Search This Blog

Wednesday, 2 March 2022

பெண்ணுரிமைப் பேணுவோம்!

 

பெண்ணுரிமைப் பேணுவோம்!

 

وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ

 

அவர்களிடம் (பெண்களிடம்) நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள். திருக்குர்ஆன்:- 4:19

 

மார்ச் - 8  உலக மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

இஸ்லாம், சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே  பேச்சுரிமை, எழுத்துரிமை, கல்வியுரிமை, கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, கணவனிடமிருந்து மணவிலக்கு பெறும் உரிமை, வாரிசுரிமை, சொத்துரிமை, சுயமாக சம்பாதிக்கும் உரிமை, கற்பைக் காத்து கண்ணியமாக வாழும் உரிமை இப்படி வாழ்வின் அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு எவ்வித போராட்டமும் இன்றி வழங்கியுள்ளது.

 

அறியாமைக் காலத்தில் கொத்தடிமைகளாக, பாலியல் பண்டங்களாக வாழ்ந்த பெண் சமூகத்தினரை தகுதிமிக்கவர்களாக தலை நிமிர்ந்து வாழச் செய்தது இஸ்லாம்.

 

பெண்ணாக பிறப்பது பாவம் என்றெண்ணிய அறியாமைக் காலத்தில்தான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்ணுரிமைப் பேணுவோம் என்றுரைத்து அதற்காக பல திட்டங்களை தீட்டி, அதை செயல்படுத்தியும் காட்டினார்கள்.

 

மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். பெண்களிடம் நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள்என்று அல்லாஹ் சொல்கிறான். அதன் பொருள்: நீ துன்புறுத்தக்கூடாது என்பது மட்டுமல்ல, அவளால் ஏற்படுகிற சில துன்பங்களை நீ சகித்துக் கொள்ள வேண்டும் என்பதுமாகும்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (  مَا أكرَمَ النِّسَاءَ إلَّا كَرِيمٌ ، وَلَا أَهَانَهُنَّ إِلَّا لَئِيمٌ ) கண்ணியத்திற்குரியவனே, பெண்களை கண்ணியமாக நடத்துவான். இழிவானவன் பெண்களை இழிவாக நடத்துவான். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அசாகிர், தாரிக் திமிஷ்க்-13/312

 

பெண்களை  கண்ணியப்படுத்துபவன். கண்ணியத்திற்குரியவன். அவர்களை  இழிவுப்படுத்துபவன். இழிவுக்குரியவன் என்பதே இதன் பொருள்.                                                                                                                                     

 

திருமணம்

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் இறப்பு தருவாயில் தன் சகோதரர் குதாமா பின் மழ்ஊன் (ரலி) அவர்களிடம், நல்ல ஆடவர் ஒருவருக்குத் தம் மகளை மணமுடித்துக் கொடுக்குமாறு இறுதி விருப்பம் தெரிவித்துத் தன் மகளை ஒப்படைத்தார். உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி), குதாமா பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் ஆகிய இருவரும் என் தாய் மாமன்மார்கள் ஆவர். நான் குதாமா பின் மழ்ஊன் (ரலி) அவர்களிடம் சென்று, உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களின் மகளைப் பெண் கேட்டேன்.

 

அவர் எனக்கு அப்பெண்ணை அவளிடம் அனுமதி கோராமலேயே மண ஒப்பந்தம் செய்து வைத்தார். ஆனால் அவள், தன்னை (ஏற்கனவே, மணக்கொடை அதிகம் தருவதாகக் கூறியிருந்த) முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் மணமுடித்துக் கொள்ள வேண்டுமென விரும்பினாள். எனவே, குதாமா (ரலி) அவர்கள் செய்து வைத்த மண ஒப்பந்தத்தை அப்பெண் ஏற்க மறுத்தாள். இந்த வழக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றது. அப்போது அண்ணலார், "அவள் ஓர் அனாதைப் பெண், அவளுடைய அனுமதியின்றி அவளை மணமுடித்து வைக்கப்படமாட்டாது" என்று கூறினார்கள். எனவே, மண ஒப்பந்தம் மூலம் நான் உரிமையாக்கிய அப்பெண் என்னிடமிருந்து விடுவிக்கப்பட்டாள். முஃகீரா (ரலி) அவர்களுக்கே அப்பெண்ணை மணமுடித்து வைத்தனர். நூல்:- இப்னுமாஜா-1868, முஸ்னது அஹ்மத்-5862

 

குடும்ப வாரிசு

 

ஆண் பிள்ளைகள் தான், குடும்ப வாரிசாகும் என்று கருதப்படுகிறது. அதனால்தான் பெயர் சொல்ல ஆண்பிள்ளை வேண்டுமென்று தாய் தந்தையர் விரும்புகின்றனர். ஆனால், ஆண் மட்டுமல்ல. பெண்ணும் குடும்ப வாரிசுதான் என்று இஸ்லாம் இயம்புகிறது.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களின் அன்பு மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் பிள்ளைகளான ஹஸன் (ரலி)ஹுசைன்  (ரலி) அவர்களின் வழி தோன்றல்களைத்தான் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் வாரிசுகளாக உலகமெங்கும் முஸ்லிம்களால் கண்ணியமாகக் கருதப்படுகிறது.

 

கற்புநெறி

 

(நபியே) இறைநம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ் நோக்கிய வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை  நன்கறிந்து கூறுகிறான். (நபியே) இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள்: அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கி வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும்.    திருக்குர்ஆன்:- 24:30,31

 

கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சம மதிப்புள்ள ஒரு சொத்தாகும். அது பெண்ணுக்கு மட்டும் சொந்தமானது என்று நாம் நினைத்தால் அது அறியாமை. திருமணத்திற்கு முன் ஒரு பெண் தவறான உறவு வைத்தால் அவள் கற்பு பறிபோனவள் என்று சொல்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அவ்வாறே ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபட்டால் அதை சமூகம் கண்டுகொள்வதில்லை. திருமணத்திற்கும் முன்பும் பின்பும் ஒரு ஆண் வழி தவறிய உறவுகளில் ஈடுபட்டால் அவனும் கற்பு பறிபோனவன் தான் என்று இஸ்லாம் இயம்புகிறது. கற்பு விஷயத்தில் ஆணும் பெண்ணும் சமமானவர்களே!

 

மாயிஸ் (ரலி) அவர்கள் போன்று சில நபித்தோழர்கள் கற்பு நெறியில் இருந்து தடம்புரண்டபோது அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்பதே வரலாறு.

 

சொத்துரிமை

 

(இறந்துபோன) தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்கு உண்டு. (அவ்வாறே) தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அந்த சொத்து குறைவாகவோ, அல்லது அதிகமாகவோ இருந்தாலும் சரியே. இது (அல்லாஹ்வால்) ஏற்படுத்தப்பட்ட  பாகமாகும். திருக்குர்ஆன்:- 4:7

 

உங்கள் சந்ததியில் (ஆணும் பெண்ணும் இருந்தால்) ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (உங்கள் சந்ததிகளாகிய) அவர்கள் (ஆணின்றிப்) பெண்களாகவே இருந்து அவர்கள் (இருவராகவும் அல்லது) இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் (எத்தனை பேர்கள் இருந்தபோதிலும்) அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டையே (சமமாக) அடைவார்கள். ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு (இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில்) பாதி உண்டு. திருக்குர்ஆன்:- 4:11

 

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களின் துணைவியார் சஅத் அவர்களுக்கு பிறந்த தம்மிரு மகள்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து பின்வருமாறு கூறினார்:

 

"நாயகமே! இதோ இவ்விருவரும் (என் கணவர்) சஅத் (ரலி) அவர்களின் புதல்வியர் ஆவர். இவ்விருவரின் தந்தை (சஅத்) உங்களுடன் போரில் (பங்கேற்ற போது) கொல்லப்பட்டு உயிர்நீத்தார். இவ்விருவரின் தந்தையின் சகோதரர் இவர்களுக்குச் சேர வேண்டிய சொத்துக்கள் முழுவதையும் எடுத்துக்கொண்டார்; இவர்களுக்காக அவர் எதையும் விட்டு வைக்கவில்லை. எந்தப் பொருளும் இல்லாத நிலையில் இவ்விருவருக்கும் மணமுடித்துவைக்க முடியாது.

 

அப்போது அண்ணலார், இது தொடர்பாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான்" என்று கூறினார்கள். அப்போதுதான் சொத்துரிமை தொடர்பான வசனம் (4:11) அருளப்பெற்றது. உடனே அண்ணலார் அவரின் தந்தையின் சகோதரருக்கு ஆளனுப்பி (வரவழைத்து) ( أَعْطِ ابْنَتَىْ سَعْدٍ الثُّلُثَيْنِ وَأَعْطِ أُمَّهُمَا الثُّمُنَ وَمَا بَقِيَ فَهُوَ لَكَ ) சஅத் அவர்களின் புதல்வியருக்கு (அவர் விட்டுச்சென்ற சொத்தில்) மூன்றில் இரு பங்குகளைக் கொடுங்கள்; அவ்விருவரின் தாயாருக்கு (சஅத்தின் மனைவிக்கு) எட்டில் ஒரு பங்கைக் கொடுத்துவிடுங்கள். எஞ்சியுள்ளதே உமக்கு உரியதாகும்" எனக் கூறினார்கள்.   நூல்:- திர்மிதீ-2018

 

இஸ்லாம் கூறும் சொத்துரிமைச் சட்டம் வருவதற்கு முன், பெண்களுக்கு சொத்துரிமை என்பது அறவே கிடையாது. அதனால் தான், சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கு மனைவியும் இரு புதல்வியரும் இருந்தும்கூட அவருடைய சகோதரரே சஅத் (ரலி) அவர்களின் முழுச்சொத்தையும் எடுத்துக் கொண்டுவிட்டார். அவர் பெற்ற குழந்தைகளும் மனைவியும் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை வந்தது. திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பெற்றன. பெண்களின் சொத்துரிமை நிலைநாட்டப்பட்டது; அவர்களின் கௌரவம் காக்கப்பட்டது.

 

தந்தையின் சொத்தில் மகளுக்கும், கணவனின் சொத்தில் மனைவிக்கும், மகனின் சொத்தில் தாய்க்கும் பாகம் உண்டு என அறியமுடிகிறது.

 

இன்றளவும் சில சமூகங்களில் பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. வேறு சில சமூகங்களில் கடந்த நூற்றாண்டில்தான் மிகவும் தாமதமாகப் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட்டது. அதுவும் பெண்கள் கடுமையாகப் போராடிய பிறகே அந்த உரிமை அவர்களுக்குச் சட்டமாக்கப்பட்டது. ஆனால் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே, மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத காலத்திலேயே குர்ஆன் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கிவிட்டது. அதற்காகப் பெண்கள் போராட்டம் நடத்தாத காலம் அது.

 

தாய், தந்தை, கணவன், நெருங்கிய உறவினர்கள் ஆகியோரின் சொத்துக்களில் பெண்களுக்கு உரிய பங்கை முறையாக அளித்துவிட்டால், வரதட்சனை, ஆதரவற்ற பெண்கள் சந்திக்கும் துயரம் ஆகிய அவலங்கள் அகன்றுவிடும். பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பிற்குக் குர்ஆன் அன்றே வழிகண்டது போற்றுதலுக்குரிய அம்சமாகும்.

 

காசு பணம்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நாயகமே! (என் கணவர்) அபூசுப்யான் கருமியான மனிதர். எனக்கும், என் குழந்தைக்கும் செலவுக்கு போதிய பணத்தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்கு தெரியாமல் (திருட்டுத்தனமாக) எடுத்துக் கொண்டதைத்தவிர (போதுமான தொகையை அவர் தர மாட்டார்) என்று கூறினார். அதற்கு அண்ணலார் ( خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ )  "உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்!" என்று கூறினார்கள்.   நூல்:- புகாரீ-5364

 

அப்பாடா தீர்ந்தது ஒரு பிரச்சனை. கணவனின் சட்டைப் பையிலிருந்து பயந்து பயந்து பணம் எடுத்தவர்கள் இனி தைரியமாக எடுக்கலாம். கணவனுக்கு தெரியாமல் அவன் சட்டைப் பையிலிருந்து பணம் எடுக்காத மனைவியும் உண்டா?


குடும்பச் செலவுக்கு போதுமான தொகை வைத்திருந்தும் அதை தர மறுக்கும் கருமியான தன் கணவனிடமிருந்து அவனுக்கே தெரியாமல் வீட்டு செலவுக்கு போதுமான தொகையை மனைவி எடுத்துக் கொண்டால் அது திருட்டு குற்றமாகாது. அதற்காக அவளை தண்டிக்கவும் கூடாது என்பதே இஸ்லாமிய நிலைப்பாடு.

 

கணவனின் பாக்கெட்டிலிருந்து காசு பணங்களை மனைவி தாராளமாக எடுத்து கொள்ளலாம். அனுமதி உண்டு. ஆனால் கணவன், மனைவியின் சேமிப்பு காசு பணங்களை அவளின் அனுமதியின்றி எடுக்க இயலாது.

 

திருமணத்தின்போது அவளுக்கு கிடைக்கும் மணக்கொடையை பெற்றோருக்கோ, சகோதரர்களுக்கோ, கணவனுக்கோ அவளாக மனமுவந்து கொடுத்தால் பரவாயில்லை. அதை அவளிடம் வற்புறுத்தி வாங்க இயலாது. காரணம், அவளுடைய சொத்து சுகங்களை அவள் விரும்பியவாறு செய்யும் உரிமை அவளுக்கு உண்டு. அதில் எவரும் குறுக்கிட அனுமதியில்லை.

 

அவள், தன்னுடைய காசு பணங்களில் இருந்து பெற்றோர், சகோதரர்கள், கணவன், பிள்ளைகள் என யாருக்காவும் செலவு செய்யவேண்டிய கட்டாயம் இல்லை.

 

சம்பாதிக்கலாம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு மனைவியான ஜைனப் (ரலி) அவர்கள் தோல் பதனிடும் கைத்தொழில் மூலம் சம்பாதிப்பவராக இருந்தார்கள்.

 

ஹிஜ்ரி 23 ம் ஆண்டு ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் வந்து, தான் வியாபாரம் செய்ய போவதாகக் கூறி கடன் கேட்டார். ஜனாதிபதி அவர்கள் அப்பெண்ணுக்கு பைத்துல்மால் எனும் பொது நிதியிலிருந்து 4000 தீனார்கள் (தங்கக்காசுகள்) கடன் கொடுத்தார்கள். அப்பெண் அதைப் பெற்றுக் கொண்டு சிரியா நாட்டுக்கு சென்று வணிகம் செய்து பொருளீட்டி வந்தார்.   நூல்:- முஅத்தா மாலிக், தாரீகுத் தபரீ

 

இதிலிருந்து பெண்கள் வீட்டில் முடங்கி கிடக்கக்கூடியவர்கள் அல்லர் மாறாக, அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்யலாம், வியாபாரம் செய்யலாம் ஆனால் இவைகள் அனைத்தும் இஸ்லாமிய ஒழுக்க நெறிகளுக்குள் இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

 

பெண்கள் தன் வீட்டில் இருந்தவாறு அல்லது வெளியூர் வெளிநாடு என்று எங்கு வேண்டுமானாலும் போய் சம்பாதிக்கலாம். அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. ஆனால், அவர்கள் வெளியே செல்லும்போது பர்தாவை முறையாக கடைபிடிக்க வேண்டும். மேலும், அதற்காக வெளியூர் பயணம் கிளம்பினால் தந்தை, தாய்மாமன், உடன்பிறந்த சகோதரன், கணவன், பெற்றப்பிள்ளை, பேரப்பிள்ளை போன்ற மஹ்ரமான (மணமுடிக்க அனுமதியில்லாத) ஆண் துணை அவசியம் வேண்டும். 

 

கல்வியுரிமை

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( طَلَبُ اَلْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ وَ مُسْلِمَةٍ ) (பயனுள்ள) கல்வியைத் தேடுவது முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண் மீதும் கடமையாகும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா- 220, ஸஹீஹ் ஜாமிஉ

 

உலகிலேயே முதன்முதலில் கி.பி. 859 ஆம் ஆண்டு (அதாவது 9 ஆம் நூற்றாண்டில்) மொரோக்கோவின் ஃபெஸ் (Fez) என்ற நகரில் அல்கரவிய்யின் பல்கலைக்கழகம் (Al Qarawiyyin University) நிறுவப்பட்டது. அதை நிறுவியவர் ஃபாத்திமா பின்த் முஹம்மத் அல்ஃபிஹ்ரிய்யா அல்குறைஷியா என்றொரு முஸ்லிம் பெண்.

 

உலகிலேயே மிகப் பழமையானதும் இன்று வரை இயங்கிக்கொண்டிருப்பதும் இந்தப் பல்கலைக்கழகம்தான். இதில் இன்னொரு புதுமை என்னவென்றால் உலகிலேயே முதன்முதலாக படிப்பு முடிந்ததும் பட்டங்கள் அளிக்கப்படுவதை அறிமுகப்படுத்தியதும் இந்தப் பல்கலைக்கழம்தான்! இதன் பிறகு தான் இதர பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் அளிக்கும் பழக்கம் வந்தது.

 

ஃபாத்திமாவும் அவருடைய சகோதரி மரியமும் நன்றாகப் படித்தனர். இஸ்லாமியப் பாடங்களையும் ஃபிக்ஹ் கலையையும் ஹதீஸ் கலையையும் கற்றுத் தேர்ந்தனர். நூல்:- சீரத் அஃலாமுந் நுபலா

 

9 - ஆம் நூற்றாண்டில் ஒரு முஸ்லிம் பெண் தானும் உயர்தரக் கல்வி கற்று, உலகுக்கே முன்மாதிரியாக முதல் பல்கலைக்கழகத்தை நிறுவி, பட்டம் அளிக்கும் பழக்கத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

 

ஆனால் 19-ஆம் நூற்றாண்டில் எங்களுக்குக் கல்வி கற்கும் உரிமை வேண்டும்என்று மேலைநாடுகளில் பெண்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைதான் இருந்தது. அப்படி வீதிக்கு வந்து போராடிய ஒரு பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இந்தப் போராட்டங்களின் விளைவாக 1821 ஆம் ஆண்டில்தான் அமெரிக்காவில் முதல் பெண் பல்கலைக்கழகம் உருவானது. 1841 ஆம் ஆண்டில்தான் பெண்கள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகக் கற்றுக் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

 

1400 வருடங்களுக்கு முன்பாக நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் பெண்கள் கல்வி கற்பதற்குரிய அவசியத்தைப் போதித்து அதற்குரிய அனைத்து உரிமைகளையும் வழங்கினார்கள்.

 

கற்பைக் காத்துக்கொள்வது

 

ஜாபிர் ரலி அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலுக்கு முசைகா என்ற அடிமைப்பெண் இருந்தாள். அவளை (விபச்சாரம் என்ற) பாவச்செயலில் (ஈடுபடுமாறு) அப்துல்லாஹ் பின் உபை நிர்பந்தித்து வந்தான். அவள் ஓரளவு நல்லவளாக இருந்தாள். எனவே அதற்கு மறுத்து வந்தாள்.

 

அப்போதுதான் அல்லாஹுத்தஆலா கற்பைப் பேண விரும்பும் உங்கள் அடிமைப்பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் (அற்பப்) பொருளை  நீங்கள் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு  நிர்ப்பந்திக்காதீர்கள். (24:33) என்ற இந்த வசனத்தை அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்

 

எது பெண்ணே ஆடை சுதந்திரம்...?

 

இஸ்லாம் கூறும் ஆடை முறையை விமர்ச்சித்துதான், இஸ்லாம் பெண் சுதந்திரத்திற்கு எதிரானது என்று சில விஷமிகள் கோஷமிடுகிறார்கள். ஆனால், நடுநிலை சிந்தனையாளர் இஸ்லாம் கூறும் ஆடை முறை தான் பெண்களுக்கு பாதுகாப்பானது என்று புகழாரம் சூட்டுகிறார்கள்.

 

பெண்ணுரிமையை பற்றி பேசித் திரிவோர் பெண்கள் தன் மேனியழகு தெரியாத விதமாக உடல் முழுவதுமாகப் போர்த்திக்கொள்வதை பெண்ணுரிமைக்கு, பெண் சுதந்திரத்திற்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்.

 

அலங்கோலமாக ஆடையணிந்து அந்நியர்களின் உணர்வுகளை தூண்டிவிடுவதும், இரவு ஆடையை (நைட்டி, பேண்டிஸ்) உடுத்திக்கொண்டு மார்பு தெரிய, அடுத்த தெரு வரை சென்று வருவதும் தான் முழுமையான பெண்ணுரிமையா?

 

கொண்டவன் காணவேண்டியதை! கண்டவனும் காண்பது நியாயம் தானா? இளமை அளவை எடுத்துக்காட்டும் உடலை ஒட்டிய கணித... ஆடையா? சுதந்திரம்?

 

பண்பான ஆடை உடுத்தி வெளியே செல்லும் பெண்களை பத்தாம்பசலி என்கின்றனர். இன்று பெண்களில் பலருக்கும் துப்பட்டாவின் பயனே தெரிவதில்லை. கேட்டால், பெண் சுதந்திரம், ஃபேஷன் என்கிறார்கள்.

 

ஆபாசத்தைத் தூண்டும் ஆடையை, பெண் சுதந்திரம் என்றால்? என்னவென்பது? அந்நியர்களின் பார்வையால் கற்புக்கு களங்கம் வந்து விடுமா? என்று வேதாந்தம் பேசுவது முறையாகுமா?

 

நண்பர்கள் என்று பழகிக்கொண்டு நடுரோட்டில் நாய்களைப் போன்று ஒட்டி உறவாடிக்கொள்வது பெண்ணுரிமை அல்ல. அது நம் கலாச்சாரத்திற்கு எதிரானவையே!

 

சேலை கட்டிய பொம்மையையும் தடவிப்பார்க்கும் காட்டுமிராண்டி ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை பெண்கள் கவனிக்க வேண்டும். பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்கள் தம் உடல் தெரிய உலாவுவது உயர் பண்பல்ல.

 

தவறு செய்பவரை விட தூண்டுபவருக்குத்தான் அதிக தண்டனை விதிக்கவேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. சட்டத்தைப் பற்றி நமக்கென்ன கவலை என எண்ணுவதுதான், நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு ஒரு காரணம்.

 

எனவே, நாம் இஸ்லாம் கூறிய முறையில் பெண்ணுரிமைப் பேணி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

Tuesday, 1 March 2022

நீ வருவாய் என காத்திருக்கிறோம்!

 

நீ வருவாய் என காத்திருக்கிறோம்!

 

 وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّـکُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ ‏


(நோன்பின் நன்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை தெரிந்து கொள்வீர்கள்). திருக்குர்ஆன்:- 2:184


அடடே அருள்வளம் பொங்கக்கூடியபாவங்கள் மன்னிக்கப்படக்கூடியநல்லறங்கள் புரிவது மிக இலகுவாகக்கூடியபள்ளிவாசல்களெல்லாம் இறைவழிபாட்டால் ஜொலிக்கக்கூடிய புனிதமிகு ரமளான் மாதம் வந்துவிட்டதே என்று எண்ணும்போது இறைநம்பிக்கையாளர்களின் உள்ளமெல்லாம் தேனாய் இனிக்கிறது.

 

நோன்பின் மூலமாக மனக்கட்டுபாடுஉடல் ஆரோக்கியம்இறைபக்தி, ஏழையின் பசியை செல்வந்தர்கள் உணருதல் உள்ளிட்ட உயர் பண்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

 

புனித ரமளான் நோன்புக்கு, மக்களைப் பெரும் அளவில் நன்மையின் பக்கம் ஈர்க்கும் ஆற்றல் உள்ளது. இஸ்லாமிய அறிவுரைகளைப் பேணி நடப்பதில் அலட்சியமாக இருப்பவர்கள்கூட ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதையும்பள்ளிவாசலுக்கு தொழ வருவதையும் காணலாம். ரமளானின் வருகையால் மக்களிடம் வணக்கவழிபாடுகளில் அதிக ஈடுபாடு ஏற்படுகிறது. அவர்களின் சிந்தனையில் நல்லார்வம் பிறக்கிறது. அவர்களின் இதயங்கள் இஸ்லாமிய அறிவுரைகளின் பக்கம் திறந்திருக்கின்றன. 

 

மாண்புகள்

 

சல்மான் ஃபார்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஷஅபான் மாத இறுதியில் சிறப்புரையாற்றினார்கள். (அதில்)

( يَا أَيُّهَا النَّاسُ قَدْ أَظَلَّكُمْ شَهْرٌ عَظِيمٌ مُبَارَكٌ شَهْرٌ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مَنْ أَلْفِ شَهْرٍ جَعَلَ اللهُ تَعَالَى صِيَامَهُ فَرِيضَةً وَقِيَامَ لَيْلِهِ تَطَوُّعًا. مَنْ تَقَرَّبَ فِيهِ بِخَصْلَةٍ مِن الْخَيْرِ كَانَ كَمَنْ أَدَّى فَرِيضَةً فِيمَا سِوَاهُ وَمَنْ أَدَّى فَرِيضَةً فِيهِ كَانَ كَمَنْ أَدَّى سَبْعِينَ فَرِيضَةً فِيمَا سِوَاهُ. وَهُوَ شَهْرُ الصَّبْرِ وَالصَّبْر ثَوَابه الْجنَّة )

மனிதர்களே! உங்களிடம் மகத்தான மாதம் வரயிருக்கிறது. அது அருள்வளம் (பரக்கத்) மிகுந்த மாதம். அதில் ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததொரு இரவு உண்டு. அல்லாஹுதஆலா அம்மாதத்தில் நோன்பு நோற்பதை கடமையாக்கியுள்ளான். அதன் இரவில் நின்று வணங்குவதை உபரியான வணக்கமாக ஆக்கியுள்ளான். இதில் யார் ஒரு உபரியான வணக்கம் புரிகின்றாரோ அவர் ரமளான் அல்லாத மாதத்தில் ஒரு கடமையான வணக்கத்தை நிறைவேற்றியவரைப் போன்றாவார். இதில் யார் ஒரு கடமையான வணக்கம் புரிகின்றாரோ அவர் ரமளான் அல்லாத மாதத்தில் எழுபது கடமையான வணக்கங்களை நிறைவேற்றியவரைப் போன்றாவார். ரமளான் பொறுமையை கடைபிடிக்கும் மாதமாகும். பொறுமைக்கு கூலி சொர்க்கமாகும். நூல்:- இப்னுகுஸைமா

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ‏ யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1901

 

ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டது முறையானதுதான் என்று நம்பியும், அதற்கான நன்மையை அல்லாஹ்விடம் ஆவலோடு எதிர்பார்த்தும் நோன்பு நோற்பவர்களுக்கு, அவர்கள் அதுவரை செய்துள்ள சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்.            

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا جَاءَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ وَصُفِّدَتِ الشَّيَاطِينُ ) ரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்   நூல்:- புகாரீ-1898, முஸ்லிம்-1956

 

புனித ரமளான் மாதத்தில் நோன்பாளிகள் நோன்பு, தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல், திக்ரு எனும் இறைதியானம் செய்தல் உள்ளிட்ட வழிபாடுகளில் அதிகமாக ஈடுபட்டிருப்பதாலும், தீமைகளில் இருந்து விலகி சுயக் கட்டுபாட்டுடன் வாழ்வதாலும் அவர்களை வழிகெடுக்க ஷைத்தான்களால் இயல்வதில்லை. இதுவே ஷைத்தான்கள் விலங்கிடப்படுவதன் பொருளாகும். மேலும் நன்மைகளால் சொர்க்கத்திற்குச் செல்லும் வாய்ப்பு அதிகமாகிறது. தீமைகளைக் கைவிடுவதால் நரகத்திலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. இதுவே சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு, நரகத்தின் வாயில்கள் மூடப்படுவதன் கருத்தாகும் என்று அறிஞர்கள் விளக்கமளிக்கின்றனர்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ரமளான் மாதத்தின்) ( وَيُنَادِي مُنَادٍ يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ  ) ஒவ்வொரு இரவிலும் பொது அறிவிப்பாளர் ஒருவர் "நன்மையைத் தேடுபவனே முன்னேறி வா! தீமையைத் தேடுபவனே! (பாவங்களைத்) தடுத்துக்கொள்! என்று அறிவிக்கிறார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்   நூல்:- திர்மிதீ-618

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَ لِلَّهِ عِنْدَ كُلِّ فِطْرٍ مِنْ شَهْرِ رَمَضَانَ كُلَّ لَيْلَةٍ عُتَقَاءُ مِنَ النَّارِ سِتُّونَ أَلْفاً ) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் ரமளானில் ஒவ்வொரு இரவிலும், நோன்பு திறக்கும் நேரத்திலும் அறுபதாயிரம் பேர்களை நரகைவிட்டும் விடுதலை செய்கிறான்.     அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்   நூல்:-பைஹகீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-292

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ثَلاَثَةٌ لاَ تُرَدُّ دَعْوَتُهُمُ الصَّائِمُ حَتَّى يُفْطِرَ ) மூன்று சாராரின் பிரார்த்தனைகளை அல்லாஹ் மறுப்பதில்லை. அதில் ஒரு சாரார் நோன்பாளி, அவர் நோன்பு துறக்கும் வரை செய்யும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்  நூல்:- திர்மிதீ, இப்னுமாஜா, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-294

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என் சமுதாயத்தினர் ரமளானில் உள்ள மாண்புகளை முறையாக விளங்கிக் கொண்டால் வருடம் முழுவதும் ரமளானாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.  அறிவிப்பாளர்:- அபூ மஸ்ஊதுல் ஙஃப்ஃபாரீ (ரலி) அவர்கள்  நூல்:- ஷுஅபுல் ஈமான்

 

அலீ (ரலி)அவர்கள் கூறுகிறார்கள். அருமை நாயகம் அவர்களின் சமுதாயத்தினரை அல்லாஹ் வேதனைப்படுத்த நினைத்திருந்தால் ரமளான் மாதத்தையும், சூரத்துல் இக்லாஸ் (எனும் 112வது) அத்தியாயத்தையும் வழங்கியிருக்க மாட்டான்.          நூல்:- நுஜ்ஹத்துல் மஜாலீஸ்

 

நிகரில்லா வணக்கம்

 

அபீ உமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறப்போருக்கு ஒரு படையை தயார் செய்து கொண்டிருந்தார்கள். அந்த படையில் நானும் ஒருவராக இருந்தேன். எனவே, நான் அண்ணலாரிடம் வந்து, "நாயகமே! இந்த அறப்போரில் நான் (ஷஹாதத் எனும்) வீர மரணமடைய எனக்காக பிரார்த்தியுங்கள் என்று கோரினேன். அப்போது அண்ணலார் ( اللَّهُمَّ سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ ) “யா அல்லாஹ்! இந்தப் படையினருக்கு எவ்வித உயிரிழப்பும் இன்றி; மிகுதியாக (கனீமத் எனும்) போர்ச் செல்வத்துடன் அனைவரும் திரும்பி வருவதற்கு அருள்புரிவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அது போன்றே நடந்தது.

 

இது போன்றே மூன்றுமுறை படைகளை அனுப்பும்போது நானும் இவ்வாறே கோரினேன்; அண்ணலாரும் முன்பு போலவே பிரார்த்தித்தார்கள். பிறகு நான் அண்ணலாரிடம், "நாயகமே! என்னை சொர்க்கத்தில் நுழைய வைக்கும் ஓர் வணக்கத்தை எனக்கு அறிவித்துத் தாருங்கள்" என்று விண்ணப்பித்தேன். அப்போது அண்ணலார் ( عَلَيْكَ بِالصِّيَامِ فَإِنَّهُ لَا مِثْلَ لَهُ ) "நோன்பைப் பற்றிப் பிடித்துக் கொள்! இதற்கு நிகரான எந்த ஒரு வணக்கமும் இல்லை" என்று கூறினார்கள்.     நூல்:- முஸ்னது அஹ்மத்

 

மறுமை நாளில் காணலாம்                                                  

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை நான் கனவில் கண்டேன். அவர் தாகத்தால் நாக்கை தொங்க விட்டுக்கொண்டிருக்கிறார். தண்ணீர் தடாகத்தின் அருகில் அவர் வரும்போதெல்லாம் தடுக்கப்பட்டு விரட்டப்படுகிறார். பிறகு அவரிடம் ரமளான் மாத நோன்பு வந்து அவருக்குத் தண்ணீர் புகட்டித் தாகம் தீர்த்துவைத்தது. அறிவிப்பாளர்:- அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள்      நூல்:- தப்ரானீ, அர்ரூஹ் - அத்தியாயம்-10 இப்னு கய்யூம் (ரஹ்)

 

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மறுமை நாளில் அல்லாஹ் தன் அடியானிடம் கணக்கு கேட்பான். அடியான் செய்துவந்த அநீதிகளுக்கு, அவனுடைய அனைத்து வகையான வழிபாடுகளிலிருந்தும் ஈடுசெலுத்துவான். இறுதியாக நோன்பு மட்டும் மிஞ்சிவிடும்போது ஈடுசெலுத்தப்படாமலிருக்கும் ஏனைய அநீதிகளை அல்லாஹ் மன்னித்து விடுவான். பிறகு அந்த நோன்பின் பொருட்டு அவனை சொர்க்கத்தில் நுழைய செய்வான்.      நூல்:-மஜாலிசு ஷஹ்ரி ரமளான்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நோன்பு மறுமை நாளில் மனிதனுக்காக பரிந்துரை செய்யும். ( أَيْ رَبِّ إِنِّي مَنَعتُهُ الطَّعَامَ وَ الشَّهَوَاتَ بِالنَّهَارِ فَشَفَّعْنِي فِيهِ ) இறைவா! நான் இவரின் உணவையும், பகலில் உணர்வையும் தடுத்துவிட்டேன். எனவே,  இவரின் விஷயத்தில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக! என்று நோன்பு சொல்லும். அறிவிப்பாளர்:- உபைதுல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, ஹாகிம், முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-298

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ، يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ، لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ، لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، فَإِذَا دَخَلُوا أُغْلِقَ، فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ ) சொர்க்கத்தில் "ரய்யான்" எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமைநாளில் அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறெவரும் (அதன் வழியாக) நுழையமாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும்; உடனே அவர்கள் எழுவார்கள்; அதன் வழியாக நுழைவார்கள்; அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு யாரும் நுழையமாட்டார்கள். அறிவிப்பாளர்:- சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள்  நூல்:- புகாரீ-1896, முஸ்லிம்-2121

 

ஓய்வு வேண்டும்

 

ஒரு இயந்திரம் ஓய்வின்றி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தால் திடீரென ஒரு நாள் அது பழுதாகி செயலிழந்துவிடும். மாறாக, இயங்கிக்கொண்டிருக்கும் இயந்திரத்திற்கு அவ்வப்போது சில மணி நேரம்  ஓய்வு கொடுத்து இயக்கும்போது, அதை நீண்ட நாள்கள் பயன்படுத்த முடியும் என்பது நாம் அறிந்ததே! அதுபோல தான் நமது உடலிலுள்ள இரைப்பையின் நிலையும் என்று உணர வேண்டும்.           

 

பசியோடு இருக்கும்போது நம் உடலில் ஏராளமான வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது நம் மனதை செம்மையாக்க வழிவகுக்கிறது. பசி என்ற உணர்வு நமக்கு எப்போதும் இருக்குமாயின் மனதில் கீழான எண்ணங்கள் உருவாகாது.

 

உணவை குறைத்துவிடும்போது அளவற்ற ஆத்ம பலனை நாம் பெறலாம். அந்த ஆற்றலின் வலிமையால் முதலில் நமது இதயம் பரிசுத்தமாகும். இதயம் பரிசுத்தமடையும்போது நமது மனோ சக்தி உயரும். மனோசக்தியின் வளர்ச்சியால் நமது ஆத்ம இரகசியங்கள் தெளிவாக தெரியும். சுறுசுறுப்பும், விழிப்பு நிலையும் அதிகரிக்கும். பிறகு நாம் இறைதியானத்தில் ஈடுபடும்போது மனம் இன்பத்தில் திளைக்கும்.

 

முதலில் பசி ஏற்பட்ட உடன் உடல் பலகீனம் அடைவது போல் தோன்றும். தலைச் சுற்றும், கண்கள் குழியாகும். ஆனால் இவற்றையெல்லாம் கொஞ்சம் பொறுத்து கொள்ள  வேண்டும். அதன் முடிவில் உடலில் ஒரு பேரின்பம் தோன்றும். அது கிடைக்கும் பொழுது ஒரு தடவை அல்லாஹ் என்று சொன்னால் ஆயிரம் தடவை சொல்லிக் கிடைக்காத ஆனந்தம் அந்த ஒரு சொல்லில் கிடைக்கும். அப்போது தான் பசியினுடைய மகத்துவம், ஆற்றல், அந்தரங்கம் அனைத்தும் நமக்கு விளங்கும்.

 

பேரறிஞர் அபூஜாபர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். உடல், பசியின் தன்மையோடு இருந்தால் உயிரின் பசி நிறைவேறும். உடலின் பசி முழுமையாக பூர்த்தியாகிவிட்டால் உயிரின் பசி அதிகரித்து விடும்.

 

ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மனிதனிடம் மிருக உணர்வு பெருகுவதால் ஆன்மீக எண்ணங்கள் குறைகிறது. எனவே மிருகவெறி வெளிப்படும்போது நோன்பின் மூலம் அதை தணிப்பது அவசியம். உடலை பட்டினி போடும்போது தான் உள்ளத்தில் ஆன்மீகப்பசி உண்டாகும்.   நூல்:- ஹுஜ்ஜத்துல் பாலிஙா

 

உடல் ஆரோக்கியம்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் ( أَدِيْمُوْا قَرْعَ بَابِ الْجَنَّةِ يُفْتَحُ لَكُمْ ) "சொர்க்கத்தின் வாசல் திறக்கப்படும் வரை அதன் கதவை தட்டிக்கொண்டே இருங்கள். உங்களுக்காகத் திறக்கப்படும்" என்று கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் ( وكيفَ نديمُ قرْعَ بابِ الجنةِ ؟ ) "நாயகமே! அக்கதவை நாம் தட்டுவது எப்படி?" என்று வினவினார். அதற்கு அண்ணலார், ( بالجوعِ والظمأِ ) "அது பசி மற்றும் தாகம் மூலமாக தான்" என்று பதிலளித்தார்கள்.     நூல்:- பைஹகீ, கூத்தூல் குலூப்

 

அபூசுலைமான் அத்தரானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். உடல் பசித்தும், தாகித்தும் இருந்தால் தான் இதயம் தெளிவடையும்., மென்மை பெறும். வயிறு நிறைந்துவிட்டால் இதயம் குருடாகிவிடும். நூல்:- மஜாலிஸு ஷஹ்ரி ரமளான்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( صُوْمُوْا تَصِحُّوْا ) "நோன்பு வையுங்கள். உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள்."  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்    நூல்:- தப்ரானீ, தக்ரீஜுல் இஹ்யா

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( خِلْفَةُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ ) இறைவன் மீதாணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தைவிட நறுமணமிக்கதாகும் அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1904,  முஸ்லிம்-2116

 

நோன்பாளி உணவு உண்ணாமலிருப்பதன் காரணத்தால், அவரது வயிற்றிலிருந்து வரும் வாடை நமக்கு அருவருப்பானதாக இருந்தாலும், இறைவனிடம் அது நறுமணம் உள்ளதாகக் கருதப்படும். மறுமையில் நோன்பாளியின் வாய் மணம், கஸ்தூரியின் மணத்தைவிட மேலானதாக இருக்கும்.          

 

வாகனங்கள் ஓடும்போது புகையை வெளியில் தள்ளுவது போல், உடலின் உறுப்புகள் இயங்கும்போது நச்சுக் காற்றுகள் வெளியாகின்றன. நோன்பின்போது அந்த காற்றுகள் சிறப்பாக வெளியேற்றப்படுகிறன. மூச்சு விடும்போது ஒருவித வாசனை, துர்நாற்றம், இதுவே காரணம். நச்சுக்காற்று நோன்பின் மூலம் வெளியேற்றப்பட்டதும் உடல் நறுமணம் பெறுகிறது. நோயை உண்டாக்கும் நச்சுக்களை நீக்க நோன்பு காரணமாகிறது. மேலும் குடல் எனும் உணவுக் குழாய்கள் மறு சீரமைப்பு செய்யப்படுகின்றன.

 

இரைப்பைக்கு பகல் முழுவதும் ஓய்வு கொடுப்பதால் உடலில் பல வேதியியல்கள் உற்பத்தியாகிறது. அவை நோய் எதிர்ப்பு சக்திகளாக மாற்றம் பெறுகிறது. மனோதத்துவ ரீதியில் உள்ளத்தில் ஏற்படும் எதிர்மறையான எண்ணங்கள் (நெகடிவ் ஸ்டிரஸ்) அகன்று மன இறுக்கம் தவிர்க்கப்படுகின்றன. மன இறுக்கமே பல வியாதிகளுக்கு மூலகாரணமாகும்.

 

நோன்பின் மூலம் இதயம், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளின் பிணி சீராக்கப்பட்டு, பணிபுரியும் ஆற்றல் அதிகரிக்கிறது. எண்ணிலடங்கா பல நோய்கள் குணமாகின்றன.

 

ஐரோப்பாவிலுள்ள சில மருத்துவமனைகள் தமது சிகிச்சை முறைகளில் நோன்பு நோற்கும் முறையை கையாளுகின்றனர்.                                                                                           

 

ஆசை ஆசையாய்

 

இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீது நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம். திருக்குர்ஆன்:- 2:183

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஹம்ஸா பின் அம்ரு அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! நான் அதிகமாக நோன்பு நோற்கும் மனிதன் ஆவேன். பயணத்திலும் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உண்டு என நான் உணர்கிறேன். (அவ்வாறு பயணத்தில் நோன்பு நோற்பது) என்மீது குற்றமாகுமா?" என்று வினவினார்.

 

அதற்கு அண்ணலார், "இது அல்லாஹ்விடமிருந்து (வந்துள்ள) சலுகையாகும். யார் அதை பயன்படுத்திக்கொள்கிறாரோ அது நல்லதே. ( وَمَنْ أَحَبَّ أَنْ يَصُومَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ ) (பயணத்தில்) நோன்பு நோற்க விரும்புகின்றவர் மீதும் குற்றம் இல்லை." என்று பதிலளித்தார்கள்.   நூல்:- முஸ்லிம்-2062

 

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (விடாமல் நோன்பு நோற்றுக்கொண்டிருந்த) என்னிடம், "ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள். இதைவிட அதிகமாக எனக்கு சக்தி உள்ளது என்று நான் கூறிக்கொண்டே இருந்தேன். இறுதியாக ( صُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا ) "ஒருநாள் நோன்பு நோற்று ஒருநாள் விட்டுவிடுவீராக!" என்று கூறினார்கள்.  நூல்:- புகாரீ-1978

 

நபித்தோழர்கள் நோன்பின் மீதுள்ள பற்றால் வாழ்க்கையில் அதிகமான நாட்கள் நோன்பாளிகளாக இருந்துள்ளார்கள்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனது மனைவி ஹஃப்சா (ரலி) அவர்களை தலாக் கூறியபோது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், அண்ணலாரிடம் வந்து "நாயகமே! ஹஃப்சாவை திரும்ப அழைத்து கொள்ளுங்கள்! ஏனெனில், அவர் அதிகம் நோன்பு நோற்பவராகவும், நின்று வணங்குபவராகவும் உள்ளார்" என்று கூறினார்கள்.       நூல்:- தப்ரானீ

 

பெண்களிலேயே மிக உயர்ந்த "இறைநம்பிக்கையாளர்களின் தாய்" என்ற அந்தஸ்தை விட்டும் நீக்கப்பட இருந்தவரை காப்பாற்றியது இந்த நோன்பு தான்.

 

சாபத்திற்கு  ஆளாக வேண்டாம்

 

ஒருமுறை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் மேடையில் நின்றிருந்தபோது, ரமளான் மாதத்தை அடைந்து (நோன்பு மற்றும் பிற நற்செயல்கள் புரிந்து அதன்மூலம்) பாவமன்னிப்பு பெறாதவர்கள் மீது  வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சாபமிட அதற்கு அண்ணலார் ஆமீன் (அப்படியே ஆகட்டும்) என்றார்கள். அறிவிப்பாளர்:- கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள்   நூல்:- ஹாகிம், தப்ரானீ, இப்னுஹிப்பான், பைஹகீ

 

ரமளானில் போதையுடன் இருந்த ஒருவரிடம், ( وَيْلَكَ، وَصِبْيَانُنَا صِيَامٌ ) "உனக்கு கேடு உண்டாகட்டும்! நம் சிறுவர்களெல்லாம் நோன்பு நோற்றிருக்கிறார்களே!" என்று உமர் (ரலி) அவர்கள் கூறியதுடன், (மது அருந்தியதற்குத் தண்டனையாக எண்பது சாட்டை) அடிகளை அவருக்கு வழங்கினார்கள்.     நூல்:- புகாரீ-பாபு-47, சௌமிஸ் ஸிப்யான்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் சபிப்பதையும் அதற்கு ஒத்துப்போவதையும் என்றுமே விரும்பாதவர்கள். ரமளான் நோன்பை தக்க காரணமின்றி நோற்காதவனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சாபமிடும்போது, அண்ணலார் ஆம்! அப்படியே ஆகட்டும்! என்று அதற்கு ஒத்துப்போயுள்ளார்கள் எனும்போது அந்த பாவத்தின் கனத்தை விளங்கிக்கொள்ள முடிகிறது.

 

தக்கக் காரணமின்றி ரமளான் நோன்பு நோற்காதவர்களை வானவர்கள், இறைத்தூதர்கள், நபித்தோழர்கள், நல்லவர்கள் ஆகியோர் சபிக்கிறார்கள் என்பதை உணர்ந்து எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

 

ஈடாகாது

 

(ரமளான் மாதத்தில் உங்களில்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அப்போது விடுபட்ட நோன்புகளை) மற்ற நாட்களில் அவர் கணக்கிட்டு (நோற்று)க்கொள்ள வேண்டும்.  திருக்குர்ஆன்:-2:184

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ مِنْ غَيْرِ رُخْصَةٍ وَلاَ مَرَضٍ لَمْ يَقْضِ عَنْهُ صَوْمُ الدَّهْرِ كُلِّهِ وَإِنْ صَامَهُ ) ஒருவர் சலுகை, நோய்  (உள்ளிட்ட காரணங்கள்) இன்றி ரமளானில் ஒரு நோன்பை விட்டுவிட்டால், அதற்குப் பகரமாக அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்    நூல்:- திர்மிதீ-655

 

நோயாளிகள், மாதவிடாய் பெண்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பாலூட்டும் பெண்கள், மிக வயதான முதியோர், பிரயாணி ஆகியோரைப் போன்று நோன்பை விடுவதற்கான தக்கக் காரணம் இருக்க வேண்டும்.

 

ஆனால், இவர்கள் தாம் நோன்பு நோற்காதிருப்பதைப் பகிரங்கப் படுத்தக்கூடாது. காரணம் பிறர் தம்மைச் சந்தேகிக்கும்படியாகச் செய்யக்கூடாது மேலும் அறியாத நபர் தம் விஷயத்தில் ஏமாற்றம் அடையக்கூடாது; எவ்வித காரணமுமின்றி நோன்பை விடலாம்போல் உள்ளதே என்று அவர் எண்ணிவிடக் கூடாது. என்பதேயாகும்  

 

ஒரு பிரயாணி அவர் தனது பயணத்தை - நோன்பை விடுவதற்கான சாக்குப்போக்காகக் கருதக்கூடாது. அப்படி அவர் கருதினால் நோன்பை விடாது கட்டாயமாக நோற்றாக வேண்டும். பயணத்தில் இருப்பவருக்கு நோன்பு நோற்பது உண்மையாகவே சிரமமாக இருந்தால் அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. பிறகு அவர் ‘களா’ செய்து கொள்ளலாம்.

 

ரமளான் மாதத்தில் வீண்விளையாட்டுகளில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்த சிலரைப் பார்த்த இறைநேசர் ஹசன் அல்பசரீ (ரஹ்) அவர்கள், "நிச்சயமாக அல்லாஹ் ரமளான் மாதத்தை ஓட்டப்பந்தய மைதானமாக ஆக்கியுள்ளான். மனிதர்கள் பலர் இறைவழிபாட்டுக்காக அதில் போட்டிப் போட்டு வெற்றிப்பெற்று பரிசும் பெறுகின்றனர். சிலர் சிறப்பிற்குரிய அந்நாள்களில் வீண்விளையாட்டில் ஈடுபட்டு, தோல்வியடைந்து பரிசை இழக்கின்றனர். இம்மாதிரியான மனிதர்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது" என்று மனவேதனையுடன் கூறினார்கள்.      நூல்:- கீமியே சஅதா

 

யார் ரமளான் முழுவதையும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்கிறாரோ, அவர் அந்த ஆண்டு முழுவதும் நிம்மதியுடன் இருப்பார் என்கிறது ஒரு நபிமொழி.

 

ரமளான் மாதம் மனதிற்கு கடிவாளமிட்டு அதனை அடக்குவதற்கு பயிற்சி தரும் மாதமாகும். இந்த மாதத்தில் முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டால் தீயதை அதிகம் தூண்டக்கூடிய மனதின் மீது அதிகாரம் செலுத்தி, அதனை நன்மைகளின் பக்கம் அழைத்து செல்ல முடியும். இல்லையெனில், அது நம்மை அழிவின் பக்கம் இழுத்து சென்று நாசமாக்கிவிடும் என்பதில் கவனம் தேவை.

 

சிறுவ சிறுமிகள்

 

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஆரம்பத்தில் கடமையான நோன்பாக இருந்த ஆஷூரா தினத்தன்று.) நாங்களும் நோற்று எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.   நூல்:- புகாரீ-1960

 

இமாம் அல்அவ்சயீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு பிள்ளையால் பலவீனமடையாமல் தொடர்ந்து மூன்று நாள்கள் நோன்பு நோற்க இயலுமானால், அப்பிள்ளையை ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்க செய்ய வேண்டும்.

 

சட்டப்படி பருவம் அடையாதவர் மீது நோன்பு கடமையில்லை. இருப்பினும் பயிற்சிக்காக சிறுவ சிறுமிகளை நோன்பு நோற்கச் சொல்லி பழக்க வேண்டும். அவர்களால் நோன்பு நோற்க இயலுமானால் மாதம் முழுவதுமோ அல்லது சில நாட்களோ அவ்வாறு பயிற்சி அளிக்கலாம். அவர்கள் பருவமெய்தும் போது அது அவர்களுக்கு நன்கு பழக்கப்பட்டதாக ஆகிவிடும். அது அவர்களுக்கு சிரமமாக தெரியாது.

 

அவர்கள் நோன்பு நோற்று பிறகு அதனால் அவர்களுக்குத் தீங்கு ஏற்படக் கண்டால் அப்போது நோன்பு நோற்பதை விட்டும் அவர்களைத் தடுக்கலாம் குற்றமில்லை.

 

மறைவான வணக்கம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ الْحَسَنَةُ عَشْرُ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلاَّ الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِنْ أَجْلِي لِلصَّائِمِ ) மனிதனுடைய ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்கு பத்து முதல் எழுநூறு மடங்குகள்வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன; அல்லாஹ் கூறுகிறான்: நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்குரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குவேன். அவன் எனக்காகவே உணர்வையும் உணவையும் கைவிடுகிறான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2119

 

அன்னை ஹஃப்சா (ரலி) அவர்கள் அதிகம் நோன்பு நோற்பார்கள். அவர்களிடம் அதற்குரிய காரணத்தைக் கேட்டபோது, ( اَلصَّوْمُ لَا یَعْلَمُهُ اِلَّا اللَّهُ ) "நோன்பு நோற்றிருப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய மாட்டார்கள்." ( لَا یَعْلَمُ ثَوَابَهُ اِلَّا اللَّهُ ) "அதன் கூலியை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய மாட்டார்கள்" என்ற நபிமொழியை பதிலாகக் கூறினார்கள்.

 

நாட்டில் சிறந்த சாதனைகள் புரிந்தோருக்கு அரசு சார்பாக பதக்கங்கள் வழங்கி பாராட்டி கௌரவிப்பது வழமை. அரசு சார்பில் பிரதிநிதிகளோ அல்லது சாதனையின் முக்கியத்துவம் கருதி சமயங்களில் ஜனாதிபதியோ, பிரதமரோ நேரடியாக வழங்குவதுண்டு. அரசு சார்பில் வழங்கப்பட்டாலும் பிரதிநிதி தருவதற்கும், பிரதமர் தருவதற்கும் அதிக வித்தியாசம் உண்டு. நோன்பின் நன்மை விஷயத்தில் இறைவன் கூறுவதும் இதே பாணியில் தான்.

 

தொழுகை, தர்மம், ஹஜ், அறப்போர் போன்ற வழிபாடுகளையெல்லாம் மனிதன் முகஸ்துதிக்காகவும் புகழ்போதைக்காகவும் செய்ய இடமுண்டு. ஆனால் பட்டினியிருந்து நோன்பு நோற்பதில் விளம்பரம் தேட இயலாது. நோன்பு நோற்காமலேயே நோன்பாளி என்று வெளியே காட்டிக்கொள்ள இயலும். அப்படியிருந்தும் உண்மையாகவே ஒருவர் நோன்பு நோற்கிறார் என்றால், அது அல்லாஹ்வுக்காக மட்டுமே நோற்றதாக ஆகிவிடுகிறது.

 

ஒரு முஸ்லிம் உணவுபானம், உடலுறவு ஆகியவை தனக்கு விருப்பமானவையாகவும் ஆசை கொள்ளத் தக்கவையாகவும்  உள்ள  நிலையில் அவற்றைத்  துறப்பதன்  மூலம்,  தனது மனவிருப்பத்தை  விடவும் தன்  இறைவனின் விருப்பத்திற்கு  முன்னுரிமை கொடுக்கிறான். இதன் மூலம் இறையன்பைப் பெறத் துடிக்கிறான்.

 

இதனால்தான்  முஸ்லிம்களில் பெரும்பாலோர் ரமளான்  மாதத்தின்  ஒரே ஒருநாள்  நோன்பைக் கூட   தக்க காரணமின்றி  விட்டு விடுமாறு  அவர்களை வற்புறுத்தினால் கூட அவர்களை அடித்தாலும் கூட சிறைப்பிடித்தாலும் கூட அதற்கு அவர்கள்  உடன்படுவதில்லை! எனவேதான் நோன்புக்கு எண்ணிலடங்கா நற்பலன் உண்டு என்பதை உணர்த்தும் முகமாகவே, நானே நற்பலன் அளிப்பேன் என இறைவன் அறிவிக்கிறான்.

 

‘யார் ரமளான் மாதம் வரப்போகிறது என்றெண்ணி சந்தோஷமடைகின்றாரோ அவரை அல்லாஹ் நரகத்தை விட்டும் தடுத்து விடுவான்’ என்கிறது ஒரு நபிமொழி.

 

நன்மைகளின் சீசனாக விளங்கும் ரமளானே! நீ வருவாய் என... நாங்கள் காத்திருக்கிறோம். இறைவா! நாங்கள் ரமளானை அடைந்து, அதில் மனத்தூய்மையுடன் நற்செயல்கள் புரிந்து, உனது அன்பையும் அருளையும் பெற அருள்பாலிப்பாயாக!  ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை, செல்-9840535951

 

                                                                                                                                                                                                                                                                                                     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

 

                                                                                                                                                                                                                                                                      

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...