Wednesday, 8 February 2023

யாசிக்காதே!

 

யாசிக்காதே!

 

لَا يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا

 

மக்களிடம் அவர்கள் வற்புறுத்தி யாசிக்க மாட்டார்கள். திருக்குர்ஆன்:- 2:273

 

உலகில் யாசகர்கள் இல்லாத நாடு எதுவுமில்லை என்று சொல்லும் அளவிற்கு யாசகர்கள் உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறார்கள். இதில் வளர்ந்த நாடு வளருகின்ற நாடு என்றெல்லாம் விதிவிலக்கு இல்லை.

 

யாசகம் என்பது மனிதனின் தன்மானம் அடங்கிய பிரச்சனை. வறுமைக்காக யாசிப்பவர்களைவிட சோம்பேறித்தனத்தால் யாசிப்பவர்களே அதிகம். ஒரு மனிதனின் தன்மானம் தவிடுபொடியாகும்போது அவன் யாரிடமும் எதையும் கேட்கத் தயங்கமாட்டான்.

 

அரசியல்வாதிகள் கேட்பது ஓட்டுப் பிச்சை, திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் கேட்பது வரதட்சணைப் பிச்சை, கடமையை செய்ய அரசு ஊழியர் கேட்பது லஞ்சப் பிச்சை, காவலர்கள் கேட்பது மாமூல் பிச்சை இவ்வாறு யாசகம் பலவகை உண்டு.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا وَكَثْرَةَ السُّؤَالِ ) "நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கின்றான். (அதில் ஒன்று) அதிகமாக (பிறரிடம்) யாசிப்பது. அறிவிப்பாளர்:- முஙீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தர் (வர்ராத் - ரஹ் அவர்கள்) நூல்:- புகாரீ-1477

 

யாசகம் கேட்பவர்கள் மூன்று விதங்களில் அநீதியிழைக்கிறார்கள்.

1) தமது சுயமரியாதை தாமே அழித்து தமக்குத்தானே அநீதியிழைத்துக் கொள்ளுதல்.

2) யாரிடம் யாசகம் கேட்கிறார்களோ அவர்களுக்கு உளரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அநீதியிழைத்தல்.

3) மகத்தான அருட்கொடைகளுக்கு உரிமையாளனான அல்லாஹுத்தஆலா தனக்கு விதித்திருக்கும் அருட்கொடைகளை உழைப்பின் மூலம் தேட மறுப்பதால் படைத்தவனுக்கே அநீதியிழைத்தல்.

 

தேடி வந்தால்

 

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (அப்போதெல்லாம்) நான், ( أَعْطِهِ مَنْ هُوَ أَفْقَرُ إِلَيْهِ مِنِّي ) "இதை என்னைவிட அதிகத் தேவையுடையவருக்குக் கொடுங்களேன்" என்பேன்.

 

அதற்கு நபியவர்கள், ( خُذْهُ، إِذَا جَاءَكَ مِنْ هَذَا الْمَالِ شَىْءٌ، وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلاَ سَائِلٍ، فَخُذْهُ، وَمَا لاَ فَلاَ تُتْبِعْهُ نَفْسَكَ ) "இதை வாங்கிக்கொள்ளுங்கள்; நீங்கள் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு உங்களுக்கு வரும் பொருள்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏதும் கிடைக்கவில்லை என்றால் நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்" என்றார்கள். நூல்:- புகாரீ-1473, முஸ்லிம்-1890, அபூதாவூத்1404, நசாயீ-2557,  

 

தம்மைத் தேடி வரும் அன்பளிப்புகளை பெற்றுக்கொள்ளலாம் ஆனால், தமக்கு யாரேனும் எதையேனும் தர மாட்டார்களா? என்று ஏங்கிக்கொண்டு மக்களிடம் யாசிப்பது தான் (ஹராம் எனும்) தடைசெய்யப்பட்டுள்ளது.

 

தன்மானம் அவசியம்

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அன்சாரிகளில் சிலர் வள்ளல் பெருமானார் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும், செலவுக்கு பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு நபியவர்கள் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும் மீண்டும்) அவர்கள் கேட்டபோதும் நபியவர்கள் கொடுத்தார்கள். இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் (கொடுத்துத்) தீர்ந்து விட்டபோது, ( مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ ) "என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப்போவதில்லை. (இருப்பினும்,) யார் சுயமரியாதையோடு நடந்து கொள்கிறாரோ அவரை அல்லாஹ் தன்மானத்துடன் வாழச்செய்வான். யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான்என்று கூறினார்கள்.  நூல்:- புகாரீ-1769, முஸ்லிம்-1902, அபூதாவூத்-1401, திர்மிதீ-1947, நசாயீ-2541, முஸ்னது அஹ்மத்

 

உறுதிகொள்ளுதல்

 

அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நாங்கள் எட்டு அல்லது ஒன்பது பேர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது நபியவர்கள், ( وَلاَ تَسْأَلُوا النَّاسَ شَيْئًا ) "மக்களிடம் எதையும் கை நீட்டி யாசிக்கக் கூடாது" என்று (எங்களிடம்) உறுதிமொழி வழங்குமாறு கேட்டார்கள். (அவ்வாறே நாங்களும் உறுதிமொழி அளித்தோம்.) பிறகு அ(வ்வாறு உறுதியளித்த)வர்களில் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவரது சாட்டை (வாகனத்தின் மேலிருந்து) விழுந்தாலும்கூட அதை யாரிடமும் எடுத்துத் தருமாறு அவர்கள் கேட்டதில்லை. நூல்:- முஸ்லிம்-1886, அபூதாவூத்-1399, நசாயீ-456, இப்னுமாஜா-2858

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஸஃப்வான் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( مَنْ تَكَفَّلَ لِي أَنْ لاَ يَسْأَلَ النَّاسَ شَيْئًا وَأَتَكَفَّلَ لَهُ بِالْجَنَّةِ ) "மக்களிடம் எதையும் யாசிக்கமாட்டேன் என்று யார் எனக்கு உத்தரவாதம் தருகிறாரோ அவருக்கு சொர்க்கத்தை (வாங்கித் தர) நான் உத்தரவாதம் தருகிறேன்" என்று கூறினார்கள்.

 

(இதை செவியுற்றதிலிருந்து) ஸஃப்வான் (ரலி) அவர்கள் (இறக்கும்வரை) யாரிடமும் எதையும் யாசிக்கவில்லை. நூல்:- அபூதாவூத்-1400 நசாயீ-2543, இப்னுமாஜா-1827, முஸ்னது அஹ்மத், ஹாக்கிம்

 

வற்புறுத்தக் கூடாது

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تُلْحِفُوا فِي الْمَسْأَلَةِ فَوَاللَّهِ لاَ يَسْأَلُنِي أَحَدٌ مِنْكُمْ شَيْئًا فَتُخْرِجَ لَهُ مَسْأَلَتُهُ مِنِّي شَيْئًا وَأَنَا لَهُ كَارِهٌ فَيُبَارَكَ لَهُ فِيمَا أَعْطَيْتُهُ ) தர்மம் கேட்டு (என்னை) நச்சரிக்காதீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் ஒருவர் என்னிடம் ஏதேனும் (தர்மம்) கேட்டு, அதை நான் வெறுத்த நிலையில் அவர் என்னிடம் கேட்டது அவருக்குக் கிடைத்தால் அதில் அவருக்கு (பரக்கத் எனும்) அருள்வளம் வழங்கப்படுவதில்லை. அறிவிப்பாளர்:- முஆவியா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1877, நசாயீ-2546

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (என் தாய் என்னை அண்ணல் நபி - ஸல் அவர்களிடம் தர்மம் கேட்டு வாங்கி வருமாறு அனுப்பினார்கள். எனவே, நான் சென்று அவர்கள் முன்னால் அமர்ந்தேன்.)

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( مَنْ سَأَلَ وَلَهُ قِيمَةُ أُوقِيَّةٍ فَقَدْ أَلْحَفَ ) "யார் தம்மிடம் ஒரு ஊக்கியாவின் மதிப்பு (நாற்பது வெள்ளிக்காசுகள்) இருக்கும் நிலையில் யாசிக்கிறாரோ அவர் நச்சரித்து யாசித்துவிட்டார்" என்று கூறினார்கள். அப்போது நான் எனது யாக்கூத் (எனும் பெயருள்ள) ஒட்டகமானது ஒரு ஊக்கியாவைவிடச் சிறந்தது என்று கூறி, நான் திரும்பிவிட்டேன் நபியவர்களிடம் எதையும் நான் யாசிக்கவில்லை. நூல்:- அபூதாவூத்-1387, நசாயீ-2548, முஸ்னது அஹ்மத், இப்னு குஸைமா-2447, இப்னு ஹிப்பான்-846

 

வற்புறுத்தி, நச்சரித்து பெறப்படும் எவற்றிலும் அருள்வளம் இருப்பதில்லை. அருள்வளம் இல்லாதவற்றின் மூலம் மனிதன் சந்தோஷத்தை பெறமுடியாது என்பது உறுதி.

 

உழைப்பே மேலானது

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَاللَّهِ لأَنْ يَغْدُوَ أَحَدُكُمْ فَيَحْطِبَ عَلَى ظَهْرِهِ فَيَبِيعَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ رَجُلاً ) உங்களில் ஒருவர் காலையில் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு (சென்று), விறகுவெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து விற்(றுப் பிழைப்)பதானது, பிற மனிதனிடம் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1884, 1885, திர்மிதீ-616

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அன்சாரிகளுள் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யாசகம் கேட்டு வந்தார். (அவருக்கு யாசகம் கொடுப்பதற்குப் பதிலாக) ( أَمَا فِي بَيْتِكَ شَىْءٌ ) "உம்முடைய வீட்டில் ஏதேனும் (பொருள்) இருக்கிறதா?" என்று அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர், "ஆம் ஒரு போர்வை இருக்கிறது. அதில் ஒரு பகுதியை நாங்கள் அணிந்துகொண்டு, ஒரு பகுதியை விரித்துக் கொள்கிறோம். மேலும், நாங்கள் தண்ணீர் பருகின்ற ஒரு குவளையும் உள்ளது" என்று கூறினார்.

 

நபியவர்கள், ( ائْتِنِي بِهِمَا ) "அவ்விரண்டையும் எடுத்து வருவீராக" என்று கூறினார்கள். எனவே அவர் இரண்டையும் நபியவர்களிடம் எடுத்து வந்தார். நபியவர்கள் அவற்றை தமது கையில் வாங்கி ( مَنْ يَشْتَرِي هَذَيْنِ ) "இவ்விரண்டையும் யார் விலைக்கு வாங்கிக்கொள்கிறார்?" என்று கேட்டார்கள். ஒருவர், "நான் இவ்விரண்டையும் ஒரு வெள்ளிக்காசுக்கு வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறினார். அப்போது நபியவர்கள், ( مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ ) "ஒரு வெள்ளிக்காசைவிட அதிகத் தொகைக்கு யார் வாங்கிக்கொள்கிறார்?" என்று இரண்டு அல்லது மூன்று தடவை கேட்டார்கள். அப்போது ஒருவர், "நான் அவ்விரண்டையும் இரண்டு வெள்ளிக்காசுகளுக்கு(ப் பகரமாக) வாங்கிக் கொடுக்கிறேன்" என்று கூறினார். எனவே, நபியவர்கள் அவ்விரண்டையும் அவரிடம் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து அந்த இரண்டு வெள்ளிக்காசுகளையும் வாங்கிக்கொண்டார்கள்.

 

நபியவர்கள், அந்த இரண்டு வெள்ளிக்காசுகளையும் அந்த அன்சாரி தோழரிடம் கொடுத்து, ( اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ وَاشْتَرِ بِالآخَرِ قَدُومًا فَأْتِنِي بِهِ ) "இவ்விரண்டில் ஒன்றின் மூலம் உணவுப் பொருளையும் வாங்கி, அதை உன் குடும்பத்தாருக்கு கொடுப்பீராக! மற்றொன்றின் மூலம் ஒரு கோடாரியை வாங்கிக்கொண்டு என்னிடம் வருவீராக" என்று கூறினார்கள்.

 

அவ்வாறே அவர் செய்தார். (அவர் வாங்கிக் கொண்டு வந்த கோடாரியை) நபியவர்கள் எடுத்து அதில் தமது கையால் ஒரு (கைப்பிடிக்) கம்பை இணைத்தார்கள். (பின்னர் அதை அவரிடம் கொடுத்து) ( اذْهَبْ فَاحْتَطِبْ وَبِعْ وَلاَ أَرَيَنَّكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا ) "நீர் சென்று விறகு வெட்டி விற்பீராக! நான் உம்மை பதினைந்து நாள்களுக்குப் பார்க்கக் கூடாது" என்று கூறினார்கள். அவ்வாறே அவர் (சென்று) விறகு வெட்டி விற்கத் தொடங்கினார். (பின்னர் பதினைந்து நாள்கள் கழித்து) பத்து வெள்ளிக்காசுகளை சம்பாதித்துக் கொண்டு வந்தார்.

 

நபியவர்கள், ( فَاشْتَرَى بِبَعْضِهَا  طَعَامًا وَبِبَعْضِهَا ثَوْبًا ) "அவற்றுள் சிலவற்றின் மூலம் உணவையும் மேலும் சிலவற்றின் மூலம் ஆடைகளையும் வாங்கிக்கொள்வீராக!" என்று கூறிவிட்டுப், பின்னர், ( هَذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ الْمَسْأَلَةُ نُكْتَةً فِي وَجْهِكَ يَوْمَ الْقِيَامَةِ ) "நீர் யாசகம் கேட்டு வருவதைவிட இதுவே சிறந்தது. யாசகம் கேட்பது மறுமையில் உமது முகத்தில் உள்ள (கரும்)புள்ளியாகும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1398, நசாயீ-4432, இப்னுமாஜா-2089, முஸ்னது அஹ்மத்

 

இந்நிகழ்வின் மூலம் நபியவர்கள் உடல் வலிமையுள்ளவர்கள் யாசிப்பதை தடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உழைப்பின் அருமையை புரியவைத்துள்ளார்கள் எனத் தெரிகிறது.

 

உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. விடைபெறும் ஹஜ்ஜின்போது கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தர்மப் பொருள்களைப் பங்கிட்டு கொடுக்கும்போது இரண்டு மனிதர்கள் நபியவர்களிடம் வந்து தர்மம் கேட்டனர். உடனே நபியவர்கள் தமது பார்வையை உயர்த்தி எங்களைப் பார்த்துவிட்டு பார்வையை தாழ்த்திக் கொண்டார்கள்.

 

நபியவர்கள் எங்கள் இருவரையும் (உழைக்க) வலிமையுள்ளவர்களாக கண்டபோது, ( إِنْ شِئْتُمَا أَعْطَيْتُكُمَا وَلاَ حَظَّ فِيهَا لِغَنِيٍّ وَلاَ لِقَوِيٍّ مُكْتَسِبٍ ‏ ) "நீங்கள் விரும்பினால் உங்களுக்குத் தருகிறேன். ஆனால், செல்வந்தருக்கும் உழைத்துச் சம்பாதிக்கச் சக்தியுள்ளோருக்கும் யாசிப்பதற்கு உரிமை கிடையாது" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1391, நசாயீ-2551, முஸ்னது அஹ்மத்

 

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الصَّدَقَةَ لاَ تَحِلُّ لِقَوِيٍّ وَلاَ لِذِي مِرَّةٍ سَوِيٍّ ‏ ) உடல் வலிமையுள்ளவரும், உடல் உறுப்புக்கள் ஊனமற்றவரும் ஸக்காத் யாசிப்பதற்கு அனுமதி இல்லை. நூல்:- அபூதாவூத்-1392

 

உழைப்புக்கு வலுவான முட்டுக்கட்டையாக அமைவது சோம்பேறித்தனம். இன்று பல யாசகர்கள் சோம்பேறித்தனத்தின் விளைவாகவே உருவெடுக்கின்றனர். மனிதனுடைய அறிவையும் திறமையும் மழுங்கச் செய்வது இந்த சோம்பேறித்தனம் தான்.

 

யாசகத்தையும் சோம்பலையும் புறந்தள்ளிவிட்டு நாம் உழைப்பின் மகிமையை உணர்ந்து, உழைப்பை உய்விக்கின்றபோது தான் வறுமையை வேருடன் களைய வழி பிறக்கும். உழைப்பைத் தூண்டி, யாசகத்தை ஒழிப்பது என்பது ஒரு சமூகப் பொறுப்பாக கருதவேண்டும்.

