Search This Blog

Monday, 25 September 2023

மண்ணறை வாழ்க்கை

 

மண்ணறை வாழ்க்கை

 

يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَيُضِلُّ اللَّهُ الظَّالِمِينَ وَيَفْعَلُ اللَّهُ مَا يَشَاءُ

 

இறைநம்பிக்கையாளர்களை உறுதியான சொல் மூலம் இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகின்றான். அநியாயக்காரர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அல்லாஹ் விட்டுவிடுகிறான். அல்லாஹ் தான் நாடுவதைச் செய்வான். (அதனை தடை செய்ய எவராலும் முடியாது.) திருக்குர்ஆன்:- 14:27

 

மனிதர்கள் அனைவரும் ஒருநாள் மரணத்தை அடைந்தே தீர வேண்டும். மன்னாதி மன்னராக இருந்தாலும் சரி! சாமானியனாக இருந்தாலும் சரி ஒருநாள் மரணித்துத்தான் ஆக வேண்டும். அவ்வாற மனிதன் மரணித்தப்பிறகு, அவனின் குடும்பத்தினர் அவனை எவ்வளவு சீக்கிரம் அடக்கம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் அடக்கம் செய்துவிட்டு வந்துவிடுவார்கள்.

 

குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் என புடைசூழ வாழ்ந்தவர், மரணித்தபின் யாரும் துணைக்கில்லாத தன்னந்தனி ஆளாக மண்ணறையில் வைத்து அடக்கம் செய்யப்படுவார்.

 

ஏக இறைவன் அல்லாஹுத்தஆலா இந்த உலக வாழ்க்கைக்கும் மறு உலக வாழ்க்கைக்கும் மத்தியில் (ஆலமுல் பர்ஸக் எனும்) மண்ணறை வாழ்க்கை என்ற ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறான். அதாவது, மனிதன் மரணத்திற்கு பிறகு மண்ணறை வாழ்க்கையை கடந்து மறுமை வாழ்க்கைக்கு செல்லவேண்டும்.

 

மனிதர்களுக்கு மண்ணறை வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள் உண்டு. இதுவே, இறைநம்பிக்கையாகும். பிரேதம் மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டபின், அது சந்திக்கும் நிகழ்வுகள் என்னவென்பதை இஸ்லாமிய மார்க்கம் அழகாக பேசுகிறது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّمَا القَبْرُ رَوْضَةٌ مِنْ رِيَاضِ الجَنَّةِ أَوْ حُفْرَةٌ مِنْ حُفَرِ النَّارِ ) மண்ணறை என்பது சொர்க்கப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாகவோ அல்லது நரக படுகுழிகளில் ஒரு படுகுழியாகவோ இருக்கும். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2384

 

பாதுகாப்புக் கோருங்கள்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தாம் தொழுகின்ற எந்தத் தொழுகையிலும் மண்ணறையின் (கப்ரு) வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக்கோராமல் இருந்ததேயில்லை. நூல்:- புகாரீ-1372

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ النَّارِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ ) “இறைவா! நான் மண்ணறையின் வேதனை, நரக வேதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை, மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்எனப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். நூல்:- புகாரீ-1377, நசாயீ-2033

 

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் பனுந் நஜ்ஜார் குலத்தாருக்குச் சொந்தமான தோட்டமொன்றில் தமது கோவேறு கழுதையின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களுடன் நாங்களும் இருந்தோம். அப்போது அவர்களது கோவேறு கழுதை அவர்களை தூக்கியெறியும் அளவுக்கு வெருண்டோடியது.

 

அங்கு ஐந்து அல்லது ஆறு மண்ணறைகள் இருந்தன. அப்போது நபியவர்கள், ( مَنْ يَعْرِفُ أَصْحَابَ هَذِهِ الأَقْبُرِ ) "இந்த மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களைப் பற்றி யார் அறிவார்?" என்று கேட்டார்கள். ஒரு மனிதர், "நான் (அறிவேன்)" என்றார். நபியவர்கள், "இவர்கள் எப்போது இறந்தார்கள்?" என்று கேட்டார்கள். அவர் "இணைவைப்பு (கோலோச்சியிருந்த அறியாமை)க் காலத்தில் இறந்தனர்" என்று பதிலளித்தார். அப்போது நபியவர்கள், (  إِنَّ هَذِهِ الأُمَّةَ تُبْتَلَى فِي قُبُورِهَا فَلَوْلاَ أَنْ لاَ تَدَافَنُوا لَدَعَوْتُ اللَّهَ أَنْ يُسْمِعَكُمْ مِنْ  عَذَابِ الْقَبْرِ الَّذِي أَسْمَعُ مِنْهُ ‏ ) "இந்த சமுதாயம் மண்ணறைகளில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் (இறந்தவர்களைப்) புதைக்காமல் விட்டுவிடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின் நான் செவியுறும் மண்ணறையின் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருப்பேன்" என்று கூறினார்கள்.

 

பிறகு நபியவர்கள், ( تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ القَبْرِ ) "மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்றார்கள். மக்கள், "மண்ணறையின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறோம்" என்று கூறினர். நூல்:- முஸ்லிம்-5502, நசாயீ-2031

 

கேள்விக்கு பதில்

 

அநீதியாளர்கள் மரண வேதனையில் இருக்கும்போது அவர்களை நோக்கி வானவர்கள் தம் கரங்களை நீட்டி, “உங்கள் உயிரை நீங்களே வெளியேற்றுங்கள்; இன்று உங்களுக்கு இழிவுதரும் வேதனையே வழங்கப்படும்என்று கூறுவதை (நபியே!) நீர் கண்டால் (அவர்களின் கதி என்ன என்பது தெரியும்.) திருக்குர்ஆன்:- 6:93

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மண்ணறையில் அடக்கப்பட்ட மனிதரிடம் இரண்டு வானவர்கள் வந்து அவரை அமர வைப்பார்கள். பிறகு அவ்வானவர்கள் அவரிடம், ( مَنْ رَبُّكَ ) "உன்னுடைய இறைவன் யார்?" என்று கேட்பார்கள். அதற்கு அவர், ( رَبِّيَ اللَّهُ ‏ )"என்னுடைய இறைவன் அல்லாஹ்" என்பார். ( مَا دِينُكَ ) "உன்னுடைய மார்க்கம் எது?" என்று கேட்பார்கள். அதற்கு அவர், (ينِي الإِسْلاَمُ  ‏ ) "என்னுடைய மார்க்கம் இஸ்லாம்" என்பார். பிறகு, ( مَا هَذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ ) "உங்களுக்கிடையில் தூதராக அனுப்பப்பட்ட இந்த மனிதர் யார்? என்று (முஹம்மத் - ஸல் அவர்களைக் குறித்து) வினவுவார்கள். அதற்கு அவர், ( هُوَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ) "அவர்கள் தான் அல்லாஹ்வின் தூதர் ஆவார்" என்பார். பிறகு அவ்விரு வானவர்களும், وَمَا يُدْرِيكَ )  ) "நீர் (கூறிய பதில்களை) எவ்விதம் தெரிந்து கொண்டீர்?" என்று கேட்பார்கள். அதற்கு அவர்,(  قَرَأْتُ كِتَابَ اللَّهِ فَآمَنْتُ بِهِ وَصَدَّقْتُ   ) "நான் இறைவேதமாம் குர்ஆனை ஓதினேன். அதனை நம்பிக்கைக்கொண்டு உண்மைப்படுத்தினேன்" என்பார்.

 

பிறகு வானத்திலிருந்து அழைப்பாளர் ஒருவர், ( أَنْ قَدْ صَدَقَ عَبْدِي فَأَفْرِشُوهُ مِنَ الْجَنَّةِ، وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ وَأَلْبِسُوهُ مِنَ الْجَنَّةِ ) "என்னுடைய அடியார் உண்மை கூறிவிட்டார். எனவே சொர்க்க விரிப்பை அவருக்காக விரியுங்கள். சொர்க்கத்தை நோக்கி ஒரு கதவை அவருக்காக திறந்து வையுங்கள். சொர்க்கத்திலிருந்து ஆடையை அவருக்கு அணுவியுங்கள்" என்று கூறுவார். எனவே, அவருக்கு சொர்க்கத்திலிருந்து தென்றல் காற்றும், நறுமணமும் வீசும். பிறகு அவருடைய கண்பார்வை சென்றடையும் தூர அளவுக்கு மண்ணறை அவருக்காக விசாலமாக திறக்கப்படும்.

 

ஒரு இறைமறுப்பாளர் (மண்ணறையில் அடக்கப்பட்ட பின்பு) அவருடைய உயிர் அவருடைய உடலில் மீண்டும் சேர்க்கப்படும். அப்போது இரண்டு வானவர்கள் அவரிடம் வந்து, அவரை அமர வைப்பார்கள். பிறகு (அவரிடம்) வானவர்கள், "உன்னுடைய இறைவன் யார்?" என்று கேட்பார்கள். அதற்கு அவர், ( هَاهْ هَاهْ هَاهْ لاَ أَدْرِي ) "ஐயகோ எனக்குத் தெரியாதே!" என்பார். (பிறகு) "உன்னுடைய மார்க்கம் எது?" என்று கேட்பார்கள். அதற்கு அவர், "ஐயகோ எனக்குத் தெரியாதே!" என்பார். (பிறகு) "உங்களுக்கிடையில் அனுப்பப்பட்ட இந்த மனிதர் யார்?" என்று (முஹம்மத் - ஸல் அவர்களைக் குறித்து) கேட்பார்கள். அதற்கும் அவர், "ஐயகோ எனக்குத் தெரியாதே!" என்பார்.

 

அப்போது வானத்திலிருந்து அறிவிப்பாளர் ஒருவர், ( أَنْ كَذَبَ فَأَفْرِشُوهُ مِنَ النَّارِ  وَأَلْبِسُوهُ  مِنَ النَّارِ، وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى النَّارِ ‏ ) "இவர் பொய்யுரைத்துவிட்டார். எனவே, இவருக்காக நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்துவிடுங்கள். நரகத்திலிருந்து அவருக்கு ஆடை அணிவியுங்கள். நரகத்தை நோக்கி ஒரு வாயிலை அவருக்காகத் திறந்து வையுங்கள்" என்று கூறுவார். அப்போது நரகத்தின் சூடும், அதன் அனல் காற்றும் அவரை வந்தடையும். அப்போது அவருடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்றாக பிணங்கிக்கொள்ளும் அளவிற்கு அவருடைய மண்ணறை இறுக்கப்படும்.

 

பிறகு அவருக்காக கண் தெரியாத, காது கேட்காத ஒரு வானவர் நியமிக்கப்படுவார். அவ்வானரிடம் இரும்பிலான ஒரு சம்மட்டி இருக்கும். அதனை ஒரு மலை மீது அடித்தால் மலை மண்ணாகிவிடும். அதனால் அம்மனிதரை அந்த வானவர் ஒரு அடி அடிப்பார். அதன் சப்தத்தை மனித, ஜின்னு வர்க்கத்தினரைத் தவிர கிழக்கிற்கும் மேற்கிருக்கும் மத்தியில் உள்ள அனைத்து உயிர்களும் கேட்கும். அப்போது அவர் மண்ணாகி விடுவார். பிறகு மீண்டும் அதில் உயிர் போடப்படும். அறிவிப்பாளர்:- அல்பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4127, முஸ்னது அஹ்மத்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் இறந்துவிட்ட ஒருவர் மண்ணறைக்குள் வைத்து அடக்கம் செய்யப்பட்டதும் நீல நிற கண்களுடைய கருப்பு நிற வானவர்கள் இருவர் அவரிடம் வருகின்றனர். அவர்களில் ஒருவர் "முன்கர்" என்றும் மற்றொருவர் "நகீர்" என்றும் சொல்லப்படுவர்.

 

அப்போது அவர்கள் இருவரும், "இந்த (முஹம்மத் எனும்) மனிதர் பற்றி நீ என்ன சொல்லிக் கொண்டிருந்தாய்?" என்று (என்னைப் பற்றி) கேட்பார்கள். அதற்கு அவர், "இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்" என்று இறப்பதற்கு முன் சொல்லிக் கொண்டிருந்ததைப் போன்று சொல்வார்.

 

அப்போது அவ்விரு வானவர்களும், "நீ இவ்வாறு தான் சொல்வாய் என்பதை நாங்கள் அறிவோம்" என்று கூறுவார்கள். பிறகு அவருக்கு அவரது மண்ணறை  எழுபதுக்கு எழுபது முழம் விசாலமாக்கப்படும். பிறகு அதில் அவருக்கு ஒளி தரப்படும். பிறகு அவரிடம், "உறங்கு" என்று கூறப்படும். அப்போது அந்த மனிதர், "நான் என் வீட்டாரிடம் திரும்பிச் சென்று இங்கு நடந்ததை அவர்களுக்கு தெரிவிக்(க விரும்பு)கிறேன்" என்பார்.

 

அப்போது அவ்விரு வானவர்களும் "மணமகன் உறங்குவதை போன்று உறங்கு" என்று கூறுவர். இவ்வாறு அவர் தம்மை அல்லாஹ் எழுப்பும் (நாள்) வரை அந்த இடத்திலேயே உறங்கிக் கொண்டிருப்பார்.

 

அதேசமயம் (இறந்துவிட்ட) அந்த மனிதர் நயவஞ்சகராக இருந்தால், (வானவர்கள் தொடுக்கும் அந்த வினாவுக்கு விடை அளிக்கும்போது) மக்கள் (இவரைக் குறித்து) சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேள்விப்பட்டேன். அதேபோன்றே நானும் சொன்னேன். ஆனால் (உண்மை) எனக்குத் தெரியாது" என்று கூறுவார். அதற்கு அவ்விரு வானவர்களும், "நீ இவ்வாறு தான் சொல்வாய் என்பதை நாங்கள் அறிவோம்" என்று கூறுவர்.

 

பிறகு பூமியை நோக்கி, "இவனை நெருக்கு" என்று கூறப்படும். அப்போது பூமி அவனை நெருக்கும். இந்நிலையில் அவனுடைய விலா எலும்புகள் விலகி இடமாறிக்கொள்ளும். இவ்வாறு, அவனை அல்லாஹ் அந்த இடத்திலிருந்து எழுப்பும் (நாள்)வரை தொடர்ந்து அதில் வேதனை செய்யப்பட்டுக்கொண்டே இருப்பான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-991

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஓர் அடியார் மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டு அவருடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அந்த அடியார் அவர்களின் காலணிகள் எழுப்பும் ஓசையைச் செவியுறுவார். அப்போது அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி உட்காரவைத்து, “இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் குறித்துக் கேட்பர்.

 

இறைநம்பிக்கையாளர், “இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார் என நான் உறுதி கூறுகிறேன்என்பார். அவரிடம் “(நீர் கெட்டவராய் இருந்திருந்தால் உமக்குக் கிடைக்கவிருந்த) நரகத்தில் உள்ள உமது இருப்பிடத்தைப் பார்ப்பீராக! (நீர் நல்லவராக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உமக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான்எனக் கூறப்படும். இரண்டையும் அவர் ஒரே நேரத்தில் பார்ப்பார். அவருக்கு மண்ணறை (கப்ரு) விசாலமாக்கப்படும்.

 

நயவஞ்சகர் மற்றும் இறைமறுப்பாளரிடம், “இந்த மனிதர் விஷயத்தில் நீர் என்ன கருதிக்கொண்டிருந்தீர்?” என்று கேட்கப்படும். அதற்கு எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக்கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்என அவர் விடையளிப்பார். உடனே நீர் அறிந்திருக்கவுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லைஎன்று கூறப்படும்.

 

மேலும், இரும்பு சுத்திகளால் அவர் கடுமையாக அடிக்கப்படுவார். அப்போது அவரை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்னுகளையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவர் அலறுவார். நூல்:- புகாரீ-1374, நசாயீ-2024

 

மனிதன் இறந்து மண்ணறையில் வைக்கப்பட்ட பிறகு (தேவையான அளவுக்கு  உயிர் கொடுத்து) எழுப்பி அமரவைக்கப்படுவார். பிறகு "முன்கர், நகீர்" என்ற இரு வானவர்கள் அவரிடம் வந்து, "உமது இறைவன் யார்? உமது மார்க்கம் எது? முஹம்மத் (ஸல்) அவர்களின் திருமுகம் காண்பிக்கப்பட்டு, இவரைப்பற்றி உமது கருத்து என்ன? என்று மூன்று கேள்வி கேட்பார்கள்.

 

மரணித்தவர் இறைநம்பிக்கையாளராக, நல்லவராக இருந்தால் என் இறைவன் அல்லாஹ்என் மார்க்கம் இஸ்லாம்; இந்த திருமுகத்திற்குரியவர் எங்களின் தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் என்று பதிலளிப்பார். அவர், அண்ணல் நபி (ஸல்) அவர்களை பார்த்திராவிட்டாலும் அதற்குரிய ஞானத்தை அல்லாஹ் அவருக்கு வழங்குவான். அதன் பிறகு அவருக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வெகுமதிகள் தொடரும்.

 

மரணித்தவர் இறைமறுப்பாளராக, தீய மனிதராக இருந்தால் அதற்கான பதிலை அவரால் சொல்ல இயலாது. அதன் பிறகு அவருக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வேதனைகள் தொடரும் என்பது தான் மேற்காணும் நபிமொழிகளின் கருத்தாகும்.

 

எவ்வித மாற்றமும் நிகழாது

 

அவ்ஸ் பின் அவ்ஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் உங்கள் நாள்களுள் வெள்ளிக்கிழமையே சிறந்த நாளாகும். (அந்நாளில்) என் மீது அதிகமாக 'ஸலவாத்' ஓதுங்கள். ஏனெனில், நீங்கள் கூறும் ‘ஸலவாத்’துகள் எனக்கு எடுத்துக்காட்டப்படுகிறது" என்று கூறினார்கள். அப்போது மக்கள், "நாயகமே! எங்கள் ‘ஸலவாத்’துக்கள் எப்படி உங்களுக்கு எடுத்துக்காட்டப்படுகின்றன. நீங்களோ இறந்து மண்ணோடு மண்ணாக மக்கிப்போய்விடுவீர்களே?" என்று கேட்டனர். நபியவர்கள், ( إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ‏ ‏صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ ) நிச்சயமாக மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் இறைதூதர்களின் உடல்களை  மண் தின்பதைவிட்டுத் தடைசெய்துள்ளான். அறிவிப்பாளர்:- அவ்ஸ் பின் அவ்ஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1308, நசாயீ-1357, இப்னுமாஜா-1075, முஸ்னது அஹ்மத், தாரிமீ

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (உஹுத் போரில் கொல்லப்பட்ட) என் தந்தையுடன் இன்னொருவரும் (ஒரே குழியில்) அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் என் தந்தை மண்ணறையில் இருப்பதை என் மனம் விரும்பவில்லை. எனவே, (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரது உடலை நான் மண்ணறையிலிருந்து வெளியில் எடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போல் உடம்பு அப்படியே இருந்தது. (அவரது உடலில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை.) நூல்:- புகாரீ-1351, அபூதாவூத்-2813, நசாயீ-1994, பைஹகீ

 

இமாம் இப்னு அப்துல் பர் (ரஹ்) மற்றும் இமாம் குர்துபீ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.

( أَنَّ الْأَرْضَ لَا تَاكِلُ أَجْسَادَ الشُّهَدَاءِ ، وَالْمُؤَذِّنِينَ الْمُحْتَسِبِينَ )

( أَنَّ الْأَرْضَ لَا تَأْكُلُ أَجْسَادَ الْأَنْبِيَاءِ وَالشُّهَدَاءِ )

( وَثَبَتَ أَنَّ الْأَنْبِيَاءَ وَالْأَوْلِيَاءَ وَالشُّهَدَاءَ لَا تَأْكُلُ الْأَرْضُ أَجْسَادَهُمْ ، فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادُهُمْ )

நிச்சயமாக இறைத்தூதர்கள், அறப்போரில் உயிர் நீத்தவர்கள், (அல்லாஹ்வின்)  நற்கூலியை மட்டுமே எதிர்பார்த்து பாங்கொலிப்பவர், இறைநேசர்கள் ஆகியோரின் உடல்களை மண் தின்னாது. நூல்:- அத்தமஹீத், அல்முஃப்ஹிம் ஷரஹ் முஸ்லிம் 7/307, தஃப்சீர் குர்துபீ

 

கற்றபடி நற்செயல் புரிந்த மார்க்க அறிஞர்கள், (அல்லாஹ்வின்) நற்கூலியை மட்டுமே எதிர்பார்த்து பாங்கொலிப்பவர், (ஹாபிள் எனும்) குர்ஆனை முழுமையாக மனனமிட்டவர் ஆகியோரின் உடல்களை மண் தின்னாது. நூல்:- ஃபத்ஹுல் கதீர், ஷரஹ் முவத்தா இமாம் ஸர்க்கானீ, தஃப்சீர் ரூஹுல் மஆனீ

 

வளமாக

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا أُقْعِدَ الْمُؤْمِنُ فِي قَبْرِهِ أُتِيَ، ثُمَّ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَذَلِكَ قَوْلُهُ ) மண்ணறையில் ஓர் இறைநம்பிக்கையாளர் (அடக்கம் செய்யப்பட்டபின்) எழுப்பி அமரவைக்கப்படுவார்; (அவரிடம் இரு வானவர்கள்) கொண்டுவரப்(படுவர். கேள்வி கேட்கப்)படும். பிறகு (அவர்களிடத்தில்) அந்த இறைநம்பிக்கையாளர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் ஆவார்கள்என உறுதி கூறுவார். இதுதான் இறைநம்பிக்கைக்கொண்டோரை உறுதியான சொல் மூலம் இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகின்றான்.” (14:27) என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கு பொருள் ஆகும். அறிவிப்பாளர்:- பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1369, நசாயீ-2030

 

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( أَنَّهُ يُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ سَبْعُونَ ذِرَاعًا وَيُمْلأُ عَلَيْهِ خَضِرًا إِلَى يَوْمِ يُبْعَثُونَ ) “இறைநம்பிக்கையாளருக்கு எழுபது முழம் அளவுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும். அவர்கள் எழுப்பப்படும் (மறுமை) நாள்வரை அது மகிழ்ச்சியூட்டும் இன்பங்களால் நிரப்பப்படும்” என்று எங்களிடம் கூறப்பட்டது. நூல்:- முஸ்லிம்-5505

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْمُؤْمِنُ فِي قَبْرِهِ فِي رَوْضَةٍ خَضْرَاءَ، وَيُرَحَّبُ لَهُ فِي قَبْرِهِ سَبْعُونَ ذِرَاعًا، وَيُنَوَّرُ لَهُ قَبْرُهُ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ) இறைநம்பிக்கையாளர் தமது மண்ணறையில் பசுமைப் பூங்காவில் இருப்பார். அவரது மண்ணறை எழுபது முழம் விரிவாக்கப்படும். பௌர்ணமி இரவில் முழு நிலவு ஒளிர்வதைப் போன்று அவரது மண்ணறை ஒளிமயமாக்கப்படும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னு ஹிப்பான், முஸ்னது அபீயஅலா, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் தாஹா வசனம்-124

 

வேதனை

 

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரையாற்றினார்கள். அப்போது மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவர்கள் அதைச் சொல்லிக்கொண்டிருந்தபோது, (அங்கிருந்த) முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள். நூல் புகாரீ-1373

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைமறுப்பாளனை மண்ணறை நெருக்கும். அதனால் அவனின் இரு பக்க விலாக்களும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொள்ளும். அதற்குப்பின் அவலட்சணமான தோற்றமும், அழுக்கான ஆடையும் அணிந்த துர்நாற்றமுள்ள மனிதனின் உருவில் அவனது செயல்கள் அங்கு வருகைத் தரும். அப்போது அவன், "இறைவா! மறுமைநாளை ஏற்படுத்தி விடாதே!" என்று கூறுவான். நூல்:- முஸ்னது அஹ்மத்

 

இறந்தவர்களின் உடல்களுக்கும் உயிர்களுக்கும் எவ்வாறு அல்லாஹ்வின் வெகுமதி அல்லது வேதனை ஏற்படுகிறது என்பதை பற்றிய சரியான அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கிறது. அது நமது அறிவுக்கு விளங்கினாலும் விளங்காவிட்டாலும் அதன் மீது நாம் இறைநம்பிக்கை கொள்வது அவசியமாகும்.

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( هَذَا الَّذِي تَحَرَّكَ لَهُ الْعَرْشُ وَفُتِحَتْ لَهُ أَبْوَابُ السَّمَاءِ وَشَهِدَهُ سَبْعُونَ أَلْفًا مِنَ الْمَلاَئِكَةِ لَقَدْ ضُمَّ ضَمَّةً ثُمَّ فُرِّجَ عَنْهُ ) யாருக்காக (அல்லாஹ்வின்) அர்ஷ் (இறைவனின் சிம்மாசனம்) குலுங்கி, வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, எழுபதாயிரம் வானவர்கள் கலந்து கொண்டனரோ அந்த (சஅத் பின் முஆத் என்ற) மனிதருக்கு மண்ணறையில் (விலா எலும்புடன் விலா எலும்பு பிணைந்து) பெரும் நெருக்குதல் ஏற்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- நஸாயீ-2028, முஸ்னது அஹ்மத்

 

இறைநெருக்கம் பெற்றவர்களையே மண்ணறை வேதனை விட்டுவைக்காத போது நம்மைப் போன்ற சாமானியர்களை விட்டுவைக்குமா? அவரவர் செயல்களுக்கு தகுந்தாற்போல் மண்ணறை வேதனை கூடுதல் குறைவு இருக்கும். ஆனால், அதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

 

மண்ணறையில் இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளும் வெகுமதியும் கிடைக்கும். இறைமறுப்பாளர்கள் மற்றும் தீயோர்களுக்கு அல்லாஹ்வின் வேதனை கிடைக்கும். இந்த வெகுமதி வேதனையும் இறந்தவர்களின் உடல் உயிர் இரண்டிலும் ஏற்படும். அவர்களின் உடல் மண்ணில் புதைந்திருந்தாலும், நெருப்பில் எரிந்து கரிந்திருந்தாலும், நீரில் மூழ்கி சிதைந்திருந்தாலும், மிருகங்களோ பறவைகளோ மீன்களோ சாப்பிட்டு ஜீரணத்திருந்தாலும் இவ்விரண்டிலும் ஏதேனும் ஒன்று அவர்களுக்குக் கிடைக்கவே செய்யும். நூல்:- ஷரஹ் அல்அகீதத்துத் தஹாவிய்யா இமாம் இப்னு அபில் இஜ் 1/396

 

இடநெருக்கடியின் காரணமாக ஒரே இடத்தில் பலரும் அடக்கம் செய்யப்படுகின்றனர். (அதாவது, ஒரே இடம் பலருக்கும் புதைகுழியாகிவிடுகிறது.) இவர்களுக்கு எவ்வாறு மண்ணறையின் இன்ப துன்பங்கள் நிகழும் என்று சந்தேகம் எழலாம். ஒரே விரிப்பில் பலரும் உறங்குகிறார்கள். ஆனால், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான கனவுகள் காணுகின்றனர். அதுபோல் தான் மண்ணறை நிகழ்வுகள் நடைபெறும்.

 

நல்லறங்கள் மூலம்

 

உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இறந்தவரை அடக்கி முடித்ததும் அந்த இடத்தில் நின்று (தம் தோழர்களை நோக்கி!) ( اسْتَغْفِرُوا لأَخِيكُمْ وَسَلُوا لَهُ التَّثْبِيتَ فَإِنَّهُ الآنَ يُسْأَلُ ) "உங்களின் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்; இப்போது அவர் கேள்வி கேட்கப்பட இருக்கிறார். அவர் (அல்லாஹ்வின் தூதர்களான வானவர்களின் கேள்விக்கு பதில் கூறுவதில்) நிலையாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டுமென்று அல்லாஹ்விடம் கேளுங்கள்" என்று கூறுவார்கள். நூல்:- அபூதாவூத்-2804, பைஹகீ, ஹக்கிம், ஃபளாயிலுஸ் ஸஹாபா இமாம் அஹ்மத், அல்பஸ்ஸார்

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் இறந்தபோது அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்களும் சென்றோம். நபியவர்கள் அவருக்கு தொழ வைத்து, அவரை மண்ணறையில் வைத்து மண்ணால் மூடியபோது நபியவர்கள் நீண்ட நேரம் "சுப்ஹானல்லாஹ்" என்று சொல்ல, நாங்களும் அவ்வாறே சொன்னோம். பின்னர் நபியவர்கள் "அல்லாஹு அக்பர்" என்று சொல்ல, நாங்களும் அவ்வாறே சொன்னோம். அப்போது "நாயகமே! எதற்காக தஸ்பீஹ், தக்பீர் ஓதினீர்கள்?" என்று கேட்கப்பட்டது. நபியவர்கள், ( لَقَدْ تَضَايَقَ عَلَى هَذَا الرَّجُلِ الصَّالِحِ قَبْرُهُ حَتَّى فَرَّجَهُ اللَّهُ عَنْهُ ),"நிச்சயமாக இந்த நல்லடியாரின் மீது அவருடைய மண்ணறை நெருக்கத்தை ஏற்படுத்தியது. (நம்முடைய இந்த இறைத்துதியால்) அல்லாஹ் அவரை விட்டும் அதை விரிவடையச் செய்தான்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், சுனனுல்  குப்ரா, முஸ்னது ஷுஐப்    

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளைக் கடந்து சென்றார்கள். அப்போது ( إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ مِنْ كَبِيرٍ ـ ثُمَّ قَالَ ـ بَلَى أَمَّا أَحَدُهُمَا فَكَانَ يَسْعَى بِالنَّمِيمَةِ، وَأَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ ) இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால், ஒரு பெரிய பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் கோள்சொல்லித் திரிந்தவர்; மற்றொருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக்கொள்ளாதவர்என்று கூறினார்கள்.

 

பிறகு ஈரமான ஒரு மட்டையை இரண்டாகப் பிளந்து இரு மண்ணறைகளிலும் ஒவ்வொன்றாக நட்டார்கள். ( لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا )  இவ்விரண்டின் ஈரம் காயாத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்எனக் கூறினார்கள். நூல்:- புகாரீ-1378

 

பூமியில் வாழ்பவர்கள் மண்ணறைவாசிகளுக்காக செய்கின்ற நல்லறங்கள் மூலம் மண்ணறை வேதனை குறையும் என்பது தெளிவாகிறது.

 

எடுத்துக்காட்டப்படும்

 

காலையிலும், மாலையிலும் நரக நெருப்பின் அருகே அவர்கள் கொண்டுவரப்படுவார்கள். திருக்குர்ஆன்:- 40:46

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ أَحَدَكُمْ إِذَا مَاتَ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ، إِنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَمِنْ أَهْلِ الْجَنَّةِ، وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ، فَيُقَالُ هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثَكَ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ) உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக்காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் இருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்தில் இருப்பதாகவும் (எடுத்துக்காட்டப்படும்). மேலும், “இதுதான் உன் இருப்பிடம். இறுதியில் அல்லாஹ் உன்னை மறுமைநாளில் எழுப்பி இங்குதான் அனுப்புவான்என்றும் கூறப்படும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1379

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஓர் அடியார் இறந்து மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டு அவரின் நண்பர்கள் திரும்பிச் செல்லும்போது அவர்களது கால்களின் காலணிகளின் ஓசையை இறந்தவர் செவியேற்கிறார். அவரிடம் இரண்டு வானவர்கள் வந்து அவரை எழுப்பி உட்கார வைத்து அவரிடம் (சிலவற்றைப் பற்றி கேள்வி கேட்டுவிட்டு) அவரிடம், "நீர் (இறைமறுப்பாளராக இருந்திருந்தால்) நரகில் (நீர் இருக்கப்போகும்) உமது இருப்பிடத்தைப் பார்! நீர் (இறைநம்பிக்கையாளராக இருப்பதால்) அல்லாஹ் இதற்கு மாற்றமாக உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை அமைத்துள்ளான்" என்று கூறுவார்கள். அப்போது அவர் அவ்விரண்டையும் (ஒரே நேரத்தில்) காண்பார். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- நசாயீ-2023

                                                                            

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا مَاتَ الرَّجُلُ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ إِنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَالْجَنَّةُ وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَالنَّارُ ‏"‏ ‏.‏ قَالَ ‏"‏ ثُمَّ يُقَالُ هَذَا مَقْعَدُكَ الَّذِي تُبْعَثُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ ) ஒரு மனிதர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் (தங்கப்போகும்) இருப்பிடம் காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக்காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் (எடுத்துக்காட்டப்படும் இடமும்) சொர்க்கமாக இருக்கும். அவர் நரகவாசியாக இருந்தால் (எடுத்துக்காட்டப்படும் இடமும்) நரகமாக இருக்கும். பிறகு "இதுவே உமது இருப்பிடம். மறுமைநாளில் இதை நோக்கியே நீ எழுப்பப்படுவீர்" என்று கூறப்படும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5501, இப்னுமாஜா-4260

 

திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் பிரபலமானவர் அல்லாமா இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மேற்காணும் (40:46) வசனம் தான் மண்ணறை வேதனை உண்டென்பதற்கு அஹ்லுஸ் ஸுன்னத் (நபிவழியையும், நபித்தோழர்கள் வழியையும் பின்பற்றக்கூடிய) ஜமாத்தாரின் மிகப்பெரியதோர் ஆதாரமாகும். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

யார் எனது நல்லுரையைப் புறக்கணித்துவிட்டாரோ அவருக்கு நிச்சயமாக (இம்மையில்) நெருக்கடியான வாழ்க்கையே உண்டு; மேலும், மறுமைநாளில் அவரை நாம் குருடராக எழுப்புவோம். திருக்குர்ஆன்:- 20:124

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அவருக்கு நெருக்கடியான வாழ்க்கையே உண்டு" எனும் (மேற்காணும்) வசனம் எது தொடர்பாக அருளப்பெற்றது என்பது உங்களுக்கு தெரியுமா? ( أَتَدْرُونَ مَا الْمَعِيشَةُ الضَّنْكُ ) 'நெருக்கடியான வாழ்க்கை' என்றால் என்ன என்பது தெரியுமா?" என்று வினவினார்கள். மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தனர்.

 

நபியவர்கள், ( عَذَابُ الْكَافِرِ فِي قَبْرِهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّهُ لَيُسَلَّطُ عَلَيْهِ تِسْعَةٌ وَتِسْعُونَ تِنِّينًا، أَتَدْرُونَ مَا التِّنِّينُ؟ تِسْعَةٌ وَتِسْعُونَ حَيَّةً، لِكُلِّ حَيَّةٍ سَبْعَةُ رُؤُوسٍ، يَنْفُخُونَ فِي جِسْمِهِ، وَيَلْسَعُونَهُ وَيَخْدِشُونَهُ إِلَى يَوْمِ يُبْعَثُونَ ) “அது இறைமறுப்பாளர் சவக்குழியில் வேதனை செய்யப்படுவதைக் குறிக்கும். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் மீது தொண்ணூறு ஒன்பது 'தின்னீன்'கள் ஏவப்படும். தின்னீன் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அவை தொண்ணூறு ஒன்பது மலைப்பாம்புகள் ஆகும். அவற்றில் ஒவ்வொரு பாம்புக்கும் ஏழு தலைகள் இருக்கும். அது மறுமைநாள் வரை அவரது உடலில் சீறிப் பாய்ந்து அவரை கடித்துப் பிராண்டிக்கொண்டிருக்கும் என்று கூறினார்கள்.  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-  இப்னு ஹிப்பான், முஸ்னது அபீயஅலா, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர்

 

மேற்காணும் வசனத்திற்கு விளக்கமாக, அபூசயித் அல்குத்ரீ (ரலி) அவர்கள், ( يُضَيَّقُ عَلَيْهِ قَبْرُهُ، حَتَّى تَخْتَلِفَ أَضْلَاعُهُ فِيهِ ) "அவரை அவரது சவக்குழி (இரு பக்கமும்) நெருக்கும். அதனால் அவருடைய விலா எலும்புகள் இடம்மாறும்" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் தபரீ, இப்னு அபீ ஹாத்திம், இப்னு கஸீர்

 

சொல்லணா துன்பங்கள்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يُسَلَّطُ عَلَى الْكَافِرِ فِي قَبْرِهِ تِسْعَةٌ وَتِسْعُونَ تِنِّينًا ، تَلْدَغُهُ حَتَّى تَقُومَ السَّاعَةُ ، فَلَوْ أَنَّ تِنِّينًا مِنْهَا نَفَخَ فِي الْأَرْضِ مَا أَنْبَتَتْ خَضْرًا ) ஒரு இறைமறுப்பாளனுடைய மண்ணறையில் அவனுக்கு எதிராக தொண்ணூற்று ஒன்பது பாம்புகள் சாட்டப்படும். அவை அவனை மறுமைநாள்வரை தீண்டிக்கொண்டே இருக்கும். அவைகளில் உள்ள ஒரு பாம்பு இந்த பூமியில் மூச்சுவிட்டால் எந்தப் பசுமை செடியும் விளையாது. அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- தாரிமீ, மிஷ்காத்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الآخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ )  "மண்ணறை என்பது மறுமையின் தங்குமிடங்களில் முதல் தங்குமிடமாகும். இதி(ல் தரப்படும் வேதனையி)லிருந்து ஒருவர் தப்பிவிட்டால், அதற்கு பின்னுள்ளவை அவருக்கு மிகவும் எளிதானதாகவே அமையும். இதிலிருந்து ஒருவர் தப்பாவிட்டால் அதற்கு பின்னுள்ளவை அவருக்கு இதைவிட கடுமையானதாகவே இருக்கும். (மேலும்) ( مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلاَّ وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ ) “நான் மண்ணறையைவிட பயங்கரம் நிறைந்த ஓர் இடத்தை ஒருபோதும் கண்டதில்லை. நூல்:- திர்மிதீ-2230, இப்னுமாஜா-4257

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْمَيِّتَ يَصِيرُ إِلَى الْقَبْرِ فَيُجْلَسُ الرَّجُلُ الصَّالِحُ فِي قَبْرِهِ غَيْرَ فَزِعٍ وَلاَ مَشْعُوفٍ وَيُجْلَسُ الرَّجُلُ السُّوءُ فِي قَبْرِهِ فَزِعًا مَشْعُوفًا ) மரணமடைந்தவர் மண்ணறைக்குள் போய் சேர்ந்து விடுவார். நல்ல மனிதரைப் பொருத்தவரை அவர் தம் மண்ணறையில் எவ்வித திடுக்கமும் கலக்கமும் இன்றி அமர வைக்கப்படுவார். (பின்னர் அவரிடம் கேள்விகள் கேட்கப்படும்.) தீய மனிதர் அவர் தம் மண்ணறையில் திடுக்கத்தோடும் கலக்கத்தோடும் அமர வைக்கப்படுவார். (பின்னர் அவரிடம் கேள்விகள் கேட்கப்படும்.) அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4258

 

மனிதன் மறுமை நிலைகளில் பல கட்டங்களைக் கடக்க வேண்டியவனாக இருக்கிறான். அவற்றில் முதன்மையானது மண்ணறை எனும் இடைப்பட்ட உலகம் தான். அதையடுத்து செயல்பாடுகள் எடுத்துக்காட்டப்படும் நிலை, செயல்பாடுகள் நிறுக்கப் பயன்படும் தராசைச் சந்திக்கும் நிலை, ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடக்கும் நிலை, சொர்க்கம் அல்லது நரகம் புகும் நிலை என்று பல நிலைகள் உள்ளன. மண்ணறையில் வேதனை செய்யப்பட்டு முடிந்துவிட்டால் அடுத்தடுத்த கட்டங்களை எளிதாகக் கடந்து சென்றுவிடலாம். செய்த பாவத்திற்கு மண்ணறையில் அனுபவித்த வேதனை பகரமாகிவிடும் என்பதே காரணம். மண்ணறையின் வேதனை இன்னும் எஞ்சியிருக்க அதற்குள் யுக முடிவு நாள் வந்து மண்ணறையில் இருந்து எழுப்பப்பட்டுவிட்டால் அடுத்தடுத்த கட்டங்கள் கடினமானவையாகவே இருக்கும். பாவங்களுக்குரிய தண்டனை முடியாததே காரணம். நரகம் மண்ணறையைவிட கொடிய வேதனையாக இருக்கும். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

 

தினமும் பேசுகிறது

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மண்ணறையானது ஒவ்வொரு நாளும் தனக்குத் தானே (பின்வருமாறு) பேசிக்கொள்ளாமல் இருப்பதில்லை. (  أَنَا بَيْتُ الْغُرْبَةِ وَأَنَا بَيْتُ الْوَحْدَةِ وَأَنَا بَيْتُ التُّرَابِ وَأَنَا بَيْتُ الدُّ ) “நான் அந்நிய வீடு; நான் தனிமை வீடு; நான் மண் வீடு; நான் புழுக்களின் இல்லம்” (என்று பேசிக்கொள்கிறது).

 

இறைநம்பிக்கையாளரான (நல்ல) அடியார் (அந்த மண்ணறையில்) அடக்கம் செய்யப்படும்போது மண்ணறை அவரிடம், ( مَرْحَبًا وَأَهْلاً أَمَا إِنْ كُنْتَ لأَحَبَّ مَنْ يَمْشِي  عَلَى ظَهْرِي إِلَىَّ فَإِذْ وُلِّيتُكَ الْيَوْمَ وَصِرْتَ إِلَىَّ فَسَتَرَى صَنِيعِي بِكَ  ‏ ) "வருக! வருக! என் முதுகின் மேல் நடந்து கொண்டிருந்தவர்களில் நீர் எனக்கு மிகவும் பிரியமானவராக இருந்தீர். இப்போது என்னிடம் வந்து சேர்ந்துள்ளீர். இன்று உம்மீது எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உமக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை நீர் பார்க்கப் போகிறீர்" என்று சொல்லும்.

 

பிறகு அவருடைய பார்வை எட்டும் தொலைவுக்கு மண்ணறை விசாலமானதாய் மாறும். அவருக்காக சொர்க்கத்தை நோக்கிய வாயில் ஒன்று திறந்து வைக்கப்படும்.

 

(அதேநேரம்) பாவியான அல்லது இறைமறுப்பாளனான அடியான் ஒருவன் மண்ணறையில் அடக்கப்படும்போது அவரிடம் மண்ணறையானது, ( لاَ مَرْحَبًا وَلاَ أَهْلاً أَمَا إِنْ كُنْتَ لأَبْغَضَ مَنْ يَمْشِي عَلَى ظَهْرِي إِلَىَّ فَإِذْ وُلِّيتُكَ الْيَوْمَ وَصِرْتَ إِلَىَّ فَسَتَرَى صَنِيعِي بِكَ )  "உனக்கு வாழ்த்தோ வரவேற்போ கிடையாது. என் முதுகின் மேல் நடந்து கொண்டிருந்தவர்களில் நீ என் வெறுப்புக்குரியவனாய் இருந்தாய். (இப்போது) என்னிடம் வந்து சேர்ந்திருக்கிறாய். இன்று உம்மீது எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உன்னை நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை நீ பார்க்கப்போகிறாய்" என்று சொல்லும்.

 

பிறகு அவனை மண்ணறை நெருக்கி இறுக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று கோர்த்துக்கொள்ளும். இவ்வாறு கூறியபோது நபியவர்கள், தம் இரு கை விரல்களையும் ஒன்றுக்குள் ஒன்றாய் கோர்த்துக் காட்டினார்கள். பிறகு நபியவர்கள், (  وَيُقَيِّضُ اللَّهُ لَهُ سَبْعِينَ تِنِّينًا لَوْ أَنَّ وَاحِدًا مِنْهَا نَفَخَ فِي الأَرْضِ مَا أَنْبَتَتْ شَيْئًا  مَا بَقِيَتِ الدُّنْيَا فَيَنْهَشْنَهُ وَيَخْدِشْنَهُ حَتَّى يُفْضَى بِهِ إِلَى الْحِسَابِ ‏  ) "பின்னர் எழுபது மலைப்பாம்புகள் அவன் மீது ஏவி விடப்படும். அவற்றில் ஒரு பாம்பு இந்தப் பூமியின் மீது மூச்சுவிட்டால் பூமியின் மீது (புற்பூண்டுகள்) எதுவும் முளைக்காது. அவன் விசாரணைக்குக் கொண்டு செல்லப்படும் (நாள்)வரை, அந்தப் பாம்புகள் அவனைக் கொத்திக் காயப்படுத்தும். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2384

 

வணக்க வழிபாடுகள் புரிய

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا أُدْخِلَ الْمَيِّتُ الْقَبْرَ مُثِّلَتِ الشَّمْسُ لَهُ عِنْدَ غُرُوبِهَا فَيَجْلِسُ يَمْسَحُ عَيْنَيْهِ وَيَقُولُ ‏:‏ دَعُونِي أُصَلِّي )  மரணமடைந்தவர் மண்ணறைக்குள் சென்றுவிட்டால் சூரியன் மறையும் நேரத்தில் இருக்கும் தோற்றம் தென்படும். எனவே, அவர் தமது கண்களை தடவியவாறு அமர்ந்து கொண்டு, "என்னை தொழுவதற்கு அனுமதியுங்கள்" என்று கூறுவார். அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4262 இப்னு ஹிப்பான்-3116

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபித்தோழர்களில் ஒருவர் ஓர் மண்ணறையின் மீது அங்கு மண்ணறை இருக்கிறது என்பதை அறியாமல் தமது கூடாரத்தை அமைத்துவிட்டார். பிறகு அங்கு ஒரு மனிதரின் மண்ணறை இருப்பதையும் அவர் 'தபாரக் கல்லதி பி யதிஹில் முல்க்' எனும் (67வது) அத்தியாயத்தை முழுமையாக ஓதிக் கொண்டிருப்பதைச் செவியுற்றார்.

 

உடனே அந்த நபித்தோழர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ إِنِّي ضَرَبْتُ خِبَائِي عَلَى قَبْرٍ وَأَنَا لاَ أَحْسِبُ أَنَّهُ قَبْرٌ فَإِذَا فِيهِ إِنْسَانٌ يَقْرَأُ سُورَةَ تَبَارَكَ الْمُلْكُ حَتَّى خَتَمَهَا ) "நாயகமே நான் ஓர் மண்ணறையின் மீது அங்கு மண்ணறை இருப்பதை அறியாமலேயே அதன் மீது எனது கூடாரத்தை அமைத்துவிட்டேன். பிறகு அதற்குள் ஒரு மனிதர் 'அல்முல்க்' அத்தியாயத்தை முழுமையாக ஓதி முடித்தார்" என்று கூறினார். அப்போது நபியவர்கள், ( هِيَ الْمَانِعَةُ هِيَ الْمُنْجِيَةُ تُنْجِيهِ مِنْ عَذَابِ الْقَبْرِ ) அ(ல்முல்க் அத்தியாயமான)து தடுக்கக்கூடியது. ஈடேற்றம் அளிக்கக்கூடியது. ஆம்! மண்ணறையின் வேதனையிலிருந்து அவருக்கு அது ஈடேற்றம் அளிக்கும்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-2808, அத்தர்ஙீபு வத்தர்ஹீபு


மண்ணறையில், அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு இறைவணக்கம் புரிய அனுமதிப்பான் என்கிறது மேற்காணும் நபிமொழிகள். 

 

சோதனையும், வேதனையும் இருக்காது

 

மேலும், அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை, இறந்தோர் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர். ஆனால், அதை நீங்கள் உணரமாட்டீர்கள்.  திருக்குர்ஆன்:- 2:154
 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஷஹீத் எனும்) உயிர்த்தியாகிக்கு அல்லாஹ்விடம் ஆறு சிறப்புக்கள் உண்டு. (அதில் ஒன்று) ( وَيُجَارُ مِنْ عَذَابِ الْقَبْرِ ) மண்ணறையின் வேதனையிலிருந்து அவர் காப்பாற்றப்படுகிறார். அறிவிப்பாளர்:- மிக்தாம் பின் மஅதீ கரிப் (ரலி) அவர்கள்  நூல்:- திர்மிதீ-1586


ஒருவர், (பேராசான் பெருமானார் - ஸல் அவர்களிடம்) ( يَا رَسُولَ اللَّهِ مَا بَالُ الْمُؤْمِنِينَ يُفْتَنُونَ فِي قُبُورِهِمْ إِلاَّ الشَّهِيدَ ) "நாயகமே! உயிர்த்தியாகி தவிர (மற்ற) இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் மண்ணறைகளில் சோதனைக்கு ஆட்படுத்தப்படுகின்றனரே, அது ஏன்? (உயிர்த்தியாகிக்கு மட்டும் சோதனைகள் இல்லையாமே)" என்று கேட்டார்.

 

அதற்கு நபியவர்கள், ( كَفَى بِبَارِقَةِ السُّيُوفِ عَلَى رَأْسِهِ فِتْنَةً ) "(போர்க்களத்தில்) அவரது தலைக்கு மேல் மின்னும் (கூரிய) வாள் வந்தது (அப்போது தம் உயிரை அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கத் துணிந்ததே அவர் இறைநம்பிக்கைகொண்டவர் எனும்) சோதனைக்குப் போதுமானதாகும்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- ராஷித் பின் சஅத் (ரஹ்) அவர்கள் நூல்:- நசாயீ-2026

 

உயிர்த்தியாகிகளுக்கு மண்ணறையில் எந்த சோதனையும், வேதனையும் இருக்காது என்பதை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

 

ஆதாரங்கள் காட்டப்பட்டது

 

ஹுதைபா பின் அல்யமான் (ரலி) ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களின் மண்ணறைக்கு அருகே தஜ்லா நதி ஓடுகிறது. ஹுதைபா (ரலி) அவர்களின் மண்ணறையில் தண்ணீர் புகுந்தது. ஜாபிர் (ரலி) அவர்களின் மண்ணறையிலும் அது வெளிப்பட்டது. இந்நிலையில் மன்னர் பைசல் மற்றும் ஈராக் தலைமை முஃப்தி ( நீதிபதி ) ஆகியோர் தனித்தனியாக கண்ட கனவில் மேற்படி இரு நபித்தோழர்கள் தோன்றி “எங்களின் மண்ணறைகளை இடமாற்றுங்கள்” என்று கூறினார்கள்.

 

அதனை ஏற்று, அதற்கான தேதி முடிவு செய்து பத்திரிக்கைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த அரிய நிகழ்ச்சியினை காண துருக்கி மற்றும் எகிப்து நாட்டிலிருந்து அரசாங்க தூது குழுவினர் குறிப்பிட்ட தேதியில் அங்கு வந்து சேர்ந்தனர். வெளிநாடுகளிலிருந்து எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு கொள்கை கோட்பாடுகளில் உள்ளவர்களுமாக சுமார் ஐந்து லட்சம் பேர் அதற்கு அருகில் இருந்த மதாயின் என்ற இடத்தில் ஒன்று கூடினர்.

 

ஹிஜ்ரி 1350, துல்ஹஜ் மாதம் கடைசி பத்தில் 1932 ஏப்ரல் மாதம் திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு உலக நாடுகளின் தூதர்கள், ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்கள், சவூதி மன்னர் பைசல் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஹுதைபா (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோரின் புனித உடல்கள் கிரேன் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது. அந்த புனித உடல்களை மிகுந்த மரியாதையோடு வெளியே எடுத்து, அதற்காக விசேசமாக உருவாக்கப்பட்ட கண்ணாடிபேழையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, அவர்களின் முகத்திலிருந்து (கஃபன் எனும்) சவக்கோடி விலக்கப்பட்டது. அப்புனித உடல்களுக்கு ஈராக் இராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஜனாஸாவை பார்த்துவிட்டு  மெய்சிலிர்த்து போயினர்.

 

அந்த இரு நபித்தோழர்களின் புனித உடலை பொதிந்திருந்த (கஃபன் எனும்) சவக்கோடி மட்டுமல்ல அவர்களின் தாடிமுடி கூட நல்ல நிலையில் புத்தம் புதிதாக இருந்ததை பார்த்தால் பதிமூன்று நூற்றாண்டுக்கு முன்புள்ள பழமை வாய்ந்த ஒரு ஜனாஸாவாக அது இல்லாமல் சில மணி நேரத்திற்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டதை போன்று புதிய ஜனாஸாக்களாக இருந்தது. இதில் மிகுந்த ஆச்சரியத்திற்குரிய விசயம் என்னவென்றால் அந்த இரு நபித்தோழர்களின் கண்கள் புத்துயிரோடு ஒளி வீசிக்கொண்டிருந்தது தான். அதனை பலரும் காணும் பாக்கியம் பெற்றனர். ஆனால் அவர்களால் கூர்ந்து பார்க்க முடியவில்லை.

 

பெரிய டாக்டர்கள் எல்லாம் இதைக் கண்டு வியந்தனர். ஏனெனில் இறந்து ஆறு மணி நேரத்திற்குள் கண் அதன் பார்க்கும் சக்தியை இழந்துவிடும். ஆனால் இங்கு பதிமூன்று நூற்றாண்டு காலமாகியும் அவர்களின் கண்கள் அப்படியே கெடாமல் உள்ளது. ஜெர்மனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ஒருவர் இதை கண்ணுற்று உடனே அந்த இடத்திலேயே தலைமை முஃப்தியின் கரம் பற்றி முஸ்லிமாகிவிட்டார். “இஸ்லாம் சத்தியமானது என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் வேறு என்ன தேவையிருக்கிறதுஎன்று கூறினார்.

 

மன்னர்கள், ஆட்சியாளர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அந்த புனித உடல்கள் வைக்கப்பட்டிருந்த அந்தப் பேழையை தங்களின் தோள்கள் மீது நான்கு மணி நேரத்திற்குள்  சுமந்து வந்து சல்மான் பாக் கப்ருஸ்தானுக்கு கொண்டு வந்தனர். அந்த புனித உடல்களை நபித்தோழர் சல்மான் பார்சீ (ரலி) அவர்களின் மண்ணறைக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறுநாள் பாக்தாத் திரையரங்குகளில் இந்த பிலிம் திரையிடப்பட்டு காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியை கண்ணுற்ற பாக்தாத் வாழ் முஸ்லிமல்லாத பல பிரமுகர்களின் குடும்பங்கள் இஸ்லாத்தில் இணைந்தனர். நூல்:- ஏக் ஆலமீ தாரீக் (ஓர் உலக வரலாறு) மெளலானா உஸ்மான் மஅரூஃபி, மஆரிப் மாத இதழ் ஜனவரி 1979 ஆஜம்கட்,  உ.பி.

 

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 241 ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள். அன்னாரின் புனித உடலை யூப்ரடீஸ் நதிக்கரையோரம் அடக்கம் செய்யப்பட்டது. கி.பி. 1937 ஆம் ஆண்டு யூப்ரடீஸ் நதிக்கரையோரத்தில் ஏற்பட்ட வெள்ள அரிப்பின் காரணத்தால் அன்றைய அரசாங்கம் இமாம் அவர்களின் புனித உடலை இடம் மாற்றியது. அப்போது அவர்களுடைய உடல் சிறிது நேரத்துக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டதை போன்று மிகவும் பொலிவுடன் காட்சியளித்தது. புனித உடலை எடுத்து எனுமிடத்தில் "ஹைதர் கானா" எனுமிடத்திற்கு தெற்குப் பகுதியில் "ஆரிஃப் அகா" மறுஅடக்கம் செய்யப்பட்டது. அவ்விடத்தில் "இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் துயில் கொள்ளும் இடம்" என்று எழுதப்பட்டுள்ளது. நூல்:- மராகிதே பக்தாத்


மலேசியாவில் “கிரிக்” என்ற ஊருக்கு அருகில் ஒரு நீர்த்தேக்கம் கட்டப்படுவதற்காக சில வாரங்களுக்கு முன் தொழிலாளர்கள் நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு மனித உடல்களை அவர்கள் கண்டுபிடித்தனர். சமீப காலத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடல்களைப் போல் அவை இருந்தன.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்த உள்ளூர் பெண்களின் சடலங்களே அவை என்று மாநில மத விவகார கவுன்சிலின் தலைவர் டத்தோ ஹாஜி அகமது சாஹிப் உறுதிப்படுத்தினார். அவற்றில் ஒன்று, மூன்று வருடங்களுக்கு முன்பு மரணமடைந்த மருத்துவம் பார்க்கும் பெண்ணின் உடல். மற்றொன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரசவத்தின்போது உயிர் துறந்த பெண்ணின் உடல் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இரு சடலங்களும் சிறிதளவுகூட அழிவு, சிதைவு இல்லாமல் இருந்தன. நாற்றம் வீசவில்லை. ஆனால், உடலைச் சுற்றி போர்த்தப்பட்டிருந்த துணி மட்டும் இற்றுப் போயிருந்தது.

 

பரிசுத்தமான நிலையில் மரணமடைபவர்களின் சடலம் இப்படி அழியாமல் இருக்கும் என்றும், இரு பெண்களும் திருக்குர்ஆன் மனப்பாடம் செய்துள்ளவர்களாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். உறவினர் அந்த இரு உடல்களையும் நான்கு மைலுக்கு அப்பால் புதிய இடத்தில் மறுபடியும் முறைப்படி அடக்கம் செய்தனர். நன்றி: ஆனந்த விகடன் (4-4-1975)

 

உத்தரப்பிரதேசம் சஹாரன்பூர் மாவட்டம் மிர்ஷாப்பூர் என்ற ஊருக்கு பக்கத்தில் “ஷாஹ்பூர்” என்ற கிராமத்தில் மெஹந்தி ஹசன் என்ற 55 வயதுடையவர் இறந்துவிட்டார். இவரை அடக்கம் செய்வதற்கு மண்ணறைக்குள் இறங்கியவர் ஏதோ நெருப்பில் கால் வைத்திருப்பது போல் பயங்கர சூடும் கொந்தளிப்பையும் உணர்ந்தார். அவர் மிக அவசரத்துடன் சடலத்தை மண்ணறையில் வைத்துவிட்டு வெளியேறினார். அப்போது அந்த இடம் முழுவதும் நெருப்புக்காற்று அனலுடன் வீசத் தொடங்கியது. இந்நிகழ்வு நடந்தபோது இந்த ஊரில் கடுமையான குளிர்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிறகு மண்ணறையை விரைவில் சரி செய்துவிட்டு மைய வாடிக்கு வெளியே வந்து பாத்திஹா ஓதப்பட்டபோது, அடக்கப்பட்ட மண்ணறையில் இருந்து காதால் கேட்க முடியாத அளவுக்கு மிக பயங்கரமான சப்தங்கள் கேட்டன. அதை அங்கிருந்த அனைவரும் செவிமடுத்தனர். சிறிது நேரத்தில் அந்த மண்ணறையில் நெருப்பு ஜுவாலைவிட்டு எரிந்தது. இதை பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் பயத்தோடு அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினர். இந்நிகழ்வு சுற்றியுள்ள கிராமங்களுக்கும் தெரிந்து,  பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். இறந்தவர் எப்படிப்பட்டவர் என்று விசாரிக்கப்பட்டபோது, "இறந்தவர் பள்ளிவாசலில் இருந்து கொண்டே மது குடிப்பதையும் அதை விற்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்" என்பது தெரியவந்தது. செய்தி: பைசல் உருது இதழ், நன்றி: முஸ்லிம் முரசு (1-4-1988)

 

அல்லாஹுத்தஆலா நம்மை இறைநம்பிக்கையாளர்களாக மரணமடையச் செய்து, மண்ணறை வேதனையைவிட்டும் பாதுகாப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னைசெல்: 9840535951

 

No comments:

Post a Comment

மரண வேதனை

  மரண வேதனை   وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ மரணத்தின் சிரமம் மெய்யாகவே வந்துவிடும் சமயத்தில...