அர்த்தமுள்ள அழுகை
فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا
அவர்கள் குறைவாக சிரிக்கட்டும். அதிகமாக அழட்டும். திருக்குர்ஆன்:-9:82
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் சில காரியங்களுக்காக
எப்பொழுதாவது அழுதிருப்பான். எதற்காகவும் எப்பொழுதும் அழுததில்லை என்று எந்த மனிதனாலும்
சொல்ல முடியாது. உலகத்தில் வாழும்பொழுது நாம் அழுத அழுகை நமக்கு மறுமை வாழ்க்கைக்கு
பயன் தருமா? என்பதை நாம் சிந்திக்க
வேண்டும்.
அழுகை என்பது இருவகை உண்டு. ஒன்று உலகம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக
அழுவது. மற்றொன்று மறுமை சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக அழுவது.
இன்றைய முஸ்லிம்களின் அழுகை பெரும்பாலும் உலகம் சம்பந்தப்பட்ட
காரியங்களைச் சார்ந்திருக்கிறது. அதாவது, தனக்கு ஏற்படும் துன்ப துயரங்களுக்கும், தன்னைச் சார்ந்தவர்களின் மரணம் மற்றும் துன்ப துயரங்களுக்கு
மட்டுமே அழுகின்றனர்.
ஆனால், தாம் செய்துவிட்ட
சிறிய, பெரிய பாவங்களை நினைத்து அல்லாஹ்வை
அஞ்சி அழுவதில்லை. தன்னுடைய மறுமை வாழ்க்கையும் எண்ணி அழுவதில்லை.
தன்னுடைய பொறுப்பிலுள்ள மனைவி, மக்கள் கடமையாக ஐவேளை தொழுகையை தொழாமல், நோன்பு காலங்களில் நோன்பு நோற்காமல் பல விதமான பாவக்காரியங்களில்
மூழ்கி, மார்க்கத்திற்கு மாறுபட்டு
நடக்கின்றார்களே நாளை நாம் அல்லாஹ்விடம் இது குறித்து என்ன பதில் கூறுவோம்?
என்றெண்ணி அஞ்சி அழுவதில்லை.
நம்முடைய அழுகைகள் அனைத்திலும் மறுமையில் வெற்றியை குறிக்கோளாக
இருப்பது மிகவும் சிறந்தது. நமது முன்னோர்களின் வழிகாட்டிய முறையும் அதுவே தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيْتُمْ كَثِيرًا ) நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின், குறைவாகவே சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2235
வானவர்களின் அச்சம்
இறைநம்பிக்கை கொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைத்தும்
அவன் இறக்கி வைத்த சத்திய(வசன)ங்களை கவனித்தும், பயப்படக்கூடிய நேரம் இன்னும் வரவில்லையா? திருக்குர்ஆன்:- 57:16
ஷைத்தான் இறைவனுக்கு அடிபணிய மறுத்தான். இறைக்கட்டளைகளை புறக்கணித்தான்.
அவனை இறைவன் கடுமையான முறையில் தண்டித்தான். அந்தத் தண்டனையைப் பார்த்த வானவர்கள் அனைவரும்
அஞ்சி நடுங்கினார்கள். வானவத் தலைவர்களான ஜிப்ரீல் (அலை) அவர்களும் மீக்காயீல் (அலை)
அவர்களும் நிலை கலங்கி அழுதார்கள். அப்போது இறைவன், "ஏன் அழுகின்றீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "இறைவா நீ புகழுக்குரியவன். உன் அருட்கொடைகள் மக்களைச்
சூழ்ந்துள்ளது. ஆனால், உன் கோபம் வானவர்களாகிய
எங்களையே நிலைகுலையச் செய்து விட்டது" என்று பதிலளித்தார்கள். நூல்:- இஹ்யா
பாவம் என்றால் என்னவென்று அறியாத வானவத் தலைவர்களே அல்லாஹுத்தஆலாவின்
கோபம் கண்டு அஞ்சி அழுகின்றார்கள் என்றால் பாவத்தில் பின்னிப்பிணைந்த மனித இனம் அல்லாஹ்வின்
கோபத்தை நினைத்து எப்படி அஞ்சி அழாமல் இருக்கமுடியும்?
அல்லாஹ்வுக்கு கோபமூட்டும் பாவக்காரியங்களில் ஈடுபடாமல் நன்மையும்
நம் குடும்பத்தினரையும் தடுத்து நிறுத்துவதோடு, நாம் செய்துவிட்ட பாவங்களை நினைத்து அழுது பாவமன்னிப்பு தேடிட
வேண்டும்.
நன்மைகள் குறைந்துவிட்டது
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَتِ الدُّنْيَا هَمَّهُ فَرَّقَ اللَّهُ عَلَيْهِ أَمْرَهُ
وَجَعَلَ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا إِلاَّ مَا
كُتِبَ لَهُ وَمَنْ كَانَتِ الآخِرَةُ نِيَّتَهُ جَمَعَ اللَّهُ لَهُ أَمْرَهُ
وَجَعَلَ غِنَاهُ فِي قَلْبِهِ وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ ) யாருக்கு உலக வாழ்வு (குறித்து மட்டுமே) கவலைக்குரியதாகிவிட்டதோ
அவருடைய காரியங்களை அல்லாஹ் சீர்குலைத்து விடுவான். அவரது ஏழ்மையை அவரது கண்களுக்கு
முன்னாலேயே ஆக்கிவிடுவான். அவருக்காக எழுதப்பட்டதைத் தவிர வேறு எதுவும் இவ்வுலகில்
அவருக்குக் கிடைக்கப் போவதில்லை. மறுமை வாழ்வு ஒன்றே எவரது குறிக்கோளாக ஆகிவிட்டதோ
அவருடைய விஷயங்களை அல்லாஹ் அவருக்காக சீரமைத்துக் கொடுப்பான். அவருடைய உள்ளத்தில் அதனை
திருப்திகரமாக ஏற்படுத்திக் கொடுப்பான். இவ்வுலகம் பணிந்த நிலையில் அவரிடம் வரும்.
அறிவிப்பாளர்:- அஃப்பான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4095 முஸ்னது
அஹ்மத், தாரமீ-229, தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ
ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது அருமை மகள் ஃபாத்திமா
(ரலி) அவர்களைப் பார்க்கச் சென்றார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.
மகளின் அழுகையைப் பார்த்து வேதனைப்பட்ட நபியவர்கள் மகளின் நிலையை பார்த்தார்கள். பல
நாள்கள் பசியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நிலை புரிந்தது.
அப்போது நபியவர்கள், "அருமை மகளே! பசியில் அழுகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! பசியின் கொடுமையில்
நான் அழவில்லை. ( صَلَاةُ الرَّجُلِ قَاعِدًا
نِصْفُ الصَّلَاةِ ) 'ஒருவர் அமர்ந்த தொழுதால் அது தொழுகையின் நன்மையில்
பாதியாகும்' என்று நீங்கள் தான்
கூறினீர்கள். (அபூதாவூத்-813) நான் நின்று தொழு முடியவில்லை. எனவே, தொழுகையின் பாதி நன்மைகளை இழந்தவளாகி விட்டேனே என்றெண்ணி
தான் அழுதேன்" என்று பதிலளித்தார். இதைச் செவியற்ற நபியவர்கள் தமது மகளின் மறுமை
சிந்தனை நினைத்து தானும் அழுதார்கள்.
இன்று நம்மில் பலருக்கும் தொழுகையைப் பற்றிய சிந்தனையே இல்லை.
தொழாமல் இருப்பது பெரும் பாவம் என்றே கருதுவதில்லை. தொழாமல் இருந்தால் அல்லாஹ்வுக்கு
கோபம் மூட்டும் என்று அஞ்சி அழுவதில்லை.
மேலும், தொழுகையாளிகளில் சிலர்,
கை கால் வலிக்கின்றது; உடல் மிகவும் களைப்பாக இருக்கின்றது; மூட்டுவலி, முதுகுவலி என்றெல்லாம்
பல காரணங்கள் கூறி உட்கார்ந்து கொண்டு தொழுது தனக்கு சேர வேண்டிய முழு நன்மைகளையும்
குறைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுததற்கு என்ன காரணம்
கூறினார்கள் என்பதை மேற்கண்ட சம்பவத்தின் மூலம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நம்மில் பலர் உலக வாழ்வே முழு குறிக்கோளாக உள்ளது. அதனால் தான்
துன்பம், வறுமை, நோய், தொழில்நஷ்டம் போன்றவர்களை கண்டு அஞ்சி அழுகின்றார்கள். மறுமையின் சிந்தனையற்றவர்களாக
வாழ்கின்றனர்.
நாளை நம் நிலை என்னவாகும்?
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. சல்மான் ஃபாரசீ (ரலி) அவர்கள்
நோய்வாய்ப்பட்டார்கள். அவரை நலம் விசாரிக்க சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் வந்தார்கள்.
அப்போது சல்மான் (ரலி) அவர்கள் அழுதுகொண்டிருக்கக் கண்டார்கள். சல்மான் (ரலி) அவர்களிடம்,
( مَا يُبْكِيكَ يَا أَخِي أَلَيْسَ قَدْ صَحِبْتَ رَسُولَ اللَّهِ ـ
صلى الله عليه وسلم أَلَيْسَ
) "ஏன் அழுகிறீர்கள்?
என் சகோதரரே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்
தோழமை கொண்டிருந்தீர்கள் அல்லவா?" என்று கேட்டார்கள்.
அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், ( مَا أَبْكِي وَاحِدَةً مِنَ اثْنَتَيْنِ مَا أَبْكِي صَبًّا
لِلدُّنْيَا وَلاَ كَرَاهِيَةً لِلآخِرَةِ وَلَكِنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم عَهِدَ إِلَىَّ عَهْدًا فَمَا أُرَانِي إِلاَّ قَدْ تَعَدَّيْتُ . قَالَ
وَمَا عَهِدَ إِلَيْكَ قَالَ عَهِدَ إِلَىَّ أَنَّهُ يَكْفِي أَحَدَكُمْ مِثْلُ
زَادِ الرَّاكِبِ وَلاَ أُرَانِي إِلاَّ قَدْ تَعَدَّيْتُ
) "இந்த இரண்டில் எந்த ஒன்றுக்காகவும்
நான் அழவில்லை. அதாவது, உலக ஆசைக்காகவோ மறுமையை
வெறுத்தோ நான் அழவில்லை. எனினும், அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுரை கூறியிருந்தார்கள். நான் அதில் வரம்பு மீறிவிட்டதாகவே
கருதுகிறேன்" என்று கூறினார்கள்.
சஅத் (ரலி) அவர்கள், "நபியவர்கள் உமக்கு கூறிய அறிவுரை என்ன?" என்று வினவினார்கள். அதற்கு சல்மான் (ரலி) அவர்கள்
'உங்களுக்கு (இவ்வுலகில்) ஒரு
பயணி கொண்டு செல்லும் உணவு (உடை) போன்ற அளவே போதும்' என்று நபியவர்கள் எனக்கு அறிவுரை கூறியிருந்தார்கள். ஆனால் நான்
அத்துமீறி விட்டதாகவே என்னைப் பற்றிக் கருதுகிறேன்" என்று கூறினார்கள்.
அப்போது சல்மான் (ரலி) அவர்கள் வீட்டில் ஒரு தட்டு, பருகுவதற்கும் அங்கத்தூய்மை செய்வதற்கென்றும் ஒரு
கலயம் இருந்தது. இதைத் தவிர பெரிய அளவில் எதுவும் அங்கு இல்லை.
இந்த நபிமொழியின் இரண்டாம் அறிவிப்பாளர் ஸாபித் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது: சல்மான் (ரலி) அவர்கள் தம்மிடம் இருந்த செலவுத் தொகையில் இருபது சொச்சம்
வெள்ளிக்காசுகள் தவிர வேறு எதையும் விட்டுச் செல்லவில்லை என்ற தகவல் எனக்கு கிடைத்தது.
நூல்:- இப்னுமாஜா-4094, தபக்காத் இப்னு சஅத்
சல்மான் (ரலி) அவர்களிடம் உலகச் செல்வங்களான பண்டம் பாத்திரங்கள்,
தோட்டம் துறவுகள், நகை நட்டு என பெரிய அளவில் எதுவும் இல்லை. ஆனாலும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லுக்கு மாறு செய்துவிட்டோமோ, நாளை மறுமையில் அல்லாஹ்விடம் நம் நிலை என்னவாகமோ என்று மரண நேரத்திலும்
அது குறித்து சிந்தித்தே அழுதுக்கொண்டிருந்தார்கள்.
இன்று முஸ்லிம்கள் கோடிகளில் பணம் சேர்த்து, மாடிமீது மாடி வைத்து பல கட்டிடங்கள் கட்டிக்கொண்டு,
உலகில் வாழும்பொழுது தொழில்துறை கொடுக்கல் வாங்கல்
என்ற முழுமூச்சாக உலக சிந்தனை இல்லையே இருந்து, மரணமாகும் இறுதி நேரத்திலும் நம்முடைய இந்தத் தொழில்துறைகளையும்
சொத்து சுகங்களையும் அழித்துவிடாமல் யார் கட்டிக் காப்பார்களோ? என்ற மிகப்பெரும் கவலையில் வாடி வதங்குகிறார்கள்.
நாம் உலகில் சேர்த்துவிட்ட சொத்து சுகங்களுக்கு நாளை மறுமையில் எவ்விதம் பதில் சொல்லப்
போகிறோம்? என்று நினைத்து ஒரு
நிமிடம்கூட அழுவதில்லை.
நாம் மரணிக்கும் இறுதி வேளையில் மரணச் சிந்தனை மட்டுமே வெற்றி
தரும். உலகில் வாழும்பொழுது மறுமை சிந்தனையோடு வாழ்ந்தால் மட்டுமே இறுதி நேரத்தில்
மறுமை சிந்தனை ஏற்படும் என்பதை யாரும் மறக்க வேண்டாம்.
நரக பயம்
இமாம் ஜஅஃபர் ஸாதிக் (ரஹ்) அவர்கள் சிறு குழந்தையாக இருந்தபோது
இமாம் அவர்களின் தாயார் அடுப்புப்பற்ற வைத்து உணவு சமைத்துக்கொண்டிருந்தார்கள். இமாம்
அவர்கள் எரிந்து கொண்டிருக்கும் அடுப்பையே உற்று பார்த்துக் கொண்டிருந்து சிறிது நேரத்தில்
அழ ஆரம்பித்துவிட்டார்கள். இமாம் அவர்களின் அழுகையைக் கண்ட தாயார், இமாம் அவர்களைத் தூக்கி அணைத்துக்கொண்டு,
"அழுகைக்குரிய காரணம் என்ன?"
என்று வினவினார்.
அப்போது இமாம் அவர்கள், "இப்படித்தானே நரக நெருப்பு பாவிகளை எரிக்கும். பெரிய விறகைப்
பற்ற வைக்க சிறு சுள்ளிகளை முதலில் தாங்கள் பற்ற வைத்தது போல், முதலில் சிறு குழந்தைகளை நரகிலிட்டு பிறகு பெரியவர்களை
இறைவன் அதில் போடுவான் என்று நினைத்தேன். என்னையும் அறியாமலேயே எனக்கு அழுகை வந்துவிட்டது"
என்று பதிலளித்தார்கள்.
இமாம் அவர்களின் பெற்றோர்கள் தமது அருமை மகனை அல்லாஹ்வை பற்றியும்
இறைத்தூதர்களைப் பற்றியும் சொர்க்கம் நரகத்தை பற்றியும் எடுத்துரைத்து இஸ்லாமிய முறைப்படி
வளர்த்ததால் தான் இமாம் அவர்கள் தமது சிறுபிராயத்திலேயே இறையச்சத்துடன் இருந்துள்ளார்கள்.
நாமும் நம்முடைய குழந்தைகளின் சிறு வயதிலேயே அல்லாஹ்வைப் பற்றியும்,
இறைத்தூதர்களின் வரலாறுகள், மறுமையைப் பற்றி உள்ள நிகழ்வுகள், சொர்க்கம், நரகம் குறித்த நிலைபாடுகள் அனைத்தையும் அவர்களிடம் எடுத்துக்
கூறி இஸ்லாமிய முறைப்படி வளர்க்க வேண்டும். நம்முடைய குழந்தைகள் சிறு தவறையேனும் செய்தால்
அல்லாஹ் இப்படியெல்லாம் தண்டிப்பான். நரகை பயந்து கொள்! நீ நல்லதைச் செய்தால் அல்லாஹ்
உனக்கு நல்ல பரிசுகள் தருவான் என்று அன்போடு கூறி, இந்த செயல் அல்லாஹ்வுக்கும் பிடிக்கும் பிடிக்காது என்று எச்சரிக்க
வேண்டும்.
இந்த முறையில் நம்முடைய குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில்
அவர்கள் சிறந்த இறைநேசர்களாக வாழலாம். மாறாக, சிறுவயதிலேயே இவர்களுக்கு அல்லாஹ் மற்றும் இறைதூதர்களை பற்றியும்
சொர்க்கம் நரகம், மறுமை இவையெல்லாம்
கூறினால் விளங்காது. இப்போது இது தேவையில்லை என்று பல காரணங்களைக் கூறி மார்க்கத்தை
கற்றுக்கொடுப்பதை தட்டிக் கழிப்பது முறையாகாது.
உயிரோடு நம்மை நுழைப்பானே!
ஒருமுறை இறைநேசப் பெண்மணி ராபியத்துல் அதவிய்யா (ரஹ்) அவர்கள்
ஒரு தெரு ஓரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் தெருவின் ஓரத்தில் பொறித்த
கோழி இறைச்சியை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் அதையே கண் சிமிட்டாவது
பார்த்துக் கொண்டிருந்த அம்மையார், அழ ஆரம்பித்துவிட்டார்கள்.
