Search This Blog

Monday, 24 May 2021

இணங்கிப் போகாதே!

 

இணங்கிப் போகாதே!


وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا


எனினும் (இறைவன் என்று) நீ அறிந்து கொள்ளாத யாதொரு பொருளை எனக்கு இணை வைக்கும்படி  உன்னை அவ்விருவரும் நிர்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு இணங்க வேண்டாம். இம்மையில் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்! திருக்குர்ஆன்:- 31:15


ஒரு மனிதன் தனது பெற்றோர், ஆசிரியர், ஆட்சியாளர், முதலாளி ஆகியோருக்கு கட்டுப்பட வேண்டும். மேலும் ஒரு பெண் தன் கணவனுக்கு கட்டுப்பட வேண்டும். ஆனால் அவர்கள் பாவக் காரியங்களுக்கு துணை போகச் சொன்னால் அதற்கு கட்டுப்படக் கூடாது என்று இஸ்லாம் இயம்புகிறது.


இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாக பின்பற்றவேண்டும். படைத்தவனுக்கு மாறு செய்து படைப்பினங்களுக்கு வழிபடக்கூடாது. பெற்றோர், கணவர், ஆசிரியர், முதலாளி, ஆட்சியாளர் என யாராக இருந்தாலும் சரியே, அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் படியான ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னால் அவர்களது சொல்லுக்கு இணங்கிப்போகக் கூடாது. மார்க்கத்தை பேணும் விஷயத்தில் யாரையும் பொருட்படுத்தக் கூடாது. யாருடைய மனமும் புண்படுமே என்ற கவலையும் தேவையில்லை. நாம் அல்லாஹ்வை திருப்திப்படுத்தினால், அவன் மக்களின் உள்ளங்களை திருப்தியடையச் செய்வான்.


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( عَلَى الْمَرْءِ الْمُسْلِمِ السَّمْعُ وَالطَّاعَةُ فِيمَا أَحَبَّ وَكَرِهَ إِلاَّ أَنْ يُؤْمَرَ بِمَعْصِيَةٍ فَإِنْ أُمِرَ بِمَعْصِيَةٍ فَلاَ سَمْعَ وَلاَ طَاعَةَ ) இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியுறுவதும் (அதற்குக்) கீழ்படிவதும்  கடமையாகும். இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியுறுவதோ (அதற்குக்) கட்டுப்படுவது கூடாது.       அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3751


கொண்ட கொள்கை


சஅத் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. (தலைப்பில் காணும்)  திருவசனம் (31:15) என் தொடர்பாகவே அருளப்பெற்றது. நான் என் தாயாருக்கு நன்மை செய்யும் மனிதனாக இருந்து வந்தேன். நான் இஸ்லாமை ஏற்ற போது என் தாயார், சஅதே! உன்னிடம் நான் புதிதாகக் காணும் இந்த வழிமுறை என்ன? கண்டிப்பாக நீ இந்த மார்க்கத்தைக் கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் நான் சாகும் வரை எதையும் உண்ணவோ பருகவோ மாட்டேன். அப்போது என்னால் நீ குறைகூற படுவாய். "தாயைக் கொன்றவனே! எனத் தூற்றப்படுவாய்" என மிரட்டினார்.


இதைக் கேட்ட நான் "என் அருமைத் தாயே நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள். நிச்சயமாக நான் எதற்காகவும் எனது இந்த மார்க்கத்தை கைவிடமாட்டேன்" என்று கூறினேன்.


என் தாயார் ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் அப்படியே இருந்தார். மறுநாள் காலை களைத்துப் போயிருந்தார். இரண்டாம் நாளும் (எதையும்) சாப்பிடவில்லை மூன்றாம் நாள் காலை (முந்தைய நாளைவிட) களைத்துப் போயிருந்தார். பின்னர் மூன்றாம் நாளும் எதையும் உண்ணாமல் இருக்க, நான்காம் நாள் காலை கடுமையாகச் சோர்ந்து போனார்.

இதைக் கண்ட நான், ( يَا أُمَّهْ تَعْلَمِينَ وَاللَّهِ لَوْ كَانَتْ لَكِ مِائَةُ نَفْسٍ فَخَرَجَت نَفْسًا نَفْسًا مَا تَرَكْتُ دِينِي هَذَا لِشَيْءٍ فَإِنْ شِئْتِ فَكُلِي وإن شِئتِ لَا تَأكُلِي. فَأَكَلَتْ )  "என் அருமை தாயே அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு நூறு உயிர்கள் இருந்து, அவை ஒவ்வொன்றாக பிரிந்தாலும் எதற்காகவும் எனது இந்த மார்க்கத்தை நான் கைவிடமாட்டேன் இது உங்களுக்குத் தெரியவே செய்யும்.  எனவே, உங்களுக்கு விருப்பம் இருந்தால் உண்ணுங்கள். இல்லையானால் உண்ணாமல் இருங்கள்" என்று திட்டவட்டமாகக் கூறி விட்டேன். அதன்பின் என் தாயார் சாப்பிடலானார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்


தளபதியின் கட்டளை


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا ) உங்களுக்கு அல்லாஹ்வை அஞ்சுவது பற்றி உபதேசம் செய்கிறேன். மேலும் உங்களுக்கு கருப்பு நிற அடிமை, தலைவராக இருந்தாலும் (பயனுள்ளவற்றில் அவரின் பேச்சை) கேட்பதற்கும், கட்டுவதற்கும் உபதேசம் செய்கிறேன்.       அறிவிப்பாளர்:- இர்பாள் பின் சாரியா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூது-4607, திர்மிதீ


அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு ஒரு மனிதரை தளபதியாக்கி, அவரது கட்டளையைச் செவியுற்றுக் கட்டுப்பட்டு நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஒரு கட்டத்தில்) ஏதோ ஒரு விஷயத்தில் படைவீரர்கள் அவரைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அவர், நீங்கள் எனது சொல்லைச் செவியுற்று அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அண்ணலார் உங்களுக்கு கட்டளையிடவில்லையா? என்று கேட்டார். படைவீரர்கள் 'ஆம்' என்றனர். "அவ்வாறாயின்  (இதோ  எரிகின்ற) நெருப்பில் குதியுங்கள்" என்று அவர் உத்தரவிட்டார்.


அப்போது படைவீரர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி "(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத் தானே நாம் அண்ணலாரை நோக்கி வெருண்டோடி  வந்தோம்!" என்றனர். அவ்வாறு அவர்கள் (சிறிது நேரம்) இருந்து கொண்டிருக்க அவருடைய கோபம் தணிந்தது;  எரிந்துகொண்டிருந்த நெருப்பும் அணைந்தது. பிறகு (மதீனா திரும்பியதும்) அண்ணலாரிடம் நடந்ததைத் தெரிவித்தனர்.  அண்ணலார், ( لَوْ دَخَلُوهَا مَا خَرَجُوا مِنْهَا إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ ) "அதில் (மட்டும்) அவர்கள் குதித்திருந்தால்  அதிலிருந்து அவர்கள் (ஒருபோதும்) வெளியேறியிருக்க மாட்டார்கள்.  கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில் தான்" என்று சொன்னார்கள். நூல் புகாரீ-4340 முஸ்லிம்-3753


கற்பைப் பேணுதல்


ஜாபிர் ரலி அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலுக்கு முசைகா என்ற அடிமைப்பெண் இருந்தாள். அவளை (விபச்சாரம் என்ற) பாவச்செயலில் (ஈடுபடுமாறு) அப்துல்லாஹ் பின் உபை நிர்பந்தித்து வந்தான். அவள் ஓரளவு நல்லவளாக இருந்தாள். எனவே அதற்கு மறுத்து வந்தாள்.


அப்போதுதான் அல்லாஹுத்தஆலா கற்பைப் பேண விரும்பும் உங்கள் அடிமைப்பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் (அற்பப்) பொருளை  நீங்கள் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு  நிர்ப்பந்திக்காதீர்கள். (24:33) என்ற இந்த வசனத்தை அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்


உருட்டல் மிரட்டல்


இஸ்லாமிய கொடிய விரோதியான ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா (அலை) அவர்கள், மூஸா (அலை) அவர்களை இறைத் தூதராக ஏற்றுக்கொண்டு இறை நம்பிக்கையாளராக ஆகிவிட்டார்கள்.


இதை அறிந்த  ஃபிர்அவ்ன் தனது ஆசியா (அலை) அவர்களிடம், "உனக்கு எவ்வளவு தைரியம்?  மூசாவின் மார்க்கத்தை கைவிட்டு விடு! இல்லையேல், மூசாவின் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை உமக்கும் கொடுக்கப்படும்" என்று பயமுறுத்தினான். ஆனாலும் அம்மையார் அவனின் உருட்டல் மிரட்டலை கண்டுகொள்ளாமல் ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.


இறுதியாக ஃபிர்அவ்ன்,  அம்மையாரை அரைகுறை ஆடையிலாக்கி, முச்சந்தியில் சுடுமணலில் கிடத்தி, கைகளிலும் கால்களிலும் ஆணியடித்துச் சித்திரவதை செய்தான். பிறகு தனது பணியாட்களை ஏவி ஒரு பெரும் பாறாங்கல்லைத் தூக்கி  அந்த அம்மையார் மீது போட செய்தான். அக்கணமே அம்மையாரின் புனித உயிர் பிரிந்து சென்றது.


பெரும் பாவங்களில் உள்ளவை


மாதவிடாய் காலத்தில் பெண்களைவிட்டு விலகி, அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். திருக்குர்ஆன்:- 2:222


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَتَى حَائِضًا أَوِ امْرَأَةً فِي دُبُرِهَا فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صلى الله عليه وسلم ) மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்ணுடன் உடலுறவு கொண்டவர், அல்லது பெண்ணின் ஆசன வாயில் உடலுறவு கொண்டவர், முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தை நிராகரித்துவிட்டார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-125

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَنْظُرُ اللَّهُ إِلَى رَجُلٍ أَتَى رَجُلاً أَوِ امْرَأَةً فِي الدُّبُرِ ) பெண்ணின் ஆசனவாயில் புணர்ந்த மனிதனை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1086


"கணவன் மனைவியை உடலுறவுக்கு அழைத்தால் மறுக்கக்கூடாது"  என்பது நபிமொழி. இது பொதுவாக சொல்லப்பட்டவை. ஆனால், மனைவியின் மாதவிடாய் நாட்களிலும், அவளின் ஆசனவாயிலும் உறவு கொள்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட பெரும் பாவங்களில் உள்ளவையாகும். எனவே, இது விஷயத்தில் கணவன் எவ்வளவு வற்புறுத்தினாலும் மனைவி கட்டுப்படக்கூடாது.


கட்டுப்பட வேண்டியவர்களுக்கு பயனுள்ள நற்காரியங்களில் மட்டும் கட்டுப்பட வேண்டும். எனவே,  இஸ்லாம் கூறும் நற்போதனைகளை ஏற்று செயல்படக்கூடிய நல்ல முஸ்லிம்களாக வாழ அல்லாஹ் நமக்கு நல்லுதவி புரிவானாக!ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

மரண வேதனை

  மரண வேதனை   وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ மரணத்தின் சிரமம் மெய்யாகவே வந்துவிடும் சமயத்தில...