Search This Blog

Sunday, 25 October 2020

விருந்துக்கு வாங்க...

 

விருந்துக்கு வாங்க...


إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوا

நீங்கள் (விருந்துக்கு) அழைக்கப்பட்டால், அவசியம் செல்லுங்கள். சாப்பிட்டுவிட்டால், உடனே கலைந்துவிடுங்கள்.       திருக்குர்ஆன்:- 33:53


விருந்தளிப்பது உறவினர்களிடையேயும் நண்பர்களிடையேயும் அன்பை வளர்க்கும்; உறவையும் நட்பையும் உறுதிபடுத்தும். மனக் கசப்பு உள்ளவர்கள்கூட விருந்தில் கலந்து கொள்ளும்போது உறவை புதுப்பித்து மீண்டும் இணைந்து கொள்ள ஒரு இனிய வாய்ப்பு உருவாகும்.


திருமண விருந்துக்கு "வலிமா" என்று அரபியில் சொல்லப்படுவது நமக்குத் தெரியும். இது போன்று மற்ற விருந்துகளுக்கும் அரபியில் வெவ்வேறு பெயர்கள் உண்டு.


திருமண விருந்து       وَلِیمَةٌ لِلعَقدِ

குழந்தை பிறந்த விருந்து    عَقِیقَةٌ لِلوِلَا دَةِ

கத்னா (எனும் சுன்னத் கல்யாண) விருந்து   اِعذَارٌ لِلخِتَانِ

குர்ஆன் மனனம் செய்து முடித்ததற்காக விருந்து   حِذَاقٌ لِحِفظِ القُرأَنِ

கட்டடம் கட்டி முடித்ததற்காக விருந்து   وَکِیرَةٌ لِلبِنَاءِ


திருமணத்திற்கு பின்...

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணந்து கொண்டபோது அளித்த விருந்தைவிட  சிறப்பாகத் தம் துணைவியரில் வேறொருவரை மணந்தபோதும் மணவிருந்தளிக்கவில்லை. அதில் வயிறு நிரம்ப மக்களுக்கு ரொட்டியையும் இறைச்சியையும் உண்ண கொடுத்தார்கள். (உண்ண முடியாமல்) மக்கள் அதை விட்டுச் சென்றனர்.                                                                                      நூல்:- முஸ்லிம்-2796-A, 2800


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களை மணந்தபோது கோதுமை மாவு, பேரீச்சம்பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றை(க் கலந்து தயாரித்த 'ஹைஸ்' எனும் பலகாரத்தை)யே மணவிருந்தாக  (வலீமா) ஆக்கினார்கள்.                                      நூல்:- புகாரீ-2235, முஸ்லிம்-2796, திர்மிதீ- 1015


அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் அணிந்திருந்த ஆடையை பார்த்து, இவர் புதிதாக திருமணம் முடித்தவர் என்று அறிந்துகொண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ( فَبَارَكَ اللَّهُ لَكَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ ) “அல்லாஹ் உங்களுக்கு வளத்தை வழங்குவானாக! என்று (வாழ்த்துக்) கூறிவிட்டு ஓர் ஆட்டையாவது (அறுத்து) விருந்து (வலீமா) அளியுங்கள். என்று கூறினார்கள்.         நூல்:- புகாரீ - 2049, முஸ்லிம் - 2788, திர்மிதீ - 1014


வலீமா எனும் சொல்லுக்கு "ஒன்றுகூடுதல்" என்பது சொற்பொருளாகும். மணமக்கள் ஒன்றுகூடுவதால் இதற்கு இப்பெயர் வந்திருக்கலாம். திருமணத்திற்காக மணமகன் சார்பாக வழங்கப்படும் மணவிருந்தே மார்க்கத்தில் வலீமா விருந்து எனப்படும். வலீமா விருந்து கொடுப்பதும் அந்த விருந்து அழைப்பை ஏற்பதும் நபிவழி ஆகும்.


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். முதலாவது நாளில் அளிக்கும் மணவிருந்து (வலீமா) கடமை (போன்றது) ஆகும். இரண்டாவது நாளில் அளிக்கும் மணவிருந்து நபிவழி (சுன்னத்) ஆகும். மூன்றாவது நாளில் அளிக்கும் மணவிருந்து பகட்டு ஆகும். யார் பகட்டுக்காக விருந்தளிக்கிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்தி விடுவான்.                                                 அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள்               நூல்:- திர்மிதீ-1016


மணமுடித்த மணாளர் முதல்நாள் விருந்தளிப்பது வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். அதைக் கைவிடுவது குற்றமாக இல்லாவிட்டாலும் ஒரு குறையாகவே கருதப்படும். இரண்டாம் நாள் விருந்தளிப்பது விரும்பத்தக்கதாகும் (தடை செய்யப்பட்டதன்று). ஏனெனில், இது முதல் நாளில் குறை ஏதேனும் ஏற்பட்டிருப்பின் அதை நிவர்த்தி செய்ய உதவும். மூன்றாவது நாள் அளிக்கும் விருந்து விளம்பரத்திற்காகச் செய்யப்படும் ஆடம்பரமாகும். அவரது விளம்பரத்தை மறுமை நாளில் அல்லாஹ் அம்பலப்படுத்துவான். எனவே இது தவிர்க்கப்பட வேண்டியதாகும்.


ஆகவே தான் முதல் நாள் விருந்துக்கு செல்வது அவசியமாகும். இரண்டாவது நாள் செல்வது நல்லது. ஆனால், செல்லாமலும் இருக்கலாம். மூன்றாவது நாள் விருந்துக்குச் செல்லக்கூடாது கட்டாயம் அதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.  நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ


குழந்தை பிறந்த பின்...

முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. எனது குழந்தை இயாஸ் பிறந்த போது நபித் தோழர்களில் சிலரை அழைத்து விருந்து கொடுத்தேன். பிறகு அவர்கள் எனது குழந்தைக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது நான், "என் குழந்தைக்குப் பிரார்த்தனை புரிந்த உங்களுக்கு அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! என்றேன். மேலும் நானும் பிரார்த்தனை செய்கிறேன் நீங்கள் அதற்கு ஆமீன் சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு, குழந்தையின் மார்க்கப்பற்றுக்காகவும்  கல்வி ஞானத்திற்காகவும் இன்ன பிறவற்றுக்காகவும் அதிகமாகப் பிரார்த்தனை செய்தேன். நிச்சயமாக நான் அன்றைய நாளில்தான் அது விஷயத்தில் பிரார்த்தனை உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-1255


குழந்தை பாக்கியம் என்பது பெரும் பாக்கியம். எனவே, தனக்கு வாரிசு வந்த சந்தோஷத்தில்,  அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக, நம்முடைய உறவினர்கள், மார்க்க அறிஞர்கள், நண்பர்கள், ஏழைகள் என அனைவரையும் அன்புடன் அழைத்து  அவர்களுக்கு விருந்தளிக்கலாம்.


கத்னாவின் போது 

சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (எங்கள் தந்தையார்) எனக்கும் நுஐம் என்பவருக்கும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (கத்னா எனும்) விருத்த சேதனம் செய்தார்கள். அப்போது எங்களுக்காக ஒரு தும்பை ஆட்டை அறுத்து விருந்தளித்தார்கள். ஒரு ஆட்டை அறுத்ததால் சிறுவர்களிடம் நாங்கள் பெருமைப்பட்டுக் கொண்டோம். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-1246


கத்னா செய்த பிறகு விருந்தளிப்பது (முஸ்தஹப் எனும்) விரும்பத்தக்க செயலாகும். கத்னா செய்வதற்கு முன் விருந்தளிப்பது மார்க்கத்தில் இல்லாத செயல். நூல்:- ஆப்கே மசாயில் அவ்ர் உன்கா ஹல் 7/139


கல்வியில் தேர்ச்சி பெற்ற பின்...

உமர் (ரலி) அவர்கள் அல்பகரா அத்தியாயத்தை மனனம் செய்து முடித்தார்கள். ஒரு பெரிய அத்தியாயம் மனனம் ஆன மகிழ்ச்சியில் ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியை உறவினர்கள், ஏழை எளியவர்களுக்கு பங்கிட்டு விருந்தளித்தார்கள். அல்லாஹுதஆலா எனக்கு ஒரு பெரிய அத்தியாயத்தை மனனம் செய்ய வாய்ப்பளித்தான் என்று மனம் மகிழ்ந்து நன்றி செலுத்தினார்கள்.


நாம் அல்லது நமது பிள்ளைகள் திருக்குர்ஆனை முழுவதுமாகவோ அல்லது அதிலுள்ள சில அத்தியாயங்களோ மனனம் செய்து விட்டால் அந்த மகிழ்ச்சியினால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்விதமாக உறவினர்களையும் ஏழைகளையும் அழைத்து விருந்து கொடுக்கலாம்.


அதிலும் குறிப்பாக நமது பிள்ளைகள் திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த ஹாபிளாகி, ஓரளவு மார்க்கத்தை படித்து முடித்த ஆலிமாகி பட்டம் பெற்று நம்மிடத்தில் வரும்பொழுது,  இதுபோன்று விருந்தளிக்கலாம். அது நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.


வீடு கட்டிய பின்...

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருநாள்) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்கள், "உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்" என்று பேசிக்கொண்டார்கள்.


பின்னர் அவர்கள், "இவரது நிலை ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்துண்ணவுமில்லை" என்று கூறினார்கள்.


அதைத்தொடர்ந்து, "அந்த வீடு தான் சொர்க்கம்; அழைப்பாளி முஹம்மது (ஸல்) அவர்கள்; முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார்; முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார்" என்று விளக்கமளித்தார்கள் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:- புகாரீ-7281


புது வீடு கட்டிய மகிழ்ச்சியின் காரணமாக விருந்தளிப்பது தவறல்ல. ஆனால் அதில் பெருமை பகட்டு நோக்கமாக இருக்கக்கூடாது.                            நூல்:- ஃபதாவா மஹ்மூதிய்யா 18/149


பயணத்தை முடித்துவிட்டு வந்த பின்...

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தபூக் போரிலிருந்து திரும்பி) மதீனா நகருக்கு அருகிலுள்ள "ஸிரார்" எனும் இடம் வந்தபோது ஒரு மாட்டை அறுக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அறுக்கப்பட்டது. அதை அனைவரும் விருந்துண்டார்கள்.                                                                        நூல்:- புகாரீ-3089


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் (பயணத்திலிருந்து திரும்பி வந்தவுடன் தம்மை வரவேற்கக்) கூடுவோரு(டன் விருந்துண்ணுவது)க்காக(க் கூடுதலான) நோன்பை (நோற்காமல்) விட்டுவிடுவார்கள்.                                                                                            நூல்:-  புகாரீ பாடம்:

பயணத்திலிருந்து திரும்பியபின் (நண்பர்களுடன்) உணவு அருந்துவது


ஹஜ், உம்ரா போன்ற புனிதப் பயணம் அல்லது வேறு ஏதேனும் முக்கிய பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு விருந்து கொடுக்கலாம். பயணத்திற்கு முன்பு விருந்து கொடுப்பதைவிட பயணத்திற்கு பிறகு விருந்து கொடுப்பதே சிறந்தது.


இறையில்லம் கட்டிய பின்...

ஹிஜ்ரி 64 ஆம் ஆண்டு யஸீதுடைய படைகள், மக்காவின் ஆட்சியாளராக இருந்த அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களை எதிர்த்து மக்காவின் மீது போர் தொடுத்தபோது நெருப்புக் கணைகளை விட்டெறிந்த காரணத்தால் கஅபாவின் திரை எரிந்துவிட்டதுடன் கஅபாவின் சுவர்களும் பழுதடைந்தன. எனவே, அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கஅபாவை இடித்து முற்றிலும் புதிதாக நிர்மாணித்தார்கள்.


இதில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் விருப்பத்திற்கிணங்க ஹதீமை கஅபாவின் கட்டடிடத்துடன் சேர்த்துக் கட்டினார்கள். மேலும் கஅபாவின் வாசலையும் கீழறக்கி தரைமட்டத்திற்கு ஆக்கிவிட்டார்கள். இதனால் எளிதில் எவரும் பிரவேசிக்க முடியும். இன்னும் அதற்கு நேரெதிராக உள்ள சுவற்றில் ஒரு வாசலை அமைத்தார்கள். மக்கள் ஒரு வாசலில் நுழைந்து மற்றொரு வாசலின் வழியாக சிரமமில்லாமல் வெளியேற வேண்டும் என்பது அண்ணலாரின் விருப்பமாக இருந்தது. இந்த நிர்மாண வேலை ஹிஜ்ரி 64 ஆம் ஆண்டு ஆரம்பமாகி ஹிஜ்ரி 65 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதத்தில் நூறு ஒட்டகங்களை அறுத்து ஒரு பெரிய விருந்தளித்தார்கள்.                                                                  நூல்:- அக்பாரு மக்கா


ஒரு பள்ளிவாசலை சிறப்பாக கட்டி முடித்த பிறகு அதனை சுற்றி இருப்பவர்களையும், ஆன்றோர்கள் சான்றோர்களையும், ஏழை எளியவர்களையெல்லாம் அழைத்து விருந்து ஏற்பாடு செய்யலாம். இது மகிழ்ச்சிக்குரிய செயலே ஆகும்.


அனுமதி வேண்டும்

அபூ மஸ்ஊது அல்அன்சாரீ ரலி அவர்கள் கூறியதாவது. இறைச்சி வியாபாரியான அபூஷுஐப் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களையும் மற்றும் சிலரையும் விருந்துக்கு அழைத்தார். அண்ணலாரும் விருந்துக்கு அழைக்கப்பட்ட தோழர்களும் விருந்துண்ண சென்றபோது விருந்துக்கு அழைக்கப்படாத மற்றொருவர் அவர்களை பின் தொடர்ந்து வந்தார்.


அண்ணலார் (அபூஷுஐப்-ரலி அவர்களின்) வீட்டு வாசலுக்கு வந்ததும் அந்த வீட்டுக்காரரிடம்,  ( إِنَّ هَذَا اتَّبَعَنَا فَإِنْ شِئْتَ أَنْ تَأْذَنَ لَهُ وَإِنْ شِئْتَ رَجَعَ ) "நீங்கள் எங்களை விருந்துக்கு அழைத்த போது எங்களுடன் இல்லாத (விருந்துக்கு அழைக்கப்படாத) மற்றொரு மனிதரும் எங்களைப் பின்தொடர்ந்து வந்து விட்டார். நீங்கள் அவருக்கு அனுமதியளித்தால் அவர் வீட்டுக்குள் வருவார்" என்று கூறினார்கள். அதற்கு அபூஷுஐப் (ரலி) அவர்கள், "அவருக்கும் நாம் அனுமதியளித்து விட்டோம். அவர் உள்ளே வரலாம்" என்று கூறினார். நூல்:-  புகாரீ- 2081, முஸ்லிம்- 4141, திர்மிதீ-1018


யார் விருந்துக்கு அழைக்கப்பட்டாரோ அவர் மட்டுமே விருந்துண்ண செல்லவேண்டும். அழைக்கப்படாதவர் செல்லக் கூடாது.


விருந்துக்கு அழைக்கப்பட்டவர் தம்முடன் விருந்துக்கு அழைக்கப்படாதவரையும் அழைத்து வருவதானால், விருந்து கொடுப்பவரின் அனுமதி பெற்றே அழைத்து வரவேண்டும். தம்முடன் அழைப்பின்றி வந்தவருக்கு அனுமதி கொடுத்தால் தான், தாம் விருந்தில் கலந்து கொள்வேன் என்று அவர் கட்டாயப்படுத்தக் கூடாது


அப்படி அழைக்கப்படாத ஒருவரும் அழைக்கப்பட்டவரோடு சேர்ந்து வந்துவிட்டால் விருந்து கொடுப்பவர் விரும்பினால் அவரை அனுமதிக்கலாம்; அல்லது மறுக்கலாம். இருந்தாலும் வீடு வரை வந்துவிட்டவரை விருந்தில் கலந்து கொள்ள அனுமதிப்பதே நல்லது; விரும்பத்தக்கது. மறுப்பதானாலும் நளினமாக எடுத்துச் சொல்லித் திருப்பி அனுப்ப வேண்டும்.


மறுக்கக்கூடாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا دَعَا أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُجِبْ عُرْسًا كَانَ أَوْ نَحْوَهُ ) உங்களில் ஒருவர் தம் சகோதரரை விருந்துக்கு அழைத்தால், அதை ஏற்று அவர் செல்லட்டும். அது மண விருந்தாக இருந்தாலும் சரி, (அது போன்ற) மற்ற விருந்தாக இருந்தாலும் சரி. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2809


நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் கூறினார்கள். (வெறும்) ஆட்டுக்கால் குழம்பு (மூலம் தயாரான விருந்து)க்காக நான் அழைக்கப்பட்டாலும் அதை ஏற்று நான் செல்வேன். ஓர் ஆட்டுக்கால் குழம்பு மட்டுமே எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டாலும் அதைக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன்.                           அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2568, முஸ்லிம்-1258


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தாம் அழைக்கப்பட்டது சாதாரண விருந்துக்காக என்று தெரிந்தாலும் அழைத்தவரின் வீட்டுக்கு சென்று அந்த விருந்தில் பங்கேற்பார்கள் என்று விளங்குகிறது. மேலும் அண்ணலாரின் நற்குணத்திற்கும் பணிவுக்கும் சான்றாக இந்த நபிமொழியை அமைந்துள்ளது.


ஜனாதிபதி உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுடைய அடிமையின் விருந்தழைப்பை ஏற்றுச் சென்றார்கள்.                                                       நூல்:- புகாரீ பாடம்: ஆட்சியாளர் 

விருந்தழைப்பை ஏற்பது

ஒருவர் அன்புடன் விருந்துக்கு அழைக்க, அதைத் தகுந்த காரணமின்றி ஏற்க மறுக்கும்போது அழைத்தவரின் மனம் புண்படும். இது ஒரு புறமிருக்க, தக்க காரணமின்றி விருந்தழைப்பை ஏற்க மறுப்பவரின் உள்ளத்தில் மமதை ஏற்படுகிறது. இது பகைமை உருவாக்குவதற்கும் அது தொடர்வதற்கும் வாய்ப்பாக அமைந்து விடக்கூடும்.


ஒரே நேரத்தில் இருவர் விருந்துக்கு அழைத்தால் இருவரில் மிக நெருக்கமான உறவினர் யாரோ அவரது வீட்டுக்குச் செல்வதை முறையாகும். உறவிலும் இருவரும் சமமாக இருந்தால் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்க்கலாம் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.


கலந்து கொள்ளக்கூடாது

உமர் (ரலி) அவர்களின் அடிமை அஸ்லம் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களுடன் நாங்கள் சிரியாவுக்கு சென்றிருந்தபோது பாதிரியார் ஒருவர் வந்து, "ஜனாதிபதி அவர்களே! நான் உங்களுக்காக உணவு தயாரித்து வைத்துள்ளேன். ஆகவே உங்களோடு உள்ள சிறப்பு மிக்கவர்களை (விருந்துக்காக) நீங்கள் என்னிடம் அழைத்து வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஏனெனில் அது எனது செயல்பாடுகளுக்கு வலுவூட்டுவதாகவும் எனக்கு கண்ணியமாகவும் இருக்கும்" என்று கூறினார். அதற்கு ஜனாதிபதி அவர்கள், ( إِنَّا لاَ نَسْتَطِيعُ أَنْ نَدْخُلَ كَنَائِسَكُمْ هَذِهِ مَعَ الصُّوَرِ الَّتِي فِيهَا‏ ) "இவ்வாறான உருவ படங்களுடன் உள்ள உங்களது வணக்கஸ்தலங்களுக்குள் நாங்கள் நுழைய முடியாது" என்று கூறினார்கள் நூல்:- அல் அதபுல் முஃப்ரத்-1248


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (தம்முடைய புதல்வர் சாலிமின் மணவிருந்திற்கு) அபூ அய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களை அழைத்திருந்தார்கள். (அன்னாரின் அழைப்பை ஏற்று அவர்களது இல்லத்திற்கு வந்த) அபூஅய்யூப் (ரலி) அவர்கள் (விருந்து நடைபெறும்) அந்த இல்லத்தின் சுவற்றில் (ஆடம்பரமான) திரை (தொங்கவிடப்பட்டு) இருப்பதை கண்டார்கள். உடனே அபூஅய்யூப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் உணவை உண்ண மாட்டேன்" என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.                                                               நூல்:- புகாரீ-5180


(மணவிருந்து நடைபெற்ற) வீட்டில் உருவப்படமிருப்பதைக் கண்ட அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் திரும்பி வந்து விட்டார்கள்.                                                                நூல்:- புகாரீ


ஹுமைது பின் நுஐம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய இருவரும் ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள். அதில் கலந்து கொண்டு திரும்பும்போது உமர் (ரலி) அவர்கள், "நான் இந்த விருந்துக்கு வந்து விட்டேன். ஆனால் நான் இதில் கலந்து கொள்ளாமல் இருப்பதையே பிரியப்பட்டேன்" என்று கூறினார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் காரணம் கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள்,  ( خَشِيتُ اَن يَّکُونَ مُبَاهَاةً )  "இது பெருமைக்காக வைக்கப்பட்ட உணவாக இருக்குமோ என்று நான் பயப்படுகிறேன்" என்று கூறினார்கள்.                    நூல்:- கன்ஸுல் உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம் - 2, பக்கம் - 663


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டாரோ, அவர் மது பரிமாறப்படும் இடத்தில் அமர வேண்டாம்.      அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள்    நூல்:- திர்மிதீ-,  முஸ்னது அஹ்மது


பெருமைக்காகவும், தனது பொருளாதார திமிரைக் காட்டவும் அழைக்கப்படும் விருந்துக்கு செல்லக்கூடாது. காரணம் அவரது கெட்டகுணத்தை நாம் ஆதாரிப்பது போன்று ஆகிவிடும். இதுவும் பாவக்காரியமே! 


விருந்துகளில் மது பரிமாறப்படுவது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டள்ளது (ஹராம்). எனவே இந்த விருந்தில் மது பரிமாறப்படும் என்று முன்பே தெரிந்தால் அந்த விருந்துக்கு செல்வதை தவிர்ந்து கொள்வது தான் சிறந்ததாகும்.


தவறான நடைமுறை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُمْنَعُهَا مَنْ يَأْتِيهَا وَيُدْعَى إِلَيْهَا مَنْ يَأْبَاهَا ) வருபவர்கள் (ஏழைகள்) தடுக்கப்பட்டு மறுப்பவர்கள் (செல்வந்தர்கள்) அழைக்கப்படும் மணவிருந்து (வலீமா) உணவே, கெட்ட உணவாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்களின் நூல்:- முஸ்லிம்-2819


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். வயிறு நிரம்பியவர்கள் (பணக்காரர்கள்) அழைக்கப்பட்டு பசித்தவர்கள் (ஏழைகள்) மறுக்கப்படுகின்ற உணவே மிகவும் மோசமான உணவாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். (شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الأَغْنِيَاءُ، وَيُتْرَكُ الْفُقَرَاءُ ) ஏழைகளை விட்டுவிட்டு செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் மண விருந்து (வலீமா) உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். நூல்:- புகாரீ-5177 முஸ்லிம்-2816


பசிக்காக சாப்பிடும் ஏழைகளால் உணவு விரயமாவதில்லை. ருசிக்காக சாப்பிடும் செல்வந்தர்களால் உணவு விரயமாகிறது. இஸ்லாமில்  வீண்விரயம் ஹராமாகும். எனவே பசி உணர்வு அறியாத செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்படும் விருந்து மிகக் தீயதாகிறது.


இறைவனின் பொருத்தத்தை நாடி பிறருக்கு விருந்தளிப்பதும் நற்செயலேயாகும். இதுபோன்ற விருந்தில் கலந்து கொள்வதும் நற்செயலேயாகும். நம்முடைய வாழ்க்கையில் நற்செயல்கள் பல புரிந்து இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. 

 

No comments:

Post a Comment

கர்பலாவை நோக்கி!

  கர்பலாவை நோக்கி!   لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ அறிவுடையவர்களுக்கு இவர்களுடைய வரலாறுகளில் படிப்பினை நி...