Search This Blog

Friday, 20 November 2020

மெய்நிலை கண்டவர்

 

                               மெய்நிலை கண்டவர்


يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ


(அல்லாஹ்வாகிய) அவன் (நல்லடியார்களாகிய) அவர்களை நேசிப்பான். அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் பணிவு மிக்கவர்களாகவும் இறைமறுப்பாளர்களிடம் கண்டிப்பானவர்களாகவும் இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். தூற்றுவோரின் தூற்றுக்கெல்லாம் அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அதை அவன், தான் நாடுவோருக்கு வழங்குகிறான். அல்லாஹ் தாராளமானவனும் நன்கறிந்தோனும் ஆவான்.           திருக்குர்ஆன்:- 5:54


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خِيَارُ عِبَادِ اللّٰهِ اَلَّذِينَ اِذَا رُءُو ذُكِرَ اللّٰهُ ) யாரை கண்டால் அல்லாஹ்வின் சிந்தனை உண்டாகுமோ அத்தகையோர் தான் அல்லாஹ்வின் சிறந்த அடியார்கள் ஆவார்கள். அறிவிப்பாளர்:- அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னத் அஹமத், மிஷ்காத் பக்கம்-415


இறைநேசர் கௌசுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஸைலானி (ரஹ்) அவர்கள் ஈரான் நாட்டில் உள்ள ஜீலான் எனும் ஊரில் அபூசாலிஹ் சைய்யிது மூசா (ரஹ்), உம்முல்கைர் ஃபாத்திமா (ரஹ்) தம்பதியருக்கு (ஹிஜ்ரீ 2-9-470  - கி.பி. 19.3.1078) சஹர் எனும் அதிகாலையில் பிறந்தார்கள். அவர்களின் வம்சாவழித் தொடர் ஹசன் (ரலி) அவர்கள் வரை சென்றடைகிறது. தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோயுற்றிருந்து பிறகு ஈராக் நாட்டில் உள்ள பஃதாத் எனும் ஊரில் (ஹிஜ்ரீ11.4.561   -  கி.பி. 14-2-1166) தனது 91 ஆம் வயதில் மறைந்தார்கள்.


தமது 51 வது வயதில் தான் முதல் திருமணம் செய்தார்கள்.  மொத்தம் அவர்களுக்கு 4  மனைவியர், 22 பெண் பிள்ளைகள், 27 ஆண் பிள்ளைகள் ஆகும்.


தாய் வளர்ப்பு

                                                   

கௌசுல் அஃலம் அவர்கள் சிறு பிராயத்தில் மதரசா சென்றுவிட்டு வந்தவுடன், தாயார் "மகனே! இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் உணவுக் கேட்டு பிரார்த்தனை செய்! அதன் பிறகு அலமாரியை திறந்து பார்; உனக்கு உணவு கிடைக்கும். நிச்சயமாக அல்லாஹ் தருவான் என்பார். அவ்வாறே கௌசுல் அஃலம் அவர்களும் தொழுது பிரார்த்தனை எல்லாம் செய்துவிட்டு, அதன் பிறகு அலமாரியை திறந்து பார்ப்பார்கள் அங்கே தட்டில் உணவு இருக்கும். தனது பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டதாக எண்ணி அதை மகிழ்ச்சியுடன் எடுத்து சாப்பிடுவார்கள். ஆனால் மகனுக்கு தெரியாமல் தாயார் தட்டில் உணவை வைத்துவிடுவார். இந்த நடைமுறை ஒவ்வொரு நாளும் நடந்தது.


ஒரு நாள் தாயார் பக்கத்து ஊருக்கு சென்று விட்டார். விரைவில் வரமுடியவில்லை. தன் மகன் இன்று சாப்பிடாமல் இருப்பாரே என்ற மனக்கவலையுடன் வேகமாக வீடு திரும்பி வருகிறார். ஆனால் மகன் வழக்கம் போல் இரண்டு ரக்அத் தொழுது பிரார்த்தித்துவிட்டு அலமாரியைப் பார்த்தார். அதில் உணவு இருக்க, அதை எடுத்து சுவைத்து சாப்பிட்டார்.


தாயார் மகனை சந்தித்ததும் "நீ சாப்பிட்டாயா?" என்று வினவினார். மகன் ஆம்! சாப்பிட்டேன். இன்று உணவு மிக சுவையாக இருந்தது என்று பதிலளித்தார். இதனை செவியுற்ற தாயார் மகனின் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டதை நினைத்தும், தனது தூய வளர்ப்பின் பலனை எண்ணியும் மனம் மகிழ்ந்தார்.


கௌசுல் அஃலம் அவர்கள் கூறுகிறார்கள். நான் 18 வது வயதில் கல்வி கற்க பக்தாத் நகர் நோக்கி செல்லும் போது ஹமதான் நகருக்கு அருகில் கொள்ளையர் கூட்டம் வழிமறித்து மக்களின் பொருள்களை பறித்தனர். அவர்களில் ஒருவன் என்னை கடந்து செல்லும் போது "நீ என்ன வைத்திருக்கிறாய்?" என்று கேட்டான். அதற்கு நான் "நாற்பது பொற்காசுகள் உள்ளன" என்று கூறினேன். அது எங்கே? என்று கேட்டான். அது என் சட்டைக்குள் வைத்துத் தைக்கப்பட்டுள்ளது என்று கூறினேன்.


அவன் நான் கேலி பேசுவதாக நினைத்து என்னைவிட்டும் திரும்பி சென்றான். மற்றொருவன் வந்து முந்தியவன் கேட்டது போல் கேட்டான். இவனுக்கும் அதே பதிலை கூறினேன். இறுதியாக அவர்களின் தலைவன் வந்து,  என்னை சோதனையிட்டு என்னிடமுள்ள நாற்பது பொற்காசுகளை எடுத்தான். "நீ இவ்வாறு உண்மை கூறுவதற்கு காரணம் என்ன? என்று அவன் வினவினான். அதற்கு "என்னிடம் என் தாயார் எப்பொழுதும் உண்மை தான் பேச வேண்டும் என வாக்குறுதி வாங்கியுள்ளார். இந்த பொற்காசுகளை விட அந்த வாக்கை காப்பதே எனக்கு முக்கியம்" பதிலளித்தேன். இதனை செவியுற்ற அவனது உள்ளத்தில் இறையச்சம் உண்டாகியது. அவனும் அவனது கூட்டத்தினரும் என் முன்னிலையில் மனம் வருந்தி, செய்த பாவத்திற்கு மன்னிப்புக் கோரி அவர்கள் எடுத்த பொருள்களை திரும்பி கொடுத்து விட்டனர்.             நூல்:- முர்ஷிதுத்துல்லாப்


பேரறிஞர்


காஜி அபூசயீத் மக்ரமீ (ரஹ்) அவர்கள் "பாபுல் அஸ்ஜ்" எனும் பகுதியில் அருமையான சிறிய மதரசா ஒன்று ஏற்படுத்தியிருந்தார். அந்த மதரசாவை கல்வியில் மிகவும் தேர்ச்சிப்பெற்றிருந்த கௌசுல் அஃலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் மாணவர்களுக்கு ஆர்வத்துடன் கல்வி போதித்து வந்தார்கள். அறிவுரை வழங்குவதன் மூலம் மக்களோடும் தொடர்பு வைத்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கு மக்களிடையே நல்ல புகழும் செல்வாக்கும் ஏற்பட்டன.


அன்னாரின் அவைக்கு மக்கள் அதிகமாக வருகைத்தர தொடங்கியதால் அந்த மதரசாவே நிரம்பி வழிந்தது. நெருக்கடி ஏற்பட்டது. பிறகு அந்த மதரசா விரிவாக்கப்பட்டது. அம்மதரசா அன்னாரின் பெயரால் அழைக்கப்பட்டது.              நூல்:- ரிஜாலுல் ஃபிக்ர் வத்தஃவா ஃபில் இஸ்லாம்


கௌசுல் அஃலம் அவர்கள் 13 துறையில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அன்னாரிடம் மாணவர்கள் காலையிலும் மாலையிலும் தஃபசீர் எனும் திருக்குர்ஆன் விளக்கவுரை, நபிமொழி விரிவுரை, ஃபிக்ஹ் எனும் சட்டத்துறை, (உசூலுல் ஃபிக்ஹ்) அதன் அடிப்படை, மற்றும் கருத்து வேறுபாடு, அரபி இலக்கணம் பற்றிய விரிவுரை போன்ற துறைகளில் பாடங்கள் பயின்று கொண்டிருந்தனர்.                      நூல்:- அத்தபகாதுல் குப்ரா   இமாம் ஷஃரானி


கௌசுல் அஃலம் அவர்களைப்பற்றி தவறாக விளங்கியிருந்த ஒரு அறிஞர்  கௌசுல் அஃலம் அவர்கள் ஒருமுறை திருக்குர்ஆன் விரிவுரை செய்து கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, கௌசுல் அஃலம் என்ன தான் விரிவுரை செய்கிறார்கள் என்பதை நேரடியாக கேட்டறிந்து விடுவோம் என்றெண்ணி அந்த சபையில் தன்னுடைய மாணவர்களுடன் வந்து அமர்ந்தார்.


கௌசுல் அஃலம் அவர்கள் திருமறையிலுள்ள ஒரு வசனத்திற்கு ஒன்றன்பின் ஒன்றாக விளக்கம் கூறிவரும் போது இது எனக்கு தெரிந்த விளக்கம் தானே என்று சொல்லிக் கொண்டே வந்தார். கௌசுல் அஃலம் அவர்கள் பதினொன்றாவது விளக்கத்தை கூறிய போது அது அவருக்கு புதிதாகத் தோன்றியது. கௌசுல் அஃலம் அவர்கள் அந்த ஒரே வசனத்திற்கு ஒன்றன்பின் ஒன்றாக நாற்பது விளக்கங்களைக் கூறவே, இவர் மலைத்து விட்டார். தம்முடைய அறியாமையையும், கௌசுல் அஃலம் அவர்களின் மார்க்க ஞானத்தை எண்ணிபார்த்து விட்டு, ஆஹா! கௌசுல் அஃலம் அவர்களைத் தாம் தவறான மதிப்பிட்டதையும் நினைத்து மனம் வருந்தி, கௌசுல் அஃலம் அவர்களை அணுகித் தம் பிழை பொறுத்தருளுமாறு வேண்டினார்.


இதே போன்று தான் கௌசுல் அஃலம் அவர்களைச் சோதிக்க வந்த பல மார்க்க அறிஞர்களின் நிலையும் ஆனது.


ஒருமுறை மக்கள் கௌசுல் அஃலம் அவர்களிடம் வந்து "ஒரு மனிதன் தான் மட்டும் ஒரு வணக்கத்தில் ஈடுபட வேண்டும். அந்த நேரத்தில் அந்த வணக்கத்தில் வேறு யாரும் ஈடுபடக் கூடாது. அவ்வாறு நடந்துவிட்டால் தன் மனைவியை விவாகரத்து செய்து விடுவதாக சத்தியம் செய்து விட்டான். அந்த மனிதன் எந்த வணக்கத்தை செய்தால் அவனது சத்தியம் முறியாது?" என்று வினவினார்கள்.


உடனே கௌசுல் அஃலம் அவர்கள் அந்த மனிதன் மக்காவுக்கு சென்று கஃபாவை தவாஃப் (வலம் வருதல்) செய்யும் இடத்தை தனக்கென மட்டும் ஒதுக்கிக் கேட்டு அவன் மட்டும் ஏழு முறை தவாஃப் செய்தால் அவனது சத்தியம் நிறைவேறி விடும்" என்று பதிலளித்தார்கள். கௌசுல் அஃலம் அவர்களது இந்தப் பதில் ஈராக் நாட்டு அறிஞர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்களோ இந்த கேள்விக்கு பதிலளிக்க இயலாது என்று கூறியிருந்தனர்.     நூல்:- அத்தபகாதுல் குப்ரா இமாம் ஷஃரானி


உயர்ந்த பண்பாளர்


கௌசுல் அஃலம் அவர்களது காலத்தில் வாழ்ந்த பல இறைநேசர்களுடன் நட்புறவு கொண்டிருந்த ஹராதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். கௌசுல் அஃலம் அவர்களைவிட அழகிய குணம் படைத்த, அதிகக் கண்ணியம் வாய்ந்த, நட்பையும் வாக்குறுதியையும் அதிகம் காப்பாற்றுகின்ற எவரையும் நான் கண்டதில்லை.


மேலும் அன்னார் மிக உயர்ந்த மாண்பும் சிறப்புமும் விரிவான கல்வி ஞானமும் பெற்றிருந்தும் கூட சிறுவர்களுடன் நின்று பேசுவார்கள். பெரியவர்களுக்கு கண்ணியம் அளிப்பார்கள். தாமே சலாம் கூறி பேசத் தொடங்குவார்கள். பலவீனப்பட்ட மக்களுடன் சேர்ந்து அமர்ந்திருப்பார்கள். ஏழைகளிடம் பணிவாக நடப்பார்கள். சமூகத் தலைவர்கள், பிரமுகர்கள் என்று எவருக்காகவும் எழுந்திருக்க மாட்டார்கள். மன்னர் மற்றும் அமைச்சருடைய வாசலுக்கு ஒருபோதும் அவர்கள் சென்றதில்லை.     நூல்:- கலாயிதுல் ஜவாஹிர்


ஜுப்பாயி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் . கௌசுல் அஃலம் மூலமாக 5 ஆயிரத்துக்கும் அதிகமான  யூதர்களும், கிருஸ்தவர்களும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீணர்களும் ஆயுதமேந்திக் கொள்ளையடிப்பவர்களும் பாவமீட்சி பெற்றுள்ளனர்.      நூல்:-கலாயிதுல் ஜவாஹிர்


தர்ம சிந்தனை


கௌசுல் அஃலம் அவர்கள் கூறினார்கள். இந்த உலகமே எனது கரங்களில் வந்து விட வேண்டும். அனைத்தையுமே பசித்தோருக்கு உணவாக அளித்திட வேண்டும் என நான் ஆவல் கொள்கிறேன். மேலும் எனது கை ஓட்டைக் கை. அது எதையும் சேமித்து வைக்காது. என்னிடம் ஆயிரம் தங்க காசுகள் வந்தாலும் ஒரு இரவு கூட அவை என்னிடம் தங்கமாட்டாது.                                      நூல்:- ரிஜாலுல் ஃபிக்ர் வத்தஃவா ஃபில் இஸ்லாம்


கௌசுல் அஃலம் அவர்கள் பெரும்பாலும் நோன்பாளியாகவே இருப்பார்கள். அவர்களுடைய நிலத்தில் பயிரிடப் பெற்ற கோதுமையை அரைத்துச் சுடப் பெற்ற ரொட்டிகளைக் கொண்டே அவர்கள் நோன்பு திறந்து வந்தார்கள். அவர்களுக்கென நான்கு ஐந்து ரொட்டிகள் கொண்டு வந்து வைக்கப்படும். அவற்றைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டிருப்பார்கள். அப்போது அவர்களின் பணியாள் வெளியே சென்று "கௌசுல் அஃலம் அவர்கள் நோன்பு திறக்கப் போகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து உண்ண விரும்வோர் வரலாம்" என்று கூவி அழைப்பார். அப்போது பலர் வந்து அவர்களுடன் அமர்ந்து சேர்ந்து உண்ணுவார்கள்.


மனநிலை


ஒருமுறை கௌசுல் அஃலம் அவர்கள் தன் சீடர்களில் ஒருவர் மூலமாக ஒரு பாத்திரம் நிறைய ரொட்டிகளை வைத்து இறைநேசராக விளங்கிய தனது நண்பர் ஒருவருக்கு கொடுத்து அனுப்பினார்கள். அந்த இறைநேசர் வந்த ரொட்டிகள் முழுவதையும் ஒரே முறையில் சாப்பிட்டு முடித்துவிட்டு, பேசிக் கொண்டிருக்கையில் தன்னை "உண்டு ருசி அறியாதவர்" (உணவுக்காக ஏங்குபவரல்ல) என்று குறிப்பிட்டார். அந்த சீடருக்கு ஆச்சரியம் மேலிட்டது.


சில மணி நேரத்திற்கு பிறகு கௌசுல் அஃலம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது தன்னை "பெண் ருசி அறியாதவர்" (காமம் நிறைந்தவரல்ல) என்று குறிப்பிட்டார்கள். அப்போதும் அந்த சீடருக்கு ஆச்சரியம் மேலிட, கௌசுல் அஃலம் அவர்களே! உங்களின் நண்பர் மூன்று நபர்கள் உண்ணும்உணவை ஒரே முறையில் உண்டு முடித்துவிட்டு அவர் தன்னை "உண்டு ருசி அறியாதவர்" என்று குறிப்பிட்டார். "தாங்கள் 4 பெண்களை மணமுடித்து 49 குழந்தைகள் பெற்றுள்ளீர்கள்.” ஆனால் தங்களை பெண் ருசி அறியாதவர் என்று குறிப்பிடுகிறீர்கள். எனக்கோ ஒன்றும் புரியவில்லையே!" என்றார்.


அவருக்கு செயல் ரீதியாக பதிலளிக்க விரும்பிய கௌசுல் அஃலம் அவர்கள் இரு நபர்களை அழைத்து அவர்களிடம் கூரான இரு வாள்களை கொடுத்தார்கள். கேள்வி கேட்க அந்த சீடரின் தலை மீது தண்ணீர் நிரம்பிய ஒரு பாத்திரத்தை வைத்தார்கள். வாள் கொடுக்கப்பட்ட அந்த இருவரிடமும் நீங்கள் இவரை இன்ன இடத்தில் நடைபெறுகின்ற விழாவுக்கு அழைத்து செல்லுங்கள். அவர் விழாவை கண்டுக்களிக்கும்போது, அவரது தலையிலுள்ள  பாத்திரத்திலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கீழே விழுந்தாலும் அவரது தலையை கொய்துவிடுங்கள்" என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.


சில மணிநேரம் கழித்த பிறகு அந்த சீடர் வந்தார். அப்போது அவரிடம் கௌசுல் அஃலம் நீர் விழாவை நல்ல முறையில் கண்டுக்களித்தீரா? அச்சமயம் உமது மனநிலை எப்படி இருந்தது? என்று வினவினார்கள். அதற்கு அவர் நான் விழாவை கண்டுக்களிப்பதைவிட என் தலை மீது இருக்கும் பாத்திரத்திலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட கீழே விழுந்துவிடக்கூடாது என்பதிலேயே மிகுந்த கவனத்துடன் இருந்தேன். காரணம்  என் தலை மீதிருக்கும் தண்ணீர் பாத்திரத்திலிருந்து ஓரிரு சொட்டுக்கள் சிந்தினாலும் என் தலை கொய்தப்பட்டுவிடுமே! என்று அந்நேரத்தில் பதட்டத்துடன் இருந்த தன் மனநிலையை விவரித்தார்.


அப்போது தான் கௌசுல் அஃலம் அவர்கள் அவரின் கேள்விக்கு "இவ்வாறு தான் எங்களைப் போன்றவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணமுடித்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்தாலும், எவ்வளவு உண்டு கழித்தாலும், எவ்வளவு காசு பணம் சம்பாதித்தாலும் எங்கள் உள்ளங்கள் இறைசிந்தனையை விட்டும், மறுமை சிந்தனையை விட்டும்  தடுமாறுவதில்லை. இவைகளால் தடுக்கவும் இயலாது" என்று பதிலளித்தார்கள்.


ஒருமுறை கௌசுல் அஃலம் அவர்கள் தம் வீட்டில் இருக்கும் போது ஒருவர் வந்து அன்னாரின் வியாபாரக் கப்பல் புயலில் சிக்கிக் கொண்டதாகக் கூறினார். அது கேட்ட அவர்கள் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினார்கள். அடுத்த நாள் மற்றொருவர் வந்து "புயலில் சிக்கிய தங்களின் கப்பல் தப்பித்துக் கொண்டது" என்று கூறினார். அது கேட்டும் அவர்கள் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினார்கள்.


இவ்விரு நிகழ்ச்சிகளையும் கண்டு, பெரிதும் வியப்புற்ற ஒருவர் கௌசுல் அஃலம் அவர்களிடம் "தங்களின் கப்பல் புயலில் தப்பிய செய்தி அறிந்து அல்ஹம்துலில்லாஹ் என்று தாங்கள் கூறியதைப் புரிந்து கொண்டேன். ஆனால் நேற்று ஒருவர் வந்து தங்களின் கப்பல் புயலில் சிக்கிக்கொண்டன என்று கூறிய பொழுதும் தாங்கள் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறியது தான் எனக்கு புரியவில்லை!" என்று கூறியபோது "கப்பலை இழந்ததற்காகவோ, அவற்றை மீளப் பெற்றதற்காகவோ நான் இறைவனைப் புகழவில்லை. இழப்பு செய்தி அறிந்து என் மனம் சிறிதும் கவலைப்படாமல் இறைவன் நாட்டத்தை இனிமையுடன் ஏற்றுக் கொண்டது கண்டு இறைவனைப் புகழ்ந்தேன். இரு எதிர் மாறான நிலைகளிலும் இறைவனின் நாட்டத்தை பொருந்திக் கொள்ளும் மனநிலையை எனக்குத் தந்த இறைவனை நான் என்றென்றும் புகழ்ந்து கொண்டிருப்பேன்" என்று அவர்கள் கூறினார்கள்.


தகுதி வேண்டும்  


கௌசுல் அஃலம் அவர்கள் பேராசிரியராக பணியாற்றிய "மத்ரசா காதிரிய்யா" எனும் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு உணவும், தங்குமிடமும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார்கள்.


ஒருபெண் தன் மகனை இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயில சேர்த்துவிட்டுச் சென்றாள். சில காலம் கழித்து அவள் தன் மகனைக் காண வந்த போது, அவன் மெலிந்து துரும்பாகி, காய்ந்த ரொட்டியை உண்டு கொண்டிருந்தான். பிறகு அப்பெண் கௌசுல் அஃலம் அவர்களைக் காண வந்த போது, அவர்களோ பொறித்த கோழியை உண்டு கொண்டிருந்தார்கள்.


இதனைக் கண்ட அவள் ஆத்திரமடைந்தவளாக, கௌசுல் அஃலம் அவர்களிடம் சென்று ஆசிரியரே! உங்களை மக்கள் நற்குண சீலர், மாமேதை என்றெல்லாம் கூறுகின்றனர். என் மகன் இங்கு தங்களிடம் பயில வந்து, காய்ந்த ரொட்டிகளை உண்டு உருத் தெரியாது ஓடாகிவிட்டபோது தாங்கள் மட்டும் பொறித்த கோழியை உண்ணுவது எந்த வகையில் நியாயம்? என்று வினவினாள்.


இதனை செவியுற்ற கௌசுல் அஃலம் அவர்கள் ஒரு புன்புறுவலை உதிர்த்தவாறு தனக்கு அருகில் இருந்த கோழி எலும்புகளை ஒன்று சேர்த்து உயிர்ப்பிக்கக்கூடிய அல்லாஹ்வின் ஆணையினால் நீ உயிர் பெற்றெழுக!" என்று கூறினார்கள். அடுத்தகணம் அது உயிர் பெற்று எழுந்து நின்று கொக்கரித்தது. அது கண்டு அப்பெண் வியந்து போனாள். அப்போது கௌசுல் அஃலம் அவர்கள் அப்பெண்ணிடம் "உன்னுடைய மகன் இத்தகு தகுதியைப் பெற்றுவிடின், அவன் இதனை உண்பதற்கு எவ்வித தடையுமில்லை" என்று கூறினார்கள்.


பிற்காலத்தில் அப்பெண்ணின் மகனார் மார்க்க ஞானத்தில் தேர்ச்சிப் பெற்று, சிறப்புற்று விளங்கிய பின்னர், தம் மகனாரைக் காண அவள் வந்த சமயம், கௌசுல் அஃலம் அவர்களுடன் தம் மகனார் அமர்ந்து பொறித்த கோழி உண்டுகொண்டிருப்பதைப் பார்த்து மனம் பூரித்துப் போனாள். உண்டு குவித்திருந்த அந்த எலும்புகளை நோக்கி,  அல்லாஹ்வின் ஆணையினால் உயிர் பெற்றெழுமாறு தம் மகனார் கூற, அடுத்தகணம் அது உயிர் பெற்று எழுந்து கொக்கரித்தது. இதனைப் பார்த்த அப்பெண் மட்டில்லா மகிழ்ச்சியடைந்து, கௌசுல் அஃலம் அவர்களையும் தம் மகனாரையும் வாழ்த்தினாள். மேலும் கௌசுல் அஃலம் அவர்களின் ஊழியத்திலேயே தொடர்ந்து இருக்குமாறு தம் மகனாரிடம் சொல்லி விட்டுச் சென்றாள்.              நூல்:- பஹ்ஜத்துல் அஸ்ரார்


உண்மையான குரு என்பவர் தன்னைப் போன்ற பல குருக்களை உருவாக்குபவராவார். தனக்கு கோஷம் போடுபவர்களை உருவாக்குபவர் அல்லர்.


ஷைக் இஸ்ஸுத்தீன் பின் அப்துஸ் ஸலாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். கௌசுல் அஃலம் அவர்களைத் தவிர வேறு எந்த ஞானிகளிடமும் அதிகமான அற்புதங்கள் நிகழ்ந்ததில்லை. இவ்வாறே ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள்.                                        நூல்:- ரிஜாலுல் ஃபிக்ர் வத்தஃவா ஃபில் இஸ்லாம்


கண்டித்தார்கள்


ஒருமுறை கலீஃபா முஸ்தன்ஜித்பில்லாஹ் கௌசுல் அஃலம் அவர்களின் அருளுரை கேட்பதற்காக வந்தபோது பத்துப் பைகள் நிரம்ப பொற்காசுகள் கொண்டு வந்து அன்னாரிடம் கொடுத்து அதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். அன்னார் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தபோது கலீஃபா மீண்டும் மீண்டும் அதை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தினார். அப்போது அன்னார் அப்பைகளில் இரண்டை எடுத்து தனது கரங்களால் நசுக்கினார்கள். என்ன வியப்பு! அப்பைகளில் இருந்து இரத்தம் பீறிட்டு வெளியே பாய்ந்தது.


அப்போது அன்னார் கலீஃபாவை நோக்கி இந்தப் பொற்காசுகள் உண்மையில் பொற்காசுகள் அல்ல. இவை மக்களைக் கொடுமைப்படுத்தி, அவர்களைப் பிழிந்தெடுத்த இரத்தம் என்பதை நான் அறிவேன், நீங்கள் அறியமாட்டீர்கள் என்று கூறினார்கள். இதனைப் பார்த்த கலீஃபா மூர்ச்சையாகி கீழே சாய்ந்தார்.               நூல்:- பஹ்ஜத்துல் அஸ்ரார்


ஒருமுறை கலீஃபா முக்தலிலி அமரில்லாஹ் என்பவர் அபுல் வஃபா யஹ்யா பின் சயீத் என்பவரை நீதிபதியாக நியமித்தார். இவர் அநீதியாளர் என்பதை நாடே அறியும். கௌசுல் அஃலம் அவர்கள் இந்நியமனத்தைக் கண்டித்தார்கள். மிம்பர் மீது நின்று கொண்டு கூறினார்கள்.


"கொடுமையாளரினும் கொடுமையாளனை முஸ்லிம்களுக்கு நீதிபதியாக நியமித்துவிட்டாய்! கிருபையாளரினும் கிருபையாளனான அல்லாஹ்விடம் நாளை நீ என்ன பதில் சொல்ல போகிறாய்?" இதனை செவியுற்ற கலீஃபா நடுங்கினார். அழுதார். உடனே மேற்சொன்ன நீதிபதியைப் பதவியிலிருந்து நீக்கினார்.          நூல்:- ரிஜாலுல் ஃபிக்ர் வத்தஃவா ஃபில் இஸ்லாம்


 பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது


இமாம் ஹாபிள் அபூ அப்துல்லாஹ் முஹம்மத் பின் யூசுப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். கௌசுல் அஃலம் அவர்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாக இருந்தது. அன்னார் எந்நேரமும் இறைவனை நினைவு கூறுபவராகவும், இளகிய மனமுடையவராகவும், அத்துடன் இறை வணக்கத்திலும் கல்வி ஆராய்ச்சியிலும் (இஜ்திஹாதிலும) அதிக ஈடுபாடு கொண்டவராக வாழ்ந்தார்கள். நூல்:- கலாயிதுல் ஜவாஹிர்


அபூ ஹப்ஸ் உமரி ஹத்தாதி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான் கௌசுல் அஃலம் அவர்களிடம் சென்று "நான் ஹஜ்ஜுக்கு செல்ல ஆயத்தமாகி விட்டேன். ஆனால் காலம் குறைவாக உள்ளது. மேலும் எனது ஒட்டகம் கிழட்டு பருவமடைந்து மெலிந்து விட்டது. இதை வைத்துக்கொண்டு நான் எப்படி வேகமாக செல்ல முடியும்? அதனால் இந்த ஒட்டகத்தில் பரக்கத் எனும் அருள் வளம் ஏற்பட பிரார்த்திக்குமாறு" கோரினேன்.


உடனே கௌசுல் அஃலம் அவர்கள் பிரார்த்தித்துவிட்டு அந்த ஒட்டகத்தை தனது திருக்கரத்தால் தடவி கொடுத்தார்கள். பிறகு எனது ஹஜ் பயணத்தின் போது அந்த ஒட்டகம் மற்ற ஒட்டகங்களைவிட வேகமாக செல்வதையும், அது வலிமை மிக்கதாக ஆகிவிட்டதையும் நான் அறிந்தேன்.


உதிர்ந்த முத்துகள்


கௌசுல் அஃலம் அவர்கள் பணத்திற்கு அரபி மொழியில் சொல்லப்படும் தீனார், திர்ஹம் என்ற இரு சொற்களைப் பயன்படுத்தி பணத்தை எந்தளவு மதிக்க வேண்டுமென்பதைத் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.


தீனார் எனும் சொல்லிலுள்ள "நார்" என்ற சொல்லை தனியாக பிரித்துப் பார்த்தால் அதன் பொருள் "நெருப்பு" என்றாகிறது. நெருப்பு அளவோடு இருந்தால் தான் அது விளக்கு ஏற்றவும், சமையல் செய்யவும் இன்னும் பல தேவைகளுக்கு பயன்படுகிறது. அது அதிகமாகப் போய் விட்டால், அது வீட்டை மட்டுமின்றி, நம்மையும் எரித்துச் சாம்பலாக்கிவிடும்.  

                                                         

திர்ஹம் எனும் சொல்லிலுள்ள "ஹம்" என்ற சொல்லை தனியாக பிரித்துப் பார்த்தால் அதன் பொருள் "கவலை" என்றாகிறது. அந்தக் கவலை, அதாவது பணம் பற்றிய கவலை அளவோடு இருந்தால் தான், மனிதன் முன்னேறுவான். இல்லையேல் பைத்தியக்காரனாகி விடுவான் என்று தெளிவுப்படுத்தினார்கள்.


கௌசுல் அஃலம் அவர்கள் கூறினார்கள். அனைத்து நற்காரியங்களையும் நான் ஆராய்ந்து பார்த்து விட்டேன். அவற்றில் உணவளிப்பதைவிட சிறந்த நற்காரியம் வேறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.             நூல்:- ரிஜாலுல் ஃபிக்ர் வத்தஃவா ஃபில் இஸ்லாம்


கௌசுல் அஃலம் அவர்கள் கூறுகிறார்கள் கடமையான வணக்கங்களை விடுவது நாத்திகமாகும். விலக்கப்பட்ட செயல்களை செய்வது இறைக்கட்டளையை மீறுவதாகும். எந்நிலையிலும் யாரைவிட்டும் மார்க்கத்தின் கடமைகள் நீங்கிவிட மாட்டாது. 


மேலும் இறைவனின் வாசலில் நின்று கொண்டிருப்பவனுக்கு உலகம் பணிவிடை செய்கிறது. தனது வாசலில் வந்து தன்னிடம் தேவையாகி நிற்பவனை உலகம் இழிவுப்படுத்துகிறது.


மேலும் பணம் கையிலும், பையிலும் இருப்பது கூடும். ஏதேனும் நன்நோக்கத்திற்காக சேமித்து வைப்பதும் கூடும். ஆனால் பணம் உள்ளத்தில் இடம் பிடித்துவிடக் கூடாது.             நூல்:- ஃபத்ஹுர் ரப்பானி


கௌசுல் அஃலம் அவர்கள் ஹிஜ்ரீ 521-561 வரை அதாவது 40 ஆண்டு காலம் ஆற்றிய பேருரை தான் பின்னர் "ஃபத்ஹுல் கைப்", "ஃபத்ஹுர் ரப்பானி" எனும் பெயரில் நூல்களாக உருவானது. எழுதப்பட்ட தன்னுடைய பேருரைகளை கௌசுல் அஃலம் அவர்கள் வாங்கித் திருத்திச் செப்பணிட்டுக் கொடுப்பார்கள்.


மேலும் அவர்கள் எழுதிய "குன்யத்து தாலிபீன்" எனும் நூல் மார்க்க சட்டதிட்டங்கள் பற்றியதாகும்.


இறைநேசர்களுடன் நட்பு கொள்ளும் பாக்கியத்தை நமக்கு இறைவன் தந்தருள்வானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

Friday, 13 November 2020

சமநிலைச் சமுதாயம்

 

சமநிலைச் சமுதாயம்


وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا


(நபியே) உங்களுடைய தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம் இதற்கிடையே சமநிலையைக் கடைப்பிடிப்பீராக.       திருக்குர்ஆன்:- 17:110


இஸ்லாம் மனிதனுக்கு  ஆன்மீகமும், உலகியலும் அவசியம் என்கிறது. இஸ்லாமில் ஆன்மீகத்தை புறக்கணிக்கும் உலகியல் இல்லை; அதேபோல் ஆன்மீகத்தை அரவணைத்துக் கொண்டு உலகை உதறித் தள்ளும் கோமாளித்தனமும் இல்லை.


இந்த உலக வாழ்க்கையை மறுமை வாழ்க்கையின் நன்மைகளை அறுவடை செய்யும் விளைநிலமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்கிறது.


முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் ஆசைகளையும், தேவைகளையும் இரண்டு உலகத்திற்கும் (இம்மை - மறுமை) இடையே சமமாகப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.


"இந்த உலகம் பொய். இதில் உள்ளதெல்லாம் அழிந்துவிடும். எனவே, இதை துறப்பதே விமோசனத்திற்கு வழி" என்று சில மதங்கள் உபதேசிக்கின்றன. "இந்த உலகம் மெய். இதில் இருப்பவை அழிவதற்கு முன் ஆசை தீர இன்பங்களை அனுபவித்துவிடு! பாவமாவது, புண்ணியமாவது" என சில தத்துவங்கள் கூறுகின்றன. இஸ்லாம் இந்த இரண்டுக்கும் மத்தியில் சமநிலையைப் பேணச் சொல்கிறது.


இம்மையில் அனுமதிக்கப்பட்ட இன்பங்களை அனுபவியுங்கள். ஆனால்,  இம்மை இன்பங்களைவிட மறுமை இன்பங்கள் உயர்ந்தவை. மறுமையில் இன்பங்களை அறுவடை செய்ய  இம்மை அதற்காக  விளைநிலம் என அறிவுறுத்துகிறது இஸ்லாம்.


எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் நல்லவற்றையே கொடுத்தருள்வாயாக! மறுவுலகிலும் நல்லவற்றையே கொடுத்தருள்வாயாக!          திருக்குர்ஆன்:- 2:201


இந்த அழகான பிரார்த்தனையை குர்ஆன் கற்றுத்தருகிறது. இவ்வாறு இஸ்லாம் ஈருலகிலும் இன்பம் பெறும் வழியை எடுத்துரைக்கிறது.


மனித வாழ்க்கையில் உண்பது, உறங்குவது, உடுத்துவது, உறவு கொள்ளுவது,  பொருளீட்டுவது, பிறரிடம் நட்பு கொள்வது மற்றும் விரோதம் கொள்வது என அனைத்திலும் சமநிலைப் போக்கை  இஸ்லாம் கடைபிடிக்க வலியுறுத்துகிறது.


நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَیرُ الاُمُورِ اَوسَاطُهَا ) காரியங்களில் சமநிலையை மேற்கொள்வதே நன்மையாகும். நூல்:-பைஹகீ


அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறினார்கள்.   ( عَلَیکُم بِالقَصدِ فَاِنَّ القَصدَ اَبلَغُ ) நடுநிலையைக் கடைப்பிடியுங்கள். நிச்சயமாக நடுநிலையை கடைப்பிடிப்பதனால் உங்கள் இலட்சியத்தை அடைந்து கொள்ள முடியும்.


உபரியான தொழுகைகள்


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குள்) நுழைந்த போது இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. ( مَا هَذَا الْحَبْلُ ) "இந்தக் கயிறு என்ன (ஏன்)?" என்று அண்ணலார் வினவினார்கள். இதற்கு மக்கள், "இது ஸைனப் (ரலி) அவர்களுக்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிறை பற்றிக்கொள்வார்" என்று கூறினார்கள்.


அதற்கு அண்ணலார், ( لاَ، حُلُّوهُ، لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ، فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ ) "வேண்டாம். அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமாக இருக்கும் போது (கூடுதலான தொழுகைகளைத்) தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.        நூல்:- புகாரீ-1150


அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம், ( يَا عَبْدَ اللَّهِ، لاَ تَكُنْ مِثْلَ فُلاَنٍ، كَانَ يَقُومُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ ) "அப்துல்லாஹ்! இரவில் (அதிகமாக) நின்று வழிபாடு செய்து விட்டு, இறுதியில் இரவுத் தொழுகையையே கைவிட வேண்டிய நிலைக்கு ஆளான இன்ன மனிதரைப் போன்று நீரும் ஆகிவிட வேண்டாம்" என்று கூறினார்கள்.       நூல்:- புகாரீ-1152


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَسَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا ) (கூடுதலான வழிபாடுகள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைபிடியுங்கள்; இயன்றதைச் செய்யுங்கள்; நற்செய்தி பெறுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்    நூல்:- புகாரீ-39


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் சுலைமான் அபீ ஹஸ்மா (ரலி) அவர்களை கடைத்தெருவின் மேற்பார்வையாளராக நியமித்திருந்தார்கள். ஒருநாள் அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் காணப்படவில்லை. உமர் (ரலி) அவர்கள் தொழுகை முடிந்ததும் அவருடைய வீட்டுக்குச் சென்று அவர்களின் தாயாரிடம், ( لَمْ أَرَ سُلَيْمَانَ فِي الصُّبْحِ ) "(இன்று) சுலைமான் (ரலி) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகைக்கு காணவில்லையே காரணம் என்ன?" என்று கேட்டார்கள்.


அதற்கு அவ்வம்மையார், "சுலைமான் இன்று இரவு முழுவதும் நஃபில் தொழுவதில் ஈடுபட்டிருந்ததால் தூக்கம் மிகைத்து ஃபஜ்ரு தொழுகை நேரத்தில் கண்ணயர்ந்துவிட்டார்" என்று கூறினார். இதை கேட்ட உமர் (ரலி) அவர்கள், ( لأَنْ أَشْهَدَ صَلاَةَ الصُّبْحِ فِي الْجَمَاعَةِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَقُومَ لَيْلَةً ) "இரவு முழுவதும் நஃபில் தொழுவதை விட ஜமாஅத்துடன் ஃபஜ்ரு தொழுவது அவசியமானதாகும்" என்று கூறினார்கள். நூல்:- முஅத்தா மாலிக்-296


பொதுவாக வழிபாடுக் குறைவாகச் செய்தாலும் நிறைவாகச் செய்ய வேண்டும். நிலையாகச் செய்ய வேண்டும். அதுவே இறைவனுக்கு உவப்பானதாக இருக்கும். ஆர்வ மிகுதியால், சிரமங்களை ஏற்படுத்திக்கொண்டு அதிக அளவில் வழிபாடு செய்யும்போது, ஒரு நாள் சடைந்து போய் அதைக் கைவிட வேண்டியது வரும். இது நல்லதன்று. இறுதியில் முற்றாக அந்த வழிபாட்டைக் கைவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே, வழிபாடுகளில் நடுநிலையை பேணவேண்டும். மூழ்கிப் போய் விடக்கூடாது. உற்சாகத்தோடு தான் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்; சடைவு ஏற்பட இடமளித்துவிடக் கூடாது.


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( سَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا فَإِنَّهُ لَنْ يُدْخِلَ الْجَنَّةَ أَحَدًا عَمَلُهُ ) "நடுநிலையாக செயலாற்றுங்கள். (அல்லது) அதற்கு நெருக்கமாகச் செயலாற்றுங்கள் நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் யாரையும் அவரது இறைவழிபாடு ஒருபோதும் சொர்க்கத்தில் நுழைவிக்காது என்று கூறினார்கள்.


மக்கள், "தங்களையுமா, நாயகமே? என்று கேட்டார்கள். அண்ணலார், ( وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِيَ اللَّهُ مِنْهُ بِرَحْمَةٍ وَاعْلَمُوا أَنَّ أَحَبَّ الْعَمَلِ إِلَى اللَّهِ أَدْوَمُهُ وَإِنْ قَلَّ ) "என்னையும்தான்;  அல்லாஹ் தனது பேரருளால் என்னை அரவணைத்துக் கொண்டாலே தவிர. அறிந்து கொள்ளுங்கள்! வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான வழிபாடே ஆகும்" என்று கூறினார்கள். நூல்:-  புகாரீ-6464, முஸ்லிம்-5430


அதாவது, ஒருவர் இறைவழிபாடு புரிவதனால் மட்டும் அவர் சொர்க்கம் சென்றுவிடுவார் என்று உறுதியாகக் கூற முடியாது. மாறாக, அவரது இறைவழிபாட்டை இறைவன் அங்கீகரிக்க வேண்டும். அதற்கும் மேலாக, அவர் மீது இறைவன் அன்பும் அருளும் புரிய வேண்டும். அப்போதுதான் அவர் சொர்க்கம் செல்ல முடியும். தவிரவும், இறைவழிபாடு புரிவதற்கும் இறைவனின் அருளும் உதவியும் தேவை. அதன்றி எவரும் இறைவழிபாடு புரிய இயலாது.


இல்லற வாழ்க்கையில்


அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சல்மான் அல்ஃபார்ஸீ (ரலி) அவர்களையும் அபூதர்தா (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் அபூதர்தாவைச் சந்திக்கச் சென்றபோது அவரின் மனைவி அழுக்கடைந்த ஆடை அணிந்து இருக்கக் கண்டார்.


சல்மான் (ரலி) அவர்கள் "உமக்கு என்ன நேர்ந்தது?" என்று அவரிடம் கேட்டார். அதற்கு அவரது மனைவி, ( أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا ) "உங்கள் சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலகில் எந்த தேவையுமில்லை" (அதாவது அவர் என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில்லை) என்று விடையளித்தார்.


சற்று நேரத்தில் அபூதர்தா (ரலி) வந்து சல்மானுக்கு உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபூதர்தாவிடம், உண்பீராக! என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, "நான் நோன்பு நோற்று இருக்கிறேன்" என்றார். சல்மான், "நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்" என்று கூறியதும் அபூதர்தா உண்டார். இரவு வந்ததும் அபூதர்தா (ரலி) அவர்கள் (தொழுவதற்கு) எழுந்திருக்கப் போனார். அப்போது சல்மான் (ரலி) அவர்கள் உறங்குவீராக! என்று கூறியதும் அபூதர்தா உறங்கினார்கள்.


பின்னர் (சிறிது நேரத்தில் மீண்டும் தொழுவதற்காக) அபூதர்தா எழுந்திருக்கப் போனார். அப்போதும் சல்மான் 'உறங்குவீராக!' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள் 'இப்போது எழுவீராக!' என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர்.


பிறகு அபூதர்தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள், ( إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، وَلأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ ) "நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்யவேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு  நீர் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்யவேண்டிய கடமைகளும் இருக்கின்றன; ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைகளை வழங்குவீராக!" என்று கூறினார்கள். பிறகு அபூ தர்தா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு அண்ணலார், ( صَدَقَ سَلْمَانُ ) "சல்மான் உண்மையையே கூறினார்" என்றார்கள்.      நூல் புகாரீ-1968


அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி அபூதர்தா (ரலி) அவர்கள் கூறியபோது சல்மான் (ரலி) அவர்கள் சொன்னது சரி தான் என்று ஆமோதித்தார்கள். ஆம்! இல்லற வாழ்க்கையில் ஈடுபடவும் வேண்டும் இறைவழிபாட்டில் ஈடுபடவும் வேண்டும் இவ்வாறு தான் இஸ்லாம் போதிக்கிறது.


அழகிய அறிவுரை


நடுநிலை தவறி விடவேண்டாம். எங்களுக்குச் சீரான வழியைக் காட்டுவீராக! என்றனர்.      திருக்குர்ஆன்:- 38:22


ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பல தொழுகைகளைத் தொழுதிருக்கிறேன். அவர்களது தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாக அமைந்திருந்தன.    நூல்:- முஸ்லிம்-1572


அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. " அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்களுக்கு (ஹதீஸ் அறிவித்து) அறிவுரை வழங்கி வந்தார்கள். இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் அபூ அப்துர் ரஹ்மானே! தங்களின் ஹதீஸ் அறிவிப்பை நாங்கள் நேசிக்கிறோம்; ஆசிக்கிறோம். தாங்கள் ஒவ்வொரு தினமும் எங்களுக்கு ஹதீஸ் அறிவிப்பதை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம் என்று கூறினார்.


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ( مَا يَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ إِلاَّ كَرَاهِيَةُ أَنْ أُمِلَّكُمْ. إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَخَوَّلُنَا بِالْمَوْعِظَةِ فِي الأَيَّامِ كَرَاهِيَةَ السَّآمَةِ عَلَيْنَا ) "நான் உங்களுக்குச் சடைவை ஏற்படுத்திவிடுவேனோ எனும் அச்சம்தான் உங்களுக்கு (நாள்தோறும்) ஹதீஸ் அறிவிக்கவிடாமல் என்னைத் தடுத்து விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாங்கள் சடைவு அடைவதை விரும்பாமல் (சந்தர்ப்ப சூழ்நிலைக் கவனித்து) விட்டு விட்டு எங்களுக்கு அறிவுரை வழங்கி வந்தார்கள். (இதுவே உங்களுக்கிடையே அறிவுரை வழங்க வரவிடாமல் என்னைத் தடுக்கிறது") என்று கூறினார்கள்.   நூல்:- முஸ்லிம்-5435


அறிவுரை, உபதேசம் வழங்குவது ஒரு நல்லறம் தான். அடிக்கடி அறிவுரை கூறப்பட்டு வந்தால்தான், மக்களின் அலைபாயும் மனம் ஒருமுகப்பட்டு மறந்துபோன நன்மைகளைத் தொடரச் செய்யவும், இறைவனைப் பயந்து தீமைகளைக் கைவிடவும் வழி பிறக்கும். அதே நேரத்தில் மக்கள் சடைந்து போகும் அளவுக்குத் தொடர்ந்து அறிவுரை கூறுவது கூடாது. அதனால் பற்று ஏற்படுவதற்குப் பதிலாக வெறுப்பு ஏற்பட்டு விடலாம். இது சொல்பவருக்கும் சொல்லப்படும் கருத்துக்கும் மதிப்பில்லாமல் செய்துவிடலாம். எனவே, சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து தேவைக்கேற்பவே உபதேசம் செய்ய வேண்டும். இதில் எவரையும் கட்டாயப்படுத்தக்கூடாது.


மொகலாயச் சக்கரவர்த்தி  அவுரங்கசீப் (ரஹ்) அவர்கள் தன்னுடைய மகனுக்கு கூறிய அறிவுரை, "மகனே! நீ கல்கண்டு போல் இனிப்பாகவும் இருந்து விடாதே! அவ்வாறு இருந்து விட்டால், உன்னை எல்லோரும் தூக்கி விழுங்கி விடுவார்கள். மேலும், வேப்பங்காய் போன்று கசப்பாகவும் இருந்துவிடாதே! அவ்வாறு இருந்துவிட்டால், உன்னை எல்லோரும் 'தூதூ' என தூற்றி துப்பத் தொடங்கி விடுவார்கள் என்று கூறினார்கள்.


நபித்தோழர்கள்


உமது நடையில் மிதமான நிலையைக் கடைப்பிடி.      திருக்குர்ஆன்:-31:19


மரியாதைக்குரிய நபித்தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் கொண்டிருந்த நட்பின் பலனால் எந்தளவுக்கு நடுநிலையான இயல்புடையவர்களாக இருந்தார்கள் எனில், அவர்கள் துறவிகள் மற்றும் உலக பற்றற்றவர்கள் போன்றும் இருந்ததில்லை. உலகாதாயவாதிகளை போன்றும் கிண்டல் கேலியிலும், வீண்பேச்சிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்ததில்லை. மாறாக அவர்களது உள்ளங்களில் நகைச்சுவையுடன் தீனில் ரோசமும் உத்வேகமும் நிரம்பியிருந்தன.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ وَالاِقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ) நன்னடத்தை, நிதானம், நடுநிலைப் போக்கு ஆகியவை நபித்துவத்தின் 24 பாகங்களில் ஒரு பாகமாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் அல்முஸனீ (ரலி) அவர்கள் நூல்:-  திர்மிதீ-1933


காரியங்களில் நடுநிலையை கடைபிடிக்கும் பண்பு அவ்வளவு சாதாரணமானதல்ல. அது நபித்துவ பண்புகளில் உள்ளவை என விளங்க வேண்டும். அது ஒப்பற்ற அழகிய பண்பாகும்.


காரியங்கள் அனைத்திலும் நாம் சக்திக்கும் வலிமைக்கும் ஏற்றவாறு செயல்பட வேண்டும். அதற்கு எதிரான எத்தகைய வழிமுறையை மேற்கொண்டாலும் அது நமக்கு மகிழ்வூட்டுகின்ற விஷயமாக இருக்காது.


குர்ஆன் ஓதும்போது...


அப்துல்லாஹ் பின் அபீகைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் எவ்வாறு குர்ஆனை ஓதுவார்கள்? மெதுவாக ஓதுவார்களா? சப்தமாக ஓதுவார்களா?" என்று கேட்டேன்.


அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "இரு விதமாகவும் ஓதி வந்தார்கள்; சில நேரங்களில் மெதுவாக ஓதுவார்கள்; சில நேரங்களில் சப்தமாக ஓதுவார்கள்" என்று விடையளித்தார்கள். அப்போது நான், ( اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الأَمْرِ سَعَةً ) "நடைமுறைகளில் தாராளத்தை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறினேன். நூல்:-  அபூதாவூத்-1132, திர்மிதீ-411


அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருநாள் அபூபக்கர்-ரலி அவர்களும் உமர்-ரலி அவர்களும் ஒன்றாக இருந்த போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அபூபக்கர் (ரலி) அவர்களிடம், ( مَرَرْتُ بِكَ وَأَنْتَ تَقْرَأُ وَأَنْتَ تَخْفِضُ مِنْ صَوْتِكَ ) “நீங்கள் (இரவில்) குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போது நான் உங்களைக் கடந்து சென்றேன். அப்போது நீங்கள் மெதுவாக ஓதிக் கொண்டிருந்தீர்களே (ஏன்)?" என்று கேட்டார்கள்.


அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "நான் யாருடன் ரகசியமாக உரையாடுவேனோ அந்த இறைவனுக்கு கேட்கும் விதமாக அவ்வாறு ஓதினேன், என்றார்கள். அண்ணலார், ( اِرْفَعْ قَلِيلاً ) "இன்னும் சற்று (சப்தத்தை) உயர்த்திக் கொள்வீராக!" என்று கூறினார்கள்.


பிறகு உமர் (ரலி) அவர்களிடம், ( مَرَرْتُ بِكَ وَأَنْتَ تَقْرَأُ وَأَنْتَ تَرْفَعُ صَوْتَكَ ) "நீர் (இரவில்) குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த போது நான் உம்மைக் கடந்து சென்றேன். நீர் குரலுயர்த்தி ஓதுகிறீரே?" என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் நான் இவ்வாறு ஓதுவதன் மூலம் சிற்றுறக்கத்தில் இருப்போரை விழிக்கச் செய்கிறேன். ஷைத்தானை விரட்டுகிறேன்" என்று கூறினார்கள். அண்ணலார், ( اِخْفِضْ قَلِيلاً ) "சற்று (சப்தத்தைத்) தாழ்த்திக் கொள்வீராக!" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1133, திர்மிதீ-409, 


செலவு  செய்வதில்


(நபியே! உங்களுடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உங்களுடைய கையைக் கழுத்தோடு சேர்த்துக் கட்டிக் கொள்ளாதீர். மேலும் (உங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உங்களுடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர். (அவ்வாறு செய்தால்)  தூற்றப்பட்டவராகவும் முடக்கப்பட்டவராகவும் நீர் அமர்ந்துவிடுவீர்.     திருக்குர்ஆன்:- 17:29


அதாவது பணத்தையும் பொருளையும் செலவிடும்போது நடுநிலையைப் பேண வேண்டும். அதிலேயே நினைத்திருக்க வேண்டும் என்கிறது இந்த திருவசனம்.


அவர்கள் செலவு செய்தால் விரயம் செய்ய மாட்டார்கள்; (கையை) இறுக்கவுமாட்டார்கள். அ(வர்களின் செலவான)து, அதற்கிடையே நடுநிலையானதாக இருக்கும்.          திருக்குர்ஆன்:- 25:67


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا عَالَ مَنْ اِقْتَصَدَ " لَمْ يُخَرِّجُوهُ ) சிக்கனத்தை மேற்கொள்பவர் (குடும்பத்தில் பொருளாதார) நெருக்கடியை சந்திக்க மாட்டார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மது தப்ரானீ, தஃப்சீர் இப்னு கஸீர் அல்ஃபுர்கான் வசனம்-67


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.    ( مَا اَحسَنَ القَصدَ فِی الغِنٰی مَااَحسَنَ القَصدَ فِی الفَقرِ وَمَا اَحسَنَ القَصدَ فِی العِبَادَةِ ) செல்வ நிலையிலும், வறுமையிலும், இறைவழிபாட்டிலும் கடைபிடிக்கப்படும் நடுநிலைப் போக்கு (சிக்கனம்) எவ்வளவு எழிலானது! அறிவிப்பாளர்:- ஹுதைபா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது:- பஸ்ஸார், கன்ஸுல் உம்மால், தஃப்சீர் இப்னு கஸீர் அல்ஃபுர்கான் வசனம்-67


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நடுத்தரமான செலவாளியை இறைவன் யாசிப்பவராக்கமாட்டான். வீண் செலவு செய்பவரையே இறைவன் வறுமையில் ஆழ்த்துகிறான்.


தனி மனிதனோ, ஒரு குடும்பமோ, ஏன் ஓர் அரசோ தனது செலவீனங்களில் விரயமும் இல்லாமல், கஞ்சத்தனமும் இல்லாமல் நடுநிலையோடு - அதாவது சிக்கனத்தோடு செயல்பட்டால் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியும். இது பொருளியலின் முக்கியப் பாடங்களில் ஒன்றாகும். உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று, விரயம் அங்கே ஆட்சி புரிந்திருக்கும். அல்லது அவசியமான செலவினங்கள் புறந்தள்ளப்பட்டிருக்கும். மொத்தத்தில் சிக்கனம் மறக்கப்பட்டிருக்கும்.


விரயம் என்பது பயனற்ற முறையில் செலவிடப்படுவதாலோ சரியான முறையில் பயன்படுத்தாததாலோ பொருள் வீணாவதைக் குறிக்கும். கஞ்சத்தனம் என்பது அவசியமான செலவைக்கூட தவிர்த்து விட்டு பணத்தை மிச்சம் பிடிக்க நினைக்கும் குணமாகும். சிக்கனம் என்பது தேவையான அளவுக்கு மட்டும் கவனமாக செலவு செய்வதைக் குறிக்கும்.


ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு அரசும் விரயத்தையும் கஞ்சத் தனத்தையும் கைவிட்டு, சிக்கனமாகச் செலவிட்டு வந்தால் அங்கே பொருளாதார நெருக்கடிக்கோ பட்டினிக்கோ பெரும்பாலும் அவசியம் இராது.


நட்பு - பகைமை


உங்களுக்கும், அவர்களுள் உள்ள உங்களுடைய எதிரிகளுக்கும் இடையில், அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்திவிடக்கூடும். (இதற்கும்) அல்லாஹ் ஆற்றலுடையவனே!    திருக்குர்ஆன்:- 60:7


உபைதில் கின்தி ( ரஹ்) அவர்கள் கூறியதாவது. அலீ (ரலி) அவர்கள் இப்னுல்கவ்வாஃ (ரஹ்) அவர்களிடம், ( أَحْبِبْ حَبِيبَكَ هَوْنًا مَا، عَسَى أَنْ يَكُونَ بَغِيضَكَ يَوْمًا مَا، وَأَبْغِضْ بَغِيضَكَ هَوْنًا مَا، عَسَى أَنْ يَكُونَ حَبِيبَكَ يَوْمًا مَا‏ ) "உன் நண்பனை அளவோடு நேசிப்பீராக. என்றாவது ஒருநாள் அவன் உன்னைக் கோபமூட்டுபவனாக ஆகலாம். உனது எதிரியை அளவோடு வெறுப்பீராக. என்றாவது ஒருநாள் அவன் உனது நேசனாக ஆகலாம்" என்று கூறினார்கள்.       நூல்:- அல்அதபுல் முஃப்ரத்- 1321


அஸ்லம் (ரலி) அவர்கள் கூறியதாவது. உமர் (ரலி) அவர்கள், ( لاَ يَكُنْ حُبُّكَ كَلَفًا، وَلاَ بُغْضُكَ تَلَفًا ) "உனது நேசம் அளவு கடந்ததாகவும், உமது கோபம் நாசத்திற்குக் காரணமாகவும் இருக்க வேண்டாம்" என்று கூறினார்கள். அப்போது நான், "அது எப்படி?" என்று கேட்டேன். உமர் (ரலி) அவர்கள், ( إِذَا أَحْبَبْتَ كَلِفْتَ كَلَفَ الصَّبِيِّ، وَإِذَا أَبْغَضْتَ أَحْبَبْتَ لِصَاحِبِكَ التَّلَف‏ )"நீர் நேசித்தால் குழந்தையை நேசிப்பது போன்று அளவுகடந்து நேசிக்கிறாய். நீ கோபப்பட்டால் உனது தோழனுக்கு நாசம் ஏற்படுவதை விரும்புகிறாய்" என்று கூறினார்கள்.      நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-1322


ஆகவே, அனைத்து  காரியங்களிலும் சமநிலையைப் பேணி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னைசெல்: 9840535951


மரண வேதனை

  மரண வேதனை   وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ மரணத்தின் சிரமம் மெய்யாகவே வந்துவிடும் சமயத்தில...