சார சீரழிவாகும். ஒரு ஆண் ஒரு பெண்ணையும், ஒரு பெண் ஆணையும் நட்பு கொள்ளும்போது அங்கு உண்மையான
நட்பு மலர்வதில்லை. ஒரு ஆணும் பெண்ணும் இயல்பாக பழகுவதை நட்பாக ஒருபோதும் எடுத்துக்கொள்ள
முடியாது. ஏனெனில், பாலியல் விபத்துக்கள்
அந்நட்பில் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
நம்பிக்கை வேண்டும்
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. குறைஷியரில் சிலர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் விரைந்து வந்து, "(மிஃராஜ் பயணம் குறித்து) உம்முடைய தோழரைப் பற்றி ஏதேனும் தெரிந்து கொள்ள உமக்கு விருப்பமுள்ளதா? அவர் ஒரே இரவில் (ஜெருசலமில் உள்ள) பைத்துல் மக்திசிற்கு சென்று விட்டு மக்கா திரும்பி விட்டதாகக் கூறுகிறார்" என்றனர். அதைக் கேட்டு அபூபக்ர் (ரலி) அவர்கள், ( أَوَ قَالَ ذَلِكَ ) "இதை அவர் தான் சொன்னாரா?" என்று கேட்க, அவர்கள் "ஆம்" என்றனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ( فَأَشْهَدُ لَئِنْ كَانَ قَالَ ذَلِكَ لَقَدْ صَدَقَ ) "அவர் அப்படிச் சொல்லியிருந்தால் நிச்சயமாக அது உண்மையாகத்தான் இருக்கும் என உறுதி கூறுகிறேன்" என்று கூறினார்கள்.
குறைஷியர், "ஒரே இரவில் ஷாம் (ஃபலஸ்தீன்) நாட்டுக்குச் சென்றுவிட்டு விடிவதற்குள்ளாக மக்கா திரும்பிவிட்டதாக அவர் கூறுவதை நீர் உண்மை என கருதுகிறீரா?" என்றனர். அபூபக்ர் (ரலி) அவர்கள், ( نَعَمْ، إِنِّي أُصَدّقُهُ بِأَبْعَدَ مِنْ ذَلِكَ أُصَدّقُهُ بِخَبَرِ السَّمَاءِ ) "ஆம்! இதைவிடப் பாரதூரமான விஷயங்களில்கூட அவரை நான் நம்புகிறேன். அவருக்கு (தினமும் வானத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் - அலை அவர்கள் கொண்டு) வரும் வான் செய்திகளையும் நான் நம்புகிறேன்" என்று கூறினார்கள்.
அபூசலமா (ரஹ்) அவர்கள்
கூறினார்கள். இந்நிகழ்ச்சியை ஒட்டியே அபூபக்ர் (ரலி) அவர்கள் "அஸ்ஸாதிக்"
(அதிகம் உண்மைப்படுத்துபவர்) என அழைக்கப்பட்டார்கள். நூல்:- தலாயிலுந் நுபுவ்வா இமாம்
பைஹகீ, தஃப்சீர் இப்னு கஸீர்
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் மிஃராஜ் பயணம் முடித்துவிட்டு வந்து, அதைப் பற்றி மக்காவாசிகளிடம் கூறினார்கள்.
அதை அவர்கள் நம்ப மறுத்தனர். மக்காவாசிகளில் சிலர் நபியவர்களின் உற்றத் தோழர் அபூபக்ர்
(ரலி) அவர்களிடம் இதைப்பற்றி ஆச்சரியமாக கூறினார்கள். ஆனால், அபூபக்ர் (ரலி) அவர்களின் மனம் அது குறித்து ஆச்சரியப்படாமல்,
உண்மையென உடனே நம்பியது. இதுவே
உண்மையான நட்பின் அடையாளம்.
"அவநம்பிக்கை முன் வாசல் வழியே நுழைகிறபோது, அன்பு புறவாசல் வழியே சென்றுவிடும்" என்றான் ஓர் அறிஞன்
நல்ல நட்புக்கு நம்பிக்கை மிக முக்கியம். நம்பிக்கையும் நெருக்கமும் நட்பின் முக்கிய அடையாளங்கள் எனலாம். இந்த இரண்டும் இருந்தால் சந்தேகமே வராது.
இடையில் இருப்பவர்கள் இழுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். இவர்களுக்கு இடம் கொடுக்கவே கூடாது. நண்பன் நம்மைப் பற்றி தவறாகவே சொல்லி இருந்தாலும், அவனது சூழ்நிலை எப்படி இருந்திருக்குமோ என்னமோ என்று நம் மனம் ஒரு காரணத்தை கண்டுபிடித்து சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லது நாம் கேள்விப்பட்டதை நண்பனிடம் நேரடியாக போட்டு உடைத்து, "நீ இப்படியெல்லாம் சொல்லி இருக்கமாட்டாய் என்று எனக்குத் தெரியும்" என்று சொல்லி பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
இவன் ஏன் இப்படி நடந்துகொண்டான்? என்று மனதுக்குள் ஒரு கேள்வி எழுமெனில், அந்த நட்பே சந்தேகத்திற்குரியதாகிவிடும். சந்தேகம் வந்தால் அது சரியான நட்பாகாது.
ஆறுதல் கூறுதல்
அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஹிஜிரத் பயணத்தின்போது வழியில்) பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர் மலைக்) குகையில் (தங்கி) இருந்தேன். நான் தலையை உயர்த்தியபோது (எங்களைத் தேடி வந்த) கூட்டத்தாரின் பாதங்கள் என் (தலைக்கு) மேலே தெரிந்தன. நான், ( يَا نَبِيَّ اللَّهِ، لَوْ أَنَّ بَعْضَهُمْ طَأْطَأَ بَصَرَهُ رَآنَا ) "நாயகமே! அவர்களில் எவராவது தம் பார்வையைத் தாழ்த்தி (குகைக்குள் உற்றுநோக்கி)னால் நம்மைப் பார்த்துவிடுவாரே! (இப்போது என்ன செய்வது?)" என்று கூறினேன்.
நபியவர்கள், ( اسْكُتْ يَا أَبَا بَكْرٍ، اثْنَانِ اللَّهُ ثَالِثُهُمَا ) “அமைதியாய் இருங்கள்; அபூபக்ரே! (நாம்) இருவர்; நம்முடன் அல்லாஹ் மூன்றாமவன். (அவன் நம்மைக் காப்பாற்றுவான்)" என்று (ஆறுதல்) கூறினார்கள். நூல்:- புகாரீ-3922, முஸ்லிம்-4748
ஹிஜ்ரத் பயணத்தின்போது அருமை நாயகம் (ஸல்) அவர்களும் அருமை தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களும் மக்காவிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள ஸவ்ர் எனும் குகையில் மூன்று நாட்கள் ஒளிந்திருந்தார்கள். அவர்கள் இருவரையும் தேடி வந்த எதிரிகள் குகையின் வாசல் வரை வந்துவிட்டார்கள். தாழ்வாகவும் உள்வாங்கியும் இருந்த அக்குகையின் தலைவாசலை எவரும் குனிந்து பார்த்தால் உள்ளே இருப்பவர்களைக் கண்டுவிடலாம். அபூபக்ர் (ரலி) அவர்கள் இதை நபியவர்களுக்கு சுட்டிக்காட்டியபோது, நபியவர்கள் "நம் இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றான்; அவன் நம்மைக் காப்பான்; கவலைப்பட வேண்டாம்" எனத் தம் தோழருக்கு ஆறுதல் கூறினார்கள்.
உபகாரம் செய்தல்
இம்ரான் பின் மூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். எனது நண்பர்களின் தேவைகளை பூர்த்திசெய்வது என்னைப் பொறுத்தவரை ஏழைகளுக்கு உதவுவதைவிட மிகவும் மேலானதாகும்.
கைஸமா பின் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் தமது சொத்தில் இருந்து தமது நண்பர்களுக்கு இரண்டு லட்சம் தங்கக்காசுகளை கொடுக்க வேண்டும் என்று (வஸிய்யத் எனும்) இறுதிவிருப்பம் தெரிவித்துவிட்டு மரணமடைந்தார்கள். நூல்:- அல்இஃக்வான்
நண்பன் உதவி நாடி நம்மிடம் வருவதற்கு முன்பே குறிப்பறிந்து வலிய சென்று உதவ வேண்டும். அவன் என்னிடம் உதவி கேட்டால் மட்டுமே நான் உதவி செய்வேன் என்று இறுமாப்போடு இருப்பது உண்மை நட்புக்கு உகந்ததல்ல.
நட்பில் பரந்த எண்ணம்
மற்றும் தாராளத்தன்மை இருக்க வேண்டும். சுயநலம் மற்றும் குறுகிய எண்ணங்களிலிருந்து
விடுபட்டதாக இருக்க வேண்டும். இதுதான் நட்பு நலமாக வளர தேவையான முதல் நிபந்தனையாகும்.
அன்பை விதைத்து தான் அன்பைப் பெற முடியும்.
நட்பு என்பது பகிர்ந்து கொள்வது. அது ஒரு வழிப்பாதை அல்ல. ஒருவருக்கு நாம் நண்பர் ஆகிவிட்ட பின்னர், அவரை நன்றாகப் புரிந்துக்கொள்ள வேண்டும். தன் சுதந்திரத்தை இழக்காமல் ஒற்றிடமாய் இருக்க வேண்டும். என்னுடைய முன்னேற்றத்தில் என் நண்பர் மிகுந்த அக்கறை உள்ளவர் என்ற எண்ணத்தை நண்பரின் மனதில் ஏற்படுத்த வேண்டும். நட்பு என்பது முகமாக இருக்க வேண்டும். ஒருபோதும் முகமூடியாக இருக்கக் கூடாது.
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் தம் தோழர்கள் தமக்கு உபகாரம் செய்யும்போது தாமும் அவர்களுக்கு உபகாரம் செய்வார்கள்.
இதுவே நபியவர்களின் பண்பாகும்.
நீ வளமாக இருக்கும்போது
உன் நண்பர்கள் உன்னை புரிந்து கொள்வார்கள். ஆனால், நீ வறுமையாக இருக்கும்போது உன் நண்பர்களை நீ புரிந்து
கொள்ளலாம்" போன்ற புன்மொழிகள் வரத் தொடங்கிவிட்டன.
பாராட்டும் கண்டிப்பும்
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் பல நேரங்களில் தம் தோழர்களின் நற்பண்புகளையும் செயல்பாடுகளையும் பாராட்டிய
ஊக்கப்படுத்தியுள்ளார்கள். அதுபோல் சில நேரங்களில் தம் தோழர்களின் தவறுகளை நேருக்கு
நேராக கண்டித்து, அவர்கள் திருந்திக்கொள்ள
வழிவகுத்து கொடுத்துள்ளார்கள்.
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
( أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ وَأَشَدُّهُمْ فِي أَمْرِ
اللَّهِ عُمَرُ وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ وَأَعْلَمُهُمْ بِالْحَلاَلِ وَالْحَرَامِ
مُعَاذُ بْنُ جَبَلٍ وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ وَأَقْرَؤُهُمْ أُبَىُّ بْنُ
كَعْبٍ وَلِكُلِّ أُمَّةٍ أَمِينٌ وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ
الْجَرَّاحِ )
எனது சமுதாயத்தாரிலேயே
எனது சமுதாயத்தினரின் மீது அதிக இரக்கம் காட்டுபவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆவார்.
அல்லாஹ்வின் மார்க்க விஷயத்தில் மிக்க உறுதி காட்டுபவர் உமர் (ரலி) அவர்கள் ஆவார்.
உண்மையான வெட்கமிக்கவர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆவார். அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) தடுக்கப்பட்டவை
(ஹராம்) தொடர்பாக நன்கறிந்தவர் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் ஆவார். வாரிசுரிமைச்
சட்டங்களை நுட்பமாக அறிந்தவர் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஆவார். மிகச்சிறந்த குர்ஆன்
ஓதும் கலை வல்லுனர் உபைய்யி பின் கஅப் (ரலி) அவர்கள் ஆவார். ஒவ்வொரு சமுதாயத்துக்கும்
(அமீன்) நம்பகமானவர் உண்டு. இந்த சமுதாயத்தின் நம்பகமானவர் அபூஉபைதா பின் ஜர்ராஹ்
(ரலி) அவர்கள் ஆவார். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3713, இப்னுமாஜா-151, முஸ்னது அஹ்மத்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்கள் தன் வேலைக்காரரை தகாத வார்த்தையில் திட்டியபோது "உம்மிடம் இன்னும் அறியாமைக்கால பழக்கம் இருக்கிறது" என்று கடிந்து கொண்டார்கள். சில தோழர்களின் தவறுகளை உணர்த்த சலாமுக்கு பதில் சொல்வதை சில நேரம் நிறுத்தியுள்ளார்கள். கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் போருக்கு செல்லாமல் தவறிழைத்துவிட்டதால் அவரிடம் ஐம்பது நாள்கள் வரை நபியவர்கள் தங்களின் அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டார்கள்.
நண்பனின் சிறப்பியல்புகளை பலரும் பாராட்ட வேண்டும். அவனின் தவறுகளை தனியே சுட்டிக்காட்ட வேண்டும். நண்பனுக்கு அந்த நேரத்தில் எரிச்சல் ஏற்பட்டாலும் அனுபவபூர்வமாக அவன் உண்மையை உணரும்போது நமக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்று தானே சொன்னான் என்று உணர்வான். அப்போது நட்பு பலப்படும்.
நண்பன் தனது குறைகளை சுட்டிக் காட்டுகின்றபோது அதை மகிழ்வோடு ஏற்று தம்மை திருத்திக் கொள்கின்ற பக்குவம் வேண்டும். அதற்காக எப்போது பார்த்தாலும் குறைகளை மட்டுமே நொய் நொய் என்று சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கக்கூடாது. அப்படி இருந்தால் இவனுக்கு வேறு பிழைப்பே இல்லை என்று எரிச்சலோடு நம்மை ஒதுக்கி விடுவார்கள்.
பரிந்து பேசுவார்கள்
எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை. அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை. நாங்கள் (உலகத்துக்கு) மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் இறைநம்பிக்கையாளர்களாகி விடுவோமே! (என்றும் கூறுவார்கள்.) திருக்குர்ஆன்:- 26:100,101,102
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேற்காணும் திருவசனங்களுக்கு இவ்வாறு விளக்கம்) கூறினார்கள்.
ஒரு மனிதர் சொர்க்கத்தில்
நுழைந்த பிறகு, ( مَا فَعَلَ صَدِيقِي فَلَانٌ ) “என்னுடைய இந்த நண்பன் நிலை என்ன ஆனது?” என்று கவலை
கொள்கிறார். ஆனால் அவரது நண்பனோ நரகத்தில் இருக்கிறான். இதை அறிந்த சர்வ வல்லமையுள்ள
அல்லாஹ் ( أَخْرِجُوا لَهُ صَدِيقَهُ
إِلَى الْجَنَّةِ ) "அவரது நண்பனை அவருக்காக சொர்க்கத்திற்கு அழைத்து
வாருங்கள்" என்று வானவர்களிடம் கூறுகிறான். அதனால் நரகத்தில் எஞ்சியவர்கள்: (
فَمَا لَنَا مِنْ شَافِعِينَ وَلَا صَدِيقٍ حَمِيمٍ
) "எங்களுக்கு (இதுபோன்ற) எந்த பரிந்துரையாளர்களும் இல்லை, நெருக்கமான நண்பரும் இல்லையே என்று புலம்புவார்கள்".
நூல்:- தஃப்சீர் அல்பஙவீ
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( لَا تَصْحَبْ إِلَّا مَنْ أَعَانَكَ عَلَى ذِكْرِ اللَّهِ ) அல்லாஹ்வை நினைப்பதற்கு உதவியாக இருப்பவரோடு மட்டுமே நீ நட்பு வை! நூல்:- அஸ்ஸுஹ்து இமாம் அபீதாவூத் 1/126
திருக்குர்ஆன் விரிவுரையாளர்
பேரறிஞர் ஹசன் அல்பசரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ( اِسْتَكْثِرُوا مِنَ الْأَصْدِقَاءِ الْمُؤْمِنِينَ فَإِنَّ لَهُمْ شَفَاعَةً
يَوْمَ الْقِيَامَةِ ) உலகில்
இறைநம்பிக்கையுள்ள (முஸ்லிமான நல்ல) நண்பர்களையே அதிகமாக்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால்
அவர்களால் (உங்களுக்கு) மறுமைநாளில் பரிந்துரை உள்ளது. நூல்:- தஃப்சீர் அல்பஙவீ
பாதுகாத்துக்கொள்ள
வேண்டும்
எனக்கு வந்த கேடே!
(என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக்கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா? திருக்குர்ஆன்:- 25:28
அலீ (ரலி) அவர்களிடம்
“கெட்ட நண்பன் யார்?” என்று கேட்கப்பட்டது . அன்னார் ( اَلْمُزَيِّنُ
لَكَ مَعْصِيَةَ اَللَّه ) "இறைவனுக்கு மாறுசெய்வதை
உனக்கு அழகுபடுத்துபவன்" என்று கூறினார்கள். நூல்:- மன் லா யஹ்ழுருகுல் பகீஹ்:
4/381
ஜுனைத் அல்பக்தாதி
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். எனது ஞானாசிரியர்
ஸிர்ரீயுல் ஸிக்தீ (ரஹ்) அவர்களது இறுதிநேரத்தில், என் முகத்தை அவர்களது முகத்தோடு வைத்து அழ ஆரம்பித்தேன்.
எனது கண்ணீர்த்துளிகள் அவர்களது கன்னத்தில் விழுந்தன. அன்னார் “யாரது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “தங்களின் பணியாள் ஜுனைத்” என்று பதிலளித்தேன்.
அன்னார், “மர்ஹபா” என்றார்கள். நான், “எனக்கு ஏதேனும் இறுதி உபதேசம் செய்யுங்கள்'' என்றேன். அன்னார், “அல்லாஹ்விற்கு வழிப்பட்டு நடக்காதவர்களின் தோழமையை விட்டும் உம்மைப் பாதுகாத்துக் கொள்வீராக! மற்றவர்களுடைய உறவுக்காக அல்லாஹ்வின் உறவை முறித்துக் கொள்ளாதே” என்ற இறுதி உபதேசம் செய்தார்கள்.
இறைவனுக்காக
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: أَيْنَ الْمُتَحَابُّونَ بجَلَالِي؟ الْيَوْمَ أُظِلُّهُمْ فِي ظِلِّي يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلِّي ) அல்லாஹ் மறுமைநாளில், "என்னை கண்ணியப்படுத்துவதற்காக நட்பு கொண்டவர்கள் எங்கே? எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது நிழலில நிழலளிக்கிறேன்" என்று கூறுவான். நூல்:- முஸ்லிம்-5015
இறை திருப்திக்காகவே பிறரிடம் தூய்மையான தோழமையை வளர்த்துக் கொள்ளுமாறும் அதன் பலன் மறுமை நாளில் வெற்றியாகும் என்கிறது இஸ்லாம்.
நல்ல நட்புக்கு சில அடையாளங்கள் உண்டு: புதிதாக அறிமுகமாகும் நண்பரிடம் முதலில் பேசுங்கள். அடுத்த விவாதியுங்கள். விவாதம் மிகச் சிறந்தது. விவாதத்தில் அவருடைய கருத்து அதைச் சொல்லும் முறை உணர்ச்சிவசப்படுகிறரா? நிதானமாக இருக்கிறாரா? என்றெல்லாம் பார்த்துவிடலாம். நகைச்சுவை என்ற பெயரில் இவர்களை சீண்டினால் தவறாக எடுத்துக்கொண்டு ஒதுங்கி விடமாட்டார்கள். இவர்களை வரச் சொல்லிவிட்டு காக்க வைத்து விட்டால், பொறுமையிழக்கவோ, கோபப்படவோ மாட்டார்கள். இவர்களுக்கு கொஞ்சம் செலவு வைத்தால் வெறுக்கமாட்டார்கள். உதவி கேட்டால் ஓட்டம் எடுக்காமல் மனதிருப்தியோடு செய்வார்கள்.
இந்த குணம் இல்லாதவர்கள் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்லர். அவர்களும் நமது நண்பர்கள் தான். ஆனால், அவர்களைப் பார்க்கும்போது புன்னகை காட்டும் அளவிற்கு நிறுத்திக் கொள்ளலாம். அவர்களிடம் நெருக்கத்தோடு காலம் காலமாக தொடர்கின்ற நட்புக்குரியவர்கள் அல்லர்.
நமக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியமானதல்ல. ஆனால், நம்மிடம் நட்பு வைத்திருப்பதை பெருமையாக எண்ணி மகிழ்ச்சியடைபவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையே மிக மிக முக்கியமானதாகும். நமக்கும் நல்லோரின் நட்பு கிடைத்து அதன் மூலம் வெற்றிப் பெற அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment