செல்வச்
சோதனை
فَلَمَّا
نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى
إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ
அவர்களுக்குச் சொல்லப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள்
மறந்துவிடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம்
அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக்கொண்டிருந்தன.)
அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு அவர்கள் ஆனந்தமடைந்து கொண்டிருந்த சமயத்தில்
(நம் வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக்கொண்டோம் (தண்டித்தோம்).
அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். திருக்குர்ஆன்:- 6:44
பொருளாதார ரீதியில் நான் தொட்டதெல்லாம் துவங்குகிறது
என்று பெருமை கொள்ளக்கூடாது. பல வழிகளில் இருந்து நமக்கு செல்வம் வந்து சேருமேயானால், அது குறித்து
மகிழ்ச்சிகொள்வதைவிட அச்சம் கொள்ளவேண்டும். காரணம், இந்த செல்வத்தால் நாம் சோதிக்கப்படலாம். அல்லது
செல்வத்தால் நம்மிடம் கெட்ட குணங்கள் அதிகரித்து, அதனால் இறைவன் நம்மை அழிக்கக்கூடும் என்று எண்ண
வேண்டும். எனவேதான், இஸ்லாமிய வரலாற்றில் நல்லோர்கள் பலரும் தமக்கு செல்வம்
அதிகரிப்பதை எண்ணி அச்சம்கொண்டனர்.
தாம் திரட்டிய செல்வம் அனைத்தும் தமது படிப்பறிவால், திறமையால், உழைப்பால்
கிடைத்தவையே என்று தம்பட்டம் அடிப்பவர்கள். தமக்கு ஏற்படும் நோய் நொடிகள் அனைத்திற்கும்
தமது சேட்டைகள் தான் காரணம் என்று ஒப்புக்கொள்வார்களா? அதுதானே உண்மை! அவ்வாறுதானே உணரவேண்டும்.
தகுதிக்கும் மீறி அல்லது பாவங்கள் செய்துக்கொண்டிருக்கும்போது
பல வழிகளிலும் செல்வங்கள் குவிகிறதா? சற்று எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும். இறைச்சோதனைக்கு
ஆளாகப்போகிறோம் என்றே பொருளாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ لِكُلِّ أُمَّةٍ فِتْنَةً وَفِتْنَةُ
أُمَّتِي الْمَالُ ) ஒவ்வொரு
சமுதாயத்தாருக்கும் ஒருவகை சோதனை உண்டு. என் சமுதாயத்தாரின் சோதனையே செல்வம் தான்.
நூல்:- திர்மிதீ-2258, ஹாகிம், இப்னு
ஹிப்பான்
பயம் வரவேண்டும்
(நபியே!) அவர்களில் சிலருக்கு சுகமனுபவிக்க நாம்
கொடுத்து இருப்பவற்றின் பக்கம் நீங்கள் உங்களுடைய பார்வையைச் செலுத்தாதீர்கள். இவை
யாவும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களே! அவர்களைச் சோதிப்பதற்காகவே (நாம் இவைகளை
அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.) திருக்குர்ஆன்:- 20:131
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا رَأَيْتَ اللَّهَ يُعْطِي الْعَبْدَ
مِنَ الدُّنْيَا عَلَى مَعَاصِيهِ مَا يُحِبُّ ، فَإِنَّمَا هُوَ اسْتِدْرَاجٌ ) ஓர் அடியான் பாவங்கள் புரிந்தும்கூட அவன் விரும்புகின்ற
உலகச் செல்வங்களை அல்லாஹ் அவனுக்கு வழங்குவதை நீர் கண்டால், அவனைப்
படிப்படியாக தண்டிப்பதற்காகவே அவற்றை அல்லாஹ் வழங்குகிறான் என்பதைப் புரிந்துகொள்.
பின்னர் நபியவர்கள் தலைப்பில் காணும் திருவசனத்தை ஓதிக்காட்டினார்கள். அறிவிப்பாளர்:- உக்பா பின் ஆமீர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது
அஹ்மத், தஃப்சீர் பஙவீ, தஃப்சீர் இப்னு கஸீர்
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் சிரியா நாட்டின்
"ஹிம்ஸ்" பகுதியின் கவர்னராக இருந்த சயீத் பின் ஆமிர் (ரலி) அவர்கள் மிகவும்
ஏழமையில் இருப்பதாக தகவல் அறிந்ததும், உடனே அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினார்கள்.
சயீத் (ரலி) அவர்கள் தமது வீட்டில் இருந்தபோது ஆயிரம் பொற்காசுகள் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது.
அப்போது சயீத் (ரலி) அவர்கள், "இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி ராஜிஊன்" என்று சப்தமிட்டவராக அலறினார்கள். வீட்டின் உட்பகுதியில்
இருந்த அவர்களின் மனைவியார் இவர்களது திடீர் சத்தத்தை கேட்டு, ( مَا
شَأْنُكَ يا سعيد ؟ أَمَاتَ أمير المؤمنين
) "சயீத் அவர்களே! என்னவாயிற்று? ஜனாதிபதி
உமர் (ரலி) அவர்கள் மரணித்து விட்டார்களா? என்று வினவினார்.
அதற்கவர்கள், ( بَل أَعْظَمُ مِن ذَلِكَ
) "(இல்லை) அதைவிடவும் பெரிய விஷயம்
வந்திருக்கிறது" என்றார்கள். (இன்னும் விஷயத்தைப் புரிந்து கொள்ளாத அந்த) அம்மையார், ( أَأُصِيبَ
الْمُسْلِمُون فِى وَقْعَةٍ ؟ ) “யாராவது பெரும் படையுடன் முஸ்லிம்களை தாக்க வருகை
தந்து விட்டார்களா?” என்று திரும்பவும் வினவினார். அதற்கவர்கள், ( بَل
أَعْظَمُ مِن ذَلِكَ ) "(இல்லை) அதைவிடவும் பெரிய விஷயம் வந்திருக்கிறது"
என்றார்கள். அந்த அம்மையார், ( وَمَا أَعْظَمُ مِنْ ذٰلِكَ
) “அதைவிட அப்படி என்ன பெரிய விஷயம்
வந்திருக்கிறது?" என்று வினவினார். சயீத் (ரலி) அவர்கள், ( دَخَلَتْ
عَلَىَّ الدنْيَا لِتُفْسِدَ آخرتى وَحَلَّت الفِتْنَةُ فِى بَيتِى
) "(அதாவது) என் மறுமை வாழ்வைக் கெடுப்பதற்காகவே
இந்த உலகம் என்னிடம் வந்துள்ளது. என் வீட்டினுள் சோதனை நுழைந்துவிட்டது" என்று
கூறினார்கள்.
உடனே அந்த அம்மையார், ( تَخَلَّصْ مِنْهَا
) "உடனடியாக அந்த சோதனையிலிருந்து
முதலில் வெளியே வாருங்கள்" என்றார். சயீத் (ரலி) அவர்கள், ( أَوَتُعِينِينَنِي
عَلَى ذٰلِكَ ) "அதற்கு நீ எனக்கு உதவியாக இருப்பாயா?" என்று
கேட்டார்கள். அந்த அம்மையார், "ஆம்! (உதவியாக இருப்பேன்)" என்றார். அதன் பிறகு
சயீத் (ரலி) அவர்கள் தனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுத்துவிடப்பட்ட செய்தியைச் சொன்னார்கள்.
பிறகு மனைவியின் சம்மதத்தோடு அந்த பொற்காசுகளை ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுத்து விட்டார்கள்.
நூல்:- சுவரும் மின் ஹயாத்திஸ் ஸஹாபா
உணரவேண்டுமே!
நாம் அவர்களுக்கு ஆண் சந்ததிகளையும் பொருள்களையும்
கொடுத்து வருவதைப் பற்றி அவர்கள் என்ன நினைத்துக்கொண்டனர்? இதனால் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில்
தீவிரமாக இருக்கிறோம் என்று நினைக்கின்றனரா? அவ்வாறன்று! (அது எதற்காக என்பதை) அவர்கள் உணர்ந்து
கொள்ளவில்லை. திருக்குர்ஆன்:- 23:55,56
அபூசினான் அத்துஅலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
(ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் ஈராக் நாட்டு வெற்றி கொள்ளப்பட்டது குறித்து சொல்லப்பட்டது.)
அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர், "நீங்கள்
ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் உங்களுக்கு (நாடுகளின்) வெற்றியை அளித்துள்ளான்.
உங்களுடைய பகைவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவியுமுள்ளான். உங்களுடைய கண்களை (வெற்றிப்
பரிசுகள் மூலம்) குளிர்ச்சியாக்கியும் உள்ளானே? என்று கேட்டார்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள்" "அண்ணல் நபி
(ஸல்) அவர்கள் ( لَا
تُفْتَحُ الدُّنْيَا عَلَى أَحَدٍ إِلَّا أَلْقَى اللَّهُ عَزَّ وَجَلَّ
بَيْنَهُمْ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَأَنَا أُشْفِقُ
مِنْ ذَلِكَ ) உலக(த்தின்
வெற்றியும் செல்வமு)ம் தாராளமாக வழங்கப்பட்ட எவராயினும், அவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் மறுமைநாள்
வரை அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருப்பதில்லை" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். அதைத்தான்
நான் அஞ்சுகிறேன் (அதனால் தான் அழுகிறேன்)" என்று கூறினார்கள் நூல்:- முஸ்னது
அஹ்மத்-89 முஸ்னது அப்து ஹுமைத், முஸ்னது அபீயஅலா, முஸ்னதுல் பஸ்ஸார், அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-4989
மாமேதை ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
( مَنْ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ فَلَمْ يَرَ
أَنَّهُ يَمْكُرُ بِهِ ، فَلَا رَأْيَ لَهُ ) அல்லாஹ்
யாருக்கு நல்ல வசதி வாய்ப்புகளை வழங்கியுள்ளனோ அவர் அதன் மூலம் தாம் சோதிக்கப்படலாம்
என்பதை உணராவிட்டால் அவர் அறிவில்லாதவர் ஆவார். பின்னர் தலைப்பில் காணும் திருவசனத்தை
ஓதி காட்டினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்
நமக்கு வரும் செல்வங்கள் ஆனந்தப்பட அல்ல. சோதனைக்கே
என்று உணருபோது தான் ஏழைகளை நாம் ஏளனமாகப் பார்க்காமல் இருப்போம். அப்போது தான் நாம்
இறைச்சோதனையில் இருந்து வெற்றிப்பெற இயலும்.
பிரபலமான திருக்குர்ஆன் விரிவுரையாளர் பேரறிஞர்
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( وَمَا أَخَذَ اللَّهُ قَوْمًا قَطُّ إِلَّا عِنْدَ
سَكْرَتِهِمْ وَغُرَّتِهِمْ وَنَعِيمِهِمْ فَلَا تَغْتَرُّوا بِاَللَّهِ ، إِنَّهُ
لَا يَغْتَرُّ بِاَللَّهِ إِلَّا الْقَوْمُ الْفَاسِقُونَ ) அல்லாஹ்வின் கட்டளையை மறந்து உலக இன்பங்களில்
மூழ்கி மயங்கிக்கிடக்கும் சமுதாயத்தையே அல்லாஹ் தண்டிப்பான். எனவே, அல்லாஹ்வை
மறக்கும் வகையில் உலக இன்பங்களில் சிக்கி ஏமாந்துவிடாதீர்கள். பாவிகள்தான் அல்லாஹ்வை
மறந்து ஏமாந்துபோவார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர்
இப்னு கஸீர்
இறைநேசர் ஷிப்லி (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரி:
247-334) உலகச் செல்வங்கள் நிரப்பமாக வழங்கப்பட்டவரைக் கண்டால், ( اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ
وَالْعَافِيَةَ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ ) "இறைவா! நான் உன்னிடம் மன்னிப்பையும், ஆரோக்கியத்தையும்
கேட்கின்றேன். அவருக்கு வழங்கப்பட்ட சோதனையிலிருந்து எனக்கு ஆரோக்கியத்தை வழங்கிய அல்லாஹ்விற்கே
எல்லா புகழும்!” என்று சொல்வார்கள். நூல்:- மிர்காத்துல் மஃபாதீஹ்
இறைநினைவை மறக்கடித்தால்
ஒருமுறை ஷாம் தேசத்து கவர்னர் ஹபீப் பின் மஸ்லமா
(ரஹ்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களுக்கு 300 பொற்காசுகளை அன்பளிப்பாகக் கொடுத்து அவைகளை
தமது தேவைக்கு செலவழித்துக் கொள்ளும்படி சொல்லி அனுப்பினார்கள். அப்போது அபூதர் (ரலி)
அவர்கள் அதைக்கொண்டு வந்தவரிடம், ( ارْجِعْ بِها إلَيْهِ، أما وجَدَ أحَدًا
أغَرَّ بِاللَّهِ مِنّا؟ ) “இவற்றை எடுத்துகொண்டு அவரிடமே திரும்பிவிடு! அல்லாஹ்விடம்
மோசம் போவதற்கு நம்மைத் தவிர உலகில் வேறு யாரும் (ஹபீபுக்கு) கிடைக்கவில்லையா?" என்று
கூறினார்கள். (அதாவது, உலகில் இவ்வளவு பெரிய தொகையை தன்னிடம் வைத்திருப்பது
அல்லாஹ்வை மறக்கடித்துவிடும். அவனுடைய தண்டனையிலிருந்து மனிதன் கவலையற்று ஆகிவிடுவதே
அல்லாஹ்விடம் மோசம் போவதாகும்.)
