முந்திச் செல்வோம்
وَالسَّابِقُونَ السَّابِقُونَ أُولَئِكَ الْمُقَرَّبُونَ
முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே இவர்கள்தான் (அல்லாஹ்வுக்கும்) மிகவும்
நெருங்கியவர்கள். திருக்குர்ஆன்:- 56:10, 11
இவ்வுலகம் போட்டிகள் நிறைந்தது. இங்கு போட்டிகள் இல்லாத துறையே இல்லை எனலாம். இப்போட்டிகளில்
வெற்றி ஒன்றே இலக்கு. வியாபாரப் போட்டியில் லாபம் இலக்கு. வேலைப் போட்டியில் பதவி இலக்கு.
விளையாட்டுப் போட்டியில் பதக்கம் இலக்கு. வெற்றியின் தகுதிக்கேற்றவாறு பரிசுகளிலும்
வேறுபாடுகள் இருக்கும். முதலிடம் வந்தால் தங்க மெடல்; இரண்டாவதாக வந்தால் வெள்ளிப் பதக்கம்; மூன்றாவது என்றாலோ வெண்கலம் தான்.
இவ்வாறு மறு உலகிலும் பரிசுகள் உண்டு. உலகமே அந்த போட்டிக்கான களம். நற்செயல்களில்
முந்துவது போட்டி. நற்செயல்களில் முந்துவதற்கு தகுந்தவாறு வழங்கப்படும் பரிசுகளும்
வேறுபடும்.
மிகப் பிரியமானவர் யார்?
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்
அமர்ந்திருந்தேன். அந்நிலையில் அலீ (ரலி), அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆகிய இருவரும் வந்து உள்ளே வர அனுமதி கேட்டார்கள்.
"உசாமா! அல்லாஹ்வின் தூதரிடம் எங்களுக்காக அனுமதி கோருவீராக!" என்றனர். எனவே
நான், "நாயகமே! அலீ (ரலி),
அப்பாஸ் (ரலி) ஆகிய இருவரும் தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கின்றனர்" என்று கூறினேன்.
அப்போது நபியவர்கள், இருவருக்கும் அனுமதி
அளித்தார்கள். இருவரும் உள்ளே சென்று, ( يَا رَسُولَ اللَّهِ جِئْنَاكَ نَسْأَلُكَ أَىُّ أَهْلِكَ أَحَبُّ إِلَيْكَ
) "நாயகமே! உங்களின் குடும்பத்தினரில்
உங்களுக்கு அதிக பிரியமானவர் யார்?என்று கேட்கவே உங்களிடம்
வந்தோம்" என்று கூறினர். அதற்கு நபியவர்கள், "முஹம்மதின் மகள் ஃபாத்திமா" என்றார்கள். அப்போது அவ்விருவரும்,
( مَا جِئْنَاكَ نَسْأَلُكَ
عَنْ أَهْلِكَ ) "உங்களின் குடும்பத்திலுள்ளவர்கள் (அதாவது, உங்களை மனைவியார் மற்றும் பிள்ளைகள்) பற்றி கேட்பதற்காக நாங்கள்
உங்களிடம் வரவில்லை. (மாறாக உங்களுக்கு நெருக்கமானோர் மற்றும் தொடர்பாளர்கள் குறித்தே
கேட்கிறோம்)" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், ( أَحَبُّ أَهْلِي إِلَىَّ مَنْ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ
وَأَنْعَمْتُ عَلَيْهِ أُسَامَةُ بْنُ زَيْدٍ ) “அல்லாஹ்வும் நானும் யார்மீது அருள் புரிந்தோமோ அத்தகைய (சிறப்புக்குரிய)வரான
உசாமா பின் ஸைத் என்னுடன் இருப்போரில் எனக்கு மிகவும் பிரியமானவராவார்" என்று
பதிலளித்தார்கள்.
அவ்விருவரும், "பிறகு யார்?"
என கேட்டனர். அதற்கு நபியவர்கள், "பிறகு அலீ பின் அபீதாலிப்" என்றார்கள். அப்போது
அப்பாஸ் (ரலி) அவர்கள், ( يَا
رَسُولَ الله جَعَلْتَ عَمَّكَ آخِرَهُمْ ) "நாயகமே! உங்களின் சிறிய தந்தையை (அப்பாஸ் ஆகிய என்னை)
அவர்களில் கடைசியானவராகி விட்டீர்களே" என்று கூறினார். அதற்கு நபியவர்கள்,
( لأَنَّ عَلِيًّا قَدْ
سَبَقَكَ بِالْهِجْرَةِ ) “அலீ (ஹிஜ்ரத் எனும்)
புலம்பெயர்ந்து சென்றதில் உங்களை முந்திவிட்டார்" என்று பதிலளித்தார்கள் நூல்:-
திர்மிதீ-3745
தாம் வசிக்கும் வீடுவாசல், தோட்டங்கள்,
தொழில்துறை, மக்களின் பழக்கவழக்கங்கள் ஆகிய பலவற்றையும் அப்படியே விட்டுவிட்டு
அல்லாஹ்விற்காக (ஹிஜ்ரத் எனும்) புலம்பெயர்வது அவ்வளவு சாதாரண காரியமல்ல. இவ்வாறான
பல கஷ்டங்களுக்கு மத்தியில் புலம்பெயர்ந்து சென்றவர்கள், மக்காவின் இறைமறுப்பாளர்களால்
அடி உதை என பல்வேறான துன்பத் துயரங்களுக்கு
ஆளானார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. எனவே, அது மிகவும் சிரமமான பயணமாக இருந்தது.
அதனால்தான் இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரத் முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தது. அதில்,
எவர்கள் முந்திக்கொண்டாரோ அவர்கள், ஏக இறைவனான அல்லாஹுத்தஆலா மற்றும் இறைத்தூதர் முஹம்மத்
(ஸல்) அவர்களின் பிரியத்தை அதிகம் பெற்றார்கள். இது விஷயத்தில் குடும்ப உறவுகள்கூட
பிற்படுத்தப்பட்டுவிட்டது.
அப்பாஸ் (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்)
அவர்களுக்கு சிறிய தந்தை ஆவார். மேலும், நபியவர்களைவிட வயதில் மூத்தவர் ஆவார். ஆனால், அலீ (ரலி) அவர்கள் தமது சிறிய தந்தையின் மகன் ஆவார். நபியவர்கள்
பார்க்க பிறந்தவர் ஆவார். நபியவர்களைவிட மிகவும் வயது குறைந்தவர். இருந்தாலும்,
அலீ (ரலி) அவர்கள்மீது தாம் கொண்ட அதிகப் பிரியத்திற்கான
காரணத்தை நபியவர்கள் விவரித்தார்கள்.
ஆம்! இறைவனின் உவைப்பை எண்ணி (ஹிஜ்ரத் எனும்) தமது தாய் நாட்டைவிட்டு அந்நிய நாட்டுக்கு
புலம்பெயர்ந்து செல்வதில் முந்திச் சென்றவர்கள் தான் மற்றவர்களைவிட சிறந்தவர்கள். ஏக
இறைவனான அல்லாஹுத்தஆலா மற்றும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிரியத்தை அதிகம்
பெற்றார்கள்.
பாதிச் செல்வத்தை கொடுத்தாலும்
மேலும், அவர்கள் நன்மையான
காரியங்களை செய்வதற்கு விரைகின்றனர். இத்தகையோர் தான் நல்லடியார்கள். திருக்குர்ஆன்:-
3:114
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தர்மம் வழங்குமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அந்த காலகட்டத்தில்
யதார்த்தமாக என்னிடத்தில் (அதிகமான) பொருள் செல்வங்கள் இருந்தன. அந்நிலையின் நாள்
(என் மனதுக்குள்) "என்றைக்காவது அபூபக்ர் (ரலி) அவர்களை போட்டியில் வெல்வதாக இருந்தால்
இன்றைக்கு அவரை வென்றுவிடுவேன்" என்று கூறிக்கொண்டேன்.
மேலும், எனது செல்வத்தில்
பாதியை (நபியவர்களின் சமூகத்திற்கு) எடுத்து வந்தேன். அப்போது நபியவர்கள்,
( مَا أَبْقَيْتَ لأَهْلِكَ
) "உமது குடும்பத்தினருக்காக
என்ன விட்டு வந்தீர்?" என்று வினவினார்கள்.
அதற்கு நான், ( مِثْلَهُ
) "இது போன்ற (செல்வத்)தை விட்டு
வந்தேன்" என்று கூறினேன்.
அந்நிலையில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த அனைத்து பொருள்களையும் கொண்டு
வந்தார்கள். அப்போது நபியவர்கள், ( يَا أَبَا بَكْرٍ مَا أَبْقَيْتَ لأَهْلِكَ ) "அபூபக்ர்! உமது குடும்பத்தினருக்காக எதை விட்டு
வந்தீர்கள்?" என்று வினவினார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ( أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ ) "அவர்களுக்கு அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (அதாவது,
அவ்விருவரின் திருப்தியையும்) விட்டு வந்தேன்"
என்று கூறினார்கள். அப்போது நான், ( وَاللَّهِ لاَ أَسْبِقُهُ إِلَى شَيْءٍ أَبَدًا
) "அல்லாஹ்வின் மீதாணையாக! இவரை
ஒருபோதும் எவ்வகையிலும் என்னால் வெல்லமுடியாது" என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.
நூல்:- அபூதாவூத்-1678, திர்மிதீ-3598,
தாரிமீ-1701, ஹாகிம்
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பாசறையில் கல்வி பயின்ற நபித்தோழர்கள், இறைவன் விரும்பும் ஒரு காரியம் என்றால் அதில் ஒருவரை
ஒருவர் முந்திக்கொண்டு செயல்படுவார்கள். இதுவே நல்லோர்களின் குணமாகும்.
சமுதாயப் பணிக்கு நிதி திரட்டும் சமயம் சில செல்வந்தர்களிடம், "ஏதேனும் உதவி செய்யுங்கள்" என்று கூறினால்,
"பிற மக்களிடம் வாங்கிவிட்டு
வாருங்கள்" என்பார்கள். சரி என்று பிற மக்களிடம் வாங்கிவிட்டு மீண்டும் அவரிடம்
சென்றால், பிற மக்கள் எவ்வளவு
கொடுத்தார்கள் என்று விசாரித்துவிட்டு, பிறர் கொடுத்த தொகையோ அல்லது அதைவிட பத்து அல்லது இருபது சேர்த்து கொடுப்பார்கள்.
இது சிறந்த குணமல்ல. இந்த குணம் நம்மிடமிருந்து களையப்பட வேண்டும். நற்செயலில் பிறரை
முந்த வேண்டுமே தவிர, பிந்திவிடக் கூடாது.
தருணம் பார்த்து
இன்னும் (நல்லறங்கள் செய்து) அதற்கு முந்தி செல்பவர்கள் முந்திக் கொள்ளட்டும்.
திருக்குர்ஆன்:- 83:26
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
( يَدْخُلُ مِنْ أُمَّتِي زُمْرَةٌ هُمْ سَبْعُونَ أَلْفًا تُضِيءُ
وُجُوهُهُمْ إِضَاءَةَ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ) "என் சமுதாயத்தாரில்
எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் பௌர்ணமி இரவில் சந்திரன் பிரகாசிப்பதைப் போன்று
முகங்கள் பிரகாசித்தப்படி (விசாரணையின்றி சொர்க்கத்துக்குள்) நுழைவார்கள்" என்று
கூறினார்கள்.
உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல் அசதீ (ரலி) அவர்கள், ( يَا
رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ ) "நாயகமே! அவர்களில்
ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னார்.
நபியவர்கள், ( اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ ) "அல்லாஹ்வே! இவரையும்
அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். பிறகு அன்சாரிகளில்
ஒருவர் எழுந்து, ( يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ ) "நாயகமே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!"
என்று சொன்னார். அதற்கு நபியவர்கள், ( سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ ) "இந்த விஷயத்தில் உக்காஷா
உம்மை முந்திவிட்டார்" என்று சொன்னார்கள். நூல்:- புகாரீ6542, முஸ்லிம்-369
அபூரைஹானா ஷம்ஊன் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்)
அவர்களுடன் நாங்கள் ஒரு போரில் கலந்து கொண்டோம். ஒருநாள் இரவு நாங்கள் ஒரு மேடான பகுதிக்கு
வந்து அங்கேயே இரவு முழுக்க தங்கினோம். அப்போது கடுங்குளிர் எங்களைத் தாக்கியது. அதனால்
சிலர் பூமியில் குழி தோண்டி, அதில் போய் இருந்து
கொண்டு தன் மீது கேடயத்தைப் போட்டு மறைத்துக் கொள்வதை நான் பார்த்தேன். இதைக்கண்ட நபியவர்கள்,
( مَنْ يَحْرُسُنا فِي هَذِهِ اللَّيْلَةِ فَأَدْعُوَ لَهُ بِدُعَاءٍ
يَكُونُ لَهُ فِيهِ فَضْلٌ؟ ) “இன்றிரவு
நம்மை காவல் காப்பவர் யார்? அவருக்கு மேன்மை கிடைக்க
நான் பிரார்த்தனை புரிவேன்" என்றார்கள்.
உடனே அன்சாரிகளில் ஒருவர், "நாயகமே! நான் (காவல் காக்கிறேன்) என்றார். நபியவர்கள், "நீர் அருகில் வாரும்" என்றார்கள். உடனே அவர்
நபியவர்களுக்கு அருகில் வந்தார். நபியவர்கள், ( مَنْ
أَنْتَ؟ ) "நீர் யார்?" என கேட்டார்கள். அந்த அன்சாரி தமது பெயரை நபியவர்களிடம் தெரிவித்தார்.
உடனே அவருக்காக நபியவர்கள் பிரார்த்தனை புரியலானார்கள். அதிகமாகவே பிரார்த்தனை புரிந்தார்கள்.
அவருக்கு நபியவர்கள் செய்த பிரார்த்தனையை செவியுற்ற நான், "(நாயகமே! நானும் (காவல் காக்கிறேன்)" என்றேன்.
உடனே நபியவர்கள், "நீர் அருகில் வாரும்"
என்றார்கள். நான் அருகில் சென்றேன். நபியவர்கள், "நீ யார்?" எனக் கேட்டார்கள். நான், "அபூரைஹானா" என்றேன்.
உடனே நபியவர்கள் அந்த அன்சாரிக்குச் செய்த பிரார்த்தனையைவிடச் சற்றுக் குறைவாகப்
பிரார்த்தனை புரிந்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், தாரிமீ, தஃப்சீர் இப்னு கஸீர்
ஆலு இம்ரான் வசனம்-200
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اغْتَنِمْ خَمْسًا قبلَ خَمْسٍ : شَبابَكَ قبلَ هَرَمِكَ ، وصِحَّتَكَ قبلَ سَقَمِكَ ، وغِناكَ قبلَ فَقْرِكَ ، وفَرَاغَكَ قبلَ شُغْلِكَ ، وحَياتَكَ قبلَ مَوْتِكَ ) ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்னர் ஐந்து விஷயங்களைப் பற்றிக்கொள்: முதுமைக்கு முன் உன்னுடைய இளமை, நோய்க்கு முன் உன்னுடைய உடல்நலம், வறுமைக்கு முன் உன்னுடைய செல்வம், வேலையில் ஈடுபடுவதற்கு முன் உன்னுடைய ஓய்வு நேரம், மரணத்திற்கு முன் உன்னுடைய வாழ்க்கை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, கஸ்ருல் அமல் இமாம் இப்னு அபிதுன்யா, ஹாகிம், ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ
பிறரைவிட நற்செயல்களை விரைந்து செய்கின்றவர்களுக்கு அதற்கான கூலி அதிகமாக கிடைக்கும்.
நற்செயல்களின் பலன்களை கண்கூடாக கண்டுகொண்ட பின்பு அதில் ஈடுபடுபவர்களுக்கு அதற்கான
கூலி சற்று குறைவாகவே கிடைக்கலாம். மறுமையில் சொர்க்கத்தின் சுகபோக வாழ்க்கையை வாழத்
துடிப்போர் உலகில் நற்செயலில் ஈடுபடுவதற்கு ஆசையும் ஆர்வமும் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் ஒரு நேரத்தில் வாழ்வில் வெற்றி பெற, நல்ல வாய்ப்பை
இறைவன் ஏற்படுத்துவான். அதை பயன்படுத்தி முந்தி சென்றவன் வெற்றி பெற்றுவிடுகிறான்.
கால தாமதம் செய்தால்
ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின்
வீட்டு வாசலில் சிலர் கூடியிருந்தனர். அவர்களில்
சுஹைல் பின் அம்ர் (ரலி) அவர்களும், அபூசுஃப்யான் (ரலி) அவர்களும், இன்னும் குறைஷித்
தலைவர்களில் சிலரும் இருந்தனர்.
அப்போது உமர் (ரலி) அவர்களின் பணியாள் மக்களின் முன்னால் வந்து, ஸுஹைப் (ரலி), பிலால் (ரலி) அவர்கள் போன்ற பத்ருப் போரில் கலந்துக்கொண்ட நபித்தோழர்களை
முதலில் உள்ளே செல்ல அனுமதி வழங்கிக்கொண்டிருந்தார். (அனுமதி கிடைக்க தாமதமாகிய காரணத்தால்
கோபம் கொண்டவராக) அபூசுஃப்யான் (ரலி) அவர்கள், ( مَا رَأَيْتُ كَالْيَوْمِ قَطُّ، إِنَّهُ يُؤْذِنُ لِهَذِهِ الْعَبِيدِ
وَنَحْنُ جُلُوسٌ لَا يَلْتَفِتُ إِلَيْنَا ) "இன்றைய தினத்தைப் போல் ஒருநாளும் நான் கண்டதில்லை.
நாமெல்லாம் இங்கு அமர்ந்திருக்கும்போது நம் பக்கம் ஏறிட்டும் பார்க்காமல் இந்த அடிமைகளுக்கே
அனுமதி வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள்" என்று கூறினார்.
அப்போது சுஹைல் பின் அம்ர் (ரலி) அவர்கள், ( أَيُّهَا الْقَوْمُ، إِنِّي وَاللَّهِ لَقَدْ أَرَى الَّذِي فِي
وُجُوهِكُمْ فَإِنْ كُنْتُمْ غِضَابًا، فَاغْضَبُوا عَلَى أَنْفُسِكُمْ دُعِيَ
الْقَوْمُ وَدُعِيتُمْ، فَأَسْرَعُوا وَأَبْطَأْتُمْ ) "சமூகத்தினரே! அல்லாஹ்வின்
மீதாணையாக! நான் இப்போது உங்களின் முகங்களில் (வெறுப்பை) மாற்றத்தை காணுகிறேன். நீங்கள்
கோபம் கொள்வதாக இருந்தால் உங்கள்மீதே நீங்கள் கோபம் கோபப்பட்டு கொள்ளுங்கள். ஏனெனில்,
நீங்களும் (ஆரம்பத்திலேயே இஸ்லாத்தின் பக்கம்) அழைக்கப்பட்டீர்கள்.
அவர்களும் அழைக்கப்பட்டார்கள். ஆனால், அவர்கள் தான் இஸ்லாத்தை விரைந்து ஏற்றுக்கொண்டனர். நீங்களோ (அதை ஏற்க) தாமதித்துவிட்டீர்கள்"
என்று பிறகு மீண்டும், ( لَا
يَجْعَلُ اللَّهُ عَبْدًا أَسْرَعَ إِلَيْهِ كَعَبْدٍ أَبْطَأَ عَنْهُ
) "அல்லாஹுத்தஆலா தன் பக்கம்
மிகவும் விரைந்து வந்த அடியார்களைப் போல, தாமதித்து வரும் அடியார்களை உயர்த்துவதில்லை" என்று கூறினார். நூல்:- அல்இஸ்திஆப்
இஸாபா, தஃப்சீர் ஃபீ ளிலாலில் குர்ஆன், ஹயாத்துஸ் ஸஹாபா. பாகம்-1
பக்கம்-574
அபூசுஃப்யான் ரலி), சுஹைல் பின் அம்ர்
(ரலி) போன்றோர் ஒரு காலத்தில் மக்களின் மாபெரும் தலைவர்களாக இருந்தனர். இவர்களைப் போன்ற
தலைவர்கள் காத்துக் கிடக்க, ஒரு காலத்தில் அடிமைகளாக
இருந்த பிலால் (ரலி), சுஹைப் (ரலி) ஆகியோர்களுக்கு
முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதிகாரம் செலுத்தியே பழக்கப்பட்டவர்களுக்கு இது எப்படியிருக்கும்?
இருந்தாலும், அவர்கள் தம்மைத்தானே தேற்றிக்கொண்டனர்.
அற்பமான உலகின் அழிந்துவிடக்கூடிய செல்வங்களில் மனிதன் போட்டி போட்டுக் கொண்டு
முன்னேற துடிக்கிறான். ஒவ்வொருவனும் மற்றவனை முந்திவிட வேண்டும் என்பதற்காகவும் பிறரைவிட
தாம் அதிகமாக சொத்துக்களை சேர்த்துவிட வேண்டும் என்பதற்காகவும் படாத பாடுபடுகிறான்.
ஆளாய் பிறக்கிறான். அதனால் தான் இந்த உலகில் அவன் அநியாயம் செய்கிறான். ஒழுக்கமிழக்கின்றான்.
பலி பாவங்களுக்கு அஞ்ச மறுக்கிறான். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான். முடிவில் அழிந்துபோகிறான்.
மனிதன் போட்டி போட வேண்டியதெல்லாம் காலத்தால் அழிக்கமுடியாத என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய
சொர்க்கத்தின் சுகபோகங்களுக்காகத் தான் இருக்க வேண்டும். இதுதான் போட்டி போட்டு அடையத்
துடிப்பதற்குரிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
மனிதன், இவ்வுலக வாழ்விற்காக
போட்டி போடும்போது அது அவனை கீழான நிலைக்கும், கேவலத்திற்கும் ஆளாகிவிடுகிறது.
மறுமை வாழ்விற்காக போட்டி போடும்போது அது அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று,
அவனை மகாத்மாவாக மாற்றிவிடுகிறது. மறுமையில் பேரின்பத்திற்காக
முயற்சிப்பது இவ்வுலகை சீர்திருத்துகிறது; வளப்படுத்துகிறது. ஆனால், உலகச் செல்வங்களை
குவிக்க முயற்சித்து இந்த மண்ணுலகை புழுக்களும், பூச்சிகளும் நிறைந்த சாக்கடையாக மாற்றி விடுகிறது.
சிறப்பு பெற்றவர்கள்
(நபியே! அவர்கள்) யாவருக்கும் அவர்களின் செயல்களுக்குத் தக்க பதவிகள் உண்டு. திருக்குர்ஆன்:-
6:132
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تَسُبُّوا أَحَدًا مِنْ أَصْحَابِي فَإِنَّ أَحَدَكُمْ لَوْ
أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا أَدْرَكَ مُدَّ أَحَدِهِمْ وَلاَ نَصِيفَهُ ) என் தோழர்களை ஏசாதீர்கள். இறைவன் மீதாணையாக! உங்களில் ஒருவர் உஹுத்
மலையளவு தங்கத்தை (தானமாக) செலவிட்டாலும், என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு அல்லது அதில் பாதியளவுக்கூட எட்ட
முடியாது. அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3673,
முஸ்லிம்-4968
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் மிகவும் சிறப்பு பெற்றவர்கள் ஆண்களில்
அபூபக்ர் (ரலி) அவர்கள், பெண்களில் கதீஜா
(ரலி) அவர்கள் தான். காரணம், இஸ்லாத்தை ஆரம்பக்காலத்தில் ஏற்றுக்கொண்டவர்கள் இந்த இருவர் தான்.
இந்த இருவருக்கு பிறகு தான் மற்ற நபித்தோழரின் சிறப்புகள் இருக்கிறது. ஏனெனில்,
இந்த இருவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதில் மற்ற
தோழர்களைவிட முந்திச் சென்றார்கள். இறைவனிடமும் இறைத்தூதரிடமும் நெருக்கத்தையும்,
நேசத்தையும் அதிகம் பெற்றார்கள்.
இஸ்லாம் வளர்ந்தோங்க ஆரம்ப காலங்களில் நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு
தன்னை அர்ப்பணித்தார்கள். அதுவே, அவர்கள் அண்ணல் நபி
(ஸல்) அவர்களால் இந்த அளவுக்கு புகழப்பட காரணமாகும்.
நற்செயல்களில் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு செயலாற்றினால், இறை நெருக்கமும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நெருக்கமும்
நிச்சயம் நமக்கு கிட்டும். அதற்குரிய அழகிய வாய்ப்பை அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்குவானாக!
ஆமீன்!
(இந்தக் கட்டுரை சுமார்
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. எமது எழுத்தோவியத்தில் முதலில் பிரசுரமான
கட்டுரை இதுவே!)
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்:
நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951