Search This Blog

Tuesday, 10 March 2026

பண்டிகைகள்

 

பண்டிகைகள்

 

وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

உங்களுக்கு (அல்லாஹ்) நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் பெயரை உரத்த குரலில் கூறுங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துபவர்களாகத் திகழலாம். திருக்குர்ஆன்:- 2:185

 

இந்தியாவில் சுமார் இருபத்தைந்து கோடிக்கும் அதிகமான மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

 

அதில் காற்றை மாசுப்படுத்தவில்லை. கடலை மாசுப்படுத்தவில்லை, கலர்சாயம் பூசவில்லை, மதுவில் மயங்கவில்லை, கேளிக்கையில் மூழ்கவில்லை, கூச்சலும் இல்லை, கூப்பாடும் இல்லை, மாற்று மத வழிபாட்டுத்தலத்திற்கு முன் நின்று கூச்சலிட்டு இடையூறு செய்யவில்லை.

 

மாறாக, தானும் மகிழ்ந்து மற்றவர்களும் மகிழ இயன்றளவு தர்மம் செய்து, அனைத்து சமூக மக்களுடனும் அன்பை பறிமாறி, மாபெரும் இந்த ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகையை அமைதியாய் கடந்துசெல்கிறார்கள்.

 

பெருநாள் தர்மம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَمَّا غَنِيُّكُمْ فَيُزَكِّيهِ اللَّهُ وَأَمَّا فَقِيرُكُمْ فَيَرُدُّ اللَّهُ عَلَيْهِ أَكْثَرَ مِمَّا أَعْطَاهُ ) உங்களில் செல்வந்தர்கள் இதை (ஸதக்கத்துல் ஃபித்ர்) கொடுத்தால் அல்லாஹ் அவர்களைத் தூய்மைப்படுத்துகிறான். உங்களில் ஏழைகள் கொடுத்தால் உயர்ந்தோன் அல்லாஹ் அவர்கள் கொடுத்ததைவிட அதிகமாகத் திருப்பி வழங்குகின்றான். அறிவிப்பாளர்:- ஸஅலபா பின் அஸ்ஸுஅய்ர் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1379

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. முஸ்லிம்களில் சுதந்திரமானவர், அடிமை, ஆண், பெண் ஆகிய அனைவருக்காகவும் ஒரு ‘ஸாஉ’ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ அளவு தீட்டாத (வாற்)கோதுமையை நோன்புப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். நூல்:- புகாரீ-1504, முஸ்லிம்-1791 

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாஉ அளவு ஏதேனும் உணவையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு பாலாடைக் கட்டியையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு உலர்ந்த திராட்சையையோ வழங்கிவந்தோம். நூல்:- புகாரீ-1506, முஸ்லிம்-1796 

 

புனித ரமளான் முழுவதும் உண்ணா நோன்பு இருந்து, அடுத்த மாதமான ஷவ்வால் முதல் நாள் கொண்டாடப்படும் நோன்பு பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும் தர்மமே (ஸதக்கத்துல் ஃபித்ரு எனப்படும்) நோன்பு பெருநாள் தர்மமாகும்.

 

நோன்பாளி செய்த சிறு தவறுகளுக்கு இந்த தர்மம் ஒரு பரிகாரமாக அமையும். அன்றைய செலவுகள்போக மேல்மிச்சமாகக் கையிருப்பு வைத்திருக்கும் ஒருவர் தமக்காகவும் தம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாக கணக்கிட்டு நோன்பு பெருநாள் தர்மம் கொடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத்தின் உச்சவரம்பையும் (நிஸாப்) பெற்றிருக்க வேண்டும் என்று அறிஞர்களில் சிலர் கூறுகின்றனர். சிறியவர், பெரியவர், ஆண், பெண், சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவருக்காக வேண்டியும் இந்தத் தர்மம் வழங்கப்பட வேண்டும். நூல்:- அல்மின்ஹாஜ்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அரபுகளின் உணவுப்பொருளாக இருந்த கோதுமை மற்றும் பேரிச்சம்பழத்தை அடிப்படையாகக்கொண்டு இங்கு அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

பேரிச்சம்பழமும் தோல் நீக்கப்படாத வாற்கோதுமையாகவோ இருந்தால் அவற்றில் ஒரு "ஸாஉ" ஒருவருக்காக கொடுக்கப்பட வேண்டிய நோன்பு பெருநாள் தர்மத்தின் அளவாகும்.

 

ஒரு "ஸாஉ" என்பது ஹிஜாஸ் பகுதியின் அளவில் 2.135 கி.கிராம் ஆகும். நபியவர்கள் காலத்தில் மதீனாவின் வழக்கத்தில் இருந்த "ஸாஉ" என்பது நிறுத்தலளவையில் 2.135 கி.கிராமும் முகத்தலளவையில் 2.360 லிட்டரும் ஆகும். தோல் நீக்கப்பட்ட மணிகோதுமையாக இருப்பின் இதில் பாதியளவு என்ற மக்கள் நிர்ணயித்துக்கொண்டனர்.

 

இன்று அந்தந்தப் பகுதியில் மிகுதியாக உள்ள உணவு தானியங்களை இதே கணக்கில் கொடுக்கலாம். அறிஞர்களில் சிலர் அந்தத் தானியங்களின் விலைமதிப்பைப் பணமாகவும் கொடுக்கலாம் என்கிறார்கள்.

 

ஹனஃபீ சட்டம்: நாம் உண்ணுகின்ற அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்களின் கிராயத்தை கொடுப்பதே சிறந்தது.

ஷாஃபீ சட்டம்: நாம் உண்ணுகின்ற அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்களை மட்டுமே கொடுக்க வேண்டும்; அதன் கிராயத்தை கொடுக்கக்கூடாது.

 

பெருநாள் தொழுகைக்கு முன்னர்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاَةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاَةِ فَهِيَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ ) வீணான, கெட்ட பேச்சுகளிலிருந்து நோன்பாளியைத் தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக ஆவதற்காகவும் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஸதக்கத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள்.

 

யார் அதை(ப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நிறைவேற்றினாரோ அது (அவரிடமிருந்து) ஏற்றுக்கொள்ளப்பட்ட (ஸதக்கத்தில் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம் ஆகும். யார் அதை தொழுகைக்குப் பின்னர் நிறைவேற்றினாரோ அது (அவரிடமிருந்து நிகழ்ந்த சாதாரண) தர்மங்களில் ஒரு தர்மம் ஆகும். நூல்:- அபூதாவூத்-1371, இப்னுமாஜா-1817, ஹாகிம்

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِزَكَاةِ الْفِطْرِ أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ ) மக்கள் பெருநாள் தொழுகைக்கு புறப்படுவதற்கு முன்பே நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

 

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பே அல்லது இரண்டு நாள் முன்பே நோன்பு பெருநாள் தர்மத்தை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள்.

 

பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் (இந்தத் தர்மத்தைக்) கொடுத்து வந்தார்கள். நூல்:- நூல்:- புகாரீ- 1511, முஸ்லிம்-1801, அபூதாவூத்-1372

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أُغْنُوهُمْ عَنِ الطَّوَافِ فِي هَذَا الْيَوْمِ ) அந்த நாளில் ஏழைகள் (உணவில்லாமல்) அலைந்து திரிவதை தடுத்துவிடுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- தாரகுத்னீ, சுனனுல் குப்ரா இமாம் பைஹகீ, அல்காமில் இமாம் இப்னு அதீ, புலூகுல் மராம்-648

 

நமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மம் வழங்கப்பட வேண்டும். மக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே இத்தர்மத்தை வழங்கிவிட வேண்டும். ஒன்றிரண்டு நாள்களுக்கு முன்பே கொடுத்துவிட்டாலும் கூடும்.

 

ஃபித்ரா பொருள் அல்லது அதன் கிரயத்தை நாமே சென்று நேரடியாக உரியவர்களிடம் வழங்குவது சிறந்தது. அமெரிக்க, ஐரோப்பா நாடுகளில் வாழக்கூடிய நம்மவர்கள் நேரடியாக உரியவர்களிடம் வழங்குவது சிரமமே! எனவே, அவர்கள் தாயகத்தில் உள்ள தமது உறவினர் மற்றும் நெருக்கமான நண்பர்கள் மூலம் உரியவர்களுக்கு கொடுக்கலாம்.

 

உரியவர்களிடம் நேரடியாக கொடுக்கமுடியாத நிலையில் இயக்கத்தினர்களிடம் ஒப்படைத்துவிட்டு, “அதை அவர்கள் முறையாக கொடுத்தார்களா? அல்லது கொள்ளையடித்துவிட்டார்களா? என்ற வீண் சந்தேகத்தைத் தவிர்க்கலாம். கடந்த காலங்களில், ஃபித்ராவை சேகரித்து கொள்ளையடித்தவர்களையும் தமிழ்நாட்டில் கண்டுள்ளோம். எனவே, தான் இது குறித்து கவனம் தேவை.

 

ஃபித்ரா கணக்கு

 

(ஈதுல்ஃபித்ர் எனும்) ஈகைப்பெருநாள் பண்டிகைக்கு முன்பு (ஸகாத் அல்ஃபித்ரா எனும்) கட்டாய தர்மம் ஏழைகளுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கச் சட்டமாகும். அதில் குறைந்தபட்ச தொகை ஒருவருக்கு தலா 140 ரூபாய் ( 90, 100, 120, 140, 150, 160, 200 என வேறுபடுகிறது). சராசரியாக, இந்தியாவில் உள்ள சுமார் 25 கோடி முஸ்லிம்களில், 20 கோடி இந்திய முஸ்லிம்களாவது தங்கள் ஊர்களில் உள்ள சக ஏழை எளிய முஸ்லிம்களுக்கு கொடுத்திருப்பார்கள்.

 

இந்தியாவில் ரூபாய் 2800 கோடிக்கு மேலே பெருநாளன்று தர்மம் செய்யப்படுகிறது.

 

உலகளவில் 180 கோடி உலக முஸ்லிம்கள் என கணக்கு எடுத்தால், இவர்களில் ஆகக் குறைந்த பட்சம் 120 கோடி மக்கள். இந்த ஃபித்ரா ஈகையை நிச்சயமாக தர்மம் செய்திருப்பர்.

 

அதாவது, 120 கோடி ×140 = 16,800 கோடி ரூபாய் தர்மம் ஒரே நாளில் நடந்துள்ளது எனலாமா என்றால், வெளிநாடுகளில் ஃபித்ரா தொகை வேறுபடும்.

 

உதாரணமாக, 30 கோடி முஸ்லிம்கள் கொண்ட பணக்கார வளைகுடா நாடுகளில் இந்த ஈதுல் ஃபித்ரா (பெருநாள் ஈகை) தொகை அந்த நாடுகளின் பொருளாதார வாழ்வியலுக்கு ஏற்ப சவுதியில் 25 ரியால் (570 ரூபாய்)  துபாயில் 25 திர்ஹம் (580 ரூபாய்) என்று நான்கு ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும். அந்த வகையில் வளைகுடாவில் மட்டுமே 600×30 கோடி = 18,000 கோடி தர்மம் ஒரே நாளில் தரப்பட்டுள்ளது.

 

எனவே, சராசரியாக இந்த ஈகைத்திருநாள் அன்று இவ்வுலகில் எப்படியும் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏழைகளுக்கு தர்மம் செய்யப்பட்டிருக்கும்.

 

“அட்சயத்திரிதை அன்று 9000 கோடிக்கு தங்கம் விற்பனை, தீபாவளி அன்று 6000 கோடிக்கு பட்டாசு விற்பனை, புத்தாண்டில் டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி” என்றெல்லாம் ஒவ்வொரு செய்தியிலும் பரபரப்பு பிரேக்கிங் நியூஸாக தண்டோரா போடும் நமது ஊடகங்கள், சுமார், 1400 வருடங்களாக சத்தமில்லாமல் நடக்கும் இந்த புரட்சிகரமான ஃபித்ரா தர்மக்கணக்கு குறித்தும் ஒரு செய்தியை விரிவாக வெளியிட்டால் சிறப்பாக இருக்குமே!

 

குர்பானி கணக்கு

 

குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி  இருக்கின்றோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். திருக்குர்ஆன்:- 22:34

 

அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காக அவனுடைய ஆணைக்கேற்ப "ஈதுல் அள்ஹா"வின் நாட்களில் பிராணிகளை அறுத்துப் பலியிடுவதே இஸ்லாமிய மார்க்கத்தின் வழக்கில் "குர்பானி" எனப்படும்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَذْبَحَنَّ أَحَدُكُمْ حَتَّى يُصَلِّيَ ) போதிய வசதி இருந்தும் யார் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நமது தொழும் இடத்திற்கு வர வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னுமாஜா-3242

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா மாநகரில் தங்கியிருந்த பத்தாண்டு காலமும் குர்பானி கொடுத்து வந்தார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ 1427

 

25 கோடி இந்திய முஸ்லிம்கள் பக்ரித் கொண்டாடுகிறார்கள். குறைந்தது  20% முஸ்லிம்கள், குறைந்தபட்சம் ரூ 7000 / - க்கு குர்பான் ஆடுகளை வாங்குகிறார்கள்.

 

5 கோடி x  7000 = 35ஆயிரம் கோடி ரூபாய். இவை சீன தயாரிப்புகள் அல்ல; எம்.என்.சி நிறுவனத்தின் தயாரிப்புகளும் அல்ல. இந்த பெருமளவு பொருளாதாரத்தால் இந்தியப் பொருளாதாரமே பயனடைகிறது. 

 

100 சதவீதம் இந்திய தேசிய கிராமப்புறங்களிருந்து மட்டுமே இந்த வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு விவசாயி, ஒரு ஆண்டுக்கு சராசரியாக 5 ஆடுகளை நிர்வகித்தால், 5 கோடி ÷ 5 = 1 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு எளிமையான வேலைவாய்ப்பு கிடைத்துவிடுகிறது.

 

எனவே பக்ரித் 35 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளூர் வணிக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறது என்பது மட்டுமின்றி சுமார் 1 கோடி சிறு விவசாயிகளுக்கு மிக இலகுவான வேலைவாய்ப்பைத் தருகிறது.

 

மேலும், ஒவ்வொரு ஆட்டின் இறைச்சியும், மூன்றில் இரண்டு மடங்கு ஏழைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படுவதால், அதாவது ஒருவர் குறைந்தது 10 பேருக்கு பகிர்ந்தளிப்பதால், 50 கோடிப் பேர் சாப்பிடுகிறார்கள்.   

 

மகிழ்ச்சியை வெளிப்படுத்த

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெருநாள் தினத்தில் என் அருகில் இரு (அன்சாரிச்) சிறுமியர் (சலங்கையில்லா கஞ்சிராக்களை) அடித்து பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். இதைக் கண்ட அவர்கள், ( أَبِمُزْمُورِ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم )  "இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக்கருவிகளா? என்று (கடிந்து) பேசி அவ்விருவரையும் அதட்டினார்கள்.

 

உடனே பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا، وَهَذَا عِيدُنَا )  "அவ்விருவரையும் விட்டுவிடுங்கள், அபூபக்ரே! (மகிழ்ச்சியை வெளிப்படுத்த) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்" என்று கூறினார்கள்.

 

(அன்றைய தினத்தன்று) நபியவர்களின் பள்ளிவாசலி(ன் வளாகத்தி)ல் அபிசீயனியர்கள் ஈட்டியறிந்து (வீர விளையாட்டு) விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களது விளையாட்டை நான் பார்ப்பதற்காக நபியவர்கள் எனது அறை வாசலில் நின்றபடி தமது மேல் துண்டால் என்னை மறைத்துக் கொண்டிருந்தார்கள். நானாக (விளையாட்டை ரசித்துச் சலிப்புற்று)த் திரும்பும்வரை எனக்காகவே அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். நூல்:- புகாரீ-950,952, முஸ்லிம்-1619, 1620

 

கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( مَا كَانَ شَىْءٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ وَقَدْ رَأَيْتُهُ إِلاَّ شَىْءٌ وَاحِدٌ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُقَلَّسُ لَهُ يَوْمَ الْفِطْرِ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த அனைத்தையும் (இன்றும் உங்களிடையே) நான் காண்கிறேன்; ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. (அது:) நோன்புப் பெருநாளன்று நபியவர்களுக்கு அருகில் கஞ்சிரா (தஃப்) அடிக்கப்பட்டு வந்தது. (அதை மட்டும் நீங்கள் நடைமுறைப்படுத்துவதில்லை) என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-1293, முஸ்னது அஹ்மத், அல்முஅஜமுல் கபீர் இமாம் தப்ரானீ

 

பெருநாளன்று கஞ்சிரா அடிக்கலாம். மார்க்கத்திற்கு முரணில்லாத வாசகங்களைப் பாடலாம். இசைக்கருவிகளின் துணையின்றி வாயால் ராகமிட்டு நல்ல கருத்துள்ள பாடல்களைப் பாடுவதற்கும் கேட்பதற்கும் அனுமதி உண்டு. வீர விளையாட்டுக்கள் விளையாடுவதற்கும் அதைப் பார்ப்பதற்கும் அனுமதியுண்டு. பெருநாள் தினத்தன்று மகிழ்ச்சியின் வெளிப்பாடாக பள்ளிவாசலின் வளாகத்திலோ அல்லது மைதானம் போன்ற பொதுஇடங்களிலோ மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மார்க்கம் அனுமதித்த (ஹராமற்ற) பயனுள்ள விளையாட்டுகளை விளையாடலாம்.

 

திடல் தொழுகை

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( كَانَ إِذَا خَرَجَ إِلَى الْعِيدِ رَجَعَ فِي غَيْرِ الطَّرِيقِ الَّذِي أَخَذَ فِيهِ ) (பெருநாள் வந்துவிட்டால்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு (திடலுக்கு) புறப்பட்டுச் சென்றால், சென்ற பாதையல்லாத வேறு பாதையிலேயே திரும்பி வருவார்கள். நூல் புகாரீ-986, திர்மிதீ-496, இப்னுமாஜா-1291, முஸ்னது அஹ்மத்

 

இமாம ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( اَنْ سَبَبَ ذَلِكَ سَعَةٌ الْمَسْجِد، وَضِيق أَطْرَافِ الْمَدِينَةِ، فَلَوْ عَمَّرَ بَلَدٍ فَكَانَ مَسْجِد أَهْلِهَا يَسَعُهُ فِي الْأَعْيَادِ لَمْ أَرَ أَنْ يَخْرُجُوا مِنْهُ ) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தமது பள்ளிவாசலில் இடவசதி இல்லாமல் இருந்ததும் மதீனாவிலிருந்த சுற்று புறங்கள் நெருக்கடியாக இருந்ததுமே அவர்கள் பெருநாள் தொழுகைக்கு திடலுக்குச் சென்ற காரணம் என நான் அறிகிறேன். எனவே, ஒருஊரில் பள்ளிவாசல் கட்டப்பட்டு அந்த ஊர் மக்களுக்கு பெருநாள் தொழுகை தொழுவதற்கு அந்த பள்ளிவாசல் போதுமானதாக இருந்தால், அவர்கள் அதைவிட்டு அங்கிருந்து வெளியேற வேண்டியதில்லை என்று நான் கருதுகிறேன். நூல்:- அல்உம்மு

 

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( أَمَّا أَهْلُ مَكَّةَ، فَلَا يُصَلُّونَهَا إلَّا فِي الْمَسْجِدِ مِنْ الزَّمَنِ الْأَوَّلِ ) மக்காவின் மக்கள் ஆதிகாலத்திலிருந்து பள்ளிவாசலில் மட்டுமே பெருநாள் தொழுகை தொழுது வருகிறார்கள். 

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவில் மஸ்ஜிதுந் நபவியில் இடம் பற்றாக்குறை காரணமாக திடலுக்குச் சென்று தொழுதுள்ளார்களே தவிர, “நீங்கள் ஒரு திடலுக்குச் சென்றுதான் தொழ வேண்டும்” என்று ஒருமுறைகூட நபியவர்கள் அறிவுறுத்தியதில்லை.

 

மக்காவில் உள்ள (மஸ்ஜிதுல் ஹராம் எனும்) கஅபா மற்றும்   மதீனாவில் உள்ள மஸ்ஜிதுந்நபவி ஆகிய பள்ளிவாசல்களில் தான் ஈத் பெருநாள் தொழுகை ஆண்டாண்டு காலமாக நடைபெறுகிறது. அங்கே ஒருபோதும் திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றதில்லை.

 

மதீனா நகர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களது கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு பெருநாள் தொழுகைக்கென்று ஒரு வெளியிடத்தை நபியவர்கள் தேர்வு செய்தார்கள். அந்த  அடிப்படையில்தான் முஸ்லிம்களும் தம்முடைய ஊரில் பெருநாள் தொழுகைக்கு என்று ஒரு இடத்தை வாங்கி, அல்லது ஒதுக்கி வைத்திருந்தார்கள். ஈத் மைதானம் என்ற அந்த இடத்தில் இரு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்கள். நமக்கு அருகில் நமக்கு சொந்தமாக ஒரு ஈத்காஹ் மைதானம் இருந்தால் அங்கு சென்று தொழலாம்.

 

ஈத்காஹ் மைதானம் இல்லாத ஊரில் அல்லது ஈத்காஹ் மைதானம் எல்லோருக்கும் போதுமானதாக இல்லை என்ற நிலையில் பள்ளிவாசலிலே தொழுதுக்கொள்ளலாம். ஈத்காஹ் மைதானம் இல்லாத ஊர்களில் மைதானங்களை வாடகைக்கு எடுத்தோ அல்லது இலவசமாக பெற்றோ அல்லது பொதுஇடங்களில் அனுமதி கேட்டோ பெருநாள் தொழ வேண்டும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த முன்னுதாரணும் இல்லை.

 

பெருநாள் தொழுகைகளின்போது இடம் போதாமையின் காரணமாக சாலைகளிலும், தெருக்களிலும், முட்டுச் சந்துகளிலும் மக்கள் தொழுகின்ற காட்சியைக் காணமுடிகிறது. சில இடங்களில் சாலையின் வளைவுக்கேற்ப தொழுகை அணியின் வரிசையும் வளைந்துகொண்டே போய்விடுவதையும் பார்க்கமுடிகிறது.

 

ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே தொழுகின்ற சிறப்புத் தொழுகைகள் அவை. தெரு மற்றும் பொதுவெளியில் நின்று தொழுவது எந்த வகையில் பொருந்தும்? மனஓர்மையுடன்தான் தொழ முடியுமா? இடம் போதவில்லையெனில் இரண்டாவது, மூன்றாவது ஜமாஅத்களாக அமைத்துத் தொழுது கொள்ளலாம்தானே.

 

அல்லது சமுதாயத்தார் ஒன்று சேர்ந்து புதியதாக நிலங்களை வாங்கி அவற்றைத் தொழுகை திடல்களுக்காக வக்ஃப் செய்யலாம். நம்முடைய முன்னோர்கள் வக்ஃப் செய்த ஈத்காஹ்கள் இன்றும் நம்முடைய தேவைகளை நிறைவு செய்து வருகின்றன. இன்ஷா அல்லாஹ், நாமும் அது போன்று வக்ஃப் செய்து வருங்காலத் தலைமுறையினருக்கும் வசதியை ஏற்படுத்தலாம்.

 

திடல் தொழுகையை ஒரு முக்கியமான கடமையாக பரப்புவதில் இயக்கத்தினர் வலிந்து பிரச்சாரம் செய்கின்றனர். ஊரெங்கும் போஸ்டர் ஒட்டுகிறார்கள். அத்தனையும் மார்க்கத்தின் பெயரால் சமூகத்தை ஏமாற்றும் தந்திரமாகும். எனவே, ஈத்காஹ் மைதானங்கள் இல்லாத ஊர்களில் பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதே சிறந்தது.

 

இஸ்லாம் கூறுகின்ற முறையில் பெருநாள் கொண்டாடி இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

 

 

No comments:

Post a Comment

தீமைக்குத் துணைபோகாதே!

  தீமைக்குத் துணைபோகாதே!   وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ...