Search This Blog

Monday, 15 December 2025

கேலிக்கூத்து

கேலிக்கூத்து

 

وَلَا تَتَّبِعُوا أَهْوَاءَ قَوْمٍ قَدْ ضَلُّوا مِنْ قَبْلُ وَأَضَلُّوا كَثِيرًا وَضَلُّوا عَنْ سَوَاءِ السَّبِيلِ

இதற்கு முன்னர் (இவ்வாறு) வழி தவறிய மக்களின் விருப்பங்களையும் நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்,) அவர்கள் நேரான வழியில் இருந்து தவறிவிட்டதுடன் (மற்றும்) பலரை வழிகெடுத்தும் இருக்கின்றனர் என்று (நபியே!) நீர் கூறுவீராக. திருக்குர்ஆன்:- 5:77

 

ஏப்ரல் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் முட்டாள்கள் (ஏப்ரல் ஃபூல்) தினமாக கொண்டாடப்படுகிறது.

 

நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டிக் கொள்ளாமல் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி நம்ப வைத்து ஏமாந்தவர்களை "ஏப்ரல் ஃபூல்" என்று கூறி சந்தோசப்படுவது வழக்கமாகிவிட்டது. இந்த முட்டாள்கள் தினம் முதன்முதலாக பிரான்ஸ் நாட்டில் தான் கொண்டாடப்பட்டது.

 

இன்றைய நடைமுறையில் உள்ள நாள்களை வரைமுறைப்படுத்தி காட்டும் நாட்காட்டி காலண்டர் முறையை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட முதல் நாடு பிரான்ஸ் தான்.

 

1564 ஆம் ஆண்டில் பிரான்ஸில் ஆட்சி புரிந்த ஒன்பதாம் சார்லஸ் என்ற மன்னன் இந்த நாட்காட்டி முறையை ஏற்றுக்கொண்டு இதன் முதல் தேதியில் புது வருட கொண்டாட்டங்களை கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டான்.

 

அதற்கு முன்பு பல நாடுகளில் ஏப்ரல் முதல் தேதியை புத்தாண்டு தினமாகக் கொண்டாடி வந்தனர். சார்லஸ் மன்னனின் இந்த ஆணையை பலர் ஏற்றுக்கொண்டாலும் சிலர் ஜனவரி முதல் தேதியைப் புத்தாண்டாக கொண்டாட எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய நாட்காட்டி முறையை ஏற்றுக்கொள்ளாமல் பழைய முறைப்படியே ஏப்ரல் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுவோம் என்று அடம்பிடித்தவர்களை பழைமைவாதிகள் என்று மற்றவர்கள் குறிப்பிட்டு கிண்டல் செய்தனர்.

 

அத்தோடு மட்டுமின்றி மன்னனின் இந்த ஆணையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு ஏப்ரல் முதல் நாள் அன்று பெரிய பெரிய கூடையில் பார்சல் வீடு தேடி வரும். அந்தக் கூடையை ஆசையோடு பிரித்து பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஆமாம்! பார்சலில் குதிரை முடி, பழைய குப்பைகள் என இருக்கும். மேலும், தவறான தகவல்களையும் சொல்லி ஏமாற்றினர்.

 

மடையர்களின் செயல்

 

இப்படி மற்றவர்களை கிண்டல் கேலி செய்து அவர்களை ஏமாற்றி ஏப்ரல் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுவதை தவிர்க்க வைத்தனர். நவீன நாட்காட்டி முறைப்படி ஜனவரி முதல் தேதியைப் புதுவருட பிறப்பாக அனைவரையும் ஏற்கச் செய்தனர்.

 

ஏப்ரல் முதல் நாள் அன்று ஸ்காட்லாந்து மக்கள் சாலையில் போவோர் வருவோரிடம் வலிய சென்று ஒரு பேப்பர் கொடுப்பார்கள். அதில் அவசரம் என்று எழுதி இருக்கும். வாங்கியவர் அதை வேகமாக பிரித்துப் பார்த்தால் அதில் இன்று ஏப்ரல் ஃபூல் தினம். அது வேறு யாருமில்லை நீதான் என்று எழுதி இருக்கும். பிரான்ஸில் காகிதத்தில் மீன் செய்து நண்பர்களின் முதுகில் ஒட்டி விடுவார்கள். காகித மீனோடு திரியும் அந்த மனிதரை கேலி செய்வார்கள். அமெரிக்காவில் சர்க்கரையில் உப்பைக் கொட்டி ஏமாற்றுவார்கள்.

 

இப்படி பிரான்ஸில் தொடங்கிய கேலிக்கூத்து பின்னர் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டது. பொய் சொல்லுதல், பதட்டமடையச் செய்தல், கேலி செய்தல் இதுவே, ஏப்ரல் ஃபூல் நாளின் சாரம்சமானது. இவை அனைத்தும் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் மாபெரும் குற்றமாகும்.

 

பொய்யும், புரட்டும்

 

பொய்யான வார்த்தைகளிலிருந்தும் நீங்கள் தப்பித்துக்கொள்ளுங்கள். திருக்குர்ஆன்:- 22:30

 

பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள். திருக்குர்ஆன்:- 51:10

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كَبُرَتْ خِيَانَةً أَنْ تُحَدِّثَ أَخَاكَ حَدِيثًا هُوَ لَكَ بِهِ مُصَدِّقٌ وَأَنْتَ لَهُ بِهِ كَاذِبٌ )  உன்னுடைய சகோதரனிடத்தில் ஒரு செய்தியைச் சொல்கிறாய். அதை அவன் உண்மை என நம்புகிறான். ஆனால், அது பொய் எனத் தெரியும். இதுதான் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகமாகும். அறிவிப்பாளர்:- சுஃப்யான் பின் அல்அசீத் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத் 4320, அல்அதபுல் முஃப்ரத்-393, பைஹகீ

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ بِالْحَدِيثِ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ فَيَكْذِبُ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ )  மக்களைச் சிரிக்க வைப்பதற்காக பொய்யான செய்தி ஒன்றைச் சொல்பவருக்கு நாசம் தான். (மீண்டும் சொல்கிறேன்) அவருக்கு நாசம் தான். (மீண்டும் சொல்கிறேன்) அவருக்கு நாசம் தான். அறிவிப்பாளர்:- முஆவியா பின் ஹைதா ரலி அவர்கள் நூல்:- திர்மிதீ-2237

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اِذَا كَذَبَ الْعَبْدُ تَبَاعَدَ عَنْهُ الْمَلَكُ مِيْلاً مِنْ نَتْنِ مَا جَاءَ بِهِ ) ஓர் அடியார் பொய் சொன்னால் அவர் சொன்ன பொய்யிலிருந்து வரும் துர்நாற்றத்தின் காரணமாக அவரிடமிருந்து ஒரு மைல் தொலைவுக்கு வானவர் விலகிச் செல்கிறார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்கள் நூல்:- திர்மிதீ-1895

 

நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا )  நகைச்சுவை செய்யும்போதுகூட பொய் பேசாதிருப்பவருக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு மாளிகையைப் பெற்றுத் தர நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அறிவிப்பாளர்:- அபூஉமாமா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4167, தப்ரானீ, பைஹகீ

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் பொய், மது, மாது, திருட்டு ஆகிய தீமைகளை நீண்ட காலமாக செய்து வருகிறேன். உடனடியாக இதனை விட்டும் மீள முடியாதவனாக இருக்கிறேன். நான் திருந்தி வாழ வழி காட்டுங்கள்" என்றார்.

 

நபியவர்கள் தொலைநோக்கு பார்வையோடு, "இனிமேல் நீ பொய் சொல்லுவதை மட்டும் விட்டுவிடு!" என்று கூறினார்கள். பொய் பேசாதிருப்பது எளிய செயல் என்றெண்ணி இதற்கு சம்மதித்து சத்தியம் செய்துவிட்டார். அன்றிரவு மது, மாது போன்ற பாவச் செயலில் ஈடுபட விரும்பினார். ஆனால், அவருக்கும் அவரது மனசாட்சிக்குமிடையே போராட்டம் நடந்தது.

 

மறுநாள் காலையில் நபியவர்களை சந்தித்தால் நேற்று இரவு என்ன செய்தாய் என்று கேட்பார்கள். இனிமேல் பொய் சொல்வதில்லை என்ற சத்தியம் செய்துள்ளேன். பாவத்தைச் செய்துவிட்டு பொய் சொல்லவும் முடியாது. உண்மையைச் சொன்னால் எல்லோருக்கும் முன்னிலையில் அவமானம் ஏற்படும். எனவே எல்லா பாவச்செயல்களையும் விட்டு விடுவதை சிறந்தது என்று உறுதியான முடிவுடன் சகல பாவங்களையும் விட்டுவிட்டார்.

 

மனிதன் பொய் பேசுவதை தவிர்ந்துக்கொண்டாலே போதும். பிற பாவச் செயல்கள் அவனை விட்டும் தானாகவே நீங்கிவிடும். வேண்டுமென்றோ அல்லது விளையாட்டுக்காகவோ பொய் பேசுவது தவறாகும்.

 

இந்தக் காலத்தில் பொய் பேசும் வழக்கம் நம்மில் பெரும்பாலோரிடம் சாதாரணமாக காணப்படுகிறது. பொய் என்பது குற்றம் என்று போய், திறமை என்று ஒரு மாறிப்போனது. பொய் சொல்லலாம் ஆனால், அதை பொருத்தமான இடத்தில் சொல்ல வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. பொய் பேசி பழகிப்போனவர்களால் இந்தச் சமுதாயத்தில் குழப்பத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

 

பொய்யிலேயே ஊறிப்போனவன் பரிதாபத்திற்குரியவன். இவன் வார்த்தைகளை மக்கள் உடனே நம்ப மாட்டார்கள். இவன் மக்களின் வெறுப்புக்கும் முனிவுக்கும் ஆளாக கூடியவன். பொய் பேசுவது நம்பிக்கையை காயப்படுத்தும். கௌரவத்தை தகர்க்கும் செயலாகவும் உள்ளது. பொய் பேசும்போது வாய்க்கு இனிப்பாக இருந்த போதிலும், அதன் முடிவு கசப்பாகவும், நாற்றமுள்ளதாகவும் இருக்கும்.

 

சில நேரங்களில் மனிதன் வேடிக்கை பேசும் இடங்களில் பொய்யான செய்திகளை தருவதுண்டு. இதை தவறு என்று சொல்பவரோ, கேட்பவரோ நினைப்பதில்லை. ஏனெனில், பேசுவது வேடிக்கை. இதில் பொய்யான கற்பனையான சம்பவங்களை சித்தரிப்பது தவறொன்றுமில்லை என்று மனிதன் எண்ணுகிறான்.

 

இஸ்லாம் வேடிக்கையாகப் பேசுவதையும் சிரித்து மகிழ்வதையும் தடை செய்யவில்லை. இதயத்திற்கு இதமளிக்கும் இவற்றை அனுமதித்துள்ளது. ஆனால், வேடிக்கையும் மகிழ்வதும் உண்மை, நேர்மை இவற்றின் எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று போதிக்கிறது.

 

ஏமாற்றுதல்

 

ஏமாற்றுவதற்கன்றி ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. திருக்குர்ஆன்:- 4:120

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا ) யார் நம்மை ஏமாற்றுகிறாரோ அவன் நம்மைச் சார்ந்தவரல்லன். அறிவிப்பாளர்:- ஹுதைஃபா பின் அல்யமான் ரலி அவர்கள் நூல்:- தப்ரானீ, தாரீகுல் கபீர் இமாம் புகாரீ, மஜ்மஉஸ் ஸவாயித்

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ரோமானியப் பேரரசர் முஸ்லிம்களின் நடவடிக்கை அறிந்து வருவதற்கு இரண்டு ஒற்றர்களை அனுப்பி வைத்தார். அவ்விருவரும் பள்ளிவாசலுக்கோ மக்களின் குடியிருப்புகளுக்கோ வரவில்லை. கடைத்தெருவையேச் சுற்றிச் சுற்றி வந்தனர். சில நாள்கள் கழித்து திரும்பிய அவ்விருவரும் அரசரிடம், ( إنَّ الْمُسْلِمِينَ لَا يَخْدَعُونَ وَلَا يُخْدَعُونَ ) "முஸ்லிம்கள் ஏமாறுபவர்களாகவும் இல்லை; ஏமாற்றபவர்களாக இல்லை" என்று கூறினர்.

 

இதை செவியேற்ற அந்த அரசர், "நீங்கள் கூறுவது உண்மையானால், நான் கால் வைத்திருக்கும் இந்த இடத்தையும் அவர்கள் கைப்பற்றுவார்கள். அதுவும் வெகு தூரத்தில் இல்லை" என்று கூறினார்.

 

உலகளவில் குடும்ப ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏமாற்று வேலை பரவலாக்கிவிட்டது. ஏமாற்றுவதில் முதலாமானவன் ஷைத்தான் ஆவான். ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்கள் மற்றும் அவரது மனைவியையும் ஷைத்தான் ஏமாற்றித் தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினான் என்கிறது திருக்குர்ஆன். பிறரை ஏமாற்றும் பழக்கமுள்ளவர்கள் ஷைத்தானின் தோழர்கள் ஆவார்கள்.

 

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் ஏமாறுவதையும் ஏமாற்றுவதையும் இஸ்லாம் தவறென்று கண்டிக்கிறது.

 

திடுக்கிடச்  செய்தல்

 

நபித்தோழர்கள் கூறியதாவது: நாங்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் பயணம் மேற்கொண்டோம். அப்போது எங்களில் ஒருவர் உறங்கிவிட்டார். எங்களில் ஒருவர் (விளையாட்டுக்காக) அவரிடம் இருந்த கயிற்றை எடுத்துக்கொண்டார். (தூங்கிக் கொண்டிருந்த) அவர் (தமது கயிற்றை காணாது) பதற்றமடைந்தார்.

 

(இதைக்கண்ட) நபியவர்கள், ( لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا ) "ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமை பதற்றமடையச் செய்வது அனுமதிக்கப்பட்டதல்ல" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அப்துர் ரஹ்மான் பின் அபூலைலா (ரஹ்) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4351, முஸ்னது அஹ்மத்

 

ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் மற்றொருவரின் செருப்புகளை எடுத்து வைத்து மறைத்து வைத்தார். அவர் விளையாட்டிற்காகவே அதைச் செய்தார். இதைப்பற்றி கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே நபியவர்கள், ( لَا تُرَوِّعُوا الْمُسْلِمَ، فَإِنَّ رَوْعَةَ الْمُسْلِمِ ظُلْمٌ عَظِيمٌ )  "முஸ்லிமை திடுக்கிட செய்யாதீர்கள். ஏனெனில், ஒரு முஸ்லிமை திடுக்கிட செய்வது மாபெரும் அநீதமாகும்" என்று கூறினார்கள்.

 

மற்றொரு அறிவிப்பில் ஒரு மனிதர் மற்றொருவரின் செருப்புகளை எடுத்து வைத்து மறைத்து வைத்தார். அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( كَيْفَ بِرَوعْةِ الْمُؤْمِنِ ـ مَرَّتَيْنِ أَوْ ثَلاثًا ) "இரண்டு அல்லது மூன்று முறை ஒரு இறைநம்பிக்கையாளரை திடுக்கடச் செய்த தண்டனையை விட்டும் எப்படி தப்பிக்கப்போகிறீர்கள்" என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். நூல்:- தப்ரானீ, அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, பஸ்ஸார், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-532

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن رَوَّعَ مُؤْمِنًا، لَمْ يُؤَمِّنِ اللهُ رَوْعَتَهُ يَومَ الْقِيَامَةِ ) எவர் ஒரு இறைநம்பிக்கையாளரைப் திடுக்கிடச் செய்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் மறுமைநாளில் திடுக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கமாட்டான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, அல்காமில் இமாம் இப்னு அதிய்யி, ளயீஃப் அல்ஜாமிஉ-5604 இமாம் அல்பானீ

 

நாம் ஏதேனும் ஒன்றை செய்தோ அல்லது சொல்லியோ பிறரை திடுக்கிட செய்யும்போது அதனால் அவர் (மாரடைப்பு, பக்கவாதம் போன்ற) உடல் ரீதியாக பாதிக்கப்படலாம். அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். எனவே, இதைத் தவிர்த்துக்கொள்வதே நல்லது.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ ) எவருடைய நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றிருக்கிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். நூல்:- புகாரீ-10, முஸ்லிம்-65

 

விளையாட்டுக்காகவோ வேண்டுமென்றோ நம்மால் பிறருக்கு எந்த வகையிலும் சிரமமும் நஷ்டமும் ஏற்படக்கூடாது என்ற சிந்தனையோடு முஸ்லிம் வாழ வேண்டும் என்பதே இந்த நபிமொழி போதிக்கிறது.

 

ஏப்ரல் ஃபூல் போன்ற மடத்தனமான செயல்கள் அனைத்தும் மேலைநாட்டினர்களான நேர்வழி தவறிய யூத, கிறிஸ்தவர்களின் செயலாகும். இவர்களின் எந்த வழிமுறையையும் உலக முஸ்லிம்கள் பின்பற்றக்கூடாது என்பதையே தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.

 

எனவே நாம், திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி ஆகியவற்றின் வழிமுறையை கடைபிடித்து, கண்ணியமான முஸ்லிம்களாக வாழ அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!

 

(இந்தக் கட்டுரை சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 


No comments:

Post a Comment

நற்பணி புரிவோம்!

  நற்பணி   புரிவோம்!   وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ( இறைநம்பிக்கையாளர்களே!) நற்பணி செய்துகொண்டிருங்கள். அதனால் நீங்க...