Search This Blog

Thursday, 25 November 2021

அன்புள்ளம் கொண்டவனே!

 

அன்புள்ளம் கொண்டவனே!

 

كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ

 

உங்களுடைய இறைவன் (உங்களுக்கு) அருள்புரிவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். திருக்குர்ஆன்:- 6:54

 

அல்லாஹுத்தஆலா தமது அடியார்கள் மீது நிகரற்ற அன்புடையோன் ஆவான் என்கிறது இஸ்லாம்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ لَمَّا قَضَى الْخَلْقَ كَتَبَ عِنْدَهُ فَوْقَ عَرْشِهِ إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِ ) "அல்லாஹ் (தனது படைப்புக்களைப்) படைக்கும் பணியை நிறைவு செய்தபோது தன்னிடமுள்ள அரியாசனத்திற்கு மேலே, "என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது." என்று எழுதினான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-7422, முஸ்லிம்-5307

 

மறைத்து வைத்திருந்தேன்

 

மறுமைநாளில் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையே நடக்கும் இரகசிய உரையாடல் (நஜ்வா) குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாவது. இறைநம்பிக்கையாளரை அல்லாஹ் தன் பக்கம் நெருங்கி வரச்செய்து அவர் மீது தனது திரையைப் போட்டு மறைத்து விடுவான். பிறகு அவரிடம், ( أَتَعْرِفُ ذَنْبَ كَذَا أَتَعْرِفُ ذَنْبَ كَذَا ) "நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?" என்று கேட்பான். அதற்கு அவர், ( نَعَمْ أَىْ رَبِّ ) "ஆம், என் இறைவா நினைவிருக்கிறது" என்பார். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக்கூறி) இவ்வாறாக அவர் (தாம் செய்த) அனைத்துப் பாவங்களையும் ஒப்புக்கொள்ள செய்வான்.

 

அந்த இறைநம்பிக்கையாளர், இதோடு நாம் ஒழிந்தோம் என்று கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன், ( سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا، وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ ) “இவற்றையெல்லாம் உலகில் பிறருக்குத் தெரியாமல் நான் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகிறேன்” என்று கூறுவான். அப்போது அவருடைய நற்செயல்களின் பதிவேடு அவர் வசம் கொடுக்கப்படும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2441

 

நாம் செய்கின்ற சிறிய சிறிய பாவங்கள் ஒவ்வொன்றுக்கும் நம்மை இறைவன் தண்டிப்பதாக இருந்தால் நாம் தாங்கவே முடியாது. (நாம் பாவமன்னிப்புக் கேட்காமலேயே) நம்முடைய எத்தனையோ குற்றங்களை அந்தக் கருணையாளன் மன்னிக்கின்றான். பெரும் பாவங்களை பாவ மன்னிப்பின் மூலம் அவன் மன்னிக்கின்றான். உலகில் சில சோதனைகளைக் கொடுத்து சிறிய பாவங்களுக்கு அதைப் பரிகாரமாக ஆக்குகின்றான். இத்தனைக்குப் பிறகும் சில குற்றங்களுக்கு மறுமையில் தண்டனை கிடைக்கிறது எனில், அது படைப்பினங்களின் குறைவே தவிர படைத்தவனின் குறை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

சற்றுப்பொறு!

 

அவன் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். திருக்குர்ஆன்:- 7:167

 

அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ( صَاحِبُ الْيَمِينِ يَكْتُبُ الْخَيْرَ، وَهُوَ أَمِيرٌ عَلَى صَاحِبِ الشِّمَالِ، فَإِنْ أَصَابَ الْعَبْدُ خَطِيئَةً قَالَ لَهُ: أَمْسِكْ، فَإِنِ اسْتَغْفَرَ اللَّهَ تَعَالَى نَهَاهُ أَنْ يَكْتُبَهَا، وَإِنْ أَبَى كَتَبَهَا ) வலப்பக்கத்திலுள்ள வானவர் நன்மைகளை எழுதுகிறார். அவர் இடப்பக்கத்திலுள்ள வானவர் மீது நம்பிக்கைக்குரிய கண்காணிப்பாளராக இருக்கிறார். மனிதன் ஏதேனும் தவறைச் செய்துவிட்டால் இடப்பக்கத்திலுள்ள வானவரிடம் எழுதுவதைச் சற்று நிறுத்து! என்று வலப் பக்கத்திலுள்ள வானவர் கூறுகிறார். உயர்ந்தோன் அல்லாஹ்விடம் அந்த மனிதன் மன்னிப்புத் தேடினால் அதனை எழுத வேண்டாம் என்று அவரைத் தடுத்து விடுவார். அவன் மன்னிப்புத் தேட மறுத்தால் அதனை அவர் எழுதிப் பதிவுசெய்வார். நூல்:- தஃப்சீர் இப்னுகஸீர் காஃப் வசனம்-18

 

மனிதன் நன்மை செய்தால் உடனே அதை பதிவிடப்படுகிறது. ஆனால் அவன் தவறு செய்துவிட்டால் அதை உடனே பதிவிடாமல், அவன் அதற்காக வருந்தி பாவமன்னிப்பு கோருகிறானா என்று சிறிது நேரம் அவகாசம் தரப்படுகிறது. அதாவது அவன் தம்மிடம் பாவமன்னிப்பு கோரிட வேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கிறான். அல்லாஹ் மனிதன் மீது வைத்திருக்கும்  கருணைக்கு இச்செய்தி சான்றாகும்.

 

என்னை மட்டுமே நம்பியவர்கள்

 

ஒருமுறை இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம், "இறைவா! நல்லடியார்கள் உன்னிடம் பிரார்த்திக்கும்போது, அவர்களுக்கு நீ எப்படி பதிலளிப்பாய்?" என்று வினவினார்கள். அதற்கு அல்லாஹ், "(லப்பைக் அப்தீ) என் அடியானே! இதோ நான் ஆஜராகி விட்டேன் என்று பதிலளிப்பேன்" என கூறினான். பிறகு பிறகு மூசா (அலை) அவர்கள், இறைவா! தீயவர்கள் உன்னிடம் பிரார்த்திக்கும் போது அவர்களுக்கு நீ எப்படி பதிலளிப்பாய்?” என்று வினவினார்கள். அதற்கு அல்லாஹ், "(லப்பைக் அப்தீ லப்பைக் அப்தீ லப்பைக் அப்தீ) என் அடியானே! இதோ நான் ஆஜராகி விட்டேன். என் அடியானே! இதோ நான் ஆஜராகி விட்டேன். என் அடியானே! இதோ நான் ஆஜராகி விட்டேன். என்று பதிலளிப்பேன் என  கூறினான்.

 

அப்போது மூசா (அலை) அவர்கள், இறைவா! உனது நல்லடியார்களுக்கு ஒருமுறை பதிலளிக்கிறாய். ஆனால், உனக்கு மாறுசெய்யக்கூடிய தீய அடியார்களுக்கு மூன்று முறை பதிலளிக்கிறாய் ஒன்றும் புரியவில்லையே?” என்று வினவினார்கள். அதற்கு அல்லாஹ், “எனது நல்லடியார்கள் அவர்களின் நற்காரியங்களை முன்வைத்து பிரார்த்திக்கிறார்கள். ஆனால், எனக்கு மாறுகின்ற தீயவர்களிடம் பெரிதாக எந்த நற்செயல்களும் இல்லாததால் அவர்கள் என்னை மட்டுமே நம்பி பிரார்த்திக்கிறார்கள். அவர்களை நான் விட்டுவிட முடியுமா! என்ன? என்று தனது கருணையின் விசாலத்தை வெளிப்படுத்தும் விதமாக பதிலளித்தான்.

 

சயீது பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது. (13:6) இந்த வசனம்  அருளப்பெற்றபோது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْلَا عَفْو اللَّه وَتَجَاوُزه مَا هَنَأَ أَحَدً الْعَيْشَ ) அல்லாஹ்வின் பெருந்தன்மையும் மன்னிப்பும் இல்லையென்றால் வாழ்க்கையில் யாரும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் நூல்:- தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்

 

அன்பின் ஒரு பாகம்

 

(நபியே) எனது அடியார்களுக்கு அறிவிப்பீராக! நிச்சயமாக நான் தான் மகா மன்னிப்பாளன், மகாக் கருணையாளன்.   திருக்குர்ஆன் 15:- 49,50

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَلَقَ اللَّهُ مِائَةَ رَحْمَةٍ فَوَضَعَ وَاحِدَةً بَيْنَ خَلْقِهِ وَخَبَأَ عِنْدَهُ مِائَةً إِلاَّ وَاحِدَةً ) அல்லாஹ் அன்பை நூறு பாகங்களாகப் படைத்தான். அவற்றில் ஒன்றை தனது படைப்பினங்களிடையே  வைத்தான். தொண்ணூறு ஒன்பது பாகங்களைத் தன்னிடமே பத்திரப்படுத்திக் கொண்டான். நூல்:-  முஸ்லிம்-5311

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின்னு, மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை ஒன்றன் மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விசேஷமாக) அன்பு காட்டுவான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5312

 

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள். அந்தக் கைதிகளில் ஒரு பெண் (தனது மார்பில் சுரந்த பாலை ஊட்டுவதற்காகத் தனது குழந்தையைத்) தேடினாள். (குழந்தை கிடைக்கவில்லை. எனவே,) கைதிகளிடையே எந்தக் குழந்தையைக் கண்டாலும் அதை (வாரி) எடுத்து, தனது வயிற்றோடு அனைத்துப் பாலூட்டினாள். (தனது குழந்தை கிடைத்ததும் அதையும் நெஞ்சணைத்துப் பாலூட்டினாள்.)

 

அப்போது எங்களிடம் நபியவர்கள், ( أَتَرَوْنَ هَذِهِ الْمَرْأَةَ طَارِحَةً وَلَدَهَا فِي النَّارِ ) "இந்தப் பெண் தனது குழந்தையைத் தீயில் எரிவாளா, சொல்லுங்கள்?" என்றார்கள். நாங்கள், ( لاَ وَاللَّهِ وَهِيَ تَقْدِرُ عَلَى أَنْ لاَ تَطْرَحَهُ )"இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எந்த நிலையிலும் அவள் எறிய முடியாது" என்று சொன்னோம். அப்போது நபியவர்கள், ( لَلَّهُ أَرْحَمُ بِعِبَادِهِ مِنْ هَذِهِ بِوَلَدِهَا ) "இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5999, முஸ்லிம்-5315

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் தம்மோடு ஒரு குழந்தை இருக்க, அப்போது அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவர் அக்குழந்தையைத் தன்னுடன் அணைத்துக் கொண்டார். இதைக் கண்ட நபியவர்கள், ( أَتَرْحَمُهُ‏؟ ) "அக்குழந்தையின்மீது நீர் பாசம் காட்டுகிறாரா?" என்று கேட்க, "ஆம்" என்று அவர் கூறினார். அதற்கு நபியவர்கள், ( فَاللَّهُ أَرْحَمُ بِكَ مِنْكَ بِهِ، وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ ) "அக்குழந்தையின் மீது உமக்குள்ள இரக்கத்தைவிட அல்லாஹ் உம்மீது இரக்கம் காட்டுவான். அவன் அன்பாளர்களுக்கெல்லாம் மிகுந்த அன்பாளன்" என்று கூறினார்கள். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-377

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இவ்வாறு அல்லாஹ், மனிதர்கள் மீது வைத்துள்ள அன்பின் ஆழத்தை விவரித்துக் கொண்டேயிருப்பார்கள்.

 

இவ்வுலகில் வாழும் அனைத்தும் நேசிக்கும் பண்புள்ளவையாக இறைவன் படைத்துள்ளான். மனிதர்கள் முதல் பறவைகள், மிருகங்கள் இப்படி அனைத்து படைப்புகளும் தங்களுக்குள் அன்பை, நேசத்தை வெளிப்படுத்தும் ஜீவன்களாகவே உள்ளன.

 

இவ்வுலகில் மனிதர்களின் மூலம் ஏற்படும் அன்பை விட படைத்தவனின் அன்பை பெறுவது மிகப்பெரும் பாக்கியமாகும். அல்லாஹ்வின் அன்பு கிடைத்துவிட்டால் இந்த உலகில் அனைத்தும் கிடைத்துவிட்டது என்றே பொருளாகும்.

 

அல்லாஹ் மிகுந்த சகிப்புத்தன்மை உள்ளவனாகவும் தமது அடியார்கள் மீது மிகுந்த கருணையுள்ளவனாகவும் இருப்பதால் தான் மனிதர்கள் செய்யும் பல அக்கிரமங்களை பொறுத்துக்கொள்கிறான். இல்லையெனில் மனிதர்களை தண்டிப்பதற்கு அவனுக்கு ஒரு நொடி போதும். அவர்களை அழித்து விடுவான். இதை அறியாதோர் தான், தன்னை யாராலும் தடுக்க முடியாது என்றெண்ணி, ஆணவத்தால் ஆடுகிறார்கள்.

 

நீங்கள் அவர்களைப் படைத்திருந்தால்...

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதன் அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் வசதி வாய்ப்புகளையும் அனுபவித்துக் கொண்டு அவனது கட்டளைகளுக்கு மாறாகவும் முரணாகவும் செயற்படுவதற்கு எதிராக படைப்பினங்கள் தினமும் குமுறுகின்றன. அவை, “மனிதனை அழித்துவிடவா?” என அல்லாஹ்விடம் அனுமதியும் கோருகின்றன. ஆனால் அல்லாஹ், அவர்களை விட்டுவிடுங்கள். நீங்கள் அவர்களைப் படைத்திருந்தால் அவர்கள்மீது நீங்கள் கருணை காட்டியிருப்பீர்கள். (நீங்கள் படைக்காததால் அவர்கள்மீது உங்களுக்கு கருணை ஏற்படவில்லை.)  நூல்:- முஸ்னது அஹ்மத் 

 

அல்லாஹ், தன் கட்டளைகளுக்கு மாறாகவும் முரணாகவும் தன் படைப்பான மனிதன் செயற்பட்ட போதிலும்கூட அதற்கு எதிராக அவனை உடனடியாக தண்டிக்க விரும்பவில்லை என்பது தெளிவாகின்றது. அந்தளவுக்கு அல்லாஹ் மனிதன் மீது அன்பு, கருணை, இரக்கம் காட்டக்கூடியவனாக உள்ளான். இருந்தும்கூட மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதனை அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். இதுதான் பெரும் கவலைக்குரிய விஷயமாகும்.

 

சொர்க்கம் செல்ல

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், (فَإِنَّهُ لَنْ يُدْخِلَ الْجَنَّةَ أَحَدًا عَمَلُهُ ) "யாரையும் அவரது இறைவழிபாடு ஒருபோதும் சொர்க்கத்தில் நுழைவிக்காது என்று கூறினார்கள். மக்கள், "தங்களையுமா, நாயகமே? என்று கேட்டார்கள். அண்ணலார், ( وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِيَ اللَّهُ مِنْهُ بِرَحْمَةٍ  ) "என்னையும்தான்;  அல்லாஹ் தனது கருணையால் என்னை அரவணைத்துக் கொண்டாலே தவிர" என்று கூறினார்கள். நூல்:-  புகாரீ-6464, முஸ்லிம்-5430

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். முற்காலத்தில் ஓர் நல்லடியார் மலையின் உச்சியில் 500 ஆண்டு காலம் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதிலேயே கழித்து வந்தார். அல்லாஹ், மறுமைநாளில் மக்களோடு மக்களாக நின்றிருந்த அந்த நல்லடியாரை நோக்கி, ( أَدخِلوا عَبدِيَ الجنَّةَ بِرَحمَتي ) “இதோ என்னுடைய இந்த அடியானை என் கருணையினால் அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்என்று வானவர்களிடம் கட்டளையிடுவான்.

 

அதற்கு அவர் ( يا ربِّ بَل بِعَملي ) என் இறைவா! (நான் செய்த என்னுடைய வணக்க வழிபாட்டின் துணைகொண்டு என்னை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வானவர்களுக்கு நீ ஆணையிடுவாய் என்றல்லவா நான் எதிர் பார்த்தேன். ஆனால், நீயோ உன் கருணையைக்கொண்டு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஆணையிடுகின்றாய்! அப்படியானால்,) என்னுடைய (500 ஆண்டு கால) வணக்க வழிபாடுகள் என்னவாயிற்று?” என்று வினவுவார். இவ்வாறு அல்லாஹ்வும் மூன்று முறை கூற, இவ்வாறே அவரும் மூன்று என்று வினவுவார்.

 

அப்போது, அல்லாஹ் வானவர்களிடம், ( قايِسُوا عَبْدي بنِعمَتي عليهِ وبِعَمَلِه ) இந்த அடியானுக்கு நான் வழங்கிய அருட்கொடைகளையும், இந்த அடியான் செய்த வணக்க வழிபாடுகளையும் கணக்குப் பாருங்கள்என்று கட்டளையிடுவான். வானவர்கள் ( فتوجَدُ نِعمةُ البَصرِ قد أحاطَتْ بِعِبادةِ خَمسِ مِئةِ سنةٍ وبَقيَتْ نِعمةُ الجَسدِ فَضلًا عَليهِ ) (இறைவா!) இவரின் 500 ஆண்டு கால வணக்க வழிபாடுகள் அனைத்தும், நீ அவருக்கு வழங்கிய கண்பார்வை எனும் அருட்கொடைக்கு ஈடாகி விட்டது. மேலும், நீ வழங்கிய மற்ற அருட்கொடைகளுக்கு ஈடாக வேறெந்த வணக்க வழிபாடுகளும் அவரின் பதிவேட்டில் இல்லைஎன்று கூறுவார்கள்.

 

உடனே அல்லாஹ் வானவர்களிடம் ( أَدخِلوا عَبْدِيَ النَّارَ ) இதோ இந்த அடியானை நரகத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்என்பான். அவர் நரகத்திற்கு இழுத்து செல்லப்படுவார். வழி நெடுக அவர், ( رَبِّ، بِرَحمتِك أَدخِلني الجنَّةَ ) இறைவா! உனது கருணையினால் என்னை சுவனத்தில் நுழையச்செய்!என அலறுவார்.

 

அந்த அலறலைக் கேட்டதும் அல்லாஹ் வானவர்களிடம் அந்த அடியானை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்!என்பான். அவர் அல்லாஹ்வின் திருமுன் நிறுத்தப்படுவார்.

 

அப்போது அல்லாஹ்: ( يا عَبدي، مَن خَلَقَك ولَم تَكُ شيئًا؟ ) “என் அடியானே! ஒன்றுமே இல்லாமல் இருந்த உன்னை படைத்தது யார்? என்று வினவுவான். அடியான்: ( أنت يا ربِّ ) “என் இறைவா! நீ தான்” என்று பதிலளிப்பார்.

 

மீண்டும் அல்லாஹ், ( مَن قوَّاك لِعِبادةِ خَمسِ مِئةِ عامٍ؟ ) “என் அடியானே! என் அடியார்களிலேயே உனக்கு 500 ஆண்டு கால ஆயுளையும், வணக்க வழிபாடுகள் செய்கிற ஆற்றலையும் கொடுத்து, உன்னை வாழ வைத்தது யார்?” என்று வினவுவான். அடியான்: ( أنت يا ربِّ ) “என் இறைவா! நீ தான்” என்று பதிலளிப்பார்.

 

இறுதியாக அல்லாஹ் ( فذلكَ بِرَحمَتي، وبِرَحمَتي أُدخِلُك الجنَّةَ، أَدْخِلوا عَبدِيَ الجنَّةَ، فنِعمَ العَبدُ كُنتَ يا عَبدي! ) என் அடியானே! நீ அனுபவித்த அனைத்தும் என் கருணையின் மூலமாகத்தான் பெற்றாய்! இப்போதும், நீ என் கருணையினால் தான் சொர்க்கத்திற்கும் செல்ல இருக்கின்றாய்! அடியானே! என் அடியார்களில் நீ நல்லவனேஎன்று கூறி விட்டு வானவர்களை நோக்கி, இதோ இந்த என் அடியானை எனது கருணையினால் சொர்க்கத்திக்குள் கொண்டு போய் விட்டு விடுங்கள்!என்பான்.

 

இதை வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறிவிட்டு, ( إنَّما الأَشياءُ بِرَحمةِ اللهِ تَعالى يا مُحمَّد ) முஹம்மத் (ஸல்) அவர்களே! (ஓர் அடியானைச் சுற்றி ஈருலகிலும் நடைபெறும்) அனைத்துக்  காரியங்களும் அல்லாஹ்வின் கருணையினால் தான் அமையப் பெறுகின்றதுஎன்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்தத்ரக் ஹாகிம், சில்சிலத்து ளஈபா இமாம் அல்பானீ-1183


நம்மீது அளவற்ற பிரியம் கொண்ட அல்லாஹுத்தஆலாவின் மீது நாமும் பிரியம் கொண்டு,அவனுக்காகவே ஆசையோடும்ஆர்வத்தொடும் பல நல்லறங்கள் புரியவேண்டும். பிரியம் என்பது ஒருவழிப் பாதையல்ல. 

 

எனவே, நாம் பரிசுத்தமான முறையில் அல்லாஹுத்தஆலாவை நேசித்து வாழும் நல்லடியார்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்! 

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

கவனக்குறைவு

  கவனக்குறைவு   فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ (இந்தத்) தொழுகையாளிகளுக்கு கேடு தான். அவர்கள் தமது தொ...