பிறகு கூறினார்கள். ( ذُو الدِّرْهَمَيْنِ أشَدُّ حَبْسًا مِن ذِي
الدِّرْهَمِ ) தீர்ப்பு
நாளன்று இரண்டு வெள்ளிக்காசுகள் உடையவன், ஒரு வெள்ளிக்காசு உடையவனைவிட அதிகக் சிக்கலில் இருப்பான்.
நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸுர் அத்தவ்பா வசனம்-35
திரண்ட செல்வத்தின் மூலம் சிலர் வழிகெட்டுப்போகக்கூடிய
அபாயம் இருக்கிறது.
நான் தொழுகை நோன்பு என இறைவணக்கங்களையும் சரியாகவே
நிறைவேற்றுகிறேன். ஆனாலும் எனக்கு அல்லாஹ் ஒன்றையும் பெரிதாக தரவில்லை. ஆனால், அதோ அவன்
பெரும்பாவி. அவன் செய்யாத சேட்டையே இல்லை. அவ்வளவு பெரிய அழுச்சாட்டியக்காரன். அவன்
சொத்து மேல் சொத்து வாங்கி குவித்து செல்வ செழிப்போடு வாழுகிறானே என்று நம்பி பலரும்
புலம்புகிறோம். ஆனால், பாவிக்கு வந்து குவியும் செல்வம் அவனை அழிக்க போதுமானது
என்கிறது இஸ்லாம்.
அல்லாஹ்வின் நினைவை விட்டும் நம்மை மறக்கடிக்கின்ற
செல்வம் வேண்டாம் என்று எண்ணவேண்டும். இதுவே உண்மையான இறைநம்பிக்கையாளர்களின் நிலைப்பாடு.
கொடியோன் காரூனுக்கு செல்வம் தந்த செருக்கு, அல்லாஹ்வை
மறக்க செய்தது. அதனால் அந்த செல்வத்துடனே அவன் அழிக்கப்பட்டான் என்கிறது அவனது வரலாறு.
உலகம் உன்னை நோக்கினால்
அல்லாஹ், ( وَإِذَا رَأَيْتَ الْغَنِيَّ مُقْبِلًا
إِلَيْكَ فَقُلْ ذَنْبٌ عَجِّلْتْ عُقُوبَتُهُ
) “செல்வம் உன்னை முன்நோக்கி வருவதை
நீ கண்டால், செய்த பாவத்திற்கு தண்டனை உலகில் கிடைத்திருக்கிறது
என்று விளங்கிக்கொள்!” என்று இறைத்தூதர் மூசா (அலை) அவர்களுக்குச் சொன்னான். நூல்:-
இஹ்யா
ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒருநாள் பருக தண்ணீர்
கேட்டபோது தேன் கலந்த நன்னீர் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. அதற்கு அவர்கள், "வேண்டாம்"
என ஒதுக்கினார்கள். பிறகு அழத்தொடங்கினார்கள். அவர்கள் அழுவதை கண்ட மக்களுக்கும் அழுகை
வந்துவிட்டது. சற்று நேரத்தில் அமைதியாகிவிட்டார்கள். பிறகு மறுபடியும் அழத் தொடங்கினார்கள்.
மக்கள், "ஏன்? என்ன காரணம்? எதற்காக அழுகிறீர்கள்?" என்று விசாரித்தனர்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "ஒருநாள்
நான் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது நபியவர்கள் யாரையோ பிடித்து
தள்ளுவதைப்போல் இருந்தது. ஆனால், பக்கத்தில் யாரும் இல்லை. அப்போது நான், "நாயகமே!
என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
நபியவர்கள், "மனித உருவெடுத்து உலகம் என் முன் வந்து நின்றது.
என் அருகே வராதே! தள்ளிப்போ! என அதை விரட்டிவிட்டேன். அது மறுபடியும் வந்து, 'நீங்கள்
என்னிடமிருந்து தப்பிவிடலாம். உங்களுக்குப் பிறகு வருபவர்கள் கண்டிப்பாக என்னிடம் மாட்டிக்கொள்வார்கள்' என்று
கூறியது" என்று பதிலளித்தார்கள். அந்நிகழ்வு நினைவுக்கு வந்துவிட்டது. எங்கே நான்
உலகத்தில் மாட்டிக்கொண்டுவிட்டேனோ எனப் பயந்து அழுகிறேன்" என்று விளக்கமளித்தார்கள்.
நூல்:- உஸுதுல் ஙாபா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْ كَانَتِ الدُّنْيَا تَعْدِلُ عِنْدَ
اللَّهِ جَنَاحَ بَعُوضَةٍ مَا سَقَى كَافِرًا مِنْهَا شَرْبَةَ مَاءٍ ) இவ்வுலகம் அல்லாஹ்விடம் ஒரு கொசுவின் இறக்கை
அளவுக்கு மதிப்புப் பெற்றதாக இருந்திருந்தால்கூட, அதிலிருந்து ஒரு மிடறு தண்ணீரைக்கூட எந்த இறைமறுப்பாளருக்கும்
பருகத் தந்திருக்க மாட்டான். அறிவிப்பாளர்:- சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் நூல்:-
திர்மிதீ-2242, இப்னுமாஜா-4100
அல்லாஹ்விடம் இவ்வுலக இன்பங்களுக்கும், செல்வங்களுக்கும்
அறவே மரியாதை கிடையாது. அவ்வாறு மரியாதை இருந்திருப்பின், இறைமறுப்பாளருக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட அவன் கொடுத்திருக்க
மாட்டான். (அவர்களுக்கு எந்த வசதி வாய்ப்பையும் வழங்கி இருக்க மாட்டான்.) தன்னிடம்
மதிப்பிற்குரிய ஒன்றை தன்னை மறுப்பவர்களுக்கு எப்படி அவன் வழங்குவான்? அவ்வாறே, தன் நேசர்களுக்கு
இவ்வுலக சுகங்களை மறுத்திருக்கவும் மாட்டான்.
இறைத்தூதர்கள், நபித்தோழர்கள், இறைநெருக்கம் பெற்றவர்களில் அதிகமானோர் ஏழைகளாகத்தான் வாழ்ந்தார்கள். இவர்கள்
செல்வம் என்ற சோதனைகளிலிருந்து பாதுக்காக்கப் பெற்றவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் மவ்லவி A.C.அகார்
முஹம்மது நளீமி அவர்கள் தமது அனுபவம் ஒன்றைக் கூறுகிறார்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த
என்னுடைய நண்பர்களில் ஒருவர் மிகப்பெரிய செல்வந்தர். அவர் ஆண்டுதோறும் நூறு ஏழைப்பெண்களுக்கு
திருமணம் நடத்திவைப்பார். ஆனால், அவரின் பூர்வீகம் இலங்கை தான்.
அவர் கூறுகிறார். என்னுடைய குழந்தை பருவத்தில் நாங்கள்
இலங்கையில் இருந்தபோது சாப்பிட்டிற்குக்கூட வழியில்லாத பரம ஏழையாகத்தான் இருந்தோம். அன்று எங்களுக்கு பசி மட்டுமே சோதனையாக
இருந்தது. ஆனால், இன்று நான் மிகப்பெரிய செல்வந்தனாகி ஏழை எளியோருக்கும்
தேவையுடையோருக்கும் பல்வேறு வகைகளில் உதவிகள் புரிகின்றேன். சாப்பாட்டிற்கே வழியில்லாமல்
சிரமப்பட்ட அந்த சோதனையைவிட இந்த திரண்ட செல்வமே மிகப்பெரிய சோதனையாக உணருகிறேன்.
காரணம், நான் செல்வந்தனாக இருப்பதால் ஏழை எளியோரையும், என்னிடம்
உதவி கோரி வருவோரையும் நான் எள்ளிநகையாடாமல் இருக்க வேண்டும்; அவர்களை
கேவலமாக பார்க்காமல் இருக்க வேண்டும்; இந்த செல்வத்தின் மூலம் எந்த நல்லறத்தை செய்தாலும்
அதில் மனத்தூய்மை பரிபூரணமாக இருக்க வேண்டும். நான் செய்த நல்லறம் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? என்று
தெரியாது. எனவே, பசி என்ற சோதனையைவிட செல்வம் என்ற சோதனை அதைவிட
பெரியதாக உணருகிறேன்" என்றார்.
அல்லாஹுத்தஆலா நமக்கு செல்வத்தைத் தருவதால் நம்முடைய
செயல்களெல்லாம் சரியாகவே உள்ளது. எனவே, அவன் நம்மைப் பொருந்திக் கொண்டான் என்று அர்த்தமல்ல.
நம்ரூத், ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன், அபூலஹ்ப், அபூஜஹ்ல் ஆகிய கொடியோர்களுக்கும் அல்லாஹ் செல்வத்தை
வாரி வழங்கினான. ஆனால், அவர்கள் அனைவரும் இறைவனின் கோபத்தைப் பெற்றார்களேயன்றி, இறைவனின்
பொருத்தத்தைப் பெற்றவர்கள் அல்லர்.
யார் பணக்காரன்? யார் ஏழை?
ஒரு பணக்காரப் பெண் துணி கடைக்குப்போய் கடைக்காரரிடம்
எனது மகனுக்கு திருமணம். ஆகவே, எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க
மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச்செல்கிறார்.
சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு
பணிப்பெண் வருகிறாள். கடைக்காரரிடம் என் முதலாளியின் மகனுக்கு திருமணம். அதனால் எனது
முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுள்ள சேலைகளை
எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுள்ள ஒரு சேலையை வாங்கிச்செல்கிறாள்.
இன்றைய காலத்தில் பணக்காரன் - ஏழை ஆகிய இருவருக்குமிடையில்
அன்பளிப்பைப் பரிமாறிக்கொள்ளும்போது, பெரும்பாலும் இந்த நிலையைக் காணலாம்.
சுற்றுலாவிற்கு வந்து ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருக்கும்
ஒரு பணக்காரப்பெண் தமது ஆறு மாத குழந்தைக்கு, ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும்
என்று கேட்கிறார்.
அதற்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தனியாக பணம்
செலுத்த வேண்டும் என்று கூற, அந்தப் பணக்காரப்பெண்ணும் பணத்தை செலுத்தி பாலை
வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறாள்.
ஒருநாள் சுற்றிப் பார்த்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும்
வழியில் குழந்தை பசியால் அழுததால், ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் பால்
வாங்கி குழந்தைக்கு ஊட்டினாள். பிறகு பால் எவ்வளவு என்று டீ கடைக்காரரிடம் கேட்க, டீ கடைக்காரர்
குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு
பதிலளித்தார்.
பணம் உள்ளவன் எல்லாம் பணக்காரன் அல்லன். மனிதநேயம்
கருதி அதை இறைவனுக்காக கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன். அவனே அந்தச் செல்வத்தின்
மூலம் இறையன்பைப் பெறக்கூடும்.
எனவே, அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்கிய செல்வங்கள் அனைத்தும்
சோதனையே என்றுணர்ந்து, நம்மிடம் உள்ள செல்வங்களை இறைவனுக்கு பொருத்தமான
வழிகளில் மனத்தூய்மையுடன் செலவழித்து இறையன்பைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி,
இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment