எனக்குத் தெரியாது
قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا
إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ
அவர்கள் (இறைவனை நோக்கி)
"நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள்
அறியமாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும், ஞானம் உடையவனாகவும் இருக்கின்றாய்" எனக் கூறினார்கள்.
திருக்குர்ஆன்:- 2:32
அறிஞர்கள் மற்றும்
பெரியவர்களிடமிருந்து நல்ல விஷயங்களைக் கேட்டறிந்து, கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை
நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழவேண்டும்.
மாறாக, “எல்லாம் எனக்குத் தெரியும். எனக்கு எதையும் எவரும்
கற்றுத்தர வேண்டாம்” என்ற மனநிலை மிகவும் ஆபத்தானது. அதுவே, ஆணவத்தின் அடையாளம். மேலும், தமக்கு தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்ள வேண்டும். அது, வானவர்கள் மற்றும் இறைத்தூதர்களின் பண்பாகும். எல்லாம் அறிந்தவன்
அல்லாஹுத்தஆலா மட்டுமே என்று உளமாற நம்பவேண்டும்.
நபியவர்களிடம்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம் குகைவாசிகளின் சம்பவம் குறித்து மக்கள் கேட்டபோது, நபியவர்கள் (அல்லாஹ்விடம் கேட்டறிந்து) ( غَدًا أُجِيبُكُمْ ) “நாளைக்கு உங்களுக்குப் பதிலளிக்கிறேன்" என்று
மட்டும் கூறினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
(நபியே!) இறுதிநாளைப்பற்றி (அது எப்போது வரும்? என) மனிதர்கள் உங்களிடம்
கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "(அது எப்போது வருமென்ற) அதன் ஞானம்
அல்லாஹ்விடம் (மட்டும்) தான் இருக்கிறது. திருக்குர்ஆன்:- 33:63
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் பேரறிஞராக இருந்தபோதும் குகைவாசிகள் குறித்து
தமக்கு தெரியாதபோது, “தற்போது தமக்கு தெரியாது" என்று முதலில் ஒப்புக்கொண்டார்கள்.
இன்னாரிடம் கேட்பீராக!
பேராசான் பெருமானார்
(ஸல்) அவர்களிடம், ( أَيُّ الْبِلَادِ
شَرٌّ ؟ ) "ஊர்களில் எந்தப் பகுதி
தீயது?" என்று வினவப்பட்டது.
நபியவர்கள், ( لَا أَدْرِي
) "எனக்கு தெரியாது" என்றார்கள். பிறகு நபியவர்கள்,
இது குறித்து வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்
வினவினார்கள். அதற்கு அவரும் "எனக்குத் தெரியாது" என்றார். பிறகு அவர் அல்லாஹ்விடம்
இது குறித்து வினவினார். அல்லாஹுத்தலா, ( أَسْوَاقُهَا ) "அந்த ஊர்களில் உள்ள கடைவீதிகள் தான்" என்று பதிலளித்தான். நூல்:- இப்னு ஹிப்பான் -1599, தஅளீமில்
ஃபத்யா இமாம் இப்னு ஜவ்ஸீ ( تَعْظِيمِ
الْفَتْيَا ), ஸிஃபத்துல் ஃபத்வா ( صِفَةُ الْفَتْوَى )
ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்)
அவர்கள் கூறியதாவது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் காலுறைகள்மீது மஸ்ஹு செய்வது குறித்துக்
கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள், ( عَلَيْكَ بِابْنِ أَبِي طَالِبٍ فَسَلْهُ فَإِنَّهُ كَانَ يُسَافِرُ مَعَ
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ) “நீங்கள் அலீ பின் அபீதாலிப்
(ரலி) அவர்களை அணுகிக் கேளுங்கள். அவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம்
செய்பவராய் இருந்தார்கள்” என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) அவர்களிடம் (சென்று) அதைப்பற்றிக் கேட்டோம். அப்போது
அவர்கள், ( جَعَلَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ وَيَوْمًا
وَلَيْلَةً لِلْمُقِيمِ ) “பயணத்திலிருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகளையும்,
உள்ளூரிலிருப்பவருக்கு ஒரு பகல் ஓர் இரவையும் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்” என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-465
காலுறைகளின் மீது (ஈரக்
கையால் தடவி) மஸஹ் செய்வது குறித்து ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்கள் முதலில் ஆயிஷா
(ரலி) அவர்களிடம் தான் வினவினார். ஆனால், ஆயிஷா (ரலி) அவர்கள் இது குறித்து அலீ (ரலி) அவர்களிடம் கேட்குமாறும், அவர்களே என்னைவிட இதைப்பற்றி நன்கு அறிந்தவர் என்றும்
கூறிவிட்டார்கள். அதற்கிணங்க அலீ (ரலி) அவர்களிடம் ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் விளக்கம் கேட்டு
அறிந்தார்.
காலுறை அணியும் தேவை பெரும்பாலும் பயணங்களில் தான் ஏற்படுகிறது.
பயணங்களின் போது நபியவர்களுடன் சேர்ந்து பயணித்த அலீ (ரலி) அவர்கள் இது குறித்து நன்கு
அறிந்தவர் என்பதால் ஆயிஷா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கேட்குமாறு ஆலோசனை கூறினார்கள்.
பயணத்தில் இருப்பவர் மூன்று நாள்கள் வரையும், உள்ளூரில் தங்கி இருப்பவர் ஒருநாள் வரையும் காலுறைகள்
மீது ஈரக் கைகளால் தடவி 'மஸஹ்' செய்யலாம். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது.
இந்தக் கால அளவில் அவர்கள் காலுறைகளைக் கழற்றி கால்களை கழுவ தேவையில்லை. ஆனால்,
பெருந்துடக்கு ஏற்பட்டு, குளிப்பு கடமையாகி விட்டால் காலுறைகளைக் கழற்றி குளிக்க வேண்டும்.
ஒருவரிடம் ஒன்றைக் குறித்து
கேள்வி கேட்கப்பட்டால் அது பற்றி அவருக்கு தெரியாதபோது அதைப்பற்றி தெரிந்தவரை அவர்
அறிவிக்க வேண்டும் என்று இந்த நபிமொழியை உணர்த்துகிறது.
சொதப்புவது கூடாது
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் அபூதர் (ரலி) அவர்களை நோக்கி! ( يَا
أبا ذَرٍّ ، إذا سُئلتَ عن عِلمٍ لا تَعلَمُهُ فَقُل : لا أعلَمُهُ تَنجُ مِن تَبِعَتِهِ
، ولا تُفْتِ بما لا عِلمَ لكَ بهِ تَنجُ مِن عَذابِ اللَّهِ يَومَ القِيامَةِ ) "அபூதர்! உனக்குத் தெரியாததைப் பற்றி உன்னிடம் கேள்வி கேட்கப்பட்டால், அப்போது நீ, 'அதைப்பற்றி எனக்கு
ஒன்றும் தெரியாது' என்று சொல்லிவிடு! (அவ்வாறு சொல்லிவிட்டால்) அதைப் பின்பற்றுபவர்களிடமிருந்து
நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். உங்களுக்குப் போதிய ஞானமில்லாத விஷயத்தில் (அது குறித்து
ஞானமுள்ளவர் போன்று) தீர்ப்பு வழங்காதீர்கள், (நீங்கள் அவ்வாறு இருந்துவிட்டால்) மறுமைநாளில் இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்."
என்று கூறினார்கள். நூல்:- மகாரிமுல் அஹ்லாக், தன்பீஹுல் ஹவாத்திர்
ஜாபிர் (ரலி) அவர்கள்
கூறியதாவது. நாங்கள் ஒரு பயணத்தை மேற்கொண்டோம். எங்களில் ஒருவருக்கு தலையில் கல்லடி
பட்டு தலை (உடைந்து) பெரிய காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு பெருந்தொடக்கு ஏற்பட்டுவிட்டது.
அப்போது அவர், "தயம்மும் செய்வதற்கு எனக்கு (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதா?" என்று தன் தோழர்களிடம் கேட்டார்.
அதற்கு அவர்கள், "தண்ணீர் உனக்குக் கிடைக்கும் நிலையில் தயம்மும் செய்யும் சலுகை
பெறமுடியாது" என்று கூறினர். எனவே, அவர் (பெருந்தொடக்கை நீக்க)
குளித்தார். அதனால் அவர் இறந்துவிட்டார்.
நாங்கள் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்த நிகழ்வுகளைப் பற்றி தெரிவித்தோம். அதற்கு நபியவர்கள், ( قَتَلُوهُ قَتَلَهُمُ اللَّهُ ) "இவர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். இவர்களையும் அல்லாஹ் கொல்லட்டும்" என்று சொல்லிவிட்டு, ( أَلاَّ سَأَلُوا إِذْ لَمْ يَعْلَمُوا فَإِنَّمَا شِفَاءُ الْعِيِّ السُّؤَالُ ) "தெரியவில்லை என்றால் இவர்கள் கேட்க வேண்டியதுதானே? அறியாமை எனும் நோய்க்கு கேட்பதுதான் நிவாரணம்". ( إِنَّمَا كَانَ يَكْفِيهِ أَنْ يَتَيَمَّمَ وَيَعْصِرَ عَلَى جُرْحِهِ خِرْقَةً ثُمَّ يَمْسَحَ عَلَيْهَا وَيَغْسِلَ سَائِرَ جَسَدِهِ ) இறந்த (அந்த) மனிதருக்குத் தயம்மும் போதுமானதாக இருந்தது. காயத்தின் மீது துண்டுத்துணியை கட்டி அதன் மீது ஈரக் கையால் தடவியிருந்தால் போதுமானதாகும். அந்த இடம் தவிர மற்ற உறுப்புகளைத் தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-284
இந்தத் தோழர்கள், தண்ணீர் இல்லை என்றால் மட்டுமே தயம்மும் செய்ய வேண்டும். இப்போது கண்முன்னே தண்ணீர்
இருக்கிறது. ஆகவே, தயம்மும் செய்ய அனுமதி இல்லை என்று தவறான சட்டம்
கூறிவிட்டனர். உண்மையில் தயம்மும் செய்வதற்குப் பல காரணங்கள் உள்ளன என்பதை இவர்கள்
அறிந்திருக்கவில்லை.
மார்க்க விஷயமோ அல்லது
மற்ற விஷயமோ எதுவாக இருந்தாலும், அது குறித்து தெரியவில்லை
என்று சொல்வது தவறல்ல. தெரியாததையெல்லாம் தெரியும் என்று சொல்லி சொதப்புவது தான் தவறு.
சில நேரங்களில் அதன் விளைவு மிகவும் மோசமாகிவிடக் கூடும்.
மௌனமே பதில்
அப்துல்லாஹ் பின்
மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் பெருமானார்
(ஸல்) அவர்களுடன் இருந்தபோது யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள்.
அவர்களில் ஒருவர்
இன்னொருவரிடம் (நபியவர்களைச் சுட்டிக்காட்டி), "இவரிடம் உயிரைப்பற்றிக் கேளுங்கள்" என்றார்.
உடனே அவர்களில் ஒருவர் எழுந்துவந்து நபியவர்களிடம், உயிரைப் பற்றிக் கேட்டார். நபியவர்கள் எந்தப் பதிலும்
சொல்லாமல் மௌனமாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகின்றது
என நான் அறிந்துகொண்டேன். ஆகவே, நான் அதே இடத்தில் நின்றுகொண்டேன்.
வேத அறிவிப்பு (வஹீ)
இறங்கிய பிறகு நபியவர்கள், "(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். “(நபியே!)
உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். ‘உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால்
உருவானது. உங்களுக்குக் குறைவான அறிவே வழங்கப்பட்டுள்ளது’ என்று நீர் கூறுவீராக"
(17:85) எனும் இறை வசனத்தைக்
கூறினார்கள். நூல்:- புகாரீ-4721, முஸ்லிம்-5384
உயிர் என்பது இறைவனின்
ஆணையால் உண்டான ஒன்று. இறைவனின் நேரடி அதிகாரத்திற்கும் ஆளுமைக்கும் உட்பட்ட ஒன்று.
இதற்கு மேல் உயிர் தொடர்பாக மனிதனால் அறிந்துகொள்ள இயலாது. ஏனெனில், மனிதனுக்கு வழங்க
பெற்றுள்ள ஞானம் சிறிதளவே என்று திருக்குர்ஆன் இயம்புகிறது.
எனவே, உயிர் என்பது மென்மையான
வாயு என்கின்றனர் சிலர். மரத்தின் வேர்களில் நீர் ஊடுருவியிருப்பதைப் போன்று, உடலில் உயிர் ஊடுருவியுள்ளது
என்கின்றனர் சிலர். இவ்வாறு அன்று முதல் இன்று வரை உயிரைப் பற்றி பல்வேறு கருத்துக்கள்
சொல்லப்பட்டு வந்தாலும் யாரும் தீர்க்கமானதொரு கருத்தை இதுவரை கூற முடியவில்லை என்பதை
உண்மையாகும்.
ஒவ்வொன்றையும் விளங்குவதற்கு
அதற்குரிய அறிவுத்திறன் வேண்டும். ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு (M.B.B.S எனும்) மருத்துவப் படிப்பை சொல்லிக்கொடுத்தால் அந்தப் பிள்ளைகளுக்கு
அது விளங்காது. எனவே,
நம்முடைய சில கேள்விகளுக்கு
பதிலளிக்கப்பட்டால் அது நம்முடைய அறிவுக்கு விளங்காமல் போகலாம். சில கேள்விகளுக்கு
“தெரியும்” அல்லது “தெரியாது” என்றுரைப்பதைவிட மௌனமாக இருப்பதே பதிலாகும்.
உயிர் என்றால் என்ன? அது எப்படி? என்று இது போன்ற சில
கேள்விகளுக்கு மனிதர்களில் யாராலும் பதில் சொல்ல இயலாது. அந்த ஞானம் அல்லாஹ்விடம் மட்டுமே
உள்ளது. என்கிறது திருக்குர்ஆன். எனவே, அது குறித்து நுணுகி நுணுகி கேள்விக் கேட்பது
வீணானவையே.
அறிஞர்களின் கூற்று
அலீ (ரலி) அவர்கள்
கூறுகிறார்கள். ( قولُ لا أعلَمُ ، نِصفُ العِلمِ ) எனக்குத் தெரியாது என்ற வார்த்தை அறிவின் பாதியாகும். நூல்:- ( غَرَرَ الْحُكَمُ )
அலீ (ரலி) அவர்கள்
கூறுகிறார்கள். ( لا يَستَحيِي العالِمُ إذا سُئلَ
عمّا لا يَعلَمُ أن يَقولَ : لا عِلمَ لي بِهِ ) ஒரு அறிஞரிடம் அவர் அறியாத ஒன்றைப்பற்றி கேட்கப்பட்டு, அதற்கு அவர், 'அது குறித்து எனக்கு
எதுவும் தெரியாது' என்று சொல்லுவதற்கு வெட்கப்பட மாட்டார். நூல்:- அல்ஹிஸால், கஸாஇஸுல் அஇம்மா, அல்மஹாசின்
அபூதயால் (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள். ( فَإِنَّكَ إِنْ قُلْتَ :
"لَا أَدْرِي" عَلَّمُوكَ حَتَّى تَدْرِيَ ، وَإِنْ قُلْتَ :
"أَدْرِي" سَأَلُوكَ حَتَّى لَا تَدْرِي ) "எனக்குத் தெரியாது"
என்று நீ சொன்னால், உமக்குத் தெரியும்வரை மக்கள் உமக்குக் கற்றுத்தருவார்கள். மேலும், "எனக்குத் தெரியும்" என்று நீ
சொல்லிவிட்டால், உமக்குத் தெரியாதவற்றெல்லாம் அவர்கள் உம்மிடம் கேள்விக்
கேட்பார்கள். (அது உமக்கு சிரமமாகிவிடும்.) நூல்:- ஸிஃபத்துல் ஃபத்வா( صِفَةُ الْفَتْوَى )
மேற்கத்திய அறிஞர்
சாக்ரடீஸ் கூறுகிறார். நான் இளைஞனாக இருந்தபோது, "எல்லாம் தெரியும்" என்று நினைத்தேன். கொஞ்சம்
வயதானபோது, "கொஞ்சம் தான் தெரியும்" என்று உணர்ந்தேன். முதிர்ச்சி அடைந்தபோது தான், "எனக்கு எதுவும் தெரியாது"
என்பது விளங்கியது.
தயக்கமில்லை
உக்பா பின் முஸ்லிம்
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( صَحِبْتُ
ابْنَ عُمَرَ أَرْبَعَةً وَثَلَاثِينَ شَهْرًا وَكَانَ كَثِيرًا مَا يُسْأَلُ ،
فَيَقُولُ: لَا أَدْرِي ) நான், (நபித்தோழர்களில் அறிஞராக திகழ்ந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் 34
மாதங்கள் தோழமையில் இருந்துள்ளேன். அந்த காலகட்டத்தில் அன்னாரிடம் கேட்கப்பட்ட அதிகமான
கேள்விகளுக்கு "தெரியாது" என்றே பதிலளித்தார்கள். நூல்:- அதபுல் முஃப்தீ
வல்முஸ்தஃப்தீ
பேரறிஞர் இமாம் ஷஅபீ
(ரஹ்) அவர்களிடம் ஒரு விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அன்னார், ( لَا
أدري ) “எனக்கு தெரியாது”
என்று பதிலளித்தார்கள்.
மக்கள், ( اَمَا تَسْتَحِيي
أَنْ تَقُولَ :لَا أدري؟ وَأَنتَ فَقِيهُ العِرَاقِ ) “இராக் நாட்டின் சட்டமேதையாக இருக்கும் நீங்கள் ‘எனக்குத் தெரியாது’
என்று பதிலளிக்கிறீர்களே! உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று கேட்டனர்.
அதற்கு அன்னார், ( لَكِنَّ المَلَائِكَةَ لَمْ تَسْتَحِي إِذْ قَالَتْ : { قَالُوا
سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنْتَ
الْعَلِيمُ الْحَكِيمُ }سورة البقرة). نصفُ العِلْمِ أَنْ تَقُولَ : لاأدري؟ ) “வானவர்கள் அல்லாஹ்விடம், ‘இறைவா! நீயே தூயவன். நீ எங்களுக்கு கற்றுத்தந்தவை தவிர வேறு
எதுவும் எங்களுக்குத் தெரியாது. நீயே எல்லாம் அறிந்தவன் நுண்ணறிவுத் திறன்மிக்கவன்’
(அல்குர்ஆன்.2:32) என்று கூறினர். அப்படிக் கூறுவதற்கு மலக்குகள் வெட்கப்படவில்லையே.
‘எனக்குத் தெரியாது’ என்று பதிலளிப்பது பாதிக் கல்வியாகும்” என்று கூறினார்கள். நூல்:- நவாதிருல் அதப்
இமாம் ஷஅபீ (ரஹ்)
அவர்கள் “எங்களுக்குத் தெரியாது என்று முதன் முதலில் கூறியவர்கள் வானவர்கள் தான். தெரியாது
என்று சொல்வது இறைத்தூதர்களின் பண்பு" என்றார்கள்.
பணிவு
மூத்த தாபிஈ மற்றும் பேரறிஞர் அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
( أَدْرَكْتُ عِشْرِينَ وَمِائَةً مِنْ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَسْأَلُ أَحَدُهُمْ الْمَسْأَلَةَ فَيَرُدُّهَا
إلَى هَذَا ، وَهَذَا إِلَى هَذَا ، حَتَّى تَرْجِعَ إلَى الْأَوَّلِ مِنْهُمْ ، مَا
مِنْهُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَدَّ أَنَّ أَخَاهُ كَفَاهُ الْفَتْيَا ) நான் என் காலத்தில் 120 நபித்தோழர்களைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு கேள்வி கேட்கப்பட்டால் அவர்களில் யாரும் உடனே பதில் சொன்னதில்லை. ஒருவர் இன்னொருவரை
கை காட்டுவார். அவர் இன்னொரு நபித்தோழரை அடையாளம் காட்டுவார். இப்படியே மாறி மாறி கடைசியாக
ஆரம்பமாக கேள்வி கேட்கப்பட்ட அந்த நபித்தோழரையே அடையாளம் காட்டப்படுவார். அவர்களில்
அனைவரும் மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் தன்னைவிட மற்றவர்கள் தான் பொறுத்தமானவர்கள்
என்றே கருதக்கூடியவர்களாக இருந்தார்கள். நூல்:- தாரிமீ, அஸ்ஸுஹ்து - இமாம் இப்னு முபாரக், தாரீக் பக்தாத் - இமாம் கத்தீப் அல்பக்தாதீ, தாரீக் திமிஷ்க் - இமாம் இப்னு அசாகிர்
தாம் அதிகம் அறிந்த
அறிஞர் என்று தம்மை அடையாளப்படுத்துவதைவிட, குறிப்பிட்ட இந்தத் துறையில் அல்லது மார்க்கச் சட்டங்களை விளக்குவதில்
என்னைவிட இன்னாரே மிகவும் கற்றறிந்தவர், சிறந்தவர் என்று பிறரை அடையாளப்படுத்துபவரே பேரறிஞர் என்பதற்குரிய அடையாளம். மேலும்,
பேணுதலுக்குரியவரின் செயல்பாடும் இதுவே.
எல்லாம் எனக்குத் தெரியும்
என்ற ஆணவமும் தற்பெருமையும் என்றைக்குமே மிகவும் ஆபத்தானவையாகும். அதுவும் கற்ற கல்வியைக்
கொண்டு ஆணவம் கொள்வது மிகப்பெரிய தவறாகும். காரணம், கல்வி என்பது இறைவனின் அருளாகும். கல்வி அதிகரிக்க அதிகரிக்க
பணிவும் அடக்கமும் அதிகரிக்க வேண்டும். இதுதான் பயனுள்ள கல்வியின் அடையாளமாகும்.
உள்ளது உள்ளபடி
ஒருமுறை ஒருவர் இமாம்
மாலிக் (ரஹ்) அவர்களிடம் ஒரு விளக்கத்தை பெறுவதற்கு வந்தார். வந்தவர் இமாம் அவர்களிடம்
அது குறித்து வினவினார். அதற்கு இமாம் அவர்கள், "இதற்குரிய சரியான பதில் எனக்குத் தெரியாது"
என்று கூறிவிட்டார்கள். வந்தவர், "இந்தப் பதிலைக் கேட்டு போகத்தானா? நான் ஆறு மாதங்களாக
நடந்து வந்தேன்; நான் ஊர் சென்று என்னை அனுப்பியவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்?" என்று புலம்பினார்.
அதற்கு இமாம் அவர்கள், "மாலிக், தனக்குத் தெரியவில்லை என்று கூறிவிட்டார் என்றே தெரிவித்துவிடுவீராக!"
என்று பதிலளித்தார்கள்.
அறிஞர் அபூநயீம் (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள். ( مَا رَأَيْتُ
عَالِمًا أَكْثَرَ قَوْلًا " لَا أَدْرِي " مِنْ مَالِكِ بْنِ أَنَسٍ ) பேரறிஞர் இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களைவிட "எனக்குத் தெரியாது"
என்ற சொல்லை அதிகம் பயன்படுத்திய அறிஞரை நான் கண்டதில்லை. நூல்:- ஸிஃபத்துல் ஃபத்வா(
صِفَةُ الْفَتْوَى )
இமாம் மாலிக் (ரஹ்)
அவர்களிடம் ஒரு சபையில் 40 கேள்விகள் கேட்கப்பட்டது.
அதில் 39 கேள்விகளுக்கு எனக்குத் தெரியாது
என்று கூறிவிட்டு, ஒன்றுக்கு மட்டும் பதில் கூறினார்கள்.
இமாம் மாலிக் (ரஹ்)
அவர்களுக்கு ஒரு செய்தி தெரியவில்லை என்றால் "அது எனக்குத் தெரியாது" என்று
தெளிவாகக் கூறிவிடுவார்கள். எதையும் கூறி மழுப்பமாட்டார்கள்.
"எனக்குத் தெரியாது" என்று அதிகமாக கூறிய அறிஞர் இவர்கள்தான்.
தெரியாததை தெரியாது என்று கூறுவதை அவர்கள் குறையாக கருதவில்லை. அதை நிறைவாகவே கருதினார்கள்.
தாம் கற்ற கல்வியினால்
ஆணவம் கொண்டு திரியும் பேர்வழிகள், “தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான்” என்று தன் கருத்திலேயே பிடிவாதமாக இருப்பார்கள்.
அவர்களிடம் எதைக்கேட்டாலும் அது குறித்து தெரியாவிட்டாலும் தெரிந்ததை போல காட்டிக்கொள்வார்கள்.
குட்டிக் கதை
ஒரு ஊரில் “எல்லாம்
தெரிந்த அப்துல்லாஹ்” என்ற ஒருவன் இருந்தான். எதைப்பற்றி கேட்டாலும் அது குறித்து தெரியாவிட்டாலும்
தெரிந்ததைப் போல பதில் கூறுவான்.
அவன் வசித்த ஊரில் பனைமரம்
இல்லை. ஒருநாள் கடுமையாக மழை பொழிந்து அந்த ஊரின் ஆற்றில் பனங்கொட்டை ஒன்று அடித்து
வரப்பட்டு ஒதுங்கியது. அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன் அந்தப் பனங்கொட்டையை வினோதமாக பார்த்து அதை எடுத்துக்கொண்டு அப்துல்லாஹ்விடம்
வந்து “இது என்ன?” என்று கேட்டான். அதைப்
பார்த்த அப்துல்லாஹ் இதற்கு பதில் தெரியாவிட்டால் நம்மை கேவலமாக நினைப்பார்கள் என்று
நினைத்து “இது கரடி முட்டை” என்று கூறினான். அவனை சுற்றி நின்றவர்கள், “இது கரடி முட்டை என்று எப்படி உனக்கு தெரியும்?”
என்று கேட்டார்கள். அப்துல்லாஹ், நாறுடன் இருந்த பனங்கொட்டையை காட்டி, “இதில் நிறைய முடி இருக்கிறது. கரடிக்கு தான் உடலில் நிறைய முடி இருக்கும். ஆகையால்
இது கரடியின் முட்டை தான்” என்றானாம்.
இந்தக் கதையை படித்தவுடன்
நாம் சந்தித்த பல அப்துல்லாஹ்கள் நம்முடைய மனக் கண்ணில் வரலாம்.
அதிகமாகத் தெரியத் தெரிய, தெரியாதது அதிகம் எனத் தெரிகிறது.
“எல்லாம் எனக்குத்
தெரியும்” என்ற கர்வம், தற்பெருமை போன்ற தீயப்பழக்கங்களைத் தவிர்த்து, “எனக்குத் தெரியாது” என்ற பணிவு எனும் நற்பண்பை கடைபிடித்து
வாழ்வதற்கு அல்லாஹுத்தஆலா நமக்கு அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment