Search This Blog

Thursday, 27 February 2025

உடலும் உள்ளமும் நலம் பெற...

 

 உடலும் உள்ளமும் நலம் பெற...

 


وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

நீங்கள் அறிந்தவர்களாயின், நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது ஆகும். திருக்குர்ஆன்:- 2:184

 

நோன்பு எனும் கடமை மனிதனுக்கு மாபெரும் மருத்துவமாக அமையப் பெற்றுள்ளது. மனிதனுக்கு, நோன்பின் மூலம் உடலும் உள்ளமும் சார்ந்த ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்பதே இறைவனின் நோக்கமாகும்.

 

ஹிஜ்ரத் நடைபெற்று 18 மாதங்களுக்கு பின்னரே நோன்பு கடமையானது. அதே மாதத்தில் பத்ருப் போர் நடைபெற்றது. போரில் கலந்துகொண்ட நபித்தோழர்கள் அனைவரும் நோன்பு நோற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَصُومُوا تَصِحُّوا ) நோன்பு நோற்று வாருங்கள்; (அதன்மூலம்) உடல் ஆரோக்கியம் பெற்றுக்கொள்வீர்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ

 

தொடர் நோன்பு

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர் நோன்பு நோற்பார்கள். மக்களும் அவ்வாறு செய்தனர். இது மக்களுக்கு சிரமத்தைக் கொடுத்தது. அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்கள் தொடர் நோன்பு நோற்க தடை விதித்தார்கள். நபித்தோழர்கள், ( إِنَّكَ  تُوَاصِلُ‏  ) "(நாயகமே!) நீங்கள் மட்டும் தொடர் நோன்பு நோற்கிறீர்கள்?" என வினவினர். அதற்கு அவர்கள், ( لَسْتُ كَهَيْئَتِكُمْ، إِنِّي أَظَلُّ أُطْعَمُ وَأُسْقَى  ) "நான் உங்களைப் போன்றவன் அல்லன். இறைவனிடமிருந்து உண்ணவும் பருகவும் எனக்கு வழங்க்கப்படுகிறது." என்று பதிலளித்தார்கள். நூல் புகாரீ-1922

 

நோன்பின் மாண்புகளை நன்கு விளங்கிக்கொண்ட நபித்தோழர்கள் நோன்பு நோற்பதில் அதிக ஆர்வம் காட்டினர்.

 

எவ்வளவு பெரிய கட்டுமஸ்தான உடல்வாகு பெற்றவராக இருந்தாலும், அவர் தொடர் நோன்பு நோற்றால் அவரின் உடல் பலகீனமடையும் என்பதே யதார்த்தம். இதனால்தான் தொடர் நோன்பு நோற்க  வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது.

 

சிரமப்பட வேண்டாம்

 

ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும். திருக்குர்ஆன்:- 2:185

 

அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் (இருந்து) வந்தேன். பிறகு அங்கிருந்து சென்றுவிட்டேன். மீண்டும் ஒரு ஆண்டு கழித்து நபியவர்களிடம் வந்தேன். அப்போது என்னுடைய உடல் நிலையும் தோற்றமும் சற்று மாறுபட்டிருந்தது. நான் நபியவர்களிடம், "நாயகமே! என்னை தாங்கள் அறிகின்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ( وَمَنْ أَنْتَ ) "நீ யார்?" என்று வினவினார்கள். அப்போது நான், "நான்தான் (அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ்) அல்பாஹிலீ ஆவேன். நான் சென்ற ஆண்டு தங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறினேன்.

 

அப்போது நபியவர்கள், ( فَمَا غَيَّرَكَ وَقَدْ كُنْتَ حَسَنَ الْهَيْئَةِ )  "நீ அழகிய தோற்றத்தில் இருந்தாயே! உன்னை இவ்வாறு மாற்றியது எது?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "(சென்ற ஆண்டு) உங்களிடம் இருந்து நான் பிரிந்து சென்றதிலிருந்து இரவில் மட்டும்தான் உண்ணுகிறேன். (தொடர் நோன்பு நோற்க்கிறேன்)" என்று கூறினேன்.

 

அப்போது நபியவர்கள், ( لِمَ عَذَّبْتَ نَفْسَكَ ) "உன்னை நீயே ஏன் வேதனை செய்து கொள்கிறாய்?" என்று கூறிவிட்டு, ( صُمْ شَهْرَ الصَّبْرِ وَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ )   "பொறுமையின் மாதம் (ரமளான் மாதம் முழுவதும்) நோன்பு நோற்பீராக! பிறகு மாதந்தோறும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-2073

 

நோன்பு நன்மைக்குரிய செயலாக இருந்தாலும் அதற்கும் ஓர் அளவு உண்டு. நாம் அதன் அளவை மீறும்போது, நம்மை அது பலகீனம் ஆக்கிவிடும். எனவே, நாம் அதை நடுத்தரத்துடன் கையாளும்போது, அது நமது இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காது. அதிகப்படியான நோன்பின் மூலம் நம்மை நாமே துன்புறுத்திக் கொள்வது, அதாவது ஆரோக்கியக்கேட்டை உண்டாக்கிக் கொள்வது முறையல்ல.

 

எனவே, அல்லாஹ் நோன்பை விதியாக்கி, அடியார்களுக்கு கஷ்டத்தைத் தர நாடவில்லை என்பது தெளிவாகிறது.

 

தளர்த்தப்பட்ட சட்டம்

 

ஒருநாள் உமர் (ரலி) அவர்கள் இஷாவுக்குப் பின் தம் மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டுவிட்டார்கள். இது மறதியாக நடந்துவிட்டது. மறுநாள் காலையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததை தெரிவித்தார்கள். இவர்களைத் தொடர்ந்து வேறு நபித்தோழர்களும் இதையே தெரிவித்தார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

ஒருசமயம் கைஸ் பின் சிர்மா (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார். நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தனது மனைவிடம், ( أَعِنْدَكِ طَعَامٌ  ) "உன்னிடம் உணவு ஏதும் இருக்கிறதா?" எனக் கேட்டார். அவர், "இல்லை" என்று கூறிவிட்டு, இருந்தாலும் ( فَأَطْلُبُ لَكَ  ) "உங்களுக்காக நான் உணவு தேடி எடுத்து வருகிறேன்" எனக் கூறிச் சென்றார்.

 

கைஸ் பின் சிர்மா (ரலி) அவர்கள் அன்றய தினம் கூலி வேலை செய்திருந்த காரணத்தால் உறக்கம் மேலிட்டு தூங்கிவிட்டார்கள். அவருடைய மனைவி உணவு எடுத்துக்கொண்டு வந்த போது தூங்கும் தன் கணவரை எழுப்பி ( خَيْبَةً لَكَ ) "உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது" என்று கூறினார்கள். (காரணம் உறங்கிவிட்டாலே அடுத்த நோன்பு ஆரம்பம் என்ற நிலை இருந்தது)

 

நண்பகலானதும் கைஸ் (ரலி) அவர்கள் மூர்ச்சையுற்றார். இது குறித்து பெருமானார் (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அப்போது தான் "நோன்பு கால இரவுகளில் உங்கள் மனைவியருடன் கூடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது." என்ற வசனமும் பின் வரும் வசனமும் அருளப்பெற்றது.

 

"இன்னும் ஃபஜ்ர் (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல், (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள் பருகுங்கள்" (2:187) இவ்வாறு கொடுக்கப்பட்ட சலுகைகள் காரணமாக நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனர் அறிவிப்பாளர்:- பராஉ (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1915

 

இஸ்லாத்தின் ஆரம்ப நாள்கள் மஃரிப் முதல் இஷா வரை உண்ணுவதும், பருகுவதும், உறவு கொள்வதும் முடித்துக்கொள்ளப்பட வேண்டும். இஷா வந்துவிட்டால் மறுநாளின் நோன்பு துவங்கிவிடும் என்ற சட்டமிருந்தது. அது, பிறகு மாற்றப்பட்டுவிட்டது.

 

சலுகைகள் உண்டு

 

(நோன்பு நோற்க வேண்டும் என்ற விதி ரமளான் எனும்) குறிப்பிட்ட சில நாள்களில்தான். ஆனால், (அந்நாள்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாள்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாள்களில் கணக்கிட்டு (நோற்று)க்கொள்ள வேண்டும். நோன்பு நோற்கச் சிரமப்படுகிறவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். திருக்குர்ஆன்:- 2:184

 

அல்லாஹ், நோன்பு நோற்க இயலாதவர்களுக்கு நிபந்தனையுடன் சலுகை வழங்குகிறான்.

 

அனஸ் (ரலி) அவர்கள் முதுமையடைந்துவிட்ட பின்னால், “ஓராண்டு' அல்லது “ஈராண்டுகள்' ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு ரொட்டி மற்றும் இறைச்சியை உண்ணக் கொடுத்து (பரிகாரம் தேடிக்கொண்டு) நோன்பை விட்டுவிட்டார்கள்.

 

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். தள்ளாத முதியவராயிருந்து அவரால் நோன்பு நோற்க இயலவில்லையென்றால், (நோன்பைக் கைவிட்டதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். நூல்:- புகாரீ-4505

 

பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நோன்பு நோற்க சக்தியற்ற தள்ளாத முதியவருக்கு நோன்பு நோற்காமல் இருக்க சலுகை உண்டு. அவர் அதை களா செய்ய வேண்டிய தேவையில்லை. ஏனெனில், அதை களா செய்வதற்கான அவகாசம் அவருக்கு கிடைக்கும் என்று சொல்லமுடியாது. ஆயினும், அவர் பொருளாதார வசதி படைத்தவராக இருந்தால், அவர் நோற்கமுடியாமல் போன ஒவ்வொரு நோன்புக்காகவும் ஓர் ஏழைக்கு உணவளிப்பது அவருக்குக் கடமையாகும். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

மேற்காணும் இறைவசனம் மற்றொரு விசயத்தையும் நமக்கு எடுத்துச்சொல்கிறது. கடமை என்பதில் ஒத்திருந்தாலும் தொழுகை போன்று நோன்பும் எந்நிலையிலும் நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற தரத்தில் வைக்கப்பட்டவில்லை. நோயாளியாக இருந்தாலோ, பயணம் மேற்கொண்டிருந்தாலோ ரமளானல்லாத வேறு மாதங்களில் தவறவிட்ட நோன்பை நிறைவேற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

உடல்காக்கும் உண்ணாமை

 

ஒருமுறை கலீஃபா ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்கள் திறமையான நான்கு மருத்துவர்களை அவைக்கு அழைத்தார். “எவ்வித நோயும் உண்டாக்காத மருந்து எது?” என அவர்களிடம் வினவினார்.

 

ஒவ்வொருவரும் வெவ்வேறு மருந்துகளை கூறினர். மிக ஆழிய அறிவும் அனுபவமும் பெற்றிருந்த அவர்களில் ஒருவர், "நோன்பு தான்" என்றார். இதைக் கேட்ட கலீஃபா அகமகிழ்ந்து "உண்மை உரைத்தீர்" எனப் பாராட்டினார்.

 

இயற்கை மருத்துவத்தில் "உண்ணாமை" என்பது மருத்துவம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ( FASTING IS MESICINE )

 

முப்பது நாள்கள் நோன்பிருப்பதால் உடல் பலவீனம் அடைகிறது என்பது தவறான கருத்து என்று டாக்டர் "சூ" கூறுகிறார். உணவில்லாததால் இறந்து விட்டவர்களைவிட, வேண்டாத வேளைகளில் உணவுண்டு இறந்தவர்கள் அதிகம் என்றும் அவர் கூறுகிறார்.

 

ஒரு நாளைக்கு இருமுறை மலம் கழித்தல்.

ஒரு வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்தல்.

ஒரு மாதத்திற்கு இருமுறை நோன்பு நோற்றல்.

ஒரு வருடத்திற்கு இருமுறை குடலை சுத்தப்படுத்த பேதிக்கு மருந்து உட்கொள்ளல் அவசியம் என்கிறது நாட்டு வைத்தியம்.

 

ஆய்வின் முடிவு

 

உலகறிந்த உயிரியல் விஞ்ஞானி பேராசிரியர் "ஹக்ஸ்ஸி" சில மண் புழுக்களை வைத்து ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டார். அவற்றுக்கு விருப்பமான வழக்கமான உணவை கொடுத்து வந்தார். ஒரே ஒரு மண் புழுவை மட்டும் தனியாக எடுத்து ஒருவேளை உணவும் மறுவேளை பட்டினியுமாக வளர்த்து வந்தார்.

 

தொடர்ந்து உணவு சாப்பிட்டு வந்த மண் புழுக்கள் அழிந்துவிட்டன. ஆனால் ஒருமுறை மட்டும் உணவு கொடுக்கப்பட்டு வளர்ந்த மண்புழு 19 வது தலைமுறை வந்த பின்பும் உயிர் வாழ்ந்ததாக கூறினார்.

 

இந்த ஆய்வு நோன்பிருப்பதால் மனித வாழ்நாள் அதிகமாகும் என்பதை நிரூபிக்கிறது.

 

பேராசிரியர் "சைல்டு" இளமையோடு இருப்பதற்கு நோன்பு உதவி செய்வதாக கூறுகிறார்.

 

இரைப்பையை உள்ளடக்கிய பல்வேறு உறுப்புகளை இணைத்து வடிவமைக்கப்பட்ட இயந்திரம் தான் மனித உடல். இவ்வுடல் 12 மாதங்கள் இடைவிடாது பணியாற்றுகிறது. நோன்பு நோற்பதன் மூலம் சற்று ஓய்வு கிடைக்க வழி ஏற்படுகிறது. இதனால் இழந்த பலனை மீட்டுக்கொள்ளவும் நீண்ட நாள்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் முடிகிறது.

 

நோன்பால் உண்டாகும் சில பலன்கள்

 

 1) அதிக இரத்த அழுத்தம் குறைகிறது.      

2) இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவு குறைகிறது.                   

3) இதய அடைப்பு உருவாகுவதை தடுக்கிறது.                 

4) இரத்தத்தில் சக்கரை அளவு குறைகிறது.                  

5) மூட்டுவலி மற்றும் ஆஸ்துமாவைக் குறைக்கிறது.              

6) உடல் பருமன், தலைவலி, மலச்சிக்கல், தோல் வியாதி போன்றவற்றையும் வராமல் தடுக்கிறது.

 

ஆக, உடலும் உள்ளமும் செம்மை பெற்று, அல்லாஹ்வின் அன்பைப் பெற நோன்பு ஒரு சிறந்த வழியாகும்.

 

 உணவில் கவனம்

 

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்துவரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். ஆகவே, (ஒருநாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய சாப்பிட்டார்.

 

இப்னு உமர் (ரலி) அவர்கள், (   يَا نَافِعُ لاَ تُدْخِلْ هَذَا عَلَىَّ  ) "நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ( الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ  ) 'இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளரோ ஏழு குடல்களில் சாப்பிடுவார்' என்று கூறுவதை நாம் கேட்டிருக்கிறேன்" என்று சொன்னார்கள். நூல்:- புகாரீ-5393

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مَلأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلاَتٌ يُقِمْنَ صُلْبَهُ فَإِنْ كَانَ لاَ مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ  ) மனிதன் நிரப்புகின்றன பைகளில் வயிற்றைவிடத் தீங்கானது ஒன்றுமில்லை. மனிதனுக்கு அவனது முதுகெலும்பை நிமிர்த்துகின்ற சில கவளங்கள் உணவே போதும்‌. அவனையும் மீறி அவன் மனம் ஆசைப்பட்டால் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதி உணவுக்காகவும், இன்னொரு பகுதி பானத்துக்காகவும், மற்றொரு பகுதி மூச்சு விடுவதற்காகவும் ஒதுங்கிக் கொள்ளட்டும். அறிவிப்பாளர்:- மிக்தாம் பின் மஅதிகரீப் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ, நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்

 

ஓர் இறைநம்பிக்கையாளர் இறைக்கட்டளையை மதித்து ஹலால் - ஹராமைப் பேணி, அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளை மட்டுமே உண்பார். மாறாக, இறைமறுப்பாளர் மனம் விரும்பும் எதையும் விதிவிலக்கே இல்லாமல் உண்பார் என்பது ஒரு விளக்கம்.

 

அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளையே ஆயினும் ஓர் இறைநம்பிக்கையாளர் அளவோடு உண்பார். அப்போதுதான் வணக்க வழிபாடுகளில் ஈடுபடவும், அதிகமாக உண்பதால் ஏற்படும் விளைவுகளிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளவும் அவருக்கு வசதியாக இருக்கும்; இறைமறுப்பாளர் நிலை அவ்வாறன்று. அவன் வரைமுறையின்றி வயிறு புடைக்க உண்பான் என்பது மற்றொரு விளக்கம்.

 

நோன்பிற்குரிய சஹ்ர் - இஃப்தார் ஆகிய இரு வேளையிலும் இஸ்லாம் கூறுகின்ற உணவு முறைகளைப் பேணிவந்தால் நிச்சயமாக நோன்பு தீராத நோய்களைத் தீர்த்துவைக்கும் என்பதில் ஐயமில்லை.

 

மாறாக, அந்த இரு வேளையிலும் இரசாயனம் கலக்கப்பட்ட உணவுகள் பானங்கள், அதிகப்படியான எண்ணெய் பண்டங்கள், அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றை உட்கொள்வதையே பழக்கமாக்கி கொண்டால், நோன்பு உடல் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தராது.

 

சுருங்கக்கூறின்: நோன்பு விஷயத்தில் மனிதனின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டே, தொடர் நோன்பு வேண்டாம் என்றும், அதிக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், இலகுவை நாடி, சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளது என்றும், சலுகைகள் தரப்பட்டுள்ளது என்றும் இஸ்லாம் இயம்புகிறது.

 

எனவே, நாம் உடலும் உள்ளமும் நலம் பெறும் விதத்தில், இஸ்லாம் கூறுகிற முறைப்படி நோன்பு நோற்று, உடல் ஆரோக்கியம் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்:- 9840535951

 


No comments:

Post a Comment

மரண வேதனை

  மரண வேதனை   وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ மரணத்தின் சிரமம் மெய்யாகவே வந்துவிடும் சமயத்தில...