Tuesday, 28 December 2021

ஷைத்தான்களின் தூண்டுதல்கள்

 

ஷைத்தான்களின் தூண்டுதல்கள்

 

وَقُلْ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ

 

(நபியே! இவ்வாறு) நீர் பிரார்த்திப்பீராக: என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் என் இறைவா! அவை என்னை அண்டுவதைவிட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். திருக்குர்ஆன்:- 23:97,98

 

மனிதர்களின் சாதுரியம் ஷைத்தான்களிடம் எடுபடாது. அவர்கள் நன்மைக்குக் கட்டுப்பட மாட்டார்கள். எனவே தான், ஷைத்தான்களின் தீங்குகளிலிருந்து பாதுகாப்புக் கோருமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா கட்டளையிடுகிறான்.

 

நம்முடைய அனைத்து காரியங்களிலும் ஷைத்தான்கள் குறுக்கிடுவதிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு கூற வேண்டும்.

 

அல்லாமா இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். எல்லா காரியங்களின் தொடக்கத்திலும் தன்னை நினைவுகூர வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான். உணவு உண்பது, தாம்பத்திய உறவு கொள்வது, பிராணிகளை அறுப்பது முதலான செயல்கள் அனைத்திலும் அல்லாஹ்வை நினைவுகூர்வது ஷைத்தானை விரட்டியடிக்கும் என்பதே காரணமாகும்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ، وَنَفْثِهِ ) "விரட்டப்பட்ட ஷைத்தான் ஏற்படுத்தும் ஊசலாட்டம் (மனக்குழப்பம்) அவனது ஊதல் (அகம்பாவம்), துப்பல் (செய்வினை) ஆகியவற்றிலிருந்து அனைத்தையும் நன்கு செவியுறுபவனும் நன்கறிபவனுமான அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று கூறுவார்கள். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-225

 

அவன் உங்களைப் பாதுகாப்பான்

 

(நபியே!) ஷைத்தான் யாதொரு (தவறான) எண்ணத்தை உங்கள் மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உங்களை)த் தூண்டினால், உடனே நீங்கள் (உங்களை) காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் கோருங்கள். நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவனும் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஆதலால் அவன் உங்களைப் பாதுகாத்துக் கொள்வான்.) திருக்குர்ஆன்:- 7:200

 

வாகிதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. மக்கள் மூத்தா போரில் மோதிக் கொண்ட போது, அருமை நாயகம் (ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடையில் அமர்ந்து மக்களின் போர்க்களத்தை நோட்டமிட்டவர்களாக சிரியாவில் நடைபெறும் காட்சிகளை அல்லாஹ் அவர்களுக்குத் தெளிவுபடுத்திக் காட்டினான்.

 

அப்போது அண்ணலார் (அக்காட்சியை பார்த்தவாறே) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் முஸ்லிம்களின் கொடியைப் பிடித்து போரிட்டார். அப்போது அவரிடம் ஷைத்தான் வந்து அவருக்கு வாழ்வது பற்றிய ஆசையையும் இறப்பது பற்றிய வெறுப்பையும் ஊட்டி அவருக்கு உலகப் பற்றை தூண்டினான். உடனே அவர், ( اَلْآنَ حِينَ اسْتَحْكَمَ الْإِيمَانُ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ، تُحَبِّبُ إِلَيَّ الدُّنْيَا؟ ) "இந்த நேரம் தான் இறைநம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் இறைநம்பிக்கை உறுதியாக இருக்கவேண்டிய நேரம்" என்று கூறி விட்டு (ஷைத்தானிடம்) "எனக்கு நீ உலகப்பற்றை தூண்டுகிறாயா? என்று கேட்டார்.

 

பிறகு அவர் (போரில்) முன்னேறிச் சென்று போரிட்டு இறுதியில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார்" எனக் கூறினார்கள். பிறகு அண்ணலார் அவருக்காகப் பிரார்த்தித்துவிட்டு, ( اِسْتَغْفِرُوا لَهُ، فَقَدْ دَخَلَ الْجَنَّةَ وَهُوَ يَسْعَى ) “நீங்களும் அவருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் விரைவாக சொர்க்கத்திற்குச் சென்று விட்டார்" என்று கூறினார்கள்.

 

மேலும் அண்ணலார், "அதன் பிறகு ஜஅஃபர் பின் அபீதாலிப் ( ரலி) அவர்கள் முஸ்லிம்களின் கொடியைப் பிடித்தார். அப்போது ஷைத்தான் அவரிடம் வந்து அவருக்கு வாழ்வதை விருப்பமாகவும் இறந்து போவதை வெறுப்பாகவும் காட்டி அவருக்கு உலக ஆசையை  ஏற்படுத்தினான். உடனே அவர், "இந்த நேரம் தான் இறைநம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் இறைநம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டிய நேரம்" என்று கூறி விட்டு (ஷைத்தானிடம்) "நீ எனக்கு உலக ஆசையைக் காட்டுகிறாயா?" என்று கேட்டார். பிறகு அவர் முன்னேறிச் சென்று இறுதியில் உயிர்த் தியாகியாக கொல்லப்பட்டார்.

 

பிறகு அண்ணலார் அவருக்காகப் பிரார்த்தித்துவிட்டு, (தோழர்களிடம்)           ( اِسْتَغْفِرُوا لِأَخِيكُمْ، فَإِنَّهُ شَهِيدٌ، دَخَلَ الْجَنَّةَ ) "உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உயிர்த்தியாகி. அவர் சொர்க்கம் சென்றுவிட்டார்" என்று கூறினார்கள். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

ஷைத்தான் மனித மனங்களில் அவ்வப்போது பாதிப்புக்களை ஏற்படுத்துவான். இவற்றை மறுக்க முடியாது. ஷைத்தானின் முதல் இலக்கே மனம்தான். மனதுக்குள் தவறான, இறைநெறிக்கு எதிரான விதவிதமான ஊசலாட்டங்களை ஊன்றி விடுவதுதான் அவன் நம்மீது தொடுகின்ற முதல் தாக்குதல் ஆகும்.

 

ஆனால், இறைவனை உளத்தூய்மையுடன் ஏற்றுக்கொண்டு வாழும் இறைநேசர்களிடம் அவனுடைய சூழ்ச்சி வெற்றி பெறுவதில்லை. அப்படியும் அவர்கள் ஏதேனும் ஒரு பலவீனமான வேளையில் அவனுடைய ஊசலாட்டத்தில் விழுந்து விட்டாலும்கூட, மிக விரைவில் விழிப்படைந்து இறைவனின் பக்கம் மீண்டு பாவமன்னிப்புக் கோரி, அவனிடம் புகலிடம் தேடிக் கொள்கிறனர். ஆனால் பலவீனமான இறைநம்பிக்கையாளர்களோ மிக எளிதாக ஷைத்தான் விரிகின்ற மாய வலையில் விழுந்து விடுகின்றனர்.

 

சத்தியத்தை முறித்து விடு!

 

மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், "நான் ஓர் உணவை எனக்கு நானே தடை விதித்துக்கொண்டேன்" என்று கூறினார். மேலும் அந்த உணவின் பெயரையும் (பால்மடி இறைச்சி) குறிப்பிட்டார்.

 

அப்போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், ( هَذَا مِنْ نَزَعَاتِ الشَّيْطَانِ، كَفِّر عَنْ يَمِينِكَ، وكُل )  இது ஷைத்தானின் ஊசலாட்டங்களில் ஒன்றாகும். எனவே, நீர் உமது சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தை நிறைவேற்றுவீராக. (தடை செய்து கொண்டதை) நீ உண்பீராக" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் அந்நூர் வசனம்-21

 

அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் என் மனைவி என்மீது கோபப்பட்டாள். அப்போது அவள், நீர் என்னை மணவிலக்குச் செய்யாவிட்டால் ஒருநாள் யூத பெண்ணாகவும் இன்னொரு நாள் கிறித்தவப் பெண்ணாகவும் நான் ஆகி விடுவேன். என் அடிமைகள் எல்லோரும் விடுதலை ஆகிவிடுவார்கள்" என்று கூறினாள்.

 

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் வந்து இது குறித்து விசாரித்தேன். அப்போது அவர்கள், ( إِنَّمَا هَذِهِ مِنْ نَزَغَاتِ الشَّيْطَانِ ) "இது ஷைத்தானின் ஊசலாட்டங்களில் ஒன்றாகும்" என்று தெரிவித்தார்கள். நூல்:- தஃப்சீர் அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் அந்நூர் வசனம்-21

 

தண்டனையை நினைத்துப் பார்

 

நிச்சயமாக இறையச்சம் கொண்டவர்களுக்கு ஷைத்தானின் பலமான தூண்டல் ஏற்பட்டால், (உடனே) அவர்கள் அல்லாஹ் (தரும் தண்டனையை) நினைத்துப் பார்ப்பார்கள். அப்போது அவர்கள் (அறிவுக் கண் திறந்து) விழித்துக் கொள்வார்கள். திருக்குர்ஆன்:- 7:201

 

ஓர் இளைஞர் பள்ளிவாசலில் தங்கி வழிபாடு செய்து கொண்டிருந்தார். அவரை ஒரு பெண் விரும்பி, தன் ஆசைக்கு இணங்குமாறு அழைத்தாள். அவர், அவளுடன் வீட்டிற்குள் நுழையும் வரை அழைத்து கொண்டேயிருந்தாள். வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர் இந்த வசனத்தை (7:201) நினைத்துப் பார்த்தார். உடனே மூர்ச்சையாகிக் கீழே விழுந்தார். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த அவர் மறுபடியும் அந்த வசனத்தையே நினைத்து உருகினார். இறுதியில் அவர் இறந்துவிட்டார்.

 

உமர் (ரலி) அவர்கள் வந்து அவருடைய தந்தைக்கு ஆறுதல் கூறினார்கள். அவரை இரவில் அடக்கம் செய்திருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் சென்று, தம்முடன் இருந்தவர்களோடு அவரது மண்ணறைக்கு  அருகில் தொழுகை நடத்தினார்கள்.

 

பிறகு உமர் (ரலி) அவர்கள் அவரை அழைத்து, "இளைஞரே! தன் இறைவனின் சன்னிதானத்தை அஞ்சிவருக்கு இரு சொர்க்கச் சோலைகள் உண்டு" (55:46) என்று (குர்ஆன் வசனத்தை) கூறினார்கள். உடனே அந்த இளைஞர், ( يَا عُمَرُ قَدْ أَعْطَانِيهِمَا رَبِّي، عَزَّ وَجَلَّ فِي الْجَنَّةِ مَرَّتَيْنِ ) “உமரே! என் இறைவன் எனக்கு அவ்விரண்டு சோலைகளையும் வழங்கிவிட்டான்" என்று மண்ணறையின் உள்ளே இருந்து பதிலளித்தார். நூல்:- இப்னு அசாகிர், தஃப்சீர் இப்னு கஸீர் அல்அஃராஃப் வசனம்-201

 

உடலுறவின்போது

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ قَالَ بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا‏.‏ فَقُضِيَ بَيْنَهُمَا وَلَدٌ، لَمْ يَضُرَّهُ ) உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவுகொள்ளச் செல்லும்போது அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு உடலுறவு கொள்ளப்போகிறேன். இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்துவாயாக! என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்  நூல்:- புகாரீ-141, முஸ்லிம்-1434

 

அழகாக காட்டப்படும்

 

(நபியே!) ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதேனும் ஊசலாட்டம் ஏற்பட்டால் உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைத்தையும்) செவியுறுவோனும் நன்கறிவோனும் ஆவான். திருக்குர்ஆன்:- 41:36

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டபோது, (ஷைத்தான்களின் தலைவன்) இப்லீஸ், ஷைத்தான்களிடம் வந்து, ( إِنِّي قَدْ وَجَدْتُهُ مَعَهُ جِبْرِيلُ، فَمَا عِنْدَكُمْ ) “அவரை (முஹம்மதை) நான் வானவர் ஜிப்ரீல் உடன் பெற்றுக்கொண்டேன்; (இனி அவர் மக்களை சீர்திருத்தப்போகிறார். நீங்கள் மக்களை வழிகெடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்.) உங்களிடம் என்ன (ஆயுதம்) இருக்கிறது?" என்று கேட்டான். அதற்கு ஷைத்தான்கள், ( نُزَيِّنُ الشَّهَوَاتِ فِي أَعْيُنِ أَصْحَابِهِ، وَنُحَبِّبُهَا إِلَيْهِمْ ) "(உலக) ஆசைப் பொருட்களை மக்களின் பார்வைகளுக்கு அழகாகக் காட்டுவோம்; அவற்றினை அவர்கள் விரும்புவோராக ஏற்படுத்துவோம்" என்றனர். அப்போது இப்லீஸ், ( فَلَا آسَى إِذًا ) "அவ்வாறானால் நான் நிராசையடைபவன் அல்லன்" என்று கூறினான். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

உலகமும், உலகத்தில் உள்ள அனைத்தும் கவர்ச்சியாக காட்டப்பட்டு, அதன் பக்கம் கவர்ந்திழுக்க முயற்சிப்பதும் ஷைத்தானின் சதியின்றி வேறில்லை. இறைநெருக்கம் பெற்ற அனைவரும் தண்ணீரில் மிதக்கும் தாமரை இலையைப் போன்று, உலகத்தில் பட்டும் படாமல் வாழ்ந்தார்கள். உலக மோகத்தில் வீழ்ந்தவர்கள் கைசேதத்திற்குரியவர்கள் ஆவர்.

 

ஷைத்தானின் சதியில் இருந்து அல்லாஹ்வின் உதவியின்றி நம்மால் சுயமாக தப்பிக்க இயலாது. எனவே, அதற்காக நாம் அனுதினமும் அல்லாஹ்விடம் பிரார்த்திக் கொண்டேயிருக்கவேண்டும். அல்லாஹுத்தஆலா நம்மை ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து பாதுகாத்து, நம்மீது அவனது அருள்மழையைப் பொழிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment