Search This Blog

Sunday, 2 May 2021

அழகிய கோரிக்கை

 

அழகிய கோரிக்கை


  قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ


அவர்கள், "எங்கள் தந்தையே! எங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக நாங்கள் தவறிழைப்பவர்களாக இருந்தோம்" என்று கூறினார்கள்.     திருக்குர்ஆன்:- 12: 97


இது, ஹஜ் செய்ய புறப்படும் காலம். ஹஜ்ஜுக்கு செல்பவர்களிடம் அவர்களின் உறவினர் மற்றும் நண்பர்கள் தமக்காக பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்வது நபிவழியாகும். 


பொதுவாக வயதில் மூத்தவர்கள், ஆலிம்கள் மற்றும் பிறரிடம் தமக்காக பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்வது மார்க்கம் அனுமதித்த ஒன்றாகும். பிறரின் பிரார்த்தனையால் ஏற்றம் பெற்றவர்கள் பட்டியல் நீளமானது.


பெற்றோர்ஆசிரியர், பெரியோர், மார்க்க அறிஞர் ஆகியோர்களிடம் எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள் என்று பணிவுடன் உளப்பூர்மாக வேண்டிக்கொள்வது பணிவின் வெளிப்பாடாகவும், அழகிய குணமாகவும் இருக்கிறது. நாமும் பிறருக்காக பிரார்த்திப்பதின் மூலம் பிறர் நலன் நாடவேண்டும். பிறர் பிரார்த்தனையின் மூலம் ஈடேற்றம் பெற வாய்ப்பிருக்கிறது என இஸ்லாம் இயம்புகிறது.


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ دَعَا لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ ) ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், "ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப்போன்றே உனக்கும் கிடைக்கட்டும்!" என்று கூறுகிறார்.      அறிவிப்பாளர்:- அபூதர்தா (ரலி) அவர்கள்  நூல்:- முஸ்லிம்-5280


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ دَعْوَةٍ أَسْرَعُ إِجَابَةً مِنْ دَعْوَةِ غَائِبٍ لِغَائِبٍஒருவர் தம்முடன் இல்லாத மற்றொருவருக்காகப் பிரார்த்திக்கும் பிரார்த்தனையைப் போன்று, (இறைவனிடம்) வெகுவிரைவில் ஏற்கப்படும் பிரார்த்தனை வேறொன்றும் இல்லை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1903


கண்ணெதிரே இல்லாத ஒருவருக்காகவோ பலருக்காகவோ நாம் பிரார்த்திக்கும்போது, அதில் உள்ளார்ந்த ஓர் ஈடுபாடும் பொதுநலமும் இருக்கும். இதை அல்லாஹ் விரும்புகிறான். அதனால்தான், மற்றவர்களுக்காக நாம் கூறும் பிரார்த்தனையின் பலன், பிரார்த்திக்கும் நமக்கும் கிடைக்கிறது.


நமக்காக பிறர் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று எண்ணுவது போல், நாமும் பிறருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.


நாம் பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகச் சிறந்த நற்செயலாகும். அதை செய்யுமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு போதித்துள்ளார்கள். மற்றவர்களுக்காக நாம் செய்யும் இவ்விதமான பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் மிக எளிதில் ஏற்றுக்கொள்ள படுபவையாகும். அதன்மூலம் பிறருக்கு கெடுதல் செய்யும் எண்ணங்கள், சுயநலம் ஆகியவற்றை விட்டும் நமது ஆன்மாக்கள் பரிசுத்தமாகிறது. மேலும், நமக்கு மத்தியில் ஒருவர் மற்றவர் மீது அக்கறை காட்டுதல், இரக்கப்படுதல் ஆகிய உயரிய பண்புகள் உண்டாகிறது.


அருகில் இல்லாத ஒருவருக்காக மற்றொருவர் பிரார்த்தனை செய்கிறார் என்றால், அதில் கள்ளம் கபடம் இருக்காது; முகஸ்துதி இருக்காது; தூய எண்ணத்தோடு தமக்கு மட்டுமே தெரிகின்ற வகையில் அந்த பிரார்த்தனை இருக்கும். எனவே, விரைவாக அது ஏற்பட வாய்ப்பு அதிகம்.


புனிதப் பயணம்


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (எனது தந்தை)  உமர் (ரலி) அவர்கள் உம்ரா செல்வது தொடர்பாக கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரினார்கள். அப்போது அண்ணலார், ( أَيْ أُخَيَّ أَشْرِكْنَا فِي دُعَائِكَ وَلاَ تَنْسَنَا ) "என்னுடைய அன்புத் தம்பியே! உமது பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்துக்கொள்வீராக! எங்களை மறந்துவிடாதே!" என்று கூறினார்கள்.   நூல்:- அபூதாவூத்-1498திர்மிதீ-3475இப்னுமாஜா-2894முஸ்னத் அஹ்மத்


ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் ஷாம் (சிரியா) நாட்டிற்கு சென்றபோது (என் மாமனார்) அபூதர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மாமியார்) உம்மு தர்தா (ரஹ்) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், ( أَتُرِيدُ الْحَجَّ الْعَامَ ) "இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்கு செல்ல நாடியுள்ளீர்களா?" என்று கேட்டார். நான் "ஆம்" என்றேன். அதற்கு அவர்  கூறினார்: ( فَادْعُ اللَّهَ لَنَا بِخَيْر ) அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில், ( دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ "ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்கு செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது." என்ற நபிமொழியை எடுத்துரைத்தார். நூல்:- முஸ்லிம்-5281


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا لَقِيتَ الْحَاجَّ فَسَلِّمْ عَلَيْهِ وَصَافِحْهُ ، وَمُرْهُ أَنْ يَسْتَغْفِرَ لَكَ قَبْلَ أَنْ يَدْخُلَ بَيْتَهُ ، فَإِنَّهُ مَغْفُورٌ لَهُ ) நீங்கள் ஹஜ்ஜை முடித்துவிட்டு வந்தவரைச் சந்தித்தால் அவருக்கு சலாம் கூறுங்கள். மேலும், அவரை (முஸாஃபஹா எனும்) கைலாகு செய்யுங்கள். மேலும்அவர் தம்முடைய வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் உங்களுக்காக பாவமன்னிப்பு கோருமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில்அவர் பாவமன்னிக்கப்பட்டவர் ஆவார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்இப்னு ஹிப்பான், அல்ஃபிர்தௌஸ் இமாம் தைலமீஹைஸமீமஜ்மஉஸ் ஸவாயித்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَمْسُ دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ: وَدَعْوَةُ الْحَاجِّ حِينَ يَصْدُرُ ) ஐந்து சாரார்களின் பிரார்த்தனைகள் ஒப்புக்கொள்ளப்படுகின்றன. (அதில் ஒரு சாரார்,) ஹஜ்ஜுக்கு சென்றவரின் பிரார்த்தனை அவர் வீடு வந்து சேரும்வரை. அறிவிப்பாளர்:- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்  நூல்:- ஷுஅபுல் ஈமான் லில்பைஹகீ


உம்ராவுக்கு செல்ல இருந்த உமர் (ரலி) அவர்களிடம் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் "உம்ராவில் எனக்காக பிரார்த்தியுங்கள்" என்று கேட்டுக் கொண்ட இந்த ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர, மற்றபடி எந்த ஒரு தனி மனிதரிடத்திலும் நபியவர்கள் தமக்காக பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொண்டதில்லை. 


கண்மணி பெருமானார் செல்ல அவர்கள் கூறினார்கள். ( اَلْحُجَّاجُ وَالْعُمَّارُ وَفْدُ اللَّهِ إِنْ دَعَوْهُ أَجَابَهُمْ وَإِنِ اسْتَغْفَرُوهُ غَفَرَ لَهُمْ ) ஹஜ் செய்தவர்களும் உம்ரா செய்தவர்களும் அல்லாஹ்வின் தூதர்கள் ஆவர். அவர்கள் பிரார்த்தித்தால் அதை ஏற்றுக்கொள்ளப்படும். அவர்கள் பாவமன்னிப்பு கோரினால், அல்லாஹ் அவர்களை மன்னிப்பான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2892, தப்ரானீ, பைஹகீ


ஹஜ்உம்ரா செய்பவர்களை பயணம் அனுப்பும்போதுஉடன் சென்று வழியனுப்புதல்அவர்கள் திரும்புகையில் எதிர்கொண்டு வரவேற்றல் போன்ற பழக்கத்தை நம்முடைய மார்க்க அறிஞர்கள் கடைபிடித்து வந்துள்ளனர்.


மேலும், ஹஜ்ஜுக்கு உம்ராவுக்கு செல்ல இருப்பவரையும், அந்தக் கிரியைகளை சிறப்பாக முடித்துவிட்டு வந்தவரையும் சந்தித்து சலாம் கூறி, முஸாபஹா செய்து, நமக்காக அவர்களை பிரார்த்திக்கும்படி வேண்டிக்கொள்வது நபிவழியாகும். 


எனவே, ஹஜ், உம்ரா செய்ய இருப்பவர்கள் அல்லது செய்து முடித்தவர்கள் அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களாக இருக்கின்றனர். எனவே, அவர்களிடம் தமக்காக பிரார்த்திக்கும்படி வேண்டிக்கொள்வது நன்மையான காரியமாகும். நமக்காக அவர்கள் செய்யும் பிரார்த்தனையின் மூலம் நமது தேவைகள் நிறைவேறக் கூடும்.


இஸ்லாமாக...


(ஒருமுறை) அபூபக்ர் (ரலி) அவர்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, ( بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ وَهَذِهِ أُمِّي وَأَنْتَ مُبَارَكٌ فَادْعُهَا إِلَى اللَّهِ وَادْعُ اللَّهَ لَهَا عَسَى اللَّهُ أَنْ يَسْتَنْقِذَهَا بِكَ مِنَ النَّارِ ) "நாயகமே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இதோ இவர்கள் என் தாய் ஆவார்கள். நீங்கள் (அல்லாஹ்வின்) அருள்வளம் பெற்ற பெற்றவர்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ்வை நோக்கி அழையுங்கள். அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனைப் புரியுங்கள். அல்லாஹ் உங்கள் மூலம் அவர்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றக் கூடும்" என்று கூறினார். உடனே அண்ணலார், அவர்களுக்காக பிரார்த்தனைப் புரிந்து, அல்லாஹ்வை நோக்கி அழைத்தார்கள். அவர்கள் அதை ஏற்று இஸ்லாமாகிவிட்டார்கள்.         நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா


இறைநம்பிக்கையார்களாகிய நாம் இறைமறுப்பாளர்களிடம் இஸ்லாத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள, இறைவனிடம் பிரார்த்திக்கவும் வேண்டும். அதிலும் குறிப்பாக இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் அதிகம் பிரார்த்திக்க வேண்டும். பேச்சு சாதுர்யத்தால் மட்டும் மனித உள்ளத்தை மாற்ற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.


நோயாளி


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَعُودُ مَرِيضًا لَمْ يَحْضُرْ أَجَلُهُ فَيَقُولُ سَبْعَ مَرَّاتٍ أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ إِلاَّ عُوفِيَ ) ஒரு முஸ்லிமான அடியார் மரண நேரம் நெருங்காத ஒரு நோயாளியை நலம் விசாரிக்கச் சென்று, "மகத்தான அரியணையின் (அர்ஷின்) அதிபதியாகிய, மகத்தான அல்லாஹ்விடம் உமக்கு ஆரோக்கியமளிக்க வேண்டுகிறேன்" என்ற பிரார்த்தனையை ஏழு முறை ஓதினால் அவருக்கு நிவாரணம் வழங்கப்படாமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2009


அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நான் உடல்நலக்குறைவாக இருந்தேன். அந்நிலையில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்னை கடந்து சென்றார்கள். அப்பொழுது அண்ணலார் ( اَللَّهُمَّ عَافِهِ ) "இறைவா! இவருக்கு ஆரோக்கிய வாழ்வைக் கொடு!" என்று (எனக்காக) பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு நான் அந்த நோயால் அவதியுறவில்லை. நூல்:- திர்மிதீ-3477


சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க வந்து, ( اَللَّهُمَّ اشْفِ سَعْدًا ) "இறைவா! சஅதுக்கு நோயிலிருந்து குணமளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். நூல்:- புகாரீ-5675


ஜுஅய்த் இப்னு அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. "சாயிப் இப்னு யஸீத் (ரலி) அவர்களைத் தொண்ணூற்று நான்கு வயது உடையவர்களாக, அந்த வயதிலும் திடகாத்திரமானவர்களாக கூன் விழாமல் முதுகு நிமிர்ந்தவர்களாக கண்டேன். அதுப்பற்றி அன்னாரிடம் வினவப்பட்டது.                                                              


அன்னார், “எனக்குக் கேள்விப்புலன் மற்றும் பார்வைப் புலனின் நலம் (ஆகிய இந்த ஆரோக்கியம்) அல்லாஹ்வின் (தூதர் ஸல்) அவர்களின் பிரார்த்தனையால் தான் வழங்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிந்திருக்கிறேன்” என்றார்கள்.                                                                                          

ஜக்கரிய்யா பின் அதிய்யீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சல்த் பின் பிஸ்தாமி அத்தய்மிய்யீ (ரஹ்) அவர்கள் கண்ணில் நீர் இறங்கியதால் பார்வையற்றவராக ஆகிவிட்டார்கள். ஒரு நாள் வெள்ளிக்கிழமையன்று (ஜும்ஆக்கு பிறகு)  மக்கள் எல்லோரும் அமர்ந்து சல்த் பின் பிஸ்தாமி (ரஹ்) அவர்களுக்கு கண் பார்வை கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தனைச்  செய்தனர்.


சூரியன் மறைவதற்கு கொஞ்சம் முன்பாக சல்த் பின் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் தும்மினார்கள். அவர்கள் தும்மியவுடன் அவர்களுக்கு பார்வை கிடைத்துப் பார்க்க ஆரம்பித்தார்கள். அல்லாஹ் அன்னாருடைய பார்வையைத் திரும்ப கொடுத்து விட்டான். நூல்:- இப்னுஅசாகீர்                                                                              


உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ( إِذَا دَخَلْتَ عَلَى مَرِيضٍ فَمُرْهُ أَنْ يَدْعُوَ لَكَ فَإِنَّ دُعَاءَهُ كَدُعَاءِ الْمَلاَئِكَةِ )  "நீர் நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றால், அவரிடம் உமக்காகப் பிரார்த்திக்குமாறு கூறுவீராக! ஏனென்றால், அவருடைய பிரார்த்தனை வானவர்களின் பிரார்த்தனையைப் போன்றதாகும்" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-1431

 

வாழ்வு வளம்பெற...


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம், ( يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ادْعُ اللَّهَ لَهُ ) "நாயகமே! (இதோ) உங்கள் சேவகர் அனஸ். அவருக்காகப் பிரார்த்தியுங்கள்" என்றார். அண்ணலார், ( اَللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ )  "இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ள (ஆயுள் முதலான)வற்றில் வளம் சேர்ப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். நூல்:- புகாரீ-6344, முஸ்லிம்-4887


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டுகள் பணிவிடை செய்துள்ளார்கள். நபியவர்கள் இறந்தபோது அன்னாருக்கு வயது 20. அண்ணலார் பிரார்த்தித்தபடியே அனஸ் (ரலி) அவர்களின் செல்வம் பெருகிற்று. பஸ்ரா (இராக்) நகரில் அன்னாருக்கு ஒரு தோட்டம் இருந்தது. அது ஆண்டுக்கு இருமுறை மகசூல் அளித்துவந்தது. இதைப் போன்றே அன்னாருக்கு குழந்தைகளும் பேரக்குழந்தைகளுமாக சுமார் 120 பேர் இருந்தனர். அவர்களுடைய ஆயுளில் அல்லாஹ் அருள்வளம் செய்தான். அன்னார் 100 வயது வரை வாழ்ந்தார்கள். ஹிஜ்ரீ 91 ஆம் ஆண்டு இராக்கில் இருந்த தனது மாளிகையில் இறந்தார்கள். இராக்கிலுள்ள பஸ்ரா நகரத்தில் இறந்த கடைசி நபித்தோழர் அன்னார் தான். நூல்:-  உசுதுல் ஙாபா, உம்தத்துல் காரீ, இர்ஷாதுஸ் ஸாரீ


மதீனாவில் ஒரு பெண்மணி (திருமணம் முடித்து) முதலிரவுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்னர் இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களான அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களிடம் அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் புதுமணப் பெண்களுக்காக பிரார்த்தனை புரிவார்கள். நூல்:- முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா


புதுமணத் தம்பதிகள் இறைநெருக்கம் பெற்ற நல்லவர்களிடம் பெரியவர்களிடமும் பிரார்த்தனையை பெற்றுக் கொள்ள வேண்டும்.


நல்லடியார்களிடம்


உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் யமன் வாசிகளில் கரன் குலத்தைச் சேர்ந்த உவைஸ் (ரஹ்) அவர்களை சந்தித்து, "அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( يَأْتِي عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ )  '(உமரே!) யமன் வாசிகளில் கரன் குலத்தைச் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உம்மிடம் வருவார். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ்  ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றிவைப்பான். ஆகவே, அவர் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரி பிரார்த்திக்க வாய்ப்புக் கிட்டினால் அவரைப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்" என்று கூறினார்கள். ஆகவே, எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள் என்று வேண்டினார்கள். அவ்வாறே உவைஸ் (ரஹ்) அவர்களும் உமருக்காகப் பாவ மன்னிப்பு வேண்டி பிரார்த்தித்தார்கள்.     நூல்:- முஸ்லிம்-4971


உமர் (ரலி) அவர்கள் குழந்தைகளைக் கண்டால் தமக்காக பாவமன்னிப்பு கோரும்படி வேண்டுவார்கள். ஏனென்றால், நீங்களெல்லாம் பாவங்கள் அறியாத பரிசுத்த உள்ளம் கொண்டவர்கள் என்று அவர்களிடம் கூறுவார்கள்.  அபூஹுரைரா (ரலி) அவர்களும் குழந்தைகளைக் கண்டால் இவ்வாறே கூறுவார்கள்.


அப்துல்லாஹ் ரூமி (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், ( إِنَّ إِخوَانَكَ أَتُوكَ مِنَ البَصرَةِ لِتَدعُوَ اللّٰهَ لَهُم ) "உங்களது சகோதரர்களுக்காக அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காக பசராவிலிருந்து உங்களிடம் வருகை தந்துள்ளார்கள்" என்று கூறப்பட்டது. அப்போது அனஸ் (ரலி) அவர்கள், ( اَللّٰهُمَّ اغفِرلَنَا وَارحَمنَا وَآتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ )  "இறைவா! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் பாவமன்னிப்பை ஏற்பாயாக! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.     நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-633


உபகாரிகளுக்கு...


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒரு முறை) முஹாஜிர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து,  يَا رَسُولَ اللهِ ذَهَبَ الأَنْصَارُ بِالأَجْرِ كُلِّهِ‏ )‏  ) "நாயகமே! அன்சாரிகள் (எங்களுக்கு உபகாரம் செய்து) நன்மைகளை ஒட்டுமொத்தமாக ஈட்டிக் கொள்கின்றனர்" என்று கூறினார்கள். அண்ணலார், ( لاَ مَا دَعَوْتُمُ اللَّهَ لَهُمْ وَأَثْنَيْتُمْ عَلَيْهِمْ بِهِ‏ ) “அப்படியல்ல. அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்தித்துக் கொண்டும் அவர்களை புகழ்ந்து கொண்டும் இருக்கிறவரை, (உங்களுக்கும் அதே போன்ற நன்மைகள் கிடைக்கும்)” என்று கூறினார்கள்.        நூல்:- அபூதாவூத்-4812, திர்மிதீ-2411, அல்அதபுல் முஃப்ரத்-217


அன்சாரிகள், எவரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரும் அளவில் தியாகங்களை முஹாஜிர்களுக்கு செய்திருந்தார்கள். இந்நிலையில் அன்சாரிகளுக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகள் அளவுக்குத் தங்களுக்கு கிடைக்காது என்று முஹாஜிர்கள் நினைத்தார்கள்.


இதை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்தார்கள். முஹாஜிர்களே! நீங்கள் அவர்களின் சேவைகளை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அவற்றுக்காக அவர்களை பாராட்டியும், அவர்களுக்காக எந்நேரமும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டு இருந்தீர்களெனில் உங்களுக்கும் நன்மை கிடைக்காமல் போகாது. இல்லையெனில் உங்களுடைய அந்த உணர்வு சரியே என அண்ணலார் தெளிவுபடுத்தினார்கள்.


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. பள்ளிவாசலில் ஒரு மனிதர் குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பதைச் செவியுற்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( رَحِمَهُ اللَّهُ لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا آيَةً أَسْقَطْتُهَا فِي سُورَةِ كَذَا وَكَذَا ) "அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!" இன்ன இன்ன அத்தியாயங்களில் நான் மறந்து விட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவுபடுத்திவிட்டார்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6335


அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை என் தந்தை (புஸ்ர் பின் அபீபுஸ்ர்-ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு விருந்து கொடுத்தார்கள். விருந்து முடிந்த பிறகு என் தந்தை அண்ணலாரிடம், "எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். அப்போது அண்ணலார், ( اَللّهُمَّ بَارِكْ لَهُمْ فِيْ مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ ) "இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். நூல்:- முஸ்லிம்-4149, திர்மிதீ-3490


நமக்கு உபகாரம் செய்வோருக்கு நம்மால் முடிந்த அளவு அவர்களுக்கு பிரதி உபகாரமும் செய்ய வேண்டும். அவர்களின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கவும் வேண்டும்.


நிம்மதி அளிக்கும்


(நபியே! நீர்) அவர்களுக்காக (நல்லருள் வேண்டி)ப் பிரார்த்தனை புரிவீராக. நிச்சயமாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி அளிக்கும். திருக்குர்ஆன்:- 9:103


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெண் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம், ( يَا رَسُولَ اللَّهِ صَلِّ عليَّ وَعَلَى زَوْجِي ) "நாயகமே! எனக்காகவும் என் கணவருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார். அப்போது அண்ணலார், ( صَلَّى اللَّهُ عَلَيْكِ وَعَلَى زَوْجِكِ ) "அல்லாஹ் உமக்கும் உம்முடைய கணவருக்கும் அருள்புரிவானாக" என்று பிரார்த்தித்தார்கள்.        நூல்:- அபூதாவூத், தஃப்சீர் இப்னு கஸீர் அத்தவ்பா வசனம்-103


பெற்றோருக்கு


"என் இறைவா! நான் குழந்தையாக இருந்தபோது (மிக அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அருள் புரிவாயாக!" என்று நீங்கள் பிரார்த்தியுங்கள். திருக்குர்ஆன்:- 17:24


எங்கள் இறைவா! விசாரணை நடைபெறும் நாளில் எனக்கும் என் பெற்றோருக்கும் இறைநம்பிக்கை கொண்டோருக்கும் மன்னிப்பு வழங்குவாயாக! (என்று இப்ராஹீம் - அலை அவர்கள்  கூறினார்கள்.) திருக்குர்ஆன்:- 14:41


அபூ உசைத் (ரலி)  அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் நாங்கள் இருந்தபோது, பனூ சலமாக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ أَبَرُّهُمَا بِهِ بَعْدَ مَوْتِهِمَا )  "நாயகமே! என் பெற்றோர் இறந்த பின் அவ்விருவருக்கும் நான் நன்மை செய்வதற்கு வேறு ஏதேனும் கடமைகள் உண்டா?" என்று வினவினார். அண்ணலார், ( نَعَمِ الصَّلاَةُ عَلَيْهِمَا وَالاِسْتِغْفَارُ لَهُمَا ) "ஆம்! அவ்விருவருக்காகவும் நீ பிரார்த்தனை செய்வது, அவ்விருவருக்காகவும் நீர் மன்னிப்புக் கோருவது" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத் -5142, இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத், ரியாளுஸ்ஸாலிஹீன்-343


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اِنَّ العَبدَ لِیَمُوتَ وَالِدَاهُ فَلَا یَزَالُ یَدعُولَهُمَا وَیَستَغفِرُلَهُمَا حَتَّی یَکتُبَهُ اللّٰهُ بَارًّا ) ஒருவர் இறந்துபோன தன் பெற்றோருக்கு (நல்வாழ்வு கிடைப்பதற்காக) பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தால், அவர்களுக்காக பாவமன்னிப்பு கோரிக்கொண்டே இருந்தால், அல்லாஹ் அவரை நல்லடியார்களின் பட்டியலில் எழுதுகிறான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள்   நூல்:- மிஷ்காத்


பெற்றோர்கள் இருந்தாலும், இறந்து விட்டாலும் அவர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காக பிரார்த்திப்பது பிள்ளைகள் மீது கடமையாகும். மேலும், இறந்து போய்விட்ட நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்காகவும் அவ்வபோது பிரார்த்திக்க வேண்டும். நாம் இறந்தவர்களுக்காக பிரார்த்திப்பதின் மூலம் அவர்களின் அந்தஸ்து உயர்த்தப்படலாம். பாவங்கள் மன்னிக்கப்படலாம் என்கிறது இஸ்லாம்.


இறைநம்பிக்கையாளர்களுக்கு


எங்கள் இறைவா! எங்களையும் (மன்னிப்பாயாக!) இறை நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! திருக்குர்ஆன்:- 59:10


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் ஜனாசா தொழுகை தொழுதால் இறந்தவருக்காகத் தூய எண்ணத்துடன் பிரார்த்தனை செய்யுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-2784, இப்னுமாஜா-1486 இப்னு ஹிப்பான்


அன்னை உம்மு சலமா ரலி அவர்கள் கூறியதாவது. (என் முதல் கணவர்) அபூ சலமா (ரலி) அவர்கள் இறந்த செய்தியை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செவியுற்றதும், ( اَللَّهُمَّ اغْفِرْ لأَبِي سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ ) "இறைவா! அபூசலமாவை மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சி இருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.            நூல்:- முஸ்லிம்-1678


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் என்னுடன் தங்கவேண்டிய இரவில் என்னிடம் வந்தார்கள். தமது மேலாடையை களைந்து விட்டு ஒருக்களித்து படுத்திருந்தார்கள். சிறிது நேரம் கழித்து, (நான் உறங்கி விட்டதாக எண்ணிகொண்டு) மெதுவாக தனது மேலாடை மற்றும் காலணிகளை அணிந்து கொண்டு 'அல்பகீஉ' எனும் பொது மையவாடிக்கு சென்று, அங்கு நீண்ட நேரம் இருந்து மூன்று முறை கையை உயர்த்தினார்கள். பிறகு வீடு நோக்கித் திரும்பினார்கள்.


நான் அண்ணலாரிடம் இதைப்பற்றி வினவினேன். அண்ணலார், ( فَقَالَ إِنَّ رَبَّكَ يَأْمُرُكَ أَنْ تَأْتِيَ أَهْلَ الْبَقِيعِ فَتَسْتَغْفِرَ لَهُمْ )  "வானவர் ஜிப்ரீல் 'உம் இறைவன் உம்மை 'பகீஉ' (எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மண்ணறை) வாசிகளிடம் சென்று அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகிறான்' என்று கூறினார்" என்றார்கள். நூல்:- முஸ்லிம் 1774, நஸாயீ-3901


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனது சமுதாயத்தினர் கிருபை செய்யப்பட்டவர்கள். பாவியான நிலையில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டாலும், அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோரி கேட்கப்படும் பிரார்த்தனையின் மூலம் பாவங்கள் அழிக்கப்பட்டு பாவமில்லாதவர்களாய் தனது மண்ணறைகளை விட்டு வெளியேறுவார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ


உமர் (ரலி) அவர்கள்  "வழிமாறிச் செல்லும் உங்கள் சகோதரர் ஒருவரை நீங்கள் கண்டால் அவரைக் செம்மைப்படுத்தி (நேர்வழியில்) நிலைத்திருக்கச் செய்யுங்கள். அவருக்குப் பாவமன்னிப்பு வழங்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவருக்கு எதிராக ஷைத்தானுக்கு உதவுபவர்களாய் ஆகி விடாதீர்கள்" என்று (மக்களிடம்) கூறினார்கள்.             நூல்:- தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், அபூநயீம், ஹுல்யத்துல் அவ்லியா,  தஃப்சீர் இப்னுகஸீர் ஙாஃபிர் வசனம்-3


ஒருமுறை இறைவன் மூசா (அலை) அவர்களை நோக்கி, "பாவம் செய்யாத நாவினால் என்னிடம் பாதுகாவல் கொள்வீராக!" என்று கூறினான். மூசா (அலை) அவர்கள், "அத்தகைய நாவு என்னிடம் இல்லையே!" என்று கூறினார்கள். இறைவன், "அவ்வாறாயின் மற்றவர்களின் நாவால் என்னை அழைத்துப் பாதுகாவல் கோருவீராக!" என்று கூறினான். மூசா (அலை) அவர்கள், அது எப்படி?" என்று வியப்போடு வினவினார்கள். இறைவன், "அதுதான் பிறர் உமக்காக என்னிடம் இரவு பகலாக இறைஞ்சும் விதமாக நீர் நடந்து கொள்வதாகும்" என்று கூறினான்.


பிறருக்கு பயனளிக்கும் விதமாக நமது வாழ்வு அமைந்துவிட்டால், நமது நலனில் அக்கறை கொண்டு, நமக்காக உளப்பூர்வமாக பிரார்த்திக்கும் ஏராளமாக நாவுகளை சம்பாதித்துவிடலாம்.


வாழ்க்கையில் நாம் நல்லோர்களின் பிரார்த்தனையைப் பெற்று, நாமும் பிறர் நலன் நாடி பிரார்த்திக்கக்கூடிய நன்மக்களாக வாழ அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்:9840535951

 

2 comments:

  1. ما شاء الله
    جزاكم الله احسن الجزاء

    ReplyDelete
  2. அல்லாஹ் உங்களுக்கு பேரருள் புரிவானாக
    உங்களின் கல்வியறிவை மென்மேலும் வளமாக்குவானாக🤲
    உங்களைக் கொண்டும்
    உங்கள் கல்வியறிவைக் கொண்டும் உம்மத்தை இறை பொருத்தம் பெறச்செய்வானாக🤲

    ReplyDelete

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...