Search This Blog

Wednesday, 11 May 2022

அடிக்கலாமா?

 

அடிக்கலாமா?

 

وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ

 

மாறு செய்வாள் என்று (மனைவி விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். திருக்குர்ஆன்:- 4:34

 

மனிதனின் இயல்பான குணங்களில் ஒன்று கோபம். பிறர் நம் பேச்சைக் கேட்காதபோதும், நமக்கு தக்க மதிப்பளிக்காதபோதும் கோபம் ஏற்படுகிறது. அந்தக் கோபத்தில் உச்சகட்டமாக சில நேரங்களில் அடிக்க வேண்டிய நிலை வருகிறது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا قَاتَلَ أَحَدُكُمْ فَلْيَجْتَنِبِ الْوَجْهَ ‏ ) உங்களில் ஒருவர் தம் சகோதரனிடம் சண்டையிட்டால் முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2559 முஸ்லிம்-5090

 

முகம் தான், முகங்களுக்குத் தெரியும் உறுப்பு. அதில் கண், காது, மூக்கு என எல்லா புலன்களும் அமைந்துள்ளன. அது ஒரு மிருதுவான பகுதி. எனவே, முகத்தில் அடிப்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடலாம். ஆகவே, முகத்தில் அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மனைவி, பிள்ளைகள், பணியாள், மாணவன் உள்ளிட்டோரை படிப்பினைக்காக அடிப்பதற்கும் பொருந்தும்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تَجْلِدُوا فَوْقَ عَشْرَةِ أَسْوَاطٍ إِلاَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ) அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்காதீர்கள். அறிவிப்பாளர்:- அபூபுர்தா (ரலி) அவர்கள் நூல்:-  புகாரீ-6850, முஸ்லிம்-3517, அபூதாவூத்-4491

 

எல்லை மீறினால்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ( لاَ تَضْرِبُوا إِمَاءَ اللَّهِ ) “அல்லாஹ்வின் அடிமைகளை (உங்கள் மனைவியரை) அடிக்காதீர்கள்” என்று கூறினார்கள். இதன் பின்னர் உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து, "நாயகமே! (தங்களுடைய இந்தக் கட்டளையின் காரணமாக கணவன்மார்கள் தம் மனைவியரை அடிப்பதில்லை. இதனால்) மனைவிமார்கள் துணிச்சல் பெற்று எல்லை மீறி நடக்கின்றனர்" என்று முறையிட்டார்.

 

(இதை செவியுற்ற நபியவர்கள், "அப்படியானால், அத்தகைய பெண்களை அடிக்கலாம்" என அனுமதியளித்து விட்டார்கள்.) பிறகு நபியவர்களின் மனைவியரிடம் பல பெண்கள் வந்து தன் கணவன்மார்கள் தம்மை அடிப்பதாக முறையீடு செய்தனர். இதன் பின்னர் நபியவர்கள், ( لَقَدْ طَافَ بِآلِ مُحَمَّدٍ نِسَاءٌ كَثِيرٌ يَشْكُونَ أَزْوَاجَهُنَّ لَيْسَ أُولَئِكَ بِخِيَارِكُمْ ) "முஹம்மதின் மனைவியரிடம் பல பெண்கள் வந்து தன் கணவன்மார்கள் குறித்து இவ்வாறெல்லாம் முறையிட்டுள்ளனர். (அவ்வாறு நடந்துகொள்ளும்) கணவன்மார்கள் உங்களில் சிறந்தவர் அல்லர். (மாறாக, தம் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்து கொள்பவர் உங்களில் சிறந்தவர் ஆவார்) என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- இயாஸ் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1834, இப்னுமாஜா-1975

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يُسْأَلُ الرَّجُلُ فِيمَا ضَرَبَ امْرَأَتَهُ )  (மார்க்கம் அனுமதித்த முறையில்) தனது மனைவியை அடித்த கணவனிடம் ஏன் அவளை அடித்தாய் என (மறுமைநாளில்) கேட்கப்படமாட்டார். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1835, இப்னுமாஜா-1976

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( وَلاَ تَضْرِبِ الْوَجْهَ ) "(அவள் தவறு செய்தால்) அவளது முகத்தில் அடிக்காதீர்கள். (அபூதாவூத்-1830) மேலும், ( فلا تضرِبَنَّ ظَعينتَكَ ضَرْبَكَ أُمَيَّتَكَ ) அடிமைகளை அடிப்பதைப் போன்று உங்கள் மனைவியரை அடிக்காதீர்கள்" (அபூதாவூத்-123) என்று கூறினார்கள்.

 

மனைவி மாறு செய்யும் போக்கு கொண்டவளாகவும், தொந்தரவு செய்பவளாகவும் இருந்தால் திருமறையின் அறிவுரைக்கேற்ப அவளுக்கு மென்மையாக அறிவுறுத்த வேண்டும். அதனாலும் அவள் திருந்தவில்லையெனில் வீட்டில் கணவன் தன் படுக்கையை தனியாக்கிக் கொள்ளவேண்டும். இருவருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை வெளியில் உள்ளவர்கள் அறியக்கூடாது. ஏனெனில், தம்பதியரின் மனமுரண்பாட்டை வெளியே காட்டிக் கொள்வது கண்ணியம் அல்ல.

 

இவ்வாறு செய்து மனைவி திருந்தவில்லையெனில், அவளை அடிக்கலாம். ஆனால், அவள் முகத்தில் அடிக்கக்கூடாது. மேனியில் அடிக்கும் போது எலும்பு முறிந்துவிடும் அளவுக்கு காயமாகும் அளவுக்கு காட்டுத்தனமாக அடிக்கக்கூடாது. சாப்பாட்டில் உப்பு போதவில்லை; உரப்பு போதவில்லை; துவைத்த ஆடையில் சரியாக அழுக்குப் போகவில்லை என்று சிறு சிறு விஷயத்திற்கெல்லாம் அடிக்கக்கூடாது. இந்தக் கருத்துகளைத் தான் தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.

 

அடிமைகளை நன்கு அடியுங்கள். மனைவியரை அடிக்காதீர்கள் என்று அர்த்தமல்ல. மாறாக, மனிதர்கள் தம் அடிமைகளுடன் எவ்விதம் நடந்து கொள்கிறார்களோ அப்படி தம் மனைவியிடம் நடந்து கொள்ளக்கூடாது என்பதே மேற்காணும் நபிமொழியின் கருத்தாகும்.

 

பாசத்திற்கு விரோதமல்ல

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( عَلِّمُوا الصَّبِيَّ الصَّلَاةَ ابْنَ سَبْعِ سِنِينَ ، وَاضْرِبُوهُ عَلَيْهَا ابْنَ عَشْرَةٍ ) உங்கள் பிள்ளைகளுக்கு ஏழு வயதில் தொழுகையைக் கற்றுக்கொடுங்கள். பத்து வயதில் (அவர்கள் தொழாவிட்டால்) அதற்காக அவர்களை அடியுங்கள். அறிவிப்பாளர்:- சமுரா மஅபத் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-417, திர்மிதீ-372

 

பிள்ளைகளுக்கு ஏழு வயதில் இருந்தே தொழுகையை பழக்கப்படுத்தி வர வேண்டும். அவர்கள் பத்து வயது அடையும்போது தொழுகை கடமையாகிவிடும். பின்னர் தொழுகையை விட்டால் அவர்கள் குற்றவாளியாகத்தான் கருதப்படுவார்கள். எனவே, சிறுவ சிறுவர்கள் தொழவில்லை என்றால் காயமின்றி அடிப்பதை மார்க்கம் அனுமதிக்கிறது. பிள்ளைகள் தமது இஷ்டப்படி செல்வதை தடுப்பதற்கு பிரம்படி தேவை.

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கற்பிப்பதற்காக அவர்களை விட்டும் உமது கைத்தடியை அகற்றாதே! (நல்லொழுக்கம் போதிக்க அடிக்க வேண்டிய தேவை ஏற்படின் தயக்கம் காட்ட வேண்டியதில்லை.) அறிவிப்பாளர்:- முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், மிஷ்காத்-61


ஃபிய்யா (ரலி) அவர்கள் தம் மகனார் ஸுபைர் (ரலி) அவர்களை சிறுவயதில் கடினமான வேலைகளுக்கு அடித்து பழக்கிறார்கள். அதன்மூலம் அவர் எதிர்காலத்தில் உடல்பலமுள்ளவராக திகழ வேண்டும் என்று விரும்பினார். இதைக் கண்ட நவ்ஃபல் என்பவர் சஃபிய்யா (ரலி) அவர்களின் குடும்பத்தினரின் மூத்தவர்களிடம் இதைத் தெரிவித்தார். இதுபற்றி குடும்பத்தினர் விசாரித்தபோது சஃபிய்யா (ரலி) அவர்கள், "எனது மகனை விரோதம் பாராட்டி அடித்து வளர்ப்பதாக கூறுவது தவறாகும். அவனை உடல் பலமுள்ளவனாக, உலகமறிந்தவனாக வளர்க்கவே அவ்வாறு நடந்து கொள்கிறேன்" என்று கூறினார்.

 

பிள்ளைகளை பாசத்தோடு வளர்க்கும் பெற்றோர் பிள்ளைகள் தவறு செய்யும்போது அடிக்கவும் தயங்கக்கூடாது. அய்யோ! பிள்ளைகளை அடிப்பதா? என்று எண்ண வேண்டியதில்லை. பிள்ளைகளை வேறு வகையில் சரிவர தண்டிக்க முடியாது. காரணம் மனப்பக்குவம் சரிவர அடையாத நிலையில் பிள்ளைகள் வலி ஒன்றுக்குத்தான் பயப்படுவார்கள். அல்லது மனம் திருந்துவார்கள். அடிப்பதும்கூட சில சமயம் நல்லவனாக மாற்றிட உதவும்.

 

கைகளால் அடிக்கக்கூடாது. சுளீர் என்று வலி தரும் பிரம்பை ஒன்றுக்கு இரண்டாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அவை பரணியில் ஒரு மூலையில் துருத்திக்கொண்டோ, அல்லது ஒரு ஆணியில் மாட்டப்பட்டோ எப்போதும் பிள்ளைகள் கண் பார்வையில் படும்படி இருக்க வேண்டியது அவசியம். ஆனால், அவற்றை சாமானியத்தில் பயன்படுத்தக்கூடாது.

 

அதிகமாகவோ, காட்டுத்தனமாகவோ ஆத்திரம் தீரும் வரை அடிக்கக்கூடாது. உடலில் எங்கும் நெருப்பால் சூடு வைக்க கூடாது. இதனால் பிள்ளைகளுக்கு மழுங்கத்தனமும், மந்தப் புத்தியும், நரம்புத்தளர்ச்சியும் உண்டாகும் என்பது மருத்துவச் செய்தியாகும். அடித்து அடித்தே வளர்க்கப்படும் பிள்ளைகள் நாள்பட நாள்பட அவை முரட்டு குணத்துடன் வளர்ந்து பெற்றோரை படாதபாடு படுத்துவதை பார்க்க முடிகிறது.

 

உள்ளங்கையில் மற்றும் முழங்காலுக்குக் கீழே உறைக்கிற மாதிரி போடலாம். முகத்தில் செயற்கையாக கடுமையை ஏற்றுக்கொள்ளவேண்டும். சிரித்தால் காரியம் கெட்டுவிடும். எடுக்கட்டுமா? என்று கேட்டாலே கப்சிப் என்று ஆகிவிடும்படி அபூர்வமாக வருடத்திலோ அல்லது வாழ்க்கையில் ஓரிரு முறைதான் அதை பயன்படுத்தி இருக்க வேண்டும்.

 

பிள்ளைகளை பாசத்தினால் முதலில் அடிக்காமல் விட்டுவிட்டுப் பின்னர் அவர்கள் கெட்டுப்போனதும் கைசேதப்படுவது பயனற்றது. அடிப்பதை அன்புக்கு விரோதமாக கருதுவதும், பிள்ளைகள் மீதுள்ள பாசத்துக்கு அடையாளமல்ல.

 

பிள்ளைக்கு உடலில் கட்டி உண்டாகிவிட்டது. மருந்து தடவினால் எறியும். அறுவை சிகிச்சை செய்தால் வலிக்கும் என்பதற்காக எந்த அறிவுள்ள பெற்றோரும் அதற்கு சிகிச்சை செய்யாமல் விடமாட்டார்கள். அதுபோல்தான் பிள்ளைகளை நாம் அடிப்பது வேதனைப்படுத்துவதற்கு அல்ல. அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்ப்பதற்குத் தான் என்று விளங்க வேண்டும்.

 

மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அடிக்கக்கூடாது. அது புரியாத வயது. "தோளுக்கு மேல் வளர்ந்து விட்டவன் தோழன்" என்ற முதுமொழிக்கேற்ப பனிரெண்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பிரம்படி பலன் தராது. இந்த வயதினர் உணர்த்தப்பட வேண்டியவர்கள். அடிக்கத்தக்கவர்களல்லர்.

 

பேரறிஞர் லுக்மான் அல்ஹக்கீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். வயலுக்கு நீர் பாய்ச்சுவது எவ்வளவு அவசியமோ அதுபோல், பிள்ளைகளை அடித்து வளர்ப்பது அவசியமாகும். நூல்:- தஃப்ஸீர் துர்ருல் மன்ஸூர்

 

நியாயத்தை நிலைநாட்ட

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது கைகளால் எதையும் எப்போதும் அடித்ததில்லை. எந்தப் பெண்ணையும், எந்த ஊழியரையும் அடித்ததில்லை. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போதே தவிர. நூல்:- முஸ்லிம்-4651, அபூதாவூத்-4154 , இப்னுமாஜா-1974

 

உபை பின் கலஃப் என்ற கொடியவன் உஹதுப் போர்க்களத்தில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களைப் பார்த்துவிட்டு கொலைவெறியுடன் நபியவர்களை நோக்கி விரைந்து வந்தான். அப்போது நபியவர்கள் அருகிலிருந்த ஹாரிஸ் பின் சிம்மா (ரலி) அவர்களிடமிருந்து ஒரு சிறு ஈட்டியை வாங்கி அவனது கழுத்தை குறிபார்த்து எறிந்தார்கள். அந்த ஈட்டி அவனது கழுத்தை உராய்ந்து சென்று சிறிய காயத்தை ஏற்படுத்தியது. அவனுக்கு அதனால் ஏற்பட்ட வலியோ மிகக் கடுமையாக இருந்தது. அவன் ஒட்டகத்தில் அமர முடியாமல் பலமுறை கீழே விழுந்து விழுந்து எழுந்தான். நூல்:- சீரத் இப்னு ஹிஷாம்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த நலனுக்காக யாரையும் அடித்ததில்லை. அதே சமயத்தில் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போதும், இறைச் சட்டம் மீறப்படும்போதும், நியாயம் சீரழியும் போதும் அதற்காக தண்டிப்பார்கள். நீதியை நிலை நாட்டுவார்கள்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியரையோ, பிள்ளைகளையோ, பேரப்பிள்ளைகளையோ, வேலைக்காரர்களையோ யாரையும் எப்போதும் அடித்ததில்லை. ஓரிறைக் கொள்கையை எடுத்துரைத்தற்காக தாயிஃப் நகர் போன்ற இடங்களில் நபியவர்களை இறைமறுப்பாளர்கள் அடித்திருந்தார்கள். அப்போதும் கூட நபியவர்கள் அவர்களை திரும்ப அடித்ததில்லை ஏசியதில்லை.

 

தண்டனையின் போது

 

அல்லாஹ் விதித்த இக்கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவ்விருவருடைய விஷயத்தில் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது.   திருக்குர்ஆன்:- 24:2

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மது அருந்திய ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவரை பேரீச்ச மட்டையால் ஏறக்குறைய நாற்பது முறையை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் (தமது ஆட்சிக்காலத்தில்) அவ்வாறு செய்தார்கள்.

 

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது (கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் இஸ்லாம் பரவியது. மக்களின் வாழ்க்கை வசதிகள் பெருகி குடிப்பழக்கம் அதிகரித்தது. அப்போது) மக்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (திருக்குர்ஆனில் கூறப்பட்ட) குற்றவியல் தண்டனைகளிலேயே குறைந்தபட்ச தண்டனையாக எண்பது (சாட்டையடிகள் வழங்கலாம்) என்று கூறினார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். நூல்:- முஸ்லிம்-3512, அபூதாவூத்-3883

 

இன்றைய நவீன உலகில் தண்டனைகள் குற்றங்கள் களையவல்லவையாக இல்லாத காரணத்தால் நாளுக்குநாள் குற்றங்களின் எண்ணிக்கை பெருகி வருகின்றன. குற்றங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே இஸ்லாம் பல சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

மது அருந்தினாலோ, அல்லது வதந்தியை பரப்பி விட்டாலோ, அல்லது திருமணம் ஆகாதவர் விபச்சாரம் செய்து விட்டாலோ, சாட்டையடிகள் கொடுக்க வேண்டும். திருடினால் கையை வெட்ட வேண்டும். இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் வெளியேறி வன்முறைகளில் ஈடுபட்டாலோ, அல்லது திருமணமானவர் விபச்சாரம் செய்து விட்டாலோ, அல்லது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுவிட்டாலோ, அல்லது ஒரு மனித உயிரை அநியாயமான முறையில் கொலை செய்து விட்டாலோ மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் இஸ்லாம் குற்றவியல் தண்டனைகளை விவரிக்கிறது. இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் குற்றவாளியை மீண்டும் குற்றம் செய்யவிடாமல் தடுக்கிறது. அவ்வாறான தண்டனைகளை நிறைவேற்றும்போது இரக்கம் காட்டக்கூடாது என்கிறது மேற்காணும் திருவசனம்.

 

அரவணைப்புகுரியவர்கள்

 

முஆவியா பின் சுவைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் எங்கள் அடிமை ஒருவன் என் கன்னத்தில் அறைந்து விட்டு ஓடி விட்டேன். பிறகு செய்தி அறிந்த என் தந்தை அந்த அடிமையையும், என்னையும் அழைத்து ( امْتَثِلْ مِنْهُ )இவனிடமிருந்து நீ பழி தீர்த்துக் கொள்! என்று (அடிமையிடம்) கூறினார்கள். ஆனால், அந்த அடிமை என்னை மன்னித்து விட்டார். நூல்:- முஸ்லிம்-3410

 

அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவகள் கூறியதாவது. நான் ஒருமுறை என் அடிமை அடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு பின்னால் இருந்து யாரோ அபூமஸ்ஊதே! நினைவிருக்கட்டும். இவர் மீது உனக்கிருக்கும் அதிகாரத்தைவிட பலமடங்கு அதிகாரம் உம் மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது என்று கூறுவதை செவியுற்றேன். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். உடனே நான், "நாயகமே! அல்லாஹ்வின் உவப்புக்காக (இவரை நான் விடுதலை செய்து விட்டேன்) இவர் சுதந்திரமானவர்" என்று கூறினேன். அப்போது நபியவர்கள், ( أَمَا إِنَّكَ لَوْ لَمْ تَفْعَلْ لَلَفَعَتْكَ النَّارُ ) "அறிந்து கொள்! நீ இவ்வாறு செய்திருக்காவிட்டால் நரகம் உம்மை எரித்திருக்கும்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-3414, அபூதாவூத்-4492

 

( مَنْ لَطَمَ مَمْلُوكَهُ أَوْ ضَرَبَهُ فَكَفَّارَتُهُ أَنْ يُعْتِقَهُ ) அடிமைகளை அடித்து துன்புறுத்தி தீங்கிழைத்து விட்டதற்காக பிராயச்சித்தமாக அவ்வடிமையை உரிமை விடுதல் தான் நல்லது. (அபூதாவூத்-4500) என்ற நபிமொழியை அந்த நபித்தோழர் செயல்படுத்தினார். இதனால் அவர் நரகத்தை விட்டும் காப்பாற்றப்பட்டார். ஒவ்வொரு நபித்தோழரும் ஊழியர் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து அவர்களின் உரிமைகளை பாதுகாத்து வந்தனர்.

 

வேலைக்கு சேர்த்து விட்டோம் இனி அவன் நமது சொல்படி நடக்க வேண்டும், என்ற ரீதியில் அதிக வேலை கொடுத்து ஊழியரை சக்கையாய் பிழிந்தெடுப்பதும், நாம் சொன்ன வேலையை முடிப்பதற்கு தாமதமாகி விட்டாலோ அவனை அடிப்பதும், உதைப்பதும், அசிங்கமாக ஏசுவதும், நீ என்னிடம் கைநீட்டி சம்பளம் வாங்குபவன் தானே என்று கேவலமாக எண்ணுவதும் பரவலாகிவிட்டது. இந்நிலை மாறவேண்டும்.

 

அல்லாஹ் நம்மை முதலாளியாகவும் அவர்களை நமக்கு ஊழியர்களாகவும் ஆக்கியுள்ளான். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை முதலாளியாகவும் அவர்களுக்கு நம்மை ஊழியர்களாகவும் ஆகியிருப்பான். எனவே, ஊழியர்கள் விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும்.

 

சில நேரங்களில் அறியாமையால் நமது ஊழியர்களை அடித்து துன்புறுத்தி தவறிழைத்துவிட்டால், உடனே நாம் அவர்களது மனம் குளிரும்படி அவர்களுக்கு ஏதேனும் உபகாரம் செய்துவிட வேண்டும். அல்லது அவர்களிடம் முறையாக மன்னிப்பாவது கேட்டு தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்ள வேண்டும். நமது ஊழியர்கள், நமக்கு கீழே பணியாற்றுபவர்கள் இவர்கள் எல்லாம் நமது அன்பிற்கும் அரவணைப்புக்கும் உரியவர்கள். இவர்கள் ஏதேனும் தவறு செய்து விட்டால் அதை மன்னித்து விடுவதே சிறந்த செயலாகும்.

 

தீய மனிதன்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் எவன் தன் பெற்றோரை அடிப்பதற்காக கையை ஓங்குவானோ மறுமைநாளில் அவனுடைய கைகள் கழுத்துடன் கட்டப்பட்டுப் பழுதாகிய நிலையில் வருவான்" என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், "அவர்களை அடித்துவிட்டால் என்ன தண்டனை கிடைக்கும்?" என்று வினவினர். நபியவர்கள், "அம்மனிதன் 'சிராத்துல் முஸ்தகீம்' பாலத்தை கடக்கும் முன்பே அவனின் கை துண்டிக்கப்பட்டுவிடும். வானவர்களும் அவனை நோவினை செய்வார்கள்" என்று பதிலளித்தார்கள்.

 

மற்றொருமுறை பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவன் தன் பெற்றோரை ஏசுவானேயானால் மண்ணறையில் அவனுடைய விலா புறத்திலிருந்து மழைத்துளிகளைப் போன்று நெருப்புத் துளிகள் பறக்கும்.

 

பெற்றோருக்குத் தொல்லை தருவது என்பது இன்றைக்கு அதிகமாக காணப்படுகிறது. பெற்றோரைத் திட்டுவது, அடிப்பது, மிதிப்பது, ஏன் கொலையும் செய்வது இன்றைக்கு அன்றாட நிகழ்வாகிவிட்டது. தொலைக்காட்சிகளில் பார்த்தாலும், நாளிதழ்களை படித்தாலும் தந்தையை மகன் வெட்டினான். தாயை கொலை செய்த மகன். இது போன்ற செய்திகள் ஏராளம் காணப்படுகிறது.

 

பெற்றோரைப் பார்த்துச் சீ... என்றுகூட சொல்வதற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது. திருக்குர்ஆன்:- 17:23

 

அந்நிலையில் பெற்றோருக்கு பல்வேறு வகைகளில் தொல்லை தருவதை என்னவென்று சொல்வது? பெற்றோரைக் கண்ணியப்படுத்துதல் குறைந்து போய்விட்டதால் மக்களிடையே நிம்மதியான வாழ்க்கையும் வறண்டு போய்விட்டது.

 

குடும்பம் என்கிற நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவதின் அடையாளமாகத்தான் இன்று பல முதியோர் இல்லங்கள் முளைத்திருக்கிறது. அன்பற்ற உணவு, அனுசரணையற்ற தனிமை, பரிவற்ற கவனிப்பு, பட்டுப் படாத பரிமாற்றம் இவையெல்லாம் மனிதர்களின் ஆயுளைக் கூட குறைத்து விடக்கூடியது தானே.

 

பிற உயிரினங்கள் விஷயத்தில்

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ( نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الضَّرْبِ فِي الْوَجْهِ وَعَنِ الْوَسْمِ فِي الْوَجْهِ ) (பிற உயிரினங்களின்) முகத்தில் அடிக்க வேண்டாம். என்றும் (அவற்றின்) முகத்தில் அடையாளச் சூடு போட வேண்டாம் என்றும் தடைசெய்தார்கள். நூல்:- முஸ்லிம்-4297

 

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள், "எவரும் குதிரைகளின் மூக்கை குடைந்து கடிவாளமிடவோ, இரும்பாலான தார்குச்சியால் குத்தக்கூடாது. மீறுவோர் தண்டிக்கப்படுவார்கள்" என்று ஆணை பிறப்பித்தார்கள்.

 

பிற உயிரினங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. மிருகங்கள் சேட்டை செய்திடும்போது அதற்கு பயத்தை உண்டாக்குவதற்காக பலத்த காயம் உண்டாகாத அளவுக்கு லேசாக அதை அடிக்கலாம். அப்போதும் அதன் முகத்தில் அடிக்கக் கூடாது.

 

தனது விவசாயத்தில் ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் மேய்ந்து நாசப்படுத்திவிட்டால், உடனே அந்த மிருகத்தைப் பிடித்து அதன் உறுப்புக்களை சேதப்படுத்துவது கிராமப்புறங்களில் சாதாரண நிகழ்வாகும். மிருகங்கள் செய்த குற்றங்களுக்காக மிருகங்களை தண்டிக்கக்கூடாது. மாறாக, அந்த மிருகங்களை முறைப்படுத்தி வளர்க்காத அதன் உரிமையாளர்களைத் தான் தண்டிக்க வேண்டும் என்கிறது இஸ்லாம்.

 

சிலர் சில சமயம் கையில் தடியோ, சாட்டையோ எடுத்துச் செல்லும்போது எதிரில் நாய், பூனை, கழுதை போன்ற உயிரினங்கள் ஏதேனும் வந்தால் எந்த காரணமுமின்றி அதை ஒரு விளாசு விளாசுவார்கள். அந்த உயிரினங்கள் 'வீல்' என்று கத்திக்கொண்டு ஓடும். இந்தப் பழக்கத்தின் விளைவால் "நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம்" என்ற சொல்வழக்கு உருவாகியுள்ளது. இது ஒரு பாவ காரியமாகும்.

 

தகராறின் போது

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முஸ்லிமுக்கும், ஒரு யூதருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் அந்த முஸ்லிம், "உலகத்தார் அனைவரையும்விட (தற்போதைய) இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தான் மேன்மையானவர்" என்றார். அந்த யூதர், "உலகத்தார் அனைவரையும்விட (இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட) இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் தான் மேன்மையானவர்" என்றார்.

 

அதைக்கேட்டு கோபம் கொண்ட அந்த முஸ்லிம் தன் கையால் ஓங்கி அந்த யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். இந்த வழக்கை அந்த யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார். நபியவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் விசாரித்து விட்டு, ( لاَ تُخَيِّرُونِي عَلَى مُوسَ ) "மூசாவைவிட என்னை சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள்" என்று கூறி, அந்த முஸ்லிமின் செயல் தவறானது என்று சுட்டிக் காட்டினார்கள். நூல்:- புகாரீ-2411

 

பிறரிடம் நமக்கு தகராறு ஏற்படும் போது உடனே நாம் கை நீட்டி விடக்கூடாது. முதல் அடி நாம் கொடுத்ததாக இருக்க வேண்டும் என்று சிலர் தவறாக முனைப்புடன் திரிகின்றனர். நாம் அவர்களை மூளையால் வெற்றி கொள்ளவேண்டும். அல்லது சட்டத்தால் தண்டிக்க வேண்டுமே தவிர, நம் கைகளால் அல்ல.

 

எந்த கைகலப்பிலும் சரி சமரசம் செய்கின்றவர்களோ, தண்டனை தருகின்றவர்களோ, நியாயம் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் சரி, யார் முதலில் கை நீட்டினார்கள்? என்ற கேள்வியைத் தான் முதலில் கேட்கிறார்கள். அவனுக்குத்தான் அறிவில்லை என்றால், இவருக்கு எங்கே போச்சு புத்தி என்று எதிரியின் பக்கம் சாயத்தொடங்குவார்கள். கைநீட்டி ஒரு பக்கம் மிகவும் பலவீனம் ஆகிவிடுகிறது.

 

எந்த பிரச்சினை என்றாலும் எப்போது வாக்குவாதம் முற்றினாலும் பரபரக்கும் கைகளுக்கு ஒன்றைச் சொல்லி விடவேண்டும். கையே! நீ கட்டுப்பாட்டுக்குள்ளேயே இரு! என் மானத்தை வாங்கி, என்னை பாளுங்கிணற்றுக்குள் தள்ளி விடாதே! என்று அதற்கு உடனே செய்தி அனுப்ப வேண்டும்.

 

யார் முதலில் சிறப்பாகக் குத்து விட்டார்கள். யார் முந்திக்கொண்டார்கள் என்பது குத்துச் சண்டைக்கு வேண்டுமானால் வெற்றியைத் தரும் செயலாக அமையலாம். வாழ்க்கையின் வெற்றிக்கு இந்த பழக்கம் சரிப்பட்டு வராது.

 

என்னதான் நியாயப்படுத்தப்பட்டாலும் தகராறின் போது கை நீளுவது என்பது மோசமான செயல் தான். இது நற்குணம் உள்ளவர்களின் பண்பல்ல.

 

ஆகவே, அல்லாஹ் நம்மை நற்பண்புள்ள மேன்மக்களாக வாழ செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

மரண வேதனை

  மரண வேதனை   وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ மரணத்தின் சிரமம் மெய்யாகவே வந்துவிடும் சமயத்தில...