Search This Blog

Wednesday, 25 June 2025

சமிக்ஞை போதும்!

 

சமிக்ஞை போதும்!

اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سٰجِدِيْنَ‏

யூசுஃப் (நபி, யஅகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி, ‘‘என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்'' என்று கூறினார். திருக்குர்ஆன்:- 12:4

 

ஒரு விஷயம் குறித்து பிறர் அறியாதிருக்க, சம்பந்தப்பட்டவருக்கு அது குறித்து ஜாடைமாடையாக சமிக்ஞையில் உணர்த்தப்படுவது உலக மரபு. அல்லாஹுத்தஆலாவும் மனிதர்களுக்கு அவ்வபோது சில இலாப நஷ்டங்கள் குறித்து சமிக்ஞை செய்கிறான். அறிந்தவர்கள் விழித்துக்கொள்கிறார்கள்; அறியாதவர்கள் அகப்பட்டுக்கொள்கிறார்கள்.

 

எளியவனை அடித்தால் அவனால் திருப்பி அடிக்க இயலாது. ஆனால், வலிமையுள்ளவனை கைவைத்தால் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான் என்பதையும், "ஆழம் தெரியாமல் காலைவிடக் கூடாது" என்பதையும் சமிக்ஞையால் உணர்த்தப்பட்டுள்ளார்கள்.

 

"கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்று வியாக்கியானம் பேசியவனைப்போல் ஆகிவிட்டார்கள்.

 

வருங்காலத்திலாவது அவர்கள் தமது ரவுடித்தனத்தைக் கைவிட்டால் நல்லது. இல்லையெனில் இதைவிட கடுமையான சேதாரத்தையும்,  இழிவையும் சந்திப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ ) இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6133

 

( الْعَاقِلُ تَكْفِيهِ الْإِشَارَةُ وَالْأَحْمَقُ لَا تَنْفَعُ مَعَهُ الْعِبَارَةُ ) புத்திசாலிக்கு சமிக்ஞையே போதுமானது. மடையனுக்கு வார்த்தையால் விவரித்தாலும் பயனளிக்காது.

 

நோய்கள் மூலம்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (கவர்னராக) அனுப்பி வைத்தார்கள். அப்போது அண்ணலார்,  ( اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ، فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ ) "அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை அஞ்சுங்கள். ஏனெனில், அவர் செய்யும் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2448, முஸ்லிம்-29, திர்மிதீ-1937

 

சவூதி அரேபியாவைச் சேர்ந்த அறிஞர் முஹம்மத் அப்துர் ரஹ்மான் அல்அரீஃபீ அவர்கள் கூறுகிறார்கள். எனது நண்பர் ஒருவர் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தவர். மிகுந்த இறையச்சமுடையவர். குர்ஆனைக்கொண்டு ஓதிப்பார்ப்பதில் தேர்ச்சிப்பெற்றவர்.

 

ஒருமுறை என்னிடம் அவர் தமது அனுபவம் ஒன்றை கூறினார்: என்னிடம் மிகப் பெரிய ஓர் வியாபாரி வந்து, "ஹள்ரத்! எனது இடக்கையில் மிகுந்த வலியாக உள்ளது. என்னால் இரவில் தூங்க முடியவில்லை. பகலில் சற்று இளைப்பாறகூட முடியவில்லை. இதற்காக நான் நிறைய மருத்துவர்களை ஆலோசித்து, நிறைய மருந்துகளையும் உட்கொண்டுவிட்டேன். அதனால் எந்த பயனும் கிடைக்கவில்லை. வலிதான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது எனது வாழ்க்கையையே துன்பமாக ஆக்கிவிட்டது. என்மீது கண்ணேறு பட்டிருக்கலாமோ, அல்லது என்மீது யாராவது மந்திரித்து ஊதிவிட்டிருக்கலாமோ என்று அஞ்சுகிறேன்" என்றார்.

 

நான் குர்ஆனின் பல வசனங்களைகொண்டு ஓதிவிட்டேன். இருப்பினும் அவருடைய நிலையில் மாற்றமில்லை. அவர் எனக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதே போன்று மூன்று முறை என்னிடத்தில் ஓதி பார்ப்பதற்கு வந்தார். நானும் எனக்குத்தெரிந்த வசனங்களையெல்லாம் ஓதிவிட்டு பார்த்தேன். இருப்பினும் அவருடைய நிலையில் மாற்றமில்லை. அவருடைய வலி மட்டும் அதிகரித்துக்கொண்டே போனது.

 

பிறகு இறுதியாக நான் அவரிடம், "உங்களுடைய இந்த வலி, நீங்கள் ஏற்கனவே செய்துவிட்ட பாவங்களுக்கான தண்டனையாக இருக்கலாம்; அல்லது நீங்கள் பலவீனர் யாருக்காவது அநியாயம் செய்திருக்கலாம்; அல்லது யாருடைய உரிமையையாவது பறித்திருக்கலாம்; அல்லது வேறு ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக உடனடியாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டு, நீங்கள் பிறரிடமிருந்து பறித்துக்கொண்ட உரிமைகளை அவர்களுக்கு உரிய முறையில் வழங்கிவிடுங்கள்; உங்களுடைய கடந்த காலப் பாவங்கள் அனைத்திற்கும் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள்" என்று கூறினேன்.

 

நான் சொன்னதை விரும்பாத அந்த வியாபாரி, "நான் ஒருபோதும் யாருக்கும்  அநியாயம் செய்யவில்லை; யாருடைய உரிமையிலும் வரம்புமீறவில்லை"  என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

 

பல நாட்களுக்குப் பிறகு நான் அவரை ஒருமுறை சந்தித்தேன். அவர் எந்த மருந்தும் சிகிச்சையும் இல்லாமல் தமது கை நலமாகிவிட்டதாக தெரிவித்தார். "அது எப்படி?" என்றேன். அவர், “ஹள்ரத்! நீங்கள் கூறியவற்றை நான் ஆழமாக சிந்தித்தேன். அப்போது என்னுடைய நினைவுக்கு ஒன்று வந்தது.

 

அதாவது, நான் எனது வீட்டை மாளிகையைப் போன்று கட்டிக்கொண்டிருந்தபோது எனது அந்த வீட்டுக்கு அருகில் ஒரு துண்டு நிலம் இருந்தது. நான் அதையும் என் நிலத்தோடு சேர்த்துக் கொண்டு என் வீட்டை மேலும் அழகுபடுத்த விரும்பினேன். அந்தத் துண்டு நிலம் ஒரு விதவைப் பெண்ணுக்குரியதாக இருந்தது. நான் அந்த நிலத்தை அப்பெண்ணிடம் விலைக்கு கேட்டேன். ஆனால், அப்பெண் தர மறுத்துவிட்டாள். இறுதியாக நான் என் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த துண்டு நிலத்தையும் கைப்பற்றிவிட்டேன். பிறகு அவள் அந்த நிலத்திற்கு அடிக்கடி வந்து, அங்கு கட்டடப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களிடம் சத்தமிடுவாள். அவர்களை வேலை செய்யவிடாமல் தடுக்க முயல்வாள். ஆனால், அவர்களோ அவளைப் பைத்தியக்காரி என நினைத்து கேலி செய்வார்கள். அவள் அங்கு வந்து அழுவாள். வானத்தை நோக்கிக் கைகளை ஏந்துவாள். நான் அதை என் கண்களால் கண்டுள்ளேன்.

 

ஒருவேளை அவள் இருள் சூழ்ந்த இரவுகளில் எனக்கு எதிராக செய்த பிரார்த்தனைதான் மிகக் கடுமையாக என்னை பாதித்துவிட்டது என்று நினைத்தேன். அவளைத் தேடி அலைந்து ஒரு வழியாக அவளைக் கண்டுபிடித்துவிட்டேன். நான் அவளை சந்தித்து, அழுது, என்னை மன்னிக்குமாறு கெஞ்சினேன். அவருடைய நிலத்திற்கான அபராதத் தொகையை அவள் பெற்றுக்கொள்ளச் சம்மதிக்கும் வரை, நான் அங்கேயே அமர்ந்துவிட்டேன். பிறகு அவள் என்னை மன்னித்து எனக்காகப் பிரார்த்தனை செய்தாள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவள் பிரார்த்தனைக்குப்பின் தன் கைகளைக் கீழே போட்டதும் என் கைகள் நலமடைந்ததை உணர்ந்தேன். மேலும், அவளுடைய பிரார்த்தனைதான் எந்த மருந்தும் குணப்படுத்த முடியாத என் கைகளைக் குணப்படுத்தியது" என மன உருக்கத்தோடு  கூறினார். நூல்:- இஸ்தம்திஃ பிஹயாதிக்க பக்கம்-238

 

எனவே, நாம் யாருக்கும் அநீதமிழைத்துவிடாமல் நம்மை தற்காத்துகொள்ள வேண்டும். அப்படியே நாம் ஏதோ ஒரு சூழ்நிலையில் அநீதமிழைத்துவிட்டாலும்கூட உடனே உஷாராகி அவனிடம் உரிய வகையில் மன்னிப்பு தேடிட வேண்டும். அவன் மனதார மன்னித்துவிட்டால் தப்பித்தோம். இல்லையெனில் நம் நிலை படுமோசமாகிவிடும் என்பதில் கவனம் தேவை.

 

நமக்கு ஏற்பட்டுள்ள தீராத நோய்க்கு வாழ்நாளில் நாம் பிறருக்கு செய்துவிட்ட அநீதம்கூட காரணமாக இருக்கலாம். எனவே, இது குறித்து நாம் யோசிக்க வேண்டும்.

 

கனவுகள் மூலம்

 

யூசுஃப் நபி தமது சிறுபிராயத்தில் ஓர் வித்தியாசமான கனவு ஒன்றைக் கண்டார். அதை தமது தந்தை யஅகூப் (அலை) அவர்களிடம் எடுத்துரைத்தார். அதாவது, எதிர்காலத்தில் இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்படுவார். அப்போது யூசுஃப் நபியின் பதினொரு சகோதரர்கள் யூசுஃப் நபியின் அதிகாரத்திற்கு அடிபணிந்து, மரியாதை கௌரவம் மற்றும் பாராட்டுக்காக அவர் முன் சிரம் பணிவார்கள். இவ்வாறு யூசுஃப் நபியின் எதிர்கால உயர்வை அல்லாஹுத்தஆலா அவருக்கு சிறுபிராயத்தில் கனவில் மூலம் சமிக்ஞையாக எடுத்துரைத்தான். இதையே தலைப்பில் காணும் திருவசனம் விவரிக்கிறது.

 

காலித் பின் சயீத் (ரலி) அவர்கள் கனவு ஒன்றைக் காணுகிறார்கள். ( أَنَّهُ وَقَفَ بِهِ عَلَى شَفِيرِ النَّارِ كَأَنَّ أَبَاهُ يَدْفَعُهُ مِنْهَا ، وَيَرَى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ آخِذٌ بِحَقْوَتِهِ لَا يَقَعُ ، فَفَزِعَ مِنْ نَوْمِهِ ، فَقَالَ : أَحْلِفُ بِاَللَّهِ أَنَّ هَذِهِ الرُّؤْيَا حَقٌّ ، فَلَقِيَ أَبَا بَكْرِ بْنَ أَبِي قُحَافَةَ فَذَكَرَ ذَلِكَ لَهُ ) அதில் அவர் நரகத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார். அவரது தந்தை அவரை நரகில் தள்ள முயற்சிக்கிறார். அதைக் கண்ட அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அவர் நரகில் விழாதவாறு அவரின் இடுப்பை பிடித்துக்கொள்கிறார்கள். இதற்குப் பிறகு திடுக்கிட்டு விழித்த காலித் பின் சயீத் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த கனவு உண்மையானதுதான்” என்று கூறிக்கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களை சந்தித்து நடந்ததைக் கூறினார்கள்.

 

அதற்குஅபூபக்ர் (ரலி) அவர்கள், ( أُرِيدُ بِك خَيْرٌ ، هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ ، فَاتَّبِعْهُ فَإِنَّكَ سَتَتْبَعُهُ وَتَدْخُلُ مَعَهُ فِي الْإِسْلَامِ ) “நான் உனக்கு நல்லதையே நாடுகிறேன். இதோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள். அவர்களை நீர் பின்பற்று. அவ்வாறு நீர் அவர்களைப் பின்பற்றிவிட்டால், நீர் அவர்களுடன் இஸ்லாத்தில் நுழைந்தவராகிவிடுவீர். (நீர் நரகில் விழாமல் அவர்கள் உன்னை பாதுகாப்பார்கள். ஆனால், உனது தந்தையோ நரகில் விழுந்துவிட்டார்)” என்று கூறினார்கள். அதன் பிறகு காலித் பின் சயீத் (ரலி) அவர்கள் நபியவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அறிவிப்பாளர்:- அம்ர் பின் உஸ்மான் (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், அல்பிதாயா வந்நிஹாயா

 

காலித் பின் சயீத் (ரலி) அவர்கள் இஸ்லாத்தில் ஏற்பதற்கு அவர்கள் கண்ட இந்த கனவே காரணமாக அமைந்தது.

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் ரஹ்மத், (நிஅமத் எனும்) அருள்வளம் பற்றிய திருவசனங்களை ஓதுவதாகக் கண்டால், அது அவருடைய நற்செயல்களை குறிக்கும். கோபம், தண்டனைகள், எச்சரிக்கைகள் பற்றிய திருவசனங்களை ஓதுவதாகக் கண்டால் அவர் பாவம் செய்து வருகிறார். அதிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்ற இறைவிருப்பத்தின் அச்சுறுத்தல்கள் என்று புரிந்துகொண்டு அவர் திருந்த முன் வர வேண்டும். நூல்:- தலீலுல் ஹைரானி ஃபீ தஃப்சீரில் அஹ்லாம் - முஹம்மத் அலீ குத்ப்

 

கனவுகளுக்கு விளக்கம் கூறுவதில் பேரறிஞராகத் திகழ்ந்த முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, "இமாம் அவர்களே! நான் கனவில் குர்ஆனின் நஸ்ர் (110 வது) அத்தியாயத்தை ஓதுவதாகக் கண்டேன்" என்றார். அதற்கு இமாம் அவர்கள், "உமது குடும்பத்தாரிடையே நண்பர்களிடையே கொடுக்கல் வாங்கல்களை சரிசெய்து கொள்வீராக. (வஸிய்யத் எனும்) இறுதி விருப்பம் ஏதேனும் தெரிவிக்க வேண்டியதிருந்தால் தெரிவித்துவிடுவீராக"  என்றார்கள். அவர் "ஏன்?" என்று கேட்டார். அதற்கு இமாம் அவர்கள், "வானத்திலிருந்து இறங்கிய அத்தியாயத்தில் கடைசி அத்தியாயம் 'அந்நஸ்ர்' ஆகும்" என்று கூறினார்கள்.

 

அதன்படி அந்தக் கனவு கண்டவரின் மரணம் வெகுசீக்கிரம் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்ல மரணமாக அமைந்தது. நூல்:- தலீலுல் ஹைரானி ஃபீ தஃப்சீரில் அஹ்லாம் - முஹம்மத் அலீ குத்ப்

 

இமாம் இப்னு சீரீன் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, “ஒரு கூஜாவிற்கு இரண்டு வாய்கள் இருக்கிறது. நான் அதில் ஒரு வாயில் தண்ணீர் குடிக்கும்போது அந்தத் தண்ணீர் சுவையாக இருக்கிறது. மற்றொரு வாயில் நான் தண்ணீர் குடிக்கும்போது அந்தத் தண்ணீர் உப்பாக இருக்கிறது” என்று கூறினார். அதற்கு இப்னு சீரீன் அவர்கள், “நீ அல்லாஹ்விற்கு பயந்துகொள்! நீ உனது மனைவியின் சகோதரியுடன் உறவுகொள்கிறாய். இதை தவிர்த்துவிடு!” என்றார்கள்.

 

பஸரா நகரத்தின் பேரறிஞர் இயாஸ் பின் முஆவியா (ரஹ்) அவர்கள் தமக்கு 76 வயது நிறைந்த அந்த வருடத்தில் ஒரு கனவு காண்கிறார். அதாவது, தாம் ஒரு குதிரையிலும் தமது தந்தை ஒரு குதிரையிலும் செல்லும்போது இருவரின் குதிரைகள் ஒரே மாதிரி செல்கின்றன. யாருடைய குதிரையும் ஒன்றையொன்று முந்தி செல்லவில்லை.

 

இவ்வாறு தான் கண்ட கனவின் விளக்கத்தையும் அறிந்திருந்தார். (அதாவது எனது தந்தை மரணம் அடைந்த அதே வயதில் நானும் மரணம் அடைவேன்.) இதைக் குறித்து தமது வீட்டாரிடம் சொல்லி வைத்துவிட்டார்.

 

இவரின் தந்தை முஆவியா 76 வது வயதில் மரணமடைந்தார். இவரும் 76 வயதை அடைந்துவிட்டார்.

 

தமது 76 வது வயது முடிகின்ற இறுதி இரவில், (அதாவது தமது வாழ்நாளின் இறுதி இரவு) இவர் தமது மனைவியிடம், "இந்த இரவு என்ன இரவு என்பதை நீ அறிவாயா? என்று கேட்டார். பிறகு எனது தந்தையின் வயதை நானும் பூர்த்தி செய்துவிட்டேன் என்று கூறிவிட்டு, இரவு படுத்தார். இவர் இறந்துவிட்டதை இவர் குடும்பத்தார் காலையில் அறிந்துகொண்டனர். இவர் தமது 76 வது வயதில் ஹிஜ்ரி 122 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

 

அறிஞர்  முஹம்மத் அலீ குத்ப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் தமது கனவில் குர்ஆனை வாங்குபவராகக் கண்டால், கல்வி ஞானத்தின் மூலம் அவர் மக்களிடம் பிரபல்யமாகுவார்.

ஒருவர் குர்ஆனை விற்பவராகக் கண்டால், உலக ஆசாபாசங்களுக்காக மார்க்கத்தின் நெறிகளிலிருந்து அவர் விலகுவதைக் குறிக்கிறது.

ஒருவர் குர்ஆனை எரிப்பதாகக் கண்டால், மார்க்கத்திலிருந்து அவர் வெளியேறி விடுவார்.

ஒருவர் குர்ஆனை திருடுவதாகக் கண்டால் அவர் தொழுகையைப் புறக்கணிப்பவராக இருப்பார்.

ஒருவர் தமது கையில் குர்ஆன் உள்ளது. அதை அவர் விரித்துப் பார்க்கும்போது உள்ளே வெற்றுக் காகிதங்கள் தான் தெரிகின்றன. இறைவசனங்கள் எதுவும் இல்லை என்பதாகக் கண்டால், அவர் உள்ளொன்றும் புறமொன்றும் பேசுபவராக இருப்பார். அல்லது அப்படி பேசுபவர்களுடன் அவர் இருக்கிறார் என்பதை உணர்த்துவதாகும். நூல்:- தலீலுல் ஹைரானி ஃபீ தஃப்சீரில் அஹ்லாம்

 

தவறைத் திருத்தும்போது

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதரைப் பற்றி (வெறுப்பான) செய்தி ஏதேனும் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு கிட்டினால், "இந்த மனிதருக்கு என்ன நேர்ந்தது? (இவ்விதம்) கூறுகிறாரே!" என்று கூற மாட்டார்கள். மாறாக,( مَا بَالُ أَقْوَامٍ يَقُولُونَ كَذَا وَكَذَا ) "சில கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இவ்வாறெல்லாம் கூறுகிறார்களே!" என்று தான் சொல்வார்கள். நூல் அபூதாவூத்-4156

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தாருக்கு நல்லொழுக்கம் கற்பிக்கும் சிறந்த ஆசானாக திகழ்ந்தார்கள். மக்களின் நலன்களைப் பாதுகாப்பார்கள். தவறிழைத்தவரின் மனதைப் புண்படுத்தி அவரை இழிவுக்குள்ளாக்க மாட்டார்கள். மக்களுக்கு மத்தியில் தவறிழைத்தவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் இவ்விதம் சொல்லுகிறார் அல்லது செய்கிறார் என்று சொல்லாமல் மக்களில் சிலர் அல்லது பலர் இவ்விதம் சொல்கின்றனர் அல்லது செய்கின்றனர் என்று பொதுவாகக் கூறிவிடுவார்கள். நபியவர்களின் சமிக்ஞையைப் புரிந்துகொண்டு சம்பந்தப்பட்டவர் தம்மை திருத்திக்கொள்வார்.

 

ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) ஆகிய இருவரும் ஒரு பெரியவர் (உளூ எனும்) அங்கத்தூய்மையை தவறாக செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். இருவருக்கும் அது பொறுக்க இயலவில்லை. அவரின் பிழையைச் சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால், அவரோ வயதில் மூத்தவராக இருக்கிறார். என்ன செய்வது? இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு அந்த பெரியவரை நெருங்கினார்கள்.

 

"பெரியவரே! நாங்கள் இருவரும் உளூ செய்கிறோம். அதை நாங்கள் சரியாகச் செய்கிறோமா? என்று நீங்கள் பார்த்து சொல்லுங்கள்" என்றனர். அவரும் சரி என்று சொல்லி, இருவரும் உளூச் செய்வதை கூர்ந்து பார்ப்பதில் தன் பிழை அவருக்கு புரிந்தது. அப்போது அவர், "குழந்தைகளே! நீங்கள் சரியாகத்தான் உளூச் செய்கிறீர்கள். நான்தான் பிழையாக செய்தேன். இனிமேல் அதை சரி செய்து கொள்கிறேன்" என்றார்.

 

நாம் செய்கின்ற தவறை ஜாடை மாடையாக சுட்டிக் காட்டப்படும்போது அதை புரிந்துக்கொண்டு உடனே திருத்திக்கொள்ள வேண்டும். அதுவே, நல்லவர்களின் பண்பாகும்.

 

நஷ்டங்கள் மூலம்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلاَّ فَشَا فِيهِمُ الطَّاعُونُ وَالأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلاَفِهِمُ الَّذِينَ مَضَوْا )  எந்த ஒரு கூட்டத்தினரிடம் ஒழுக்கக்கேடான தீங்குகள் தோன்றி அவற்றை அவர்கள் வெளிப்படையாகச் செய்யும் அளவுக்குப் போய்விட்டால், கொள்ளைநோயும் முன் வாழ்ந்த அவர்களின் முன்னோர்களுக்கிடையே ஏற்பட்டிராத விதவிதமான நோய்களும் அவர்களிடையே நிச்சயம் பரவும்.

 

( وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلاَّ أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَؤُنَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ ) அவர்கள் எடை அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யும்போது பஞ்சம், கடும் நெருக்கடி, நாடாளும் மன்னரின் அடக்குமுறை ஆகியவற்றின் பிடியில் சிக்குவார்கள்.

 

( وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلاَّ مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ وَلَوْلاَ الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا ) அந்த சமூக மக்கள் தமது செல்வங்களுக்கான (ஸகாத் எனும்) கட்டாயக் கொடையை வழங்காமல் தம்மிடம் வைத்துக் கொள்வார்கள். அதன் விளைவாக வான் மழை பொழிவது நிறுத்தப்பட்டு விடும். கால்நடைகள் மற்றும் இல்லாதிருந்தால் மழை பொழிவது முற்றிலும் நின்றுபோகும்.

 

( وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلاَّ سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ ) அந்த மக்கள் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தையும் அவனது தூதரின் ஒப்பந்தத்தை முறித்து விடும்போது அல்லாஹ், அவர்களின் மீது மற்றவர்களிலிருந்து பகைவர்களை ஏற்படுத்தி அடக்கி ஆளச் செய்வான். எனவே பகைவர்கள், அவர்களின் கைவசம் இருக்கும் சிலவற்றையும் பறித்து கொள்வார்கள்.

 

( وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلاَّ جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ )  அந்த சமூகத்தாரின் தலைவர்கள் அல்லாஹ்வின் வேதத்தின்படி தீர்ப்பு வழங்காமல் அல்லாஹ் தமக்கு அருளியவற்றை தேர்ந்தெடுக்காமல் செயல்படும்போது அவர்களில் சிலரை சிலருக்குப் பகைவர்களாய் ஆக்கிவிடுவான். (அதனால் பிளவுகள் தோன்றும் இறைவேதனை இறங்கும்.) அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4009, ஹுல்யத்துல் அவ்லியா இமாம் அபூநயீம், ஹாக்கிம், தப்ரானீ, ஸஹீஹ் ஜாமிஉ-7978 

 

பாவச்செயல்கள் ஆற்றுவது சோதனைகளையும் தண்டனையும் உருவாக்கித் தரும் என்று இந்த நபிமொழி எச்சரிக்கிறது.

 

அப்துல்லாஹ் பின் ஹவாலா அல்அஸ்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தமது (சிறப்பிற்குரிய) கையை என்னுடைய தலையில் வைத்து, ( يَا ابْنَ حَوَالَةَ إِذَا رَأَيْتَ الْخِلاَفَةَ قَدْ نَزَلَتْ أَرْضَ الْمُقَدَّسَةِ فَقَدْ دَنَتِ الزَّلاَزِلُ وَالْبَلاَبِلُ وَالأُمُورُ الْعِظَامُ، وَالسَّاعَةُ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنَ النَّاسِ مِنْ يَدِي هَذِهِ مِنْ رَأْسِكَ ) "ஹவாலாவின் மகனே! (பொதுவான) அரசு, புனித (ஷாம்) பூமியில் அமையக் கண்டால் பூகம்பமும், கவலைகளும், துக்கங்களும் போன்ற மிகப்பெரிய காரியங்களும் (ஒன்றன்பின் ஒன்றாக) நெருக்கமாகவே நடந்தேறும். மறுமைநாள் (அடையாளங்கள்) உனது தலையில் உள்ள இந்த என் கையைவிட அந்நாளில் மக்களுக்கு மிக நெருக்கமாக நிகழும் (என்பதை அறிந்துக்கொள்!)" என்று கூறினார்கள்.  அபூதாவூத்-2173

 

மனிதனிடம் பாவங்கள் அதிகரிக்கும்போது அல்லாஹ் இந்த உலகத்தை அழிப்பதற்கு ஆயத்தமாகிவிடுகிறான். அதன் துவக்கமாக நிலநடுக்கங்கள் ஏற்படலாம். எனவே, இந்த நிலநடுக்கங்கள் மூலம் மனிதன் படிப்பினை பெற்று, தம்மை திருத்திக்கொள்ள முயல வேண்டும்.

 

மனிதனுக்கு ஏற்படும் கவலைகள், நஷ்டங்கள், அழிவுகள் என அனைத்தும் அவன் ஆற்றிய வினைக்கு எதிர்வினையாகக்கூட இருக்கலாம் என்று இஸ்லாம் இயம்புகிறது.

 

தாபியீன்களில் ஒருவருமான ஃபள்ல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைப்படி நடப்பதில் நான் குறைவு செய்யும்போது அதன் பிரதிபலிப்பை என் மனைவி, அடிமைகள் மற்றும் எனது வாகனமான கால்நடைகளில் கண்டு கொள்வேன். அதாவது, அல்லாஹ்வின் கட்டளைகளை செயல்படுத்துவதில் நான் சோம்பல் செய்யும்போது எனக்கு கீழ் இருப்பவர்கள் எனக்குரிய கடமையை நிறைவேற்றுவதில் குறை செய்வார்கள்.

 

ஏராளமான இலாபங்களை தந்த தொழில்துறை, தற்போது நஷ்டத்தை தருகிறது என்றால் அதற்கு நமது பாவச்செயலே காரணம் என்று உணர்த்தப்படுவதாக எண்ணவேண்டும்.

 

நம்முடைய வாழ்க்கையில் சமிக்ஞையால் உணர்த்தப்படுவதை அறிந்துகொள்ளும் புத்திசாலிகளாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 


No comments:

Post a Comment

எண்ணம்போல்…

  எண்ணம்போல் …   إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا ( நடுவர்களாகிய) அவ்விருவ...