 

ஏழ்மையின் வாசல்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَا فَتَحَ رَجُلٌ بَابَ مَسْأَلَةٍ يُرِيدُ بِهَا كَثْرَةً، إِلَّا زَادَهُ اللَّهُ بِهَا قِلَّةً ) ஒரு மனிதர் யாசகத்தின் வாயிலைத் திறந்து அதன் மூலம் செல்வத்தின் பெருக்கத்தை எதிர்பார்த்தார் எனில் அவருக்குக் குறைவை ஏற்படுத்தாமல் அல்லாஹ் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் அஷ்ஷூரா வசனம்-43

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (  ثَلاَثَةٌ أُقْسِمُ عَلَيْهِنَّ وَلاَ فَتَحَ عَبْدٌ بَابَ مَسْأَلَةٍ إِلاَّ فَتَحَ اللَّهُ عَلَيْهِ بَابَ فَقْرٍ ) நான் சத்தியமிட்டு மூன்று விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன். (அதில் ஒன்று) ஒரு அடியான் யாசகத்தின் வாயிலையைத் திறந்தால் அவனுக்கு அல்லாஹ் வறுமையின் வாயிலைத் திறக்காமல் இருப்பதில்லை. நூல்:- திர்மிதீ2247, முஸ்னது அஹ்மத், தப்ரானீ

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَصَابَتْهُ فَاقَةٌ فَأَنْزَلَهَا بِالنَّاسِ لَمْ تُسَدَّ فَاقَتُهُ وَمَنْ أَنْزَلَهَا بِاللَّهِ أَوْشَكَ اللَّهُ لَهُ بِالْغِنَى إِمَّا بِمَوْتٍ عَاجِلٍ أَوْ غِنًى عَاجِلٍ )  யாருக்கு வறுமை ஏற்பட்டுள்ளதோ அவர் அதை மனிதர்களிடம் இறக்கிவைத்தால் அவரது வறுமை அடைக்கப்படுவதில்லை. யாருக்கு வறுமை ஏற்பட்டுள்ளதோ அவர் அதை அல்லாஹ்விடம் இறக்கிவைத்தால் அவருக்கு அல்லாஹ் வாழ்வாதாரம் வழங்கலாம். அது விரைவாக (இம்மையிலேயே) செல்வத்தைக் கொண்டு இருக்கலாம். விரைவாக ஒருவரின் மரணத்தைக் கொண்டும் இருக்கலாம். அல்லது தாமதமாக (மறுமையில்) வழங்கலாம். நூல்:- அபூதாவூத்-1402 திர்மிதீ-2248, ஹாக்கிம்

 

சிலர், பள்ளிவாசல் கட்டுகின்றோம்; மதரசா அல்லது அநாதை இல்லம் கட்டுகின்றோம்; அல்லது அவற்றைப் பராமரிக்கின்றோம்; அல்லது ஏழை குமருக்கு திருமணம், மருத்துவச் செலவு என பல்வேறு கட்டுக்கதைகளைக் கூறி, பொய்யான ஆவணங்களுடன் பள்ளிவாசல்களில் யாசகம் கேட்கின்றனர்.

 

நியாயமான முறையில் அநாதை இல்லம், பள்ளிவாசல், மதரசா, கட்டுமானப்பணி போன்ற பொதுநிறுவனங்களின் வளர்ச்சிக்காக கொடுப்பது நமது கடமையாகும். அதே நேரத்தில் போலி லெட்டர் பேடுகள், மாணவர்கள் இல்லாத மதரஸாக்களுக்கு, பிள்ளைகள் இல்லாத அநாதை இல்லங்களுக்கு, இல்லாத பள்ளிவாசல்களுக்கு நடக்கும் வசூல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதுவும் ஆலிம்கள் போர்வையில் போலி வசூலில் ஈடுபடும் யாசகர்களை சமுதாயம் அடையாளம் கண்டு தண்டிக்க தயங்கக்கூடாது.

 

மற்றொரு புறத்தில் வறுமையில் வாடும் பலர் தங்களது நிலையை பிறருக்கு வெளிக்காட்ட விரும்பாமல் மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கின்றனர். எவரிடமும் அவர்கள் கையேந்துவதில்லை என்பதால் அவர்களது உண்மை நிலை எவருக்கும் தெரிவதில்லை. ஆடம்பரத்திற்காக அல்லது சோம்பேறித்தனத்தின் அடிப்படை கையேந்துகின்ற போலிகளால் உண்மையான தேவையுடைய மக்கள் உதவி பெறுவது சிரமமாகி வருகிறது.

 

நாளுக்கு நாள் பள்ளிவாசல்களில் யாசிப்போரின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக ரமளான் மாதத்தில் யாசிப்போர் புற்றீசல் போல்  புறப்பட்டு விடுகிறார்கள். இதில் போலியான தொப்பிகளும், புர்காகளும் ஏராளம்.

 

யாசகத்தின் மூலம் மக்களை ஏமாற்றுபவர்கள் உலகத்தில் செழிப்பாக வாழ்ந்தாலும், மறுமைநாளில் அவர்களின் நிலை மிக மோசமாகவே இருக்கும்.

 

மறுமை நாளில்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ حَتَّى يَأْتِيَ يَوْمَ الْقِيَامَةِ لَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ ) மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ள மனிதன் தனது முகத்தில் சதைத்துண்டு ஏதும் இல்லாதவனாகவே மறுமை நாளன்று வருவான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1474, முஸ்லிம்-1881

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ سَأَلَ النَّاسَ أَمْوَالَهُمْ تَكَثُّرًا فَإِنَّمَا يَسْأَلُ جَمْرًا فَلْيَسْتَقِلَّ أَوْ لِيَسْتَكْثِرْ ) அதிகம் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பவன், (நரகின்) நெருப்புக் கங்கையே யாசிக்கிறான். அவன் குறைவாக யாசிக்கட்டும்; அல்லது அதிகமாக யாசிக்கட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1883

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ سَأَلَ النَّاسَ لِيُثْرِيَ بِهِ مَالَهُ كَانَ خُمُوشًا فِي وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ وَرَضْفًا يَأْكُلُهُ مِنْ جَهَنَّمَ فَمَنْ شَاءَ فَلْيُقِلَّ وَمَنْ شَاءَ فَلْيُكْثِرْ ) யார் காசு பணத்தை பெருக்கிக் கொள்வதற்காக மக்களிடம் யாசிக்கிறாரோ அவரது யாசகம் மறுமைநாளில் அவர் முகத்தில் வடுவாக அமையும். நரகத்தில் அவர் உண்ணும் சூடேற்றப்பட்ட கல்லாகவே அது இருக்கும்; இனி விரும்பியவர் குறைவாக யாசிக்கட்டும்; விரும்பியவர் அதிகமாக யாசிக்கட்டும்! அறிவிப்பாளர்:- ஹுப்ஷீ பின் ஜுனாதா அஸ்ஸலூலீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-590

 

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யாசகம் பெற்றுவிட்டு, வாசலைக் கடந்து வெளியேறும்போது, (  لَوْ تَعْلَمُونَ مَا فِي الْمَسْأَلَةِ مَا مَشَى أَحَدٌ إِلَى أَحَدٍ يَسْأَلُهُ شَيْئًا )  "யாசகம் கேட்பதிலுள்ள (இழிவு)தனை நீங்கள் அறிவீர்களானால் எவரும் எவரிடமும் எதுவும் யாசகம் கேட்கச் செல்ல மாட்டார்கள்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- நசாயீ-2539

 

போதுமான அளவு

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( مَنْ سَأَلَ وَلَهُ مَا يُغْنِيهِ جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ خُمُوشٌ ) "ஒருவர் தம்மிடம் போதுமான அளவு (செல்வம்) இருக்கும் நிலையில் மக்களிடம் யாசித்தால் அவர் யாசித்ததின் வடு தமது முகத்தில் உள்ளவராக மறுமைநாளில் வருவார்" என்று கூறினார்கள்.

 

அப்போது நான், ( فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْغِنَى ) "நாயகமே! போதுமான அளவு (செல்வம்) என்பது எவ்வளவு? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ( خَمْسُونَ دِرْهَمًا أَوْ قِيمَتُهَا مِنَ الذَّهَبِ ‏ ) “ஐம்பது வெள்ளிக்காசுகள் அல்லது அவற்றின் மதிப்புடைய தங்கம்" என்று பதிலளித்தார்கள். நூல்:- அபூதாவூத்-1385, திர்மிதீ-588, நசாயீ-2545, இப்னுமாஜா-1830

 

அறிஞர்களில் சிலர், 50 வெள்ளிக்காசுகள் (அதாவது, 153 கிராம் வெள்ளி மதிப்பு) வைத்திருப்பவர் யாசிக்கலாகாது என்று கூறுகின்றனர். வேறு சிலர், வெள்ளிக்காசுகளின் எண்ணிக்கை முக்கியமல்ல என்றும் அவரவர் தேவைகள் முழுமையாகின்றனவா? என்பதே முக்கியம் என்றும் கூறுகின்றனர். இன்னும் சிலர், ஸகாத்தின் உச்சவரம்பான நிஸாபைப் பெற்றிருப்பவர் பிறரிடம் ஸகாத் வாங்கக்கூடாது என்கின்றனர். போதிய வசதியற்றவர், உழைக்க முடியாதவர், உடல் ஊனமுற்றவர் ஆகியோர் யாசிப்பது தவறாகாது. நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

 

சஹ்ல் பின் அல்ஹன்ழலிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( مَنْ سَأَلَ وَعِنْدَهُ مَا يُغْنِيهِ فَإِنَّمَا يَسْتَكْثِرُ مِنَ النَّارِ ) "போதுமான அளவு செல்வம் வைத்துக்கொண்டு யாசிப்பவன் நரகை நெருப்பை அதிகமாக்கிக்கொண்டான்" என்று கூறினார்கள். உடனே மக்கள், ( يَا رَسُولَ اللَّهِ وَمَا يُغْنِيهِ ) "நாயகமே! போதுமான அளவு (செல்வம்) என்பது எவ்வளவு?" என்று கேட்டனர். நபியவர்கள், ( أَنْ يَكُونَ لَهُ شِبَعُ يَوْمٍ وَلَيْلَةٍ أَوْ لَيْلَةٍ وَيَوْمٍ ) "யாரிடம் ஒரு பகல் ஒரு இரவு வயிறு நிறைய சாப்பிடும் அளவுக்கு இருக்குமோ (அவன் யாசிக்கக்கூடாது)" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1388, முஸ்னது அஹ்மத், இப்னு குஸைமா-2391, இப்னு ஹிப்பான்-844

 

தகுதியுடையவன்

 

ஹுப்ஷீ பின் ஜுனாதா அஸ்ஸலூலீ (ரலி) அவர்கள் கூறியதாவது கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜில் அரஃபாவில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் நபியவர்களது மேல் துண்டின் ஒரு முனையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம் யாசகம் கேட்டார். அவருக்கு நபியவர்கள் கொடுத்தார்கள். அவர் அதைப் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். அப்போதுதான் யாசகம் கேட்பது தடை செய்யப்பட்டது. அப்போது நபியவர்கள், ( إِنَّ الْمَسْأَلَةَ لاَ تَحِلُّ لِغَنِيٍّ وَلاَ لِذِي مِرَّةٍ سَوِيٍّ إِلاَّ لِذِي فَقْرٍ مُدْقِعٍ أَوْ غُرْمٍ مُفْظِعٍ )  “செல்வரும், உழைப்பிற்கு உடலில் வலிமை உள்ளவரும் யாசிப்பதற்கு (மார்க்கத்தில்) அனுமதி இல்லை; மிகக் கடுமையான வறுமையும், மீள முடியாத கடனும் உள்ளவர் தவிர!” என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-590

 

கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்கு பொறுப்பேற்றுக்கொண்டு கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது நபியவர்கள், ( أَقِمْ يَا قَبِيصَةُ حَتَّى تَأْتِيَنَا الصَّدَقَةُ فَنَأْمُرَ لَكَ بِهَا ) "தர்மப் பொருள்கள் நம்மிடம் வரும் வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்லுகிறோம்" என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்.

 

( يَا قَبِيصَةُ إِنَّ الْمَسْأَلَةَ لاَ تَحِلُّ إِلاَّ لأَحَدِ ثَلاَثَةٍ )  “கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ( رَجُلٌ تَحَمَّلَ حَمَالَةً فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ فَسَأَلَ حَتَّى يُصِيبَهَا ثُمَّ يُمْسِكُ ) ஒருவர் மற்றவரது இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்ற வரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக்கொள்ள வேண்டும்.

 

( وَرَجُلٌ أَصَابَتْهُ جَائِحَةٌ فَاجْتَاحَتْ مَالَهُ فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ فَسَأَلَ حَتَّى يُصِيبَ سِدَادًا مِنْ عَيْشٍ ) மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் வாழ்க்கையின் அவசியத் தேவையை அடைந்துகொள்ளும்வரை யாசிக்கலாம்.

 

( وَرَجُلٌ أَصَابَتْهُ فَاقَةٌ حَتَّى يَقُولَ ثَلاَثَةٌ مِنْ ذَوِي الْحِجَا مِنْ قَوْمِهِ قَدْ أَصَابَتْ فُلاَنًا الْفَاقَةُ فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ فَسَأَلَ حَتَّى يُصِيبَ سِدَادًا مِنْ عَيْشٍ ) இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன்வந்து, 'இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்' என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் வாழ்க்கையின் அவசியத் தேவையை அடைகின்றவரை யாசிப்பது அவருக்குச் செல்லும்.

 

( ثُمَّ يُمْسِكُ وَمَا سِوَاهُنَّ مِنَ الْمَسْأَلَةِ يَا قَبِيصَةُ سُحْتٌ يَأْكُلُهَا صَاحِبُهَا سُحْتًا ) கபீஸா! இவையின்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் (ஹராம் எனும்) தடை செய்யப்பட்டதையே  சாப்பிடுகிறார். நூல்:- முஸ்லிம்-1887, அபூதாவூத்-1397, நசாயீ-2533, முஸ்னது அஹ்மத், தாரமீ

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْمَسْأَلَةَ لاَ تَصْلُحُ إِلاَّ لِثَلاَثَةٍ لِذِي فَقْرٍ مُدْقِعٍ أَوْ لِذِي غُرْمٍ مُفْظِعٍ أَوْ لِذِي دَمٍ مُوجِعٍ ‏ ) யாசகம் என்பது மூன்று பேருக்குத் தவிர வேறெவருக்கும் கூடாது. கடும் வறுமையில் உள்ளவருக்கு அல்லது கடலில் மூழ்கியவருக்கு அல்லது உயிர்பலிக்கு பகரமாக செலுத்துவதற்காக தவிர (வேறெதற்கும்) கூடாது. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1398, இப்னுமாஜா-2189

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பழங்களை விலைக்கு வாங்கிய ஒருவர் (பழங்கள் சேதமடைந்ததால்) பாதிக்கப்பட்டார். அவருக்குக் கடன் அதிகமாக்கிவிட்டது. அப்போது நபியவர்கள், ( تَصَدَّقُوا عَلَيْهِ ) "இவருக்கு தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவருக்கு மக்கள் தர்மம் செய்தனர். அது அவரது கடனை அடைக்க போதுமான அளவுக்கு தேறவில்லை. எனவே, அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் நபியவர்கள், ( خُذُوا مَا وَجَدْتُمْ وَلَيْسَ لَكُمْ إِلاَّ ذَلِكَ ) "(இவரிடமிருந்து) கிடைப்பதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதைத் தவிர உங்களுக்கு வேறதுவுமில்லை" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-3170, திர்மிதீ-591

 

கடுமையான வறுமைக்கு ஆட்பட்டவர், மீள முடியாத கடனாளி, மற்றவரது இழப்பீட்டுத் தொகைக்கு பொறுப்பேற்றுக் கொண்டவர், பேரிடரில் செல்வங்களை இழந்தவர் ஆகியோர் மட்டுமே யாசிப்பது கூடும். அதுவும் அவர்கள் தேவை பூர்த்தியாகிவிட்டால் யாசிக்கக்கூடாது என்கிறது இஸ்லாம்.


கடனில் சிக்கிச் சிரமப்படுவருக்கு தர்மம் வழங்கவேண்டும். கடன் கொடுத்தவர் செல்வந்தராக இருந்து கடன் வாங்கியவர் ஏழையாக இருந்தால் அந்தக் கடனை தள்ளுபடி செய்து விடுவதே மிகச் சிறந்த தர்மமாகும்.

 

வெட்கப்படுகின்றவர்கள்

 

(பொருளீட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள முடியாதவாறு அல்லாஹ்வின் வழியில் ஈடுபடுத்தப்பட்ட ஏழைகளுக்கே (தர்மங்கள் சாரும்). அவர்களைப் பற்றி அறியாதவர் அவர்களின் தன்னடக்கத்தால் அவர்களைச் செல்வர்கள் என்றே எண்ணுவார். அவர்களின் (எளிமையான) தோற்றத்தை வைத்து அவர்களை நீர் அறிந்து கொள்வீர். திருக்குர்ஆன்:- 2:273

 

அவர்களுடைய பொருள்களில் (வாய் திறந்து யாசகம்) கேட்பவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் பாகமுண்டு. திருக்குர்ஆன்:- 51:19

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ الْمِسْكِينُ الَّذِي تَرُدُّهُ الأُكْلَةُ وَالأُكْلَتَانِ، وَلَكِنِ الْمِسْكِينُ الَّذِي لَيْسَ لَهُ غِنًى وَيَسْتَحْيِي أَوْ لاَ يَسْأَلُ النَّاسَ إِلْحَافًا ‏ ) ஓரிரு கவயம் உணவுக்காக அலைபவன் ஏழையல்லன். மாறாக, தன் வாழ்க்கைக்குப் போதிய செல்வம் இல்லாமலிருந்தும் பிறரிடம் கேட்க வெட்கப்படுகின்றவனும் அல்லது (அப்படிக் கேட்டாலும்) வற்புறுத்திக் கேட்காதவனுமே ஏழையாவான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1476, முஸ்லிம்-1879, அபூதாவூத்-1390, நசாயீ-2524, முஸ்னது அஹ்மத்

 

மற்றோர் அறிவிப்பில், ( الْمِسْكِينَ الْمُتَعَفِّفُ ) "ஏழை என்பவன் யாசிப்பதை விட்டும் பேணுதலாக இருப்பவன்" என்று வந்துள்ளது.

 

மற்றோர் அறிவிப்பில், ( لَيْسَ لَهُ مَا يَسْتَغْنِي بِهِ الَّذِي لاَ يَسْأَلُ وَلاَ يُعْلَمُ بِحَاجَتِهِ فَيُتَصَدَّقُ عَلَيْهِ فَذَاكَ الْمَحْرُومُ ‏ ) ஏழை என்பவன் தன் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அவனிடம் செல்வம் இருக்காது. என்றாலும், மக்களிடம் எதையும் கேட்கமாட்டான். அவன் தேவையுடையவன் என்பதை மக்கள் அறியவும் மாட்டார்கள். எனவே, அவனுக்கு தர்மம் வழங்கவும் மாட்டார்கள். அறிவிப்பாளர்:-  அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1390

 

வள்ளல்கள், ஸக்காத் வழங்குபவர்கள், மக்களிடம் யாசிப்பதற்கு வெட்கப்படும் தன்மானமுள்ள உண்மையான ஏழைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாரி வழங்க முன்வரவேண்டும்.

 

அரசிடம் கோரலாம்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْمَسَائِلُ كُدُوحٌ يَكْدَحُ بِهَا الرَّجُلُ وَجْهَهُ فَمَنْ شَاءَ أَبْقَى عَلَى وَجْهِهِ وَمَنْ شَاءَ تَرَكَ إِلاَّ أَنْ يَسْأَلَ الرَّجُلُ ذَا سُلْطَانٍ أَوْ فِي أَمْرٍ لاَ يَجِدُ مِنْهُ بُدًّا ) யாசித்தல் என்பது ஓர் (இழிவை ஏற்படுத்தும்) வடுவாகும். ஒருவர் யாசிப்பதால் தமது முகத்தில் வடு ஏற்படுத்திக்கொள்கிறார். ஆகவே, விரும்புபவர் தமது முகத்தில் வடு ஏற்படுத்திக் கொள்ளலாம். விரும்புபவர் (தமது முகத்தில் வடு ஏற்படுவதைக்) கைவிடலாம். இருப்பினும் ஒருவர் அதிகாரமுடையவரிடம் கோருவது, அல்லது அத்தியாவசியமானப் பொருளைக் கேட்பது நீங்கலாக. (இவற்றை கேட்பது இழிவாகாது.) அறிவிப்பாளர்:- சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாபூத்-1396 திர்மிதீ-617, இப்னு ஹிப்பான்-842

 

அதிகாரிகளிடம் உள்ள பொருள் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானது. அது அவருடைய சொந்தப் பொருள் அன்று. எனவே, அரசர்களிடமும் அதிகாரிகளிடமும் தேவைப்படும்போது கேட்டுப் பெறலாம். அவ்வாறே அத்தியாவசியமானத் தேவை என்பது, நோயாளியாக இருக்கிறார்; அவர் நோய் நிவாரணம் பெற தேவையானவற்றைக் கேட்டுப் பெறலாம். அவ்வாறே பசி பட்டினியாக இருப்பவர் தேவையான அளவு கேட்டுப் பெறலாம். அது இழிவாகாது.

 

ஒரு நாட்டின் குடிமகன் ஒரு தேவைக்காக அரசாங்கத்திடம் உதவி நாடி நிற்பது யாசகம் ஆகாது. ஒரு குடிமகனின் தேவையை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் தலையாயக் கடமை. அரசிடம் இருக்கும் அனைத்து செல்வ வளங்களும் மக்களிடமிருந்து பெறப்பட்டவை. அதனால் அரசிடம் உதவி நாடுவது நமது உரிமை.

 

இந்தியாவில் அரசு வழங்கும் சலுகைகளை முறையாக பயன்படுத்தத் தெரியாத ஒரே சமுதாயம், இஸ்லாமிய சமுதாயமாகத்தான் இருக்கும். ஆம்! இது குறித்து அலட்சியப் போக்கும் அறியாமையும் முஸ்லிம்களிடம் மேலோங்கி நிற்கிறது என்பது வேதனையான விஷயம்.

 

அறச்செயலுக்காக

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது ஒருநாள் மதீனாவின் பள்ளிவாசல் ஒன்றில் ஒருவர், "நான் அறப்போருக்கு செல்ல ஆசைப்படுகிறேன். எனவே, அதற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வாகனம் என்னிடம் இல்லை. எனவே, அவற்றை வாங்குவதற்கு உதவி செய்யுங்கள்" என்று கூறி யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

இதையறிந்த ஜனாதிபதி அவர்கள் அவரை அழைத்து பொதுமக்கள் முன்னிலையில், "இவருக்கு ஏதேனும் வேலை தருபவர்கள் உங்களில் உண்டா? என்று கேட்டார்கள். அப்போது ஒரு விவசாயி, என் விவசாயத்திற்கு ஆள் தேவைப்படுகிறது" என்றார். ஜனாதிபதி அவர்கள், "சரி இவரை அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு கூலி தருவீர்கள்?" என்று கேட்டார்கள். விவசாயி, "ஒரு வெள்ளிக்காசு தருவேன்"  என்றார். ஜனாதிபதி அவர்கள், "இன்னும் கொஞ்சம் அதிகமாக தர முடியுமா? என்று கேட்டார்கள். விவசாயி, "சரி! இரண்டு வெள்ளிக்காசுகள் தருகிறேன்" என்று கூறி அழைத்துச் சென்றார்.

 

ஒரு வாரத்திற்கு பின்னர் யாசகம் கேட்ட அந்த மனிதர் கை நிறைய வெள்ளிக்காசுகளுடன் ஜனாதிபதி அவர்களைச் சந்திக்க வந்தார். அவரின் நிலையை கண்ட ஜனாதிபதி அவர்கள், "உம்மிடமுள்ள இந்த வெள்ளிக்காசுகளை வைத்துக்கொண்டு நீ விரும்பியவாறு அறப்போரில் கலந்து கொள்ளலாம். அல்லது அதை உமது குடும்பத்திற்கு செலவு செய்யலாம். மக்களிடம் யாசித்து அதன் மூலம் அறப்போரில் கலந்து கொள்வதைவிட இந்த முறையே சிறந்தது" எனக் கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். நூல்:-  ஷுஅபுல் ஈமான்

 

ஒருவர் ஒரு அறச்செயல் செய்வதற்கு தமது சொந்த சம்பாத்தியத்தின் மூலம் முயற்சி செய்யவேண்டும். அது முடியவில்லையென்றால் அந்த அறச்செயலுக்காக பிறரிடம் உதவி கேட்கலாம். ஆனால், அறச்செயல் செய்ய வேண்டுமென்றாலே மக்களிடம் யாசித்து தான் செய்யவேண்டும் என்ற நிலை மாறவேண்டும்.

 

கொடுத்துப் பழகு!

 

இப்னுல் ஃபிராஸீ (ரஹ்)  அவர்கள் கூறியதாவது. என் தந்தை ஃபிராஸீ (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ( أَسْأَلُ يَا رَسُولَ اللَّهِ )  "நாயகமே! (அல்லாஹ் அல்லாத மற்றவர்களிடம்) நான் ஏதேனும் யாசிக்கலாமா?" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( لاَ وَإِنْ كُنْتَ سَائِلاً لاَ بُدَّ فَاسْأَلِ الصَّالِحِينَ  ) "கூடாது. அவசியம் யாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நல்லோர்களிடம் யாசிப்பீராக!" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1403, நசாயீ-2540, முஸ்னது அஹ்மத்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنِ اسْتَعَاذَ بِاللَّهِ فَأَعِيذُوهُ وَمَنْ سَأَلَ بِاللَّهِ فَأَعْطُوهُ )  (உங்களிடம்) யாரேனும் அல்லாஹ்வின் பெயரால் பாதுகாப்புக் கோரினால் அவருக்குப் பாதுகாப்பு கொடுங்கள். யாரேனும் அல்லாஹ்வின் பெயரால் யாசகம் கேட்டால் அவருக்கு வழங்குங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1424 நசாயீ-2520, முஸ்னது அஹ்மத்-5110


நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். ( لِلسَّائِلِ حَقٌّ وَإِنْ جَاءَ عَلَى فَرَسٍ ) யாசிப்பவர் குதிரையில் வந்து கேட்டாலும் அவருக்குக் கொடுப்பது கடமையாகும். அறிவிப்பாளர்:- ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1418, முஸ்னது அஹ்மத், இப்னு குஸைமா-268, முவத்தா மாலிக்-1583

 

குதிரை போன்ற உயர்ரக வாகனத்தில் வந்து யாசகம் கேட்பவர் உண்மையில் தேவையுள்ளவராக இருக்கலாம். எங்கேனும் வெளியூர் பயணத்தில் தமது பொருள்களை இழந்து நிற்கதியான மனிதராக இருக்கலாம். எனவே, அவரது வெளித்தோற்றத்தை கருத்தில் கொண்டு அவரை விரட்டி விடலாகாது. அவருடைய குடும்பத்தில் சிக்கல், கஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். குதிரை போன்ற வாகனத்தை இரவலாகப் பெற்று யாசிக்க வந்திருக்கலாம் என்றெல்லாம் கருத இடமுண்டு.

 

யாசிப்பவரின் நிலை அறியாமல் உனக்கு கை கால் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது. நீ உழைத்து சாப்பிட்டால் என்ன? என்று சாடக்கூடாது. இவ்வாறு எகத்தாளமாக பேசுவதைவிட இயன்றவரை தர்மம் வழங்குவதே சிறந்தது.

 

செல்வந்தர்கள் தம்மைச் சுற்றியுள்ள ஏழைகள், அவ்வபோது அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமப்படுவோர், மருத்துவ உதவி, கல்வி உதவி தேவைப்படுவோர் என எவரெல்லாம் தம்மைச் சுற்றி இருக்கிறார்கள் என தெரிந்து அவ்வபோது அவர்களுக்கு கொடுத்து உதவினால் அவர்கள் வேறு நபர்களை தேடி வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் கேட்க மாட்டார்கள்.

 

இஸ்லாம், யாசகம் கேட்பதை வெறுத்தாலும் யாசிப்போரை விரட்டாதீர்கள் என்று அறிவுறுத்துகிறது.

 

அல்லாஹுத்தஆலா, நம்மை பிறருக்கு வாரி வழங்கும் வள்ளல்களாகவும், நாம் பிறரிடம் எந்த தேவைக்கும் அணுகாதவாறு, தன்னிறைவு பெற்றவர்களாகவும் வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

1 comment:

  1. جزاكم الله خيرا كثيرا في الدارين

    ReplyDelete