அம்மையாரைப் பார்த்த அந்த மனிதர், "ஏனம்மா அழுகிறாய்? உனக்கு வேண்டுமென்றால்
இதிலிருந்து எடுத்துப் போய் கொண்டு போய் சாப்பிடு!" என்று கூறினார்.
அம்மையாரை மார்க்கம் பற்றி அறியாத அந்த மனிதர் ஏதோ இந்த பெண்
பரம ஏழை! கோழி இறைச்சி சாப்பிட்டு வெகுநாளாகிவிட்டது போல் தெரிகிறது. தனக்கு சாப்பிட
கிடைக்கவில்லை என்றெண்ணி அழுகிறாள் என்பதாக அவர் எண்ணிக்கொண்டார்.
அம்மனிதர் கூறியதை செவியற்ற அம்மையார், "சகோதரரே! கோழி இறைச்சிமீது ஆசை கொண்டு அதைப் பார்த்து
தனக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்கி நான் அழவில்லை. இவ்வுலகில் மனிதர்கள் இதை அறுத்து
உயிர் பிரிந்த பின்பு நெருப்பிலிட்டு வாட்டி பொறுக்கின்றார்கள். மறுமையில் அல்லாஹ்
நரக நெருப்பில் உயிரோடு நம்மை நுழைய வைப்பானே! அப்போது அங்கு நம்முடைய நிலைமை என்ன
ஆகும்? என்ற கவலையில் அழுதேன்"
என்றார்கள்.
அம்மையார் எப்போதும் மறுமையைப் பற்றியும் இம்மையில் பாவச் செயலில்
ஈடுபடுபவர்களுக்கு நரக தண்டனையைப் பற்றியும் சதா சிந்தனை செய்து கொண்டிருப்பார்கள்.
இதுவே இறைநேசர்களின் நிலைப்பாடு.
நாம் அன்றாடம் சமைத்து உண்ணும் உணவுகளிலேயே நரகை பற்றிய சிந்தனை
உள்ளது என்பதை மேற்கண்ட நிகழ்வு உணர்த்துகிறது.
இவ்வுலகில் எங்கு பார்த்தாலும் அல்லாஹ்வைப் பற்றியும் சொர்க்கம்
நரகம் பற்றியும் அத்தாட்சிகள் நிறைந்து கிடக்கின்றது.
நரகை நினைத்த அஞ்சி அழும்போது பாவக்காரியங்களில் ஈடுபட நம்மிடம்
துணிவு பிறப்பதில்லை. நல்ல காரியங்களில் ஈடுபட மனம் ஆசை கொள்கிறது ஆகவே, நாம் மனித புனிதராக மாற வேண்டுமேயானால் என்றென்றும்
நரகை நினைத்து அஞ்சி அழ வேண்டும்.
மறுமை வாழ்வே நிரந்தரமானது. ஆகவே மறுமை வாழ்வை நினைத்து அஞ்சி
அழுவதை அர்த்தமுள்ள அழுகையாகும் என்பதை மேற்கண்ட அனைத்து சம்பவங்களும் நமக்கு உணர்த்துகிறது.
தலைப்பில் காணும் திருவசனம் நயவஞ்சகர்களின் விஷயத்தில் இறக்கியருளப்பட்டதாக
இருந்தாலும், இவ்வுலக வாழ்வே நிரந்தரமானது
என்றெண்ணி, மறுமை எனும் சொர்க்கம்
நரகம் மறுமை வாழ்வை மறந்து, ஹலால் ஹராம் பேணாமல்
இவ்வுலகில் மனம் போன போக்கில் சம்பாதித்து பல சொத்து சுகங்களை சேர்த்து எந்நேரம் கூத்து
கும்மாளமுமாக சிரித்துக்கொண்டே வாழக்கூடிய அனைவருக்கும் இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ்
எச்சரிக்கை விடுக்கிறான்.
ஆகவே, நாம் தேவையற்ற சிரிப்புகளை
தவிர்ந்து, மறுமை வாழ்வை எண்ணியும்,
நாம் இதுவரை செய்துவிட்ட பாவக்காரியங்களை எண்ணியும்
அல்லாஹ்விடத்தில் கண்ணீர்விட்டு அழுது, முறையாக பாவமன்னிப்பு கோருவோமாக! ஆமீன்!
(இந்தக் கட்டுரை சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment