Search This Blog

Saturday, 31 October 2020

எச்சரிக்கை செய்வோம்

 

எச்சரிக்கை செய்வோம்

وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ


(நபியே) உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!      திருக்குர்ஆன்:- 26:214


குடும்பத் தலைவன் குடும்ப உறுப்பினர்களிடம் அதாவது, மனைவி பிள்ளைகள் மற்றும் தனது கட்டுப்பாட்டின் கீழ்இருப்பவர்களிடம், இஸ்லாமிய நல்லொழுக்க வாழ்வின் சிறப்புகளைப் பற்றியும், இறைகடமைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியத்தைப் பற்றியும்  அன்பாக எடுத்துரைக்க வேண்டும். தமது குடும்பத்தினர் இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக செயல்படும்போது எச்சரிக்கை செய்து, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இது குடும்பத் தலைவன் மீதுள்ள தார்மீக கடமையாகும். 


காரணம், மறுமைநாளில் இறைவன் நம்மிடம் "உலக வழக்கத்திற்கு உன் குடும்பத்தினர் மாறு செய்தபோது நீ கோபமுற்றாய்! எனினும் எமக்குரிய கடமையை நிறைவேற்றாமல் எமது தூதரின் வழிமுறைக்கு மாறு செய்தபோது நீ கோபமுற்றாயா? அவர்களை சீர்திருத்தம் செய்ய முயற்சி செய்தாயா?" என்று விசாரணை செய்வான் என்பது உறுதி.


பகிரங்க பிரச்சாரம்


தலைப்பில் காணும் (26:214) திருவசனம் அருளப்பெற்ற போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறைஷியரை ஓரிடத்திற்கு அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினர்.


அப்போது பொதுவாகவும் தனித் தனியாகவும் பெயர் குறிப்பிட்டு, "கஅப் பின் லுஅய்யின்  மக்களே! முர்ரா பின் கஅபின் மக்களே! அப்துஷ் ஷம்சின் மக்களே! அப்து முனாஃபின் மக்களே! அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (என் மகள்) பாத்திமாவை உன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்! ஏனென்றால் அல்லாஹ்விடமிருந்து வரும் (முடிவாகிவிட்ட சோதனை) எதிலிருந்தும் உங்களை காக்க என்னால் இயலாது" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:-  அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2753 முஸ்லிம்-348, நஸாயீ-3584


அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( يَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي، لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا ) "முஹம்மதின் புதல்வியான பாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! (தருகிறேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-4771, முஸ்லிம்-351,திர்மிதீ-2232, நஸாயீ-3587


இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து, தீமைகளை கைவிட்டு வாழ்வதன் மூலமே ஒருவர் மறுமையில் நல்வாழ்வு பெற முடியும்; இறைவனின் வேதனையிலிருந்து அவர் தப்பிக்க முடியும். இது பொதுவான விதியாகும். இதில் யாருக்கும் விதி விலக்கு கிடையாது. நபியவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும், எவ்வளவு பெரிய அந்தஸ்து உள்ளவராக இருந்தாலும் சரியே! யார் இந்த சட்டத்தை மீறினாலும் இறைவனின் தண்டனையிலிருந்து அவர்கள் தப்ப முடியாது.


நான் வேண்டுமானால் இம்மை வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவலாம். அல்லாஹ்வின் பிடியிலிருந்து உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள். அதற்காக இறைக் கட்டளைப்படி நடந்து வாருங்கள் என்பதே இந்த நபிமொழியின் கருத்தாகும். இஸ்லாத்தில் இவ்வுலகச் சட்டங்களில் மட்டுமின்றி, மறுமை வாழ்விலும்கூட பிறவி வித்தியாசம் காட்டப்படமாட்டாது என்பதற்கு இது வலுவான ஆதாரம் ஆகும்.


வாதம் புரியாதே!


அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடமும் (அவர்களது மகளார்) பாத்திமா (ரலி) அவர்களிடமும் இரவு நேரத்தில் வந்து ( أَلاَ تُصَلِّيَانِ ) "நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?" என்று கேட்டார்கள். நான், ( يَا رَسُولَ اللَّهِ، أَنْفُسُنَا بِيَدِ اللَّهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا ) "நாயகமே! எங்களது உயிர் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவன் எங்களை(த் தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் அவன் எழுப்பிவிடுவான்" என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியதும் அண்ணலார் (எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல்) திரும்பிச் சென்றார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது தமது தொடையில் தட்டியவாறே (நான் உடனே பதில் சொன்னதை எண்ணி) ( وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلاً ) "மனிதன் அதிகமாக வாதம் புரிபவனாகவே இருக்கின்றான்" எனும் (18:54) வசனத்தைக் கூறியபடியே சென்றார்கள்.          நூல்:- புகாரீ -1127, முஸ்லிம்-1424, நஸாயீ-1593, முஸ்னது அஹ்மது,  இப்னுகுஸைமா, இப்னு ஹிப்பான்


அவர் (நபி இஸ்மாயீல் – அலை) தொழுகையைக் கடைபிடித்தொழுகும்படியும், ஸகாத்தும் கொடுத்து வரும்படியும் தன் குடும்பத்தினரை ஏவிக்கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விருப்பப்பட்டவராகவும் இருந்தார்.  திருக்குர்ஆன்:- 19:55


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( رحِمَ اللَّه رَجُلا قَامَ مِنَ اللَّيْلِ، فصلىَّ وأيْقَظَ امرأَتهُ، فإنْ أَبَتْ نَضحَ في وجْهِهَا الماءَ، رَحِمَ اللَّهُ امَرَأَةً قَامت مِن اللَّيْلِ فَصلَّتْ، وأَيْقَظَتْ زَوْجَهَا فإِن أَبي نَضَحَتْ فِي وجْهِهِ الماءَஅல்லாஹ் ஒரு மனிதருக்கு அருள்புரிவானாக! அவர் இரவில் எழுந்து (தாமும்) தொழுது தம் (மனைவியையும்) தொழுவதற்காக எழுப்ப, அவளும் தொழுகிறாள். அவள் எழ மறுத்தால் அவளுடைய முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புகிறார். (அத்தகைய மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!)


(அவ்வாறே) ஒரு பெண்மணிக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! அவள் இரவில் எழுந்து (தானும்) தொழுது தன்னுடைய கணவரையும் தொழுவதற்காக எழுப்ப, அவரும் எழுந்து தொழுகிறார். அவர் எழ மறுத்தால் அவருடைய முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்புகிறாள். (அத்தகைய பெண்மணிக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!)        அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூது-1113, நசாயீ-1592, இப்னுமாஜா-1226, இப்னுகுஸைமா, இப்னுஹிப்பான், ஹாக்கிம்


அடக்கவிடத்திற்கு பெண்கள்


அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) நாங்கள் (பிரேதம் ஒன்றை அடக்கம் செய்துவிட்டு) நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தோம். வரும் வழியில் பாத்திமா (ரலி) அவர்களை கண்டோம். அண்ணலார், பாத்திமா (ரலி) அவர்களை அழைத்து,  ( مَا أَخْرَجَكِ مِنْ بَيْتِكِ يَا فَاطِمَةُ )"பாத்திமா (இந்நேரத்தில்) நீர் வீட்டிலிருந்து வெளியேறக் காரணம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு பாத்திமா (ரலி) அவர்கள், "இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்று வந்தேன்" என்று பதிலளித்தார்கள். அப்போது அண்ணலார், ( لَعَلَّكِ بَلَغْتِ مَعَهُمُ الْكُدَی ) "நீரும் அவர்களுடன் அடக்கவிடத்திற்குச் சென்றீர் போலும்?" என்று கேட்டார்கள்.


அதற்கு பாத்திமா (ரலி) அவர்கள், "நான் அவர்களுடன் அடக்கவிடத்திற்குச் செல்வதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்; இது தொடர்பாக நீங்கள் கூறியவற்றை தங்களிடமிருந்து நான் (ஏற்கனவே) செவியுற்றுள்ளேனே" என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார்,  ( لَوْ بَلَغْتِهَا مَعَهُمْ مَا رَأَيْتِ الْجَنَّةَ حَتَّى يَرَاهَا جَدُّ أَبِيكِ ) "அவர்களுடன் நீரும் அடக்கவிடத்திற்குச் சென்றிருந்தால் உமது தந்தையின் பாட்டனார் சொர்க்கத்தைக் காணும் வரை நீர் சொர்க்கத்தைக் காண மாட்டீர்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூது-2716, நஸாயீ-1857, முஸ்னது அஹ்மது, இப்னுஹிப்பான், ஹாகிம், பைஹகீ


(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) அடக்கவிடத்திற்கு செல்வது பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது. அடக்கவிடத்திற்கு செல்லும் பெண்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (திர்மிதீ-976) என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.


அதனால்தான் அண்ணலார் பாத்திமா (ரலி) அவர்களிடம், "உனது தந்தையின் பாட்டனார் அதாவது அப்துல் முத்தலிப் சொர்க்கத்தைக் காணும் வரை நீரும் சொர்க்கத்தைக் காண முடியாது" என்று கூறியுள்ளார்கள். அப்துல் முத்தலிப் இறைமறுப்பாளராகவே இறந்தார். எனவே, அவர் சொர்க்கம் செல்லமாட்டார். 'அவ்வாறே நீரும் சொர்க்கம் செல்ல முடியாது' என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். நூல்:- தகீரத்துல் உக்பா


ஒருமுறை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), மிக்தாது (ரலி) ஆகியோருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மிக்தாது (ரலி) அவர்களை திட்டிவிட்டார். உடனே மிக்தாது (ரலி) அவர்கள் இதைப்பற்றி (அவரின் தந்தை (உமர் - ரலி) அவர்களிடம் முறையிட்டார். உமர் (ரலி) அவர்கள், "(தனது மகனான) அவரின் நாவை நான் வெட்டுவேன்" என்று நேர்ச்சை செய்தார்கள்.


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், இதனால் தனது தந்தைக்குப் பயந்து பல நபர்களை சந்தித்து (தனக்காக தனது தந்தையிடம்) சிபாரிசு செய்யுமாறு வேண்டிக் கொண்டார். அவ்வாறே அவர்கள் சிபாரிசு செய்தபோது உமர் (ரலி) அவர்கள், ( دَعَونِی حَتَّی اَقطَعَ لِسَانَهُ حَتَّی لَا یَشتِمَ بَعدُ اَحَدًا مَّن اَصحَابِ رَسُولِ اللّٰهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ )  "என்னை விட்டுவிடுங்கள். நிச்சயமாக நான் (எனது மகனாக இருந்தாலும் சரி) அவரின் நாவை வெட்டுவேன். எனக்குப்பின் தோன்றுவோருக்கு இது ஓர் நல்ல வழி முறையாக அமைய வேண்டும். அதன்மூலம் எவர் நபித்தோழர்களை திட்டினாலும் அவரின் நாவு துண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மது, முன்தகப் கன்ஸுல் உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம் - 2 பக்கம்- 540


எண்ணிக் கொண்டிராதே!


அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَنْفِقِي، أَو انْفَحِي، أَو انْضِحِي، وَلا تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيكِ، وَلا تُوعِي فيُوعِيَ اللَّهُ عَلَيْكِநபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் என்னிடம், "அள்ளி வழங்குவாயாக! அல்லது (தாராளமாக நல்வழியில்) செலவழிப்பாயாக! எண்ணி எண்ணி(ச் செலவழித்து)க் கொண்டிராதே! (அப்படி செலவு செய்தால்) அல்லாஹ் உனக்கு எண்ணியே தருவான். கஞ்சத்தனமாகப் பையில் (முடிந்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன் விஷயத்தில் (தனது அருள் வளங்களைப் புரியாமல் தனது) பையை முடிந்து வைத்துக் கொள்வான்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-1433 முஸ்லிம்-1866


கஞ்சத்தனம் செய்து கையை இறுக்கினால் இறைவனும் இறுக்கிக் கொள்வான். தீர்ந்துவிடும் என்ற அச்சம்தான் தர்மத்திற்குத் தடையாக உள்ளது. அந்த அச்சமே அருள்வளம் (பரக்கத்) துண்டிக்கப்பட காரணமாகிறது.


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி (அக்காள்) தான், இந்த அஸ்மா (ரலி) அவர்கள். அண்ணலாருக்கு இவர்  கொழுந்தியாள் என்ற உறவு முறையாகும். நல்வழியில் செலவு செய்வதற்கு கஞ்சத்தனம் கூடாது. கஞ்சத்தனத்தால் அல்லாஹ்வின் அருள் வளம் தடைபட்டுப் போகும் என்று அண்ணலார் இந்த அம்மையாருக்கு எடுத்துரைக்கிறார்கள்.


தார்மீக கடமை


இறைநம்பிக்கையாளர்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை, மனிதர்களும் கற்களுமாகும். திருக்குர்ஆன்:- 66:6


அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். மேற்காணும் (66:6) இந்த வசனத்தில் –    ( أَدِّبُوهُمْ عَلِّمُوهُم ) உங்களின் குடும்பத்தினருக்கு நல்லொழுக்கம் புகட்டுங்கள், நற்கல்வி போதியுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.   நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஏதேனும் ஒரு காரியத்திலிருந்து பொது மக்களைத் தடுக்க நினைத்தால் முதலில் தமது குடும்பத்தினரிடம் வந்து,   ( لَاَعلَمَنَّ اَحَدًا وَقَعَ فِي شَيءٍ مِمَّا نَهَيتُ عَنهُ اِلَّا اَضعَفتُ لَهُ العُقُوبَةَ ) "நான் தடை செய்த காரியங்களில் உங்கள் எவரேனும் ஈடுபட்டதாக எனக்கு தெரிந்தது என்றால் அவருக்கு இரட்டிப்பு தண்டனை வழங்குவேன்" என்று எச்சரிக்கை செய்வார்கள்.     நூல்:- கன்ஸுல் உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம் 2, பக்கம் - 869


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் இரவு நேரங்களில் உபரியான தொழுகைகள் அதிகம் ஈடுபடுவார்கள். அதிகாலை நெருங்கும்போது தம்முடைய வீட்டில் உள்ளோரையும் (தொழுகைக்காக) எழுப்புவார்கள். பிறகு "(நபியே) தொழுது வருமாறு நீங்கள் உங்கள் குடும்பத்தினரை ஏவுங்கள். நீங்களும் அதன் மீது உறுதியாக இருங்கள்" என்ற திருக்குர்ஆனின் (20:132) வசனத்தை ஓதுவார்கள்.         நூல்:- முஅத்தா இமாம் மாலிக்


ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் சில தேவைகளைக் கேட்டு வந்தேன். ஆனால், அண்ணலார் சில காரணம் கூறி மறுத்துவிட்டார்கள். அப்போது தொழுகையின் நேரம் வந்து விட்டது. நான் அங்கிருந்து வெளியேறி என் மகள் வீட்டுக்குச் சென்றேன். அங்கு அவளின் கணவர் (மருமகன்) ஷுரஹ்பீல் பின் ஹசனா (ரலி) அவர்கள் வீட்டில் இருந்தார். நான் அவரிடம்,  ( قَد حَضَرَتِ الصَّلَاةُ وَاَنتَ فِی البَیتِ )  "தொழுகை நேரம் வந்துவிட்டது; நீர் வீட்டில் இருக்கிறீரே!" என்று அவரைக் கடிந்து கொண்டேன்.


அப்போது அவர், "என் சிறிய தாயாரே! என்னை திட்டாதீர்கள். காரணம், என்னிடம் ஒரே ஓர் ஆடை தான் இருந்தது. அதையும் அண்ணலார் என்னிடமிருந்து இரவலாக வாங்கி கொண்டார்கள்" என்று கூறினார். மேலும் "எங்களிடம் சரி செய்து அணிந்து கொள்வதற்குச் சின்னதொரு ஆடையைத் தவிர வேறில்லை" என்று கூறினார். நூல்:- கன்ஸுல் உம்மால், இஸாபா, ஹாகிம், ஹயாத்துஸ் ஸஹாபா  பாகம் -1 பக்கம் -  424


பெற்றோர் தன்னுடைய மக்கள் சரியாக பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிக்குப் போகவில்லை என்றால் கோபப்படுவது போல், அல்லது உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்லவில்லை என்றால் கோபப்படுவது போல், அல்லது தான் ஈடுபட்டிருக்கும் வேலையில் தனக்கு ஒத்துழைக்காவிட்டால் கோபப்படுவது போல், தன் மக்கள் சரியாக தொழவில்லை, நோன்பு நோற்கவில்லை, குர்ஆன் ஓதவில்லை, ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளவில்லை எனும்போது இதைவிட அதிகமாக கோபப்பட வேண்டும். அவர்களை முறையாக கண்டிக்க வேண்டும்.


ஒருமுறை அன்னை ஸைனப் பின்த் ஜஹஷ் (ரலி) அவர்கள், அன்னை சஃபிய்யா (ரலி) அவர்களை யூதப்பெண் என்று தரக்குறைவாக பேசி விட்டார். இதனை அறிந்த அருமை நாயகம் ஸல் அவர்கள் ஜைனப் (ரலி) அவர்களின் செயலை கண்டிக்கும் விதமாக அவருடன் இரண்டு மாதங்கள் அண்ணலார் பேசவில்லை. நூல்:- அபூதாவூது, முஸ்னது அஹ்மத் 


தவறு செய்தால்


ஒரு இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும், அன்னை ஸைனப் (ரலி) அவர்களும் வாக்குவாதம் செய்தனர். தொழுகைக்காக 'இகாமத்' சொல்லப்பட்டும்கூட அவர்கள் சப்தமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்விருவரின் சப்தத்தைக் கேட்டுக் கொண்டே சென்றார்கள். பிறகு தொழுகையை முடித்ததும் அபூபக்ர் (ரலி) அவர்கள் (தனது மகளார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து கடுஞ்சொற்களால் அவரைக் கண்டித்தார்கள். மேலும்( أَتَصْنَعِينَ هَذَا"இப்படியா நடந்துகொள்கிறாய்?" என்று கேட்டார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2898


அபூபக்ர் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் (வருவதற்கு) அனுமதி வேண்டினார்கள். அவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் உரத்த சப்தத்தைச் செவியுற்றார்கள். அண்ணலாரிடத்தில் சப்தத்தை உயர்த்துபவளாக உன்னை நான் காண்கிறேன் என்று கூறி ஆயிஷாவை அடிப்பதற்காக அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் பிடிக்கலானார். அண்ணலார் அபூபக்ரை (அடிக்க விடாமல்) தடுத்து நிறுத்தினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் கோபமுற்றவராக வெளியே சென்றார். நூல் : அபூதாவூது-4347


நமது பிள்ளை தவறு செய்தால் பாசத்தைக் காரணம் காட்டி கண்டிக்காமல் விட்டு விடுகிறோம். நாளடைவில் பிள்ளைகள் பெரும் பெரும் தவறுகளைச் செய்வதற்கு பெற்றோர்களின் அலட்சியப்போக்கு காரணமாகி விடுகிறது. அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்கள் சில சிறிய சிறிய தவறுகளை செய்யும் போது அதைக் கண்டிக்கும் அக்கரையுள்ள பொறுப்புள்ள தந்தையாக அபூபக்ர் (ரலி) அவர்கள் நடந்து கொண்டார்கள். தன்னாலும் தன் பிள்ளையாலும் யாருக்கும் இடஞ்சல் வந்து விடக் கூடாது என்று கருதினார்கள்.


தொழுகைக்காக 'இகாமத்' சொல்லப்பட்ட பிறகும் தொழுகையைப்பற்றி கவனமில்லாமல் வாக்குவாதம் தொடர்ந்து கொண்டே இருப்பது சரியல்ல. அதுவும் கணவனுக்கு முன்னால் மனைவி தனது குரலை உயர்த்தி காரசாரமாக பேசுவது சிறந்த மனைவிக்கு அழகல்ல. எனவே தான் அபூபக்ர் (ரலி) அவர்கள் தனது மகளை கண்டித்தார்கள்.


சிறு பிள்ளைகள்


அபுல் பக்தரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் மிம்பரில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஹுஸைன் (ரலி) அவர்கள் எழுந்து, "எனது தந்தையின் மிம்பரை விட்டு இறங்குங்கள்" என்று கூறினார். உடனே உமர் (ரலி) அவர்கள், "இது உன் தந்தையின் மிம்பர் தான் எனது தந்தையுடையதல்ல. உன்னை இப்படி கூறச் சொன்னது யார்?" என்று கேட்டார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் எழுந்து, ( مَا اَمَرَهُ بِهَذَا اَحَدٌ اَمَا لَاُوجِعَنَّكَ يَاغُدَرُ )  "எவரும் அவரை அவ்வாறு கூறுமாறு ஏவவில்லை" என்று கூறிவிட்டு (ஹுஸைன் - ரலி அவர்களை நோக்கி)  "மோசடிக்காரனே! நிச்சயமாக உன்னை  தண்டிப்பேன்" என்றார்கள்.


அப்போது உமர் (ரலி) அவர்கள், "எனது சகோதரர் மகனே! நீர் அவரை தண்டிக்க வேண்டாம். எனது தந்தையின் மிம்பர் என்று அவர் உண்மைதான் கூறியுள்ளார். (ஏனெனில் இது அண்ணல் நபி - ஸல் அவர்களின் மிம்பர் தான்)" என்று கூறினார்கள்.    நூல்:- கன்ஸுல் உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம் - 2 பக்கம் -592


நம் வீட்டு சிறுபிள்ளைகள் பெரியவர்களிடத்தில் அல்லது அவர்கள் முன்னிலையில் துடுக்குத்தனமாக எதையாவது பேசிவிட்டால், அதை உடனடியாக பெற்றோர்கள் எச்சரிக்கும் விதமாக கண்டிக்க வேண்டும். இல்லையெனில், இந்த பிள்ளை யாரோ சொல்லிக் கொடுத்ததை பேசுகிறது என்று அவர்கள் தவறாக விளங்கக்கூடும். எனவே, சிறுபிள்ளை தானே பேசுகிறது இதையெல்லாம் யாராவது வினையமாக எடுத்துக்கொள்வார்களா? என்று அதை சாதாரணமாக எண்ணக்கூடாது. இது போன்றதை உடனக்குடன் கண்டிக்க வேண்டும். இதுவே ஒழுக்கப் போதனையாகும்.


நல்லதை எடுத்துரைத்து, தீயதை தடுக்கக்கூடிய திருப்பணியை நமது வீட்டிலிருந்து துவங்க வேண்டும். அதற்குரிய போதிய ஆற்றலை  அல்லாஹ் நமக்கு தந்தருள் புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

1 comment:

  1. அற்புதமான கட்டுரை. சிறப்பு மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள் துஆக்கள்.

    ReplyDelete

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...