மரண வேதனை
وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ
تَحِيدُ
மரணத்தின் சிரமம் மெய்யாகவே வந்துவிடும் சமயத்தில் (அவனை நோக்கி)
‘‘நீ தப்பிவிடக் கருதியது இதுதான்'' (என்று கூறப்படும்.) திருக்குர்ஆன்:- 50:19
ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக இறப்பை சந்திக்க வேண்டும். அப்போது
ஏற்படும் வேதனை என்பது சற்று சிரமமாகவே இருக்கும். வாழ்நாளில் அவரவர் செய்த செயல்பாடுகளுக்கு
ஏற்ப வேதனையில் சற்று கூடுதல் குறைவு என வித்தியாசம் ஏற்படலாம்.
மரண வேதனை என்பதை அரபியில் "சகரத்" என்று சொல்லப்படுகிறது.
இதற்கு மயக்கம், போதை என்று பொருள்.
உயிர் கைப்பற்றப்படும்போது ஏற்படும் வலியால் உண்டாகும் மயக்க நிலையை இது குறிக்கும்.
இஸ்லாமிய பார்வையில், “சக்ராத் வேதனை” (Death Throes) என்பது மரணத்தின்போது உயிர் பிரிவதில் ஏற்படும் கடுமையான துன்பம்
ஆகும். இது இறைநம்பிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் நிகழக்கூடியது; இறைத்தூதர்கள்கூட இதன் வேதனையை அனுபவித்தனர். ஆனால்,
அவர்கள் இறைவனிடம் உதவி தேடினர். மேலும்,
இந்த வேதனை பாவங்களுக்குப் பரிகாரமாகவும்,
இறைவனுடனான தொடர்பை உணர்த்தவும், மறுமையின் நிதர்சனத்தைக் காட்டும் சோதனையாகவும்
கருதப்படுகிறது. இது நம்பிக்கையின் உறுதியையும் பொறுமையையும் சோதிப்பதாக அமைகிறது.
நற்கூலி உண்டு
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
என்னிடம் வந்தார்கள். அப்போது என்னுடைய உறவினர் ஒருவர் உயிர் பிரியும் நிலையில் சிரமப்பட்டுக்
கொண்டிருந்தார். அதை கண்ட நபியவர்கள், ( لاَ
تَبْتَئِسِي عَلَى حَمِيمِكِ فَإِنَّ ذَلِكَ مِنْ حَسَنَاتِهِ
) "(ஆயிஷா!) நீ உன் உறவினருக்காகக்
கவலைப்படாதே. இதுவும் அவர் அடையும் நன்மைகளுள் உள்ளதாகும்" என்று கூறினார்கள்.
நூல்:- இப்னுமாஜா-1441, மஜ்மஉஸ் ஸவாயித்
ஒரு மனிதர் மரண நேரத்தில் அடையும் சிரமத்திற்கு அவருக்கு நன்மை
பதிவு செய்யப்படுகிறது அல்லது அவருக்கு நன்மை கிடைப்பதற்காக இந்த சிரமத்தை அளிக்கப்படுகிறது.
அழகிய அடையாளம்
அப்துல்லாஹ் பின் புரைதா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது.
(என் தந்தை) புரைதா (ரலி) அவர்கள் குராசான் நாட்டில் இருந்தபோது உடல்நலம் குன்றியிருந்த
தம் சகோதரர் ஒருவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள்.
அப்போது அவர் இறப்பெய்திக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரது
நெற்றி வியர்த்துக்கொண்டிருப்பதை கண்டார்கள். உடனே 'அல்லாஹு அக்பர்' (இறைவன் மிகப் பெரியவன்) இறைநம்பிக்கையாளர் நெற்றி வியர்க்கும் நிலையிலேயே இறப்பார்
என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்றார்கள்.
நூல்:- முஸ்னது அஹ்மத், ஸஹீஹுல் குத்பித்திஸ்ஆ
வஸவாயிதுஹு-454
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْمُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الْجَبِينِ ) இறைநம்பிக்கையாளர் நெற்றி வியர்க்கும் நிலையில் இறப்பார். அறிவிப்பாளர்:-
புரைதா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-904, நசாயீ-1806, இப்னுமாஜா-1432,
முஸ்னது அஹ்மத், ஹாகிம்
இந்த நபிமொழிக்கு அறிஞர்கள் பல்வேறு விளக்கங்கள் அளித்துள்ளனர்.
இறைநம்பிக்கையாளர் ஒருவர் இறக்கும்போது மரண வலியை அனுபவிப்பார். அதன் கடுமையால் அவரது
நெற்றி வியர்க்கும். அதாவது நெற்றி வியர்க்கும் அளவுக்கு இறப்பின்போது அவர் துயரப்படுவார்.
அவரது நெற்றி வியர்வையால் அவருடைய பாவங்கள் கழுவப்படலாம். அல்லது அவருடைய தகுதி உயர்த்தப்
படலாம்.
அல்லது ஓர் இறைநம்பிக்கையாளர் பாவங்கள் செய்திருந்தும் அவை மன்னிக்கப்படும்
செய்தியை அறியும்போது அல்லாஹ்விடம் வெட்கப்படுகிறார். அதன் அடையாளமாக அவருக்கு நெற்றியில்
வியர்வை துளிர்க்கும்.
சான்றாக முடியாது
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு
இறப்பு நெருங்கியபோது அவர்களை நான் பார்த்தேன். அவர்களுக்கு அருகில் தண்ணீர் நிரம்பிய
பாத்திரம் ஒன்று இருந்தது. அவர்கள் அந்தப் பாத்திரத்திற்குள் தமது கையை நுழைத்து (தண்ணீர்
அள்ளி) அந்தத் தண்ணீரை தமது முகத்தில் தடவிக்கொண்டே, ( لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ
) "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன்
இல்லை. நிச்சயமாக மரணத்தின்போது பல வேதனைகள் உண்டு" என்று கூறினார்கள். பிறகு,
( اللَّهُمَّ أَعِنِّي عَلَى غَمَرَاتِ الْمَوْتِ
) "இறைவா! இறப்பின் துயரங்களில்
இருந்து விடுபட எனக்கு உதவி செய்வாயாக!" என்று கூறிக்கொண்டிருந்தார்கள். நூல்:-
புகாரீ-6510, திர்மிதீ-900
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( مَا أَغْبِطُ أَحَدًا بِهَوْنِ مَوْتٍ بَعْدَ الَّذِي رَأَيْتُ مِنْ
شِدَّةِ مَوْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட மரண வேதனையை
நான் கண்ட பிறகு, (சிரமமின்றி) எளிதாக
மரணமடைந்த எவரைக் கண்டும் நான் ஏக்கம் கொண்டதில்லை. நூல்:- திர்மிதீ-901, நசாயீ-1807
சிரமத்துடன் இறப்பது கெட்ட முடிவுக்கு அடையாளமோ, சிரமமின்றி இறப்பது நல்ல முடிவுக்கு அடையாளமோ இல்லை
என்றானபின், சிரமமில்லாமல் இறக்கும்
எவரைப் பார்த்தும், "இப்படியல்லவா இறப்பு
வரவேண்டும்" என்று நான் ஏங்கியதில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்:-
துஹ்ஃபத்துல் அஹ்வதீ
உடலில் இருந்து உயிர் பிரியும்போது அதன் வலி கடுமையாக இருக்கும்.
உடலில் ஏற்படும் காயத்தின் வலியை உணர வைப்பதே உயிர்தான். அந்த உயிரே பிரியும்போது வலி
கடுமையாக இருப்பது இயற்கையே. எனவே, ஒருவர் இறக்கும்போது
துயரத்தை அனுபவிப்பது அவரது கெட்ட முடிவுக்கோ, எளிய முறையில் இறப்பது அவரது நல்ல முடிவுக்கோ சான்றாக முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறப்பின் வலியை அனுபவித்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ
திடீர் மரணம்
ஒருவனது (உயிர்) தொண்டைக் குழியை அடையும்போது, அந்நேரத்தில் (அவனை) நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்கள்.
உங்களைவிட நாமே அவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம். எனினும் நீங்கள் (நம்மைப்) பார்க்க
மாட்டீர்கள். திருக்குர்ஆன்:- 56:83-84
உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டால், (அவனுக்கு சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க)
மந்திரிப்பவர் யார்? (எங்கிருக்கிறார்?)
என்று கேட்கின்றனர். எனினும் இதுதான் (உலகத்தை விட்டு)
பிரியும் நேரம் என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கிறான். (அவனுடைய) கெண்டைக்கால் கெண்டைக்காலோடு
பின்னிக்கொள்ளும். திருக்குர்ஆன்:- 75:26-29
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான்
பெருமானார் (ஸல்) அவர்கள், ( إِنَّ
نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا وَلاَ أُحِبُّ مَوْتًا كَمَوْتِ الْحِمَارِ ) “ஓர் இறைநம்பிக்கையாளரின்
உயிர் வியர்க்கும் நிலையில் (வலியோடு) தான் பிரிகிறது. கழுதை இறப்பதைப் போன்று இறப்பதை
நான் விரும்பமாட்டேன்" என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது அவர்களிடம்,
( وَمَا مَوْتُ الْحِمَارِ ) "கழுதை இறப்பதைப் போன்று என்றால் என்ன?"
என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள்,
( مَوْتُ
الْفَجْأَةِ ) "திடீர் மரணம்"
என்று விடையளித்தார்கள். நூல்:- திர்மிதீ-902
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَوْتُ الْفَجْأَةِ رَاحَةٌ لِلْمُؤْمِنِ وَأَخْذَةُ أَسَفٍ
لِلْكَافِرِ ) திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு நிம்மதியாகவும்,
இறைமறுப்பாளருக்குக் கேடாகவும் அமைகிறது. அறிவிப்பாளர்:-
ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், பைஹகீ, தப்ரானீ, ரஸீன்
திடீர் மரணத்தால் பல நன்மைகள் தடைபடக்கூடும். பாவமன்னிப்புக்
கோரல், (வசிய்யத் எனும்) இறுதி விருப்பம்
தெரிவித்தல் போன்ற நற்செயல்கள் எதுவும் செய்ய முடியாத நெருக்கடி நிலை திடீர் மரணத்தால்
ஏற்படலாம். கழுதைப் போன்று ஐயறிவு பிராணிக்கு இத்தகைய கடமைகள் ஏதும் இருக்காது. மனிதனுக்கு,
அதிலும் இறைநம்பிக்கையாளருக்கு இறுதிக்கட்டத்தில்
பல பொறுப்புகள் இருக்கும். எனவே, திடீர் மரணத்தை விட்டு
இறைவனிடம் பாதுகாப்பு தேட வேண்டும்.
(சக்கராத் எனும்) மரண வேதனை என்பது ஓரிரு நிமிடங்கள்
அல்லது சில மணி நேரங்கள் அல்லது ஓரிரு நாள்கள்கூட நீடிக்கலாம். திடீர் மரணம் ஏற்பட்டாலும்
அந்த குறுகிய நேரத்திலும் மரண வேதனை என்பது நிச்சயமாக இருக்கும்.
சாதாரண வலி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا يَجِدُ الشَّهِيدُ مِنْ مَسِّ الْقَتْلِ إِلاَّ كَمَا يَجِدُ
أَحَدُكُمْ مِنْ مَسِّ الْقَرْصَةِ ) அல்லாஹ்வின் பாதையில் வீர மரணமடைந்தவர் கொல்லப்படும்போது
உங்களில் யாராவது உங்களை கிள்ளும்போது அடைகின்ற (அல்லது கொசுக்கடியின்) வலியை போன்ற
தவிர (வேறு வகையில்) அவர் உணர மாட்டார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1591, நஸாயீ-3110, இப்னுமாஜா,
முஸ்னது அஹ்மத்
உயர்த்தியாகி வீரமரணத்தின்போது உணரும் வலி சாதாரணமானதாகவே அவருக்குத்
தோன்றும்.
(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை
இறந்தோர் என நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்;
தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர். திருக்குர்ஆன்:- 3:169
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள்
(மேற்காணும்) இந்த திருவசனம் (3:169) தொடர்பாக அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டோம். அதற்கு நபியவர்கள்
பின்வருமாறு கூறினார்கள்.
உயிர்த்தியாகிகளின் உயிர்கள் பச்சை நிற பறவைகளின் வயிறுகளில்
செலுத்தப்பட்டிருக்கும். அவற்றுக்கென இறையரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள
கண்ணாடிக் கூண்டுக்குள் இருக்கும். அவை விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு
அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும். அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் தோன்றி,
"உங்களுக்கு ஏதேனும் ஆசை உண்டா?"
என்று கேட்பான். அதற்கு அவர்கள், "நாங்கள் தான் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு
களித்து கொண்டிருக்கிறோமே! இதற்கு மேல் நாங்கள் ஆசைப்படுவதற்கு வேறு என்ன உள்ளது?"
என்று பதிலளிப்பார்கள்.
இவ்வாறு மூன்று முறை (மீண்டும் மீண்டும்) அவர்களிடம் அல்லாஹ்
கேட்டுக்கொண்டே இருப்பான். ஏதாவது கேட்காமல் விடப்பட மாட்டோம் என்பதை புரிந்துகொள்ளும்
அவர்கள், ( يَا رَبِّ نُرِيدُ أَنْ
تَرُدَّ أَرْوَاحَنَا فِي أَجْسَادِنَا حَتَّى نُقْتَلَ فِي سَبِيلِكَ مَرَّةً أُخْرَى ) "எங்கள் இறைவா! எங்கள்
உயிர்களை மறுபடியும் எங்கள் உடல்களில் நீ செலுத்த வேண்டும்; மற்றொரு முறை உனது வழியில் போராடி நாங்கள் கொல்லப்பட வேண்டும்
என விரும்புகின்றோம்" என்று கூறுவார்கள். (எனினும் இதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.)
இதைத் தவிர அவர்களுக்கு (வேறு) எந்த தேவையும் இல்லை என இறைவன் கண்டுகொள்ளும்போது அவர்கள்
விடப்படுவார்கள். நூல்:- முஸ்லிம்-3834,
திர்மிதீ-2927, இப்னுமாஜா-2801, தாரமீ
இறந்துவிட்ட எந்த மனிதனும் பூமியில் மீண்டும் உயிர்தெழ ஆசைப்பட
மாட்டான். காரணம், மரண வேதனை என்பது
மிகவும் சிரமமானது. அதை ஒருமுறை அனுபவித்ததே போதும் என்று எண்ணுவானே தவிர, அதை மீண்டும் அனுபவிக்க எண்ணமாட்டான்.
இறைவழியில் அறப்போர் புரிந்து அதனால் இறந்தவருக்கு மரண வேதனை
கடினமானதாக இருப்பதில்லை. எனவேதான், அவர் மீண்டும் மீண்டும் அறப்போரில் ஈடுபட்டு மரணிக்கவேண்டும் என்று விரும்புவார்.
மீண்டும் உலக வாழ்க்கை வேண்டாம்
ஒருமுறை இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது
ஒரு பெண் ஒரு மண்ணறையின் அருகில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். அப்பெண்ணிடம் அன்னார், ( مَا لَكِ أَيَّتُهَا الْمَرْأَةُ؟ ) "பெண்ணே! உனக்கென்ன நேர்ந்தது?" என்று வினவினார்கள். அதற்கவள், ( مَاتَتِ ابْنَةٌ لِي لَمْ يَكُنْ لِي وَلَدٌ غَيْرُهَا، وَإِنِّي
عَاهَدْتُ رَبِّي أَنْ لَا أَبْرَحُ مِنْ مَوْضِعِي هَذَا حَتَّى أَذُوقَ مَا
ذَاقَتْ مِنَ الْمَوْتِ، أَوْ يُحْيِيَهَا اللَّهُ لِي فَأَنْظُرُ إِلَيْهَا ) "என்னுடைய மகள் இறந்துவிட்டாள்;
அவளைத் தவிர எனக்கு வேறு எந்த குழந்தையும் இல்லை;
எனவே, அவள் சுவைத்த மரணத்தை நான் சுவைக்காமல், அல்லது அல்லாஹ் அவளை மீண்டும் உயிர்பித்து அவளைப் பார்க்காமல்,
நான் இவ்விடத்தை விட்டு திரும்பிச் செல்லமாட்டேன்
என்று நான் அல்லாஹ்விடம் உறுதிமொழி கொடுத்துள்ளேன்" என்று பதிலளித்தாள்.
அவளிடம் ஈசா (அலை) அவர்கள், ( أَرَأَيْتِ إِنْ نَظَرْتِ إِلَيْهَا أَرَاجِعَةٌ أَنْتِ؟
) "நீ அவளைப் பார்த்துவிட்டால்,
திரும்பிச் சென்றுவிடுவாயா?" என்று வினவினார்கள். அவள், "ஆம்" என்றாள். அதன்பின் அன்னார் இரண்டு ரக்அத்துக்கள்
தொழுதார்கள். பின்னர் அன்னார் அந்த மண்ணறை அருகில் அமர்ந்து, ( يَا فُلَانَةُ قُومِي بِإِذْنِ الرَّحْمَنِ فَاخْرُجِي
) "இன்னவளே! அருளாளன் அல்லாஹ்வின்
அனுமதியால் எழுந்து வெளியே வா!" என்று அழைத்தார்கள். அப்போது அவள் தன் தலையில்
படிந்திருந்த மண்ணைத் துடைத்தவளாக வெளியே வந்தாள்.
பின்னர் அவள் தன் தாயைப்
பார்த்தாள். ( يَا أُمَّتَاهُ، مَا
حَمَلَكِ عَلَى أَنْ أَذُوقَ كَرْبَ الْمَوْتِ مَرَّتَيْنِ؟ يَا أُمَّتَاهُ،
اصْبِرِي وَاحْتَسِبِي، فَلَا حَاجَةَ لِي فِي الدُّنْيَا ) "அன்னையே! நான் மரணத்தின் வேதனையை இரண்டு தடவை சுவைக்க வேண்டுமென
உன்னைத் தூண்டியது எது? அன்னையே! பொறுமை கொள்வீர்;
நன்மையை எதிர்பார்ப்பீர்; இவ்வுலகில் எனக்கு எந்தத் தேவையும் இல்லை."
என்று கூறினாள். பிறகு, அல்லாஹ்வின் தூதரே!
( سَلْ رَبِّي أَنْ يَرُدَّنِي إِلَى الْآخِرَةِ، وَأَنْ يُهَوِّنَ
عَلَيَّ كَرْبَ الْمَوْتِ )
"நான் மறுமையை நோக்கி திரும்பவும் (அதாவது, நான் மீண்டும் மரணிக்கவும்), மரணத்தின் வேதனையை இலேசாக ஆக்கவும் இறைவனிடம் எனக்காகப் பிரார்த்தனை
செய்வீராக" என்று கேட்டுக் கொண்டாள். அதன்படி அன்னார் தன் இறைவனிடம் பிரார்த்தனை
செய்தார்கள். அவள் மீண்டும் மரணித்தாள். அவள்மீது அந்நிலம் சமமாக ஆகிவிட்டது. நூல்:-
தாரீக் திமிஷ்கு இமாம் இப்னு அசாகிர், அல்பிதாயா வந்நிஹாயா
உலகத்தில் அனுபவித்த அனைத்து உல்லாசங்களைவிட மரண வேதனை என்பது
மிகவும் கசப்பானது. எனவே, அதை மீண்டும் அனுபவிக்க
யாரும் விரும்புவதில்லை.
வானவர்கள் வருகை
இறுதியில், உங்களில் ஒருவருக்கு
இறப்பு வரும்போது, நம் தூதர்கள் அவ(ரது
உயி)ரைக் கைப்பற்றுவார்கள். அவர்கள் (தமது பணியில்) கவனக்குறைவாக இருக்க மாட்டார்கள்.
திருக்குர்ஆன்:- 6:61
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது. அன்சாரிகளில் ஒருவரது
இறுதிக் கடமையை (ஜனாஸா) நிறைவேற்றுவதற்காக அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் புறப்பட்டோம்.
நாங்கள் அடக்கத்தலத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கு குழி தோண்(டி முடிக்கப்ப)டவில்லை.
எனவே, நபியவர்கள் அமர்ந்தார்கள்.
நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம்.
அப்போது நபியவர்கள், ( الْعَبْدَ
الْمُؤْمِنَ إِذَا كَانَ فِي انْقِطَاعٍ مِنَ الدُّنْيَا وَإِقْبَالٍ مِنَ
الْآخِرَةِ نَزَلَ إِلَيْهِ مَلَائِكَةٌ مِنَ السَّمَاءِ، بِيضُ الْوُجُوهِ
كَأَنَّ وُجُوهَهُمُ الشَّمْسُ، مَعَهُمْ كَفَنٌ مِنْ أَكْفَانِ الْجَنَّةِ وحَنُوط
مِنْ حَنُوط الْجَنَّةِ، حَتَّى يَجْلِسُوا مِنْهُ مَدَّ الْبَصَرِ. ثُمَّ يَجِيءُ
مَلَكُ الْمَوْتِ حَتَّى يَجْلِسَ عِنْدَ رَأْسِهِ، فَيَقُولُ: أَيَّتُهَا
النَّفْسُ الطَّيِّبَةُ، اخْرُجِي إِلَى مَغْفِرَةٍ مِنَ اللَّهِ
وَرِضْوَانٍ". قَالَ: "فَتَخْرُجُ تَسِيلُ كَمَا تَسِيلُ الْقَطْرَةُ مِنْ
فِي السِّقَاء فَيَأْخُذُهَا ) "இறைநம்பிக்கையாளர் இவ்வுலகிலிருந்து விடைபெற்று மறுமையை நோக்கிச்
செல்லும் நிலையில் இருந்தால், வானவர்கள் சிலர் வானத்திலிருந்து
இறங்கி அவரிடம் வருவார்கள். அவர்களின் முகங்கள் வெண்மையாக இருக்கும். அவை சூரியனைப்
போன்று ஒளிரும். அவர்களுடன் சொர்க்கத்தின் பிரேத ஆடைகளில் (கஃபன்) ஓர் ஆடையும்,
சொர்க்கத்தின் வாசனை திரவியங்களில் ஒன்றும் இருக்கும்.
இறுதியில் அவரது பார்வை எட்டும் தூரத்தில் அவர்கள் வந்து அமருவார்கள். பின்னர் உயிரை
கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமருவார். அவர், "தூய்மையான உயிரே! அல்லாஹ்வின் மன்னிப்பையும்,
அன்பையும் நோக்கி நீ புறப்படுவாயாக" என்பார்.
அப்போது தண்ணீர் பையின் வாயிலிருந்து நீர் வழிவதைப் போன்று (அவரது உடலிலிருந்து) உயிர்
(மிருதுவாக பெரிய அளவில் வேதனையின்றி) வெளியேறும். உடனே அதை அந்த வானவர் எடுத்துக்
கொள்வார்.
மேலும், ( وَإِنَّ
الْعَبْدَ الْكَافِرَ إِذَا كَانَ فِي انْقِطَاعٍ مِنَ الدُّنْيَا وَإِقْبَالٍ
مِنَ الْآخِرَةِ، نَزَلَ إِلَيْهِ مِنَ السَّمَاءِ مَلَائِكَةٌ سُودُ الْوُجُوهِ،
مَعَهُمُ المُسُوح، فَجَلَسُوا مِنْهُ مَدَّ الْبَصَرِ. ثُمَّ يَجِيءُ مَلَكُ
الْمَوْتِ حَتَّى يَجْلِسَ عِنْدَ رَأْسِهِ، فَيَقُولُ: أَيَّتُهَا النَّفْسُ
الْخَبِيثَةُ، اخْرُجِي إِلَى سَخَط مِنَ اللَّهِ وغَضَب". قَالَ:
"فتَفرق فِي جَسَدِهِ، فَيَنْتَزِعُهَا كَمَا يُنْتَزَعُ السَّفُّود مِنَ
الصُّوفِ الْمَبْلُولِ، فَيَأْخُذُهَا ) இறைமறுப்பாளன் ஒருவன்
இவ்வுலகிலிருந்து விடைபெற்று மறுமையை நோக்கி செல்லும் நிலையில் இருந்தால் வானவர்கள்
சிலர் வானிலிருந்து இறங்கி அவனிடம் வருவார்கள். அவர்களின் முகங்கள் கறுப்பாக இருக்கும்.
அவர்களுடன் முடியாலான (முரட்டு கஃபன்) ஆடை ஒன்று இருக்கும். அவர்கள் அவனது பார்வை எட்டும்
தூரத்தில் வந்து அமர்ந்து கொள்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனது
தலைக்கு அருகில் அமருவார். "தரங்கெட்ட ஆன்மாவே! அல்லாஹ்வின் வெறுப்பு மற்றும்
கோபத்தை நோக்கி நீ புறப்படு" என்பார். அப்போது அவனது உடல் தளர்த்தப்படும். பின்னர்
ஈரக் கம்பளியால் சிக்கிக்கொண்ட முள் கம்பியை இழுப்பதைப் போன்று அவனது உடலிலிருந்து
(கடுமையான வேதனையுடன்) உயிரைப் பிடித்து இழுத்துப் பறிப்பார். நூல்:- முஸ்னது அஹ்மத்,
இப்னு அபீஷைபா, தஃப்சீர் இப்னு கஸீர் இப்ராஹீம் வசனம்-27, ஸஹீஹ் அல்ஜாமிஉ-1676
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْمَيِّتَ تَحْضُرُهُ الْمَلَائِكَةُ، فَإِذَا كَانَ
الرَّجُلُ الصَّالِحُ قَالُوا: اخْرُجِي أَيَّتُهَا النَّفْسُ الطَّيِّبَةُ
كَانَتْ فِي الْجَسَدِ الطَّيِّبِ، اخْرُجِي حَمِيدَةً، وَأَبْشِرِي بِرَوْحٍ وَرَيْحَانٍ،
وَرَبٍّ غَيْرِ غَضْبَانَ، فَلَا يَزَالُ يُقَالُ لَهَا ذَلِكَ حَتَّى تَخْرُجَ ) மனிதன் இறக்கும்போது அவனிடம் வானவர்கள் வருவார்கள். அந்த மனிதர் நல்லவராக இருந்தால்,
"தூய உடலில் இருந்து தூய ஆத்மாவே!
நீ வெளியேறு. பாராட்டுக்குரிய நிலையில் நீ வெளியேறு. நல்லருளும் நறுமணமும் சினமுமே
கொள்ளாத இறைவனு(டைய நெருக்கமு)ம் உனக்கு உண்டு எனும் நற்செய்தியை நீ பெற்றுக்கொள்"
என்று வானவர்கள் கூறுவார்கள். உயிர் பிரியும் வரை இவ்வாறே கூறப்பட்டுக் கொண்டிருக்கும்.
மேலும், ( وَإِذَا
كَانَ الرَّجُلُ السُّوءُ، قَالُوا: اخْرُجِي أَيَّتُهَا النَّفْسُ الْخَبِيثَةُ،
كَانَتْ فِي الْجَسَدِ الْخَبِيثِ، اخْرُجِي ذَمِيمَةً وَأَبْشِرِي بِحَمِيمٍ
وَغَسَّاقٍ، وَآخَرَ مِنْ شَكْلِهِ أَزْوَاجٍ، فَلَا يَزَالُ يُقَالُ لَهَا ذَلِكَ
حَتَّى تَخْرُجَ ) அவர் தீய மனிதராக இருந்தால், "தரங்கெட்ட உடலில் இருந்து தரங்கெட்ட ஆத்மாவே! இகழுக்குரிய
நிலையில் நீ வெளியேறு. கொதி நீரும், சீழும் அதுபோன்ற வடிவிலான வேறு பானங்களும் உனக்கு உண்டு எனும் செய்தியை பெற்றுக்கொள்"
என்று வானவர்கள் கூறுவார்கள். உயிர் பிரியும் வரை இவ்வாறே சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-
இப்னுமாஜா-4252, முஸ்னது அஹ்மத்,
தஃப்சீர் இப்னு கஸீர் அல்அன்ஆம் வசனம்-61
மேற்காணும் (6:61) வசனத்திற்கு பேரறிஞர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய விளக்கமாவது.
( لِمَلَكِ الْمَوْتِ أَعْوَانٌ مِنَ الْمَلَائِكَةِ، يُخْرِجُونَ
الرُّوحَ مِنَ الْجَسَدِ، فَيَقْبِضُهَا مَلَكُ الْمَوْتِ إِذَا انْتَهَتْ إِلَى
الْحُلْقُومِ ) உயிரைக்
கைப்பற்றும் வானவருக்குப் பல உதவியாளர்கள் உள்ளனர். அவர்கள் உடலின் மற்ற பகுதிகளிலிருந்து
உயிரைக் கழற்றிக் கழுத்துப் பகுதிக்கு கொண்டு வருவார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும்
வானவர் உயிரைக் கைப்பற்றுவார். நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்
சான்றோர்களின் கூற்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ( اللهم هَوِّنْ عَلَى محمدٍ سَكَرَاتِ الْمَوتِ
) "இறைவா! முஹம்மதுக்கு மரண வேதனையை
இலேசாக்குவாயாக" என்று கூறுவார்கள். நூல்:- இஹ்யா
ஹுஸைன் பின் ஜுன்துப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள், ( اٰخَرَ شِدَّةٍ
يَلْقَاهَا الْمُؤْمِنُ الْمَوْتُ ) "ஓர் இறைநம்பிக்கையாளர் சந்திக்கும் இறுதிக் கஷ்டம் மரணமாகும்" என்று கூறினார்கள்.
நூல்:- முஸ்னது அஹ்மத்-1845
அறிஞர் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களிடம் ஜனாதிபதி உமர் (ரலி)
அவர்கள், ( حَدِّثْنَا عَنِ الْمَوْتِ ) "மரணத்தைப்பற்றிக் கூறுங்கள்'' எனக் கேட்டார்கள். அதற்கு அவர், ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، هُوَ كَغُصْن كَثِيرِ الشَّوْكِ
أُدْخِلَ فِي جَوْفِ رَجُلً، فَأَخَذَتْ كُلُّ شَوْكَةً بِعِرْقٍ، ثُمَّ جَذَبَهُ
رَجُلٌ شَدِيدُ الْجَذْبِ ) "ஜனாதிபதி அவர்களே! முட்கள் நிறைந்த ஒரு மரக்கிளையை
மனித உடலினுள் புகுத்தப்பட்டு, அதன் ஒவ்வொரு முள்ளும்
உடலின் ஒவ்வொரு நரம்பையும் நன்கு பிடித்துக்கொள்கிறது. பிறகு, ஒரு மனிதன் அதை மிகுந்த பலத்துடன் ஒரேயடியாக இழுப்பதைப் போன்று (உயிரும் உடலிலிருந்து
இழுக்கப்படுவதாக) இருக்கும்'' என்று கூறினார்கள்.
நூல்:- அல்முஹ்தளிரீன் ( المحتضرين ) இமாம் இப்னு அபித்துன்யா
ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( وَهُوَ أَشَدُّ مِنْ نَشْرِ بِالْمَنَاشِيرِ وَقَرْض
بِالْمَقَارِيضِ، وَغَلْيٍ فِي الْقُدُورِ، وَلَوْ أَنَّ الْمَيِّتَ نُشِرَ
(بُعِثَ مَنْ قَبْرِه)، فَأَخْبَرَ أَهْلَ الدُّنْيَا بِأَلَمِ الْمَوْتِ، مَا
انْتَفَعُوا بِعَيْشٍ وَلَا تَلَذَّذُوا بِنَوْمٍ ) அது (மரண வேதனை என்பது உடல்) இரண்டாக அறுக்கப்படுவதை விடவும்,
கத்தரிக்கோலால் வெட்டப்படுவதை விடவும், கொப்பரைகளில் வேகவைக்கப்படுவதை விடவும் கடுமையானது.
இறந்தவர்கள் (மீண்டும்) உயிர்த்தெழுப்பப்பட்டு (அவர்களின் மண்ணறைகளிலிருந்து கொண்டு
வரப்பட்டு) இந்த உலக மக்களுக்கு மரணத்தின் வலியைப் பற்றி எடுத்துரைத்தால், அவர்கள் வாழ்க்கையை அனுபவிக்கவோ, தூக்கத்தில் இன்பம் காணவோ மாட்டார்கள். நூல்:- அல்முஹ்தளிரீன்
( المحتضرين ) இமாம்
இப்னு அபித்துன்யா
அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் மரண நேரத்தில் இருந்தபோது,
அவரின் மகனார் ஒருவர் வந்து, ( يَا أَبَتَاهُ، إِنَّكَ قَدْ كُنْتَ تَقُولُ لَنَا: لَيْتَنِي كُنْتُ
أَلْقَى رَجُلًا عَاقِلًا عِنْدَ نُزُولِ الْمَوْتِ حَتَّى يَصِفَ لِي مَا يَجِدُ،
وَأَنْتَ ذَلِكَ الرَّجُلُ، فَصِفْ لِيَ الْمَوْتَ ) "என்னருமை தந்தையே! மரணம் நெருங்கும்போது ஒரு ஞானமுள்ள
மனிதர், அவர் என்ன அனுபவிக்கிறார்
என்பதை விவரிக்க முடியும். (ஆனால், அது குறித்து யாரும்
சொல்வதில்லையே!) நானாக இருந்தால் அது குறித்து சொல்வேன் என்று எங்களிடம் ஏற்கெனவே நீங்கள்
கூறியிருந்தீர்கள். நீங்கள் அவ்வாறான (ஞானமுள்ள) மனிதர் தான். எனவே, இப்போது மரண நிகழ்வு குறித்து எனக்கு விவரிங்கள்"
என்று கேட்டார்.
அதற்கு அம்ரு (ரலி) அவர்கள், ( وَاللَّهِ يَا بُنَيَّ لَكَأَنَّ جَنْبِي فِي تَخْتٍ، وَكَأَنِّي
أَتَنَفَّسُ مِنْ سَمِّ إِبْرَةٍ، وَكَأَنَّ غُصْنَ الشَّوْكِ يُجَرُّ بِهِ مِنْ
قَدَمَيَّ إِلَى هَامَتِي ) "என்னருமை மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! இது,
என் விலாப்பகுதி ஒரு படுக்கையில் இருப்பது போலவும்,
நான் ஒரு ஊசியின் துவாரத்தின் வழியாக சுவாசிப்பது
போலவும் (மூச்சுவிட மிகவும் சிரமமாக) இருக்கிறது. என் கால்களிலிருந்து ஒரு முள் கிளை
என் தலைக்கு இழுக்கப்படுவது போல் (மிகுந்த வேதனையுடன்) இருக்கிறது" என்று (தமது
மரண வேதனை குறித்து) விவரித்தார். நூல்:- அல்முஹ்தளிரீன் ( المحتضرين ) இமாம்
இப்னு அபித்துன்யா
அலீ (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். எவனது வசம் எனது உயிர் இருக்கிறதோ,
அவன் மீதாணையாக! உடலில் ஆயிரம் இடங்களில் வாளால்
வெட்டப்படுவதைக் காட்டிலும் மரணத்தின் இறுதி நேர வேதனை மிகக் கடினமானதாக இருக்கும்.
சக்கராத்தின் நிலை மனிதனை அலங்கோலமாக்கிவிடும்.
ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்கள் ஒரு நோயாளியைச் சந்தித்தபோது,
அவர் மரண வேதனையில் இருப்பதைக் கண்டார்கள். அவரது
(மரண) வேதனையையும் அவரது நிலையின் தீவிரத்தையும் அவர் கவனித்தார். மரண வேதனை குறித்த
அச்சத்தால் நிறம் மாறிய நிலையில் அவர் தனது குடும்பத்தினரிடம் திரும்பினார். அவரின்
குடும்பத்தினர், "அல்லாஹ் உங்களுக்கு
அருள்புரிவானாக! சாப்பிட வாருங்கள்" என்று அவரை அழைத்தனர்.
அதற்கு அவர், ( يَا
أَهْلَاهُ، عَلَيْكُمْ بِطَعَامِكُمْ وَشَرَابِكُمْ، فَوَاللَّهِ لَقَدْ رَأَيْتُ
مَصْرَعًا لَا أَزَالُ أَعْمَلُ لَهُ حَتَّى أَلْقَاهُ وَصَدَقَ عَبْدِاللَّهِ
بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ حَيْثُ قَالَ: السَّعِيدُ مَنْ وُعِظَ
بِغَيْرِهِ ) "என் குடும்பத்தினரே! நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள்.
(தற்போது எனக்கு வேண்டாம்.) ஏனென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு மரணத்தைக் (குறித்த உண்மை நிலையைக்) கண்டேன்,
நான் அந்த மரணத்தைச் சந்திக்கும் வரை அதற்கான நல்லறத்தில்
நான் தொடர்ந்து ஈடுபடப் போகிறேன். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்,
'மற்றவர்களின் அனுபவத்திலிருந்து
கற்றுக்கொள்பவரே உண்மையான பாக்கியசாலி' என்று உண்மையையே சொல்லியுள்ளார்"
என்று கூறினார். நூல்:- அல்முஹ்தளிரீன் ( المحتضرين ) இமாம் இப்னு அபித்துன்யா
துறவிகளில் ஒருவரிடம், ( مَا أَبْلَغَ الْعِظَاتِ ) "மிகவும் தெளிவான அறிவுரை எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ( النَّظَرُ إلَى الْأَمْوَاتِ ) "(மரணத்தின்போது எவ்வாறு
வேதனையை அனுபவித்திருப்பார்கள் என்ற சிந்தனையுடன்) இறந்தவர்களைப் பார்ப்பது" பதிலளித்தார்.
நூல்:- அல்முஹ்தளிரீன் ( المحتضرين ) இமாம் இப்னு அபித்துன்யா
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் தமது மரணவேளையில் அருகிலிருந்த
அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களிடம், (சகராத் எனும்) மரண வேதனை என்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே!"
என்று கூறியவாறு, "என் அருகில் இருந்து
'லா இலாஹ இல்லல்லாஹ்'
என்ற திருக்கலிமாவை ஓதிக்கொண்டே இருங்கள்"
என்று கூறினார்கள். இறுதியில், அன்னார் திருக்கலிமாவை
சொன்னவாறே மரணமடைந்தார்கள்.
இப்லீஸின் சூழ்ச்சி
(இறைவா!) என்னை நீ முஸ்லிமாகவே இறக்கச்செய்வாயாக!
மேலும் நல்லோருடன் என்னைச் சேர்த்திடுவாயாக! (என்று நபி யூசுஃப் - அலை அவர்கள் பிரார்த்தித்தார்கள்.) திருக்குர்ஆன்:- 12:101
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பார்கள்.
( وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ ) “இறைவா! இறக்கும்போது ஷைத்தான் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துவதிலிருந்தும்
உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.” அறிவிப்பாளர்:-
அபூயஸர் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1328
இறைநேசச் செல்வர் அபா ஸகரிய்யா (ரஹ்) அவர்களுக்கு இறுதிநேரம்
நெருங்கியது. இதை அறிந்த அன்னாருடைய நண்பர் ஒருவர், அன்னாரின் அருகில் அமர்ந்து "லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்
ரசூலுல்லாஹ்" என்று கலிமா சொல்லிக் கொடுத்தார். கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்ட
உடன் அன்னார் தனது முகத்தை வெறுப்போடு சுளித்து திருப்பிக்கொண்டார்கள்.
கொஞ்ச நேரம் சென்றது. மீண்டும் நண்பர் கலிமாவை சொல்லிக் கொடுக்கிறார்.
இப்போதும் அப்படியே அன்னார் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இன்னும் கொஞ்ச நேரம்
சென்று மீண்டும் கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டபோதும், அன்னார் முன் செய்தது போலவே முகத்தைச் சுளித்துகொண்டு,
"நான் சொல்லமாட்டேன்"
என்றார்கள்.
இதைக்கண்டு அச்சப்பட்ட அந்த நண்பர் மிகுந்த கவலையுடன் அன்னாரின்
அருகில் காத்திருந்தபோது, அன்னாருக்கு கொஞ்சம்
தெளிவு ஏற்பட்டு கண்களைத் திறந்து சுற்றுமுற்றும் பார்க்க தொடங்கினார்கள்.
தன் அருகே அமர்ந்திருந்த நண்பரை பார்த்து புன்முறுவல் செய்தவராக,
"சற்று முன் நீங்கள் என் காதருகில்
எதையாவது சொல்லிக் கொடுத்தீர்களா?" என்று கேட்டார்கள். ஆமாம்! கலிமாவை முதலிரண்டு தடவை சொல்லிக்கொடுத்தேன் அப்போதெல்லாம்
நீங்கள் முகத்தை சுளித்து வெறுப்புடன் திரும்பிக்கொண்டீர்கள். ஆனால் மூன்றாவது தடவை
சொல்லிக் கொடுத்தபோது "ஊஹும்... சொல்லமாட்டேன்" என்று சொல்லிவிட்டீர்கள்.
அதைக் கேட்டு எனக்கு மிகுந்த கவலையாகிவிட்டது. என்று அந்த நண்பர் கூறினார்.
"விஷயம் அப்படியல்ல. சற்று முன்னால் இப்லீஸ் என்
முன் தோன்றினான். அவனிடம் தண்ணீர் துருத்தி காணப்பட்டது. அவன் வந்து, எனது வலப் பக்கம் அமர்ந்து கொண்டு, தன்னிடம் இருந்த தண்ணீர் துருத்தியை அசைத்துக் காண்பித்து,
"இதோ குளிர்ச்சியான தண்ணீர்
என்னிடம் இருக்கிறது உனக்கு வேண்டுமானால் தருகிறேன்" என்றான். நான், வேண்டாம் என்று தலையை திருப்பிக்கொண்டேன்.
அதைத்தொடர்ந்து அவன், "ஈசா அல்லாஹ்வின் குமாரர்" என்பதாக சொல். உன்னுடைய வேதனை
நீங்கும்" என்றான் அப்போதும் வெறுப்புடன் எனது தலையைத் திருப்பிக் கொண்டேன்.
எனது கால் பகுதிக்கு எழுந்து வந்து நின்ற அவன்,
"அல்லாஹ் என்று ஒருவன் இல்லை"
என சொல் உனக்கு சொர்க்கம் கிடைக்கும்" என்று ஏமாற்றப் பார்த்தான். அப்போது தான்,
நான் "அப்படி சொல்லமாட்டேன்" என்று கூறினேன்.
அதைக்கேட்ட அவன், தன்னிடம் இருந்த தண்ணீர் துருத்தியை கீழே போட்டு உடைத்துவிட்டு என்னை விட்டும்
வெருண்டோடி விட்டான். இப்லீஸிடம் நான் கூறியதை தான் நீங்கள், நான் கலிமா சொல்ல மறுத்ததாக கருதிக்கொண்டீர்கள்.
எனவே, இதோ இப்போது நான் கலிமா சொல்லுகிறேன்
என்று கலிமாவை சொன்னார்கள். அன்னாரின் உயிரும் பிரிந்தது. நூல்:- ஜுஹ்ரதுர் ரியாள்
அல்லாஹுத்தஆலா தாம் விரும்புவோர்களை மட்டும் இறுதி நேரத்தில்
இப்லீஸின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவான். எனவே நாம், மரண வேதனை மற்றும் இப்லீஸின் சூழ்ச்சி குறித்து அல்லாஹ்விடம்
அவ்வப்போது பிரார்த்தித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
அல்லாஹுத்தஆலா நமக்கு மரண வேதனையை இலேசாக்கி, நம்மை இறைநம்பிக்கையாளர்களாக
இறக்கச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951