Search This Blog

Monday, 18 August 2025

கற்பனைப் பேச்சு

 

கற்பனைப் பேச்சு

 

وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا

(நபியே!) நீங்கள் அறியாத யாதொரு விஷயத்தையும் நீங்கள் பின்தொடராதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலை பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். திருக்குர்ஆன்:- 17:36

 

பிற மனிதர்கள் பற்றிய தீய எண்ணம் கொள்ளாதிருப்பது உண்மை முஸ்லிம் பண்பாகும். தீய எண்ணம் கொள்வது, வதந்திகளையும் விபரீதங்களையும் உருவாக்கும். பிறரைப் பற்றி தனது கற்பனைக்கு ஏற்றவாறு பேசவோ அல்லது அபாண்டமாக பழி சுமத்துவோ மனதில்கூட எண்ணம் வரக்கூடாது என்கிறது இஸ்லாம்.

 

பிறரின் குறைகள் வெளியே வரக்கூடாது என்றும், அப்படியே வந்தாலும் அது பரவி விடக்கூடாது என்றும் எண்ணுபவனே சிறந்த மனிதன் ஆவான். அறிவினர்கள், தீயவர்கள் சாதாரணமாக பேசும் போதும், கோபமடைந்த நிலையில் பேசும் போதும் கவனக்குறைவாக இருந்து அவதூறு சொல்பவர்களாக மாறிவிடுகின்றனர்.

 

இதுவெல்லாம் சிறுபாவம் தானே! என்று நாம் மலிவாக கருதும் சில தவறுகள் அல்லாஹ்விடம் பெரும் தண்டனைக்குரிய குற்றங்களாக மாறிவிடுகிறது. காரணம் என்னவெனில், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகப்பெரியதாகும்.

 

இஸ்லாமியப் பார்வையில் அவதூறு வதந்தி இவைகள் மிகக் கொடிய பாவச் செயலாகும். அதனால் தான் இதில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதித்து, மனிதர்கள் அதன் பக்கம் நெருங்கக் கூடாது என இஸ்லாம் எச்சரிக்கிறது.

 

ஊர்ஜிதமாகாத ஒரு தகவலை, "அவர் சொன்னார்! இவர் சொன்னார்" என்ற பெயரில் பலர் வாயிலாகப் பரப்பப்படும்போது, பொய்யும் மெய்யாகி விடுகிறது. இதனால் பாதிக்கப்படும் மனிதனுக்கு ஏற்படும் மன உளைச்சல், உள்ள குமுறல் அவப்பெயர் ஆகியவற்றை யாரும் சிந்திப்பதில்லை.

 

"உன்னிடம் பிறரைப் பற்றி அவதூறு பேசுபவன் உன்னைப் பற்றியும் பிறரிடம் அவதூறு பேசுவான்" என்கிறார் ஒரு அறிஞர்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ ) (பிறர்மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம்தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5143, முஸ்லிம்-5006

 

சாபத்திற்குரியவர்கள்

 

எவர்கள் கள்ளம் கபடமில்லாத இறைநம்பிக்கையாளரான கற்புடைய பெண்கள்மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் இறைவனுடைய சாபத்திற்குள்ளாவார்கள். மேலும், அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. திருக்குர்ஆன்:- 24:23

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் ( اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ ) "பேரழிவை ஏற்படுத்தும் பெரும் பாவங்களை தவிர்த்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு, அதில் ஒன்று ( وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ ) "இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினி பெண்கள்மீது அவதூறு கூறுவதாகவும்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6857

 

பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்திற்கும் எதிரான வதந்திகளை மட்டும் மக்கள் சர்வ சாதாரணமாக நம்பி விடுகின்றனர். பெண்களுடன் ஆண்களை தொடர்புபடுத்தி கூறும் செய்திகளையும் ஆர்வத்துடன் செவிமடுத்து அதை நம்பவும் செய்கின்றனர். "இருந்தாலும் இருக்கும்" என்று கூறி, அதை ஆமோதிக்கின்றனர். இதனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலமே சூனியமாகி விடுவதை பற்றி இவர்களுக்கு கவலையில்லை.

 

ஒரு பெண்மீது அவள் நடத்தை கெட்டவள் என்று அவதூறு கூறிவிட்டால் போதும். அதன் காரணத்தால் பெண்ணின் குடும்ப கௌரவம் காற்றோடு கரைந்து போய் விடுகிறது.

 

செய்தி ஊடகங்களும் பெண்களின் ஒழுக்கம் குறித்து ஆராயாமல் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. தங்கள் மகள் அல்லது சகோதரிகள் பற்றி மற்றவர்கள் இப்படி அவதூறு பரப்பினால் அவர்கள் அதை ரசிப்பார்களா?

 

நான்கு சாட்சிகள்

 

எவனேனும் பத்தினி பெண்கள்மீது அவதூறு கூறி, (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகள் கொண்டு வரவில்லையோ அவனுக்கு நீங்கள் எண்பது சாட்டையடி கொடுங்கள். பின்னர் அவன் கூறும் சாட்சியத்தை எதிர்காலத்திலும் ஒப்புக்கொள்ளாதீர்கள். (ஏனெனில்,) நிச்சயமாக இத்தகையோர் பெரும் பாவிகள். திருக்குர்ஆன்:- 24:4

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. 'பக்ர் பின் லைஸ்' குலத்தைச் சேர்ந்த ஒருவர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, தாம் ஒரு பெண் ஒருத்தியுடன் விபச்சாரம் புரிந்துவிட்டதாக நான்கு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அவர் திருமணமாகாதவராக இருந்ததனால் நபியவர்கள் அவருக்கு நூறு சாட்டையடி அளி(க்குமாறு பணி)த்தார்கள். பிறகு நபியவர்கள், அம்மனிதரிடம் அந்தப் பெண்ணுக்கு எதிரான ஆதாரங்களை வினவினார்கள்.

 

அப்போது அப்பெண், "நாயகமே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் பொய்யுரைத்து விட்டார்" என்று கூறினாள். எனவே நபியவர்கள், அம்மனிதருக்கு வீண் பழி சுமத்தியதற்கான தண்டனையாக (மீண்டும்) எண்பது சாட்டையடி அளி(க்குமாறு பணி)த்தார்கள். நூல்:- அபூதாவூத்-3874

 

பிறர் மீது எந்த குற்றம் சுமத்தினாலும் அதற்கு குறைந்தபட்சம் நான்கு நேரடி சாட்சிகள் இருக்க வேண்டும். அதிலும், நான்கு சாட்சியாளர்களை தனித்தனியே விசாரித்தாலும் அவர்கள் ஒரே விதமாக பதில் கூற வேண்டும். அப்போதுதான் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க முடியும்.

 

இவ்வாறு இல்லாமல் பிறரர் சொல் கேட்டோ, சந்தேகத்தின் பேரிலோ அவதூறு சுமத்தக்கூடாது. ஒருவர்மீது குற்றம் சுமத்தி, அதை நான்கு சாட்சிகளைக் கொண்டு உண்மையென நிரூபிக்க தவறிவிட்டால், அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தாலும்கூட குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது சாட்டையடி தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழியின் தீர்ப்பாகும்.

 

தீய குணத்திற்குச் சான்று

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ  ) என்னைப் பற்றி நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-110, முஸ்லிம்-4

 

ஒருவர் சொல்லாததை சொன்னதாக சொன்னால் அது அவதூறாகும். அது அவரோடு போய்விடும். ஆனால், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவை மார்க்கமாக அமைவதால் நபியவர்கள்மீது இட்டு கட்டி பொய் சொல்வது இல்லாத ஒன்றை மார்க்கமாக்குவதாகிவிடும். இது உலக மக்களை ஏமாற்றுகின்ற மோசடியாகும். எனவே, இதற்கு தண்டனை நரகம் என்பது சரியானதாகும். இட்டுக்கட்டப்பட்ட நபிமொழிகளை அறிவிப்பது தவறாகும்.

 

மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் இது விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நற்காரியத்திற்காக இருந்தாலும் வாய்க்கு வந்ததையெல்லாம் அல்லது யாரோ எங்கோ சொன்னதையெல்லாம் ஆதாரம் இல்லாமல், குர்ஆன் மற்றும் ஹதீஸாக இல்லாததை "இது குர்ஆன் வசனம் தான், இது ஹதீஸ் தான்" என்று சொல்லிவிடுவதும், அல்லாஹ்வின்மீதும் நபியவர்கள்மீதும் இட்டுக்கட்ட கூடியதாகவே கருதப்படும்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ ) ஒருவர் தான் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-6

 

ஒருவர் கேள்விப்படும் தகவல்களில் உண்மையும் இருக்கலாம்; பொய்யும் இருக்கலாம். இந்நிலையில் காதில் விழுந்த செய்திகள் அனைத்தையும் ஒருவர் மற்றவருக்கு சொல்வது என்பது பொய்யை பரப்புவதற்கு துணை போவதாகவே அமையும்.

 

நமக்கு வரும் எந்த செய்திகளாக இருந்தாலும் அது சரி, அது பிறரின் வாய் வழியாகவோ அல்லது ஊடகங்கள் வழியாகவோ அல்லது சமூக வலைதளங்கள் வழியாக வந்தாலும் உடனே வந்த செய்திகள் உண்மையா? பொய்யா என்பதை நன்கு பரிசீலித்த பின்னரே நாம் கேள்விப்பட்ட தகவல்களை அடுத்தவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையேல், நாமும் பொய்யராகவும் வதந்தியை பரப்பியவராகவும் கருதப்படுவோம்.

 

நல்லதையே நினைப்போம்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தபூக் போருக்கு செல்வதற்காக அறிவிப்புச் செய்தார்கள். நபியவர்களும் நபித்தோழர்களும் தபூக் என்ற இடத்தை அடைந்த பின்னர் நபியவர்கள், ( مَا فَعَلَ كَعْبٌ ) "கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் என்ன ஆனார்? (ஏன் அவர் வரவில்லை)" என்று கேட்டார்கள். அப்போது பனூ சலீமா குலத்திலிருந்து ஒரு மனிதர், ( يَا رَسُولَ اللَّهِ، حَبَسَهُ بُرْدَاهُ وَنَظَرُهُ فِي عِطْفِهِ‏ ) "நாயகமே! அவரின் இரு ஆடைகளை அணிந்து அழகு பார்த்துக் கொண்டிருப்பது தான் அவரை போருக்கு வரவிடாமல் தடுத்து விட்டன" என்று கூறினார். (அன்றைய காலத்தில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாமல் இருப்பவர்களை நயவஞ்சகர்களாக கருதப்பட்டது. இந்த கருத்தில்தான் அவர் இவ்வாறு கூறினார்.)

 

உடனே முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் அந்த மனிதரை நோக்கி! ( بِئْسَ مَا قُلْتَ، وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، مَا عَلِمْنَا عَلَيْهِ إِلاَّ خَيْرًا‏ ) "நீர் சொல்வது தவறு. அல்லாஹ்வின் மீதாணையாக! நாயகமே! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை" என்று கூறினார். நூல்:- புகாரீ-4418, முஸ்லிம்-5346

 

நாம் சிலரை நல்ல மனிதர்கள் என்று எண்ணி இருப்போம். ஆனால், அவர்களைப் பற்றி எவரேனும் ஒருவர் தவறாக நம்மிடம் பேசினால், உடனே அதை நம்பி விடக்கூடாது. பிறரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அரைகுறையாக வந்த தகவல்களை வைத்துக்கொண்டு, "ஆஹா... இவரை நல்லவர் என்றல்லவா எண்ணியிருந்தேன்? இவரா... இந்தத் தவறை செய்துவிட்டார்" என்று நாமும் அவரைப் பற்றி தவறாக எண்ணி விடக்கூடாது. பிறரிடம் அதைப் பற்றி பரப்பி விடவும் கூடாது. முடிந்தால் சம்பந்தப்பட்டவரிடமே நேரடியாகக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.

 

தகவலைக் கொண்டு வந்தவரிடம், "என்னை பொருத்தவரையில் அவர் நல்லவர்தான்; உனக்கு அவரைப் பற்றி இன்று தவறான தகவலை சொன்னவர் யார்?" என்று விசாரிக்க வேண்டும். மேலும் அவரிடம், "நல்ல மனிதர்கள்மீது வதந்தியை கிளப்பி விடாதே! அது பெரும் பாவமாகும்" என்று எச்சரிக்க வேண்டும். நாமும் எப்போதும் பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொள்ள வேண்டும். பிறரின் குறைகளை ஆராய்வதும், பேசுவதும் நல்லதல்ல.

 

சந்தேகம் வேண்டாம்

 

இறைநம்பிக்கையாளர்களே! மூசாவுக்கு தொல்லை தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக்கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூசா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார். திருக்குர்ஆன்:- 33:69

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ இஸ்ராயீல் சமுதாயத்தினர் ஒருவர் மற்றவரிடம் வெட்கத்தலத்தை பார்த்துக்கொண்டு நிர்வாணமாகவே குளிப்பார்கள். இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் வெட்கத்தால் தனியாகவே நிர்மாணமாக குளிப்பார்கள். ஆகவே அம்மக்கள், ( وَاللَّهِ مَا يَمْنَعُ مُوسَى أَنْ يَغْتَسِلَ مَعَنَا إِلاَّ أَنَّهُ آدَرُ ‏ ) "இறைவன் மீதாணையாக! மூசாவுக்கு விரைவீக்கம் உள்ளது. எனவே தான் அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை" என்று அவதூறு கூறினர்.

 

ஒருமுறை மூசா (அலை) அவர்கள் குளிப்பதற்கு சென்றார்கள். அப்போது ஆடையை கழற்றி கல்மீது வைத்தார்கள். அவர்களது ஆடையோடு அந்த கல் ஓடியது. மூசா (அலை) அவர்கள் அந்த கல்லை பின் தொடர்ந்து சென்று, ( ثَوْبِي حَجَرُ ثَوْبِي حَجَرُ ) "கல்லே! எனது ஆடை! கல்லே! எனது ஆடை!" என்ற சப்தமிட்டு கொண்டே ஓடினார்கள். இறுதியில் பனூ இஸ்ரவேலர்கள் (இருந்த பகுதிக்கு வந்தபோது) மூசா (அலை) அவர்களின் வெட்கத்தலத்தைப் பார்த்துவிட்டு, ( وَاللَّهِ مَا بِمُوسَى مِنْ بَأْسٍ ) "இறைவன் மீதாணையாக! மூசாவுக்கு எந்த குறையும் இல்லை" என்று கூறினார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-278, முஸ்லிம்-4727

 

இறைத்தூதர் மூசா (அலை) அவர்களைப்பற்றி பரப்பிவிடப்பட்ட அவதூறைப் போக்கி, உண்மையாகவே மூசாவின் உடல் உறுப்புக்கள் எந்த குறையுமின்றி அழகாகவும் நேர்த்தியாகவும் தான் இருக்கின்றது என்று அவதூறை பரப்பியவர்களின் நாவுகளிலேயே அல்லாஹ் சொல்ல வைத்தான். இது குறித்தே மேற்காணம் திருவசனம் (33:69) கூறுகிறது.

 

இறைத்தூதர்கள்மீது ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு சந்தேகமோ வதந்தியே தோன்றிவிட்டால் அவர்களால் எடுத்துரைக்கப்படும் இறைச்செய்தியின்மீதும் ஐயம் எழக்கூடும். எனவேதான், அல்லாஹுத்தஆலா உடனே அதைத் தெளிவுபடுத்தி, களைந்து அவர்கள் மிகவும் பரிசுத்தமானவர்கள் என்று உலக மக்களுக்கு அறிவித்து விடுவான்.

 

நமது பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்தவுடன் இரண்டு மூன்று மாதங்களுக்குள்ளாக அந்த பெண் கர்ப்பமாகிவிட வேண்டும் என்று எண்ணுகிறோம். அதற்குள்ளாக அந்த பெண் கர்ப்பமாகாவிட்டால் இருவரில் யாரிடமாவது குறை இருக்குமோ மலட்டுத்தன்மை இருக்குமோ என்று சந்தேகப்படுகிறோம். அதுவே, அந்தப் பெண் கர்ப்பமாகாமல் ஓரிரு ஆண்டுகள் கடந்து விட்டால், இருவரில் யாரிடத்திலாவது மலட்டுத்தன்மை இருக்கிறது என்று நாமாக உறுதி செய்து வதந்தியைப் பரப்பிவிடுகிறோம்.

 

திருமணம் முடிந்தவர்களுக்கு குழந்தையை விரைவாக தருவதும் தாமதமாக்குவதும் மலட்டுத்தன்மை ஏற்படுத்துவதும் அல்லாஹ்வின் செயலாகும் என்கிறது திருக்குர்ஆன். (20:50)

 

"மலட்டுத்தன்மை உள்ளது" என்ற வதந்திக்கு அதிகம் ஆளாகுவது பெண்கள்தான். எத்தனையோ பெண்கள் திருமணம் முடிந்து பத்து அல்லது இருபது ஆண்டுகள் கடந்த பின்னர் குழந்தைப் பெற்றுள்ளார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும், பிறர்மீது ஏதாவது வதந்தியை பரப்புவதில் ஒரு ஆனந்தம்.

 

தனக்குப் பிடிக்காத ஒரு ஆணை தனது தனக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டுவிட்டால் அவரிடமிருந்து பிரிந்து விடுவதற்காக, "இவருக்கு ஆண்மை இல்லை" என்று பெற்றோர், உறவினர் மற்றும் ஊர் பஞ்சாயத்தார்களிடம் அவதூறு கூறி, நீலிக் கண்ணீர் வடிப்பது பெண்களில் சிலரின் குணம். உடனே அந்த ஆண் மகனிடமிருந்து மணவிலக்கு (தலாக்) வாங்கிக் கொண்டு அவனிடமிருந்து இந்த பெண்ணை பிரித்து விடுவார்கள்.

 

சில மாதம் அல்லது சில வருடத்திற்குப் பின்பு "ஆண்மை இல்லை" என்று அவதூறு கூறப்பட்ட அந்த ஆண்மகன் வேறொரு பெண்ணை மணமுடித்து குழந்தையை பெற்றெடுத்து விடுவான். தந்தை என்று பெயர் அவனுக்கு கிடைத்துவிடும். இது போன்ற செய்திகள் ஏராளம் உண்டு.

 

திருமணம் முடிந்த பின்னர் பெண்ணை அல்லது மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்றால், உண்மையான காரணத்தைக் கூறி மணவிலக்கு கேட்பது குற்றமில்லை மணவிலக்கை அனுமதித்த மார்க்கம் இஸ்லாமாகும். மணவிலக்கு பெறுவதற்கு அவதூறு கூறக் கூடாது.

 

நாட்டில் குழப்பம்

 

அமைதி அல்லது அச்சம் குறித்த ஏதேனும் ஒரு செய்தி அவர்களுக்கு கிடைத்தால், உடனே அதை அவர்கள் பரப்பிவிடுகின்றனர். அல்லாஹ்வின் தூதரிடமும் தங்களில் அதிகாரம் உள்ளவர்களிடமும் அவர்கள் அதை கொண்டுசென்றிருந்தால், அவர்களில் (உண்மையை) ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொண்டிருப்பார்கள். திருக்குர்ஆன்:- 4:83

 

உஹது யுத்தக் களத்தில் இறைமறுப்பாளர்கள், "முஹம்மத் கொல்லப்பட்டு விட்டார்" என்ற வதந்தியை பரப்பியபோது முஸ்லிம்களுக்குள் அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, பெரும் குழப்பம் உருவானது.

 

அதை போல் நமது நாட்டில் "கோட்சே" என்ற இந்துத்துவ வெறியன் தமது கையில் இஸ்மாயீல் என்ற இஸ்லாமியப் பெயரை பச்சைக் குத்திக்கொண்டு, தனது ஆணுறுப்பை கத்னா செய்து கொண்டு, நமது தேசத்தந்தை காந்தியை கொன்றுவிட்டான். இந்த அடையாளங்களை மட்டும் வைத்துக்கொண்டு "காந்திஜியை ஒரு முஸ்லிம் தான் கொன்றுவிட்டான்" என்று வதந்தி காட்டுத்தீ போல் இந்தியா முழுவதும் பரவியது. அதன் விளைவு நாடெங்கும் இந்துக்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் மதக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தால் மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

 

“நன்மை செய்கிறோம்” என்ற பெயரில் பயத்தை பரப்புவதை சிலர் விளையாட்டாக கடைபிடித்து வருகின்றனர். பரபரப்புக்கு செய்தி ஊடகங்கள் இது போன்ற வேலைகளை செய்கின்றன. ஒரு பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி கிடைத்தால், அதை தக்கவர்களிடமும், ஆய்வு செய்பவரிடமும் கூறி உறுதிப்படுத்தாமல், மக்களிடம் பரப்ப கூடாது.

 

"அங்கே பத்து பேர் செத்துவிட்டார்கள்; இங்கே நூறு பேர் வீட்டை கொளுத்தி விட்டார்கள்" என்பது போன்ற வதந்திகளை பரப்புவதால் நாளைக்கு வர வேண்டிய கலவரம் இன்றைக்கே வந்துவிடும். மக்களும் பீதியில் உறைந்து, நிம்மதியை இழந்துவிடுவார்கள். இதுபோல் மிகப்பெரிய பாதுகாப்பின்மை ஏற்பட்டிருக்கும்போது எதையும் மறைத்தோ, குறைத்தோ பரப்புவதும் தவறு. இது போன்ற செய்திகள் கிடைத்தால், வழிநடத்தும் தலைவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். மாறாக, நாமாக அதை பரப்பக்கூடாது என்பது போன்ற கருத்துக்களை மேற்காணும் வசனம் கூறுகிறது.

 

நாட்டில் வாழும் சமூக விரோத சக்திகள், ஆதாரமற்ற வதந்திகளை அவ்வபோது மக்களிடையே பரப்பி விடும்போது, அதை உடனே நம்பிவிடுவது தான், மதக்கலவரம் சாதிக் கலவரம் வெடிப்பதற்கு காரணமாகும். அதனால் பல உயிர்கள், உடமைகள் பலியாகின்றன.

 

நமது நாட்டில் குஜராத் மாநிலத்தில் கோத்ரா நகருக்கு இரயில் வந்தவர்களுக்கு விபத்தை ஏற்படுத்தி எரித்துவிட்டு, இதனை முஸ்லிம் தான் செய்தார்கள் என்ற வதந்தியை உருவாக்கி, அதன் மூலம் பல்லாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, பல நூறு கோடி சொத்துக்கள் சூறையாடப்பட்டது. இந்த வதந்தியை பரப்பி, பெரும் சேதத்தை செய்தவர்கள் அம்மாநிலத்தின் முதல்வருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று பிறகுதான் தெரியவந்தது.

 

இஸ்லாமிய எதிரிகளின் சூழ்ச்சியினால், ஏதாவது ஒரு சமூக விரோத கும்பல் கலவரத்தையோ, குண்டுவெடிப்பையோ நிகழ்த்திவிட்டு, இதை செய்தது ஒரு இஸ்லாமிய அமைப்பினர் என்று ஏதேனும் ஒரு இஸ்லாமியப் பெயரை குறிப்பிட்டு, உலக அளவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான விரோத மனப்பான்மையை உருவாக்கி வருகின்றனர்.

 

இறைவனின் நீதிமன்றத்தில்

 

எவர்கள் இறைநம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக) கூறி துன்புறுத்துகின்றார்களோ அவர்கள் நிச்சயமாக பெரும் அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து செல்கின்றனர். திருக்குர்ஆன்:- 33:58

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قَذَفَ مَمْلُوكَهُ وَهْوَ بَرِيءٌ مِمَّا قَالَ، جُلِدَ يَوْمَ الْقِيَامَةِ، إِلاَّ أَنْ يَكُونَ كَمَا قَالَ ) எவர் நிரபராதியான தம் அடிமையின்மீது அவதூறு கூறுகின்றாரோ அவருக்கு மறுமைநாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தாலே தவிர! அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6858

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلاَةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا  وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ ) என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் ஒருவர் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற நற்செயல்களுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் பிறரைத் திட்டியிருப்பார்; அவதூறு கூறியிருப்பார்; அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மையிலிருந்து சிலவற்றை (அவரால் உலகில் பாதிக்கப்பட்ட) சிலருக்கு கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால் (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சிலவற்றை எடுக்கப்பட்டு இவர்மீது போடப்படும். பிறகு இவர் நரகில் தூக்கியெறியப்படுவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5037

 

பிறரைப் பற்றி அவதூறு பேசிவிட்டு இவ்வுலகில் எண்பது சாட்டையடியை விட்டு தப்பித்துக் கொண்டாலும், மறுமை நாளின் நீதிபதியான அல்லாஹ்விடம் அதற்குரிய தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. அங்கே பழித்தீர்க்கப்படும்.

 

ஓர் செல்வந்தர் அவதூறால் பாதிக்கப்படும்போது அவர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர்மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து பழித் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால், இதற்கு வசதி இல்லாதவர் நிச்சயமாக மறுமைநாளில் இறைவனின் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர்மீது வழக்குத் தொடர்வதற்கு போதிய வசதி இறைவன் வழங்குவான் என்பதில் சந்தேகம் இல்லை.

 

பாதிக்கலாம்

 

அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறெவரும் பிறரைப் பற்றி) தீய வார்த்தையை பகிரங்கமாய் பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் (அனைத்தையும்) செவியேற்பவனாகவும் அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான். திருக்குர்ஆன்:- 4:148

 

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது. (கூஃபாவின் ஆளுநர்) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி கூஃபாவாசிகள் (சிலர் ஜனாதிபதி) உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டனர். சஅத் (ரலி) அவர்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்களின் முறையீடுகளில் ஒன்றாக இருந்தது. ஆகவே, உமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி அவர்களை வரவழைத்து இதைப் பற்றி விசாரித்தார்கள்.

 

அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே நான் அவர்களுக்கு தொழுவித்துவந்தேன். அதில் நான் எந்த ஒன்றையும் குறை வைக்கவில்லை" என்று பதிலளித்தார்கள். இதையொட்டி உமர் (ரலி) அவர்கள் ஒருவரை சஅத் (ரலி) அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பிவைத்து, சஅத் (ரலி) அவர்கள் தொடர்பாக கூஃபாவாசிகளிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரிக்கச் சென்றவர் கூஃபாவாசிகளிடம் விசாரணை மேற்கொண்டார். (கூஃபாவிலிருந்த) ஒரு பள்ளிவாசல் விடாமல் எல்லாவற்றிலும் அவரைப் பற்றி விசாரித்தார். அனைவரும் சஅத் (ரலி) அவர்களை மெச்சி நல்ல விதமாகவே கூறினர்.

 

இறுதியில், உசாமா பின் கத்தாதா என்பவர் எழுந்து, எங்களிடம் நீங்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் நான் (எனது கருத்தைக்) கூறுகிறேன்: "சஅத் அவர்கள் (தாம் அனுப்பும்) படைப் பிரிவுடன் தாம் செல்ல மாட்டார். (பொருட்களை) சமமாகப் பங்கிடமாட்டார். தீர்ப்பளிக்கும்போது நீதியாக நடக்க மாட்டார்" என்று (அவதூறு) கூறினார்.

 

இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், ( أَمَا وَاللَّهِ لأَدْعُوَنَّ بِثَلاَثٍ، اللَّهُمَّ إِنْ كَانَ عَبْدُكَ هَذَا كَاذِبًا، قَامَ رِيَاءً وَسُمْعَةً فَأَطِلْ عُمْرَهُ، وَأَطِلْ فَقْرَهُ، وَعَرِّضْهُ بِالْفِتَنِ ) "அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக மூன்று பிரார்த்தனைகளை நான் செய்யப் போகிறேன்" என்று கூறிவிட்டு, "இறைவா! உன்னுடைய இந்த அடியார் (என்னைப் பற்றிக் கூறிய குற்றச் சாட்டில்) பொய் சொல்லியிருந்தால், பகட்டாகவும் புகழுக்காகவும் அவர் இவ்வாறு குறை கூற முன்வந்திருந்தால், அவரது வாழ்நாளை நீட்டி (அவரை தள்ளாமையில் வாட்டி) விடுவாயாக! அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!" என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

 

இதன் அறிவிப்பாளரான அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் (சஅத் அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனைகளுக்கு உள்ளானார்.) அவரிடம் (நலம்) விசாரிக்கப்பட்டால், ( شَيْخٌ كَبِيرٌ مَفْتُونٌ، أَصَابَتْنِي دَعْوَةُ سَعْدٍ ) “நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதிகனாக இருக்கிறேன்; சஅத் அவர்களின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது" என்று கூறுவார்.

 

மேலும், அப்துல் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னாளில் அவரை நான் பார்த்திருக்கிறேன். முதுமையினால் அவருடைய புருவங்கள் அவருடைய கண்கள்மீது விழுந்து விட்டிருந்தன. அவர் சாலைகளில் செல்லும் அடிமைப் பெண்களிடம் சில்மிஷம் செய்பவராக இருந்தார். நூல்:- புகாரீ-755

 

நமக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருப்பது உத்தமம். மற்றவர்களுக்கு முன்னால் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் செய்யாதவற்றையெல்லாம் செய்தார் என்று இட்டுக்கட்டி பேசுவது தீயோர்களின் குணமாகும். இதனால் பாதிக்கப்பட்டவர் மனம் நொந்து சபித்துவிட்டால் அதன் பாதிப்பை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

 

தவறு செய்தவர்களை முதலாளியோ, மேனேஜரோ, ஆசிரியரோ கண்டிக்கும்போது அவர்களைப் பற்றி இன்னும் அதிகமாக போட்டுக் கொடுப்பதும், அவர்கள் செய்யாதவற்றையெல்லாம் செய்ததைப் போன்று கூறுவதும், அவர்கள் பெயரை ரிப்பேர் ஆக்கிவிட்டு நாம் மட்டும் நல்ல பெயர் எடுக்கும் முயற்சிப்பதும் இன்று சர்வசாதாரணமாகவிட்டது. இது இழிவான செயல் என்பதை உணர வேண்டும்.

 

எனவே, நாம் பிறரைப் பற்றி அவதூறு கூறுவதை விட்டும் நாவை பேணி வாழ அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!

 

(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

Sunday, 17 August 2025

அழகிய திருத்தங்கள்

 

அழகிய திருத்தங்கள்

 

ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ

(நபியே!) நீங்கள் (மனிதர்களை) மதிநுட்பத்துடனும் அழகான நல்லுபதேசங்களை கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! திருக்குர்ஆன்:- 16:125

 

மனிதர்கள் குறைபாடு உடையவர்கள் தான். இதற்கு விதிவிலக்காக விரல் விட்டு எண்ணக்கூடிய மனிதர்கள் கூட உலகில் இருக்க முடியாது. பிறர் விரும்பத்தகாத செயலை செய்யும் போது நமக்கு கோபம் வருகிறது. சிலர் பண்பு கருதி, குறிப்பிட்ட மனிதர் கருதி, சூழ்நிலைகளைக் கருதி கோபத்தை அடக்கிக் கொள்கிறார்கள்.

 

சிலரால் முடிவதில்லை. காச்மூச் என்று கத்துகிறார்கள். கன்னாபின்னா என்று திட்டுகிறார்கள். அறிவிருக்கா உனக்கு? அடி முட்டாள்! என்று ஆரம்பித்து பைத்தியக்காரா! நாயே! பேயே! முண்டம்! செருப்பால அடிப்பேன்! என்று போய் இன்னும் இங்கு எழுத முடியாத வார்த்தைகளையெல்லாம் திட்டித் தீர்க்கிறார்கள். நாம் இவர்களை மாபெரும் தவறு செய்பவர்களின் பட்டியலில் தாராளமாக சேர்த்துவிடலாம்.

 

தாங்கள் தவறே செய்தாலும் அதை எவரும் சுட்டிக்காட்டக் கூடாது என்று எதிர்பார்க்கும் மனிதர்கள் நிறைந்த உலகம் இது. பிறரின் தவறை நாம் காணும் போது உடனே உணர்ச்சி பிளம்பாகக் கத்தி கூச்சலிடாமல் பக்குவமாய் இனிமையுடன் குழைந்து எடுத்துச் சொன்னால், "ஆமாம்! தப்பு எம்பேர்ல தான்" என்று ஒப்புக்கொள்வார்கள்.

 

சில சமயம் வெளியே ஒப்புக் கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் உணரவாவது செய்வார்கள்.

 

அன்பான முறையில்

 

முஆவியா பின் அல்ஹகம் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது தொழுது கொண்டிருந்த ஒருவர் தும்மினார். உடனே நான், (யர்ஹமுக்கல்லாஹ்) "அல்லாஹ் உமக்கு கருணை புரிவானாக!" என்று மறுமொழி கூறினேன்.

 

உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான், "நீங்கள் ஏன் என்னை பார்க்கிறீர்கள்?" என்று (கோபத்தோடு) கேட்டேன். மக்கள் பதில் ஏதும் கூறாமல் தங்கள் கைகளால் தொடைமீது தட்டினார்கள். என்னை அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்து கொண்டு அமைதியாக இருந்து விட்டேன்.

 

நபியவர்கள் தொழுது முடித்ததும் (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். நபியவர்கள், ( إِنَّ هَذِهِ الصَّلاَةَ لاَ يَصْلُحُ فِيهَا شَىْءٌ مِنْ كَلاَمِ النَّاسِ إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ ) "இது தொழுகை. இதில் உலகப் பேச்சுக்கள் பேசுவது முறையாகாது. தொழுகை என்பது இறைவனை துதிப்பதும், பெருமைப் படுத்துவதும், குர்ஆன் ஓதுவதுமாகும்" என்று கூறினார்கள். ( مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ وَلاَ بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ فَوَاللَّهِ مَا كَهَرَنِي وَلاَ ضَرَبَنِي وَلاَ شَتَمَنِي ) அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. நபியவர்கள் என்னை கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. நூல்:- முஸ்லிம்-935

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தவறை சுட்டிக் காட்டும் விதமே அலாதியானது. இவ்வாறுதான் கரடு முரடானவர்களையெல்லாம் மென்மையானவர்களாக மாற்றினார்கள்.  தவறுகள் சுட்டிக் காட்டும்போது மென்மையை கையாளுவதே சிறந்தது. இதுவே, நபியவர்களின் நற்பண்புகளில் ஒன்றாகும்.

 

ஒரு மனிதனின் தவறை நாம் கோபத்தோடு திட்டிக்கொண்டே செல்லும்போது அவன் தன் தவறை உணராமல், "நீங்கள் மட்டும் ஒழுங்கா?" என்று நம்மை தட்டி விடலாம். மேலும், அவன் அந்த தவறை பெரிது படுத்தாமல் அதைத் தொடர்ந்து செய்யக்கூடியவனாக ஆகிவிடலாம்.

 

சாலையில் ஒரு சிறு சைக்கிள் விபத்து. அடிபட்டவர், "பரவாயில்லை சார் நீங்க போங்க! நான் மருத்துவமனை போய்க் கொள்கிறேன் என்று சொன்னால் மோதியவருக்கு இரக்கம் வரும். "இல்லையில்லை வாங்க மருத்துவமனைக்கு போகலாம்!" என்பார். மாறாக, "யோவ் மரியாதையாக மருத்துவமனைக்கு வந்து, எனக்கு வைத்தியம் பண்ணு" என்று அடிபட்டவர் ஆரம்பித்தால், அதுவே கௌரவ பிரச்சனையாகி காரியத்தை கெடுத்து விடும்.

 

அதிகாரத் தோரணையில் சொன்னால், அதை பின்பற்றக் கூடாது என்பது மனித சுபாவம். இவருக்கு என்ன தெரியும்? இவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது? என்ற வக்கிரம் பெரும்பாலோரிடம் உண்டு.

 

அவசரப்படாமல்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி சிலர் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( دَعُوهُ وَلاَ تُزْرِمُوهُ ) "(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்கள் அவரை விட்டு விடுங்கள்" என்று கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்ததும் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, அதை சிறுநீர் மீது ஊற்றினார்கள். நூல்:- புகாரீ-219, முஸ்லிம்-478

 

பள்ளிவாசலுள் வந்து சிறுநீர் கழித்த கிராமவாசிக்கு பள்ளிவாசல் புனிதம் தெரிந்திருக்கவில்லை. அவ்வாறு அவர்கள் தடுத்திருந்தால், சிறுநீர் இடையே தடைப்பட்டு கிராமவாசிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் அவர் தமது உடலிலும் இடையிலும் சிறுநீர் கழித்திருப்பார்.

 

ஆகவே, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடுக்கப் போன தன் தோழர்களை அமைதிப்படுத்தி, கிராமவாசி தனது தேவையை முழுமையாக நிறைவேற்றும் வரை காத்திருந்தார்கள். பின்னர் அவரை அழைத்து, இல்லத்தின் புனிதத்துவத்தை அவருக்கு விளக்கினார்கள். அவரும் தனது தவறை உணர்ந்திருப்பார். இடையில் தடுத்து நிறுத்தியிருந்தால் அந்த உணர்வு அவருக்கு ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான்.

 

பெரும்பாலான தவறுகளை மிக அவசரம் என்று கருதினாலொழிய உடனே சுட்டிக்காட்டாமல் நம்முடைய மற்றும் அவர்களுடைய உணர்ச்சி வேகம் தணிந்த பிறகு சுட்டிக்காட்ட வேண்டும். எரிச்சலூட்டும் வகையில் தவறை சுட்டிக்காட்டுபவர்களுக்கு தோல்வி மட்டுமே மிஞ்சும். அதனால் பகைதான் வளரும் என்பதை உணர வேண்டும்.

 

ஒரு மனிதனின் தவறை சுட்டிக்காட்டும்போது "உனக்கு அறிவு இருக்கா?" என்று கேட்பதைவிட, "ஒரு புத்திசாலி செய்கிற வேலையா இது?" என்று திருப்பி போட்டுப் பாருங்கள். நிறைய பலனிருக்கும். "டேய் பைத்தியக்காரா! உனக்கு படிச்சு படிச்சு சொன்னேனடா!" என்று திட்டுவதைவிட, "உன் செயல் பைத்தியம் பைத்தியக்காரத்தனமானது!" என்று கண்டிக்கலாம். ஆக, செயல்தான் கண்டிக்கப்பட வேண்டுமே தவிர, நபர் அல்ல. இந்த பாணியில் பல நன்மைகள் இருக்கின்றன.

 

நம்மைப் போன்றே

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு வாலிபர் வந்து ( يَا رَسُولَ اللَّهِ ، ائْذَنْ لِي بِالزِّنَا ) "நாயகமே! விபச்சாரம் செய்ய எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்டார். இதை செவியேற்ற நபித்தோழர்கள் கோபமுற்றனர். நபியவர்கள் அந்த வாலிபரை அருகில் அழைத்து அவரிடமும் யாராவது "உன் தாயிடம் அல்லது உன் மகளிடம் அல்லது உன் சகோதரியிடம் விபச்சாரம் செய்வதை நீ விரும்புவீரா?" என்று கேட்டார்கள். அதற்கவர் "நான் இதை விரும்ப மாட்டேன்" என்று கூறினார். இதைப்போல் தான் யாரும் தம் தாயிடம் அல்லது மகளிடம் அல்லது சகோதரியிடம் விபச்சாரம் செய்யப்படுவதை விரும்பமாட்டார்கள். (அதாவது, நீர் எந்த பெண்ணுடன் விபச்சாரம் செய்தாலும் அப்பெண் எவருக்காவது தாயாகவோ அல்லது மகளாகவோ அல்லது சகோதரியாகவோ இருக்கலாம்) என்று கூறிவிட்டு நபியவர்கள் அந்த வாலிபரின் நல்வாழ்வுக்காக ( اللَّهُمَّ اغْفِرْ ذَنْبَهُ وَطَهِّرْ قَلْبَهُ وَحَصِّنْ فَرْجَهُ ) "இறைவா! இவரின் பாவத்தை மன்னிப்பாயாக! மேலும், (பாவ எண்ணங்களை விட்டும்) இவரின் உள்ளத்தை சுத்தப்படுத்துவாயாக! மேலும், இவரின் மர்ம உறுப்பை பாதுகாப்பாயாக" என்று பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு அந்த வாலிபர் விபச்சாரத்தை முற்றிலுமாக வெறுத்தொதுக்கியவராக வாழ்ந்தார். அறிவிப்பாளர்:- அபூ உமாமா (ரலி) அவர்கள்  நூல்:- முஸ்னது அஹ்மத், தப்ரானீ

 

நம்மை மற்றவர்கள் எந்த முறையில் மிருதுவாகச் சொல்லித் திருத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ அதே முறையில் தான் மற்றவர்களை நாம் சீர்திருத்த முயற்சிக்க வேண்டும். மனிதர்களிடம் குறைபாடுகள் இருப்பது வெறுக்கத்தக்க அம்சமல்ல. அதை உணரக் கூட மறுக்கிறார்களே அது தான் மாபெரும் குறையாகும்.

 

கண்டிப்பாக அவரவர் தத்தம் தவறுகளை உணர்ந்து திருந்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் வேண்டுமே தவிர, அவர்களை விரக்தியடையச் செய்வதாக அமைந்துவிடக் கூடாது. மருந்தில் தேன் கலந்து கொடுப்பது போல், கண்டிக்கும்போது அன்பைக் கலந்து சொல்ல வேண்டும்

 

அக்கறை காரணமாகவும், ஆர்வம் காரணமாகவும் அவை சொல்லப்படுகின்றன என்பதாக மற்றவர்களை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். இவர் நம் நலத்தின்மீது அக்கறை கொண்டவர் தான். நம் நன்மைக்காகத்தான் சொல்கிறார். அவர் சொல்வதில் எந்த விதமான சுயநலமும் இல்லை. நம்முடைய தவறை அல்லது கடமையைத்தான் அவர் உணர்த்துகிறார் என்றெல்லாம் மற்றவர்களை நாம் உளப்பூர்வமாக நம்ப வைக்க வேண்டும்.

 

பெரியவர்களிடம்

 

"(மூசா - அலை மற்றும் ஹாரூன் - அலை ஆகிய இருவருமாகிய) நீங்கள் அவனுக்கு (ஃபிர்அவ்னுக்கு) நளிமாக உபதேசம் செய்யுங்கள். (அதன் மூலம்) அவன் நல்லுணர்வு பெறலாம். அல்லது அச்சம் கொள்ளலாம்" என்று கூறினோம். திருக்குர்ஆன்:- 20:44

 

ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகிய இருவரும் ஒரு பெரியவர் (உளூ எனும்) அங்கத்தூய்மையை  தவறாக செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள்.  இருவருக்கும் அது பொறுக்கவில்லை. பிழையை சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால், அவரோ வயதில் மூத்தவர் என்ன செய்வது? என்று இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு அந்த பெரியவரை நெருங்கினார்கள்.

 

"பெரியவரே! நாங்கள் இருவரும் உளூச் செய்கிறோம். நாங்கள் சரியாக செய்கின்றோமா? என்று நீங்கள் பார்த்து சொல்லுங்கள்" என்றனர். அவரும் சரி என்று சொல்லி இருவரும் உளூச் செய்வதை கூர்ந்து கவனித்ததில் தன் பிழை அவருக்கு புரிய, "குழந்தைகளே! நீங்கள் சரியாகத்தான் செய்கிறீர்கள். நான்தான் பிழையாகச் செய்தேன். இனிமேல் சரி செய்து கொள்கிறேன்" என்றார்.

 

நம்மைவிட வயதில் மூத்தவர்களிடம், அனுபவம் வாய்ந்தவர்களிடம், தகுதி நிறைந்தவர்களிடம் அவர்களின் தவறை நாம் சுட்டிக் காட்டும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. சிலரோ சரியென்று ஏற்றுக்கொள்வார்கள். இன்னும் சிலரோ "இவன் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது" என்ற உணர்வு அல்லது அலட்சிய மனப்பான்மையோடு நம்மிடம் நடந்து கொள்வார்கள்.

 

இவர்களுள் சிலர் ஒருபடி உயரே போய், "அப்படியா சேதி? உன்னை நான் கவனித்துக் கொள்கிறேன்" என்று நமக்கு எதிராக திரும்பிக் கொள்வதோடு, எதிரிகளாகவும் மாறிவிடுவார்கள்.

 

ஒருவரிடம் ஒருகுறை இருப்பதாக நம் மனதில் பட்டால் தன்மையாக, நேரமறிந்து, நிலையறிந்து அவரிடம் மட்டுமே சொல்ல வேண்டும். அப்போது உங்கள் குறையை உணர்த்துவது உங்கள் நன்மைக்காகவே தவிர, வேறொன்றுமில்லை என்பதை தெளிவாக்கிவிட வேண்டும்.

 

குழந்தைகள் மற்றும் மனைவியிடம்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஹசன் (ரலி) அவர்கள் (சிறுவராயிருந்த போது) தர்ம (ஸகாத்)ப் பொருளாக வந்த பேரீத்தம் பழங்களிலிருந்து ஒன்றை எடுத்து தம் வாயில் வைத்தார். உடனே அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( كَخٍ كَخٍ، أَمَا تَعْرِفُ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ  ) "துப்பு! துப்பு! அதை எறிந்து விடு! நாம் தர்மப் பொருளை உண்ணக்கூடாது என்று நீ அறியாததா?" என்று கேட்டார்கள். நூல்:- புகாரீ-3072, முஸ்லிம்-1939

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் ஸகாத் பொருளை உட்கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. நமது குழந்தைகளுக்கு மார்க்கச் சட்டம் மற்றும் அதிலுள்ள ஹலால் - ஹராம் ஆகியவற்றை மிகுந்த கவனத்துடன் எடுத்துச் செல்ல வேண்டும். சிறு பிள்ளைகள் தானே என்று நாம் கவனக்குறைவாக இருக்கக் கூடாது.

 

உமர் பின் அபீ சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மடியில் வளர்ந்தேன். ஒருமுறை எனது கை உணவுத் தட்டில் (அங்கு மிங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது நபியவர்கள், ( يَا غُلاَمُ سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلِيكَ ) "குழந்தாய்! உண்ணும்போது அல்லாஹ்வின் பெயரைச் சொல்வாயாக! உனது வலது கரத்தால் உண்ணுவாயாக! உனது கைக்கு அருகில் இருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்ணுவாயாக!" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5376, முஸ்லிம்-4111

 

பிள்ளைகள் எதிர்த்துப் பேசும் போதெல்லாம் நம் மனம் பாதிப்படைகிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதை அவர்கள் எண்ணி வருத்தப்படும் வகையில் உணர்த்த வேண்டுமே தவிர, அவர்கள் எரிச்சலடையும் வகையில் உணர்த்தக் கூடாது.

 

பிள்ளைகளிடம் பாசத்தோடு நடந்துகொள்ளும் பெற்றோர், பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்யும்போது அதை கண்டிக்கும் விதமாக இனிமேல் இந்த தவறு செய்தால், "உன்னிடம் பேசமாட்டேன் போ! என்றும், இதை உனக்கு வாங்கித் தர மாட்டேன் போ!" என்றும் சொல்லும் போதும் அதில் மாற்றம் இருக்கும்.

 

மாறாக, எதற்கெடுத்தாலும் திட்டுவது அடிப்பதன் மூலம் பெறும் மாற்றம் இருக்காது. இதையே தொடர்ந்து செய்தால் பிள்ளைகள் பெற்றோரை பிடிக்காத மனிதர்களாக, எதிரிகளாக பாவிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதே உண்மையாகும்.

 

நாம் காலையில் வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பும்போது வீட்டில் குப்பைகள் சிதறி கிடக்கின்றன. அந்நேரம் பொங்கி வந்த கோபத்தால் நம்முடைய மனைவியை கடுமையான சொற்களால் திட்டினால், அவள் வெறுப்படைந்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உம்மென்று இருப்பாள். மேலும், அவளிடம் எந்த மாற்றமும் ஏற்படாமல் போகும்.

 

மாறாக, நாமே கையில் துடப்பத்தை எடுத்துக்கொண்டு குப்பைகளை சுத்தம் செய்ய தொடங்கினால், அடுத்த வினாடி நம்முடைய அன்பு மனைவி ஓடோடி வருவாள். "என்னங்க நீங்க... இங்கு கொண்டாங்க நம் கையிலிருந்த துடப்பத்தைப் பிடுங்கி தானே கூட்ட ஆரம்பித்துவிடுவாள். தான் குப்பைகளை கவனிக்காமல் இருந்ததற்காக வருத்தப்படுவாள்.

 

அப்போது நாம் இப்படி சொல்லலாம், "பரவாயில்லை; உனக்கு வீட்டில் நிறைய வேலைகள்... எல்லாம் நீ தனியாகவே செய்ய வேண்டியிருக்கிறது... இதில் நான் உனக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டாமா? என்று சொன்னால், பிறகு அடுத்த முறை வீட்டில் நாம் நுழையும்போது பாருங்கள்! வீடு பளிச்சென்று இருக்கும். மனைவி மக்கள் மற்றும் பிறரையும் அன்பான அணுகுமுறையால் கவர்ந்திட முடியும் என்பதை உணர வேண்டும்.

 

நம்முடைய மனைவியார் மார்க்க கடமைகளை சரியாக நிறைவேற்றாமல் தவறான செயல்களை செய்து கொண்டிருந்தால் உடனே திட்டுவதையும் அடிப்பதையும் கையாளக் கூடாது. மாறாக, "இனிமேல் நான் பட்டினியாக வேண்டுமானாலும் இருந்து விடுவேன் ஆனால், நீ சமைத்து வைக்கும் உணவை சாப்பிட மாட்டேன்" என்றும், "நீ திருந்தும் வரை உன்னிடம் பேச மாட்டேன்" என்றும், சொல்லிவிட்டு, அவள் தவறு செய்யும் போதெல்லாம் இதை கடைபிடிக்க வேண்டும்.

 

சிலர் மனைவி மக்கள் தம்மை மதிக்காதபோது அவர்களை போட்டு மாட்டடி அடிக்கிறார்கள். அடிதடிகளால் பயத்தை உண்டு பண்ணலாம். ஆனால், இதெல்லாம் கொஞ்ச காலத்திற்குத்தான்.

 

தமது மனைவி மக்கள் தமது விருப்பத்திற்கேற்ப நடக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் தேர்ந்தெடுக்கும் குறுக்குப் பாதை தான் கை நீளல். இது நாள் ஆக ஆக எடுபடாமல் போய்விடும்.

 

குறைகளைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கும் பழக்கத்தை தனிமையில் தான் செய்ய வேண்டும். பலர் முன்னிலையில் செய்யக்கூடாது. காரணம், சம்பந்தப்பட்டவர்கள் தம் குறைகளைச் சுட்டி காட்டினாலே நாம் திருந்திவிட வேண்டும் எனச் சிறிதும் எண்ணாமல் பலர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தி விட்டார் என்று எண்ணத் தொடங்கி, வெறுப்பையும் வேதனையையும் பெரிதாக்கிக் கொள்வார். எனவே, கண்டிப்பவரின் விருப்பமும் நோக்கமும் நிறைவேறாமல் போய்விடுகிறது.

 

குறைகளைச் சுட்டிக்காட்டி கண்டிப்பதை பெரும்பாலானோர் தவறாகவே புரிந்து கொண்டிருக்கின்றனர்.

 

நாம் குறைகளை சொல்பவர்களாக மட்டுமல்லாமல், அவற்றை அடுத்தவர்களுக்கு சொல்கின்ற நேரத்தியையும் கற்றுக் கொள்ள வேண்டும். வார்த்தைகளில் கனிவு எனும் அரிய மருந்தை கலந்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் பலன் தரும்.

 

எனவே, நாம் குறைகளை விளங்கி அதை திருத்திக் கொண்டு, பிறரின் குறைகளையும் நேர்த்தியாகச் சுட்டிக்காட்டக் கூடிய பக்குவத்தை அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்குவானாக! ஆமீன்!

 

(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

கற்பனைப் பேச்சு

  கற்பனைப் பேச்சு   وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئ...